Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 4

பாட்டு 18 மீட்புவிலைக்கு நன்றி!

மீட்புவிலை நமக்கு என்ன சொல்லித்தருகிறது?

மீட்புவிலை நமக்கு என்ன சொல்லித்தருகிறது?

“இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது.”1 யோ. 4:9.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவிடமும் இயேசுவிடமும் இருக்கிற முத்தான குணங்களை மீட்புவிலை எடுத்துக் காட்டுகிறது; அதைப் பற்றிக் கற்றுக்கொள்வோம்.

1. நாம் ஏன் இயேசுவின் மரணத்தை வருஷா வருஷம் நினைத்துப் பார்க்க வேண்டும்?

 மீட்புவிலை, உண்மையிலேயே நமக்குக் கிடைத்திருக்கும் அருமையான பரிசு. (2 கொ. 9:15) ஏனென்றால், இயேசு நமக்காக அவருடைய உயிரையே கொடுத்ததால்தான் யெகோவாவிடம் நம்மால் நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் என்றென்றும் வாழ்கிற வாழ்க்கையும் கிடைக்கப் போகிறது. நம்மேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதால்தான் யெகோவா இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். (ரோ. 5:8) மீட்புவிலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; அதற்காக எப்போதுமே நன்றியோடு இருக்க வேண்டும். அதனால்தான், தன்னுடைய மரணத்தை வருஷா வருஷம் நினைத்துப் பார்க்க சொல்லி இயேசுவும் சொல்லியிருக்கிறார்.—லூக். 22:19, 20.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 ஏப்ரல் 12, 2025 சனிக்கிழமை அன்று, நினைவுநாள் நிகழ்ச்சியை அனுசரிப்போம். அதில் நாம் எல்லாருமே கலந்துகொள்வோம் என்பதில் சந்தேகமே இல்லை. நினைவுநாளுக்கு முன்பும் பின்பும் இருக்கிற வாரங்களில் யெகோவாவும் இயேசுவும் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை ஆழமாக யோசித்துப் பார்த்தால் நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். மீட்புவிலை, யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் என்ன சொல்லித்தருகிறது என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அடுத்தக் கட்டுரையில், மீட்புவிலையால் நமக்கு என்ன நன்மை என்பதைப் பற்றியும் அதற்காக நாம் எப்படி நன்றி காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

மீட்புவிலை யெகோவாவைப் பற்றி என்ன சொல்லித்தருகிறது?

3. ஒரேவொரு நபர் பலியானதால் லட்சக்கணக்கான மக்களுக்கு எப்படி விடுதலை கிடைக்கும்? (படத்தையும் பாருங்கள்.)

3 யெகோவா நீதியுள்ளவர் என்பதை மீட்புவிலை காட்டுகிறது. (உபா. 32:4) எப்படி? இதை யோசித்துப் பாருங்கள்: ஆதாம் கீழ்ப்படியாமல் போனதால் நாம் எல்லாருமே பாவிகள் ஆகிவிட்டோம். அதனால், நமக்கு மரணம் வந்திருக்கிறது. (ரோ. 5:12) நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்காக இயேசு மூலம் யெகோவா செய்த ஏற்பாடுதான் மீட்புவிலை. ஆனால், ஒரேவொரு நபர் பலியானதால் லட்சக்கணக்கான மக்களுக்கு எப்படி விடுதலை கிடைக்கும்? இதைப் பற்றி பவுல் இப்படி விளக்கினார்: “ஒரே மனிதன் [ஆதாம்] கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒரே மனிதன் [இயேசு] கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” (ரோ. 5:19; 1 தீ. 2:6) வேறு வார்த்தையில் சொன்னால், ஒரேவொரு பரிபூரண மனிதன் கீழ்ப்படியாமல் போனதால் எல்லாரும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமை ஆகிவிட்டார்கள். அதனால், இன்னொரு பரிபூரண மனிதன் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்தான் நம் எல்லாருக்கும் பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

ஒரேவொரு மனிதனால் நாம் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாக்கப்பட்டோம்; ஒரேவொரு மனிதனால் விடுதலை செய்யப்பட்டோம் (பாரா 3)


4. ஆதாமின் சந்ததியில் வந்த நல்ல மக்களை என்றென்றும் வாழ்வதற்கு யெகோவா ஏன் அப்படியே விட்டுவிடவில்லை?

4 நம்மைக் காப்பாற்றுவதற்கு இயேசு உண்மையிலேயே தன்னுடைய உயிரைக் கொடுக்க வேண்டியிருந்ததா? யெகோவா நினைத்திருந்தால் ஆதாமின் சந்ததியில் வந்த நல்ல மக்களை என்றென்றும் வாழ்வதற்கு அப்படியே விட்டிருக்கலாம், இல்லையா? அப்படிச் செய்திருந்தால் பிரச்சினை சுலபமாக முடிந்திருக்கும் என்று நாம் யோசிக்கலாம். நமக்குள் பாவ இயல்பு இருப்பதால்தான் அப்படி யோசிக்கிறோம். ஆனால், நடந்ததெல்லாம் யெகோவாவுடைய பார்வையில் சாதாரண விஷயம் கிடையாது. அவர் நீதியுள்ளவர் என்பதால் ஆதாம் வேண்டுமென்றே செய்த பெரிய பாவத்தைக் கண்டுகொள்ளாமல் விட முடியாது; அப்படிச் செய்வது சரியாகவும் இருக்காது.

5. யெகோவா எப்போதுமே சரியானதைத்தான் செய்வார் என்பதை நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

5 யெகோவா மீட்புவிலைக்கு ஏற்பாடு செய்யாமல் அவருடைய நீதியை ஓரம்கட்டிவிட்டு, ஆதாம் சந்ததியில் வந்த எல்லாரையுமே என்றென்றும் வாழவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அப்போது என்ன ஆகியிருக்கும்? நீதி நியாயத்தோடு நடப்பதை ஒரு பெரிய விஷயமாக யெகோவா நினைப்பதில்லை என்றும், மற்ற விஷயங்களிலும் அவர் அப்படித்தான் நடந்துகொள்வார் என்றும் மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிடலாம். உதாரணத்துக்கு, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதெல்லாம் அவருக்கு முக்கியம் அல்ல என்று அவர்கள் யோசிக்கலாம். ஆனால் இப்போது அந்தக் கேள்விக்கெல்லாம் இடமே இல்லை. ஏனென்றால், தனக்குப் பெரிய இழப்பு வந்தபோதும் யெகோவா நீதியோடு நடந்திருக்கிறார்; தன் செல்ல மகன் கண்முன் சாகும் வலியைக்கூட அதற்காகத் தாங்கியிருக்கிறார். அவர் எப்போதுமே சரியானதைத்தான் செய்வார் என்பதை இது நிரூபிக்கிறது.

6. யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்பை மீட்புவிலை எப்படிக் காட்டுகிறது? (1 யோவான் 4:9, 10)

6 யெகோவா நியாயமானவர் என்பதை மட்டுமல்ல, அவர் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதையும் மீட்புவிலை காட்டுகிறது. (யோவா. 3:16; 1 யோவான் 4:9, 10-ஐ வாசியுங்கள்.) மீட்புவிலையை யெகோவா ஏற்பாடு செய்ததற்குக் காரணம் நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தில் ஒருவராக நாம் ஆகவேண்டும் என்பதற்காகவும்தான். ஆதாம் பாவம் செய்தபோது யெகோவா அவனைத் தன்னுடைய குடும்பத்தைவிட்டே அனுப்பிவிட்டார். அதனால், அவனுடைய சந்ததியில் வந்த நாம் எல்லாருமே யெகோவாவுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கிற வாய்ப்பை இழந்துவிட்டோம். ஆனால், மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். யாரெல்லாம் மீட்புவிலையில் விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களைக் காலப்போக்கில் தன் குடும்பத்தில் ஒருவராக ஆக்கிக்கொள்வார். இப்போதுகூட நம்மால் யெகோவாவோடும் அவருடைய மக்களோடும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. இவையெல்லாமே நமக்குக் கிடைப்பதற்குக் காரணம் யெகோவாவுடைய அன்புதான்.—ரோ. 5:10, 11.

7. இயேசு அனுபவித்த கஷ்டங்கள், யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்பைப் புரிந்துகொள்ள எப்படி உதவுகிறது?

7 மீட்புவிலையைக் கொடுப்பதற்காக தன் பங்கில் யெகோவா எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தால் அவருடைய அன்பின் ஆழத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். கஷ்டம் வந்தால் கடவுளுடைய ஊழியர்கள் அவருக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று சாத்தான் குற்றம்சாட்டினான். ஆனால், அதைப் பொய் என்று நிரூபிப்பதற்காக யெகோவா தன்னுடைய மகன் இறப்பதற்கு முன்பு கஷ்டப்பட அனுமதித்தார். (யோபு 2:1-5; 1 பே. 2:21) மத வெறிபிடித்தவர்கள் இயேசுவைக் கேலி செய்தார்கள், அவமானப்படுத்தினார்கள். இயேசுவின் சதை நார்நாராகக் கிழியும் அளவுக்குப் படைவீரர்கள் அவரைச் சாட்டையால் அடித்தார்கள். மரக் கம்பத்தில் வைத்து அவருடைய கைகளில் ஆணி அடித்தார்கள். இவை எல்லாவற்றையுமே யெகோவா பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகன் துடிதுடித்து சாவதையும் பார்த்தார். (மத். 27:28-31, 39) யெகோவா நினைத்திருந்தால் ஒரு கட்டத்தில் இவை எல்லாவற்றையுமே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அதற்கான சக்தி அவருக்கு இருந்தது. சொல்லப்போனால், அவருடைய எதிரிகள்கூட, “[கடவுள்] இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்போது இவனைக் காப்பாற்றட்டும்” என்று சொன்னார்கள். (மத். 27:42, 43) ஆனால், யெகோவா அந்த மாதிரி ஏதாவது செய்திருந்தால் இயேசுவால் மீட்புவிலையைக் கொடுக்க முடியாமல் போயிருக்கும். நமக்கு எந்த நம்பிக்கையுமே இருந்திருக்காது. அதனால்தான் தன் மகன், கடைசி மூச்சுவரை கஷ்டப்பட்டு சாவதற்கு யெகோவா அனுமதித்தார்.

8. இயேசு சித்திரவதை அனுபவித்தபோது யெகோவாவுடைய மனசு வலித்திருக்குமா? விளக்குங்கள். (படத்தையும் பாருங்கள்.)

8 கடவுள் சர்வவல்லமையுள்ளவராக இருப்பதால் அவருக்கு உணர்ச்சிகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதை யோசித்துப் பாருங்கள்: யெகோவாவுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிற நமக்கே இவ்வளவு உணர்ச்சிகள் இருக்கிறதென்றால் அவருக்கும் உணர்ச்சிகள் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் மனசு ‘புண்பட்டது,’ அவர் ‘துக்கப்பட்டார்’ என்றெல்லாம் பைபிள்கூட சொல்கிறது. (சங். 78:40, 41) ஆபிரகாமின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். தன்னுடைய ஒரே மகனைப் பலி கொடுக்க சொல்லி யெகோவா அவரிடம் சொன்னார். (ஆதி. 22:9-12; எபி. 11:17-19) ஈசாக்கைக் கொல்வதற்காகக் கத்தியை ஓங்கியபோது ஆபிரகாமின் மனசு எப்படித் துடித்திருக்கும்! எவ்வளவு வலித்திருக்கும்! அதைவிட அதிகமாக இயேசுவைப் பார்த்தபோது யெகோவாவின் மனசு துடித்திருக்கும். கொஞ்சம்கூட ஈவிரக்கமே இல்லாத ஆட்கள் இயேசுவைச் சித்திரவதை செய்து கொன்றார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த யெகோவாவின் மனசு எப்படித் தவித்திருக்கும்!—இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்—ஆபிரகாம், பகுதி 2 என்ற வீடியோவை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

இயேசு, சித்திரவதை செய்யப்பட்டபோது யெகோவாவுடைய மனசு துடித்தது! (பாரா 8)


9. யெகோவாவின் அன்பைப் பற்றி ரோமர் 8:32, 38, 39-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

9 யெகோவா அளவுக்கு யாராலுமே நம்மேல் அன்பு காட்ட முடியாது; நெருங்கிய உறவுகளோ உயிர் நண்பர்களோகூட அவ்வளவு பாசம் காட்ட முடியாது. இதைத்தான் மீட்புவிலை ஏற்பாடு காட்டுகிறது. (ரோமர் 8:32, 38, 39-ஐ வாசியுங்கள்.) அவ்வளவு ஏன், யெகோவா அளவுக்கு நம்மால்கூட நம்மையே நேசிக்க முடியாது. நீங்கள் என்றென்றைக்கும் வாழ ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் வாழ வேண்டுமென்று உங்களைவிட பலமடங்கு அதிகமாக யெகோவா ஆசைப்படுகிறார். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பதைவிட, உங்கள் பாவங்களை மன்னிக்க யெகோவா ரொம்ப ஆசையாக இருக்கிறார். இவ்வளவு அன்பு வைத்திருக்கிற யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா? மீட்புவிலையில் விசுவாசம் வைக்க வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவ்வளவுதான்! யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்புக்கு மிகப்பெரிய அத்தாட்சி இந்த மீட்புவிலை. புதிய உலகத்தில் யெகோவாவின் அன்பைப் பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்வோம்.—பிர. 3:11.

மீட்புவிலை இயேசுவைப் பற்றி என்ன சொல்லித்தருகிறது?

10. (அ) எப்படிப்பட்ட பெயரோடு சாவது இயேசுவுக்குக் கஷ்டமாக இருந்தது? (ஆ) எப்படியெல்லாம் இயேசு யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தினார்? (“ இயேசு உண்மையாக இருந்தது யெகோவாவின் பெயரை எப்படிப் பரிசுத்தப்படுத்தியது?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

10 தன் அப்பாவின் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்று இயேசு நினைக்கிறார். (யோவா. 14:31) தெய்வ நிந்தனை செய்த குற்றவாளி என்ற பெயரோடு சாவது தன்னுடைய அப்பாவுக்குக் கெட்ட பெயரைக் கொண்டுவந்துவிடுமோ என்று இயேசு கவலைப்பட்டார். “தகப்பனே, இந்தக் கிண்ணம் என்னிடமிருந்து நீங்க முடியுமானால் நீங்கும்படி செய்யுங்கள்” என்று அவர் ஜெபம் செய்தார். (மத். 26:39) ஆனால் சாகும்வரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததன் மூலம் யெகோவாவுடைய பெயரை அவர் பரிசுத்தப்படுத்தினார்.

11. மக்கள்மேல் இருக்கிற பாசத்தை இயேசு எப்படிக் காட்டினார்? (யோவான் 13:1)

11 இயேசு மக்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்; முக்கியமாக தன்னுடைய சீஷர்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். இதையும் மீட்புவிலை காட்டுகிறது. (நீதி. 8:31; யோவான் 13:1-ஐ வாசியுங்கள்.) பூமியில் அவர் செய்ய வேண்டிய வேலைகளில் சில சவால்கள் இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. சித்திரவதையை அனுபவித்து சாக வேண்டியிருக்கும் என்பதுகூட அவருக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், எந்த வேலையையுமே அவர் கடமைக்காகச் செய்யவில்லை, முழு மனசோடு செய்தார். பிரசங்கிப்பது... கற்றுக்கொடுப்பது... மற்றவர்களுக்கு உதவி செய்வது... என எல்லாவற்றையுமே மனசார செய்தார். சாகப்போகும் நாளில்கூட, நேரம் எடுத்து அப்போஸ்தலர்களுடைய பாதங்களைக் கழுவினார். அவர்களை ஆறுதல்படுத்தினார், நிறைய அறிவுரைகளைக் கொடுத்தார். (யோவா. 13:12-15) மரக் கம்பத்தில் வலியில் இருந்தபோதுகூட பக்கத்திலிருந்த குற்றவாளியிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசினார்; அவருடைய அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். (லூக். 23:42, 43; யோவா. 19:26, 27) மக்கள்மேல் இயேசு வைத்திருக்கிற அன்பு, அவருடைய மரணத்தில் மட்டுமல்ல அவருடைய வாழ்க்கை முழுவதிலும் பளிச்சென்று தெரிந்தது.

12. இன்றுவரை இயேசு எப்படி நமக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார்?

12 கிறிஸ்து ‘எல்லா காலத்துக்கும் ஒரேமுறையாக’ இறந்திருந்தாலும் இன்றுவரை நமக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார். (ரோ. 6:10) எப்படி? மீட்புவிலையின் நன்மைகள் நமக்குக் கிடைப்பதற்காக இன்றுவரை நிறைய விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் செய்துகொண்டிருக்கும் பொறுப்புகளை யோசித்துப் பாருங்கள். நம்முடைய ராஜாவாக, தலைமை குருவாக, சபைக்குத் தலைவராக இருக்கிறார். (1 கொ. 15:25; எபே. 5:23; எபி. 2:17) பரலோக நம்பிக்கையுள்ளவர்களையும் வேறே ஆடுகளையும் கூட்டிச்சேர்க்கிற பொறுப்பை அவர் செய்துகொண்டிருக்கிறார்; மிகுந்த உபத்திரவத்தின் முடிவுக்கு முன்பு இந்த வேலை முடியும். a (மத். 25:32; மாற். 13:27) ஆன்மீக உணவைக் கொடுக்கிற வேலையையும் இந்தக் கடைசி நாட்களில் அவர் செய்துகொண்டிருக்கிறார். (மத். 24:45) ஆயிர வருஷ ஆட்சியிலும் தொடர்ந்து நமக்குத் தேவையானதையெல்லாம் செய்வார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பெயருக்காக அல்ல, உண்மையிலேயே யெகோவா தன்னுடைய மகனை நமக்காகக் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.

கற்றுக்கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள்

13. யெகோவாவும் இயேசுவும் நம்மேல் வைத்திருக்கிற அன்பைப் புரிந்துகொள்ள என்ன செய்யலாம்?

13 யெகோவாவும் இயேசுவும் செய்திருக்கிற விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கப் பார்க்க, அவர்கள் நம்மேல் வைத்திருக்கிற அன்பைப் புரிந்துகொள்ள முடியும். இந்த நினைவுநாள் சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு சுவிசேஷ புத்தகங்களைப் படிக்க முயற்சி செய்யுங்கள். நிறைய அதிகாரங்களைப் படித்து முடிக்க வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, நிறுத்தி நிதானமாகப் படியுங்கள். யெகோவாமேலும் இயேசுமேலும் இருக்கிற அன்பை அதிகமாக்கும் குறிப்புகளைக் கண்டுபிடியுங்கள். எல்லாவற்றுக்கும்மேல், கற்றுக்கொள்கிற விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

14. ஆராய்ச்சி செய்து படிப்பது மீட்புவிலையைப் பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் தொடர்ந்து கற்றுக்கொள்ள எப்படி உதவுகிறது? (சங்கீதம் 119:97) (படத்தையும் பாருங்கள்.)

14 நீங்கள் எவ்வளவு வருஷம் சத்தியத்தில் இருந்தாலும் சரி, கடவுளுடைய நீதி, அன்பு, மீட்புவிலை போன்றவற்றைப் பற்றிப் புதுப்புது விஷயங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும். சொல்லப்போனால், இதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொள்வதற்கு முடிவே இல்லை. அதனால் நம்முடைய பிரசுரங்களில் இருக்கிற தகவல்களை நன்றாகப் படித்துப் பாருங்கள். ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்குப் புரியவில்லையென்றால் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். யெகோவாவைப் பற்றி, இயேசுவைப் பற்றி, அவர்கள் நம்மேல் காட்டிய அன்பைப் பற்றி அது என்ன சொல்கிறது என்று நாள் முழுக்க அசைபோட்டுப் பாருங்கள்.—சங்கீதம் 119:97-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.

நாம் எவ்வளவு வருஷம் சத்தியத்தில் இருந்தாலும் சரி, மீட்புவிலையைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது (பாரா 14)


15. பைபிளில் இருக்கிற புதையல்களைத் தேட நாம் ஏன் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்?

15 ஆராய்ச்சி செய்து படிக்கும்போது புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் சோர்ந்துவிடாதீர்கள். தங்கத்தைத் தேடிப்போகிறவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கடுகளவு தங்கத்தைக் கண்டுபிடிக்கக்கூட அவர்கள் பல மணிநேரம் அல்லது பல நாட்கள் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். இருந்தாலும் அவர்கள் ஏன் இவ்வளவு விடாமுயற்சியோடு தேடுகிறார்கள்? ஏனென்றால், அவர்களுக்குத் தங்கத்தின் மதிப்பு தெரியும். தங்கத்தைவிட பைபிள் சத்தியங்கள் எவ்வளவு மதிப்புள்ளவை! (சங். 119:127; நீதி. 8:10) அதனால், தொடர்ந்து பொறுமையாகப் படியுங்கள், தேடலுக்கான முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்.—சங். 1:2.

16. யெகோவா மாதிரியும் இயேசு மாதிரியும் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

16 படிக்கிற விஷயங்களின்படி எப்படி நடக்கலாம் என்று யோசியுங்கள். உதாரணத்துக்கு, யெகோவா மாதிரியே எப்படி நீதியாக நடக்கலாம்... பாரபட்சம் காட்டாமல் இருக்கலாம்... என்றெல்லாம் யோசியுங்கள். இயேசு எப்படி யெகோவாமீதும் மற்றவர்கள்மீதும் அன்பு காட்டினாரோ அதேமாதிரி அன்பு காட்டுங்கள். யெகோவாவின் பெயருக்காகக் கஷ்டங்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருங்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதால் உங்களுக்குக் கஷ்டங்கள் வந்தாலும், அதைச் செய்ய தயங்காதீர்கள். இயேசு மாதிரியே ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள். அப்போதுதான் மக்களால் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடியும். அதோடு, அவர் கொடுத்திருக்கிற மீட்புவிலைமீது விசுவாசம் வைத்து நன்மையடையவும் முடியும்.

17. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 மீட்புவிலையைப் பற்றி எந்தளவுக்கு நாம் படித்துத் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு யெகோவாமீதும் இயேசுமீதும் நமக்கு இருக்கிற அன்பு அதிகமாகும்; அவர்களும் பதிலுக்கு நம்மேல் அதிகமாக அன்பைக் காட்டுவார்கள். (யோவா. 14:21; யாக். 4:8) அதனால், மீட்புவிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள யெகோவா கொடுத்திருக்கும் கருவிகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மீட்புவிலையால் நமக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் படிப்போம். யெகோவா நம்மேல் காட்டியிருக்கிற அன்புக்குக் கைமாறாக நாமும் எப்படி அன்பு காட்டலாம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

பாட்டு 107 கடவுள் காட்டும் அன்பின் வழி

a “பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும்” ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பதைப் பற்றி பவுல் எபேசியர் 1:10-ல் சொல்கிறார். அதில் பவுல் சொன்னதற்கும், மத்தேயு 24:31 மற்றும் மாற்கு 13:27-ல் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’ கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்று இயேசு சொன்னதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பவுல் சொன்னது, பரலோகத்தில் வாழ்வதற்காக யெகோவா தன் சக்தியால் சில மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிற காலத்தை பற்றி! ஆனால் இயேசு சொன்னது, மிகுந்த உபத்திரவம் சமயத்தில் பூமியில் மீதியிருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பரலோகத்துக்குக் கூட்டிச்சேர்க்கப்படுகிற சமயத்தை பற்றி!