Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 5

பாட்டு 108 தேவனின் மாறாத அன்பு

யெகோவாவின் அன்பால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

யெகோவாவின் அன்பால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

“பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்.”1 தீ. 1:15.

என்ன கற்றுக்கொள்வோம்?

மீட்புவிலையால் நமக்கு என்ன நன்மை என்றும் நாம் எப்படி யெகோவாவுக்கு நன்றி காட்டலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1. யெகோவாவை நாம் எப்படிச் சந்தோஷப்படுத்தலாம்?

 ரொம்ப அழகான, பிரயோஜனமான ஒரு பரிசை நீங்கள் நேசிக்கும் ஒருவருக்குக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் அந்தப் பரிசை டப்பாக்குள் போட்டு அப்படியே வைத்துவிடுகிறார்; அதை மறந்தே போய்விடுகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனால், அவர் அந்தப் பரிசை நன்றாகப் பயன்படுத்தினால், அதற்காக நன்றியோடு இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நிச்சயம் சந்தோஷப்படுவீர்கள்! இந்த உதாரணத்திலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? நம்மேல் அன்பு இருப்பதால், யெகோவா தன்னுடைய சொந்த மகனை நமக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அந்தப் பரிசுக்காகவும் அவர் காட்டிய அன்புக்காகவும் நாம் நன்றியோடு இருந்தால் யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார், இல்லையா?—யோவா. 3:16; ரோ. 5:7, 8.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 நாட்கள் போகப்போக, மீட்புவிலை என்ற பரிசின் மேல் நமக்கு இருக்கிற நன்றி குறைய ஆரம்பிக்கலாம். அப்படிக் குறைந்தால், கடவுள் கொடுத்த பரிசை டப்பாக்குள் போட்டு ஓரமாக வைப்பதுபோல் ஆகிவிடும். அப்படி நடக்கக் கூடாது என்றால், யெகோவாவும் கிறிஸ்துவும் நமக்காகச் செய்ததை அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும். மீட்புவிலைமேல் இருக்கிற நன்றி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு இந்தக் கட்டுரை உதவும். மீட்புவிலையால் இன்று நமக்கு என்ன நன்மை இருக்கிறது என்றும் எதிர்காலத்தில் என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்றும் இந்தக் கட்டுரையில் கலந்துபேசுவோம். அதுமட்டுமல்ல, யெகோவா காட்டியிருக்கிற அன்புக்குக் கைமாறாக நாம் எப்படி அன்பு காட்டலாம் என்றும் பார்ப்போம்; அதுவும், இந்த நினைவுநாள் சமயத்தில்!

இப்போது கிடைக்கும் நன்மைகள்

3. மீட்புவிலையிலிருந்து நாம் இப்போது நன்மையடைகிற ஒரு வழி என்ன?

3 மீட்புப் பலியிலிருந்து நாம் ஏற்கனவே நன்மையடைந்துகொண்டு இருக்கிறோம். உதாரணத்துக்கு, அதன் அடிப்படையில் யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். அப்படி மன்னிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை. இருந்தாலும், அவராகவே ஆசைப்பட்டு அதைச் செய்கிறார். யெகோவா காட்டுகிற மன்னிப்புக்கு நன்றியோடு இருந்த ஒரு சங்கீதக்காரர் இப்படிப் பாடினார்: “யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”—சங். 86:5; 103:3, 10-13.

4. மீட்புவிலையை யெகோவா யாருக்காகக் கொடுத்தார்? (லூக்கா 5:32; 1 தீமோத்தேயு 1:15)

4 ‘யெகோவாவின் மன்னிப்பைப் பெற எனக்கெல்லாம் தகுதியே இல்லை’ என்று சிலர் நினைக்கலாம். சொல்லப்போனால், நம் யாருக்குமே தகுதி இல்லைதான். பவுல்கூட ஒருசமயம், ‘அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட [எனக்கு] தகுதியில்லை’ என்று சொன்னார். ஆனால் பிறகு, “கடவுளுடைய அளவற்ற கருணையால் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்” என்றார். (1 கொ. 15:9, 10) செய்த பாவங்களை நினைத்து நாம் உண்மையிலேயே மனம் திருந்தும்போது யெகோவா நம்மை மன்னிக்கிறார். ஏன்? மன்னிப்பைப் பெற நமக்கு ஏதோ தகுதி இருக்கிறது என்பதாலா? இல்லை. நம்மேல் அன்பு இருப்பதால்தான் மன்னிக்கிறார். அதனால், செய்த தவறை நினைத்து சோர்ந்துபோகிற சமயத்தில் இதை மறந்துவிடாதீர்கள்: பாவமே செய்யாத மனிதர்களுக்காக அல்ல, செய்த பாவத்தை நினைத்து வருத்தப்படுகிறவர்களுக்காக யெகோவா மீட்புவிலையைக் கொடுத்திருக்கிறார்.—லூக்கா 5:32-ஐயும், 1 தீமோத்தேயு 1:15-ஐயும் வாசியுங்கள்.

5. யெகோவாவின் மன்னிப்பை நாம் எப்படிப் பார்க்கக் கூடாது? விளக்குங்கள்.

5 ‘யெகோவாவுக்கு நான் ரொம்ப வருஷங்களாக சேவை செய்திருக்கிறேன். அதனால், அவர் என்னை மன்னித்தே ஆக வேண்டும்’ என்று நாம் சொல்ல முடியாது. நாம் செய்த சேவையை யெகோவா மறக்க மாட்டார் என்பது உண்மைதான். (எபி. 6:10) ஆனால், நாம் செய்த சேவைக்குக் கூலியாக யெகோவா மீட்புவிலையைக் கொடுக்கவில்லை; இலவசப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை யெகோவாவின் மன்னிப்பை, நாம் செய்த சேவைக்குக் கிடைத்த கூலியாகப் பார்த்தால் கிறிஸ்து இறந்தது வீண் என்று சொல்வதுபோல் ஆகிவிடும்.—கலாத்தியர் 2:21-ஐ ஒப்பிடுங்கள்.

6. கடவுளுடைய சேவையில் பவுல் ஏன் கடினமாக உழைத்தார்?

6 கடவுளுடைய சேவையைச் செய்தால் அவருடைய மன்னிப்பு கிடைத்துவிடும் என்று பவுல் நினைக்கவில்லை. அப்படியிருக்கும்போது அவர் ஏன் அவ்வளவு கடினமாக உழைத்தார்? கடவுளுடைய மன்னிப்பைச் சம்பாதிக்க தகுதியானவர் என்று நிரூபிப்பதற்காக அல்ல, கடவுள் காட்டியிருக்கிற அளவற்ற கருணைக்கு நன்றி காட்டுவதற்காக உழைத்தார். (எபே. 3:7) நாமும் பவுலை மாதிரியே நடந்துகொள்ள வேண்டும். யெகோவாவுடைய கருணையால் கிடைக்கும் மன்னிப்புக்கு நன்றி காட்ட உழைக்க வேண்டும்; அதைச் சம்பாதித்துவிடலாம் என்ற எண்ணத்தோடு உழைக்கக் கூடாது.

7. மீட்புவிலையால் இப்போதே நமக்குக் கிடைக்கிற இன்னொரு நன்மை என்ன? (ரோமர் 5:1; யாக்கோபு 2:23)

7 மீட்புவிலையால் இப்போதே நமக்குக் கிடைக்கிற இன்னொரு நன்மையைப் பற்றி யோசிக்கலாம். மீட்புவிலையால்தான் யெகோவாவிடம் நம்மால் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. a முந்தின கட்டுரையில் பார்த்த மாதிரி பிறக்கும்போதே நாம் யெகோவாவோடு நல்ல பந்தத்தோடு பிறப்பது கிடையாது. மீட்புவிலையால்தான் கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்க முடிகிறது; அவரிடம் நெருங்கிப்போகவும் முடிகிறது.—ரோமர் 5:1-ஐயும், யாக்கோபு 2:23-ஐயும் வாசியுங்கள்.

8. ஜெபம் செய்கிற பாக்கியத்தைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நாம் ஏன் நன்றியோடு இருக்க வேண்டும்?

8 யெகோவாவோடு நமக்கு ஒரு நல்ல பந்தம் இருப்பதால்தான் ஜெபம் செய்கிற பாக்கியம் கிடைத்திருக்கிறது. தன்னுடைய ஊழியர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஜெபம் செய்யும்போது யெகோவா அதைக் கேட்கிறார். ஆனால், அவர் அதோடு நிறுத்திக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாக செய்யும் ஜெபத்தையும் கேட்கிறார். ஜெபம், நம் மனசுக்கு அமைதியைக் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால், அது வெறுமனே மனசை ஆற்றும் மருந்து கிடையாது. யெகோவாவோடு இருக்கிற நட்பை அது பலப்படுத்துகிறது. (சங். 65:2; யாக். 4:8; 1 யோ. 5:14) இயேசு பூமியில் இருந்தபோது அடிக்கடி ஜெபம் செய்தார். ஏனென்றால், ஜெபங்களை யெகோவா கேட்கிறார் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அப்படிச் செய்ததால்தான் தன் அப்பாவோடு அவரால் நெருங்கியிருக்க முடிந்தது. (லூக். 5:16) இயேசு கொடுத்த மீட்புப் பலியின் அடிப்படையில் நம்மாலும் இப்போது யெகோவாவிடம் பேச முடிகிறது; அவரோடு நண்பராக முடிகிறது. இதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

எதிர்காலத்தில் கிடைக்கும் நன்மைகள்

9. மீட்புவிலையால் எதிர்காலத்தில் நமக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது?

9 மீட்புவிலையால் எதிர்காலத்தில் நமக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது? என்றென்றும் வாழ்கிற வாழ்க்கை கிடைக்கப்போகிறது. ஆனால், ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று பலர் நினைக்கிறார்கள். ஏனென்றால், காலம் காலமாக மனிதர்கள் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் மனிதர்களைப் படைத்தபோது அவர்கள் சாகாமல் என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் யெகோவா நினைத்தார். ஒருவேளை, ஆதாம் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லாருமே என்றென்றைக்கும் வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம். மேலே இருக்கிற கேள்விக்கு இடமே இருந்திருக்காது. முடிவில்லாத வாழ்க்கை என்பது, யோசித்தே பார்க்க முடியாத விஷயமாக தோன்றலாம். ஆனால், நமக்கு அது கிடைக்க வேண்டும் என்பதற்காக, நாம் யோசித்தே பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பெரிய விலையை யெகோவா கொடுத்திருக்கிறார். அதுதான் அவருடைய சொந்த மகனின் உயிர்.—ரோ. 8:32.

10. பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் வேறே ஆடுகளும் எப்படிப்பட்ட வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறார்கள்?

10 முடிவில்லாத வாழ்க்கை என்பது எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற ஒன்றாக இருந்தாலும், அதைப் பற்றி இப்போதே நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், கிறிஸ்துவோடு சேர்ந்து இந்தப் பூமியை ஆட்சி செய்யப்போகிற காலத்துக்காகக் காத்திருக்கிறார்கள். (வெளி. 20:6) வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் வலி, வேதனை இல்லாமல் அழகான பூமியில் சந்தோஷமாக வாழ்வதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார்கள். (வெளி. 21:3, 4) நீங்கள் வேறே ஆடுகளைச் சேர்ந்த ஒருவரா? பூமியில் என்றென்றும் வாழும் வாழ்க்கையை வெறும் ஆறுதல் பரிசாகப் பார்க்காதீர்கள். மனிதர்களை யெகோவா படைத்ததே அவர்கள் பூமியில் என்றென்றும் வாழ்வதற்காகத்தான். பூஞ்சோலையில் வாழ்க்கை கண்டிப்பாக களைகட்டும்!

11-12. பூஞ்சோலையில் நாம் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்? (படத்தையும் பாருங்கள்.)

11 புதிய உலகத்தில் உங்களுடைய வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். வியாதி வந்துவிடுமோ என்ற கவலையே இருக்காது. மரணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்கள். (ஏசா. 25:8; 33:24) உங்களுடைய நியாயமான ஆசைகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றுவார். நீங்கள் எதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறீர்கள்? மிருகங்களைப் பற்றியா? செடி, கொடிகளைப் பற்றியா? இசைக்கருவியை வாசிக்கவா? ஓவியம் வரையவா? நீங்கள் ஆசைப்பட்ட எல்லாவற்றையுமே கற்றுக்கொள்ளலாம். வீடுகளை வடிவமைக்கவும் அவற்றைக் கட்டவும் அப்போது ஆட்கள் தேவைப்படுவார்கள். விவசாயிகளும் தேவைப்படுவார்கள். சாப்பாடு சமைத்து கொடுப்பதற்கும், நமக்குத் தேவையான கருவிகளைச் செய்வதற்கும், அழகான தோட்டங்களை அமைப்பதற்கும் கண்டிப்பாக ஆட்கள் தேவைப்படுவார்கள். (ஏசா. 35:1; 65:21) நாம் என்றென்றும் வாழப்போவதால் நமக்கு இருக்கிற திறமைகளை மெருகூட்டிக்கொண்டே போக முடியும்; புதுப்புது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

12 உயிர்த்தெழுந்து வருபவர்களை வரவேற்கும்போது நம் இதயம் சந்தோஷத்தால் துள்ளும்! (அப். 24:15) படைப்புகளிலிருந்து யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்! (சங். 104:24; ஏசா. 11:9) எல்லாவற்றையும்விட, துளிகூட குற்றவுணர்வு இல்லாமல், யெகோவாவை வணங்குகிற அந்தக் காலம் எப்படி இருக்கும்! ‘பாவத்தால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களுக்காக’ இவ்வளவு பெரிய பெரிய ஆசீர்வாதங்களை இழப்பது சரியாக இருக்குமா? (எபி. 11:25) கண்டிப்பாக இருக்காது! இந்த ஆசீர்வாதங்களுக்காக நாம் எவ்வளவு பெரிய தியாகங்களை வேண்டுமானாலும் செய்யலாம். இதை மறந்துவிடாதீர்கள்: பூஞ்சோலை வாழ்க்கை எதிர்கால நம்பிக்கையாகவே இருந்துவிடாது. பூஞ்சோலை ஒருநாள் விடிந்திருக்கும்! நம் நம்பிக்கை நிஜமாகியிருக்கும்! யெகோவா மட்டும் அவருடைய மகனை நமக்குப் பரிசாகக் கொடுக்கவில்லை என்றால், இதெல்லாம் நமக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை.

பூஞ்சோலையில் என்ன செய்ய நீங்கள் ஆசையாகக் காத்திருக்கிறீர்கள்? (பாராக்கள் 11-12)


யெகோவாவின் அன்புக்கு நன்றி காட்டுங்கள்

13. யெகோவா காட்டியிருக்கிற அன்புக்கு நாம் எப்படி நன்றியோடு இருக்கலாம்? (2 கொரிந்தியர் 6:1)

13 யெகோவா காட்டியிருக்கிற அன்புக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? வாழ்க்கையில் யெகோவாவின் வேலைக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் காட்டலாம். (மத். 6:33) சொல்லப்போனால், இயேசு “எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும்.” (2 கொ. 5:15) யெகோவாவின் அளவற்ற கருணையைப் பெற்றுக்கொண்ட நாம் அவருடைய சேவையைச் செய்வதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம்.—2 கொரிந்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.

14. யெகோவா கொடுத்திருக்கிற வழிநடத்துதல்கள்மேல் விசுவாசம் இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

14 யெகோவாவுடைய அன்புக்கு நன்றிக் காட்டுவதற்கு இன்னொரு வழி, அவர் கொடுக்கிற வழிநடத்துதல்கள்மேல் விசுவாசம் வைப்பது. இதை எப்படிச் செய்யலாம்? முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது, உதாரணத்துக்கு, ‘உயிர் கல்வி படிக்க வேண்டுமா?’ ‘எப்படிப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுப்பது?’ போன்ற தீர்மானங்களை எடுக்கும்போது யெகோவா தந்திருக்கும் வழிநடத்துதல்களை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். (1 கொ. 10:31; 2 கொ. 5:7) நம்முடைய விசுவாசத்தைச் செயலில் காட்டும்போது யெகோவாவோடு இருக்கும் நட்பு பலமாகும், அவர்மேல் இருக்கும் விசுவாசம் அதிகமாகும், எதிர்கால நம்பிக்கை உறுதியாகும்.—ரோ. 5:3-5; யாக். 2:21, 22.

15. நினைவுநாள் சமயத்தில் நம்முடைய நன்றியை எப்படிக் காட்டலாம்?

15 மீட்புவிலையை ஏற்பாடு செய்ததற்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதை இந்த நினைவுநாள் சமயத்தில் காட்டலாம். கண்டிப்பாக நாம் எல்லாரும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம். ஆனால் அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் கலந்துகொள்ள நிறைய பேரை அழைக்கலாம். (1 தீ. 2:4) அவர்களைக் கூப்பிடும்போது, அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்பதை விளக்கலாம். அதற்கு, jw.org வெப்சைட்டில் இருக்கிற இயேசு ஏன் இறந்தார்? மற்றும் இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற இரண்டு வீடியோக்கள் ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். செயலற்ற பிரஸ்தாபிகளை அழைப்பதற்கு மூப்பர்கள் கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள். தொலைந்துபோன ஒரு ஆடு மறுபடியும் மந்தைக்கு வரும்போது, பரலோகத்திலும், பூமியிலும் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்! (லூக். 15:4-7) நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு வருகிறவர்களிடமும், புதிதாக வருகிறவர்களிடமும் சந்தோஷமாகப் பேசலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, அவர்களும் நமக்கு முக்கியம் என்பதைக் காட்டுவோம்.—ரோ. 12:13.

16. நினைவுநாள் சமயத்தில் நாம் ஏன் அதிகமாக ஊழியம் செய்ய வேண்டும்?

16 இந்த நினைவுநாள் சமயத்தில் உங்களால் யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், அவருக்கும் கிறிஸ்துவுக்கும் நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுவோம். எந்தளவுக்கு நாம் அவருக்குச் சேவை செய்கிறோமோ அந்தளவுக்கு அவரும் நமக்கு உதவுவார்; அவர்மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை அதிகமாகும். (1 கொ. 3:9) சிந்திக்க தினம் ஒரு வசனத்தில் அல்லது பயிற்சிப் புத்தகத்தில் வரும் நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணையில் சொல்லியிருப்பதுபோல் படிக்க நாம் மறந்துவிடக் கூடாது. இந்த பைபிள் வசனங்களை ஒரு பிராஜெக்டாக நீங்கள் எடுத்துப் படிக்கலாம்.

17. யெகோவா எதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்? (“ யெகோவாவின் அன்புக்கு நன்றிக் காட்ட வழிகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

17 ஒருவேளை சூழ்நிலை காரணமாக, இந்தக் கட்டுரையில் பார்த்த எல்லாவற்றையுமே உங்களால் செய்ய முடியாமல் போகலாம். ஆனால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் சேவையை மற்றவர்கள் செய்கிற சேவையோடு யெகோவா ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. உங்களுக்கு அவர்மேல் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைத்தான் அவர் பார்க்கிறார். அவர் கொடுத்த பரிசான மீட்புவிலைக்காக உங்கள் மனதில் நன்றி பொங்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார்.—1 சா. 16:7; மாற். 12:41-44.

18. நாம் ஏன் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றியோடு இருக்க வேண்டும்?

18 மீட்புவிலையால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; யெகோவாவோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது; என்றென்றும் வாழ்வோம் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது. யெகோவா நம்மேல் அன்பு வைத்திருப்பதால்தான் இந்த எல்லா ஆசீர்வாதங்களும் கிடைத்திருக்கின்றன. யெகோவா காட்டிய அன்புக்கு என்றும் நன்றி மறக்காமல் இருக்கலாம்! (1 யோ. 4:19) இயேசுவும் நம்மேல் அன்பு வைத்திருப்பதால், தன்னுடைய உயிரையே நமக்காகக் கொடுத்தார். அவருக்கும் நாம் என்றுமே நன்றியோடு இருக்கலாம்!—யோவா. 15:13.

பாட்டு 154 உண்மை அன்பு

a மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே, தன்னுடைய ஊழியர்கள் செய்த பாவங்களை மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா மன்னித்தார். ஏனென்றால், சாகும்வரை இயேசு உண்மையாக இருப்பார் என்று யெகோவா முழுமையாக நம்பினார். அதனால், ஏற்கனவே மீட்புவிலை கொடுக்கப்பட்ட மாதிரி யெகோவா பார்த்தார்.—ரோ. 3:25.