Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 1

பாட்டு 2 யெகோவா என்பதே உங்கள் பெயர்

யெகோவாவுக்கு மகிமையைக் கொடுங்கள்

யெகோவாவுக்கு மகிமையைக் கொடுங்கள்

2025-க்கான வருடாந்தர வசனம்: “யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.”சங். 96:8.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவுக்குப் போய்ச் சேர வேண்டிய மகிமையை அவருக்கு எப்படிக் கொடுக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1. இன்று நிறைய பேர் எதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்?

 இன்று இந்த உலகத்தில், நிறைய பேர் தங்களைப் பற்றி மட்டும்தான் யோசிக்கிறார்கள். எல்லாரும் அவர்களை ‘ஆஹா ஓஹோவென்று’ புகழ வேண்டும் என்பதற்காக அவர்களைப் பற்றியும் அவர்கள் சாதித்த விஷயங்களைப் பற்றியும் சோஷியல் மீடியாவில் போடுகிறார்கள். ஆனால், கொஞ்சம் பேர்தான் யெகோவாவைப் பற்றி யோசிக்கிறார்கள், அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யெகோவாவை மகிமைப்படுத்துவது என்றால் என்ன, ஏன் அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யெகோவாவுக்குப் போய்ச் சேர வேண்டிய மகிமையை அவருக்கு எப்படிக் கொடுக்கலாம் என்றும், சீக்கிரத்தில் அவர் எப்படித் தன்னுடைய பெயரை மகிமைப்படுத்துவார் என்றும் தெரிந்துகொள்வோம்.

யெகோவாவை மகிமைப்படுத்துவது என்றால் என்ன?

2. சீனாய் மலையில் யெகோவா தன்னுடைய மகிமையை எப்படிக் காட்டினார்? ( படத்தையும் பாருங்கள்.)

2 யெகோவா ஒரு கம்பீரமான, அற்புதமான கடவுள் என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து கொண்டுவந்த கொஞ்ச நாளிலேயே, யெகோவா தன்னுடைய மகிமையை அசர வைக்கும் விதத்தில் காட்டினார். இஸ்ரவேலர்கள் பார்த்த காட்சியை நீங்களும் கற்பனை செய்துபாருங்கள்: லட்சக்கணக்கான இஸ்ரவேலர்கள் கடவுள் சொல்வதைக் கேட்பதற்காக சீனாய் மலை அடிவாரத்தில் கூடிவந்திருக்கிறார்கள். திடீரென்று பூமி அதிர்கிறது. மலைக்கு மேல் கார்மேகம் சூழ்ந்து ஒரே புகைமூட்டமாக இருக்கிறது. இடி இடிக்கிறது, மின்னல் வெட்டுகிறது. காதைப் பிளக்கிற மாதிரி ஊதுகொம்பின் சத்தம் கேட்கிறது. (யாத். 19:16-18; 24:17; சங். 68:8) இதையெல்லாம் பார்த்த இஸ்ரவேலர்கள் கண்டிப்பாக அசந்துபோயிருப்பார்கள்.

சீனாய் மலையில் யெகோவா தன்னுடைய மகிமையை இஸ்ரவேலர்களுக்குப் பிரம்மாண்டமான விதத்தில் காட்டினார் (பாரா 2)


3. நாம் எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தலாம்?

3 மனிதர்களால் யெகோவாவை மகிமைப்படுத்த முடியுமா? முடியும்! எப்படி? அதற்கு ஒரு வழி, யெகோவாவுடைய பிரமிக்க வைக்கிற சக்தியைப் பற்றியும் அவருடைய அற்புதமான குணங்களைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வதுதான். யெகோவாவுடைய சக்தியால் நாம் சில விஷயங்களைச் சாதித்திருப்போம்; அதற்கான புகழை அவருக்குக் கொடுப்பதன் மூலமும் நாம் அவரை மகிமைப்படுத்தலாம். (ஏசா. 26:12) யெகோவாவை மகிமைப்படுத்தியவர்களில் ஒரு நல்ல உதாரணம் தாவீது ராஜா. இஸ்ரவேலர்களுக்கு முன்னால் அவர் செய்த ஒரு ஜெபத்தில் இப்படிச் சொன்னார்: “யெகோவாவே, நீங்கள் மகத்துவமும் வல்லமையும் அழகும் மாண்பும் கம்பீரமும் உள்ளவர். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம்.” அவர் ஜெபம் செய்து முடித்த பிறகு, “எல்லாரும் . . . கடவுளாகிய யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.”—1 நா. 29:11, 20.

4. இயேசு எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தினார்?

4 இயேசு பூமியில் இருந்தபோது நிறைய அற்புதங்களைச் செய்தார். அவை எல்லாவற்றையும் யெகோவாவுடைய சக்தியால்தான் செய்ததாக சொல்லி யெகோவாவை மகிமைப்படுத்தினார். (மாற். 5:18-20) அதுமட்டுமல்ல, யெகோவா எப்படிப்பட்ட கடவுள் என்பதை மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். யெகோவா மாதிரியே அவரும் நடந்துகொண்டார். இப்படித் தன்னுடைய அப்பாவை மகிமைப்படுத்தினார். ஒருசமயம், இயேசு ஜெபக்கூடத்தில் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். 18 வருஷங்களாக பேய் பிடித்த ஒரு பெண்ணும் அங்கே இருந்தாள். பேய் பிடித்திருந்ததால் கொஞ்சம்கூட நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு அவளுக்குக் கூன் விழுந்திருந்தது. மனதளவிலும் அவள் கூனிக்குறுகிப்போய் இருந்திருப்பாள். இயேசு அவளைப் பார்த்து மனதுருகினார். அவளிடம் பாசமாக, “பெண்ணே, உன் உடல்நலப் பிரச்சினையிலிருந்து நீ விடுதலை பெற்றாய்” என்று சொல்லி அவள்மேல் கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து நின்றாள், “கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தாள்.” (லூக். 13:10-13) கூனிக்குறுகி இருந்த அவளுடைய உடலும் சரியானது, மனமும் சரியானது! யெகோவாவை மகிமைப்படுத்த அவளுக்கு நல்ல காரணம் இருந்தது; நமக்கும் இருக்கிறது.

ஏன் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம்?

5. யெகோவா புகழைப் பெறத் தகுதியானவர் என்று ஏன் சொல்லலாம்?

5 யெகோவா புகழைப் பெறத் தகுதியானவராக இருப்பதால் அவரை மகிமைப்படுத்துகிறோம். யெகோவாவுக்கு எல்லையில்லாத சக்தி இருக்கிறது. அவரால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. (சங். 96:4-7) அவருடைய படைப்புகளிலிருந்து அவருக்கு இருக்கிற எல்லையில்லாத ஞானம் தெரிகிறது. நமக்கு உயிர் கொடுத்தவரும் அவர்தான், நம்மை வாழவைக்கிறவரும் அவர்தான். (வெளி. 4:11) அவர் உண்மையுள்ளவர். (வெளி. 15:4) அவருக்குத் தோல்வி என்பதே கிடையாது. அவர் சொன்னதைச் செய்யாமல்போனதும் கிடையாது. (யோசு. 23:14) அதனால்தான், எரேமியா தீர்க்கதரிசியும் யெகோவாவைப் பற்றி இப்படிச் சொன்னார்: “உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும் உங்களைப் போல் யாருமே இல்லை.” (எரே. 10:6, 7) யெகோவாவைப் புகழ்வதற்கும் அவருக்கு மதிப்பு மரியாதை காட்டுவதற்கும் இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. மரியாதை மட்டுமல்ல யெகோவாமேல் அன்பு காட்டுவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

6. நாம் ஏன் யெகோவாமேல் உயிரையே வைத்திருக்கிறோம்?

6 யெகோவாமேல் நாம் உயிரையே வைத்திருப்பதால் அவரை மகிமைப்படுத்துகிறோம். யெகோவாமேல் நாம் அன்பாக இருப்பதற்கு முக்கியமான காரணம், அவருக்கு இருக்கிற நிறைய அழகான குணங்கள்தான். அவர் இரக்கம் உள்ளவர், கரிசனை உள்ளவர். (சங். 103:13; ஏசா. 49:15) யெகோவா நம்மை நன்றாகப் புரிந்துகொள்கிறார். நமக்கு வலிக்கும்போது அவருக்கும் வலிக்கிறது. (சக. 2:8) அதனால், எந்தத் தயக்கமும் இல்லாமல் நம்மால் அவரோடு நெருக்கமான நண்பராக முடிகிறது. (சங். 25:14; அப். 17:27) அதுமட்டுமல்ல, அவர் தாழ்மையானவர். “அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார். எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.” (சங். 113:6, 7) இப்படிப்பட்ட ஒரு கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்று யாருக்குத்தான் தோன்றாது!—சங். 86:12.

7. நமக்கு என்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

7 யெகோவாவைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதால் அவரை மகிமைப்படுத்துகிறோம். நிறைய பேருக்கு யெகோவாவைப் பற்றிய உண்மைகள் தெரியவில்லை. ஏனென்றால், சாத்தான் அவரைப் பற்றிப் பொய்களைப் பரப்பி, மக்களுடைய மனக்கண்களைக் குருடாக்கி இருக்கிறான். (2 கொ. 4:4) யெகோவா பழிவாங்குகிற கடவுள், அக்கறை இல்லாதவர், இந்த உலகத்தில் இருக்கிற கஷ்டங்களுக்கு எல்லாம் அவர்தான் காரணம் என்று மக்களை நம்ப வைத்திருக்கிறான். ஆனால், நமக்கு யெகோவாவைப் பற்றிய உண்மைகள் தெரியும். சாத்தான் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி யெகோவாவை மகிமைப்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (ஏசா. 43:10) யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைப் பற்றி 96-வது சங்கீதம் சொல்கிறது. இப்போது, அதில் இருக்கிற சில வசனங்களைப் பார்க்கலாம். அதைப் படிக்கும்போது யெகோவாவுக்குப் போய்ச் சேர வேண்டிய மகிமையை நீங்கள் எப்படியெல்லாம் அவருக்குக் கொடுக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள்.

யெகோவாவுக்குப் போய்ச் சேர வேண்டிய மகிமையை எப்படிக் கொடுக்கலாம்?

8. யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கு ஒரு வழி என்ன? (சங்கீதம் 96:1-3)

8 சங்கீதம் 96:1-3-ஐ வாசியுங்கள். யெகோவாவைப் பற்றிப் பேசுவதன் மூலம் அவரை மகிமைப்படுத்தலாம். இந்த வசனங்களில், “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்,” “அவருடைய பெயரைப் புகழுங்கள்,” “அவர் தரும் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை . . . அறிவியுங்கள்,” “அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்” என்றெல்லாம் சொல்லியிருக்கிறது. இவையெல்லாமே நம்முடைய பேச்சில் யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கான வழிகள். இந்த விஷயத்தில், உண்மையுள்ள யூதர்களும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் நமக்கு நல்ல முன்மாதிரி. யெகோவா அவர்களுக்குச் செய்த நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசவும், அவர் பக்கம் நின்று அவரை ஆதரித்துப் பேசவும் அவர்கள் தயங்கவில்லை. (தானி. 3:16-18; அப். 4:29) நாமும் எப்படி அவர்களைப் போலவே இருக்கலாம்?

9-10. ஏஞ்சலினாவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)

9 அமெரிக்காவில் இருக்கிற ஏஞ்சலினா a என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடத்தில் யெகோவாவை ஆதரித்துத் தைரியமாகப் பேசினார். அந்த கம்பெனியில் ஒரு மீட்டிங் வைத்திருந்தார்கள். அதில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம், அவர்களைப் பற்றிச் சில விஷயங்களைச் சொல்ல சொன்னார்கள். அதற்காக ஏஞ்சலினா சில ஃபோட்டோக்களைத் தயாராக வைத்திருந்தார். ஒரு யெகோவாவின் சாட்சியாக அவர் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் என்று சொல்ல நினைத்தார். ஆனால் அவர் பேசுவதற்கு முன் இன்னொருவர் பேசினார். அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் வளர்ந்ததாக சொன்னார். பிறகு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் அவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியும் தப்பு தப்பாகப் பேச ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் எப்படி இருந்தது என்று ஏஞ்சலினா சொல்கிறார்: “எனக்கு படபடவென்று இருந்தது. ஆனால், ‘யெகோவாவைப் பற்றி ஒருவர் தப்பு தப்பாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு நான் சும்மா இருக்க போகிறேனா, அல்லது யெகோவா பக்கம் நின்று அவரை ஆதரித்துப் பேச போகிறேனா?’ என்று யோசித்தேன்.”

10 அந்த நபர் பேசி முடித்ததும் ஏஞ்சலினா சின்னதாக மனதுக்குள் ஒரு ஜெபம் செய்தார். பிறகு அவரிடம் மரியாதையோடு, “நானும் உங்களை மாதிரிதான், யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் வளர்ந்தேன். இன்றுவரை ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன்” என்று சொன்னார். பதட்டமான ஒரு சூழ்நிலை இருந்தாலும் ஏஞ்சலினா நிதானமாக இருந்தார். அவரும் அவருடைய நண்பர்களும் சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்தபோது எடுத்த ஃபோட்டோக்களை, கூடவேலை செய்கிறவர்களுக்குக் காட்டினார். அவருடைய நம்பிக்கைகளைப் பற்றியும் மரியாதையோடு எடுத்து சொன்னார். (1 பே. 3:15) பிறகு என்ன நடந்தது? ஏஞ்சலினா பேசி முடித்த பிறகு, அவருக்கு முன் பேசிய அந்த நபரிடம் மாற்றம் தெரிந்தது. சின்ன வயதில் யெகோவாவின் சாட்சிகளோடு பழகியது சந்தோஷமாகத்தான் இருந்தது என்று அவர் சொன்னார். இதைப் பற்றி ஏஞ்சலினா சொல்கிறார்: “யெகோவா பக்கம் நின்று அவரை ஆதரித்துப் பேசுவது நம் கடமை. அவருடைய பெயருக்காகப் பேசுவது நமக்குப் பெருமை.” யாராவது யெகோவாவைப் பற்றித் தவறாகப் பேசும்போது நாம் யெகோவா பக்கம் நின்று அவரை ஆதரித்துப் பேச வேண்டும். இப்படி அவரை மகிமைப்படுத்துவது நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய பாக்கியம்.

நம்முடைய பேச்சின் மூலம் யெகோவாவை மகிமைப்படுத்தலாம் (பாராக்கள் 9-10) b


11. சங்கீதம் 96:8-ல் இருக்கும் நியமத்தை, யெகோவாவை உண்மையாக வணங்கியவர்கள் எப்படியெல்லாம் கடைப்பிடித்திருக்கிறார்கள்?

11 சங்கீதம் 96:8-ஐ வாசியுங்கள். நம் பொருள் வசதிகளைக் கொடுப்பதன் மூலம் யெகோவாவை மகிமைப்படுத்தலாம். யெகோவாவை உண்மையாக வணங்கியவர்கள், மதிப்புமிக்க பொருள்களைக் கொடுத்து அவரை எப்போதுமே மகிமைப்படுத்தி இருக்கிறார்கள். (நீதி. 3:9) உதாரணத்துக்கு, ஆலயத்தைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் இஸ்ரவேலர்கள் காணிக்கை கொடுத்தார்கள். (2 ரா. 12:4, 5; 1 நா. 29:3-9) இயேசுவின் சீஷர்களில் சிலர், “தங்களுடைய உடைமைகளைக் கொண்டு” இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் பணிவிடை செய்தார்கள். (லூக். 8:1-3) முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள், சகோதர சகோதரிகளுக்காக நிவாரண உதவிகளைச் செய்தார்கள். (அப். 11:27-29) இன்று நாமும் மனதார நன்கொடைகள் கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்தலாம்.

12. நம் நன்கொடைகள் எப்படி யெகோவாவை மகிமைப்படுத்துகிறது? (படத்தையும் பாருங்கள்.)

12 நாம் கொடுக்கும் நன்கொடைகள் எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தும் என்பதற்கு ஒரு அனுபவத்தை இப்போது பார்க்கலாம். ஜிம்பாப்வேயில் ரொம்ப நாளாக வறட்சி இருந்தது. அதனால் லட்சக்கணக்கானவர்கள் பஞ்சத்தாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று 2020-ல் வந்த ஒரு அறிக்கை சொன்னது. அப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் சகோதரி பிரிஸ்காவும் ஒருவர். இவ்வளவு வறட்சி இருந்தாலும், பிரிஸ்கா ஊழியம் செய்வதை நிறுத்தவே இல்லை. அந்த ஊரில் இருந்தவர்கள் நிலத்தை உழுது பண்படுத்திக் கொண்டிருந்த சமயத்திலும் பிரிஸ்கா எல்லா புதன்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் ஊழியத்துக்குப் போய்விடுவார். வேலை செய்வதற்குப் பதிலாக அவர் ஊழியத்துக்குப் போவதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் பிரிஸ்காவைக் கேலி செய்தார்கள். “நீ பட்டினி கிடந்து சாகப் போகிறாய்” என்று சொன்னார்கள். ஆனால் பிரிஸ்கா அவர்களிடம், “யெகோவா அவருடைய மக்களைக் கைவிட்டதே இல்லை” என்று நம்பிக்கையோடு சொன்னார். கொஞ்ச நாளிலேயே அமைப்பிலிருந்து பிரிஸ்காவுக்கு நிவாரண பொருள்கள் கிடைத்தன. இதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அசந்துபோனார்கள். “கடவுள் உன்னை கைவிடவில்லை. உன்னுடைய கடவுளைப் பற்றி எங்களுக்கும் சொல்லிக்கொடு” என்று பிரிஸ்காவிடம் கேட்டார்கள். அதில் ஏழு பேர் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். நாம் கொடுக்கிற நன்கொடையால்தான் பிரிஸ்கா மாதிரி நிறைய பேருக்கு அமைப்பால் உதவி செய்ய முடிகிறது.

நம்முடைய பொருள் வசதிகள் மூலம் யெகோவாவை மகிமைப்படுத்தலாம் (பாரா 12) c


13. நம் நடத்தையால் யெகோவாவை மகிமைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 96:9)

13 சங்கீதம் 96:9-ஐ வாசியுங்கள். நம்முடைய நடத்தை மூலம் யெகோவாவை மகிமைப்படுத்தலாம். வழிபாட்டுக் கூடாரத்திலும் யெகோவாவுடைய ஆலயத்திலும் சேவை செய்த குருமார்கள் சுத்தமாக இருக்க வேண்டியிருந்தது. (யாத். 40:30-32) நாமும் உடல் அளவில் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமாக நம் மனம் சுத்தமாக இருக்க வேண்டும். யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் நாம் செய்யக் கூடாது. (சங். 24:3, 4; 1 பே. 1:15, 16) “பழைய சுபாவத்தை” நாம் கழற்றி போட வேண்டும். அதாவது, கெட்ட எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் விட்டுவிட வேண்டும். “புதிய சுபாவத்தை” போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, யெகோவா யோசிப்பது போல் யோசிக்க வேண்டும். அவருடைய அருமையான குணங்களைக் காட்ட வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு நாம் கடினமாக முயற்சி எடுக்க வேண்டும். (கொலோ. 3:9, 10) ஒழுக்கங்கெட்ட கொடூரமான ஆட்களால்கூட யெகோவாவுடைய உதவியால் தங்களை மாற்றிக்கொண்டு புதிய சுபாவத்தைப் போட்டுக்கொள்ள முடியும்.

14. ஜேக் என்பவருடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)

14 ஜேக் என்பவருடைய அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவர் ரொம்ப மோசமானவராகவும் கொடூரமானவராகவும் இருந்திருக்கிறார். அவரை ‘அரக்கன்’ என்றுதான் கூப்பிடுவார்கள். அவர் மரண தண்டனை கைதியாக ஜெயிலில் இருந்தார். அந்தளவுக்குப் பயங்கரமான குற்றங்களைச் செய்திருந்தார். ஆனாலும், ஜெயிலுக்கு ஊழியம் செய்ய வந்த ஒரு சகோதரரிடம் பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார். ஜேக் நிறைய மோசமான விஷயங்களைச் செய்திருந்தாலும், அவருடைய பழைய சுபாவத்தை மாற்றிக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சி ஆனார். அவருடைய மரண தண்டனையை நிறைவேற்றிய அன்று, ஜெயில் அதிகாரிகள் சிலர் அவருக்காக அழுதார்கள். அந்தளவுக்கு அவர் மாறியிருந்தார். “ஒருகாலத்தில் இந்த ஜெயிலில் ஜேக்தான் ரொம்ப மோசமானவர். ஆனால் இப்போது அவர் ரொம்ப தங்கமானவர்” என்று ஒரு அதிகாரி சொன்னார். ஜேக் இறந்த அடுத்த வாரம், கூட்டம் நடத்துவதற்குச் சகோதரர்கள் அந்த ஜெயிலுக்குப் போயிருந்தார்கள். அப்போது ஒரு கைதி முதல் தடவையாகக் கூட்டத்துக்கு வந்திருப்பதைப் பார்த்தார்கள். ஜேக் செய்த மாற்றங்கள் அவருடைய மனதைத் தொட்டிருக்கிறது. அவரும் யெகோவாவை வணங்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளத்தான் அந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறார். கண்டிப்பாக, நம்முடைய நல்ல நடத்தை யெகோவாவை மகிமைப்படுத்தும்.—1 பே. 2:12.

நம்முடைய நடத்தை மூலம் யெகோவாவை மகிமைப்படுத்தலாம் (பாரா 14) d


சீக்கிரத்தில் யெகோவா எப்படி அவருடைய பெயரை மகிமைப்படுத்துவார்?

15. சீக்கிரத்தில் யெகோவா எப்படி அவருடைய பெயரை முழுமையாக மகிமைப்படுத்துவார்? (சங்கீதம் 96:10-13)

15 சங்கீதம் 96:10-13-ஐ வாசியுங்கள். 96-வது சங்கீதத்தின் கடைசி வசனங்கள் யெகோவாவை, நியாயமுள்ள நீதிபதி, ராஜா என்று சொல்கிறது. சீக்கிரத்தில் யெகோவா எப்படி அவருடைய பெயரை மகிமைப்படுத்துவார்? அவருடைய நீதியான நியாயத்தீர்ப்புகள் மூலம். யெகோவாவுடைய பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்திய மகா பாபிலோனை அவர் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார். (வெளி. 17:5, 16; 19:1, 2) அந்த அழிவைப் பார்க்கும் சிலர் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்க ஆரம்பிக்கலாம். கடைசியாக, அர்மகெதோனில் சாத்தானுடைய இந்த மோசமான உலகத்தை யெகோவா அழிப்பார். அவரை எதிர்ப்பவர்களையும் அவருடைய பெயரைக் கெடுப்பவர்களையும் யெகோவா அழிப்பார். ஆனால், அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களையும், அவரை மகிமைப்படுத்துவதைப் பெருமையாக நினைக்கிறவர்களையும் காப்பாற்றுவார். (மாற். 8:38; 2 தெ. 1:6-10) கிறிஸ்துவுடைய ஆயிர வருஷ ஆட்சிக்குப் பிறகு, ஒரு கடைசி சோதனை இருக்கும். அதெல்லாம் முடிந்த பின், யெகோவா அவருடைய பெயரை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தி இருப்பார். (வெளி. 20:7-10) அப்போது, “கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவின் மகிமையைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.”—ஆப. 2:14.

16. நீங்கள் என்ன செய்ய உறுதியாக இருக்கிறீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)

16 யெகோவாவுக்குப் போய்ச் சேர வேண்டிய மகிமையை எல்லாரும் அவருக்குக் கொடுக்கிற அந்த நாள் எவ்வளவு அருமையாக இருக்கும்! அந்த நாளுக்காக நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம். ஆனால், இப்போதே யெகோவாவை மகிமைப்படுத்த கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் முக்கியமான பொறுப்பு. இதை நாம் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்வதற்காகத்தான் 2025-க்கான வருடாந்தர வசனமாக, ஆளும் குழு சங்கீதம் 96:8–ஐ தேர்ந்தெடுத்திருக்கிறது: “யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.”

யெகோவாவுடைய பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை எல்லாரும் அவருக்குக் கொடுக்கிற காலம் கண்டிப்பாக வரும்! (பாரா 16)

பாட்டு 12 ஈடில்லா தேவன் யெகோவா

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b பட விளக்கம்: ஏஞ்சலினாவின் அனுபவம் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

c பட விளக்கம்: பிரிஸ்காவின் அனுபவம் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

d பட விளக்கம்: ஜேக்கின் அனுபவம் நடித்து காட்டப்பட்டிருக்கிறது.