Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 3

பாட்டு 35 மிக முக்கியமானவற்றை எப்போதும் செய்வோம்

யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும் முடிவுகளை எடுங்கள்

யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும் முடிவுகளை எடுங்கள்

“யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி. மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான் புத்தியை பெறுவதற்கு வழி.”நீதி. 9:10.

என்ன கற்றுக்கொள்வோம்?

ஞானமான முடிவுகள் எடுக்க, அறிவும் புரிந்துகொள்ளுதலும் பகுத்தறியும் திறமையும் எப்படி உதவும் என்று கற்றுக்கொள்வோம்.

1. எது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்?

 நாம் தினமும் நிறைய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. காலையில் என்ன சாப்பிடுவது, ராத்திரி எப்போது தூங்க போவது போன்ற சின்ன சின்ன முடிவுகளைச் சுலபமாக எடுத்துவிடுகிறோம். ஆனால், வேறு சில முடிவுகளை எடுப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நம் ஆரோக்கியத்தை, நம் சந்தோஷத்தை, நம் குடும்பத்தை, யெகோவாவுக்கு நாம் செய்கிற சேவையை அந்த முடிவுகள் பாதிக்கலாம். நமக்கும் நம் குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிற முடிவுகளை எடுக்கத்தான் நாம் ஆசைப்படுவோம். அதைவிட முக்கியமாக, நாம் எடுக்கும் முடிவுகள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நாம் நிச்சயமாக நினைப்போம்.—ரோ. 12:1, 2.

2. ஞானமான முடிவுகள் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

2 ஞானமான முடிவுகளை எடுக்க மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும்: (1) எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். (2) அதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். (3) எது சரியான முடிவு என்று எடைபோட்டுப் பார்க்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதுமட்டுமல்ல, நம்முடைய பகுத்தறியும் திறமைக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம் என்றும் பார்ப்போம்.—நீதி. 2:11.

எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்

3. முடிவு எடுப்பதற்கு முன்பு எல்லா விவரங்களையும் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

3 நல்ல முடிவுகள் எடுப்பதற்கு முதல் படி, எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வது. அது ஏன் முக்கியம்? உதாரணமாக, ஒருவருக்கு ஒரு மோசமான நோய் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர் டாக்டரிடம் போகிறார். இப்போது அந்த டாக்டர் நோயாளியிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்தப் பரிசோதனையும் செய்யாமல் எடுத்ததுமே சிகிச்சை கொடுத்துவிடுவாரா? கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டார். ஒரு நல்ல டாக்டர், சிகிச்சை கொடுப்பதற்கு முன்பு எப்படி எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வாரோ, அதேமாதிரி நாமும் முடிவு எடுப்பதற்கு முன்பு எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?

4. நீதிமொழிகள் 18:13 சொல்வதுபோல் எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

4 சில கேள்விகளைக் கேட்டால் விவரங்கள் தெரிந்துவிடும். உங்களை ஒரு பார்ட்டிக்குக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் போக வேண்டுமா? அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவரைப் பற்றியோ அங்கே என்ன நடக்கும் என்பதைப் பற்றியோ உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றால், உங்களைக் கூப்பிட்டவரிடம் இந்த மாதிரி கேள்விகளைக் கேளுங்கள்: “இந்த பார்ட்டி எப்போது, எங்கே நடக்கிறது? அதற்கு எத்தனை பேர் வருவார்கள்? பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அங்கே யாராவது இருப்பார்களா? யாரெல்லாம் அந்த பார்ட்டிக்கு வருவார்கள்? அங்கே என்னவெல்லாம் செய்வார்கள்? மதுபானம் இருக்குமா?” இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஞானமான முடிவு எடுக்க உங்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 18:13-ஐ வாசியுங்கள்.

கேள்விகளைக் கேட்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் (பாரா 4) b


5. எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?

5 எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகு சூழ்நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, பைபிள் நியமங்களை மதிக்காத சிலபேர் அந்த பார்ட்டிக்கு வருகிறார்கள், அல்லது எல்லாரும் அளவாக குடிக்கிறார்களா என்று பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அங்கே யாரும் இல்லை என்று உங்களுக்குத் தெரியவருகிறது. அப்படியென்றால், இந்த பார்ட்டி குடித்துக் கும்மாளம் போடுகிற a அளவுக்குப் போக வாய்ப்பு இருக்கிறது என்று உங்களுக்குப் புரிகிறதா? (1 பே. 4:3) இதையும் யோசித்து பாருங்கள்: நீங்கள் கூட்டத்துக்குப் போகிற நேரத்திலோ ஊழியத்துக்குப் போகிற நேரத்திலோ அந்த பார்ட்டி நடக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்? இப்படி எல்லா விவரங்களையும் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் நல்ல முடிவுகள் எடுப்பது சுலபமாக இருக்கும். இப்போது அடுத்த படிக்கு வருவோம். தெரிந்துகொண்ட விவரங்களை வைத்து உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும். ஆனால், அதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?—நீதி. 2:6.

யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள்

6. யாக்கோபு 1:5 சொல்வதுபோல், ஏன் யெகோவாவுடைய உதவியைக் கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்?

6 ஒரு விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள அவரிடமே உதவி கேளுங்கள். நாம் போகிற பாதை யெகோவாவுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று புரிந்துகொள்ள நமக்கு ஞானத்தைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். ஞானத்துக்காக “கேட்கிறவர்களை அவர் திட்ட மாட்டார். எல்லாருக்கும் தாராளமாக” கொடுப்பார்.—யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.

7. யெகோவா என்ன நினைக்கிறார் என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

7 யெகோவாவிடம் உதவி கேட்ட பிறகு அவர் என்ன பதில் கொடுக்கிறார் என்று கவனமாகப் பாருங்கள். உதாரணமாக, நீங்கள் புதிதாக ஒரு ஊருக்குப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, அங்கே வழிமாறி போய்விட்டீர்கள் என்றால், அந்த ஊரில் இருக்கிற ஒருவரிடம் சரியான வழி எது என்று கேட்பீர்கள். ஆனால் அவர் பதில் சொல்வதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பிவிடுவீர்களா? கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டீர்கள். அவர் சொல்வதை நின்று, கவனமாகக் கேட்பீர்கள். அதேமாதிரி, யெகோவாவிடம் ஞானத்தைக் கேட்ட பிறகு, அவர் என்ன பதில் கொடுக்கிறார் என்று கவனமாகப் பாருங்கள். உங்கள் சூழ்நிலைக்கு என்ன பைபிள் நியமங்களும் சட்டங்களும் பொருத்தமாக இருக்கும் என்று கண்டுபிடியுங்கள். உதாரணத்துக்கு, அந்த பார்ட்டிக்குப் போக வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுப்பதற்கு முன்பு, குடித்து கும்மாளம் போடுவதைப் பற்றி, கெட்ட சகவாசத்தைப் பற்றி, நம் விருப்பத்தைவிட வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.—மத். 6:33; ரோ. 13:13; 1 கொ. 15:33.

8. பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உதவி தேவைப்பட்டால் என்ன செய்யலாம்? (படத்தையும் பாருங்கள்.)

8 சிலசமயத்தில், பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவி தேவைப்படும். அனுபவமுள்ள சகோதர சகோதரிகளிடம் நீங்கள் அதைப் பற்றிக் கேட்கலாம். ஆனால், நீங்களே ஆராய்ச்சி செய்து படிக்கும்போது உங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு, வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் என்று நம்மிடம் நிறைய ஆராய்ச்சி கருவிகள் இருக்கின்றன. மறந்துவிடாதீர்கள், இதையெல்லாம் பயன்படுத்துவதற்கான நோக்கமே யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிற முடிவுகளை எடுப்பதுதான்.

யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசியுங்கள் (பாரா 8) c


9. நாம் எடுக்கும் முடிவு யெகோவாவைச் சந்தோஷப்படுத்துமா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (எபேசியர் 5:17)

9 நாம் எடுக்கும் முடிவுகள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துமா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு, முதலில் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். “மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான் புத்தியை பெறுவதற்கு வழி” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 9:10) யெகோவாவுடைய குணங்கள், அவருடைய நோக்கம், அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று தெரிந்துகொள்ளும்போது நமக்குப் புத்தி கிடைக்கும்; எல்லாவற்றையும் சரியாகப் புரிந்துகொள்வோம். அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்று இப்போது தெரிந்துகொண்டேன். அதை வைத்து, அவரைச் சந்தோஷப்படுத்துகிற எந்த முடிவை நான் எடுக்க வேண்டும்?’—எபேசியர் 5:17-ஐ வாசியுங்கள்.

10. குடும்ப வழக்கத்தையும் உள்ளூர் கலாச்சாரத்தையும்விட பைபிள் நியமங்கள் ஏன் ரொம்ப முக்கியம்?

10 யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும்போது, சிலசமயத்தில் நமக்கு ரொம்ப நெருக்கமானவர்களின் மனதைக் காயப்படுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, பிள்ளைகள்மேல் அக்கறை வைத்திருக்கும் அப்பா-அம்மா, அவர்களுடைய மகளை ஒரு பணக்கார பையனைக் கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாம். இல்லையென்றால், அவர்களுடைய மகனை நிறைய பணம்-பொருள் கொண்டுவருகிற ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாம். ஆனால், அவர்கள் பார்த்திருக்கும் பையனுக்கோ பெண்ணுக்கோ, யெகோவாவோடு இருக்கும் பந்தம் ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். உண்மைதான், பிள்ளைகளுக்குப் பண கஷ்டம் வரக் கூடாது என்ற அக்கறை அப்பா-அம்மாவுக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணோ பையனோ, ‘இவரை/இவளை கல்யாணம் செய்தால் யெகோவாவோடு நான் இன்னும் நெருக்கமாக ஆவேனா, அல்லது அவரைவிட்டு தூரமாகப் போய்விடுவேனா?’ என்று யோசித்துப் பார்க்க வேண்டும். யெகோவா இதைப் பற்றி என்ன நினைக்கிறார்? மத்தேயு 6:33-ல் அதற்குப் பதில் இருக்கிறது. அதில் கிறிஸ்தவர்கள் எல்லாரும் ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க’ வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அப்பா-அம்மாவையும் சமுதாயத்தில் இருக்கிறவர்களையும் நாம் மதிக்கிறோம்தான். ஆனால், யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதுதான் நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

எது சரியான முடிவு என்று எடைபோட்டுப் பாருங்கள்

11. முடிவெடுக்கும் விஷயத்தில் பிலிப்பியர் 1:9, 10-ல் சொல்லியிருக்கும் எது உங்களுக்குக் கைகொடுக்கும்?

11 பொருத்தமான பைபிள் நியமங்களைக் கண்டுபிடித்த பிறகு, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற இரண்டு மூன்று தீர்வுகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம். இப்போது, அந்த ஒவ்வொரு தீர்வையும் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். (பிலிப்பியர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.) இந்த ஒவ்வொரு தீர்வும் எதில் போய் முடியும் என்று யோசித்துப் பார்க்க பகுத்தறியும் திறமை உதவும். சில முடிவுகளைச் சுலபமாக எடுக்க முடியும். ஆனால் எல்லா முடிவுகளையும் அப்படி எடுத்துவிட முடியாது. சில சிக்கலான சூழ்நிலைகளில் ஞானமான முடிவு எடுப்பதற்குப் பகுத்தறியும் திறமை கைகொடுக்கும்.

12-13. வேலையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஞானமான முடிவுகள் எடுக்க, பகுத்தறியும் திறமை எப்படி உதவும்?

12 இதைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக நீங்கள் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். இரண்டு வேலை கிடைக்கிறது. அது என்ன மாதிரி வேலை, எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும், வேலைக்குப் போய்வர எவ்வளவு நேரம் ஆகும் என்று எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துவிட்டீர்கள். இந்த இரண்டு வேலைகளுமே பைபிள் நியமங்களுக்கு எதிராக இல்லை. அதில் ஒரு வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறது, சம்பளமும் அதிகம் என்பதால் அந்த வேலைக்குப் போகலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், முடிவு எடுப்பதற்கு முன்பு யோசித்துப் பார்க்க வேண்டிய இன்னும் சில விஷயங்களும் இருக்கின்றன.

13 உதாரணமாக, சில கூட்டங்களுக்குப் போக முடியாதபடி இந்த வேலைகள் ஆக்கிவிடுமா? குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு நெருங்கி இருப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தைப் பறித்துவிடுமா? இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டுக்கொள்ளும்போது ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ உங்களால் முதலிடம் கொடுக்க முடியும். அதிகமாகப் பணம் சம்பாதிப்பதைவிட, உங்கள் குடும்ப சந்தோஷமும் யெகோவாவை வணங்குவதும்தான் ரொம்ப முக்கியம். இதை யோசித்துப் பார்க்கும்போது யெகோவாவுக்குப் பிடித்த முடிவுகளை எடுப்பீர்கள். அதை அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

14. மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காமல் இருக்க அன்பும் பகுத்தறியும் திறமையும் எப்படி உதவும்?

14 பகுத்தறியும் திறமை இருக்கும்போது நாம் எடுக்கிற முடிவுகள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று யோசிப்போம். அவர்களுடைய “விசுவாசத்தைக் குலைக்காதவர்களாக” இருப்போம். (பிலி. 1:10) முக்கியமாக உடை, அலங்காரம் மாதிரி தனிப்பட்ட விஷயங்களில் முடிவு எடுக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். உடை, அலங்காரம் விஷயத்தில் நமக்குக் குறிப்பிட்ட ஒரு ஸ்டைல் பிடித்திருக்கலாம். ஆனால் அது, சபையில் இருக்கிறவர்களையோ மற்றவர்களையோ முகம் சுளிக்க வைக்கிற மாதிரி இருந்தால் என்ன செய்வது? அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதற்குப் பகுத்தறியும் திறமை உதவும். நமக்கு அன்பு இருந்தால் ‘மற்றவர்களை’ பற்றி யோசிப்போம், அடக்கமாக இருப்போம். (1 கொ. 10:23, 24, 32; 1 தீ. 2:9, 10) நாம் எடுக்கிற முடிவுகள் மற்றவர்கள்மேல் நமக்கு அன்பும் மரியாதையும் இருப்பதைக் காட்டும்.

15. பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

15 ஒருவேளை, ஒரு பெரிய முடிவு எடுக்க போகிறீர்கள். அந்த முடிவை எடுத்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதற்கு என்னவெல்லாம் தேவைப்படும், எவ்வளவு நேரம் எடுக்கும், எவ்வளவு முயற்சி போட வேண்டும் என்று எல்லாவற்றையும் யோசியுங்கள். ஏனென்றால், ‘செலவைக் கணக்கு பார்க்க’ வேண்டும் என்று இயேசு சொன்னார். (லூக். 14:28) சிலசமயத்தில், நீங்கள் எடுக்கிற முடிவுக்கு உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடைய உதவியும் தேவைப்படும். அதனால், அதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். இப்படிச் செய்வது ஏன் நல்லது? அப்போதுதான் இது ஒத்துவருமா, உங்கள் முடிவில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறதா, வேறு ஏதாவது முடிவு எடுக்க வேண்டியிருக்கிறதா என்று உங்களுக்குத் தெரியும். அதோடு, குடும்பத்தில் இருக்கிறவர்களிடம் இதைப் பற்றிப் பேசி அவர்களுடைய கருத்துகளைக் கேட்கும்போது, நீங்கள் எடுக்கும் முடிவுக்கு அவர்களும் ஆதரவு கொடுப்பார்கள்.—நீதி. 15:22.

வெற்றி தரும் முடிவுகளை எடுங்கள்

16. வெற்றி தரும் முடிவுகளை எடுப்பதற்கு என்னென்ன படிகள் உதவும்? (“ ஞானமான முடிவுகளை எடுப்பது எப்படி?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

16 இதுவரை நாம் பார்த்த படிகளையெல்லாம் நீங்கள் செய்துவிட்டால், உங்களால் ஞானமான முடிவுகளை எடுக்க முடியும். ஏனென்றால், யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிற முடிவுகளை எடுப்பதற்கு நீங்கள் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டீர்கள்; நியமங்களையும் அலசிப் பார்த்துவிட்டீர்கள். இப்போது, நீங்கள் எடுக்கும் முடிவுக்கு வெற்றித் தரச் சொல்லி யெகோவாவிடம் உதவி கேட்கலாம்.

17. நல்ல முடிவுகள் எடுக்க எது ரொம்ப முக்கியம்?

17 முன்பு நீங்கள் எடுத்த நிறைய முடிவுகளுக்கு வெற்றிக் கிடைத்திருக்கலாம். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். நல்ல முடிவுகள் எடுக்க உதவுவது நம்முடைய அனுபவமோ அறிவோ கிடையாது; யெகோவா தருகிற ஞானம்தான். அறிவு, புரிந்துகொள்ளுதல், பகுத்தறிவு இவையெல்லாம் சேர்ந்துதான் ஞானத்தை வளர்க்கிறது. (நீதி. 2:1-5) இதை யெகோவாவால் மட்டும்தான் தர முடியும். யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிற முடிவுகளை எடுக்க கண்டிப்பாக அவர் உங்களுக்கு உதவி செய்வார்.—சங். 23:2, 3.

பாட்டு 28 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

a “குடித்துக் கும்மாளம் போடுவது” என்பதற்கான மூல வார்த்தை, ‘மதுபானம் பரிமாறப்படும் பார்ட்டிகளில் கணக்குவழக்கு இல்லாமல் குடித்துவிட்டு ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதை’ குறிக்கிறது.

b பட விளக்கம்: சில இளம் சகோதர சகோதரிகளுக்கு ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ள ஃபோனில் அழைப்பு வந்திருக்கிறது. அதைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

c பட விளக்கம்: ஒரு சகோதரர் பார்ட்டிக்குப் போக வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்வதற்கு முன்பு ஆராய்ச்சி செய்து படிக்கிறார்.