Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தவர் இன்று இயேசுவைக் குறிக்கிறார். யாரெல்லாம் காப்பாற்றபட வேண்டும் என்று அவர்தான் அடையாளம் போடுவார்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில், கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தவரும், வெட்டுகிற ஆயுதங்களை பிடித்திருந்த ஆறு மனுஷரும் யாரை குறிக்கிறார்கள்?

எருசலேமை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பரலோக படையை இவர்கள் குறிக்கிறார்கள். அர்மகெதோனில் சாத்தானுடைய உலகத்தை அழிப்பதற்கும் இந்த படை பயன்படுத்தப்படும். இது புதிய விளக்கமாக இருக்கிறது. இந்த விளக்கம் ஏன் தேவைப்பட்டது?

கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு அங்கு நடந்த அக்கிரமங்களை எசேக்கியேலுக்கு ஒரு தரிசனத்தின் மூலமாக யெகோவா காட்டினார். அப்போது ‘வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்திருந்த’ ஆறு மனுஷரை அவர் பார்த்தார். அதோடு, ‘சணல்நூல் அங்கியை’ அணிந்திருந்த ஒருவர் “கணக்கனுடைய மைக்கூட்டை” வைத்திருந்ததையும் பார்த்தார். (எசே. 8:6-12; 9:2, 3) “நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம்போடு” என்று இவருக்கு சொல்லப்பட்டது. அதன்பின் யாருடைய நெற்றிகளில் அடையாளம் போடப்படவில்லையோ அவர்கள் எல்லாரையும் கொல்லும்படி ஆயுதங்களை வைத்திருந்த ஆறு மனுஷருக்கு சொல்லப்பட்டது. (எசே. 9:4-7) இந்த தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? “கணக்கனுடைய மைக்கூட்டை” வைத்திருந்தவர் யார்?

எசேக்கியேல் இந்த தரிசனத்தை கி.மு. 612-ல் பார்த்தார். இந்த தீர்க்கதரிசனத்தின் முதல்கட்ட நிறைவேற்றம் 5 வருஷங்களுக்கு பிறகு நடந்தது. அந்த சமயத்தில் பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்க யெகோவா அனுமதித்தார். இதன் மூலம் கீழ்ப்படியாத தன் மக்களை யெகோவா தண்டித்தார். (எரே. 25:9, 15-18) ஆனால், அங்கு நடந்த மோசமான விஷயங்களுக்கு துணை போகாத நல்ல யூதர்களுக்கு என்ன ஆனது? யெகோவா அவர்களை பத்திரமாக காப்பாற்றினார்.

அடையாளம் போடும் வேலையிலும் அழிக்கும் வேலையிலும் எசேக்கியேல் கலந்துகொள்ளவில்லை. எருசலேமை அழிக்கும் வேலையில் தேவதூதர்களுக்குத்தான் முக்கிய பங்கு இருந்தது. அந்த சமயத்தில் பரலோகத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க இந்த தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது. கெட்டவர்களை அழிக்கும் வேலையை யெகோவா தேவதூதர்களிடம் ஒப்படைத்தார். அதேசமயம் நல்லவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் அவர்களுக்கு கொடுத்தார். *

இந்த தீர்க்கதரிசனம் எதிர்காலத்திலும் நிறைவேறும். இதற்கு முன்பு இந்த தீர்க்கதரிசனத்தை நாம் இப்படி புரிந்துகொண்டோம்: “கணக்கனுடைய மைக்கூட்டை” வைத்திருந்தவர், பூமியில் வாழும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை குறிக்கிறார். அதோடு, யாரெல்லாம் நற்செய்தியை கேட்டு அதை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அடையாளம் போடப்படும், அதாவது அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், இப்போது இந்த தீர்க்கதரிசனத்தை புரிந்துகொள்வதில் மாற்றம் தேவைப்பட்டது. ஏனென்றால், நியாயந்தீர்க்கும் வேலையை இயேசுதான் செய்வார் என்று மத்தேயு 25:31-33-ல் சொல்லப்பட்டிருக்கிறது. இதை அவர் மிகுந்த உபத்திரவத்தின்போது செய்வார். அப்போது செம்மறியாடுகளை போல் இருக்கிறவர்கள் காப்பாற்றப்படுவார்கள். வெள்ளாடுகளாக நியாயந்தீர்க்கப்படுகிறவர்கள் அழிக்கப்படுவார்கள்.

எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து நாம் 5 விஷயங்களை கற்றுக்கொள்கிறோம்:

  1. எருசலேம் அழிவதற்கு முன்பு எசேக்கியேல், எரேமியா, ஏசாயா போன்றவர்கள் அந்த நகரத்துக்கு வரப்போகும் அழிவைப் பற்றி சொன்னார்கள். காவல்காரர்களை போல் எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். இன்று யெகோவா ஒரு சிறிய தொகுதியை, அதாவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை, பயன்படுத்தி தன் மக்களுக்கு ‘ஏற்ற வேளையில் உணவு’ கொடுக்கிறார். அதோடு, வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தை பற்றி உலக மக்களுக்கும் எச்சரிக்கிறார். சொல்லப்போனால், யெகோவாவுடைய மக்கள் எல்லாருமே, அதாவது ‘வீட்டார்’ எல்லாருமே, இந்த எச்சரிப்பு வேலையில் கலந்துகொள்கிறார்கள்.—மத். 24:45-47.

  2. அடையாளம் போடும் வேலையை எசேக்கியேல் செய்யவில்லை. அதேபோல் யெகோவாவின் மக்களும், காப்பாற்றப்படும் நபர்களின் நெற்றியில் இன்று அடையாளம் போடுவதில்லை. அவர்கள் எல்லாருக்கும் நற்செய்தியை மட்டும்தான் சொல்கிறார்கள், எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி எச்சரிக்கிறார்கள். தேவதூதர்களின் உதவியோடு இந்த வேலையை செய்கிறார்கள்.—வெளி. 14:6.

  3. எசேக்கியேலின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிஜமாகவே எந்த அடையாளமும் போடப்படவில்லை. அதேபோல் எதிர்காலத்தில் அழிவிலிருந்து காப்பாற்றப்படுகிறவர்களின் நெற்றியிலும் எந்த அடையாளமும் போடப்படாது. அப்படியென்றால் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிக்க ஜனங்கள் என்ன செய்ய வேண்டும்? எச்சரிப்பு செய்தியை கேட்கிறவர்கள் கிறிஸ்துவைப் போலவே நடக்க கற்றுக்கொள்ள வேண்டும், கடவுளுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும், பிரசங்க வேலையை செய்வதன் மூலம் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவி செய்ய வேண்டும். (மத். 25:35-40) இப்படி செய்தால் மிகுந்த உபத்திரவத்தின்போது அவர்களுக்கு அடையாளம் போடப்படும், அதாவது அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

  4. கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தவர் இன்று இயேசுவை குறிக்கிறார். அவர் அடையாளம் போட்டதைப் போலவே இயேசுவும் யாரெல்லாம் காப்பாற்றபட வேண்டும் என்று அடையாளம் போடுவார். மிகுந்த உபத்திரவத்தின்போது திரள் கூட்டமானவர்கள் செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படும் சமயத்தில் அந்த அடையாளத்தை பெறுவார்கள். அவர்கள்தான் இந்த பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்.—மத். 25:34, 46. *

  5. வெட்டுகிற ஆயுதங்களை பிடித்திருந்த ஆறு மனுஷர் இன்று இயேசுவுடைய பரலோக படையை குறிக்கிறார்கள். இயேசுவே அவர்களுடைய தலைவராக இருக்கிறார். இவர்கள் எல்லாரும் சேர்ந்து இந்த பொல்லாத உலகத்தை சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார்கள்.—எசே. 9:2, 6, 7; வெளி. 19:11-21.

இந்த 5 குறிப்புகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? கெட்டவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் யெகோவா ஒருநாளும் அழிக்க மாட்டார் என்பதில் நாம் நம்பிக்கையாக இருக்கலாம். (2 பே. 2:9; 3:9) அதுமட்டுமல்ல, நம்முடைய காலத்தில் பிரசங்க வேலையை செய்வது எவ்வளவு முக்கியம் என்றும் தெரிந்துகொண்டோம். முடிவு வருவதற்கு முன்பே எச்சரிப்பு செய்தியை எல்லாரும் கேட்பது ரொம்ப முக்கியம்.—மத். 24:14.

^ பாரா. 6 காப்பாற்றப்பட்டவர்களின் நெற்றியில் நிஜமாகவே அடையாளம் போடப்படவில்லை. உதாரணத்துக்கு எரேமியாவின் செயலாளரான பாருக், எத்தியோப்பியனான எபெத்மெலேக்கு, ரேகாபியர்கள் போன்றவர்களின் நெற்றியில் அடையாளம் போடப்படவில்லை. (எரே. 35:1-19; 39:15-18; 45:1-5) இங்கே அடையாளம் என்பது அவர்கள் காப்பாற்றப்படுவதை குறிக்கிறது.

^ பாரா. 12 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் காப்பாற்றப்படுவதற்கு இதுபோன்ற அடையாளம் தேவையில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் இறப்பதற்கு முன்பு, அல்லது மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்பு, கடைசி முத்திரையைப் பெறுவார்கள்.—வெளி. 7:1, 3.