Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்களுடைய தவறுகளை பார்த்து சோர்ந்துபோகிறீர்களா?

மற்றவர்களுடைய தவறுகளை பார்த்து சோர்ந்துபோகிறீர்களா?

‘ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்.’—கொலோ.3:13.

பாடல்கள்: 121, 75

1, 2. யெகோவாவின் சாட்சிகளுடைய வளர்ச்சியைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது?

யெகோவாவுடைய அமைப்பு விசேஷமானது. உலக முழுவதும் இருக்கிற யெகோவாவின் மக்கள் அந்த அமைப்பின் பாகமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் யெகோவாவை நேசிக்கிறார்கள், அவருக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தவறு செய்கிறவர்களாக இருந்தாலும் யெகோவா தன் சக்தியின் மூலம் அவர்களை வழிநடத்தி வருகிறார், அவர்களை ஆசீர்வதிக்கிறார். இதை எப்படி செய்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.

2 கடைசி நாட்கள் ஆரம்பித்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் செய்த பிரசங்க வேலையை யெகோவா ஆசீர்வதித்ததால் லட்சக்கணக்கான மக்கள் அவரை பற்றி தெரிந்துகொண்டு அவருடைய சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள். தன்னுடைய அமைப்பில் மலைக்க வைக்கும் வளர்ச்சி ஏற்படும் என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்: கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” என்று சொன்னார். (ஏசா. 60:22) இன்று அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. யெகோவாவின் மக்கள் ஒரு பெரிய தேசமாக ஆகியிருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருக்கும் நிறைய நாடுகளின் மக்கள்தொகையைவிட யெகோவாவின் சாட்சிகளுடைய ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

3. யெகோவாவுடைய மக்கள் எப்படி அன்பை காட்டியிருக்கிறார்கள்?

3 இந்த கடைசி நாட்களில், கடவுளுடைய மக்களுக்குள் இருக்கிற அன்பு அதிகமாவதற்கும் யெகோவா உதவி செய்திருக்கிறார். ‘கடவுள் அன்பாகவே இருப்பதால்’ அவரை வணங்குகிற மக்களும் ஒருவரோடு ஒருவர் அன்பாக இருக்கிறார்கள். (1 யோ. 4:8) நீங்கள் “ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற” கட்டளையை இயேசு தன் சீடர்களுக்கு கொடுத்தார். “நீங்கள் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்றும் சொன்னார். (யோவா. 13:34, 35) சமீப காலங்களில்கூட யெகோவாவின் மக்கள் அப்படிப்பட்ட அன்பை காட்டியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இரண்டாம் உலகப் போரின்போது கிட்டத்தட்ட 5 கோடியே 50 லட்சம் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அந்த போரில் கலந்துகொள்ளவும் இல்லை, யாரையும் கொல்லவும் இல்லை. (மீகா 4:1, 3-ஐ வாசியுங்கள்.) ‘எல்லா மனிதர்களுடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாக இருப்பதற்கு’ இது அவர்களுக்கு உதவியது.—அப். 20:26.

4. யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை அதிகமாவது ஏன் குறிப்பிடத்தக்கது?

4 சாத்தான் எவ்வளவு தடைபோட்டாலும் கடவுளுடைய மக்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிக்கொண்டே போகிறது. சாத்தான் ‘இந்த உலகத்தின் கடவுளாக’ இருக்கிறான். (2 கொ. 4:4) இந்த உலகத்திலுள்ள அரசியல் அமைப்புகளையும் மீடியாவையும் அவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான். பிரசங்க வேலையை தடைசெய்வதற்காக இதையெல்லாம் பயன்படுத்துகிறான். இருந்தாலும், இந்த வேலையை அவனால் ஒரேயடியாக நிறுத்த முடியாது. தனக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால், நாம் யெகோவாவை விட்டு விலகிவிட வேண்டும் என்பதற்காக அவன் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு இருக்கிறான்.—வெளி. 12:12.

நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பீர்களா?

5. மற்றவர்கள் நம்மை கஷ்டப்படுத்தும் விதத்தில் ஏன் நடந்துகொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

5 கடவுளையும் மனிதர்களையும் நேசிக்கும்படி கூட்டங்கள் மூலமாக யெகோவா நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொடுக்கிறார். “‘உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் தலைசிறந்த கட்டளை, முதலாம் கட்டளை. ‘உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை” என்று இயேசு சொன்னார். (மத். 22:35-39) இருந்தாலும், மனிதர்கள் எல்லாருமே தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:12, 19-ஐ வாசியுங்கள்.) அதனால், சபையில் இருக்கிற சிலர் நம் மனதை கஷ்டப்படுத்தும் விதத்தில் ஏதாவது பேசலாம் அல்லது நடந்துகொள்ளலாம். அந்த சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? யெகோவாமீதும் நம் சகோதர சகோதரிகள்மீதும் நமக்கு இருக்கும் அன்பு குறையாமல் இருக்கிறதா? பைபிள் காலத்தில் வாழ்ந்த சிலர் மற்றவர்களுடைய மனதை கஷ்டப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டார்கள். அவர்களிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏலியும் அவருடைய மகன்களும் வாழ்ந்த சமயத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? (பாரா 6)

6. ஏலி அவருடைய மகன்களை எப்படி கண்டிக்காமல் போனார்?

6 உதாரணத்துக்கு, ஏலி இஸ்ரவேலில் தலைமைக் குருவாக சேவை செய்தார். ஆனால் அவருடைய இரண்டு மகன்களும் யெகோவாவுக்கு கீழ்ப்படியவில்லை. “ஏலியின் மகன்கள் கெட்டவர்களாக இருந்தார்கள். யெகோவாவைத் துளியும் மதிக்கவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (1 சா. 2:12, NW) தன்னுடைய மகன்கள் செய்யும் தவறெல்லாம் ஏலிக்கு தெரிந்திருந்தாலும் அவர்களை அவர் சரியாக கண்டிக்கவில்லை. அதனால், ஏலியையும் அவருடைய இரண்டு மகன்களையும் யெகோவா தண்டித்தார். அதற்குப் பிறகு ஏலியின் வம்சத்தில் வந்த யாரும் தலைமைக் குருவாக சேவை செய்ய அவர் அனுமதிக்கவில்லை. (1 சா. 3:10-14) ஏலி வாழ்ந்த சமயத்தில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அவருடைய மகன்கள் செய்த பாவத்தை ஏலி கண்டுகொள்ளாமல் இருந்ததைப் பார்த்து நீங்கள் கோபப்பட்டிருப்பீர்களா? அதனால் யெகோவாமீது உங்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்திருக்குமா? யெகோவாவை சேவிப்பதையே நிறுத்தியிருப்பீர்களா?

7. தாவீது என்ன பெரிய பாவத்தை செய்தார், ஆனால் யெகோவா எப்படி அவரிடம் நடந்துகொண்டார்?

7 தாவீதிடம் நிறைய நல்ல குணங்கள் இருந்ததால்தான் யெகோவாவுக்கு அவரை ரொம்ப பிடித்திருந்தது. (1 சா. 13:13, 14; அப். 13:22) ஆனால் தாவீது ஒரு பெரிய பாவத்தை செய்தார். உரியா போருக்கு சென்ற சமயத்தில் அவருடைய மனைவி பத்சேபாளோடு தவறான உறவு வைத்துக்கொண்டார். அதனால் அவள் கர்ப்பமானாள். இந்த தவறை மறைப்பதற்காக தாவீது ஒரு திட்டம் போட்டார். போர்க்களத்தில் இருந்த உரியாவை வர சொன்னார். உரியாவை தன்னுடைய வீட்டுக்கு செல்லும்படி தாவீது கட்டாயப்படுத்தினார். உரியா தன் மனைவியோடு உறவு வைத்துக்கொண்டால் அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு உரியாதான் அப்பா என எல்லாரும் நம்புவார்கள் என்று தாவீது நினைத்தார். ஆனால் எவ்வளவு சொல்லியும் உரியா வீட்டுக்கு போக மறுத்துவிட்டார். அதனால் போரில் உரியாவை கொல்வதற்கு தாவீது ஏற்பாடு செய்தார். தாவீது இவ்வளவு பெரிய தவறுகளை செய்ததால் அவரும் அவருடைய குடும்பமும் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். (2 சா. 12:9-12) இருந்தாலும் யெகோவா அவர்மீது இரக்கம் காட்டினார், அவரை மன்னித்தார். தாவீது செய்த நல்ல விஷயங்களை யெகோவா பார்த்தார். (1 இரா. 9:4) அந்த சமயத்தில் நீங்கள் இருந்திருந்தால் தாவீதைப் பற்றி என்ன நினைத்திருப்பீர்கள்? அவர் செய்த தவறை பார்த்து யெகோவாவை சேவிப்பதையே நிறுத்தியிருப்பீர்களா?

8. (அ) பேதுரு எப்படி சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல் போனார்? (ஆ) பேதுரு தவறு செய்தாலும் யெகோவா ஏன் அவரை தொடர்ந்து பயன்படுத்தினார்?

8 மற்றொரு உதாரணம் பேதுரு. அவர் இயேசுவின் அப்போஸ்தலனாக இருந்தாலும் அவர் நடந்துகொண்ட விதம் சிலசமயம் மற்றவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. ஒருசமயம் பேதுரு இயேசுவிடம், “மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போக மாட்டேன்” என்று சொன்னார். (மாற். 14:27-31, 50) ஆனால், இயேசுவை கைது செய்தபோது பேதுரு உட்பட எல்லா அப்போஸ்தலர்களும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். அதுமட்டுமல்ல, இயேசுவை தனக்கு தெரியவே தெரியாது என்று அவர் மூன்றுமுறை சொன்னார். (மாற். 14:53, 54, 66-72) ஆனால், பேதுரு தன்னுடைய தவறை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார். அதனால் யெகோவா அவரை மன்னித்தார், தன்னுடைய சேவையில் அவரை தொடர்ந்து பயன்படுத்தினார். அந்த சமயத்தில் நீங்கள் இயேசுவின் சீடராக இருந்திருந்தால் பேதுரு செய்ததைப் பார்த்து எப்படி உணர்ந்திருப்பீர்கள்? யெகோவாவுக்கு தொடர்ந்து உண்மையாக இருந்திருப்பீர்களா?

9. கடவுள் எப்போதுமே நியாயமாக நடந்துகொள்வார் என்று நீங்கள் ஏன் நம்பலாம்?

9 இதுவரை பார்த்த உதாரணங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? யெகோவாவை சேவிக்கிறவர்கள்கூட மற்றவர்களை கஷ்டப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார்கள், அல்லது மோசமாக நடந்திருக்கிறார்கள். அன்று மட்டுமல்ல இன்றும் சிலர் அப்படி நடந்துகொள்ளலாம். அந்த சமயத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? யெகோவாவை வணங்குவதையே விட்டுவிடுவீர்களா? அவருடைய மக்களோடு பழகுவதையும் சபைக்கு போவதையும் நிறுத்திவிடுவீர்களா? இல்லையென்றால் யெகோவா ரொம்ப இரக்கமானவர்... அந்த நபர் மனந்திரும்புவதற்காக பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறார்... என்று புரிந்துகொள்வீர்களா? ஒருவேளை சிலர் மோசமான ஒரு தவறை செய்துவிட்டு அதைப் பற்றி துளிக்கூட கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், யெகோவா அவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்... சரியான சமயத்தில் நடவடிக்கை எடுப்பார்... என்று நீங்கள் நம்புகிறீர்களா? தேவைப்பட்டால் அந்த நபரை சபையிலிருந்து நீக்கிவிடுவார் என்றும் நம்புகிறீர்களா?

எப்போதும் உண்மையாக இருங்கள்

10. யூதாஸ் இஸ்காரியோத்தும் பேதுருவும் தவறு செய்தாலும் இயேசு எப்படி நடந்துகொண்டார்?

10 தங்களை சுற்றியிருந்தவர்கள் படுமோசமான தவறுகளை செய்தாலும் நிறையப் பேர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். இதற்கு இயேசு ஒரு சிறந்த உதாரணம். இரவு முழுவதும் தன் அப்பாவிடம் ஜெபம் செய்த பிறகுதான் அவர் 12 அப்போஸ்தலர்களையும் தேர்ந்தெடுத்தார். இருந்தாலும் அவர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து இயேசுவை காட்டிக்கொடுத்தான். அதோடு, அப்போஸ்தலன் பேதுருவும் இயேசுவை தெரியவே தெரியாது என்று சொல்லிவிட்டார். (லூக். 6:12-16; 22:2-6, 31, 32) அப்போஸ்தலர்கள் அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இயேசு யெகோவாமீது கோபப்படவில்லை, ‘யெகோவாவை வணங்குற எல்லாருமே இப்படித்தான்’ என்று முடிவுகட்டிவிடவில்லை. அதற்கு பதிலாக, அவர் எப்போதும் யெகோவாவிடம் நெருங்கி இருந்தார். அவருக்கு உண்மையாக இருந்தார். அதனால் இயேசுவை யெகோவா பலமடங்கு ஆசீர்வதித்தார். அவரை பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பி, பின்னர் அவருடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆக்கினார்.—மத். 28:7, 18-20.

11. இன்று வாழும் கடவுளுடைய மக்களைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்திருக்கிறது?

11 யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதும் அவருடைய மக்கள்மீது நம்பிக்கை வைப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இயேசுவுடைய உதாரணத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். ஏனென்றால், இந்த கடைசி நாட்களில் யெகோவா தன்னுடைய மக்களை பயன்படுத்தி நிறைய விஷயங்களை சாதிக்கிறார். முக்கியமாக, அவர்களை வைத்துத்தான் பிரசங்க வேலையை உலகம் முழுவதும் செய்கிறார். யெகோவா அவர்களை வழிநடத்துவதால்தான் அவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக, சந்தோஷமாக இருக்கிறார்கள். அதனால்தான் யெகோவா “இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்” என்று சொன்னார்.—ஏசா. 65:14.

12. மற்றவர்கள் செய்யும் தவறை பார்த்து நாம் என்ன செய்யக் கூடாது?

12 இன்றும் யெகோவா நம்மை வழிநடத்துகிறார், நமக்கு உதவி செய்கிறார். அதனால்தான் நாம் நிறைய நல்ல விஷயங்களை செய்கிறோம், சந்தோஷமாகவும் வாழ்கிறோம். ஆனால் சாத்தானுடைய உலகத்தில் வாழும் மக்கள் கஷ்டத்தில் தவியாய் தவிக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவொரு எதிர்கால நம்பிக்கையும் இல்லை. சபையில் இருக்கிற ஒருவர் செய்யும் தவறை பார்த்து நாம் யெகோவாவையும் அவருடைய மக்களையும் விட்டு திரும்பவும் சாத்தானுடைய உலகத்துக்கு போவது சரியாக இருக்குமா? எல்லா சூழ்நிலைமையிலும் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும், அவர் சொல்லும் விஷயங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். அதோடு, மற்றவர்கள் தவறு செய்யும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

13, 14. (அ) மற்றவர்கள் தவறு செய்யும்போது நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்? (ஆ) எந்த வாக்குறுதியை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

13 சபையில் இருக்கிற ஒருவர் நம் மனதை கஷ்டப்படுத்தும் விதத்தில் ஏதாவது பேசினாலோ அல்லது நடந்துகொண்டாலோ நாம் என்ன செய்யலாம்? “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 7:9) நாம் எல்லாரும் தவறு செய்யும் இயல்புள்ளவர்கள்தான். அதனால் நம்முடைய சகோதர சகோதரிகள் எப்போதுமே சரியாகத்தான் நடந்துகொள்வார்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. அவர்கள் செய்த தவறைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருந்தால் யெகோவாவை சந்தோஷமாக சேவிக்க முடியாது. அவர்மீது நமக்கிருக்கும் விசுவாசம் குறைந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவுடைய அமைப்பைவிட்டே நாம் போய்விடுவோம். அப்போது நம்மால் யெகோவாவை சேவிக்கவும் முடியாது, புதிய உலகத்தில் வாழவும் முடியாது.

14 மற்றவர்கள் தவறு செய்தாலும் நாம் எப்படி தொடர்ந்து யெகோவாவை சந்தோஷமாக சேவிக்கலாம்? “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என்ற வாக்குறுதியை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். (ஏசா. 65:17; 2 பே. 3:13) யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் அவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார்.

15. மற்றவர்கள் தவறு செய்யும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?

15 நாம் இன்னும் புதிய உலகத்துக்குள் போகவில்லைதான். இருந்தாலும் நம் மனதை யாராவது கஷ்டப்படுத்தினால் நாம் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடக்கிறோமா என்று இப்போதே யோசித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு இயேசு இப்படி சொன்னார்: “மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் தகப்பனும் உங்களுடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார்.” ஒருசமயம் பேதுரு இயேசுவிடம், ‘ஒருவரை ஏழு தடவை மன்னித்தால் போதுமா’ என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு தடவை அல்ல, எழுபத்தேழு தடவை வரைக்கும் என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்று சொன்னார். அதாவது ஒருவரை மன்னிக்க நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.—மத். 6:14, 15; 18:21, 22.

16. யோசேப்பு நமக்கு எப்படி ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்?

16 மற்றவர்கள் நம்மை கஷ்டப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசேப்பின் உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். யோசேப்பும் அவருடைய தம்பியும், யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்த பிள்ளைகள். யாக்கோபுக்கு மற்ற பிள்ளைகள் இருந்தாலும் யோசேப்பை அவர் அதிகமாக நேசித்தார். இதனால், யோசேப்பின் 10 அண்ணன்களும் அவர்மீது ரொம்பவே பொறாமைப்பட்டார்கள். அவரை அடிமையாக விற்றுப்போட்டார்கள். பல வருஷங்களுக்குப் பிறகு, யோசேப்பின் திறமையைப் பார்த்த எகிப்து ராஜா அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் யோசேப்பை வைத்தார். பிறகு, பஞ்சத்தின் காரணமாக யோசேப்பின் அண்ணன்கள் எகிப்துக்கு வந்தார்கள். அவர்களால் யோசேப்பை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், யோசேப்பு அவர்களை கண்டுபிடித்துவிட்டார். தன்னை மோசமாக நடத்தியதற்காக அவர்களை பழிவாங்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் திருந்திவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள அவர்களை சோதித்தார். அவர்கள் திருந்திவிட்டதால் தன்னைப் பற்றிய உண்மையை எல்லாம் சொன்னார். அதன்பின், “பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல்” சொன்னார்.—ஆதி. 50:21.

17. மற்றவர்கள் உங்களுக்கு எதிராக தவறு செய்யும்போது நீங்கள் என்ன செய்ய தீர்மானமாக இருக்கிறீர்கள்?

17 நாம் எல்லாருமே தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் சிலசமயம் நாமும் மற்றவர்களுடைய மனதை கஷ்டப்படுத்திவிடலாம். அப்போது என்ன செய்ய வேண்டும்? பைபிள் தரும் ஆலோசனையை பின்பற்றி அந்த நபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரோடு சமாதானமாக வேண்டும். (மத்தேயு 5:23, 24-ஐ வாசியுங்கள்.) நாம் தவறு செய்யும்போது மற்றவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்ப்போம். அப்படியென்றால் நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் இல்லையா? கொலோசெயர் 3:13 இப்படி சொல்கிறது: “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.” நம் சகோதர சகோதரிகளை நாம் உண்மையிலேயே நேசித்தால் அவர்கள் செய்த தவறைப் பற்றியே நாம் எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க மாட்டோம். (1 கொ. 13:5) நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது யெகோவாவும் நம்மை மன்னிப்பார். அதனால், மற்றவர்கள் நமக்கு எதிராக ஏதாவது தவறு செய்யும்போது யெகோவாவைப் போல் நாமும் அவர்கள்மீது இரக்கம் காட்ட தீர்மானமாக இருக்கலாம்.சங்கீதம் 103:12-14-ஐ வாசியுங்கள்.