Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா உங்களை வடிவமைக்க அனுமதிக்கிறீர்களா?

யெகோவா உங்களை வடிவமைக்க அனுமதிக்கிறீர்களா?

‘இதோ, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.’—எரே. 18:6.

பாடல்கள்: 60, 22

1, 2. யெகோவா ஏன் தானியேலை ‘பிரியமானவனாக’ பார்த்தார், நாம் எப்படி தானியேலைப் போல் யெகோவாவுக்கு கீழ்ப்படிதலை காட்டலாம்?

பாபிலோனில் இருந்தவர்கள் சிலை வணக்கத்தில் மூழ்கிப்போயிருந்தார்கள். ஆவியுலக பழக்கவழக்கங்களில் ஊறிப்போயிருந்தார்கள். இந்த மாதிரியான சூழலில்தான் யூதர்கள் சிறை கைதிகளாக அங்கு போனார்கள். இருந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்த யூதர்கள் அந்த பழக்கவழக்கங்களால் தங்களை கறைப்படுத்தவில்லை. இதற்கு தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும் நல்ல உதாரணம். (தானி. 1:6, 8, 12; 3:16-18) அவர்கள் யெகோவாவை மட்டுமே வணங்கினார்கள். அவரை மட்டுமே தங்களுடைய குயவராக ஏற்றுக்கொண்டார்கள். சாகும்வரை தானியேல் இந்த மோசமான சூழலில் இருந்தாலும் அவர் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டார். அதனால்தான், அவரை ‘பிரியமானவன்’ என்று ஒரு தேவதூதன் சொன்னார்.—தானி. 10:11, 19.

2 பைபிள் காலங்களில் ஒரு குயவன் அச்சைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த வடிவத்தில் களிமண்ணை வடிவமைப்பான். அதேபோல் மனிதர்கள் எல்லாரையும் தனக்கு பிடித்த விதத்தில் வடிவமைக்கும் அதிகாரம் யெகோவாவுக்கும் இருக்கிறது. ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தையே ஆட்சி செய்யும் உரிமை அவருக்குத்தான் இருக்கிறது. (எரேமியா 18:6-ஐ வாசியுங்கள்) அவரை வணங்குகிற நம் ஒவ்வொருவரையும் வடிவமைக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தாலும் அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நாம் அனுமதித்தால்தான் அவர் நம்மை வடிவமைக்கிறார். யெகோவாவுடைய கைகளில் மென்மையான களிமண்ணைப் போல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்று இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். பின்வரும் 3 கேள்விகளுக்கு பதில்களை தெரிந்துகொள்ளப் போகிறோம்: (1) யெகோவாவுக்கு கீழ்ப்படிவதற்கு தடையாக இருக்கும் குணங்கள் என்ன? (2) யெகோவா நம்மை வடிவமைப்பதற்கு என்ன குணங்கள் நமக்கு உதவும்? (3) யெகோவாதான் தங்கள் குயவர் என்பதை கிறிஸ்தவ பெற்றோர்கள் எப்படி காட்டலாம்?

இருதயம் கடினமாகாமல் இருக்க எதை தவிர்க்க வேண்டும்?

3. எதெல்லாம் நம் இருதயத்தை கடினமாக்கலாம்? உதாரணம் கொடுங்கள்.

3 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” என்று நீதிமொழிகள் 4:23 சொல்கிறது. நம் இருதயம் கடினமாகாமல் இருக்க வேண்டுமென்றால் நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு பெருமையாக நடப்பதை... தவறுகளை பழக்கமாக செய்வதை... விசுவாசம் பலவீனமாவதை... தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நாம் கடவுளுக்கு பிடிக்காததை செய்துவிடுவோம், கலகக்காரர்களாகவும் ஆகிவிடுவோம். (தானி. 5:1, 20; எபி. 3:13, 18, 19) உசியா ராஜாவும் இப்படித்தான் நடந்துகொண்டார். (2 நாளாகமம் 26:3-5, 16-21-ஐ வாசியுங்கள்.) ஆரம்பத்தில் அவர் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து நடந்தார், அவரோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தார். ஆனால் ‘அவர் பலப்பட்டபோது, அவருடைய மனம் மேட்டிமையானது.’ குருமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை அவர் துணிந்து செய்தார். அவர் செய்தது தவறு என்று குருமார்கள் சொன்னபோது பயங்கரமாக கோபப்பட்டார். பெருமை பிடித்த உசியாவை யெகோவா தண்டித்தார். அதனால், அவர் சாகும்வரை தொழுநோயால் கஷ்டப்பட்டார்.—நீதி. 16:18.

4, 5. பெருமையை நாம் தவிர்க்கவில்லை என்றால் என்ன நடக்கலாம்? உதாரணம் கொடுங்கள்.

4 நாம் பெருமை பிடித்தவர்களாக இருந்தால் மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைப்போம். பைபிளிலிருந்து கொடுக்கப்படும் ஆலோசனையை உதாசீனப்படுத்துவோம். (நீதி. 29:1; ரோ. 12:3) ஜிம் என்ற மூப்பருக்கு இதுதான் நடந்தது. சபை சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இவருக்கும் மற்ற மூப்பர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. “உங்க யாருக்குமே அன்பில்லைன்னு சொல்லிட்டு மூப்பர்கள் கூட்டத்துல இருந்து நான் எழுந்து போயிட்டேன்” என்று ஜிம் சொல்கிறார். ஆறு மாதத்துக்குப் பிறகு அவர் வேறொரு சபைக்கு மாறிப்போனார். அங்கே மூப்பராக நியமிக்கப்படாததால் அவருக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. தன்மீது எந்த தவறும் இல்லை என்று நினைத்ததால் யெகோவாவை சேவிப்பதையே விட்டுவிட்டார். கிட்டத்தட்ட 10 வருஷங்களாக செயலற்ற பிரஸ்தாபியாக இருந்தார். ஜிம் சொல்கிறார், ‘எனக்கு பெருமை இருந்ததுனாலதான் எல்லாத்துக்கும் யெகோவாவ குறை சொல்ல ஆரம்பிச்சேன். இத்தனை வருஷங்களா சகோதரர்கள் அடிக்கடி என்னை வந்து பார்த்தாங்க. எனக்கு உதவி செய்ய ரொம்ப முயற்சி செஞ்சாங்க. ஆனா அவங்களோட உதவிய நான் ஏத்துக்கவே இல்லை.’

5 ஜிம்முடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நமக்கு பெருமை இருந்தால் நாம் செய்யும் தவறை நியாயப்படுத்த ஆரம்பித்துவிடுவோம். அப்படி செய்தால் நாம் யெகோவாவின் கையில் மென்மையான களிமண்ணைப் போல் இருக்க மாட்டோம். (எரே. 17:9) “மத்தவங்க செஞ்ச தப்புதான் என் கண்ணுக்கு பெரிசா தெரிஞ்சது” என்கிறார் ஜிம். நீங்களும் அவரைப் போல் யோசித்திருக்கிறீர்களா? சகோதர சகோதரிகள் எப்போதாவது உங்கள் மனதை கஷ்டப்படுத்தி இருக்கிறார்களா? சபை பொறுப்புகளை இழந்ததால் நீங்கள் எப்போதாவது சோர்ந்துபோயிருக்கிறீர்களா? அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள்? பெருமையாக நடந்துகொண்டீர்களா அல்லது சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருப்பதும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதும்தான் முக்கியம் என்று நினைத்தீர்களா?சங்கீதம் 119:165; கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.

6. நாம் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருந்தால் என்ன ஆகும்?

6 யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து பாவம் செய்யும் ஒருவருக்கு ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கும். பாவம் செய்வது அவருக்கு பழக்கமாகிவிடும். ‘திரும்ப திரும்ப தப்பு செஞ்சுட்டு இருந்ததுனால அது என் மனச உறுத்தவே இல்லை’ என்று ஒரு சகோதரர் சொன்னார். (பிர. 8:11) ஆபாச படங்களை பார்க்கிற பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஒரு சகோதரர் பின்னர் இப்படி சொன்னார்: “மூப்பர்கள் எதை செஞ்சாலும் அதுல குறை கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன்.” ஆபாசத்தை பார்க்கும் பழக்கத்தினால் அவருக்கும் யெகோவாவுக்கும் இருந்த பந்தம் பாதிக்கப்பட்டது. அவர் மறைவாக செய்துகொண்டிருந்த இந்த தவறு மற்றவர்களுக்கு தெரிய வந்தது. அவருக்கு உதவ மூப்பர்கள் அதிக முயற்சி எடுத்ததால் அவர் தன்னை மாற்றிக்கொண்டார். நாம் எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். அதனால், நாம் ஏதாவது தவறு செய்யும்போது கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு பதிலாக நாம் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தால்... ஏதாவது சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருந்தால்... நம் இருதயம் கடினமாகிவிடும்.

7, 8. (அ) விசுவாசம் இல்லையென்றால் இருதயம் கடினமாகிவிடும் என்பதை புரிந்துகொள்ள இஸ்ரவேலர்களின் உதாரணம் எப்படி உதவுகிறது? (ஆ) அவர்களிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

7 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுதலையானபோது மலைக்கவைக்கும் நிறைய அற்புதங்களை நேரில் பார்த்தார்கள். ஆனால், வாக்குபண்ணப்பட்ட தேசத்திற்குள் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்களுடைய இருதயம் கடினமானது. ஏன்? ஏனென்றால், யெகோவாமீது அவர்களுக்கு விசுவாசம் இல்லாமல் போனது. யெகோவாவை முழுமையாக நம்புவதற்கு பதிலாக எதிரிகளைப் பார்த்து அவர்கள் பயந்தார்கள், அதோடு, மோசேயைப் பற்றி குறை சொல்லவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் அடிமைகளாக இருந்த எகிப்துக்கே திரும்பிப்போக நினைத்தார்கள். அவர்களை பார்த்து யெகோவா ரொம்பவே வேதனைப்பட்டார். “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஜனங்கள் எனக்கு மரியாதை காட்டாமல் இருப்பார்கள்?” என்று சொன்னார். (எண். 14:1-4, 11, NW; சங். 78:40, 41) இஸ்ரவேலர்களுடைய இருதயம் அந்தளவு கடினமாக இருந்ததால்தான் அவர்கள் வனாந்தரத்திலேயே இறந்துபோனார்கள்.

8 இன்று நாம் எல்லாருமே புதிய உலகத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் சமயத்தில் வாழ்வதால் நம்முடைய விசுவாசத்துக்கு நிறைய சோதனைகள் வருகிறது. அதனால், நம்முடைய விசுவாசம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்று நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு மத்தேயு 6:33-ல் இயேசு சொன்ன வார்த்தைகளை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்கு உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வாழ்க்கையில நான் வைச்சிருக்கிற லட்சியமும் என்னோட தீர்மானங்களும் இயேசுவோட வார்த்தைகளை நான் முழுசா நம்புறதை காட்டுதா? அதிகமா பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டு கூட்டத்தையோ ஊழியத்தையோ நான் அடிக்கடி தவற விடுறேனா? என்னோட நேரம், சக்தி எல்லாத்தையும் என் வேலைக்காகவே செலவு செய்ய வேண்டியிருந்தா நான் என்ன செய்வேன்? இந்த உலகம் என்னை வடிவமைக்கிறதுக்கு நான் விடுறேனா? அதனால யெகோவாவை சேவிப்பதையே நான் நிறுத்திடுறேனா?’

9. ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா’ என்று நாம் ஏன் சோதித்துப் பார்க்க வேண்டும், அதை நாம் எப்படி செய்யலாம்?

9 சபைநீக்கம் செய்யப்பட்டவரோடு பழகுவதை... பொழுதுபோக்கை... கெட்ட நண்பர்களை... பற்றியெல்லாம் பைபிள் சொல்லும் ஆலோசனைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் நம் இருதயம் கடினமாகிவிடும். உங்கள் இருதயம் அப்படி கடினமானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த நீங்கள் உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே எப்போதும் சோதித்துப் பாருங்கள்; நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள உங்களை நீங்களே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 கொ. 13:5) இந்த விஷயத்தில் உங்களையே நேர்மையாக சோதித்துப் பாருங்கள். கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி உங்கள் எண்ணங்களை அடிக்கடி சரிசெய்துகொள்ளுங்கள்.

எப்போதும் மென்மையான களிமண்ணைப் போல் இருங்கள்

10. யெகோவாவின் கைகளில் மென்மையான களிமண்ணைப் போல் இருக்க எது நமக்கு உதவும்?

10 யெகோவாவின் கையில் நாம் மென்மையான களிமண்ணைப் போல் இருக்க பைபிளையும் கிறிஸ்தவ கூட்டங்களையும் ஊழியத்தையும் அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். பைபிளை நாம் தினமும் வாசித்து அதை ஆழமாக யோசிக்கும்போது நம்மை வடிவமைப்பது யெகோவாவுக்கு சுலபமாக இருக்கும். இஸ்ரவேல் ராஜாக்கள் ஒவ்வொருவரும் திருச்சட்டத்தை கைப்பட எழுதி அதை தினமும் வாசிக்க வேண்டும் என்று யெகோவா சொன்னார். (உபா. 17:18, 19) ஊழியத்தை நன்றாக செய்வதற்கு பைபிள் வசனங்களைப் படிப்பதும் அதை ஆழ்ந்து யோசிப்பதும் முக்கியம் என்பதை அப்போஸ்தலர்களும் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களில் எபிரெய வசனங்களிலிருந்து நூற்றுக்கணக்கான முறை மேற்கோள் காட்டியிருந்தார்கள். அவர்கள் மக்களுக்கு நற்செய்தியை சொன்னபோது பைபிள் வசனங்களை ஆராய்ந்து படிக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள். (அப். 17:11) அதேபோல், நாமும் பைபிளை தவறாமல் வாசித்து அதை ஆழ்ந்து யோசிப்பது ரொம்ப முக்கியம். (1 தீ. 4:15) இப்படி செய்தால் நாம் மனத்தாழ்மையாக நடந்துகொள்வோம்; அப்போது யெகோவாவுக்கு நம்மை வடிவமைப்பது சுலபமாக இருக்கும்.

யெகோவா உங்களை வடிவமைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (பாராக்கள் 10-13)

11, 12. நம் ஒவ்வொருவரையும் வடிவமைக்க யெகோவா கிறிஸ்தவ சபையை எப்படி பயன்படுத்துகிறார்? உதாரணம் சொல்லுங்கள்.

11 நம் ஒவ்வொருவருடைய தேவைகளையும் மனதில் வைத்து நம்மை வடிவமைக்க யெகோவா கிறிஸ்தவ சபையை பயன்படுத்துகிறார். ஆரம்பத்தில் பார்த்த ஜிம் மாற்றங்களை செய்ய ஒரு மூப்பர் அவருக்கு உதவி செய்தார். அவர் ஜிம்மிடம் ரொம்ப அன்பாக நடந்துகொண்டார். அதைப் பற்றி ஜிம் இப்படி சொல்கிறார்: “அவர் ஒருதடவைகூட என்னை குறை சொன்னதே இல்ல. நான் மாறுவேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்துச்சு. எனக்கு எப்படியாவது உதவி செய்யணும்னு ஆசைப்பட்டார்.” மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த மூப்பர் ஜிம்மை கூட்டத்துக்கு வரும்படி சொன்னார். சகோதர சகோதரிகள் எல்லாரும் அவரை அன்பாக வரவேற்றார்கள். அவர்கள் காட்டின அன்புதான் மாற்றங்கள் செய்ய அவருக்கு உதவியாக இருந்தது. தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பது தவறு என்று ஜிம் புரிந்துகொண்டார். அவருடைய மனைவியும் சபையிலிருந்த மூப்பர்களும் அவரை உற்சாகப்படுத்தினார்கள். மறுபடியும் யெகோவாவிடம் திரும்பி வர இது அவருக்கு உதவியது. அதோடு பிப்ரவரி 1993 காவற்கோபுரத்தில் யெகோவா குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர் அல்ல”, “யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவியுங்கள்” என்ற கட்டுரைகளும் அவருக்கு பிரயோஜனமாக இருந்தது.

12 சீக்கிரமே ஜிம் மறுபடியும் மூப்பராக நியமிக்கப்பட்டார். அவரைப் போலவே பிரச்சினைகளை எதிர்ப்பட்ட சகோதரர்களுக்கு ஜிம் உதவி செய்தார். அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தினார். “நான் யெகோவாகிட்ட நெருங்கி இருந்ததா முன்னாடி நினைச்சிட்டிருந்தேன். ஆனா உண்மையில அப்படி இல்லனு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு பெருமை இருந்ததுனாலதான் முக்கியமான விஷயங்களை பத்தி யோசிக்கிறதுக்கு பதிலா மத்தவங்ககிட்ட இருந்த குறைகளையே பார்த்துட்டு இருந்தேன்” என்று நினைத்து வருத்தப்படுகிறார்.—1 கொ. 10:12.

13. என்ன குணங்களை வளர்த்துக்கொள்ள ஊழியம் நமக்கு உதவுகிறது, அதனால் நமக்கு என்ன நன்மை?

13 நாம் இன்னும் சிறந்த கிறிஸ்தவர்களாக ஆவதற்கு ஊழியம் எப்படி நம்மை வடிவமைக்கிறது? மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள... கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை காட்ட... ஊழியம் நமக்கு உதவி செய்கிறது. (கலா. 5:22, 23) ஊழியம் செய்ததால் நீங்கள் என்ன நல்ல குணங்களை வளர்த்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நாம் இயேசுவைப் போல் நடந்துகொண்டால் நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்பார்கள். அதோடு, நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களையும் மாற்றிக்கொள்வார்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு அனுபவத்தை கவனியுங்கள். இரண்டு யெகோவாவின் சாட்சிகள் ஒரு பெண்ணிடம் நற்செய்தியை சொன்னார்கள். ஆனால், அந்த பெண் பயங்கரமாக கோபப்பட்டு கத்தினார். இருந்தாலும், அந்த பெண்ணிடம் சாட்சிகள் மரியாதையாக நடந்துகொண்டார்கள். அதற்குப் பிறகு அந்த பெண் அப்படி நடந்துகொண்டதற்காக ரொம்ப வருத்தப்பட்டார். செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கிளை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். “அந்த ரெண்டு பேர்கிட்டயும் நான் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன். நான் அவ்ளோ கோபமா பேசுனாலும் அவங்க என்கிட்ட பொறுமையா நடந்துகிட்டாங்க. கடவுளோட வார்த்தைய பத்தி சொல்ல வந்தவங்ககிட்ட நான் இப்படி முட்டாள்தனமா நடந்துகிட்டதுக்கு ரொம்ப வெட்கப்படுறேன்” என்று எழுதியிருந்தார். ஒருவேளை சாட்சிகள் கொஞ்சம் கோபப்பட்டு பேசியிருந்தாலும் அந்தப் பெண் இப்படி எழுதியிருப்பாரா? நாம் செய்யும் ஊழியம் மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருப்பதோடு நாமும் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

யெகோவாவின் உதவியோடு பிள்ளைகளை பயிற்றுவியுங்கள்

14. பிள்ளைகளை நல்லபடியாக பயிற்றுவிப்பதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

14 பொதுவாக பிள்ளைகள் மனத்தாழ்மையாக இருப்பார்கள், கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். (மத். 18:1-4) பைபிள் சத்தியங்களை தெரிந்துகொள்ளவும் அதை நேசிக்கவும் சின்ன வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும். (2 தீ. 3:14, 15) அதற்கு முதலில் பெற்றோர் பைபிள் சத்தியங்களை நேசிக்க வேண்டும், அதை அவர்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களைப் பார்த்து பிள்ளைகளும் பைபிள் சத்தியங்களை நேசிப்பார்கள். அதுமட்டுமல்ல, பெற்றோரும் யெகோவாவும் அவர்களை நேசிப்பதால்தான் அவர்களை கண்டித்து திருத்துகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வார்கள்.

15, 16. பிள்ளை சபைநீக்கம் செய்யப்படும்போது அவருடைய பெற்றோர் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்திருப்பதை எப்படி காட்டலாம்?

15 சின்ன வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களை சொல்லிக்கொடுத்திருந்தாலும் சில பிள்ளைகள் பெரியவர்களாகும்போது யெகோவாவை சேவிப்பதையே நிறுத்திவிடலாம். ஒருவேளை சபைநீக்கம் செய்யப்படலாம். அப்படி நடந்தால் குடும்பத்தில் இருக்கிற எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: “என் அண்ணன் சபைநீக்கம் செய்யப்பட்டதை கேட்டப்போ என்னால தாங்கிக்கவே முடியல. அவன் செத்துப்போனா எவ்ளோ வேதனையா இருந்திருக்குமோ அவ்ளோ வேதனையா இருந்துச்சு.” அந்த சகோதரியும் அவருடைய அப்பா-அம்மாவும் என்ன செய்தார்கள்? பைபிள் சொல்கிற ஆலோசனைக்கு கீழ்ப்படிந்தார்கள். (1 கொரிந்தியர் 5:11, 13-ஐ வாசியுங்கள்.) கடவுள் சொல்கிறபடி நடந்தால்தான் எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டார்கள். சபைநீக்கம் செய்வது யெகோவாவின் அன்பான ஏற்பாடு என்பதையும் புரிந்துகொண்டார்கள். அதனால், குடும்பத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது மட்டும்தான் தங்கள் மகனிடம் அவர்கள் பேசினார்கள்.

16 இதையெல்லாம் பார்த்தபோது அவர்களுடைய மகன் எப்படி உணர்ந்தார்? “என் குடும்பத்தில இருக்கிற யாரும் என்னை வெறுக்கல. ஆனா, யெகோவாவுக்கும் அவரோட அமைப்புக்கும் கீழ்ப்படியுறதனாலதான் அப்படி நடந்துகிட்டாங்கனு எனக்கு தெரியும். எனக்கு கஷ்டம் வந்தப்போ யாராலும் எனக்கு உதவி செய்ய முடியல. உதவிக்காக நான் யெகோவாவை மட்டுமே நம்பியிருந்தேன். அப்போதான் அவர்கிட்ட நெருங்கி இருக்குறது எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சுகிட்டேன்” என்று அவர் சொன்னார். அவர் திரும்பவும் யெகோவாவிடம் வந்தபோது அவருடைய குடும்பத்தில் இருந்தவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்! யெகோவாவுக்கு நாம் எப்போதும் கீழ்ப்படியும்போது ரொம்ப சந்தோஷமாக இருப்போம், வாழ்க்கையில் நமக்கு வெற்றி கிடைக்கும்.—நீதி. 3:5, 6; 28:26.

17. நாம் எப்போதுமே யெகோவாவுக்கு கீழ்ப்படிவது ஏன் முக்கியம், இதனால் நமக்கு என்ன நன்மை?

17 பாபிலோனில் இருந்த யூதர்கள் மனந்திரும்பிய பிறகு இப்படி சொல்வார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார்: “கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.” (ஏசா. 64:8, 9) நாம் மனத்தாழ்மையாக இருந்து யெகோவாவுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தால் தானியேலைப் போலவே நாமும் யெகோவாவுக்கு ‘பிரியமானவர்களாக’ இருப்போம். யெகோவா தன்னுடைய வார்த்தை, சக்தி, அமைப்பு மூலமாக நம்மை தொடர்ந்து வடிவமைப்பார். அப்போது எதிர்காலத்தில் நாம் ‘கடவுளுடைய பிள்ளைகளாக’ மனதிலும் உடலிலும் எந்த குறையும் இல்லாமல் வாழ்வோம்.—ரோ. 8:21.