Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா ஒருவரே நம் கடவுள்

யெகோவா ஒருவரே நம் கடவுள்

“இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.”—உபா. 6:4.

பாடல்கள்: 138, 112

1, 2. (அ) உபாகமம் 6:4-ல் உள்ள வார்த்தைகள் யூதர்களுக்கு ஏன் நன்றாக தெரிந்திருந்தது? (ஆ) மோசே ஏன் இந்த வார்த்தைகளை சொன்னார்?

நூற்றுக்கணக்கான வருஷங்களாக யூதர்கள் ஒரு விசேஷ ஜெபத்தை சொல்கிறார்கள். இது உபாகமம் 6:4-ன் அடிப்படையில் இருக்கிறது. எபிரெயுவில் இந்த வசனத்தின் முதல் வார்த்தை ஷீமா என்பதால் இந்த ஜெபத்தை ஷீமா என்று அழைக்கிறார்கள். பொதுவாக இந்த ஜெபத்தை அவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் சொல்கிறார்கள். கடவுள்மீது அவர்களுக்கு இருக்கும் பக்தியை காட்டுவதற்காக இப்படி செய்கிறார்கள்.

2 கி.மு. 1473-ல் மோசே இஸ்ரவேலர்களிடம் கடைசியாக பேசியபோது சொன்ன வார்த்தைகள்தான் இது! அந்த சமயத்தில் அவர்கள் மோவாபில் இருந்தார்கள். யோர்தான் நதியை கடந்து வாக்குபண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு தயாராக இருந்தார்கள். (உபா. 6:1, 2) அவர்கள் நிறைய பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் எதிர்ப்பட இருந்தார்கள். அதையெல்லாம் சமாளிக்க அவர்களுக்கு தைரியம் தேவைப்பட்டது. அதற்கு அவர்கள் யெகோவாமீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டியிருந்தது, அவருக்கு உண்மையாகவும் இருக்க வேண்டியிருந்தது. மோசே சொன்ன விஷயங்கள் நிச்சயம் அவர்களை பலப்படுத்தியிருக்கும். பத்து கட்டளைகளையும் மற்ற சட்டதிட்டங்களையும் சொன்ன பிறகு உபாகமம் 6:4, 5-ல் (வாசியுங்கள்) உள்ள வலிமையான வார்த்தைகளை மோசே சொன்னார்.

3. இந்தக் கட்டுரையில் நாம் என்ன கேள்விகளுக்கு பதில்களை பார்க்கப் போகிறோம்?

3 யெகோவா ஒருவரே உண்மையான கடவுள் என்று இஸ்ரவேலர்களுக்கு நன்றாக தெரியும். உண்மையுள்ள இஸ்ரவேலர்கள் யெகோவாவை மட்டுமே வணங்கினார்கள். அவர்களுடைய முன்னோர்களும் அவரைத்தான் வணங்கினார்கள். அப்படியிருக்கும்போது, யெகோவா ‘ஒருவரே கடவுள்’ என்று மோசே ஏன் அவர்களிடம் சொன்னார்? யெகோவா ஒருவரே கடவுள் என்ற விஷயத்துக்கும் அவரை முழு இருதயத்தோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளைக்கும் என்ன சம்பந்தம்? உபாகமம் 6:4, 5-ல் உள்ள வார்த்தைகளை நாம் எப்படி கடைப்பிடிக்கலாம்?

கடவுளாகிய யெகோவா ‘ஒருவரே யெகோவா’

4, 5. (அ) ‘ஒரே யெகோவா’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? (ஆ) யெகோவா எப்படி மற்ற கடவுள்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்?

4 யெகோவாவுக்கு நிகர் யாருமில்லை: ‘ஒரே யெகோவா’ என்ற வார்த்தை, யெகோவாவுக்கு சரிசமமானவர் ஒருவருமில்லை அல்லது அவரைப் போல் வேறு யாருமில்லை என்ற அர்த்தத்தை தருகிறது. மோசே ஏன் அப்படி சொன்னார்? திரித்துவம் தவறு என்று நிரூபிப்பதற்காக அவர் அதை சொல்லவில்லை. அதற்குப் பதிலாக இஸ்ரவேலர்கள் யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னார். ஏனென்றால், யெகோவாதான் வானம், பூமி என எல்லாவற்றையும் படைத்தவர், இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அவர் மட்டுமே உண்மையான கடவுள், உலகத்தில் இருக்கிற எந்தவொரு கடவுளும் அவருக்கு நிகரில்லை. (2 சா. 7:22) சுற்றியிருந்த ஜனங்களை போல் இஸ்ரவேலர்கள் இருக்கக் கூடாது என்பதை காட்டுவதற்காகவும் மோசே அப்படி சொன்னார். அந்த ஜனங்கள் நிறைய பொய்க் கடவுள்களை வணங்கி வந்தார்கள். இயற்கை சக்திகளை கட்டுப்படுத்த நிறைய கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் நம்பினார்கள்.

5 உதாரணத்துக்கு, எகிப்தியர்கள் ரா என்ற சூரிய கடவுளை, நட் என்ற வான தேவதையை, கேப் என்ற பூமி தேவனை, ஹபி என்ற நைல் நதி கடவுளை எல்லாம் வணங்கினார்கள், நிறைய மிருகங்களையும் வழிபட்டார்கள். ஆனால், பத்து வாதைகளை கொண்டுவந்ததன் மூலம் அவையெல்லாம் பொய் கடவுள்கள் என்பதையும் தான் மட்டுமே சக்திவாய்ந்த கடவுள் என்பதையும் யெகோவா நிரூபித்தார். கானானியர்கள் முக்கியமாக பாகாலை வணங்கினார்கள். இந்த கடவுள்தான் தங்களுக்கு உயிர் கொடுத்தாக நம்பினார்கள். அதோடு வானம், மழை, புயலின் கடவுளாகவும் பாகாலை நம்பினார்கள். நிறைய ஊர்களில் இதை காவல் தெய்வமாகவும் வணங்கினார்கள். (எண். 25:3) ஆனால், யெகோவா மட்டுமே உண்மையான கடவுள், ‘அவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை’ என்பதை இஸ்ரவேலர்கள் எப்போதும் மனதில் வைக்க வேண்டியிருந்தது.—உபா. 4:35, 39.

6, 7. ‘ஒரே யெகோவா’ என்ற வார்த்தையின் மற்றொரு அர்த்தம் என்ன, இது உண்மை என்று யெகோவா எப்படி நிரூபித்தார்?

6 யெகோவா மாறாதவர், உண்மையானவர். ‘ஒரே யெகோவா’ என்ற வார்த்தை, யெகோவா நம்பகமானவர் என்ற அர்த்தத்தையும் தருகிறது. அவருடைய நோக்கத்தையும் செயல்களையும் நாம் எப்போதுமே நம்பலாம். அவர் முன்னுக்குப்பின் முரணாக நடந்துகொள்ள மாட்டார். அதற்கு பதிலாக, எப்போதும் உண்மையாக இருப்பார், சொன்னதை செய்வார். அவர் எப்போதும் மாறவே மாட்டார். உதாரணத்துக்கு, ஆபிரகாமிடம் அவருடைய சந்ததி வாக்குபண்ணப்பட்ட தேசத்தில் வாழ்வார்கள் என்று வாக்குக் கொடுத்தார். அந்த வாக்கைக் காப்பாற்ற அவர் நிறைய அற்புதங்களை செய்தார். 430 வருஷங்களுக்குப் பிறகும் கொடுத்த வாக்கை அவர் மறக்கவில்லை, அதை அப்படியே நிறைவேற்றினார்.—ஆதி. 12:1, 2, 7; யாத். 12:40, 41.

7 பல நூறு வருஷங்களுக்குப் பிறகு யெகோவா இஸ்ரவேலர்களை அவருடைய சாட்சிகள் என்று அழைத்தார். ‘நான் மாறாதவர் என்று புரிந்துகொள்வதற்கு நான் தேர்ந்தெடுத்திருக்கிற என் ஊழியனே, நீ என்னுடைய சாட்சியாக இருக்கிறாய்’ என்று சொன்னார். அவருடைய நோக்கங்கள் என்றுமே மாறாது என்பதை காட்டுவதற்காக “நான் மாறாதவர்” என்று சொன்னார். (ஏசா. 43:10, 13, NW; 44:6; 48:12) கொடுத்த வாக்கை எப்போதும் நிறைவேற்றுகிற யெகோவாவை வணங்குவது இஸ்ரவேலர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்! அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இது ஒரு பெரிய பாக்கியமாக இருக்கிறது!—மல். 3:6; யாக். 1:17.

8, 9. (அ) யெகோவா அவருடைய மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? (ஆ) மோசே சொன்ன வார்த்தைகளின் முக்கியத்துவத்தை இயேசு எப்படி வலியுறுத்தி சொன்னார்?

8 யெகோவா காட்டுகிற அன்பும் அக்கறையும் என்றுமே மாறாது என்ற குறிப்பையும் இஸ்ரவேலர்களுக்கு மோசே ஞாபகப்படுத்தினார். அவர்கள் யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவரை மட்டுமே முழு இருதயத்தோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்த்தார். அப்படி சொல்லிக்கொடுக்க தங்களுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.—உபா. 6:6-9.

9 யெகோவா என்றுமே மாறாதவர். அன்று அவருடைய மக்களிடம் என்ன விஷயங்களை எதிர்பார்த்தாரோ அதைத்தான் இன்றும் எதிர்பார்க்கிறார். யெகோவா நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் அவரை மட்டுமே வழிபட வேண்டும். அதோடு, அவரை முழு இருதயத்தோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். இதுதான் தலைசிறந்த கட்டளை என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:28-31-ஐ வாசியுங்கள்.) யெகோவா ‘ஒருவரே’ உண்மையான கடவுள் என்று நாம் நம்புவதை எப்படி காட்டலாம் என்று இப்போது பார்க்கலாம்.

யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்

10, 11. (அ) யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) நான்கு எபிரெய இளைஞர்கள் யெகோவாவை மட்டுமே வணங்கினார்கள் என்று எப்படி சொல்லலாம்?

10 யெகோவா ஒருவரே நம்முடைய கடவுளாக இருக்க வேண்டுமென்றால் நாம் அவரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு கொடுக்க வேண்டிய வணக்கத்தை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. யெகோவாவுக்கு செலுத்தும் வணக்கம் சுத்தமாக இருக்க வேண்டும். அதில் பொய்மத பழக்கவழக்கங்கள் துளிக்கூட கலந்துவிடக் கூடாது. மற்ற கடவுளைவிட யெகோவா உயர்ந்தவர் அல்லது ரொம்ப சக்தியுள்ளவர் என்று நினைத்தால் மட்டும் போதாது, அவர் ஒருவர் மட்டும்தான் உண்மையான கடவுள் என்பதை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். அவர் ஒருவரையே நாம் வணங்க வேண்டும்.வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.

11 எபிரெய இளைஞர்களான தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியாவைப் பற்றி நாம் பைபிளில் படிக்கிறோம். அவர்கள் எப்படி யெகோவாவை மட்டுமே வணங்கினார்கள்? திருச்சட்டத்தில் தடைசெய்யப்பட்டிருந்த உணவை சாப்பிட அவர்கள் மறுத்தார்கள். அதோடு, நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையை வணங்கவும் மறுத்தார்கள். யெகோவாவுக்குத்தான் அவர்களுடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தார்கள். அவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்தார்கள். இதில் அவர்கள் ரொம்ப உறுதியாக இருந்தார்கள்.—தானி. 1:1–3:30.

12. யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்றால் நாம் எந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும்?

12 நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்க வேண்டும். அந்த இடத்தை வேறு எதற்கும் கொடுக்கக் கூடாது. அப்போதுதான் நாம் அவரை மட்டுமே வணங்குகிறோம் என்று சொல்ல முடியும். யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க என்னென்ன விஷயங்கள் நமக்கு தடையாக இருக்கலாம்? வேறெந்த கடவுளையும் வணங்க கூடாது என்று பத்து கட்டளைகளில் யெகோவா சொல்லியிருந்தார். எந்தவொரு சிலையையும் வணங்க கூடாது என்றும் சொல்லியிருந்தார். (உபா. 5:6-10) இன்று சிலை வழிபாட்டில் பல விதங்கள் இருக்கின்றன. எந்த விஷயங்கள் சிலை வழிபாட்டோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதுகூட இன்று கஷ்டமாக இருக்கிறது. ஆனால், யெகோவா மாறாதவர் என்பதால் இன்றும் நாம் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், எந்தெந்த விஷயங்கள் சிலை வழிபாட்டோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

13. யெகோவாவைவிட நாம் எதை அதிகமாக நேசிக்க ஆரம்பித்துவிடலாம்?

13 யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை முறிக்கும் விஷயங்கள் கொலோசெயர் 3:5-ல் (வாசியுங்கள்) சொல்லப்பட்டிருக்கிறது. பேராசை சிலை வழிபாட்டோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று இந்த வசனம் சொல்கிறது. எப்படி? பணம், பொருள் சம்பாதிக்க வேண்டும்... ஆடம்பரமாக வாழ வேண்டும்... என்று அளவுக்குமீறி ஆசைப்படும்போது நாம் அதற்குத்தான் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்போம். அதைப் பற்றியே சதா யோசித்துக்கொண்டிருந்தால் அதுவே நமக்கு கடவுளாகிவிடும். கொலோசெயர் 3:5-ல் சொல்லப்பட்டிருக்கும் எல்லா பாவ செயல்களும் ஒருவிதத்தில் பேராசையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், இவையெல்லாமே சிலை வழிபாடாக இருக்கிறது. இவற்றை செய்ய வேண்டுமென்ற ஆசை நமக்குள் தீவிரமாக இருந்தால் கடவுளைவிட அவற்றை நாம் அதிகமாக நேசிக்க ஆரம்பித்துவிடுவோம். அப்போது யெகோவா ஒருவரே நம்முடைய கடவுள் என்று நம்மால் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட தவறை நாம் ஒருநாளும் செய்யக் கூடாது.

14. அப்போஸ்தலன் யோவான் என்ன எச்சரிப்பை கொடுத்தார்?

14 அப்போஸ்தலன் யோவானும் இதேபோன்ற ஒரு எச்சரிப்பை கொடுத்தார். இந்த உலகத்தை நாம் அதிகமாக நேசித்தால், அதாவது ‘உடலின் இச்சையை, கண்களின் இச்சையை, பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகளை’ அதிகமாக நேசித்தால், ‘பரலோகத் தகப்பன்மீது நமக்கு அன்பில்லை’ என்று அர்த்தம். (1 யோவான் 2:15, 16) நாம் இந்த உலகத்தை நேசிக்கிறோமா என்று அடிக்கடி நம்மையே சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை இந்த உலகத்தின் பொழுதுபோக்கை, ஜனங்களை, அவர்களுடைய நடை உடை பாவனையை எல்லாம் பார்த்து நாம் ஈர்க்கப்படலாம். அல்லது ‘பெரிய காரியங்களைத் தேடும்’ ஆசையில் ஒருவேளை உயர்கல்வி படிக்கலாம். (எரே. 45:4, 5) ஆனால், நாம் புதிய உலகத்தில் காலடி எடுத்து வைக்கும் சமயத்தில் வாழ்கிறோம். அதனால், மோசே இஸ்ரவேலர்களுக்கு சொன்ன வார்த்தைகளை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். யெகோவா ஒருவரே கடவுள் என்பதை நாம் உறுதியாக நம்பினால் அவரை மட்டுமே நாம் வணங்குவோம், அதுவும் அவருக்கு பிடித்த விதத்தில் வணங்குவோம்.—எபி. 12:28, 29.

சகோதர சகோதரிகளோடு ஒற்றுமையாக இருங்கள்

15. “ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்” என்று பவுல் ஏன் கிறிஸ்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்?

15 ‘ஒரே யெகோவா’ என்ற வார்த்தை அவருடைய மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. நம் எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரே குறிக்கோள் இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது. கிறிஸ்தவ சபை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் யூதர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் என வித்தியாசமான நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். வித்தியாசமான இனம், கலாச்சாரத்திலிருந்தும் வந்திருந்தார்கள். வணக்க முறையில் செய்யப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்வதும் முன்பு செய்துவந்த சடங்கு சம்பிரதாயங்களை விடுவதும் அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. அதனால்தான் பவுல், “ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்” என்று கிறிஸ்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.1 கொரிந்தியர் 8:5, 6-ஐ வாசியுங்கள்.

16, 17. (அ) எந்த தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேறி வருகிறது, அதனால் என்ன நன்மை? (ஆ) நம் கிறிஸ்தவ ஒற்றுமையை எது பாதிக்கும்?

16 இன்று இருக்கிற கிறிஸ்தவ சபையைப் பற்றி என்ன சொல்லலாம்? கடைசி நாட்களில் எல்லா நாட்டை சேர்ந்த மக்களும் யெகோவாவை வணங்க வருவார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார். அப்போது அவர்கள், ‘[யெகோவா] தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்று’ சொல்வார்கள். (ஏசா. 2:2, 3) இந்த தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருவதை பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! நம் சகோதர சகோதரிகள் வித்தியாசமான நாட்டை, மொழியை, கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் எல்லாரும் ஒற்றுமையாக யெகோவாவை வணங்குகிறோம். ஆனால் சில விஷயங்கள் நம் ஒற்றுமையை கெடுக்கலாம்.

சபை ஒற்றுமையாக இருக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? (பாராக்கள் 16-19)

17 உதாரணத்துக்கு, வேறு கலாச்சாரத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய மொழி, சாப்பாடு, உடை எல்லாம் வித்தியாசமாக இருக்கலாம். அதனால் அவர்களோடு அதிகமாக பழகாமல் இருக்கிறீர்களா? உங்களுடைய மொழியை பேசுகிறவர்களோடு மட்டுமே பேசுகிறீர்களா? உங்கள் நாட்டை அல்லது கலாச்சாரத்தை சேர்ந்தவர்களோடு மட்டுமே பழகுகிறீர்களா? உங்கள் சபையில் இருக்கிற மூப்பர்கள் உங்களைவிட வயதில் இளையவர்களாக இருந்தால்... அல்லது வேறு நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தால்... அவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாம் கவனமாக இல்லையென்றால் இந்த விஷயங்கள் நம் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு உலை வைத்துவிடும்.

18, 19. (அ) எபேசியர் 4:1-3-ல் பவுல் என்ன அறிவுரையை கொடுத்தார்? (ஆ) சபை ஒற்றுமையாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

18 இந்த விஷயங்களை நாம் எப்படி சமாளிக்கலாம்? செல்வசெழிப்பான எபேசுவில் வித்தியாசமான பின்னணியை சேர்ந்த ஜனங்கள் வாழ்ந்தார்கள். அந்த சபையில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்ன அறிவுரை இன்று நமக்கும் பிரயோஜனமாக இருக்கிறது. (எபேசியர் 4:1-3-ஐ வாசியுங்கள்.) பவுல் இந்த வசனத்தில் மனத்தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை, அன்பு போன்ற குணங்களைப் பற்றி சொல்கிறார். ஒரு வீட்டை தாங்கி நிற்கிற தூண்களை போல் இந்த குணங்கள் இருக்கின்றன. ஆனால், அந்த வீட்டுக்கு உறுதியான தூண்கள் இருந்தால் மட்டும் போதாது, அந்த வீட்டை நல்ல நிலையில் வைப்பதற்கு அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதேபோல், எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் சபையில் ‘ஒற்றுமையைக் காத்துக்கொள்ள’ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

19 சபை ஒற்றுமையாக இருக்க நாம் எல்லாருமே முயற்சி செய்ய வேண்டும். இது நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கிறது. அதை எப்படி செய்யலாம்? முதலில், நாம் மனத்தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை, அன்பு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, ஒற்றுமையாக இருப்பதற்கு “ஊக்கமாய் முயற்சி” செய்ய வேண்டும். கருத்துவேறுபாடு என்பது ஒரு சுவரில் ஏற்படும் விரிசலைப் போல் இருக்கிறது. அதை சரிசெய்ய நாம் கடினமாக முயற்சி செய்தால் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அதோடு, சபையில் சமாதானமும் ஒற்றுமையும் இருக்கும்.

20. ‘நம்முடைய கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா’ என்ற வார்த்தைகளை நாம் நம்புகிறோம் என்பதை எப்படி காட்டலாம்?

20 ‘நம்முடைய கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா’ என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையாக இருக்கிறது! வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை கைப்பற்றியபோது இஸ்ரவேலர்கள் நிறைய கஷ்டங்களை எதிர்ப்பட்டார்கள். அதையெல்லாம் சமாளிக்க இந்த வார்த்தைகள் அவர்களை பலப்படுத்தியது. அதேபோல், இந்த வார்த்தைகள் நம்மையும் பலப்படுத்தும். ஏனென்றால், நாமும் மிகுந்த உபத்திரவத்தை கடந்து புதிய உலகத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டியிருக்கிறது. அதனால், இப்போதே நாம் யெகோவாவை முழு இருதயத்தோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். கிறிஸ்தவ சபையில் ஒற்றுமை நிலைத்திருக்க கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் யெகோவாவை மட்டுமே வணங்குகிறோம் என்பதை காட்ட முடியும். இதை நாம் தொடர்ந்து செய்தால் இயேசு கிறிஸ்து நம்மை செம்மறியாடுகளாக நியாயந்தீர்ப்பார். “என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தைகளின் நிறைவேற்றத்தை நாம் பார்ப்போம்.—மத். 25:34.