Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லா சோதனைகளிலும் யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார்

எல்லா சோதனைகளிலும் யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார்

‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள், நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் ஆறுதல் தருகிறார்.’—2 கொ. 1:3, 4.

பாடல்கள்: 38, 56

1, 2. எல்லா சோதனைகளிலும் யெகோவா எப்படி நமக்கு ஆறுதல் தருகிறார், பைபிளில் அவர் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார்?

கல்யாணம் செய்துகொள்கிறவர்களுக்கு, “வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று 1 கொரிந்தியர் 7:28 சொல்கிறது. இந்த வசனத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த கல்யாணமாகாத ஒரு சகோதரர், கல்யாணமான வயதான ஒரு மூப்பரிடம் போய், “இந்த வசனத்துல சொல்லியிருக்கிற ‘உபத்திரவங்கள்னா’ என்ன? கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நான் எப்படி அதை சமாளிக்குறது?” என்று கேட்டார். அந்த மூப்பர் அதற்குப் பதில் சொல்வதற்கு முன்பு, அப்போஸ்தலன் பவுல் எழுதியிருக்கிற இன்னொரு விஷயத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கச் சொன்னார். ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள், நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும், [அல்லது உபத்திரவங்களிலும்] நமக்கு ஆறுதல் தருகிறார்’ என்பதுதான் அந்த விஷயம்!—2 கொ. 1:3, 4.

2 நம் அப்பா யெகோவா, நம்மை நேசிக்கிறார். நமக்குக் கஷ்டங்கள் வரும்போது, நமக்கு ஆறுதல் தருகிறார். தன் வார்த்தையின் மூலம் யெகோவா உங்களைத் தாங்கியதையும் வழிநடத்தியதையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருக்கலாம். கடந்த காலத்தில் வாழ்ந்த தன் ஊழியர்களுக்கு அவர் மிகச் சிறந்ததைக் கொடுத்தது போலவே, இன்று நமக்கும் மிகச் சிறந்ததைக் கொடுப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.எரேமியா 29:11, 12-ஐ வாசியுங்கள்.

3. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்?

3 பொதுவாக, பிரச்சினைகளும் உபத்திரவங்களும் எதனால் வருகின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைச் சமாளிப்பது நமக்குச் சுலபமாக இருக்கும். அப்படியென்றால், கல்யாண வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் ஏன் உபத்திரவங்கள் வருகின்றன? நமக்குத் தேவையான ஆறுதலைப் பெற்றுக்கொள்ள, பைபிள் கால உதாரணங்களும் நவீன கால உதாரணங்களும் நமக்கு எப்படி உதவும்? இதைத் தெரிந்துகொள்வது, சோதனைகளைச் சமாளிக்க நமக்கு உதவியாக இருக்கும்.

கல்யாண வாழ்க்கையில் வருகிற பிரச்சினைகள்

4, 5. கணவன் மனைவிக்கு என்னென்ன உபத்திரவங்கள் வரலாம்?

4 யெகோவா முதல் பெண்ணைப் படைத்த பிறகு, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்; அவள், அவனுடைய மனைவியாக ஆனாள். பிறகு, “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று யெகோவா சொன்னார். (ஆதி. 2:24) நாம் எல்லாருமே பாவம் செய்கிற இயல்புள்ளவர்கள்தான்! (ரோ. 3:23) அதனால், கல்யாணம் செய்துகொள்கிற ஒரு ஆணும் பெண்ணும் பிரச்சினைகளை எதிர்பார்க்கலாம். பொதுவாக கல்யாணத்துக்கு முன்பு, ஒரு பெண் தன் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு, ஒரு பெண்ணுக்குக் கணவர் தலையாக இருப்பதால் அந்தப் பெண் தன் கணவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது. (1 கொ. 11:3) ஆரம்பத்தில், தன் மனைவியை வழிநடத்துவது ஒரு கணவருக்குக் கஷ்டமாக இருக்கலாம். தன் அப்பா அம்மா தருகிற வழிநடத்துதலுக்குப் பதிலாக, இப்போது தன் கணவரின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வது மனைவிக்கும் கஷ்டமாக இருக்கலாம். அதோடு, கல்யாணமான புதிதில், மாமனார் மாமியாரோடு சில விஷயங்களில் ஒத்துப்போக முடியாமல் இருக்கலாம். இதுவும் அவர்களுக்கு ஒரு சோதனையாக அமையலாம்.

5 தங்களுக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்தவுடன், ஒரு கணவனும் மனைவியும் எப்படி உணருவார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது அவர்களுக்குச் சந்தோஷமாக இருந்தாலும், இப்போது புது விதமான கவலைகள் வர ஆரம்பிக்கலாம். குழந்தை நல்லபடியாக பிறக்குமா, குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா போன்ற கவலைகள் அவர்களுக்கு வரலாம். அதோடு, அவர்களுடைய செலவுகளும் இனிமேல் அதிகமாகிவிடும்! குழந்தை பிறந்ததற்குப் பிறகு, கணவனும் மனைவியும் வேறு சில மாற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கும். தன் குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்கே ஒரு அம்மாவுக்கு நேரம் சரியாக இருக்கும். அதனால், கணவர்கள் நிறைய பேர் தாங்கள் தனிமையில் விடப்பட்டது போல உணர்ந்திருக்கிறார்கள். ஒரு அப்பாவாக, கணவனுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கும். தன் மனைவி மற்றும் குழந்தையின் தேவைகளை அவர் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

6-8. தங்களுக்குக் குழந்தை பிறக்காது என்று தெரியும்போது, ஒரு கணவன் மனைவி எப்படி உணரலாம்?

6 இன்னொரு விதமான உபத்திரவமும் இருக்கிறது. அதாவது, ஒரு கணவனும் மனைவியும் தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், அவர்களுக்குக் குழந்தை பிறக்காமல் போகலாம். அப்போது அந்த மனைவி, தான் கர்ப்பமாகாததை நினைத்து ரொம்பவே வேதனைப்படலாம். (நீதி. 13:12) பைபிள் காலங்களில், கல்யாணம் செய்வதும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் ரொம்ப முக்கியமானதாக இருந்தது. அதனால்தான், தன் அக்காவுக்குக் குழந்தைகள் இருப்பதையும், தான் இன்னும் கர்ப்பமாகாததையும் நினைத்து ராகேல் ரொம்பவே துக்கப்பட்டாள். (ஆதி. 30:1, 2) நிறைய குழந்தைகளைப் பெற்றெடுப்பது ரொம்ப முக்கியம் என்று சில நாடுகளில் இருக்கிற மக்கள் இன்றும் நினைக்கிறார்கள். அதனால்தான், அதுபோன்ற நாடுகளில் இருக்கிற மிஷனரிகளைப் பார்த்து, ‘ஏன் உங்களுக்கு குழந்தைங்களே இல்ல?’ என்று கேட்கிறார்கள். அந்த மிஷனரிகள், தங்களால் முடிந்தளவு அதைப் பற்றி விளக்கிய பிறகும்கூட, “கவலைப்படாதீங்க, உங்களுக்காக நாங்க ஜெபம் பண்ணிக்கிறோம்” என்று சிலர் சொல்கிறார்கள்.

7 இப்போது ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். இங்கிலாந்தில் இருக்கிற ஒரு சகோதரி, தனக்குக் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்குக் குழந்தையே பிறக்காது என்று தெரிந்தவுடன், அப்படியே இடிந்துபோய்விட்டார். பிறகு, ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்று அவரும் அவருடைய கணவரும் முடிவு செய்தார்கள். இருந்தாலும், கொஞ்சக் காலத்துக்கு அந்தச் சகோதரி கவலையில் மூழ்கியிருந்தார். “ஒரு குழந்தைய தத்தெடுக்குறதுக்கும் என் சொந்த குழந்தைய பெத்தெடுக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு எனக்குத் தெரியும்” என்று அந்தச் சகோதரி சொன்னார்.

8 பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதால், “பாதுகாக்கப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 2:15) அப்படியென்றால், பிள்ளைகள் இருப்பதால் ஒரு பெண்ணுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று அர்த்தமா? இல்லை. உண்மையிலேயே இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்துவிட்டால், அந்தக் குழந்தையையும் வீட்டையும் கவனிக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். அதனால், மற்றவர்களைப் பற்றி புறணி பேசாமல் இருக்கவும், தனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும் அந்தப் பெண்ணுக்கு அது உதவும். (1 தீ. 5:13) இருந்தாலும், தன் கல்யாண வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் ஒரு பெண்ணுக்கு வேறு சில பிரச்சினைகள் வரலாம்.

அன்பானவரின் மரணத்தை ஒருவர் எப்படிச் சமாளிக்கலாம்? (பாராக்கள் 9, 12)

9. கணவனையோ மனைவியையோ மரணத்தில் பறிகொடுப்பது ஏன் வேதனையைத் தருகிறது?

9 கல்யாணம் ஆனவர்களுக்கு வருகிற உபத்திரவங்களில் இன்னொரு உபத்திரவமும் இருக்கிறது; அன்பான கணவனையோ மனைவியையோ மரணத்தில் பறிகொடுப்பதுதான் அது! இந்தச் சகாப்தத்தில் இப்படி நடக்கும் என்று ஒரு கணவனோ மனைவியோ நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால், அவர்களுக்கு அது ரொம்பவே வேதனையாக இருக்கும். இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்று கிறிஸ்தவர்கள் உறுதியாக நம்புவதால், அவர்கள் ஓரளவு ஆறுதல் அடைகிறார்கள். (யோவா. 5:28, 29) வேதனையான சமயங்களில் நமக்கு ஆறுதலைத் தருவதற்காக, நம் அப்பா யெகோவா பைபிளில் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குறுதிகளால் யெகோவாவின் ஊழியர்கள் சிலர் எப்படி ஆறுதல் அடைந்தார்கள் என்றும், அது அவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது என்றும் இப்போது பார்க்கலாம்.

சோதனைகள் மத்தியிலும் ஆறுதல்

10. அன்னாள் எப்படி ஆறுதல் அடைந்தாள்? (ஆரம்பப் படம்)

10 எல்க்கானாவின் அன்பு மனைவியான அன்னாளின் உதாரணத்தைக் கவனியுங்கள். அன்னாளுக்குக் குழந்தை இல்லை. ஆனால், எல்க்கானாவின் இன்னொரு மனைவியான பெனின்னாளுக்கோ நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். (1 சாமுவேல் 1:4-7-ஐ வாசியுங்கள்.) அன்னாளுக்குக் குழந்தை இல்லாததைக் குத்திக்காட்டி பெனின்னாள் அவளை “வருஷா வருஷம்” நோகடித்தாள். அதனால், அன்னாள் ரொம்பவே வேதனைப்பட்டாள், மனமுடைந்து போனாள். அந்தச் சமயத்தில், ஆறுதலுக்காக அன்னாள் என்ன செய்தாள்? யெகோவாவிடம் ஜெபம் செய்தாள். அதுவும், யெகோவாவின் சன்னிதிக்கே போய் ரொம்ப நேரம் ஜெபம் செய்தாள். தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று அவள் யெகோவாவிடம் கேட்டாள். யெகோவா தன் ஜெபத்துக்கு பதில் கொடுப்பார் என்று அவள் எதிர்பார்த்தாளா? ஒருவேளை எதிர்பார்த்திருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, ஜெபம் செய்து முடித்த பிறகு “அவள் முகம் வாடியிருக்கவில்லை.” (1 சா. 1:12, 17, 18) யெகோவா தனக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பார் அல்லது வேறு ஏதாவது வழியில் தன்னை ஆறுதல்படுத்துவார் என்ற நம்பிக்கை அன்னாளுக்கு இருந்தது.

11. ஜெபம் எப்படி நமக்கு ஆறுதலைத் தரும்?

11 நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதாலும், சாத்தானுடைய உலகத்தில் வாழ்வதாலும் நமக்குச் சோதனைகள் வந்துகொண்டேதான் இருக்கும். (1 யோ. 5:19) ஆனால், ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகிய’ யெகோவா நமக்கு உதவி செய்வார். அதனால், அவரிடம் நாம் ஜெபம் செய்ய வேண்டும். அன்னாளும் அதைத்தான் செய்தாள். அவள் எப்படி உணர்ந்தாள் என்பதை யெகோவாவிடம் சொன்னாள், உதவிக்காக அவரிடம் கெஞ்சினாள். அதே போல, நாமும் வேதனையில் தவிக்கும்போது, யெகோவாவிடம் வெறுமனே நம் பிரச்சினைகளைப் பற்றி சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், உதவிக்காக அவரிடம் கெஞ்ச வேண்டும், நாம் எப்படி உணருகிறோம் என்பதை அவரிடம் சொல்ல வேண்டும்.—பிலி. 4:6, 7.

12. சோதனைகள் மத்தியிலும் ஆறுதலைக் கண்டடைய அன்னாளுக்கு எது உதவியது?

12 நமக்குக் குழந்தைகள் இல்லையென்றாலோ, நம் அன்பானவர்கள் யாராவது இறந்துவிட்டாலோ நாம் ரொம்பவே துக்கப்படலாம். இருந்தாலும், நம்மால் ஆறுதலைக் கண்டடைய முடியும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த அன்னாளின் உதாரணத்தைக் கவனியுங்கள். கல்யாணமாகி வெறும் 7 வருஷங்கள் மட்டுமே அவர் கணவரோடு வாழ்ந்தார்; அதற்குப் பிறகு அவருடைய கணவர் இறந்துபோனார். அதுமட்டுமல்ல, அவருக்குக் குழந்தைகள் இருந்ததாகவும் தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க எது அன்னாளுக்கு உதவியது? அன்னாள் “ஆலயத்துக்கு வராமல் இருந்ததே இல்லை” என்று பைபிள் சொல்கிறது. அவருக்கு 84 வயது ஆனபோதிலும், ஜெபம் செய்யவும் யெகோவாவை வணங்கவும் அவர் ஆலயத்துக்குப் போனார். (லூக். 2:37) சோதனைகள் மத்தியிலும் ஆறுதலைக் கண்டடையவும், சந்தோஷமாக இருக்கவும் இதுதான் அவருக்கு உதவியது.

13. நம் குடும்பத்தார் நம்மைக் கைவிட்டாலும் உண்மையான நண்பர்கள் நமக்கு ஆறுதலாக இருப்பார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

13 சபையில் இருக்கிற உண்மையான நண்பர்களும் நமக்கு ஆறுதலாக இருக்க முடியும். (நீதி. 18:24) ப்போலெ என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருக்கு 5 வயது இருந்தபோது, அவருடைய அம்மா யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டார். அது அவருக்கு ரொம்பவே வேதனையாக இருந்தது. அதைச் சமாளிப்பது அவருக்குச் சுலபமாக இருக்கவில்லை. ஆனால், ஆன் என்ற ஒரு பயனியர் சகோதரி அவரை உற்சாகப்படுத்தினார்; அவருக்கு ஆன்மீக ரீதியில் உதவினார். அதைப் பற்றி ப்போலெ இப்படிச் சொல்கிறார்: “அவங்க எனக்கு சொந்தம் இல்லன்னாலும், என்மேல ரொம்ப அக்கறையா இருந்தாங்க . . . யெகோவாவ தொடர்ந்து வணங்குறதுக்கு அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.” இன்றும், ப்போலெ யெகோவாவை உண்மையோடு வணங்குகிறார். அவருடைய அம்மா மறுபடியும் யெகோவாவுக்குச் சேவை செய்வதை நினைத்து ப்போலெ ரொம்ப சந்தோஷப்படுகிறார். யெகோவாவை வணங்க ப்போலெவுக்கு உதவ முடிந்ததை நினைத்து ஆனும் சந்தோஷப்படுகிறார்.

14. மற்றவர்களை ஆறுதல்படுத்துவதன் மூலம் நாம் எப்படி நன்மையடையலாம்?

14 மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் மும்முரமாக இருந்தால், நம் பிரச்சினைகளை நாம் மறந்துவிடுவோம். உதாரணத்துக்கு, கல்யாணமான சகோதரிகளும் சரி, கல்யாணமாகாத சகோதரிகளும் சரி, கடவுளுடைய சக வேலையாட்களாக நல்ல செய்தியை இன்று மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். அதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவதே இவர்களுடைய குறிக்கோள். நம் பிராந்தியத்தில் இருப்பவர்கள்மேலும், சகோதர சகோதரிகள்மேலும் அக்கறை காட்டும்போது, நம் எல்லாராலும் சபையில் ஒரு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடியும். (பிலி. 2:4) அப்போஸ்தலன் பவுல் அதைத்தான் செய்தார். “பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளைக் கனிவோடு கவனித்துக்கொள்வதுபோல்” தெசலோனிக்கேயில் இருந்த சகோதரர்களை பவுல் நன்றாகக் கவனித்துக்கொண்டார். “ஒரு அப்பா தன் பிள்ளைகளை நடத்துவதுபோல்” தன் சகோதரர்களை அவர் ஆறுதல்படுத்தினார், உற்சாகப்படுத்தினார்.1 தெசலோனிக்கேயர் 2:7, 11, 12-ஐ வாசியுங்கள்.

குடும்பத்தில் ஆறுதல்

15. பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்கிற பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

15 நம் சபையில் இருக்கிற குடும்பங்களை நாம் எப்படி ஆறுதல்படுத்தலாம்? சில சமயங்களில், தங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லித்தரச் சொல்லியோ அந்தப் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு எடுக்கச் சொல்லியோ முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளிடம் புதியவர்கள் கேட்கலாம். பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிற பொறுப்பையும், பயிற்சி கொடுக்கிற பொறுப்பையும் யெகோவா பெற்றோருக்குக் கொடுத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. (நீதி. 23:22; எபே. 6:1-4) சில சமயங்களில், மற்றவர்கள் உதவி செய்தாலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது ரொம்ப முக்கியம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் தவறாமல் பேச வேண்டும்.

16. மற்ற பிள்ளைகளுக்கு உதவும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

16 தங்கள் பிள்ளைகளுக்குப் பைபிள் படிப்பு எடுக்கச் சொல்லி ஒரு பெற்றோர் நம்மிடம் கேட்கும்போது, பிள்ளைகள்மேல் அவர்களுக்கு இருக்கிற அதே அதிகாரம் நமக்கு இல்லை என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். சில சமயங்களில், சத்தியத்தில் இல்லாதவர்களின் பிள்ளைகளுக்குக்கூட நாம் பைபிள் படிப்பு நடத்தலாம். அப்படி நடத்தும்போது, அந்தப் பிள்ளைகளுடைய வீட்டில் அவர்களுடைய பெற்றோர் இருக்கும்படி பார்த்துக்கொள்வது ஞானமானது. அல்லது ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் அந்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. இல்லை என்றால் பொருத்தமான ஒரு பொது இடத்தில் பைபிள் படிப்பை நடத்துவது நல்லது. இப்படிச் செய்யும்போது, மற்றவர்கள் தவறாக நினைப்பதற்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம். காலப்போக்கில், தங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்கும் பொறுப்பை பெற்றோரால் நிறைவேற்ற முடியும்.

17. தங்கள் குடும்பத்தாருக்குப் பிள்ளைகள் எப்படி ஆறுதலாக இருக்க முடியும்?

17 யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிற பிள்ளைகளால் தங்கள் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் தர முடியும். தங்கள் பெற்றோருக்கு மரியாதை தருவதன் மூலமும், அவர்களுக்குச் சில நடைமுறையான உதவிகளைச் செய்வதன் மூலமும் அவர்கள் அதைச் செய்யலாம். அதுமட்டுமல்ல, பிள்ளைகள் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும்போது முழு குடும்பமும் உற்சாகமடையும். பெரிய வெள்ளம் வருவதற்கு முன்பு, லாமேக்கு யெகோவாவை வணங்கிவந்தார். அவர் தன் மகனாகிய நோவாவைப் பற்றி, “யெகோவா சபித்த இந்த மண்ணில் நாம் படாத பாடுபடுகிறோம்; ஆனால், இவன் நமக்கு ஆறுதல் தருவான்” என்று சொன்னார். பெரிய வெள்ளத்துக்குப் பிறகு, இந்தப் பூமியை இனி சபிக்கப்போவதில்லை என்று யெகோவா சொன்னார்; இதன் மூலம் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. (ஆதி. 5:29; 8:21) இன்றும், யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்கிற பிள்ளைகளால் தங்கள் குடும்பத்தாருக்கு ஆறுதலாக இருக்க முடியும். இன்று இருக்கிற சோதனைகளையும், எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைகளையும் சகித்திருக்க தங்கள் குடும்பத்தாருக்கு உதவ முடியும்.

18. நாம் அனுபவிக்கிற எந்தச் சோதனையையும் சகிக்க எது நமக்கு உதவும்?

18 ஜெபம் செய்வதன் மூலமும், பைபிள் உதாரணங்களைத் தியானிப்பதன் மூலமும், சகோதர சகோதரிகளிடம் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வதன் மூலமும் இன்று யெகோவாவின் மக்கள் ஆறுதலைக் கண்டடையலாம். (சங்கீதம் 145:18, 19-ஐ வாசியுங்கள்.) நம்மை ஆறுதல்படுத்த யெகோவா எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதிலும், நாம் அனுபவிக்கிற எந்தச் சோதனையையும் சகிப்பதற்கு அவர் நிச்சயம் உதவுவார் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கலாம்.