Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ள அவர் முயற்சி செய்திருக்கலாம்!

கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ள அவர் முயற்சி செய்திருக்கலாம்!

நாம் யெகோவாவுக்குச் சேவை செய்கிறோம்; அவருடைய தயவும் ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஆனால், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? பைபிள் காலங்களில் வாழ்ந்த சிலர், மோசமான பாவங்களைச் செய்தார்கள்; ஆனால், மறுபடியும் கடவுளுடைய தயவை அல்லது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். வேறுசிலர், ஆரம்பத்தில் நல்ல குணங்களைக் காட்டினார்கள்; ஆனால், கடைசியில் கடவுளுடைய தயவை இழந்தார்கள். அப்படியென்றால், “நம் ஒவ்வொருவரிடமிருந்தும் யெகோவா எதை எதிர்பார்க்கிறார்?” யூதாவின் ராஜாவான ரெகொபெயாமின் உதாரணத்திலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம்.

மோசமான ஆரம்பம்

ரெகொபெயாமின் அப்பா சாலொமோன், இஸ்ரவேலை 40 வருஷங்கள் ஆட்சி செய்தார். (1 ரா. 11:42) சாலொமோன் இறந்தவுடன், ரெகொபெயாம், தான் முடிசூடப்பட வேண்டும் என்பதற்காக, எருசலேமிலிருந்து சீகேமுக்குப் பயணம் செய்தார். (2 நா. 10:1) சாலொமோன் ராஜா ஞானத்துக்குப் பேர்போனவராக இருந்ததால், அவருக்கு அடுத்து ராஜாவாக ஆகப்போவதை நினைத்து ரெகொபெயாம் பயந்திருப்பாரா? சிக்கலான ஒரு பிரச்சினையைத் தீர்க்குமளவுக்குத் தனக்கும் ஞானம் இருக்கிறதா என்று ரெகொபெயாம் சீக்கிரத்திலேயே நிரூபிக்க வேண்டியிருந்தது.

தாங்கள் ஒடுக்கப்படுவதாக இஸ்ரவேலர்கள் உணர்ந்ததால், ரெகொபெயாமிடம் சில ஆட்களை அனுப்பி தங்களுடைய வேண்டுகோளை முன்வைத்தார்கள். “உங்களுடைய அப்பா எங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நீங்கள் அந்தச் சுமையைக் குறைத்து எங்களுடைய வேலையைச் சுலபமாக்கினால், நாங்கள் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்று சொன்னார்கள்.—2 நா. 10:3, 4.

அப்போது, என்ன செய்வதென்று தீர்மானிப்பது ரெகொபெயாமுக்குக் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், மக்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றினால், அவரும் அவருடைய குடும்பத்தாரும் அவருடைய அரண்மனையில் இருப்பவர்களும் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மக்களின் வேண்டுகோளை நிராகரித்தால், ஒருவேளை அவர்கள் கலகம் செய்யலாம். அதனால் அவர் என்ன செய்தார்? தன்னுடைய அப்பாவுக்கு ஆலோசகர்களாக இருந்த பெரியவர்களிடம் முதலில் இதைப் பற்றிப் பேசினார். மக்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றும்படி அவர்கள் சொன்னார்கள். பிறகு, தன் வயதிலிருந்தவர்களிடம் பேசிவிட்டு, மக்களைக் கடுமையாக நடத்துவதென்று தீர்மானித்தார். “என் அப்பா உங்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினார், நான் அதைவிட பாரமான சுமையை உங்கள்மீது சுமத்துவேன்; என் அப்பா உங்களைச் சாட்டையால் அடித்தார், நான் முள்சாட்டையால் அடிப்பேன்” என்று அந்த மக்களிடம் சொன்னார்.—2 நா. 10:6-14.

இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? யெகோவாவுக்குப் பல வருஷங்களாகச் சேவை செய்துவரும் வயதான சகோதர சகோதரிகள் நிறைய பேர் நம்மோடு இருக்கிறார்கள். சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு அவர்களால் நமக்கு உதவ முடியும். அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது எவ்வளவு ஞானமானது!—யோபு 12:12.

“அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்”

கலகம் செய்த கோத்திரங்களை எதிர்த்துப் போர் செய்வதற்காக ரெகொபெயாம் தன்னுடைய படைகளை ஒன்றுதிரட்டினார். அப்போது, தீர்க்கதரிசியான செமாயாவை அனுப்பி யெகோவா இப்படிச் சொன்னார்: “உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்யக் கூடாது. அவரவர் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போய்விட வேண்டும். ஏனென்றால், நான்தான் இப்படி நடக்க வைத்தேன்.”—1 ரா. 12:21-24. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது ரெகொபெயாமுக்கு சுலபமாக இருந்திருக்குமா? “முள்சாட்டையால் அடிப்பேன்” என்று மக்களிடம் சொல்லிவிட்டு, இப்போது அவர்களுடைய கலகத்தை அடக்க ஒன்றுமே செய்யவில்லை என்றால் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? (2 நாளாகமம் 13:7-ஐ ஒப்பிடுங்கள்.) மக்கள் என்ன நினைத்தாலும் சரி, அவரும் அவருடைய படையில் இருந்தவர்களும், “யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள். யெகோவா சொன்னபடியே தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.”

இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? மக்கள் நம்மைக் கேலி கிண்டல் செய்தாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதுதான் எப்போதுமே ஞானமானது. நாம் அப்படிச் செய்தால், கடவுள் நம்மை எப்போதும் ஆசீர்வதிப்பார்.—உபா. 28:2.

ரெகொபெயாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் என்ன நடந்தது? யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்களுக்கு அவர் தொடர்ந்து ராஜாவாக இருந்தார். அதோடு, அந்தக் கோத்திரங்களைச் சேர்ந்த பகுதிகளில் புதிய நகரங்களைக் கட்டினார். சில நகரங்களை “மிகவும் வலுப்படுத்தினார்.” (2 நா. 11:5-12) எல்லாவற்றையும்விட, கொஞ்சக் காலத்துக்கு யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தார். பத்து கோத்திர ராஜ்யத்தில் இருந்தவர்கள் சிலைகளை வணங்க ஆரம்பித்ததால், அங்கிருந்த நிறைய பேர், ரெகொபெயாமையும் உண்மை வணக்கத்தையும் ஆதரிப்பதற்காக எருசலேமுக்குப் போனார்கள். (2 நா. 11:16, 17) யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் ரெகொபெயாமின் ராஜ்யம் பலமடைந்தது.

ரெகொபெயாம் பாவம் செய்கிறார், பிறகு மனம் திருந்துகிறார்

தன்னுடைய ராஜ்யம் பலமடைந்ததும், எதிர்பார்க்காத ஒன்றை ரெகொபெயாம் செய்தார். அதாவது, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தினார். அதோடு, பொய்த் தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார். அதற்கு என்ன காரணம்? அம்மோனியப் பெண்ணாகிய அவருடைய அம்மா அதற்குக் காரணமாக இருந்திருப்பாளா? (1 ரா. 14:21) நமக்குத் தெரியாது. ஆனால், அவருடைய மோசமான நடத்தையை முழு தேசமே பின்பற்றியது என்பதில் சந்தேகம் இல்லை. அதனால், எகிப்து ராஜாவான சீஷாக் வந்து யூதா ராஜ்யத்திலிருந்த நிறைய நகரங்களைக் கைப்பற்றும்படி யெகோவா விட்டுவிட்டார். அந்த நகரங்களை ரெகொபெயாம் மிகவும் வலுப்படுத்தியிருந்தும் அப்படி நடந்தது!—1 ரா. 14:22-24; 2 நா. 12:1-4.

சீஷாக்கும் அவனுடைய படைகளும் ரெகொபெயாமின் ஆட்சி மையமான எருசலேமைத் தாக்கவந்தபோது நிலைமை இன்னும் மோசமானது. அப்போது, கடவுளிடமிருந்து வந்த இந்தச் செய்தியை ரெகொபெயாமிடமும் இஸ்ரவேலின் அதிகாரிகளிடமும் செமாயா தீர்க்கதரிசி சொன்னார்: “நீங்கள் என்னை ஒதுக்கிவிட்டீர்கள்; அதனால் நானும் உங்களை ஒதுக்கிவிட்டு சீஷாக்கின் கையில் கொடுத்துவிட்டேன்.” யெகோவா கொடுத்த கண்டிப்பை ரெகொபெயாம் ஏற்றுக்கொண்டாரா? அதில் சந்தேகமே இல்லை. “அதைக் கேட்டதும் இஸ்ரவேலின் அதிகாரிகளும் ராஜாவும் தாழ்மையுடன் நடந்துகொண்டு, ‘யெகோவா நீதியுள்ளவர்’ என்று சொன்னார்கள்.” அதனால், ரெகொபெயாமை யெகோவா காப்பாற்றினார், எருசலேமும் அழிக்கப்படவில்லை.—2 நா. 12:5-7, 12.

அதற்குப் பிறகு, ரெகொபெயாம் தொடர்ந்து யூதா ராஜ்யத்தை ஆட்சி செய்தார். தான் சாவதற்கு முன்பு, தன்னுடைய மகன்களுக்கு நிறைய அன்பளிப்புகளைக் கொடுத்தார். அடுத்த ராஜாவாக ஆகப்போகும் அவர்களுடைய சகோதரன் அபியாவுக்கு எதிராக அவர்கள் கலகம் செய்துவிடக் கூடாது என்பதற்காக அவர் அப்படிச் செய்திருக்கலாம். (2 நா. 11:21-23) அப்படிச் செய்ததன் மூலம், இளம் வயதில் நடந்துகொண்டதைவிட இப்போது ஞானமாக நடந்துகொண்டார்.

ரெகொபெயாம் நல்லவரா, கெட்டவரா?

நல்ல செயல்கள் சிலவற்றை ரெகொபெயாம் செய்தபோதிலும், அவருடைய ஆட்சியைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: அவர் “மோசமான காரியங்களைச் செய்தார்.” ஏன் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது? ஏனென்றால், ‘யெகோவாவைத் தேட வேண்டும் என்று ரெகொபெயாம் தன் இதயத்தில் உறுதியான தீர்மானம் எடுக்கவில்லை.’ அதனால், யெகோவாவுக்கு ரெகொபெயாமைப் பிடிக்கவில்லை.—2 நா. 12:14.

யெகோவாவுடன் ஒரு நெருக்கமான பந்தத்தை தாவீது வைத்துக்கொண்டதைப் போல் ரெகொபெயாம் வைத்துக்கொள்ளவில்லை

ரெகொபெயாமின் வாழ்க்கை நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது? சிலசமயங்களில், அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார். யெகோவாவின் மக்களுக்கு சில நல்ல காரியங்களைச் செய்தார். ஆனால், யெகோவாவோடு ஒரு நெருக்கமான பந்தத்தை அவர் வைத்துக்கொள்ளவில்லை. யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்ற பலமான ஆசையையும் அவர் வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால்தான், சரியானதைச் செய்வதை நிறுத்திவிட்டார்; பொய்த் தெய்வங்களை வணங்கவும் ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘யெகோவா ரெகொபெயாம திருத்தனப்போ, தான் செஞ்ச தப்பை நினைச்சு ரெகொபெயாம் உண்மையிலயே வருத்தப்பட்டதாலும், யெகோவாவ சந்தோஷப்படுத்தணும்னு ஆசைப்பட்டதாலும்தான் அதை ஏத்துக்கிட்டாரா? இல்லனா, மத்தவங்க சொன்னதால அந்த திருத்தத்த ஏத்துக்கிட்டாரா?’ (2 நா. 11:3, 4; 12:6) தன்னுடைய வாழ்க்கையின் பிற்பட்ட காலத்தில், ரெகொபெயாம் மறுபடியும் தவறுகள் செய்தார். அவருடைய தாத்தா தாவீது ராஜாவுக்கும் அவருக்கும் எவ்வளவு வித்தியாசம்! தாவீதும் தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால், தான் செய்த மோசமான பாவங்களைவிட்டு அவர் உண்மையிலேயே மனம் திருந்தினார். வாழ்நாள் முழுவதும் யெகோவாவையும் உண்மை வணக்கத்தையும் நேசித்தார்.—1 ரா. 14:8; சங். 51:1, 17; 63:1.

இந்த பைபிள் பதிவிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். மக்கள் தங்களுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதும், மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். ஆனால், யெகோவாவின் தயவு வேண்டுமென்றால், அவருக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்க வேண்டும். அதோடு, அவரோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்ய வேண்டுமென்றால், யெகோவாவை நாம் மிகவும் நேசிக்க வேண்டும். நெருப்பு அணையாமலிருக்க எப்படி விறகுகளைப் போட்டுக்கொண்டே இருப்போமோ, அதேபோல், யெகோவாமேல் இருக்கிற அன்பு தணியாமலிருக்க பைபிளைத் தவறாமல் படிக்க வேண்டும். அதோடு, படித்ததை ஆழமாக யோசிக்க வேண்டும், விடாமல் ஜெபம் செய்ய வேண்டும். (சங். 1:2; ரோ. 12:12) இப்படி நாம் யெகோவாவை நேசித்தால், எல்லாவற்றையும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு ஏற்படும். அதோடு, தவறுகள் செய்யும்போது உண்மையிலேயே வருத்தப்படுவோம், யெகோவாவிடம் மன்னிப்பும் கேட்போம். இப்படியெல்லாம் செய்தால், ரெகொபெயாமைப் போல் நாம் இருக்க மாட்டோம்; தொடர்ந்து உண்மை வணக்கத்தில் நிலைத்திருப்போம்.—யூ. 20, 21.

^ பாரா. 9 சாலொமோன் கடவுளுக்கு உண்மையாக இல்லாததால், அவருடைய ராஜ்யம் இரண்டாகப் பிளவுபடும் என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார்.—1 ரா. 11:31.