Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

கவலைகள் மத்தியிலும் ஆறுதல்!

கவலைகள் மத்தியிலும் ஆறுதல்!

சிந்து நதியின் மேற்குக் கரையில் பழங்கால சுக்கூர் நகரம் இருக்கிறது. அங்கே, நவம்பர் 9, 1929-ல் நான் பிறந்தேன். இன்று, அது பாகிஸ்தான் நாட்டின் பகுதியில் இருக்கிறது. கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில், கண்ணைக் கவரும் நிறத்திலிருந்த புத்தகங்களின் தொகுப்பை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மிஷனரியிடமிருந்து என்னுடைய அப்பா அம்மா வாங்கினார்கள். ஒரு யெகோவாவின் சாட்சியாக என் வாழ்க்கையை வடிவமைத்ததில், பைபிள் சம்பந்தப்பட்ட அந்தப் புத்தகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

அந்தப் புத்தகங்கள் ‘வானவில் தொகுப்பு’ என்று அழைக்கப்பட்டன. அந்தப் புத்தகங்களில் இருந்த படங்கள் என் ஆர்வத்தைத் தூண்டின, என்னுடைய கற்பனைக் குதிரையை ஓடவிட்டன. அதனால் சின்ன வயதிலேயே, பைபிள் சத்தியங்கள்மீது எனக்கு ஆர்வம் அதிகமானது. அந்த அருமையான புத்தகங்களில் இருந்த சத்தியங்கள்மீதும் நான் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன்.

இரண்டாம் உலகப் போர் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, என் வாழ்க்கையிலும் சோகப் புயல் வீசியது. என் அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டார்கள்; பிறகு விவாகரத்து செய்துகொண்டார்கள். நான் ரொம்ப நேசித்த அந்த இரண்டு பேரும் ஏன் பிரிந்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அப்படியே உடைந்துபோனேன், எனக்கு யாருமே இல்லாதது போல் உணர்ந்தேன். ஒரே பிள்ளையான எனக்கு, தேவையான ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்கவில்லை.

அந்தச் சமயத்தில், மாகாணத் தலைநகரமாக இருந்த கராச்சியில் நானும் என் அம்மாவும் குடியிருந்தோம். ஒருநாள், ஃப்ரெட் ஹார்டேக்கர் என்ற வயதான ஒரு டாக்டர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி! என் குடும்பத்துக்கு வானவில் தொகுப்பைக் கொடுத்த அந்த மிஷனரிக்கு இருந்த அதேபோன்ற நம்பிக்கைகள்தான் இவருக்கும் இருந்தன. பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி என் அம்மாவிடம் அவர் சொன்னார். ‘எனக்கு இஷ்டமில்ல, என் பையனை கேட்டுப் பாருங்க, அவனுக்கு ஒருவேளை ஆர்வம் இருக்கலாம்’ என்று அம்மா சொல்லிவிட்டார். அடுத்த வாரமே, ஃப்ரெட் ஹார்டேக்கரோடு சேர்ந்து நான் பைபிள் படிக்க ஆரம்பித்தேன்.

சிலவாரங்களுக்குப் பிறகு, சகோதரர் ஃப்ரெட் ஹார்டேக்கரின் க்ளினிக்கில் நடந்த கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். வயதான சாட்சிகள் கிட்டத்தட்ட 12 பேர் அந்தக் கூட்டங்களுக்கு வருவார்கள். என்னிடம் அவர்கள் ஆறுதலாகப் பேசினார்கள்; சொந்த மகனைப் போல் என்னைக் கவனித்துக்கொண்டார்கள். என்னோடு சேர்ந்து உட்காருவார்கள். என் உயரத்துக்குக் கீழே குனிந்து, உண்மையான நண்பர்களைப் போல என்னிடம் பேசுவார்கள். அந்தச் சமயத்தில் எனக்கு அது ரொம்பவே தேவைப்பட்டது.

சீக்கிரத்திலேயே தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கு ஃப்ரெட் ஹார்டேக்கர் என்னைக் கூப்பிட்டார். கையில் எடுத்துக்கொண்டு போகும் போனோகிராஃபை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லிக்கொடுத்தார். அதிலிருந்து சுருக்கமான பைபிள் பேச்சுகளை நாங்கள் போட்டுக் காண்பிப்போம். அதிலிருந்த சில பேச்சுகளில், சில விஷயங்கள் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருந்ததால், ஒரு சிலருக்கு அது பிடிக்கவில்லை. ஆனால், பிரசங்கிப்பது எனக்குச் சுவாரஸ்யமானதாக இருந்தது. பைபிள் சத்தியங்களை நான் ரொம்ப நேசித்தேன்; மற்றவர்களுக்கும் அதைச் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.

இந்தியாவின் மீது போர் செய்ய ஜப்பான் நாட்டு ராணுவம் தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில், பிரிட்டிஷ் அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளிடம் கறாராக நடந்துகொண்டார்கள். அதனால், நானும் பாதிக்கப்பட்டேன். ஜூலை 1943-ல், என்னுடைய பள்ளி முதல்வராக இருந்த ஆங்கலிக்கன் பாதிரி, என்னை “மோசமானவன்” என்று சொல்லி பள்ளியைவிட்டு நீக்கினார். நான் யெகோவாவின் சாட்சிகளோடு சகவாசம் வைத்திருப்பது மற்ற மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக என் அம்மாவிடம் சொன்னார். இதைக் கேட்டதும் அம்மா பயந்துபோய், யெகோவாவின் சாட்சிகளோடு நான் பழகக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டார். பிறகு, வடக்கே 1,370 கி.மீ. (850 மைல்) தூரத்தில், பெஷாவர் என்ற ஊரிலிருந்த என் அப்பாவிடம் என்னை அனுப்பிவிட்டார். அதனால், ஆன்மீக ரீதியில் நான் வாடினேன், சகோதரர்களின் சகவாசம் இல்லாமல் தவித்தேன். கடைசியில், ஆன்மீக ரீதியில் செயலற்றுப் போய்விட்டேன்.

திரும்பவும் ஆன்மீக ரீதியில் உயிர்பெற்றேன்

1947-ல், வேலை தேடி நான் மறுபடியும் கராச்சிக்கு வந்தேன். அப்போது, டாக்டர் ஹார்டேக்கரின் க்ளினிக்குக்குப் போனேன். அவர் என்னை அன்போடு வரவேற்றார்.

எனக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்துக்கொண்டு, “உன் உடம்புக்கு என்ன பண்ணுது”? என்று கேட்டார்.

“டாக்டர், என் உடம்பு நல்லாதான் இருக்கு, ஆன்மீக ரீதியிலதான் நான் ரொம்ப பலவீனமாயிட்டேன். எனக்கு பைபிள் படிப்பு எடுங்க” என்று சொன்னேன்.

“சரி, எப்போ ஆரம்பிக்கலாம்?” என்று அவர் கேட்டார்.

“முடிஞ்சா, இப்பவே ஆரம்பிச்சா நல்லா இருக்கும்” என்று நான் சொன்னேன்.

அந்தச் சாயங்காலத்தில் நாங்கள் பைபிள் படித்தது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. ஆன்மீக அர்த்தத்தில் சொன்னால், என் சொந்த வீட்டுக்கே வந்தது போல் நான் உணர்ந்தேன். யெகோவாவின் சாட்சிகளோடு பழகுவதைத் தடுக்க, தன்னால் முடிந்ததையெல்லாம் என் அம்மா செய்தார். ஆனால், இந்தத் தடவை, சத்தியத்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தேன். நான் என்னை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருந்ததை, ஆகஸ்ட் 31, 1947 அன்று தண்ணீர் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் காட்டினேன். சீக்கிரத்திலேயே, என்னுடைய 17 வயதில், ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தேன்.

சந்தோஷத்தை அள்ளித்தந்த பயனியர் சேவை

முன்பு பிரிட்டிஷ் ராணுவத்தின் புறக்காவல் அரணாக இருந்த க்வெட்டா என்ற பகுதியில்தான் நான் முதல்முதலில் பயனியராக நியமிக்கப்பட்டேன். 1947-ல், இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பகுதி இந்தியாவாகவும் இன்னொரு பகுதி பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இதனால், மத ரீதியிலான வன்முறை வெடித்தது. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவ்வளவு மக்கள் இடம்பெயர்ந்தது சரித்திரத்திலேயே அதுதான் முதல் தடவை! கிட்டத்தட்ட 1,40,00,000 பேர் இடம்பெயர்ந்தார்கள். இந்தியாவிலிருந்த முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கும் இடம்பெயர வேண்டியிருந்தது. அந்தக் குழப்பமான சூழ்நிலையில், கராச்சியில், மக்கள்கூட்டம் அலைமோதிய ஒரு ரயிலில் நான் ஏறினேன். ரயிலுக்கு வெளிப்புறத்திலிருந்த கம்பியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே கிட்டத்தட்ட க்வெட்டா வரைக்கும் பயணம் செய்தேன்.

1948-ல் இந்தியாவில் நடந்த வட்டார மாநாட்டில் கலந்துகொண்டபோது

க்வெட்டாவில் ஜார்ஜ் சிங் என்ற விசேஷ பயனியரைச் சந்தித்தேன். அப்போது அவருக்கு 25 வயதுக்குமேல் இருக்கும். ஒரு பழைய சைக்கிளை அவர் எனக்குக் கொடுத்தார். மலைப்பிரதேசமாக இருந்த அந்தப் பிராந்தியத்தில் ஓட்டிக்கொண்டு போக (அல்லது தள்ளிக்கொண்டு போக) அது உதவியாக இருந்தது. பெரும்பாலான சமயங்களில், நான் தனியாகத்தான் ஊழியம் செய்தேன். ஆறே மாதங்களில் எனக்கு 17 பைபிள் படிப்புகள் கிடைத்தன. அதில் சிலர் சத்தியத்துக்கு வந்தார்கள். சாதிக் மாசி என்ற ராணுவ அதிகாரியும் அதில் ஒருவர். பாகிஸ்தானின் தேசிய மொழியான உருதுவில் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்ப்பதற்கு ஜார்ஜுக்கும் எனக்கும் அவர் உதவினார். காலப்போக்கில், நல்ல செய்தியை ஆர்வத்தோடு பிரசங்கிக்கும் ஒரு பிரஸ்தாபியாக சாதிக் ஆனார்.

குயின் எலிசபெத் கப்பலில் கிலியட் பள்ளிக்குப் போனபோது

கொஞ்சக் காலத்தில், கராச்சிக்கே திரும்பினேன். கிலியட் பள்ளியை முடித்துவிட்டுப் புதிதாக வந்திருந்த மிஷனரிகளான ஹென்றி ஃபின்ச் மற்றும் ஹேரி ஃபாரஸ்ட் ஆகியவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தேன். அவர்கள் எனக்கு அருமையான விதத்தில் பயிற்சி கொடுத்தார்கள். ஒருதடவை சகோதரர் ஃபின்ச்சோடு நான் வட பாகிஸ்தானுக்கு ஊழியம் செய்யப் போயிருந்தேன். அங்கே இருந்த பிரமாண்டமான மலைத்தொடர்களின் அடிவாரங்களில், கிராமவாசிகள் நிறைய பேர் குடியிருந்தார்கள். உருது மொழி பேசிய தாழ்மையுள்ளம் கொண்ட அந்த மக்கள் பைபிள் சத்தியத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்தார்கள். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, கிலியட் பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பள்ளி முடிந்ததும் நான் பாகிஸ்தானுக்கே திரும்பி வந்தேன்; சிலசமயங்களில், வட்டாரக் கண்காணியாகவும் சேவை செய்தேன். லாகூரில் இருந்த மிஷனரி இல்லத்தில், மூன்று மிஷனரிகளோடு சேர்ந்து நானும் தங்கியிருந்தேன்.

நெருக்கடியிலிருந்து மீண்டேன்

1954-ல் வருத்தமான ஒரு சம்பவம் நடந்தது. பயங்கரக் கருத்துவேறுபாட்டால், லாகூர் மிஷனரி இல்லத்திலிருந்த மிஷனரிகளுக்குள் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அதனால், அவர்களுடைய நியமிப்பை கிளை அலுவலகம் மாற்றியது. அந்தப் பிரச்சினையில் நானும் ஈடுபட்டேன். என்னுடைய ஞானமற்ற அந்தச் செயலால், எனக்குக் கடுமையான ஆலோசனை கொடுக்கப்பட்டது. அதனால் நான் நொறுங்கிப்போய்விட்டேன்; ஆன்மீக ரீதியில் இனி அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பிறகு, கராச்சிக்குத் திரும்பினேன்; என்னுடைய ஆன்மீக வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து லண்டனுக்குப் போனேன்.

லண்டனில் நான் போய்க்கொண்டிருந்த சபையில், லண்டன் பெத்தேலில் சேவை செய்த நிறைய சகோதரர்கள் இருந்தார்கள். லண்டன் கிளை அலுவலக ஊழியராக இருந்த ப்ரைஸ் ஹியூஸ் என்ற அன்பான சகோதரர் என்னை நன்றாகப் பயிற்றுவித்தார். உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்த பிரசங்க வேலையைக் கண்காணித்துவந்த சகோதரர் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபோர்ட், ஒருதடவை தனக்கு ஆலோசனை கொடுத்ததைப் பற்றி அவர் சொன்னார். தான் செய்ததை நியாயப்படுத்த முயற்சி செய்தபோது சகோதரர் ரதர்ஃபோர்ட் தன்னைக் கடுமையாகக் கண்டித்ததைப் பற்றி அவர் சொன்னார். அதை அவர் சந்தோஷமாகச் சொன்னதைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அந்த ஆலோசனை கிடைத்தபோது முதலில் தனக்கு வருத்தமாக இருந்ததாகவும், அந்த ஆலோசனை தனக்குத் தேவையான ஒன்றுதான் என்பதை பிற்பாடு புரிந்துகொண்டதாகவும், யெகோவாவின் அன்பை அதில் உணர முடிந்ததாகவும் ஹியூஸ் சொன்னார். (எபி. 12:6) அவர் சொன்ன வார்த்தைகள் என் மனதைத் தொட்டன, ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சியூட்டின.

கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில், என் அம்மாவும் லண்டனுக்கு குடிமாறி வந்தார். ஜான் ஈ. பார் என்ற சகோதரரிடம் பைபிள் படிப்பு படிக்க ஒத்துக்கொண்டார். அந்தச் சகோதரர் பிற்பாடு ஆளும் குழு அங்கத்தினராக ஆனார். அம்மா நல்ல முன்னேற்றம் செய்தார்; 1957-ல் ஞானஸ்நானம் எடுத்தார். என்னுடைய அப்பாவும், தான் சாவதற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்ததாகப் பிற்பாடு நான் கேள்விப்பட்டேன்.

1958-ல், லீனியைக் கல்யாணம் செய்தேன். அவள் டென்மார்க்கைச் சேர்ந்தவள், லண்டனில் குடியேறியிருந்தாள். அடுத்த வருஷம், எங்களுடைய முதல் குழந்தை ஜேன் பிறந்தாள். மொத்தம் எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். காலப்போக்கில், லீனியின் உடல்நிலை மோசமானதால், குளிர் குறைவாக உள்ள இடத்துக்குக் குடிமாற வேண்டியிருந்தது. அதனால், 1967-ல், ஆஸ்திரேலியாவில் இருக்கிற அடிலெய்ட் என்ற இடத்துக்குக் குடிமாறிப் போனோம்.

எங்கள் உள்ளம் உடைந்தது

அடிலெய்ட் சபையில், பரலோக நம்பிக்கையுள்ள வயதான சகோதர சகோதரிகள் 12 பேர் இருந்தார்கள். பிரசங்க வேலையை மிகவும் ஆர்வத்தோடு அவர்கள் முன்நின்று வழிநடத்தினார்கள். நாங்கள் சீக்கிரமே ஆன்மீகக் காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டோம்.

1979-ல், எங்களுடைய ஐந்தாவது பிள்ளை டேனியல் பிறந்தான். டௌன் சின்ட்ரோம் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற வியாதியால் அவன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தான், ரொம்ப நாள் அவன் உயிரோடு இருக்கமாட்டான் என்று தெரிந்தது. அப்போது நாங்கள் அனுபவித்த வேதனையை நினைக்கும்போது இப்போதுகூட எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. மற்ற நான்கு பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டதோடு, டேனியலையும் நன்றாகக் கவனித்துக்கொள்ள எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். அவனுடைய இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருந்ததால், சிலசமயங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவனுடைய உடல் நீல நிறமாகிவிடும். அந்தச் சமயங்களில், உடனடியாக அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு ஓட வேண்டியிருந்தது. அவனுடைய உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், அவன் புத்திசாலியாக இருந்தான், அன்பாக நடந்துகொண்டான், யெகோவாவை ரொம்ப நேசித்தான். நாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு ஜெபம் செய்யும்போது, தன்னுடைய பிஞ்சுக் கைகளை அவன் ஒன்றாகச் சேர்த்துவைத்துக்கொள்வான், தன்னுடைய தலையை ஆட்டுவான், பிறகு மனதிலிருந்து “ஆமென்” சொல்வான். அதற்குப் பிறகுதான் சாப்பிடுவான்.

அவனுக்கு நான்கு வயதானபோது, லுக்கேமியா என்ற புற்றுநோய் அவனைத் தாக்கியது. உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் லீனியும் நானும் ரொம்பவே சோர்ந்துபோனோம். நரம்புத்தளர்ச்சி ஏற்படும் நிலையில் நான் இருப்பதுபோல் உணர்ந்தேன். ‘இதற்குமேல் முடியாது’ என்ற நிலையில் நாங்கள் இருந்தபோது, எங்கள் வட்டாரக் கண்காணி நெவில் ப்ராமிச் எங்கள் வீட்டுக்கு வந்தார். அன்று ராத்திரி, கலங்கிய கண்களோடு அவர் எங்களை அணைத்துக்கொண்டார். நாங்கள் எல்லாருமே அழுதோம். அவருடைய அன்பும் கரிசனையான வார்த்தைகளும் எங்களை ஆறுதல்படுத்தியது. அடுத்த நாள் விடியற்காலை 1 மணிக்குத்தான் அவர் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பினார். அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே டேனியல் இறந்துவிட்டான். எங்கள் வாழ்க்கையிலேயே நாங்கள் அனுபவித்த தாங்க முடியாத வேதனை, அவனுடைய இழப்புதான்! இருந்தாலும், எதுவும், ஏன் மரணம்கூட யெகோவாவின் அன்பிலிருந்து அவனைப் பிரிக்க முடியாது என்ற விஷயம் எங்களை ஆறுதல்படுத்தியது. (ரோ. 8:38, 39) கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகத்தில் அவன் உயிர்த்தெழுந்து வருவதைப் பார்க்க நாங்கள் ஏங்குகிறோம்.—யோவா. 5:28, 29.

மற்றவர்களுக்கு உதவுவதில் கிடைக்கும் சந்தோஷம்

இரண்டு தடவை நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டேன். ஆனாலும் அதிலிருந்து நான் மீண்டுவந்தேன். இப்போது, சபையில் ஒரு மூப்பராகச் சேவை செய்கிறேன். மற்றவர்கள்மேல், முக்கியமாக பிரச்சினைகளோடு போராடுபவர்கள்மேல், அனுதாபத்தையும் கரிசனையையும் காட்ட வேண்டும் என்ற பாடத்தை என்னுடைய அனுபவங்கள் எனக்குக் கற்றுத்தந்திருக்கின்றன. ‘இவர்கள் இப்படித்தான்’ என்று யாரையும் முத்திரை குத்தாமல் இருக்க நான் முயற்சி செய்கிறேன். அதற்குப் பதிலாக, ‘அவங்களோட பின்னணி எப்படி அவங்க உணர்ச்சிகளையும் யோசனைகளையும் பாதிக்குது? அவங்கமேல எனக்கு அக்கறை இருக்குங்குறத எப்படி காட்டலாம்? யெகோவாவோட விருப்பத்த செய்றதுக்கு அவங்களுக்கு எப்படி உதவலாம்?’ என்றெல்லாம் நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு மேய்ப்பு சந்திப்புகள் செய்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். சொல்லப்போனால், மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போதும், ஆன்மீகப் புத்துணர்ச்சி அளிக்கும்போதும், எனக்கு ஆறுதல் கிடைக்கிறது; நான் ஆன்மீகப் புத்துணர்ச்சி அடைகிறேன்.

மேய்ப்பு சந்திப்புகள் செய்வதில் எனக்குத் திருப்தி கிடைக்கிறது

‘கவலைகள் என்னைத் திணறடித்தபோது, [யெகோவா] எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தார்’ என்று சொன்ன சங்கீதக்காரர் போல்தான் நானும் உணர்கிறேன். (சங். 94:19) குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள்... மத ரீதியில் வந்த எதிர்ப்புகள்... எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள்... மனச்சோர்வு... என எல்லாவற்றின் மத்தியிலும் யெகோவா என்னைத் தாங்கினார். உண்மையிலேயே, யெகோவா என்னுடைய அப்பாவாக இருந்தார்.

^ பாரா. 19 ஆரம்பத்தில், பாகிஸ்தான் நாடு, மேற்கு பாகிஸ்தானாகவும் (இப்போது, பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தானாகவும் (இப்போது, வங்காளதேசம்) பிரிக்கப்பட்டிருந்தது.

^ பாரா. 29 ஜூன் 2011, விழித்தெழு-வில் (ஆங்கிலம்) வெளிவந்த “டௌன் சின்ட்ரோம் வியாதியுள்ள பிள்ளையை வளர்ப்பதில் இருக்கும் சவால்களும் பலன்களும்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.