Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 23

‘யாரும் உங்களை அடிமையாகப் பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்!’

‘யாரும் உங்களை அடிமையாகப் பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்!’

‘தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாகப் பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவை மனித பாரம்பரியங்களை . . . சார்ந்திருக்கின்றன.’—கொலோ. 2:8.

பாட்டு 114 கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்

இந்தக் கட்டுரையில்... *

1. கொலோசெயர் 2:4, 8-ன்படி, நம்முடைய மனதைக் கட்டுப்படுத்த சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான்?

நாம் யெகோவாவை நேசிக்கக் கூடாது என்பதுதான் சாத்தானுடைய ஆசை! இந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக, நம்முடைய யோசனைகளை அவன் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறான். அதாவது, நம்முடைய மனதைக் கட்டுப்படுத்தி, தனக்குக் கீழ்ப்படியும்படி செய்கிறான். கவர்ச்சியான விஷயங்களைப் பயன்படுத்தி நம்மை முட்டாள்களாக்குகிறான். நம்மை ஏமாற்றி, அவன் பின்னால் நம்மை வரவைக்கிறான்.—கொலோசெயர் 2:4, 8-ஐ வாசியுங்கள்.

2-3. (அ) கொலோசெயர் 2:8-லிருக்கிற எச்சரிக்கைக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

2 அப்படியென்றால், நாம் உண்மையிலேயே ஆபத்தில் இருக்கிறோமா? ஆமாம், ஆபத்தில்தான் இருக்கிறோம்! கொலோசெயர் 2:8-லிருக்கிற எச்சரிக்கையை சத்தியத்தில் இல்லாதவர்களுக்கு பவுல் எழுதவில்லை, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்குத்தான் எழுதினார். (கொலோ. 1:2, 5) அந்தச் சமயத்தில், ஏமாந்துபோவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு நிறையவே இருந்தது. நமக்கோ, அவர்களைவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. (1 கொ. 10:12) ஏனென்றால், சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். கடவுளுடைய உண்மை ஊழியர்களை ஏமாற்றுவதுதான் அவனுடைய முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. (வெளி. 12:9, 12, 17) அதோடு, பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் ‘மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே’ போகும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.—2 தீ. 3:1, 13.

3 இந்தக் கட்டுரையில், நம்முடைய யோசனைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ‘வஞ்சனையான வீண் கருத்துகளை’ சாத்தான் எப்படிப் பயன்படுத்துகிறான் என்று பார்க்கலாம். அவனுடைய மூன்று “சூழ்ச்சிகளை” அதாவது “சதித்திட்டங்களை” பற்றித் தெரிந்துகொள்ளலாம். (எபே. 6:11, அடிக்குறிப்பு) ஒருவேளை, அவனுடைய தந்திரங்களால் நம்முடைய யோசனைகள் கறைபடுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? அதை எப்படிச் சரி செய்யலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் காலடியெடுத்து வைத்த பிறகு, சாத்தான் எப்படி அவர்களை வழிவிலகச் செய்தான் என்றும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் முதலில் பார்க்கலாம்.

சிலைகளைக் கும்பிடுவதற்கான தூண்டுதல்

4-6. உபாகமம் 11:10-15 சொல்கிறபடி, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போன பிறகு, விவசாயம் செய்யும் முறைகளை இஸ்ரவேலர்கள் எப்படி மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது?

4 சிலை வணக்கம் என்ற வலையில் இஸ்ரவேலர்களைப் படுதந்திரமாக சாத்தான் விழ வைத்தான். அதை அவன் எப்படிச் செய்தான்? அவர்களுக்கு உணவு தேவை என்பது அவனுக்குத் தெரியும். அவர்களுடைய தேவையை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போனதற்குப் பிறகு, விவசாயம் செய்யும் முறைகளை இஸ்ரவேலர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. எகிப்தில் இருந்தபோது, நீர்ப்பாசனத்துக்காக நைல் நதியின் தண்ணீரை அவர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் நிலைமை அப்படி இருக்கவில்லை. பெரிய பெரிய நதிகளிலிருந்து கிடைக்கிற தண்ணீர் மூலம் அங்கே விவசாயம் செய்யப்படவில்லை. பருவ மழையையும் பனியையும் நம்பிதான் அங்கே விவசாயம் செய்யப்பட்டது. (உபாகமம் 11:10-15-ஐ வாசியுங்கள்; ஏசா. 18:4, 5) அதனால், விவசாயம் செய்வதற்கான புதிய முறைகளை இஸ்ரவேலர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஏனென்றால், விவசாயம் செய்வதில் அனுபவம் பெற்ற பெரும்பாலான இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திலேயே இறந்துபோயிருந்தார்கள்.

இஸ்ரவேல் தேசத்து விவசாயிகளின் யோசனைகளைச் சாத்தானால் எப்படி மாற்ற முடிந்தது? (பாராக்கள் 4-6) *

5 இப்போது தன்னுடைய மக்களுடைய சூழ்நிலை மாறியிருப்பதை யெகோவா அவர்களுக்குப் புரியவைத்தார். பிறகு, “மற்ற தெய்வங்களை வணங்க வேண்டுமென்ற தவறான ஆசை உங்கள் இதயத்தில் வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அந்தத் தவறான வழியில் போகாதபடி கவனமாக இருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார். (உபா. 11:16, 17) மேலோட்டமாகப் பார்த்தால், விவசாயத்துக்கும் இந்த அறிவுரைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் தோன்றலாம். அப்படியென்றால், விவசாயம் செய்வதற்கான புதிய முறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தபோது, பொய்த் தெய்வங்களைக் கும்பிடாமல் இருப்பதைப் பற்றிய எச்சரிக்கையை யெகோவா ஏன் கொடுத்தார்?

6 பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட மக்களிடமிருந்து உள்ளூரில் பின்பற்றப்பட்ட விவசாய முறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் இஸ்ரவேலர்களுக்கு வரும் என்பது யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது. விவசாயம் செய்வதில் இஸ்ரவேலர்களைவிட அந்த மக்களுக்கு அதிக அனுபவம் இருந்தது என்பதும், பிரயோஜனமான விஷயங்களை அவர்களிடமிருந்து இஸ்ரவேலர்களால் கற்றுக்கொள்ள முடிந்திருக்கும் என்பதும் உண்மைதான். ஆனால், அதில் ஓர் ஆபத்து இருந்தது! கானான் தேசத்து விவசாயிகள் பாகாலைக் கும்பிட்டுவந்ததால், அவர்களுடைய மத நம்பிக்கைகள் அவர்களுடைய யோசனைகளை ஆதிக்கம் செலுத்தின. பாகாலை வானத்தின் எஜமானாகவும் மழையின் தெய்வமாகவும் அவர்கள் நினைத்தார்கள். அந்தப் பொய் நம்பிக்கைகளால் தன்னுடைய மக்கள் ஏமாந்துபோகக் கூடாது என்று யெகோவா விரும்பினார். ஆனால், இஸ்ரவேலர்கள் பாகாலைக் கும்பிட வேண்டும் என்று திரும்பத் திரும்ப முடிவு எடுத்தார்கள். (எண். 25:3, 5; நியா. 2:13; 1 ரா. 18:18) இப்போது, இஸ்ரவேலர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் சாத்தான் எப்படிக் கொண்டுவந்தான் என்று பார்க்கலாம்.

இஸ்ரவேலர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சாத்தான் பயன்படுத்திய மூன்று தந்திரங்கள்

7. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போன பிறகு, இஸ்ரவேலர்களுக்கு என்ன சோதனை காத்திருந்தது?

7 இஸ்ரவேலர்களின் நியாயமான எதிர்பார்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதுதான் சாத்தானுடைய முதல் தந்திரம். நீர்ப்பாசனத்துக்காக மழையை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில், ஏப்ரல் மாதத்தின் கடைசியிலிருந்து செப்டம்பர் மாதம்வரை பெய்த மழையின் அளவு ரொம்பக் குறைவாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட அக்டோபரில் ஆரம்பிக்கிற மழையை நம்பிதான் இஸ்ரவேலர்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அமோக விளைச்சலும் அதை நம்பிதான் இருந்தது. அதனால், தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பொய் மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால்தான் தங்கள் வயலும் வாழ்வும் செழிக்கும் என்று இஸ்ரவேலர்களை சாத்தான் நம்ப வைத்தான். சில குறிப்பிட்ட சடங்குகளைச் செய்தால்தான் தங்களுடைய தெய்வங்கள் அருள்புரியும் என்றும், அப்போதுதான் மழை பெய்யும் என்றும் அந்த மக்கள் நினைத்தார்கள். கடவுளுடைய மக்களில் யாருக்கெல்லாம் விசுவாசம் குறைவாக இருந்ததோ, அவர்கள் எல்லாரும் இதை நம்பினார்கள்; வறட்சியைத் தவிர்க்க இதுதான் வழி என்று நினைத்தார்கள். அதனால், பொய்த் தெய்வமான பாகாலை மகிமைப்படுத்துவதற்காக, பொய் மத சடங்குகளைச் செய்தார்கள்.

8. சாத்தானுடைய இரண்டாவது தந்திரம் என்ன? விளக்குங்கள்.

8 பாவ ஆசைகளைக் கவர்ச்சியாகக் காட்டியதுதான் இஸ்ரவேலர்களிடம் அவன் பயன்படுத்திய இரண்டாவது தந்திரம். பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட மக்களுடைய வணக்கத்தில் அருவருப்பான செயல்கள் நிறைந்திருந்தன. விபச்சாரம் செய்வது அவர்களுடைய வணக்கத்தின் பாகமாக இருந்தது. அவர்களுடைய கோயில்களில் பெண் விபச்சாரிகளும் ஆண் விபச்சாரக்காரர்களும் இருந்தார்கள். ஓரினச்சேர்க்கையையும் மற்ற ஒழுக்கங்கெட்ட செயல்களையும் ஏற்றுக்கொண்டதோடு, அவற்றில் எந்தத் தவறுமில்லை என்பதாகவும் அவர்கள் நினைத்தார்கள். (உபா. 23:17, 18; 1 ரா. 14:24) தாங்கள் செய்த சடங்குகளால் தங்களுடைய தெய்வங்கள் மனம் குளிர்ந்துபோய், அமோக விளைச்சலை அள்ளித் தந்ததாக அவர்கள் நம்பினார்கள். பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட மக்களுடைய ஒழுக்கங்கெட்ட சடங்குகள் இஸ்ரவேலர்களில் நிறைய பேரைக் கவர்ந்தது. அதனால், அவர்கள் பொய்த் தெய்வங்களைக் கும்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் உண்மையில், சாத்தானுடைய வலையில்தான் அவர்கள் விழுந்துகிடந்தார்கள்.

9. ஓசியா 2:16, 17-ன்படி, உண்மையிலேயே யெகோவா யார் என்பதை இஸ்ரவேலர்கள் மறந்துபோகும்படி சாத்தான் எப்படிச் செய்தான்?

9 உண்மையிலேயே யெகோவா யார் என்பதை இஸ்ரவேலர்கள் மறந்துபோகும்படி செய்ததுதான் சாத்தானுடைய மூன்றாவது தந்திரம். எரேமியா தீர்க்கதரிசியின் காலத்திலிருந்த பொய்த் தீர்க்கதரிசிகள் செய்த ஒரு காரியத்தை யெகோவா சொன்னார். ‘பாகாலை வணங்குவதன்’ மூலம் மக்கள் யெகோவாவின் பெயரை மறந்துவிடும்படி அவர்கள் செய்தார்கள். (எரே. 23:27) யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவதை அவருடைய மக்கள் நிறுத்திவிட்டதுபோல் தெரிகிறது! யெகோவாவை ‘பாகாலே’ என்று கூப்பிட்டார்கள்; பாகால் என்பதற்கு, “தலைவன்” அல்லது “எஜமான்” என்று அர்த்தம். அவர்கள் அப்படிக் கூப்பிட்டதால், யெகோவாவுக்கும் பாகாலுக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குக் கஷ்டமாகிவிட்டது. கடைசியில், யெகோவாவின் வணக்கத்துக்குள் பாகாலோடு சம்பந்தப்பட்ட சடங்குகள் நுழைந்தன.—ஓசியா 2:16, 17-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.

இன்று சாத்தான் பயன்படுத்துகிற தந்திரங்கள்

10. சாத்தான் இன்று என்னென்ன தந்திரங்களைப் பயன்படுத்துகிறான்?

10 அன்று பயன்படுத்திய அதே தந்திரங்களைத்தான் இன்றும் சாத்தான் பயன்படுத்துகிறான். அதாவது, மக்களுடைய இயல்பான ஆசைகளை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். பாலியல் முறைகேட்டை கவர்ச்சியாகக் காட்டுகிறான். யெகோவா உண்மையிலேயே யார் என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாதபடி செய்கிறான். இந்த மூன்று தந்திரங்களில், மூன்றாவது தந்திரத்தைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

11. யெகோவா உண்மையிலேயே யார் என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக சாத்தான் என்ன செய்திருக்கிறான்?

11 யெகோவா உண்மையிலேயே யார் என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாதபடி சாத்தான் செய்கிறான். இயேசுவுடைய அப்போஸ்தலர்களின் மறைவுக்குப் பிறகு, கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் சிலர் பொய்ப் போதனைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். (அப். 20:29, 30; 2 தெ. 2:3) இந்த விசுவாச துரோகிகள், ஒரே உண்மைக் கடவுளைப் பற்றிய சத்தியங்களை மறைக்க ஆரம்பித்தார்கள். உதாரணத்துக்கு, அவர்கள் நகலெடுத்த பைபிள் பிரதிகளில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பதிலாக, “கர்த்தர்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தினார்கள். இப்படிச் செய்வதன் மூலம், மற்ற கடவுள்களுக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்வதைக் கஷ்டமாக்கியிருக்கிறார்கள். (1 கொ. 8:5) இயேசுவுக்கும் யெகோவாவுக்கும் “கர்த்தர்” என்ற ஒரே பட்டப்பெயரைப் பயன்படுத்தியதன் மூலம் யெகோவா வேறு, இயேசு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள்வதும் மக்களுக்குக் கஷ்டமாக இருந்தது. (யோவா. 17:3) இந்தக் குழப்பத்தின் விளைவு? பைபிளில் சொல்லப்படாத திரித்துவம் என்ற போதனை பரவ ஆரம்பித்தது. கடைசியில், கடவுள் புதிரானவர் என்றும், அவரைப் பற்றி நம்மால் தெரிந்துகொள்ளவே முடியாது என்றும் மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள். எப்பேர்ப்பட்ட பொய்!—அப். 17:27.

பாவ ஆசைகளைத் தூண்டுவதற்கு பொய் மதத்தை சாத்தான் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறான்? (பாரா 12) *

12. என்ன செய்யும்படி பொய் மதங்கள் மக்களைத் தூண்டியிருக்கின்றன, ரோமர் 1:28-31-ல் சொல்லியிருப்பதுபோல் என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன?

12 பாவ ஆசைகளை சாத்தான் கவர்ச்சியாகக் காட்டுகிறான். இஸ்ரவேலர்களின் காலத்தில், ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதற்கு பொய் மதத்தை சாத்தான் பயன்படுத்தினான். இன்றும் அதைத்தான் பயன்படுத்துகிறான். பொய் மதங்கள் ஒழுக்கங்கெட்ட செயல்களைப் பொறுத்துக்கொள்கின்றன. சொல்லப்போனால், ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதுபோல் மக்களை நம்பவைக்கின்றன. விளைவு? கடவுளுக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் நிறைய பேர், அவருடைய தெளிவான ஒழுக்கத் தராதரங்களை ஒதுக்கித்தள்ளியிருக்கிறார்கள். பொய் மதங்கள் ஒழுக்கக்கேட்டைத் தூண்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோமர் 1:28-31-ஐ வாசியுங்கள்.) ஓரினச்சேர்க்கை உட்பட பாலியல் முறைகேடு சம்பந்தப்பட்ட எல்லா செயல்களும் ‘முறைகேடான செயல்களில்’ அடங்குகின்றன. (ரோ. 1:24-27, 32; வெளி. 2:20) பைபிளின் தெளிவான போதனைகளின்படி நடப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது, இல்லையா?

13. சாத்தான் பயன்படுத்தும் இன்னொரு தந்திரம் என்ன?

13 மக்களுடைய இயல்பான ஆசைகளைத் தனக்குச் சாதகமாக சாத்தான் பயன்படுத்திக்கொள்கிறான். நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு சில திறமைகளைக் கற்றுக்கொள்ள விரும்புவது இயல்புதான். (1 தீ. 5:8) பெரும்பாலும், பள்ளிக்குப் போய் நன்றாகப் படிக்கும்போது நாம் அவற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் ஜாக்கிரதை! ஏனென்றால், பெரும்பாலான நாடுகளிலிருக்கிற கல்வித் திட்டங்கள் வெறுமனே திறமைகளைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்ல, மனித தத்துவங்களையும் கற்றுக்கொடுத்துவிடுகின்றன! கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேக விதையை மாணவர்களின் மனதுக்குள் விதைத்துவிடுகின்றன. பைபிளின் மீது இருக்கிற மதிப்பையும் குறைத்துவிடுகின்றன. உயிர் எப்படித் தோன்றியது என்பதை விளக்குவதற்கு, பரிணாமக் கோட்பாடுதான் அறிவுப்பூர்வமான ஒரு விளக்கமாக இருக்க முடியும் என்று சொல்கின்றன. (ரோ. 1:21-23) இப்படிப்பட்ட போதனைகள், ‘கடவுளுடைய ஞானத்துக்கு’ நேர் எதிரானவை.—1 கொ. 1:19-21; 3:18-20.

14. மனித தத்துவங்கள் எதை உற்சாகப்படுத்துகின்றன?

14 மனித தத்துவங்கள் யெகோவாவின் நீதியான தராதரங்களை ஒதுக்கித்தள்ளுகின்றன. ஏன், அவற்றை எதிர்க்கவும் செய்கின்றன. கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை வளர்க்கும்படி உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, ‘பாவ இயல்புக்குரிய செயல்களை’ செய்யும்படிதான் உற்சாகப்படுத்துகின்றன. (கலா. 5:19-23) பெருமையையும் கர்வத்தையும் இவை ஊட்டி வளர்ப்பதால், மக்கள் “சுயநலக்காரர்களாக” ஆகிவிடுகிறார்கள். (2 தீ. 3:2-4) இந்தக் குணத்துக்கும், தன்னுடைய ஊழியர்களிடமிருந்து கடவுள் எதிர்பார்க்கிற சாந்தம் மற்றும் மனத்தாழ்மை போன்ற குணங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! (2 சா. 22:28) உயர் கல்வி படிப்பதற்காக போன சில கிறிஸ்தவர்கள், கடவுளுடைய யோசனைகளுக்குப் பதிலாக உலக யோசனைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆபத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், இது எதில் போய் முடியும்? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்.

நாம் யோசிக்கும் விதத்தை மனித தத்துவங்கள் எப்படிக் கெடுத்துவிடலாம்? (பாராக்கள் 14-16) *

15-16. ஒரு சகோதரியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

15 பதினைந்து வருஷங்களுக்கும் மேல் முழு நேர ஊழியம் செய்த ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஞானஸ்நானம் எடுத்த ஒரு யெகோவாவின் சாட்சியா, உயர் கல்வி படிக்குறது எவ்வளவு ஆபத்தானதுனு நான் படிச்சிருக்கேன், அத பத்தி கேள்விப்பட்டும் இருக்கேன். இருந்தாலும், அந்த எச்சரிப்பை நான் பெருசா எடுத்துக்கல. அந்த ஆலோசனை எனக்கு பொருந்தாதுனு நினைச்சேன்.” இந்தச் சகோதரி என்ன சவாலைச் சந்தித்தார்? “என்னோட நேரம்... சக்தி... இதெல்லாம் படிக்குறதுலயே போயிடுச்சு. முன்னாடியெல்லாம் நான் யெகோவாகிட்ட நிறைய நேரம் ஜெபம் செய்வேன், ஆனா உயர் கல்வி படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் என்னால அப்படி செய்ய முடியல. மத்தவங்ககிட்ட பைபிள பத்தி பேசுறதுக்குகூட எனக்கு தெம்பு இல்லாத மாதிரி இருந்துச்சு. ரொம்ப களைப்பா இருந்ததால கூட்டங்களுக்கு நல்லா தயாரிக்க முடியல. உயர் கல்வி படிக்குறதுல ரொம்பவே மூழ்கிப்போனதால, யெகோவாகிட்ட எனக்கு இருந்த பந்தம் பாதிக்கப்பட்டத புரிஞ்சிக்கிட்டேன். முதல்ல படிப்ப நிறுத்தணுங்குறது எனக்கு புரிஞ்சுது. அத உடனடியா செஞ்சேன்” என்று அந்தச் சகோதரி சொல்கிறார்.

16 அந்தச் சகோதரியின் யோசனைகளை உயர் கல்வி எப்படி மாற்றியது? “மத்தவங்ககிட்ட, குறிப்பா சகோதர சகோதரிங்ககிட்ட, இருக்கிற குறைகள பார்க்குற ஒரு ஆளா உயர் கல்வி என்னை மாத்திடுச்சு. அவங்ககிட்ட இருந்து அளவுக்கு அதிகமா எதிர்பார்க்க ஆரம்பிச்சேன். அதுமட்டுமில்ல, யார்கூடயும் ஒட்டமா ஒதுங்கியிருந்தேன். இதையெல்லாம் நினைச்சாலே எனக்கு வெட்கமா இருக்கு! என்னோட யோசனைகள சரி செய்றதுக்கே ரொம்ப நாள் ஆயிடுச்சு. நம்மளோட பரலோக அப்பா அவரோட அமைப்பு வழியா கொடுக்குற எச்சரிப்ப தட்டிக்கழிச்சா, அது எவ்வளவு பெரிய ஆபத்துல போய் முடியுங்குறத நான் புரிஞ்சிக்கிட்டேன். என்னை பத்தி என்னைவிட யெகோவாவுக்குதான் அதிகமா தெரியும். அவர் சொல்றத ஆரம்பத்திலயே கேட்டிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!” என்று அந்தச் சகோதரி சொல்கிறார்.

17. (அ) என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற “தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும்” யாரும் உங்களை அடிமையாகப் பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவன் உங்களை ஏமாற்றுவதற்கு ஒருபோதும் இடம்கொடுக்காதீர்கள். (1 கொ. 3:18; 2 கொ. 2:11) யெகோவா உண்மையிலேயே யார் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான். யெகோவா விரும்புகிற விதத்தில் அவரை நாம் வணங்கக் கூடாது என்றும் அவன் நினைக்கிறான். ஆனால், இப்படியெல்லாம் செய்ய அவனுக்கு இடம்கொடுக்காதீர்கள். யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களின்படி வாழுங்கள். யெகோவாவின் ஆலோசனைகளை நீங்கள் தட்டிக்கழிக்க வேண்டும் என்பதற்காக அவன் தந்திரமாக முயற்சி செய்வான். ஆனால் ஏமாந்துவிடாதீர்கள்! ஒருவேளை, இந்த உலகத்தின் யோசனைகள் உங்களை ஏற்கெனவே கறைபடுத்தியிருப்பதாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால், “ஆழமாக வேரூன்றிய” யோசனைகளையும் பழக்கவழக்கங்களையும் தகர்த்தெறிவதற்கு கடவுளுடைய வார்த்தை உங்களுக்கு உதவும். இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.—2 கொ. 10:4, 5.

பாட்டு 11 யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்

^ பாரா. 5 மக்களை முட்டாள்களாக்குவதில் சாத்தான் படுகில்லாடி! தாங்கள் சுதந்திரமாக இருப்பதுபோல் மக்களை அவன் நினைக்கவைக்கிறான். ஆனால், உண்மையில் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் அவர்கள் இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அவன் பயன்படுத்தும் தந்திரங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 48 படங்களின் விளக்கம்: கானானியர்களோடு பழகும் இஸ்ரவேலர்களுக்குப் பாகாலைக் கும்பிட வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது. ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கான ஆசையும் வருகிறது.

^ பாரா. 51 படங்களின் விளக்கம்: ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் ஒரு சர்ச்சின் விளம்பரம்.

^ பாரா. 53 படங்களின் விளக்கம்: ஓர் இளம் சகோதரி உயர் கல்வி படிக்கிறார். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று பேராசிரியர் சொல்கிறார். அந்தச் சகோதரியும் மற்ற மாணவர்களும் அதை நம்புகிறார்கள். பிறகு, ராஜ்ய மன்றத்தில் சொல்லப்படும் விஷயங்களில் அந்தச் சகோதரிக்கு ஆர்வமில்லாமல் போகிறது; அவற்றில் குறை கண்டுபிடிக்கவும் ஆரம்பிக்கிறார்.