Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 25

மூப்பர்களே—கிதியோனிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

மூப்பர்களே—கிதியோனிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

“கிதியோன் . . . பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது.”—எபி. 11:32.

பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்

இந்தக் கட்டுரையில்... a

1. ஒன்று பேதுரு 5:2 சொல்வதுபோல், மூப்பர்களுக்கு என்ன முக்கியமான பொறுப்பு இருக்கிறது?

 யெகோவா தன்னுடைய உயிருக்கு உயிரான ஆடுகளைக் கவனித்துக்கொள்ளும் முக்கியமான பொறுப்பை மூப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். கடமையுணர்ச்சியுள்ள இந்தச் சகோதரர்கள் தங்கள் பொறுப்பை ரொம்ப உயர்வாக மதிக்கிறார்கள். யெகோவாவின் ஆடுகளை ‘அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற மேய்ப்பர்களாக’ இருப்பதற்கு அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். (எரே. 23:4; 1 பேதுரு 5:2-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட மேய்ப்பர்கள் நம் சபையில் இருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்!

2. சில மூப்பர்களுக்கு எப்படிப்பட்ட சவால்கள் வரலாம்?

2 மூப்பர்கள் தங்களுடைய பொறுப்புகளைச் செய்யும்போது நிறைய சவால்களைச் சந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு, சபையைப் பார்த்துக்கொள்ள அவர்கள் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் டோனி என்ற மூப்பர், எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொள்ளாமல் அடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்த சமயத்தில் கூட்டங்களையும் ஊழியத்தையும் ஏற்பாடு செய்ய நான் எக்கச்சக்கமான வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டேன். ஆனால், நான் எவ்வளவு செய்தாலும் இன்னும் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. அதனால் போகப்போக, பைபிள் வாசிப்பு, தனிப்பட்ட படிப்பு, ஜெபம் போன்ற விஷயங்கள் அடிவாங்க ஆரம்பித்துவிட்டன” என்று சொல்கிறார். காஸாவோவில் இருக்கும் ஈலிர் என்ற மூப்பருக்கு வேறொரு சவால் வந்தது. போர் நடக்கும் பகுதியில் அவர் இருந்தபோது, அமைப்பு கொடுத்த வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவது அவருக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆபத்தான பகுதியில் இருந்த சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யச் சொல்லி கிளை அலுவலகம் என்னிடம் சொன்னபோது அது என் தைரியத்துக்கு வந்த ஒரு சோதனை மாதிரி இருந்தது. ஏனென்றால், எனக்குப் பயமாக இருந்தது. அமைப்பு சொல்வதுபோல் செய்வது நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரியும் தோன்றியது.” ஆசியாவில் மிஷனரியாகச் சேவை செய்யும் டிம் என்ற சகோதரருக்கு, ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதே கஷ்டமாக இருந்தது. “சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய இதற்குமேல் என் உடம்பிலும் மனதிலும் தெம்பு இல்லை என்று சிலசமயம் எனக்குத் தோன்றும்” என்று அவர் சொல்கிறார். இப்படிப்பட்ட சவால்களைச் சந்திக்கும் மூப்பர்களுக்கு எது உதவி செய்யும்?

3. நியாயாதிபதியாக இருந்த கிதியோனிடமிருந்து நாம் எல்லாருமே என்ன கற்றுக்கொள்ளலாம்?

3 நியாயாதிபதியாக இருந்த கிதியோனிடமிருந்து மூப்பர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். (எபி. 6:12; 11:32) அவர் கடவுளுடைய மக்களைப் பாதுகாப்பவராக மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு நல்ல மேய்ப்பராகவும் இருந்தார். (நியா. 2:16; 1 நா. 17:6) யெகோவா அன்று கிதியோனை நியமித்ததைப் போலவே இன்று மூப்பர்களை நியமித்திருக்கிறார்; படுமோசமான இந்தக் காலத்தில் தன் மக்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். (அப். 20:28; 2 தீ. 3:1) கிதியோனிடமிருந்து அடக்கத்தையும், மனத்தாழ்மையையும், கீழ்ப்படிதலையும், சகிப்புத்தன்மையையும் மூப்பர்களால் கற்றுக்கொள்ள முடியும். மூப்பர்களாக இல்லாதவர்களும்கூட, கிதியோனின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். மூப்பர்களுக்கு இன்னும் நன்றியோடு இருக்கவும்... கடினமாக உழைக்கும் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்... கற்றுக்கொள்ளலாம்.—எபி. 13:17.

உங்கள் அடக்கத்துக்கும் மனத்தாழ்மைக்கும் சோதனை வரும்போது

4. கிதியோன் எப்படி அடக்கத்தோடும் மனத்தாழ்மையோடும் நடந்துகொண்டார்?

4 கிதியோன் அடக்கத்தோடும் மனத்தாழ்மையோடும் நடந்துகொண்டார். b ஒருசமயம், ஒரு தேவதூதர் கிதியோனைச் சந்தித்தார். பலம்படைத்த மீதியானியர்களிடமிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவதற்காக யெகோவா கிதியோனைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அவர் சொன்னார். அப்போது கிதியோன் அந்தத் தேவதூதரிடம், “மனாசே கோத்திரத்திலேயே என்னுடைய குடும்பம்தான் ரொம்பச் சாதாரண குடும்பம். என்னுடைய அப்பாவின் குடும்பத்திலேயே நான்தான் ரொம்ப அற்பமானவன்” என்று மனத்தாழ்மையோடு சொன்னார். (நியா. 6:15) அந்தப் பொறுப்பைச் செய்ய தனக்குத் தகுதி இல்லை என்று கிதியோன் நினைத்தார். ஆனால், அவரால் அதைச் செய்ய முடியும் என்று யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது. யெகோவாவின் உதவியோடு கிதியோன் அந்தப் பொறுப்பை நல்லபடியாகச் செய்து முடித்தார்.

5. அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொள்வது மூப்பர்களுக்கு எப்போது கஷ்டமாக இருக்கலாம்?

5 எதைச் செய்தாலும் அடக்கத்தோடும் மனத்தாழ்மையோடும் செய்யத்தான் மூப்பர்கள் ஆசைப்படுகிறார்கள். (மீ. 6:8; அப். 20:18, 19) தங்கள் திறமைகளையோ, தாங்கள் செய்த விஷயங்களையோ பற்றிப் பேசி அவர்கள் பெருமையடிப்பது இல்லை. சில விஷயங்களைச் சரியாகச் செய்யாததால் தாங்கள் எதற்குமே உதவாதவர்கள் என்று அவர்கள் யோசிப்பதும் இல்லை. ஆனால் சிலசமயம், அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொள்வது அவர்களுக்குச் சவாலாக இருக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு மூப்பர் நிறைய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பிற்பாடு அதைச் செய்யத் திணறலாம். அல்லது, அவர் ஒரு நியமிப்பைச் செய்த விதத்தைப் பார்த்து மற்றவர்கள் குறை சொல்லலாம். இல்லையென்றால், அவர் ஒரு நியமிப்பைச் செய்த விதத்தைப் பார்த்து எல்லாரும் புகழலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சரியாக நடந்துகொள்ள கிதியோனின் உதாரணம் எப்படி மூப்பர்களுக்கு உதவி செய்யும்?

கிதியோனைப் போலவே, அடக்கமாக இருக்கும் ஒரு மூப்பர் வீல்ஸ்டாண்டு ஊழியம் மாதிரியான வேலைகளை ஏற்பாடு செய்வதற்கு மற்றவர்களிடம் உதவி கேட்கத் தயாராக இருப்பார் (பாரா 6)

6. அடக்கமாக நடந்துகொள்வதைப் பற்றி கிதியோனிடமிருந்து மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

6 உதவி கேளுங்கள். அடக்கமாக இருக்கும் ஒருவர் தன் வரம்புகளை நன்றாகத் தெரிந்துவைத்திருப்பார். கிதியோன் அடக்கமாக இருந்ததால் தேவைப்பட்டபோது மற்றவர்களிடம் உதவி கேட்க அவர் தயங்கவில்லை. (நியா. 6:27, 35; 7:24) ஒரு நல்ல மூப்பர் அதே போலத்தான் நடந்துகொள்வார். நாம் ஏற்கெனவே பார்த்த டோனி இப்படிச் சொல்கிறார்: “என்னால் முடிகிறதோ இல்லையோ நிறைய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொள்வேன். ஏனென்றால், நான் வளர்ந்த விதமே அப்படித்தான். அதனால், குடும்ப வழிபாட்டில் நானும் என் மனைவியும் சேர்ந்து அடக்கத்தைப் பற்றிப் படிக்கலாம் என்று முடிவு செய்தோம். இந்தக் குணத்தைக் காட்டும் விஷயத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதைப் பற்றி அவளுடைய கருத்தைக் கேட்டேன். அதுமட்டுமல்ல, jw.org-ல் இருக்கிற இயேசுவைப் போல் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுங்கள், நம்புங்கள், பொறுப்புகளைக் கொடுங்கள் என்ற வீடியோவைப் பார்த்து இன்னும் நிறைய கற்றுக்கொண்டேன்.” இதையெல்லாம் செய்ததால், பொறுப்புகளை நன்றாகச் செய்ய மற்றவர்களுடைய உதவியைக் கேட்க டோனி கற்றுக்கொண்டார். அதனால் என்ன பலன் கிடைத்தது? அவரே இப்படிச் சொல்கிறார்: “சபையை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது.”

7. மற்றவர்கள் குறை சொல்லும்போது மூப்பர்கள் எப்படி கிதியோனைப் போலவே நடந்துகொள்ளலாம்? (யாக்கோபு 3:13)

7 மற்றவர்கள் குறை சொன்னாலும் பொறுமையாகப் பதில் சொல்லுங்கள். மற்றவர்கள் குறை சொல்லும்போது அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொள்வது மூப்பர்களுக்கு இன்னொரு சவாலாக இருக்கலாம். இந்த விஷயத்திலும், கிதியோனின் உதாரணம் உதவி செய்யும். அவரும் தவறு செய்கிறவர்தான் என்பதை அவர் புரிந்துவைத்திருந்தார். அதனால்தான், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தன்னைக் குறை சொன்னபோது அவர் எரிந்துவிழாமல் நிதானமாகப் பதில் சொன்னார். (நியா. 8:1-3) அவர்கள் எதற்காகக் குறை சொல்கிறார்கள் என்பதைப் பொறுமையாகக் கேட்பதன் மூலம் மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். இப்படி, பெரிதாக வெடிக்கவிருந்த ஒரு பிரச்சினையை அவர் சாதுரியமாகச் சமாளித்துவிட்டார். இந்த விஷயத்தில், ஒரு நல்ல மூப்பர் கிதியோனைப் போலவே நடந்துகொள்வார். மற்றவர்கள் குறை சொல்லும்போது, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கவனமாகக் கேட்பார்... அவர்களிடம் பொறுமையாகப் பதில் சொல்வார். (யாக்கோபு 3:13-ஐ வாசியுங்கள்.) இப்படி, சபை சமாதானமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.

8. மற்றவர்கள் புகழும்போது மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ளலாம்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

8 எல்லா புகழையும் யெகோவாவுக்கே கொடுங்கள். மீதியானியர்களை ஜெயித்ததற்காக எல்லாரும் கிதியோனைப் புகழ்ந்தபோது, மக்களின் கவனத்தை யெகோவாவின் பக்கம் கிதியோன் திருப்பினார். (நியா. 8:22, 23) மூப்பர்கள் எப்படி கிதியோனைப் போலவே நடந்துகொள்ளலாம்? அவர்கள் என்ன செய்தாலும் அதற்கான புகழ் யெகோவாவுக்குப் போய்ச் சேரும்படி அவர்கள் பார்த்துக்கொள்ளலாம். (1 கொ. 4:6, 7) உதாரணத்துக்கு, நன்றாகக் கற்றுக்கொடுக்கும் திறன் இருப்பதற்காக ஒரு மூப்பரை மற்றவர்கள் பாராட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சமயத்தில் மற்றவர்களுடைய கவனத்தை அவர் கடவுளுடைய வார்த்தையிடம் திருப்பலாம் அல்லது கடவுளுடைய அமைப்பு தரும் பயிற்சிக்குத் திருப்பலாம். மூப்பர்கள், தாங்கள் சொல்லித்தரும் விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறதா அல்லது தங்களுக்குப் புகழ் சேர்க்கிறதா என்று அவ்வப்போது யோசித்துப் பார்க்க வேண்டும். திமொத்தி என்ற மூப்பரின் உதாரணத்தைப் பார்க்கலாம். மூப்பரான புதிதில் பொதுப் பேச்சு கொடுப்பது என்றாலே அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “என் பேச்சின் அறிமுகமும் நான் பயன்படுத்தும் உதாரணங்களும் ரொம்பப் பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தகவல்களைச் சொல்வேன். அதை நிறைய பேர் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். ஆனால், யெகோவாவுக்கோ பைபிளுக்கோ புகழ் சேருவதற்குப் பதிலாக எல்லாருடைய கவனமும் என் பக்கம் திரும்பிவிடும்.” இப்படியெல்லாம் நடக்காமல் இருப்பதற்கு, கற்றுக்கொடுக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று திமொத்தி போகப்போகப் புரிந்துகொண்டார். (நீதி. 27:21) அவர் அதை மாற்றிக்கொண்டதால் என்ன நன்மை கிடைத்தது? அவரே சொல்கிறார்: “ஒரு பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, ஒரு சோதனையைச் சகித்துக்கொள்வதற்கு, அல்லது யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப்போவதற்கு என் பேச்சு எப்படியெல்லாம் உதவி செய்தது என்று நிறைய பேர் என்னிடம் வந்து சொல்கிறார்கள். பல வருஷங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்த புகழையும் பாராட்டையும்விட இந்த மாதிரி மற்றவர்கள் சொல்வதுதான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.”

உங்கள் கீழ்ப்படிதலுக்கோ தைரியத்துக்கோ சோதனை வரும்போது

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து கிதியோன் தன் படையின் எண்ணிக்கையைக் குறைத்தார்; உஷாராக இருந்த 300 வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்தார் (பாரா 9)

9. கிதியோனின் கீழ்ப்படிதலுக்கும் தைரியத்துக்கும் எப்படிச் சோதனை வந்தது? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

9 கிதியோன் நியாயாதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு அவருடைய கீழ்ப்படிதலுக்கும் தைரியத்துக்கும் சோதனை வந்தது. பாகாலுக்காகத் தன் அப்பா கட்டிய பலிபீடத்தை இடிக்கும் ஆபத்தான வேலையை கிதியோன் செய்ய வேண்டியிருந்தது. (நியா. 6:25, 26) அதன் பிறகு, கிதியோன் ஒரு படையைத் திரட்டியபோது, அந்தப் படை வீரர்களுடைய எண்ணிக்கையை யெகோவா குறைக்கச் சொன்னார். அதுவும், இரண்டு தடவை! (நியா. 7:2-7) அதுமட்டுமல்ல, நட்ட நடு ராத்திரியில் எதிரிகளுடைய முகாமைத் தாக்கச் சொன்னார்.—நியா. 7:9-11.

10. கீழ்ப்படிதலைக் காட்டுவது ஒரு மூப்பருக்கு ஏன் சிலசமயம் சவாலாக இருக்கலாம்?

10 மூப்பர்கள் ‘கீழ்ப்படியத் தயாராக’ இருக்க வேண்டும். (யாக். 3:17) கீழ்ப்படிதலைக் காட்டும் ஒரு மூப்பர் பைபிள் சொல்கிறபடியும், கடவுளுடைய அமைப்பு தரும் வழிநடத்துதல்படியும் நடந்துகொள்வார். இப்படி, மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருப்பார். ஆனாலும், சில சூழ்நிலைகளில் கீழ்ப்படிதலைக் காட்டுவது அவருக்குச் சவாலாக இருக்கலாம். உதாரணத்துக்கு, அமைப்பிடமிருந்து நிறைய வழிநடத்துதல் வரலாம் அல்லது அமைப்பு கொடுக்கும் வழிநடத்துதல் சட்டென்று மாறிவிடலாம். அதையெல்லாம் செய்ய அவர் கஷ்டப்படலாம். மற்ற சமயங்களில், அமைப்பு தரும் வழிநடத்துதல் அவ்வளவு சரியில்லை என்று அவருக்குத் தோன்றலாம் அல்லது அது நடைமுறைக்கு ஒத்துவராது என்று அவர் நினைக்கலாம். ஒருவேளை, அமைப்பு சொல்லும் ஏதோவொரு வேலையைச் செய்வதால் ஜெயிலுக்குப் போகும் ஆபத்துகூட அவருக்கு இருக்கலாம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் மூப்பர்கள் எப்படி கிதியோனைப் போலவே கீழ்ப்படிதலைக் காட்டலாம்?

11. மூப்பர்கள் எப்படிக் கீழ்ப்படிந்து நடக்கலாம்?

11 கொடுக்கப்படும் அறிவுரைகளைக் கவனமாகக் கேட்டு அதன்படி செய்யுங்கள். கிதியோனுக்கு யெகோவா சில அறிவுரைகளைக் கொடுத்தார். தன் அப்பா கட்டிய பலிபீடத்தை அவர் எப்படி இடித்துப்போட வேண்டும்... எங்கே ஒரு புதிய பலிபீடத்தைக் கட்ட வேண்டும்... அதில் என்ன மிருகங்களைப் பலி கொடுக்க வேண்டும்... என்றெல்லாம் யெகோவா சொன்னார். கிதியோன் கேள்வி கேட்காமல் அப்படியே செய்தார். இன்று கடிதங்கள் மூலமாகவும் அறிவிப்புகள் மூலமாகவும் வழிமுறைகள் மூலமாகவும் யெகோவாவின் அமைப்பு மூப்பர்களுக்கு நிறைய அறிவுரைகளைத் தருகிறார்கள். சபையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் யெகோவாவிடம் நெருங்கியிருப்பதற்கும் இவையெல்லாம் உதவி செய்கின்றன. அமைப்பு கொடுக்கும் அறிவுரைகளுக்கு மூப்பர்கள் அப்படியே கீழ்ப்படிவதால் அவர்களை நாம் ரொம்ப நேசிக்கிறோம். அதுமட்டுமல்ல, முழு சபையும் நன்மை அடைகிறது.—சங். 119:112.

12. ஒரு விஷயத்தை மாற்றிச் செய்யச் சொல்லி கடவுளுடைய அமைப்பு மூப்பர்களிடம் சொல்லும்போது அவர்கள் எப்படி எபிரெயர் 13:17-ன்படி நடந்துகொள்ளலாம்?

12 உங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருங்கள். கிதியோனின் படையில் இருந்த கிட்டத்தட்ட எல்லாரையுமே வீட்டுக்கு அனுப்பச் சொல்லி யெகோவா சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். (நியா. 7:8) ஒருவேளை கிதியோன், ‘இந்த மாற்றம் அவசியம்தானா? இது ஒத்துவருமா?’ என்றெல்லாம் யோசித்திருக்கலாம். இருந்தாலும், யெகோவா சொன்னது போலவே கிதியோன் செய்தார். இன்று யெகோவாவின் அமைப்பு ஒரு விஷயத்தை மாற்றிச் செய்யச் சொன்னால் மூப்பர்கள் அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம் கிதியோனைப் போலவே நடந்துகொள்கிறார்கள். (எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, 2014-ல் ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்டுவதற்காகப் பணம் செலவு செய்யும் விஷயத்தில் ஆளும் குழு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். (2 கொ. 8:12-14) முன்பெல்லாம் ராஜ்ய மன்றங்களைக் கட்ட அமைப்பு சபைகளுக்குக் கடன் கொடுக்கும். சபைகள் அந்தக் கடனை அமைப்புக்குத் திருப்பிக் கட்டுவார்கள். ஆனால், இப்போது அது மாறிவிட்டது. சில சபைகளால் குறைவான நன்கொடைதான் கொடுக்க முடியும் என்றாலும், உலகம் முழுவதும் உள்ள சபைகள் தரும் நன்கொடைகளை வைத்து தேவைப்படும் இடங்களில் ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் அமைப்பு கட்டுகிறது. இந்த மாற்றத்தைப் பற்றி ஹோசே கேள்விப்பட்டபோது, இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ‘என்னைக் கேட்டால், ஒரேவொரு ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதுகூட சந்தேகம்தான், இங்கெல்லாம் இது ஒத்துவராது’ என்று அவர் யோசித்தார். ஆனால், அமைப்பு சொல்வதுபோல் செய்ய அவருக்கு எது உதவியது? அவரே சொல்கிறார்: “யெகோவாமேல் நம்பிக்கை வைக்க வேண்டுமென்று நீதிமொழிகள் 3:5, 6 எனக்கு ஞாபகப்படுத்தியது. அமைப்பு கொண்டுவந்த மாற்றத்தால் உண்மையில் நிறைய பலன்கள்தான் கிடைத்திருக்கின்றன. இந்த மாற்றத்தால், நிறைய ராஜ்ய மன்றங்களை நம்மால் கட்ட முடிகிறது. அதைவிட முக்கியமாக, எல்லா இடங்களிலும் நன்கொடைகளைச் சமமாகப் பயன்படுத்த முடிகிறது.”

நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் இடத்தில்கூட நம்மால் தைரியமாக சாட்சி கொடுக்க முடியும் (பாரா 13)

13. (அ) எந்த விஷயத்தில் கிதியோன் உறுதியாக இருந்தார்? (ஆ) மூப்பர்கள் எப்படி கிதியோனைப் போலவே நடந்துகொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

13 யெகோவாவின் விருப்பத்தைத் தைரியமாகச் செய்யுங்கள். கிதியோன் தன் உயிரையே பணயம் வைத்து ஒரு வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. (நியா. 9:17) அவருக்குப் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அதைச் செய்து முடித்தார். யெகோவா தன் ஜனங்களைப் பாதுகாக்கக் கண்டிப்பாக உதவுவார் என்று கிதியோன் நம்பினார். ஏனென்றால், அப்படி உதவுவதாக யெகோவா அவருக்கு உறுதி அளித்திருந்தார். நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இருக்கும் மூப்பர்கள் கிதியோனைப் போலவே தைரியமாக நடந்துகொள்கிறார்கள். எப்படி? அவர்கள் கைது செய்யப்படலாம்... விசாரிக்கப்படலாம்... வேலையை இழக்கலாம்... அல்லது தாக்கப்படலாம்... என்றெல்லாம் தெரிந்திருந்தும், கூட்டங்களையும் ஊழியத்தையும் தைரியமாக முன்நின்று வழிநடத்துகிறார்கள். c மிகுந்த உபத்திரவத்தின்போது மூப்பர்களுக்கு இன்னும் அதிக தைரியம் தேவைப்படும். ஏன்? ஆலங்கட்டிபோல் இருக்கும் கடுமையான நியாயத்தீர்ப்பு செய்தியை நாம் எப்படிச் சொல்ல வேண்டும்... மாகோகு தேசத்தின் கோகுவுடைய தாக்குதலிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்... என்பதைப் பற்றியெல்லாம் அமைப்பு அறிவுரைகள் கொடுக்கலாம். அதன்படி செய்வது ஒருவேளை ஆபத்தாக இருக்கலாம். ஆனாலும், அதற்கெல்லாம் கீழ்ப்படிய வேண்டுமென்றால் மூப்பர்களுக்குத் தைரியம் தேவைப்படும்.—எசே. 38:18; வெளி. 16:21.

உங்கள் சகிப்புத்தன்மைக்குச் சோதனை வரும்போது

14. கிதியோனின் சகிப்புத்தன்மைக்கு என்ன சோதனை வந்தது?

14 ஒரு நியாயாதிபதியாக கிதியோன் கடினமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. ராத்திரியில் மீதியானியர்களை கிதியோன் தாக்கியபோது மீதியானியர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலிருந்து யோர்தான் ஆறுவரை கிதியோன் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார். (நியா. 7:22) அந்தப் பகுதியைச் சுற்றி ஒரே புதர்க்காடாக இருந்திருக்கலாம். கிதியோன் யோர்தானிலேயே நின்றுவிட்டாரா? இல்லை! களைப்பாக இருந்தபோதும், அவரும் அவரோடு இருந்த 300 பேரும் யோர்தான் ஆற்றைக் கடந்து, மீதியானியர்களைத் துரத்திக்கொண்டு போய்ப் பிடித்தார்கள். கடைசியில், அவர்களைத் தோற்கடித்தார்கள்.—நியா. 8:4-12.

15. சகித்திருப்பது ஒரு மூப்பருக்கு சிலசமயம் ஏன் சவாலாக இருக்கலாம்?

15 மூப்பர்கள் தங்களுடைய குடும்பத்தையும் சரி, சபையையும் சரி, கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த எல்லா பொறுப்புகளையும் செய்து செய்து சிலசமயம் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் ரொம்ப சோர்ந்துபோய்விடலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மூப்பர்கள் எப்படி கிதியோனைப் போல நடந்துகொள்ளலாம்?

அன்பான மூப்பர்கள் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களைப் பலப்படுத்துகிறார்கள் (பாராக்கள் 16-17)

16-17. சகித்திருக்க கிதியோனுக்கு எது உதவி செய்தது, மூப்பர்கள் எதில் நம்பிக்கையாக இருக்கலாம்? (ஏசாயா 40:28-31) (படத்தையும் பாருங்கள்.)

16 யெகோவா உங்களுக்குப் பலம் கொடுப்பார் என்று நம்புங்கள். இந்த நம்பிக்கைதான் கிதியோனுக்கும் இருந்தது. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. (நியா. 6:14, 34) ஒருசமயம், கிதியோனும் அவருடைய ஆட்களும் இரண்டு மீதியானிய ராஜாக்களைத் துரத்திக்கொண்டே ஓடினார்கள். அந்த ராஜாக்கள் ஒருவேளை ஒட்டகங்களில் வேகமாகப் போய்க்கொண்டு இருந்திருக்கலாம். (நியா. 8:12, 21) ஆனாலும், யெகோவாவின் உதவி இருந்ததால் கிதியோனும் அவருடைய ஆட்களும் அந்த இரண்டு ராஜாக்களையும் பிடித்தார்கள், போரில் ஜெயித்தார்கள். அதேபோல், இன்று மூப்பர்களும் யெகோவாமேல் நம்பிக்கை வைக்கலாம். ஏனென்றால், யெகோவா “சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.” அவர்களுக்குப் பலம் தேவைப்படும்போது அவர் நிச்சயம் அதைக் கொடுப்பார்.ஏசாயா 40:28-31-ஐ வாசியுங்கள்.

17 மாத்யூ என்ற சகோதரரின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். மருத்துவத் தொடர்பு ஆலோசனைக் குழுவில் அவர் சேவை செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலையை சகிப்புத்தன்மையோடு தொடர்ந்து செய்ய எது அவருக்கு உதவுகிறது? அவரே சொல்கிறார்: “பிலிப்பியர் 4:13-ல் இருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நானே அனுபவித்திருக்கிறேன். நிறைய சமயம் நான் சோர்வாக இருக்கும்போது... ‘இதற்குமேல் முடியாது’ என்று யோசிக்கும்போது... யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்வேன். அவரிடம், ‘எனக்குத் தேவையான தெம்பையும் மன பலத்தையும் கொடுங்கள், அப்போதுதான் என் சகோதரர்களுக்கு என்னால் உதவி செய்ய முடியும்’ என்று கெஞ்சுவேன். அப்படிப்பட்ட சமயங்களில் யெகோவாவின் சக்தி எனக்குப் பலம் கொடுப்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் என்னுடைய பொறுப்புகளை என்னால் தொடர்ந்து செய்ய முடிகிறது.” கிதியோனைப் போலவே இன்று இருக்கும் மூப்பர்களும் யெகோவாவின் ஆடுகளைக் கவனித்துக்கொள்ள கடினமாக உழைக்கும்போது சவால்களைச் சந்திக்கலாம். அவர்கள் தங்களுடைய வரம்புகளைப் புரிந்துகொண்டு, நிறைய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது உண்மைதான். இருந்தாலும், யெகோவாவிடம் உதவி கேட்டால், சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை அவர் கொடுப்பார் என்பதில் அவர்கள் நம்பிக்கையாக இருக்கலாம்.—சங். 116:1; பிலி. 2:13.

18. இதுவரை நாம் பார்த்தபடி, மூப்பர்கள் எப்படி கிதியோனைப் போல நடந்துகொள்ளலாம்?

18 மூப்பர்கள் கிதியோனிடமிருந்து எவ்வளவு நல்ல நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது, இல்லையா? அவர்கள் எவ்வளவு வேலைகளை இழுத்துப்போட்டுக்கொள்கிறார்கள் என்ற விஷயத்திலும் சரி, மற்றவர்கள் அவர்களைக் குறை சொல்லும்போதும் சரி, புகழும்போதும் சரி, அவர்கள் அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, அவர்கள் கீழ்ப்படிதலையும் தைரியத்தையும் காட்ட வேண்டும். என்னதான் சவால்கள் வந்தாலும், யெகோவாவினால் அவர்களுக்குப் பலம் கொடுக்க முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்ப வேண்டும். கடினமாக உழைக்கும் இப்படிப்பட்ட மேய்ப்பர்களைப் பார்த்து நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். ‘அந்தச் சகோதரர்களை உயர்வாக மதிக்கிறோம்.’—பிலி. 2:29.

பாட்டு 120 தாழ்மையுள்ள நம் ராஜா!

a யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் கிதியோனைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்திலேயே அது ரொம்ப கஷ்டமான ஒரு காலப்பகுதி. இருந்தாலும், யெகோவா கொடுத்த வேலையை கிதியோன் கிட்டத்தட்ட 40 வருஷங்களாக உண்மையோடு செய்து வந்தார். அவருக்கு நிறைய சவால்கள் வந்தன. இந்தக் கட்டுரையில், மூப்பர்களுக்குச் சவால்கள் வரும்போது அவர்கள் எப்படி கிதியோனைப் போல நடந்துகொள்ளலாம் என்று பார்ப்போம்.

b அடக்கத்துக்கும் மனத்தாழ்மைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நாம் அடக்கமாக இருந்தால், நம்மைப் பற்றி அளவுக்கு அதிகமாக யோசிக்க மாட்டோம், நம் வரம்புகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். நாம் மனத்தாழ்மையாக இருந்தால், மற்றவர்களை மதிப்போம், அவர்களை நம்மைவிட உயர்வாகப் பார்ப்போம். (பிலி. 2:3) பொதுவாக, அடக்கமாக இருக்கும் ஒருவர் மனத்தாழ்மையாகவும் நடந்துகொள்வார்.

c ஜூலை 2019 காவற்கோபுரத்தில் வெளியான, “தடையுத்தரவின் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவை வணங்குங்கள்” என்ற கட்டுரையில் பக். 10-11, பாரா. 10-13-ஐப் பாருங்கள்.