Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவாவின் சேவையில் பாடங்களும் எதிர்பாராத சந்தோஷங்களும்

யெகோவாவின் சேவையில் பாடங்களும் எதிர்பாராத சந்தோஷங்களும்

நான் சின்னப் பையனாக இருந்தபோது, வானத்தில் ஏரோபிளேன் பறப்பதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் வேறொரு நாட்டுக்குப் போக வேண்டுமென்று ஆசையாக இருக்கும். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தோன்றும்.

இரண்டாவது உலகப் போர் சமயத்தில், என் அப்பா அம்மா எஸ்டோனியாவிலிருந்து ஜெர்மனிக்குக் குடிமாறிப் போனார்கள். அங்குதான் நான் பிறந்தேன். அதன் பிறகு, கனடாவுக்குக் குடிமாறிப் போனோம். அங்கே ஒட்டாவாவுக்குப் பக்கத்தில், ஒரு சின்னக் கட்டிடத்தில்தான் தங்கினோம். அங்கு ஏற்கெனவே கோழிகளின் பட்டாளம் இருந்தது. நாங்கள் ரொம்ப ஏழைகள். ஆனாலும், காலையில் சாப்பிட எப்போதும் முட்டைகள் இருந்தன.

ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ என் அம்மாவுக்கு வாசித்துக் காட்டினார்கள். அதைக் கேட்டபோது என் அம்மாவுக்கு சந்தோஷத்தில் அழுகையே வந்துவிட்டது. அதன் பிறகு, என் அப்பாவும் அம்மாவும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். சீக்கிரத்திலேயே, ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேறினார்கள்.

என் அப்பா அம்மாவுக்கு அந்தளவு இங்லிஷ் தெரியாது, ஆனாலும் ரொம்ப வைராக்கியமாக யெகோவாவுக்குச் சேவை செய்தார்கள். உதாரணத்துக்கு, என் அப்பா ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் என்னையும் என் தங்கை சில்வியாவையும் ஊழியத்துக்குக் கூட்டிக்கொண்டு போவார். இத்தனைக்கும், நிக்கெல் உலோகத்தை உருக்கும் ஆலையில் ராத்திரி முழுக்க வேலை செய்துவிட்டு வந்திருப்பார். ஒவ்வொரு வாரமும் நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து காவற்கோபுரத்தை படித்தோம். என் அப்பா அம்மாதான் யெகோவாமேல் எனக்கு அன்பை ஊட்டி வளர்த்தார்கள். அதனால் 1956-ல், பத்து வயதில் ஞானஸ்நானம் எடுத்தேன். யெகோவாமேல் அவர்கள் வைத்திருந்த அன்புதான், எனக்கு ஒரு உற்சாக டானிக்காக இருந்திருக்கிறது.

ஸ்கூல் படிப்பை முடித்த பிறகு, யெகோவாவின் சேவையில் எனக்குக் கொஞ்சம் ஆர்வம் குறைந்துவிட்டது. ‘நான் பயனியராக ஆகிவிட்டால் கைநிறைய சம்பாதிக்க முடியாதே... அப்புறம் ஏரோபிளேனில் உலகத்தைச் சுற்றிவர முடியாதே’ என்று யோசித்தேன். அதன் பிறகு, உள்ளூர் ரேடியோ ஸ்டேஷனில் பாட்டு போடும் வேலை எனக்குக் கிடைத்தது. அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், சாயங்காலங்களில்கூட வேலை பார்க்க வேண்டியிருந்தது. அதனால், கூட்டங்களுக்குப் போக முடியவில்லை. அதோடு, கடவுள் பக்தியே இல்லாத ஆட்களோடுதான் நிறைய நேரம் செலவிட வேண்டியிருந்தது. கடைசியில், என் மனசாட்சி உறுத்த ஆரம்பித்ததால், மாற்றங்கள் செய்ய முடிவு செய்தேன்.

ஒன்டாரியோவில் இருக்கும் ஆஷவாவுக்கு நான் குடிமாறிப்போனேன். அங்கே ரே நார்மனையும், அவருடைய தங்கை லெஸ்லியையும், இன்னும் சில பயனியர்களையும் சந்தித்தேன். அவர்கள் என்மேல் அன்பும் அக்கறையும் காட்டினார்கள். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள் என்பதைப் பார்த்தபோது, என் குறிக்கோள்களை மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்கச் சொல்லி அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். அதனால், செப்டம்பர் 1966-ல் நான் ஒரு பயனியராக ஆனேன். என் வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், நான் எதிர்பார்க்காத பெரிய மாற்றங்கள் எனக்காகக் காத்திருந்தன.

யெகோவா ஒரு நியமிப்பைக் கொடுத்தால் அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்

ஸ்கூல் படிப்பை முடிப்பதற்கு முன்பே, கனடாவில் டோரான்டோவில் இருக்கும் பெத்தேலில் சேவை செய்ய நான் அப்ளிகேஷன் போட்டிருந்தேன். அதன் பிறகு நான் பயனியராக இருந்தபோது, நான்கு வருஷங்கள் பெத்தேலில் சேவை செய்வதற்காக என்னைக் கூப்பிட்டார்கள். ஆனால், லெஸ்லியை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், பெத்தேலுக்குப் போய்விட்டால் அவளைப் பார்க்கவே முடியாதோ என்று பயந்தேன். யெகோவாவிடம் ரொம்ப உருக்கமாக, நிறைய நேரம் ஜெபம் செய்த பிறகு, பெத்தேலுக்குப் போக முடிவு செய்தேன். சோகத்தோடு லெஸ்லியைவிட்டுக் கிளம்பினேன்.

பெத்தேலில் நான் லாண்டரியில் வேலை செய்தேன். பிறகு, ஒரு செக்ரெட்டரியாகவும் சேவை செய்தேன். அந்தச் சமயத்தில், கியுபெக்கில் இருக்கும் கேட்டிநியூவில் விசேஷப் பயனியராகச் சேவை செய்யும் நியமிப்பு லெஸ்லிக்குக் கிடைத்தது. ‘அவள் என்ன செய்கிறாளோ... பெத்தேலுக்கு நான் வந்தது சரிதானா...’ என்றெல்லாம் அடிக்கடி யோசித்தேன். அதன் பிறகு, கனவிலும் நான் நினைத்துப் பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது. லெஸ்லியின் அண்ணன் ரே பெத்தேலில் சேவை செய்வதற்காக வந்தார். அதுவும், என் ரூமிலேயே தங்கினார்! மறுபடியும் லெஸ்லியோடு பேசிப் பழக வாய்ப்பு கிடைத்தது. நான்கு வருஷ பெத்தேல் சேவையின் கடைசி நாளில் (பிப்ரவரி 27, 1971) நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்.

1975-ல் வட்டார சேவையை ஆரம்பித்தபோது

கியுபெக்கில் பிரெஞ்சு மொழி சபைக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். சில வருஷங்களுக்குப் பிறகு, வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்ய எனக்கு அழைப்பு வந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம்! ஏனென்றால், அப்போது எனக்கு 28 வயதுதான். வட்டாரக் கண்காணியாக ஆவதற்கான வயதும் அனுபவமும் எனக்கு இல்லை என்று தோன்றியது. ஆனால், எரேமியா 1:7, 8 எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. அதேசமயத்தில், லெஸ்லி சில கார் விபத்துகளில் சிக்கியிருந்தாள், ராத்திரி தூங்குவதும் அவளுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதனால், வட்டார சேவையை எப்படி செய்யப்போகிறோமோ என்று யோசித்தோம். ஆனாலும், “யெகோவா ஒரு நியமிப்பைக் கொடுத்தால் அதை நாம் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?” என்று அவள் சொன்னாள். கடைசியில், நாங்கள் அந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டோம். 17 வருஷங்களாக அதைச் சந்தோஷமாகச் செய்தோம்.

வட்டார ஊழியத்தில் நான் ரொம்ப பிஸியாக இருந்ததால், லெஸ்லியோடு சேர்ந்து நிறைய நேரம் செலவு செய்ய முடியவில்லை. அதனால், இன்னொரு பாடத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு திங்கள்கிழமை காலையில், யாரோ எங்கள் வீட்டு பெல்லை அடித்தார்கள். வெளியில் போய்ப் பார்த்தபோது யாருமே இல்லை. ஆனால், பிக்னிக்குக்குக் கொண்டுபோகும் ஒரு கூடை மட்டும் இருந்தது. அதில் ஒரு டேபிள்-க்ளாத், பழங்கள், சீஸ், பிரெட், ஒரு பாட்டில் ஒயின், கண்ணாடி டம்ளர்கள் எல்லாம் இருந்தன. “உங்கள் மனைவியை பிக்னிக் கூட்டிக்கொண்டு போங்கள்” என்ற ஒரு துண்டுச்சீட்டும் இருந்தது. அதை யார் வைத்தார்கள் என்றே தெரியவில்லை. பிக்னிக் போவதற்கு ஏற்ற மாதிரியே அன்று வானிலை நன்றாக இருந்தது. ஆனாலும், நான் பேச்சுகளைத் தயாரிக்க வேண்டியிருந்ததால் போக முடியாது என்று லெஸ்லியிடம் சொன்னேன். அவள் புரிந்துகொண்டாள், ஆனாலும் அவளுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். நான் டேபிளில் போய் உட்கார்ந்த பிறகு என் மனசாட்சி குத்த ஆரம்பித்தது. எபேசியர் 5:25, 28 என் ஞாபகத்துக்கு வந்தது. என் மனைவியின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று யெகோவாவே என்னிடம் சொல்கிறாரோ என்று தோன்றியது. அப்புறம், ஜெபம் செய்துவிட்டு, லெஸ்லியிடம் போய், “நாம் போகலாம்” என்று சொன்னேன். அவளுக்கு ஒரே குஷியாகிவிட்டது! ஆற்றோரமாக இருந்த ஒரு அழகான இடத்துக்கு நாங்கள் போய், அங்கே சந்தோஷமாக நேரம் செலவு செய்தோம். அது எங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு நாள். அதன் பிறகு என் பேச்சுகளையும் தயாரித்துவிட்டேன்.

வட்டார ஊழியத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து நியூபௌண்ட்லாந்து வரை நிறைய சபைகளுக்குப் போனோம். அது சந்தோஷமான ஒரு அனுபவம். ஏனென்றால், பயணம் செய்ய வேண்டுமென்ற என் கனவு நிறைவேறியது. கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள எனக்கு ஆசை இருந்தபோதிலும், மிஷனரியாக இன்னொரு நாட்டுக்குப் போவதெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று நினைத்தேன். மிஷனரிகள் ரொம்ப பெரிய ஆட்கள், எனக்கெல்லாம் அந்தத் தகுதி இல்லை என்று யோசித்தேன். அதுமட்டுமல்ல, என்னை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடுவார்களோ என்று பயந்தேன். ஏனென்றால், அங்கே போர், நோய் என்று பல பிரச்சினைகள் இருந்தன. கனடாவிலேயே சந்தோஷமாக சேவை செய்துகொண்டிருந்ததால் அதுவே போதும் என்று நினைத்தேன்.

எஸ்டோனியாவுக்கும் மற்ற பால்டிக் நாடுகளுக்கும் போக ஒரு எதிர்பாராத அழைப்பு

பால்டிக் நாடுகளில் பயணம் செய்தபோது

முன்னாள் சோவியத் யூனியனின் பாகமாக இருந்த சில நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுக்கு இருந்த தடை 1992-ல் நீக்கப்பட்டது. அதனால், மிஷனரிகளாக எஸ்டோனியாவுக்குப் போக முடியுமா என்று சகோதரர்கள் கேட்டார்கள். அதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. உடனே ஜெபம் செய்தோம். “யெகோவா ஒரு நியமிப்பைக் கொடுத்தால் அதை நாம் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?” என்று மறுபடியும் யோசித்தோம். அதன் பிறகு, அழைப்பை ஏற்றுக்கொண்டோம். ‘நல்லவேளை, ஆப்பிரிக்காவுக்குப் போகச் சொல்லவில்லை’ என்று நினைத்தேன்.

நாங்கள் உடனடியாக எஸ்டோனியன் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். அந்த நாட்டில் ஓரிரண்டு மாதங்கள் சேவை செய்த பிறகு வட்டார சேவை செய்ய அழைப்பு வந்தது. மூன்று பால்டிக் நாடுகளிலும் ரஷ்யாவில் கலினின்கிராடிலும் இருந்த கிட்டத்தட்ட 46 சபைகளையும் தொகுதிகளையும் நாங்கள் சந்திக்க வேண்டியிருந்தது. அதற்காக, லாட்வியன், லிதுவேனியன், ரஷ்யன் மொழிகளை ஓரளவு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், நாங்கள் எடுத்த முயற்சிகளைப் பார்த்து சகோதர சகோதரிகள் சந்தோஷப்பட்டார்கள், உதவியும் செய்தார்கள். 1999-ல், எஸ்டோனியாவில் ஒரு கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. டோமாஸ் எடூர், லெம்பிட் ரைலி, டாம்மி காவ்கோ ஆகிய சகோதரர்களோடு சேர்ந்து கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டேன்.

இடது: லிதுவேனியாவில் நடந்த மாநாட்டில் பேச்சு கொடுத்தபோது

வலது: எஸ்டோனியாவில் 1999-ல் நியமிக்கப்பட்ட கிளை அலுவலகக் குழு

முன்பு சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த நிறைய சகோதர சகோதரிகளை நாங்கள் சந்தித்தோம். அதிகாரிகள், அவர்களைக் குடும்பத்தைவிட்டுப் பிரித்துக்கொண்டு போய் சிறையில் வைத்து சித்திரவதை செய்திருந்தார்கள். ஆனாலும், அவர்கள் கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சந்தோஷமாகவும் வைராக்கியமாகவும் ஊழியம் செய்துவந்தார்கள். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையையும் எங்களால் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டோம்.

நாங்கள் நிறைய வருஷங்களாக ஓய்வு இல்லாமல் உழைத்தோம். அதனால், லெஸ்லிக்குத் தெம்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால், ஃபைப்ரோமையால்ஜியா என்ற தசைநார் வலிதான் காரணம் என்பது அப்புறம் தெரியவந்தது. கனடாவுக்கே திரும்பிப்போய்விடலாம் என்று நினைத்தோம். ஆனால், நியு யார்க், பேட்டர்சனில் நடக்கும் கிளை அலுவலகப் பள்ளிக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். எங்களால் போக முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும், உருக்கமாக ஜெபம் செய்த பிறகு அழைப்பை ஏற்றுக்கொண்டோம். எங்கள் முடிவை யெகோவா ஆசீர்வதித்தார். அந்தப் பள்ளியில் கலந்துகொண்டபோதுதான் லெஸ்லிக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைத்தது. பழையபடி எங்கள் சேவையைத் தொடரவும் முடிந்தது.

எதிர்பாராத இன்னொரு அழைப்பு—இன்னொரு கண்டத்துக்கு

2008-ல், நாங்கள் எஸ்டோனியாவுக்குத் திரும்பிய பிறகு, ஒருநாள் சாயங்காலம் உலகத் தலைமை அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு ஃபோன் வந்தது. காங்கோவுக்குப் போய் சேவை செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். அதுவும், அடுத்த நாளே பதில் சொல்லச் சொன்னார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! லெஸ்லியிடம் காலையில் சொல்லலாம் என்று நினைத்தேன். இல்லையென்றால் ராத்திரியெல்லாம் தூங்க மாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான்தான் ராத்திரியெல்லாம் தூங்கவில்லை. ஆப்பிரிக்காவுக்குப் போவதை நினைத்தபோதே எவ்வளவு கவலையாக இருந்தது என்று யெகோவாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

அடுத்த நாள் லெஸ்லியிடம் விஷயத்தைச் சொன்னேன். “யெகோவா நம்மை ஆப்பிரிக்காவுக்குப் போகச் சொல்கிறார். அங்கே சந்தோஷமாகச் சேவை செய்ய முடியாது என்று போவதற்கு முன்பே எப்படிச் சொல்ல முடியும்?” என்று யோசித்தோம். அதனால், எஸ்டோனியாவில் 16 வருஷங்கள் சேவை செய்த பிறகு காங்கோவிலுள்ள கின்ஷாசாவுக்குப் போனோம். அங்கிருந்த கிளை அலுவலகம் பச்சைப்பசேலென்று ரொம்ப அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. அங்கு போனதுமே எங்கள் ரூமில் லெஸ்லி செய்த முதல் வேலை என்ன தெரியுமா? கனடாவிலிருந்து கிளம்பி வரும்போது கிடைத்த ஒரு கார்டை எப்போதும் எங்கள் கண்ணில் படும் ஒரு இடத்தில் வைத்தாள். “யெகோவா உங்களை எங்கே நட்டு வைத்தாலும் பூத்துக் குலுங்குங்கள்” என்று அதில் எழுதியிருந்தது. சகோதர சகோதரிகளைச் சந்தித்தது... பைபிள் படிப்புகளை நடத்தியது... மிஷனரி சேவையை ருசித்தது... இதெல்லாமே சந்தோஷத்துக்குமேல் சந்தோஷத்தைக் கொடுத்தது. அதன் பிறகு, ஆப்பிரிக்காவில் இருக்கும் கிட்டத்தட்ட 13 கிளை அலுவலகங்களைச் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. அதனால், வித்தியாச வித்தியாசமான, அருமையான மக்களை சந்திக்க முடிந்தது. ஆரம்பத்தில் எனக்கு இருந்த பயமெல்லாம் பறந்துபோய்விட்டது. எங்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியதற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னோம்.

காங்கோவில் பூச்சிகளை சமைத்துச் சாப்பிடுவது மக்களின் வழக்கம். அந்த மாதிரி விதவிதமான உணவுகளை எங்களுக்குப் பரிமாறினார்கள். அதையெல்லாம் சாப்பிடவே முடியாது என்று முதலில் நினைத்தேன். ஆனால், சகோதர சகோதரிகள் அதையெல்லாம் ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் பார்த்தபோது, நாங்களும் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தோம். அப்புறம் எங்களுக்கும் அது பிடித்துப்போய்விட்டது!

நாட்டின் கிழக்குப் பகுதியில் கொரில்லா வீரர்கள் கிராமங்களில் புகுந்து அட்டூழியம் செய்துவந்தார்கள். முக்கியமாகப் பெண்களையும் பிள்ளைகளையும் தாக்கினார்கள். அதனால், அங்கிருந்த சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவதற்கும், அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து உதவுவதற்கும் அங்கே போனோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரொம்ப ஏழைகள். ஆனாலும், உயிர்த்தெழுதல்மேல் அவர்களுக்கு இருந்த பலமான நம்பிக்கையையும்... யெகோவாமேல் இருந்த அன்பையும்... அமைப்பிடம் அவர்கள் காட்டிய உண்மைத்தன்மையையும்... பார்த்தபோது எங்கள் மனமெல்லாம் உருகிவிட்டது. எங்களுக்கு அந்தளவு நம்பிக்கை இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவும், எங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் அவர்களுடைய உதாரணம் உதவியது. சில சகோதரர்கள் தங்களுடைய வீடுவாசலையும் விளைச்சல்களையும் இழந்திருந்தார்கள். அதைப் பார்த்தபோது, பணம், பொருளெல்லாம் எப்போது வேண்டுமானாலும் நம் கையைவிட்டுப் போய்விடும்... யெகோவாவிடம் இருக்கும் பந்தம்தான் ரொம்ப முக்கியம்... என்பதை நன்றாகப் புரிந்துகொண்டேன். சகோதரர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டிருந்தும்கூட தங்கள் நிலைமையைப் பற்றிப் புலம்பிக்கொண்டு இல்லை. அதை யோசித்தபோது, எங்களுடைய உடல்நலப் பிரச்சினைகளையும் மற்ற பிரச்சினைகளையும் சமாளிக்க நிறைய தைரியம் கிடைத்தது.

இடது: சில அகதிகளுக்காகப் பேச்சு கொடுத்தபோது

வலது: காங்கோவில் இருக்கும் டூங்குவுக்கு மருந்துகளையும் மற்ற நிவாரணப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு போனபோது

இன்னொரு எதிர்பாராத நியமிப்பு—ஆசியாவுக்கு!

எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது. ஹாங்காங் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆசியாவில் சேவை செய்வோம் என்று நாங்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்தது கிடையாது! ஆனால், அதுவரை நாங்கள் செய்த ஒவ்வொரு நியமிப்பிலும் யெகோவாவின் அன்பை ருசித்திருந்தோம். அதனால், இந்த நியமிப்பையும் ஏற்றுக்கொண்டோம். 2013-ல், அழகான ஆப்பிரிக்காவையும் அங்கிருந்த பாசமான நண்பர்களையும் விட்டுவிட்டு கண்ணீரோடு கிளம்பினோம். அடுத்து என்ன காத்திருந்தது என்பது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.

ஹாங்காங்கில் வாழ்க்கை பரபரப்பாக இருந்தது. அது ரொம்ப வித்தியாசமான அனுபவம். வேறுவேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள். சீன மொழியைக் கற்றுக்கொள்வது எங்களுக்குக் கொஞ்சம் சவாலாக இருந்தது. ஆனால், அங்கிருக்கிற சகோதர சகோதரிகள் எங்களிடம் பாசமாக நடந்துகொண்டார்கள். அங்கிருந்த சாப்பாடும் எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அங்கே நம் வேலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்தன. அதனால் கிளை அலுவலகத்தைப் பெரிதாக்க வேண்டியிருந்தது. ஆனால், புது இடங்களின் விலை மடமடவென ஏறிக்கொண்டே போனது. அதனால், கிளை அலுவலகத்துக்குச் சொந்தமான நிறைய இடங்களை விற்றுவிட ஆளும் குழு ஞானமாக முடிவு செய்தார்கள். அப்புறம் 2015-ல் தென் கொரியாவுக்கு எங்களை அனுப்பினார்கள். அங்குதான் இப்போது சேவை செய்கிறோம். இங்கு பேசப்படும் கொரியன் மொழியைக் கற்றுக்கொள்வது எங்களுக்கு இன்னொரு சவால். இன்னும் எங்களால் அந்த மொழியில் சரளமாகப் பேச முடியவில்லை. ஆனாலும், சின்னதாக நாங்கள் செய்யும் முன்னேற்றங்களைப் பார்த்துக்கூட சகோதர சகோதரிகள் எங்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

இடது: ஹாங்காங்கில் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தபோது

வலது: கொரிய நாட்டுக் கிளை அலுவலகம்

கற்றுக்கொண்ட பாடங்கள்

நண்பர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஈஸி இல்லைதான். ஆனால், உபசரிக்கும் குணத்தைக் காட்டினால், சுற்றியிருப்பவர்களைப் பற்றி சீக்கிரமாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கற்றுக்கொண்டோம். சகோதர சகோதரிகள் வேறு வேறு ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் வித்தியாசங்களைவிட ஒற்றுமைகள்தான் அதிகம் என்பதை நாங்கள் கண்ணாரப் பார்த்தோம். அதுமட்டுமல்ல, இதயக் கதவை அகலத் திறந்து நிறைய நண்பர்களிடம் பாசமாகப் பழகும் விதத்தில் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார் என்பதையும் எங்களால் பார்க்க முடிந்தது.—2 கொ. 6:11.

யெகோவா எல்லா விதமான மக்களையும் அன்பாக ஏற்றுக்கொள்வதுபோல் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் கற்றுக்கொண்டோம். அதுமட்டுமல்ல, யெகோவா எப்படியெல்லாம் நம்மேல் அன்பு காட்டுகிறார்... நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் நம்மை வழிநடத்துகிறார்... என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்டோம். நாங்கள் சோர்ந்துபோகும்போது அல்லது மற்றவர்களுக்கு எங்களைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் வரும்போது, நண்பர்கள் கொடுத்த கார்டுகளையும் கடிதங்களையும் மறுபடியும் எடுத்துப் படிப்போம். நிச்சயமாகவே, யெகோவா எங்கள் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்திருக்கிறார்... எங்களை நேசிப்பதைக் காட்டியிருக்கிறார்... எங்களுக்குத் தேவையான பலத்தையும் கொடுத்திருக்கிறார்.

லெஸ்லியும் நானும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவு செய்வது முக்கியம் என்பதைக் கற்றுக்கொண்டோம். எதையாவது சொதப்பலாகச் செய்துவிட்டால் எங்களைப் பார்த்து நாங்களே சிரித்துக்கொள்வது முக்கியம் என்றும் புரிந்துகொண்டோம், அதுவும் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது! ஒவ்வொரு நாள் ராத்திரியும், அன்று யெகோவா எங்களுக்காகச் செய்த ஒரு சந்தோஷமான விஷயத்தை யோசித்துப் பார்த்து நன்றி சொல்ல முயற்சி செய்வோம்.

ஒருசமயத்தில், ‘என்னால் ஒரு மிஷனரியாக இருக்கவே முடியாது, மற்ற நாடுகளில் போய் வாழவே முடியாது’ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஆனால், யெகோவாவின் உதவி இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. “யெகோவாவே, என்னை ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்!” என்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. (எரே. 20:7) எதிர்பாராத நிறைய சந்தோஷங்களையும், கற்பனைகூட செய்து பார்க்காத நிறைய ஆசீர்வாதங்களையும் யெகோவா எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஏரோபிளேனில் போக வேண்டுமென்ற ஆசையைக்கூட நிறைவேற்றி வைத்திருக்கிறார்! சின்ன வயதில் நான் ஆசைப்பட்டதைவிட நிறைய நாடுகளுக்கு நாங்கள் போயிருக்கிறோம். ஐந்து கண்டங்களில் இருக்கும் கிளை அலுவலகங்களைச் சந்தித்திருக்கிறோம். என்ன நியமிப்பு கிடைத்தாலும் லெஸ்லி சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறாள். அதற்கு அவளுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.

நாங்கள் யாருக்காக எல்லாவற்றையும் செய்கிறோம்... ஏன் செய்கிறோம்... என்று அடிக்கடி யோசித்துப் பார்ப்போம். இன்று கிடைக்கும் ஆசீர்வாதங்களைவிட பூஞ்சோலை பூமியில் இன்னும் ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும். ஏனென்றால், அந்தச் சமயத்தில் யெகோவா தன்னுடைய ‘கையைத் திறந்து, எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துவார்.’—சங். 145:16.