படிப்புக் கட்டுரை 26
யெகோவாவின் நாள் வருகிறது—தயாராயிருங்கள்!
“இரவில் திருடன் வருவதுபோல் யெகோவாவின் நாள் வரும்.”—1 தெ. 5:2.
பாட்டு 143 கண்ணிமைக்காமல் காத்திருப்போம்!
இந்தக் கட்டுரையில்... a
1. ‘யெகோவாவின் நாளில்’ தப்பிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
“யெகோவாவின் நாள்” என்று பைபிள் சொல்வது, கடவுள் தன் எதிரிகளைத் தண்டித்து தன் மக்களைக் காப்பாற்றுகிற சமயத்தைக் குறிக்கிறது. முன்பு யெகோவா சில தேசங்களைத் தண்டித்திருக்கிறார். (ஏசா. 13:1, 6; எசே. 13:5; செப். 1:8) நம் காலத்தில் “யெகோவாவின் நாள்” என்பது, அரசியல் தலைவர்கள் மகா பாபிலோன்மேல் தாக்குதல் ஆரம்பிக்கப்போகும் சமயத்திலிருந்து அர்மகெதோன் போர் வரையிலான காலப்பகுதியைக் குறிக்கிறது. அந்த ‘நாளில்’ தப்பிக்க வேண்டும் என்றால் இப்போதே நாம் தயாராக இருக்க வேண்டும். ‘மிகுந்த உபத்திரவத்தை’ சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும் என்று மட்டுமல்ல, எப்போதும் ‘தயாராயிருக்க வேண்டும்’ என்றும் இயேசு சொல்லியிருக்கிறார்.—மத். 24:21; லூக். 12:40.
2. 1 தெசலோனிக்கேயர் புத்தகத்தைப் படிப்பதால் நமக்கு என்ன பிரயோஜனம்?
2 அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் நிறைய உதாரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். எதற்காக? யெகோவா நியாயத்தீர்ப்பு கொடுக்கிற மகா நாளுக்குத் தயாராயிருக்க கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதற்காக! யெகோவாவின் நாள் உடனே வந்துவிடாது என்று பவுலுக்குத் தெரியும். (2 தெ. 2: 1-3) இருந்தாலும், அது அடுத்த நாளே வந்தால் நாம் எந்தளவுக்குத் தயாராக இருப்போமோ அந்தளவுக்குத் தயாராயிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அன்றைக்கு அவர் சொன்னது இன்று நமக்கும் பொருந்தும். இப்போது இந்த மூன்று முக்கியமான கேள்விகளுக்கு பவுல் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பார்க்கலாம்: (1) யெகோவாவின் நாள் எப்படி வரும், (2) அந்த நாளில் யார் தப்பிக்க மாட்டார்கள், (3) அந்த நாளில் தப்பிப்பதற்கு நாம் எப்படித் தயாராயிருக்கலாம்.
யெகோவாவின் நாள் எப்படி வரும்?
3. யெகோவாவின் நாள் எப்படி ராத்திரியில் திருடன் வருவதுபோல் வரும்? (படத்தையும் பாருங்கள்.)
3 “இரவில் திருடன் வருவதுபோல்.” (1 தெ. 5:2) யெகோவாவின் நாள் வருவதைப் பற்றி விளக்குவதற்காக பவுல் பயன்படுத்திய மூன்று உதாரணங்களில் இதுதான் முதலாவது. பொதுவாக, திருடர்கள் இருட்டோடு இருட்டாக வந்து, நாம் ஏமாந்திருக்கிற நேரத்தில் வேகமாகத் தங்கள் வேலையை முடித்துவிடுவார்கள். அதேமாதிரிதான், யெகோவாவின் நாள் திடீரென்று வரும். நிறைய பேருக்கு அது அதிர்ச்சியாக இருக்கும். எல்லா சம்பவங்களும் நினைத்ததைவிட வேகமாக நடந்துவிட்டதே என்று உண்மைக் கிறிஸ்தவர்கள்கூட ஆச்சரியப்படுவார்கள். ஆனால், கெட்டவர்கள்தான் அழிவார்கள், நாம் அழிந்துபோக மாட்டோம்.
4. யெகோவாவின் நாள் எப்படிப் பிரசவ வலி மாதிரி இருக்கும்?
4 “ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வருவதுபோல்.” (1 தெ. 5:3) ஒரு கர்ப்பிணிக்கு, பிரசவ வலி வரப்போகும் சரியான நேரம் தெரியாது. ஆனால், அது எப்படியும் வரும் என்பது அவளுக்குத் தெரியும். உண்மையில் அது திடீரென்று வரும்... ரொம்ப வேதனையாக இருக்கும்... அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. அதேமாதிரி, யெகோவாவின் நாள் திடீரென்று வரும். அது வரும் நாளும் நேரமும் நமக்குத் தெரியாது. ஆனால், அது கண்டிப்பாக வரும். திடீரென்று வரப்போகும் அந்த அழிவில் கெட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது!
5. மிகுந்த உபத்திரவம் எப்படி விடியற்கால வெளிச்சம் போல இருக்கிறது?
5 விடியல் மாதிரி. இந்த மூன்றாவது உதாரணத்தில், ராத்திரியில் திருடிக்கொண்டிருக்கிற திருடர்களைப் பற்றித்தான் பவுல் மறுபடியும் சொல்கிறார். ஆனால், இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இந்தச் சமயம் யெகோவாவின் நாளைத் திருடர்களுக்கு அல்ல, விடியற்காலையில் வருகிற வெளிச்சத்துக்கு பவுல் ஒப்பிடுகிறார். (1 தெ. 5:4) ராத்திரியில் திருடர்கள் திருட்டில் மூழ்கியிருப்பதால் நேரம் போவதையே அவர்கள் மறந்துவிடலாம். ஆனால், திடீரென்று விடியும்போது அவர்கள் மாட்டிக்கொள்ளலாம். அந்த வெளிச்சம் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும். வெளிச்சம் மாதிரி மிகுந்த உபத்திரவம் திடீரென்று வரும்போது திருடர்கள் மாதிரி இருக்கிறவர்கள், அதாவது யெகோவாவுக்கு பிடிக்காத விஷயங்களைச் செய்து இருட்டில் இருக்கிறவர்கள், மாட்டிக்கொள்வார்கள். அவர்களை மாதிரி மாட்டிக்கொள்ளாமல் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றால், யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களை ஒதுக்கித்தள்ள வேண்டும். அதோடு, ‘எல்லா விதமான நல்ல குணத்தையும் நீதியையும் நேர்மையையும்’ தேட வேண்டும். (எபே. 5:8-12) அடுத்து, யாரெல்லாம் தப்பிக்க மாட்டார்கள் என்பதை விளக்குவதற்காக பவுல் இன்னும் இரண்டு உதாரணங்களைப் பயன்படுத்தினார்.
யெகோவாவின் நாளில் யார் தப்பிக்க மாட்டார்கள்?
6. இன்றைக்கு நிறைய பேர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? (1 தெசலோனிக்கேயர் 5:6, 7)
6 “தூங்குகிறவர்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:6, 7-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் நாளில் யாரெல்லாம் தப்பிக்க மாட்டார்களோ அவர்களைத் தூங்குகிறவர்களோடு ஒப்பிட்டு பவுல் பேசுகிறார். தூங்குகிறவர்களுக்குத் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியாது, நேரம் போவதும் தெரியாது. அதனால் ஏதாவது முக்கியமான விஷயங்கள் அவர்களைச் சுற்றி நடந்தால் அதை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது, அதற்கு ஏற்ற மாதிரி நடக்கவும் முடியாது. இன்றைக்கு நிறைய பேர் அந்த மாதிரி ஒரு தூக்கத்தில்தான் இருக்கிறார்கள். (ரோ. 11:8) நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், மிகுந்த உபத்திரவம் சீக்கிரம் வரப்போகிறது என்பதையெல்லாம் ஆதாரத்தோடு நாம் சொன்னாலும் அவர்களுக்கு அதன்மேல் அக்கறையில்லை. உலகத்தில் நடக்கிற முக்கியமான சம்பவங்களையெல்லாம் பார்த்து சில பேர் தூக்கத்திலிருந்து கொஞ்சம் முழித்துக்கொள்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் சொல்கிற செய்தியை ஆர்வமாகவும் கேட்கிறார்கள். ஆனால், நிறைய பேர் முழித்திருப்பதற்குப் பதிலாக மறுபடியும் தூங்குவதற்கே போய்விடுகிறார்கள். கடவுள் ஒரு நியாயத்தீர்ப்பு நாளைக் கொண்டுவருவார் என்று சிலர் நம்புகிறார்கள்தான். ஆனால், அதெல்லாம் இப்போதைக்கு நடக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள். (2 பே. 3:3, 4) நாம் அப்படியில்லை! ஒவ்வொரு நாளும் போகப்போக, பைபிள் சொல்கிற மாதிரி விழித்திருப்பது எவ்வளவு அவசியம்... எவ்வளவு அவசரம்... என்பதை நாம் புரிந்திருக்கிறோம்.
7. கடவுளுடைய கோபத்துக்கு ஆளாகப்போகிற ஆட்கள் எப்படிக் குடிவெறியர்கள் மாதிரி இருக்கிறார்கள்?
7 “குடிவெறியர்கள்.” கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகப்போகிற ஆட்கள் குடிவெறியர்கள் மாதிரி இருக்கிறார்கள் என்று பவுல் சொல்கிறார். குடிபோதையில் இருக்கிறவர்களுக்கு, சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாது, மற்றவர்கள் சொல்வது காதிலும் ஏறாது. அவர்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அதேமாதிரி, கெட்டவர்கள் கடவுள் கொடுக்கிற எச்சரிப்புகளைக் காதில் வாங்குவதே இல்லை. அவர்கள் இஷ்டப்படிதான் வாழ்கிறார்கள். அது அவர்களை அழிவில்தான் கொண்டுபோய்விடும். ஆனால், கிறிஸ்தவர்கள் தெளிந்த புத்தியோடு, நிதானத்தோடு இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 தெ. 5:6) ஒரு பைபிள் அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “நிதானத்தோடு இருக்கிற ஒருவர் பதட்டம் இல்லாமல், தடுமாற்றம் இல்லாமல் இருப்பார். சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக யோசித்துப் பார்த்து சரியான முடிவுகளை எடுப்பார்.” நாம் ஏன் பதட்டம் இல்லாமல், தடுமாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்? அப்போதுதான், அரசியல் அல்லது சமூக பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்போம். யெகோவாவின் நாள் நெருங்க நெருங்க, இந்த மாதிரி பிரச்சினைகளில் தலையிடுவதற்கான அழுத்தம் நமக்கு அதிகமாகிக்கொண்டே போகலாம். இருந்தாலும், அந்தச் சமயத்தில் நாம் என்ன செய்வோம், ஏது செய்வோம் என்று இப்போது கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், பதட்டமோ தடுமாற்றமோ இல்லாமல் இருப்பதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் கடவுளுடைய சக்தி அப்போது நமக்கு உதவி செய்யும்.—லூக். 12:11, 12.
யெகோவாவின் நாளில் தப்பிப்பதற்கு நாம் எப்படித் தயாராக இருக்கலாம்?
8. நாம் விழிப்போடு இருப்பதற்கும் தெளிந்த புத்தியோடு இருப்பதற்கும் உதவும் குணங்களை 1 தெசலோனிக்கேயர் 5:8 எப்படி விவரிக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)
8 ‘மார்புக் கவசத்தையும், தலைக்கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்.’ கவசங்களைப் போட்டுக்கொண்டு எப்போதுமே விழிப்பாக இருக்கிற ஒரு போர்வீரரோடு பவுல் நம்மை ஒப்பிட்டுப் பேசுகிறார். (1 தெசலோனிக்கேயர் 5:8-ஐ வாசியுங்கள்.) போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்பதால் ஒரு போர்வீரர் சண்டை போடுவதற்கு எப்போதுமே தயாராயிருக்க வேண்டும். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும் நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொண்டு, யெகோவாவின் நாளுக்காக நாம் எப்போதுமே தயாராயிருக்க வேண்டும். இந்தக் குணங்கள்தான் நம்மைக் காப்பாற்றும்.
9. நம்முடைய விசுவாசம் நம்மை எப்படிப் பாதுகாக்கிறது?
9 ஒரு போர்வீரருடைய நெஞ்சை மார்புக் கவசம் பாதுகாக்கும். அதேமாதிரி, விசுவாசமும் அன்பும் நம்முடைய இதயத்தைப் பாதுகாக்கும். தொடர்ந்து கடவுளுக்குச் சேவை செய்வதற்கும் இயேசுவைப் பின்பற்றுவதற்கும் இந்த மார்புக் கவசம் நமக்குத் தேவை. நமக்கு விசுவாசம் இருந்தால், முழு இதயத்தோடு தன்னைத் தேடுகிறவர்களுக்கு யெகோவா பலன் கொடுப்பார் என்று உறுதியாக நம்புவோம். (எபி. 11:6) கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் நம் தலைவர் இயேசுவுக்கு உண்மையாக இருக்க விசுவாசம் நம்மைத் தூண்டும். நம் காலத்திலேயே நிறைய பேர், துன்புறுத்தல் வந்தாலும் பணப் பிரச்சினைகள் வந்தாலும் கடவுளுக்கு உண்மையாக சேவை செய்கிறார்கள். அவர்களுடைய உதாரணங்களை யோசித்துப் பார்க்கும்போது, வாழ்க்கையில் நமக்கு வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்கும் அளவுக்கு நம் விசுவாசத்தை நம்மால் பலப்படுத்திக்கொள்ள முடியும். கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதல் இடம் கொடுப்பதற்காக நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கையை ரொம்ப எளிமையாக்கியிருக்கிறார்கள். அவர்களை மாதிரி நாம் வாழும்போது, பண ஆசை என்கிற வலையில் சிக்க மாட்டோம். b
10. கடவுள்மேலும் மக்கள்மேலும் நாம் வைத்திருக்கிற அன்பு, தொடர்ந்து சகித்திருக்க நமக்கு எப்படி உதவி செய்கிறது?
10 நாம் விழிப்போடு இருப்பதற்கும் தெளிந்த புத்தியோடு இருப்பதற்கும் அன்பு என்ற குணமும் ரொம்ப முக்கியம். (மத். 22:37-39) யெகோவாமேல் நமக்கு அன்பு இருந்தால், எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் விடாமல் ஊழியம் செய்துகொண்டே இருப்போம். (2 தீ. 1:7, 8) யெகோவாவை வணங்காதவர்கள்மேலும் நமக்கு அன்பு இருப்பதால் நாம் தொடர்ந்து ஊழியம் செய்கிறோம். நமக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கிற மக்களைத் திரும்பத் திரும்ப நாம் போய்ப் பார்க்கிறோம். ஃபோன் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும்கூட நாம் ஊழியம் செய்கிறோம். மக்கள்மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை என்றைக்கும் குறைவதில்லை. ஒருநாள் அவர்கள் கண்டிப்பாக மாறுவார்கள், சரியானதைச் செய்ய ஆரம்பிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.—எசே. 18:27, 28.
11. சகோதர சகோதரிகள்மேல் நாம் வைத்திருக்கும் அன்பு நமக்கு எப்படி உதவி செய்யும்? (1 தெசலோனிக்கேயர் 5:11)
11 நம் சகோதர சகோதரிகள்மேலும் நாம் அன்பு காட்டுகிறோம். ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதன் மூலமும், ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதன் மூலமும்’ அப்படி அன்பு காட்டுகிறோம். (1 தெசலோனிக்கேயர் 5:11-ஐ வாசியுங்கள்.) ஒரு போரில் படைவீரர்கள் தோளோடு தோள் சேர்ந்து போராடுவதுபோல் நாமும் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருக்கிறோம், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துகிறோம். போரில் ஒரு வீரர் தன்னோடு இருக்கும் இன்னொரு வீரரைக் காயப்படுத்திவிடலாம். ஆனால், அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்ய மாட்டார். அதேமாதிரி, கண்டிப்பாக நாம் யாருமே நம் சகோதர சகோதரிகளை வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டோம்; தீமைக்குத் தீமை செய்ய மாட்டோம். (1 தெ. 5:13, 15) நம்மை முன்நின்று வழிநடத்தும் சகோதரர்கள்மேலும் நாம் அன்பு காட்டுகிறோம். எப்படி? அவர்களை மதிப்பதன் மூலமாக! (1 தெ. 5:12) பவுல் தெசலோனிக்கேயர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியபோது, அந்தச் சபை உருவாகி ஒரு வருஷம்கூட ஆகவில்லை. அப்படியென்றால், அந்தச் சபையை முன்நின்று வழிநடத்தியவர்களுக்கு அவ்வளவாக அனுபவம் இருந்திருக்காது. அவர்கள் சில தவறுகளைக்கூடச் செய்திருக்கலாம். இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பது அவசியமாக இருந்தது. மிகுந்த உபத்திரவம் நெருங்கி வர வர, வழிநடத்துதலுக்காக மூப்பர்களை நாம் இன்னும் அதிகமாக நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்கும். ஏனென்றால், அந்தச் சமயத்தில் நம் தலைமை அலுவலகத்தோடும் கிளை அலுவலகத்தோடும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படலாம். அதனால், மூப்பர்கள்மேல் அன்பும் மரியாதையும் காட்ட இப்போதே கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். என்ன நடந்தாலும் சரி, மூப்பர்களிடம் இருக்கும் குறைகளைப் பார்க்காமல், இயேசு மூலமாக யெகோவாதான் அவர்களை வழிநடத்துகிறார் என்பதை மனதில் வைத்து தெளிந்த புத்தியோடு நாம் நடந்துகொள்ள வேண்டும்.
12. நம் நம்பிக்கை நம் யோசனைகளை எப்படிப் பாதுகாக்கிறது?
12 ஒரு தலைக்கவசம் போர்வீரரின் தலையைப் பாதுகாப்பதுபோல் மீட்புக்கான நம்பிக்கை நம் யோசனைகளைப் பாதுகாக்கிறது. அந்த நம்பிக்கை நமக்குப் பலமாக இருந்தால் இந்த உலகம் கொடுக்கும் எல்லாமே நம் கண்ணில் வெறும் குப்பையாகத்தான் தெரியும். (பிலி. 3:8) பதட்டம் இல்லாமல், தடுமாறாமல் இருப்பதற்கு நம் நம்பிக்கை உதவி செய்யும். ஆப்பிரிக்காவில் சேவை செய்யும் வாலஸ்-லாரிண்டா தம்பதிக்கும் இதுதான் உதவி செய்தது. வெறும் மூன்றே வாரங்களில் அவர்கள் இரண்டு பேருடைய பெற்றோர்களிலும் ஒவ்வொருவர் இறந்துவிட்டார்கள். அந்தச் சமயத்தில் கோவிட்-19 பெருந்தொற்று இருந்ததால் அவர்களால் வீட்டுக்குப் போய்த் தங்கள் குடும்பத்தோடு இருக்க முடியவில்லை. வாலஸ் இப்படி எழுதினார்: “அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி சில நாட்களில் எப்படிக் கஷ்டப்பட்டார்கள் என்று யோசிப்பதற்குப் பதிலாக புதிய உலகத்தில் மறுபடியும் உயிரோடு வரும்போது எவ்வளவு சந்தோஷமாக இருப்பார்கள் என்று யோசித்துப் பார்ப்பேன். உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருப்பதால்தான் என்னால் இப்படி யோசிக்க முடிகிறது. எனக்குத் துக்கமாக இருக்கும்போதெல்லாம், அவர்களுடைய ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த நம்பிக்கைதான் என் மனதை அமைதிப்படுத்துகிறது.”
13. கடவுளுடைய சக்தி நமக்கு வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
13 “கடவுளுடைய சக்தி உங்களுக்குள் பற்றவைக்கிற ஆர்வத் தீயை அணைத்துவிடாதீர்கள்.” (1 தெ. 5:19) கடவுளுடைய சக்தி நமக்குள் எரியும் ஒரு தீபோல் இருப்பதாக பவுல் சொன்னார். கடவுளுடைய சக்தி நமக்குள் இருந்தால் சரியானதைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்துடிப்போடும் உற்சாகத்தோடும் நாம் இருப்போம்; யெகோவாவுக்கு நாம் தீயாய்ச் சேவை செய்வோம். (ரோ. 12:11) சரி, கடவுளுடைய சக்தி நமக்கு வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும்... கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்ட பைபிளைப் படிக்க வேண்டும்... கடவுளுடைய சக்தி வழிநடத்தும் அமைப்போடு சேர்ந்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால், ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.—கலா. 5:22, 23.
14. கடவுளுடைய சக்தி வேண்டுமென்றால் நாம் என்ன செய்யக் கூடாது? (படத்தையும் பாருங்கள்.)
14 கடவுள் தன் சக்தியை நமக்குக் கொடுத்த பிறகு, அது ‘நமக்குள் பற்றவைக்கிற ஆர்வத் தீயை அணைத்துவிடாதபடி’ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய யோசனைகளும் நடத்தையும் எப்போதுமே சுத்தமாக இருந்தால்தான் கடவுள் தன் சக்தியை நமக்குக் கொடுப்பார். நாம் தொடர்ந்து அசிங்கமான விஷயங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டும், அந்த மாதிரி விஷயங்களையே செய்துகொண்டும் இருந்தால் கடவுள் தன் சக்தியைக் கொடுப்பதை நிறுத்திவிடுவார். (1 தெ. 4:7, 8) அதோடு, கடவுளுடைய சக்தி நமக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் ‘தீர்க்கதரிசனங்களை அவமதிக்காமல்’ இருக்க வேண்டும். (1 தெ. 5:20) இங்கே ‘தீர்க்கதரிசனங்கள்’ என்பது, கடவுளுடைய சக்தி மூலமாகக் கிடைக்கிற எல்லா செய்திகளையும் குறிக்கிறது. யெகோவாவின் நாள் வரப்போகிறது... நாம் ஒரு அவசரக் காலகட்டத்தில் வாழ்கிறோம்... என்ற செய்திகளும் அதில் அடங்கும். நம் காலத்திலெல்லாம் அர்மகெதோன் வராது என்று யோசிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அந்த நாளை எப்போதுமே மனதில் வைத்திருங்கள். அவசர உணர்வோடு இருங்கள். அதற்கு என்ன செய்யலாம்? சரியானதைத் தொடர்ந்து செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் “கடவுள்பக்திக்குரிய செயல்களை” சுறுசுறுப்பாகச் செய்துகொண்டே இருங்கள்.—2 பே. 3:11, 12.
“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து . . . நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்”
15. தவறான தகவல்களையும் பேய்கள் பரப்புகிற பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி நாம் எப்படி ஏமாந்துபோகாமல் இருக்கலாம்? (1 தெசலோனிக்கேயர் 5:21)
15 சீக்கிரத்தில், கடவுளுடைய எதிரிகள் ஏதோவொரு விதத்தில், “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைச் செய்வார்கள். (1 தெ. 5:3) பேய்களிடமிருந்து வரும் செய்திகள் உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்பதால் நிறைய பேர் ஏமாந்துபோய்விடுவார்கள். (வெளி. 16:13, 14) நாமும் ஏமாந்துபோய்விடுவோமா? ‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து . . . நிச்சயப்படுத்திக்கொண்டால்’ ஏமாந்துபோக மாட்டோம். (1 தெசலோனிக்கேயர் 5:21-ஐ வாசியுங்கள்.) தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் போலியா இல்லையா என்று கண்டுபிடிப்பதைப் பற்றிப் பேசியபோதுதான் அன்று மக்கள், “சோதித்துப் பார்த்து . . . நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்” என்பதற்கான கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதே மாதிரி, நாம் கேட்கிற விஷயங்களும் படிக்கிற விஷயங்களும் போலியா உண்மையா என்று நாமும் சோதித்துப் பார்க்க வேண்டும். சோதித்துப் பார்ப்பது அன்றிருந்த தெசலோனிக்கேயர்களுக்கே அவ்வளவு முக்கியம் என்றால், மிகுந்த உபத்திரவத்துக்குப் பக்கத்தில் இருக்கும் நமக்கு இன்னும் எவ்வளவு முக்கியம்! எல்லாவற்றையும் நம்பும் வெகுளியாக இருப்பதற்குப் பதிலாக நம்முடைய யோசிக்கும் திறனை நாம் பயன்படுத்த வேண்டும். நாம் படிக்கிற விஷயங்களும் கேட்கிற விஷயங்களும் பைபிள் சொல்வதோடு... யெகோவாவின் அமைப்பு சொல்வதோடு... ஒத்துப்போகிறதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால், பேய்கள் பரப்புகிற பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாந்துபோக மாட்டோம்.—நீதி. 14:15; 1 தீ. 4:1.
16. என்ன உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது, என்ன செய்ய நாம் முடிவோடு இருக்கிறோம்?
16 யெகோவாவுடைய மக்கள் ஒரு தொகுதியாக மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பார்கள். ஆனால், தனிப்பட்ட விதத்தில் நம் ஒவ்வொருவருக்கும் நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. (யாக். 4:14) மிகுந்த உபத்திரவத்தில் நாம் தப்பித்தாலும் சரி, அதற்கு முன்பே இறந்துவிட்டாலும் சரி, யெகோவாவுக்கு நாம் தொடர்ந்து உண்மையாக இருந்தால், என்றென்றும் வாழும் வாழ்வை யெகோவா நமக்குக் கொடுப்பார். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் இயேசுவோடு பரலோகத்தில் இருப்பார்கள். வேறே ஆடுகள் பூஞ்சோலை பூமியில் இருப்பார்கள். இந்த அருமையான நம்பிக்கை எப்போதுமே நம் மனதில் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். யெகோவாவுடைய நாள் வருகிறது, தயாராயிருங்கள்!
பாட்டு 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
a யெகோவாவுடைய நாளைப் பற்றிச் சொல்லும்போது, 1 தெசலோனிக்கேயர் 5-வது அதிகாரத்தில் நிறைய உதாரணங்களை பவுல் பயன்படுத்தியிருக்கிறார். அது என்ன “நாள்,” அது எப்படி வரும்? அதில் யார் தப்பிப்பார்கள்? யார் தப்பிக்க மாட்டார்கள்? நாம் எப்படி அந்த நாளுக்காகத் தயாராகலாம்? இந்தக் கட்டுரையில், பவுலுடைய வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து இதற்கான பதில்களைக் கண்டுபிடிப்போம்.
b “தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்” என்ற தலைப்பில் வருகிற கட்டுரைகளைப் பாருங்கள்.