Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

இயேசு பிறந்த பிறகு, யோசேப்பும் மரியாளும் நாசரேத்துக்குத் திரும்பிப் போகாமல் பெத்லகேமிலேயே ஏன் தங்கிவிட்டார்கள்?

பைபிள் அதைப் பற்றிச் சொல்வதில்லை. ஆனால், ஆர்வத்தைத் தூண்டும் சில விவரங்களை அது சொல்கிறது. அந்த விவரங்களைத் தெரிந்துகொண்டால், அவர்கள் ஏன் அந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்பதை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

மரியாள் கர்ப்பமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று ஒரு தேவதூதர் அவரிடம் சொன்னார். அப்போது மரியாள் கலிலேயாவில் இருந்த நாசரேத்தில் வாழ்ந்துவந்தார். யோசேப்பும் அங்குதான் வாழ்ந்துவந்தார். (லூக். 1:26-31; 2:4) பிற்பாடு, யோசேப்பும் மரியாளும் எகிப்திலிருந்து திரும்பி வந்தபோது அவர்கள் நாசரேத்துக்குத்தான் வந்தார்கள். அங்குதான் இயேசு வளர்ந்தார். அதனால், நாசரேத்தூரார் என்று அழைக்கப்பட்டார். (மத். 2:19-23) இப்படி, இயேசு, யோசேப்பு, மரியாள் ஆகிய மூன்று பேருக்குமே நாசரேத்தோடு சம்பந்தம் இருந்தது.

மரியாளுக்கு எலிசபெத் என்ற சொந்தக்காரப் பெண் இருந்தார். அவர் யூதாவில் வாழ்ந்துவந்தார். அவர் சகரியா என்ற ஆலய குருவின் மனைவி, யோவான் ஸ்நானகரின் அம்மா. (லூக். 1:5, 9, 13, 36) கல்யாணத்துக்கு முன்பு மரியாள் யூதாவில் இருந்த எலிசபெத்தின் வீட்டுக்குப் போய் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். பிறகு, நாசரேத்துக்குத் திரும்பி வந்துவிட்டார். (லூக். 1:39, 40, 56) அதனால் யூதா, மரியாளுக்குக் கொஞ்சம் பழக்கப்பட்ட இடமாக இருந்தது.

மரியாளைக் கல்யாணம் செய்துகொண்ட பிறகு, ‘பெயர்ப்பதிவு செய்ய’ வேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிந்து யோசேப்பு நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்குப் போனார். அது ‘தாவீதின் ஊர்’ என்று அழைக்கப்பட்டது. அங்குதான் மேசியா பிறப்பார் என்று தீர்க்கதரிசனமும் சொல்லப்பட்டிருந்தது. (லூக். 2:3, 4; 1 சா. 17:15; 20:6; மீ. 5:2) பெத்லகேமில் மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தார். கைக்குழந்தையோடு மறுபடியும் நாசரேத்துக்கு ரொம்ப தூரம் பயணம் செய்வது மரியாளுக்குச் சிரமமாக இருக்கும் என்று யோசேப்பு நினைத்திருக்கலாம். அதனால், அவர்கள் பெத்லகேமிலேயே தங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, பெத்லகேம் எருசலேமிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் (சுமார் 6 மைல்) தூரத்தில் இருந்தது. அதனால், குழந்தையை ஆலயத்துக்குக் கொண்டுபோய் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருந்த பலிகளைச் செலுத்துவது அவர்களுக்கு சவுகரியமாக இருந்திருக்கும்.—லேவி. 12:2, 6-8; லூக். 2:22-24.

மரியாளின் குழந்தைக்கு ‘தாவீதின் சிம்மாசனம்’ கிடைக்கும் என்றும், அவர் ‘ராஜாவாக . . . ஆட்சி செய்வார்’ என்றும் கடவுளுடைய தூதர் ஏற்கெனவே மரியாளிடம் சொல்லியிருந்தார். அதனால், இயேசு தாவீதின் ஊரில் பிறந்ததை யோசேப்பும் மரியாளும் ஒரு முக்கியமான விஷயமாக நினைத்திருக்கலாம். (லூக். 1:32, 33; 2:11, 17) அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் சொல்லும்வரை அங்கேயே இருப்பதுதான் நல்லது என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

அவர்கள் பெத்லகேமுக்கு வந்து எவ்வளவு காலத்துக்குப் பிறகு சில ஜோதிடர்கள் இயேசுவைப் பார்க்க வந்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அந்த ஜோதிடர்கள் வந்தபோது யோசேப்பின் குடும்பம் தங்களுடைய ‘வீட்டில்’ இருந்தார்கள். அதுமட்டுமல்ல, இயேசு கைக்குழந்தையாக அல்ல, கொஞ்சம் வளர்ந்த ‘பிள்ளையாக’ இருந்தார். (மத். 2:11) அப்படியென்றால், நாசரேத்துக்குப் போவதற்குப் பதிலாக, பெத்லகேமிலேயே கொஞ்ச காலம் குடியிருந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

‘பெத்லகேமில் . . . இருந்த இரண்டு வயதும் அதற்குட்பட்ட வயதுமுள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல’ ஏரோது கட்டளை போட்டிருந்தான். (மத். 2:16) இதைப் பற்றி ஒரு தேவதூதர் எச்சரித்ததால் யோசேப்பும் மரியாளும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு எகிப்துக்குப் போனார்கள். ஏரோது சாகும்வரை அங்குதான் இருந்தார்கள். அதன் பிறகு, யோசேப்பு தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு நாசரேத்துக்குப் போனார். அவர்கள் ஏன் திரும்பவும் பெத்லகேமுக்குப் போகவில்லை? ஏனென்றால், ஏரோதுவின் மகன் அர்கெலாயு யூதேயாவை ஆட்சி செய்துகொண்டிருந்தான். அவன் ரொம்பக் கொடூரமானவனாக இருந்தான். அதுமட்டுமல்ல, அங்கு போக வேண்டாமென்று யோசேப்பைக் கடவுள் எச்சரித்திருந்தார். நாசரேத்துக்கு அவர்கள் வந்த பிறகு, எந்த ஆபத்தும் இல்லாமல் இயேசுவுக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுத்து அவரைப் பத்திரமாக வளர்க்க யோசேப்பினால் முடிந்தது.—மத். 2:19-22; 13:55; லூக். 2:39, 52.

பரலோகத்துக்குப் போகும் வாய்ப்பை மனிதர்களுக்கு இயேசு திறந்து வைப்பதற்கு முன்பே யோசேப்பு இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அப்படியென்றால், யோசேப்பு பூமியில்தான் உயிரோடு எழுப்பப்படுவார். அதனால் அவரும் மரியாளும், இயேசு பிறந்த பிறகு ஏன் பெத்லகேமில் தங்கிவிட்டார்கள் என்று அவரிடமே நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.