பைபிள் போதனை
உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா?
யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நமக்கு விசுவாசம் தேவை. ஆனால், “எல்லாரிடமும் விசுவாசம் இல்லை” என்று பவுல் சொன்னார். (2 தெ. 3:2) இந்த வசனத்தில், தன்னைத் துன்புறுத்திய ஆட்களை, அதாவது ‘தீமை செய்கிறவர்களையும் கெட்ட ஆட்களையும்’ அவர் மனதில் வைத்துப் பேசினார். அதேசமயத்தில், இது மற்றவர்களுக்கும் பொருந்தும். சிலர், தெளிவான ஆதாரங்கள் இருந்தும் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவதில்லை. (ரோ. 1:20) வேறு சிலர், எல்லாவற்றுக்கும் மேல் ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், இது உண்மையான விசுவாசம் கிடையாது.
யெகோவா இருக்கிறார் என்றும், பலமான விசுவாசம் இருக்கிறவர்களுக்கு அவர் “பலன் கொடுக்கிறார்” என்றும் நாம் உறுதியாக நம்ப வேண்டும். (எபி. 11:6) விசுவாசம் என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. யெகோவாவிடம் கேட்டால் அவர் அந்தச் சக்தியைக் கொடுப்பார். (லூக். 11:9, 10, 13) பைபிளைப் படிக்கும்போதும் நமக்கு அந்தச் சக்தி கிடைக்கும். படிக்கிற விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்த்து அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யும்போது, உண்மையான விசுவாசத்தை வாழ்க்கையில் காட்ட யெகோவாவுடைய சக்தி நமக்கு உதவும்.