Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 25

பாட்டு 7 யெகோவாவே என் பலம்

யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!

யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!

“யெகோவாதான் உயிருள்ள கடவுள்!”சங். 18:46.

என்ன கற்றுக்கொள்வோம்?

நாம் வணங்குகிற கடவுள் “உயிருள்ள கடவுள்” என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று கற்றுக்கொள்வோம்.

1. பிரச்சினைகள் இருந்தாலும் யெகோவாவைத் தொடர்ந்து வணங்க எது நமக்கு உதவுகிறது?

 “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1) இன்று பொதுவாக வருகிற பிரச்சினைகளோடு சேர்த்து, யெகோவாவின் மக்கள் எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் சந்திக்கிறார்கள். இவற்றின் மத்தியிலும், யெகோவாவைத் தொடர்ந்து வணங்க எது நமக்கு உதவுகிறது? நாம் வணங்குகிற கடவுள், “உயிருள்ள கடவுள்” என்பதைத் தெரிந்துவைத்திருப்பது உதவுகிறது.—எரே. 10:10; 2 தீ. 1:12.

2. யெகோவாவைப் பற்றி எதைத் தெரிந்துவைத்திருந்தால் நமக்கு பலம் கிடைக்கும்?

2 நமக்கு வருகிற ஒவ்வொரு சோதனையையும் கஷ்டத்தையும் யெகோவா பார்க்கிறார்; நமக்கு உதவ ஆசைப்படுகிறார். (2 நா. 16:9; சங். 23:4) யெகோவாவை உயிருள்ள கடவுளாகப் பார்த்தால், நம்முடைய கஷ்டங்களைச் சமாளிக்க நமக்குப் பலம் கிடைக்கும். தாவீது ராஜா யெகோவாவை அப்படிப் பார்த்ததால்தான் அவருக்குப் பலம் கிடைத்தது. எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

3. “யெகோவாதான் உயிருள்ள கடவுள்” என்று சொன்னபோது தாவீது எதை அர்த்தப்படுத்தினார்?

3 தாவீது யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்; அவரை நம்பினார். சவுல் ராஜாவும் மற்றவர்களும் தன்னைக் கொலை செய்ய துரத்திக்கொண்டிருந்த சமயத்தில், தாவீது யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார். (சங். 18:6) அந்த ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்து, தன்னைக் காப்பாற்றியதைப் பார்த்தபோது, “யெகோவாதான் உயிருள்ள கடவுள்!” என்று சொன்னார். (சங். 18:46) யெகோவா வெறுமனே உயிரோடிருக்கிற கடவுள் என்று தாவீது இங்கே சொன்னாரா? இல்லை! இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி குறிப்பு இப்படி சொல்கிறது: யெகோவா “உயிருள்ள கடவுளாக இருந்து தன்னுடைய மக்கள் சார்பாக செயல்படுகிறார்” என்று உறுதியாக நம்பியதைத்தான் தாவீதின் வார்த்தைகள் காட்டுகின்றன. தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்று யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்றும், தனக்கு உதவ அவர் தயாராக இருக்கிறார் என்றும் தாவீது புரிந்துவைத்திருந்தார். அதனால், அவரைத் தொடர்ந்து வணங்க வேண்டும்... அவரைப் புகழ வேண்டும்... என்பதில் தாவீது உறுதியாக இருந்தார்.—சங். 18:28, 29, 49.

4. யெகோவாவை உயிருள்ள கடவுளாக பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை?

4 யெகோவா உயிருள்ள கடவுள் என்பதில் நாமும் உறுதியாக இருந்தால், அவருக்குச் சுறுசுறுப்பாக சேவை செய்வோம். கஷ்டங்களையும் சோதனைகளையும் சமாளிப்பதற்கு நமக்குப் பலம் கிடைக்கும். யெகோவாவுக்காகத் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். அவரோடு எப்போதும் நெருங்கி இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்போம்.

உயிருள்ள கடவுள் உங்களைப் பலப்படுத்துவார்

5. சோதனைகள் வரும்போது எது நமக்கு நம்பிக்கை தரும்? (பிலிப்பியர் 4:13)

5 யெகோவா உயிருள்ள கடவுள் என்பதையும் நமக்கு உதவ தயாராக இருக்கிறார் என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொண்டால், எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை நம்மால் சமாளிக்க முடியும். யெகோவாவால் சரிசெய்ய முடியாத பிரச்சினை என்று ஏதாவது இருக்கிறதா என்ன! அவர் சர்வவல்லமையுள்ள கடவுள், நாம் சகித்திருக்க அவரால் சக்தி கொடுக்க முடியும். (பிலிப்பியர் 4:13-ஐ வாசியுங்கள்.) அதனால், எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை நாம் நம்பிக்கையோடு சமாளிக்கலாம். சின்ன சின்ன சோதனைகளைச் சமாளிக்க யெகோவா நமக்கு உதவி செய்வதைப் பார்க்கும்போது, பெரிய சோதனைகளையும் சமாளிக்க அவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கை கிடைக்கும்.

6. சின்ன வயதில் இருந்தபோது, யெகோவாமேல் இருந்த நம்பிக்கை தாவீதுக்கு எப்படி அதிகமானது?

6 தாவீதுக்கு யெகோவாமேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்கிய இரண்டு சம்பவங்களை இப்போது பார்க்கலாம். சின்ன வயதில் தன்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு சமயம் ஒரு கரடியும் இன்னொரு சமயம் ஒரு சிங்கமும் வந்து ஆடுகளைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. தாவீது தைரியமாக அந்த மிருகங்களைத் துரத்திக்கொண்டுபோய் ஆடுகளைக் காப்பாற்றினார். தன்னுடைய சொந்த பலத்தில் இதையெல்லாம் சாதித்ததாக தாவீது சொல்லவே இல்லை; யெகோவாதான் தனக்கு உதவினார் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (1 சா. 17:34-37) இந்த அனுபவங்களை தாவீது மறக்கவே இல்லை. இதையெல்லாம் யோசித்துப் பார்த்ததால்தான், உயிருள்ள கடவுளான யெகோவா தன்னை எதிர்காலத்திலும் தொடர்ந்து பலப்படுத்துவார் என்ற நம்பிக்கை அவருக்குக் கிடைத்தது.

7. தாவீது எதைப் பற்றி யோசித்தார், அது எப்படி அவருக்கு உதவியது?

7 கொஞ்ச நாளுக்குப் பிறகு, இஸ்ரவேலர்களுடைய படை முகாம் போட்டிருந்த இடத்துக்கு தாவீது போனார்; அப்போது அவர் டீனேஜ் வயதில் இருந்திருக்கலாம். பார்ப்பதற்கு ராட்சதனைப் போல இருந்த பெலிஸ்திய வீரன் கோலியாத் ‘இஸ்ரவேல் படைக்குச் சவால் விட்டுக்கொண்டிருந்தான்.’ அதைக் கேட்டு இஸ்ரவேல் படையில் இருந்த எல்லாரும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். (1 சா. 17:10, 11) இஸ்ரவேல் வீரர்கள், அந்த ராட்சதனைப் பற்றியும் அவன் விட்ட சவாலைப் பற்றியும்தான் யோசித்துக்கொண்டிருந்தார்கள்; அதனால்தான் பயந்தார்கள். (1 சா. 17:24, 25) ஆனால், இந்தச் சூழ்நிலையை தாவீது வேறு மாதிரி பார்த்தார். கோலியாத், இஸ்ரவேல் படைக்கு எதிராக சவால்விட்டது போல் தாவீது பார்க்கவில்லை; ‘உயிருள்ள கடவுளின் படைக்குச் சவால்விட்டது’ போல் பார்த்தார். (1 சா. 17:26) தாவீது யெகோவாவைப் பற்றி மட்டும்தான் யோசித்தார். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது தனக்கு அவர் எப்படி உதவி செய்தாரோ அதேமாதிரி இப்போதும் உதவி செய்வார் என்று நம்பினார். யெகோவாவுடைய உதவியோடு கோலியாத்தை நேருக்கு நேர் சந்தித்தார், அவனை வெட்டி சாய்த்தார்!—1 சா. 17:45-51.

8. சோதனைகள் வரும்போது நாம் எப்படி யெகோவாவையே மனதில் வைத்திருக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

8 உயிருள்ள கடவுள் நமக்கும் உதவ தயாராக இருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டால் நம்மாலும் சோதனைகளைச் சமாளிக்க முடியும். (சங். 118:6) ஆனால் இந்த நம்பிக்கையை எப்படி வளர்த்துக்கொள்வது? ஏற்கெனவே யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்ப்பது உதவும். தன்னுடைய ஊழியர்களை யெகோவா எப்படிக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை பைபிளிலிருந்து படித்துப் பாருங்கள். (ஏசா. 37:17, 33-37) இன்று நம் சகோதர சகோதரிகளுக்கு அவர் எப்படி உதவி செய்கிறார் என்ற அறிக்கைகளை jw.org வெப்சைட்டில் பார்க்கலாம். உங்களுடைய வாழ்க்கையில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைக்கூட யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, கரடியையோ சிங்கத்தையோ துரத்துவது போன்ற அதிரடியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கலாம். ஆனாலும், யெகோவா உங்களுக்காக ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறார். உங்களைத் தன் பக்கமாக அவர் இழுத்திருக்கிறார். (யோவா. 6:44) இன்றுவரை நீங்கள் சத்தியத்தில் இருப்பதற்கு உதவி செய்கிறார். உங்கள் ஜெபங்களுக்கு அவர் எப்படிப் பதில் கொடுத்திருக்கிறார்... சரியான நேரத்தில் எப்படி உதவி செய்திருக்கிறார்... கஷ்டமான சூழ்நிலையைத் தாண்டி வர எப்படிக் கைகொடுத்திருக்கிறார்... என்பதையெல்லாம் ஞாபகப்படுத்த சொல்லி யெகோவாவிடமே கேளுங்கள். இதைப் பற்றியெல்லாம் அடிக்கடி யோசித்துப் பார்த்தால் யெகோவா உங்களைத் தொடர்ந்து பலப்படுத்துவார் என்ற நம்பிக்கை கிடைக்கும்.

நமக்கு வருகிற சோதனைகள் சாத்தான் எழுப்பியிருக்கும் சவாலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது (பாராக்கள் 8-9)


9. சோதனைகளை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்? (நீதிமொழிகள் 27:11)

9 யெகோவாவை உயிருள்ள நபராகப் பார்க்கும்போது சோதனைகளை நாம் பார்க்கிற விதமே மாறிவிடும். எப்படி? நமக்கு வருகிற சோதனைகள், சாத்தான் எழுப்பியிருக்கும் சவாலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்வோம். நமக்குக் கஷ்டங்கள் வந்தால் நாம் யெகோவாவை விட்டுவிட்டு போய்விடுவோம் என்று அவன் சொல்கிறான். (யோபு 1:10, 11; நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.) அதனால், கஷ்டங்கள் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் அவர்மேல் நமக்கு அன்பு இருக்கிறது என்பதை காட்டுவோம்; சாத்தான் ஒரு பொய்யன் என்பதையும் நிரூபிப்போம். நீங்கள் வாழ்கிற இடத்தில், அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு வருகிறதா? பண கஷ்டத்தால் போராடுகிறீர்களா? ஊழியத்தில் பலன் கிடைக்கவில்லையா? அல்லது, வேறு ஏதாவது சோதனைகளால் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் சந்திக்கிற ஒவ்வொரு சூழ்நிலையையும் யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்துவதற்கான வாய்ப்புகளாகப் பாருங்கள். உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அவர் சோதனைகளை அனுமதிக்க மாட்டார் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (1 கொ. 10:13) சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை அவர் உங்களுக்குக் கண்டிப்பாக கொடுப்பார்.

உயிருள்ள கடவுள் உங்களுக்குப் பலன் கொடுப்பார்

10. தன்னை வணங்குகிறவர்களுக்கு உயிருள்ள கடவுள் என்ன செய்வார்?

10 தன்னை வணங்குகிறவர்களுக்கு யெகோவா எப்போதுமே பலன் கொடுக்கிறார். (எபி. 11:6) இப்போதே அவர் நமக்கு மனசமாதானத்தையும் திருப்தியையும் கொடுக்கிறார்; எதிர்காலத்தில் முடிவில்லாத வாழ்க்கையையும் கொடுப்பார். நமக்குப் பலன் கொடுக்க யெகோவாவுக்கு ஆசையும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. இதை உறுதியாக நம்புவதால்தான், அன்றிருந்த ஊழியர்கள் மாதிரியே நாமும் யெகோவாவுடைய சேவையில் பிஸியாக இருக்கிறோம். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தீமோத்தேயுவும் அப்படித்தான் இருந்தார்.—எபி. 6:10-12.

11. தீமோத்தேயு ஏன் சபைக்காகக் கடினமாக உழைத்தார்? (1 தீமோத்தேயு 4:10)

11 1 தீமோத்தேயு 4:10-ஐ வாசியுங்கள். உயிருள்ள கடவுள் தனக்குப் பலன் கொடுப்பார் என்று தீமோத்தேயு நம்பினார். அதனால், யெகோவாவுக்காகவும் மற்றவர்களுக்காகவும் அவர் கடினமாக உழைத்தார். எப்படி? ஊழியத்திலும் சபையிலும் ஒரு நல்ல போதகராக ஆவதற்கு அப்போஸ்தலன் பவுல் அவரை உற்சாகப்படுத்தினார்; சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க சொன்னார். சில கஷ்டமான நியமிப்புகளும் அவருக்குக் கிடைத்தது. உதாரணத்துக்கு, உறுதியாகவும் அன்பாகவும் அவர் சிலருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தது. (1 தீ. 4:11-16; 2 தீ. 4:1-5) தான் செய்த வேலைகளையெல்லாம் மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும்... அதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை என்றாலும்... யெகோவா அதையெல்லாம் பார்த்து தனக்குப் பலன் கொடுப்பார் என்று தீமோத்தேயு உறுதியாக நம்பினார்.—ரோ. 2:6, 7.

12. மூப்பர்கள் ஏன் சபைக்காகக் கடினமாக உழைக்கிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)

12 இன்று மூப்பர்களும், தாங்கள் செய்கிற வேலைகளை யெகோவா கவனிக்கிறார் என்றும், அதைப் பெரிதாக நினைக்கிறார் என்றும் உறுதியாக நம்பலாம். மேய்ப்பு சந்திப்பு செய்வது, சபையில் கற்றுக்கொடுப்பது, ஊழியம் செய்வது போன்ற வேலைகளோடு சேர்த்து நிறைய மூப்பர்கள் கட்டுமான ப்ராஜக்ட்டுகளிலும் பேரழிவு நிவாரண வேலைகளிலும் உதவுகிறார்கள். வேறுசில மூப்பர்கள், நோயாளி சந்திப்பு குழுக்களிலோ மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுக்களிலோ (HLC) சேவை செய்கிறார்கள். இதுபோன்ற வேலைகளைச் செய்கிற மூப்பர்கள், சபையை மனிதர்கள் நடத்தும் ஒரு அமைப்பாக பார்ப்பதில்லை, யெகோவாவுடைய ஏற்பாடாக பார்க்கிறார்கள். அதனால் தங்களுடைய நியமிப்புகளை முழு மனதோடு செய்கிறார்கள். தாங்கள் செய்கிற வேலைகளுக்கெல்லாம் யெகோவா கண்டிப்பாக பலன் கொடுப்பார் என்று மனதார நம்புகிறார்கள்.—கொலோ. 3:23, 24.

சபைக்காக நீங்கள் கடினமாக உழைக்கும்போது உயிருள்ள கடவுள் உங்களுக்குப் பலன் கொடுப்பார் (பாராக்கள் 12-13)


13. யெகோவாவுக்காக நாம் செய்கிற சேவையை அவர் எப்படிப் பார்க்கிறார்?

13 நாம் எல்லாருமே மூப்பர்களாக இருக்க முடியாது. ஆனால், நம் எல்லாராலும் யெகோவாவுக்காக ஏதாவது செய்ய முடியும். நம்மால் முடிந்த மிக சிறந்ததை அவருக்குக் கொடுக்கும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். உலகளாவிய வேலைக்காக நாம் கொடுக்கிற நன்கொடை, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், யெகோவா அதைக் கவனிக்கிறார். சபையில் பதில் சொல்ல நமக்குக் கூச்சமாக இருந்தாலும் முயற்சி எடுத்து கை தூக்குவதைப் பார்க்கும்போது அவருக்கு சந்தோஷமாக இருக்கும். யாராவது நம்மைக் காயப்படுத்திவிட்டால், அவரை மன்னிப்பதற்கு முயற்சி எடுக்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், உங்களால் அதிகமாக செய்ய முடியாமல் போகிறதா? உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யும்போது யெகோவா அதைப் பெரிதாக பார்க்கிறார் என்று நம்புங்கள். உங்களை அவர் நேசிக்கிறார், உங்களுக்குக் கண்டிப்பாக பலன் கொடுப்பார்.—லூக். 21:1-4.

உயிருள்ள கடவுளோடு எப்போதும் நெருங்கியிருங்கள்

14. யெகோவாவோடு நெருக்கமாக இருப்பது அவருக்கு உண்மையாக இருக்க எப்படி உதவும்? (படத்தையும் பாருங்கள்.)

14 யெகோவா நமக்கு நிஜமானவராக இருந்தால் அவருக்கு உண்மையாக இருப்பது நமக்கு சுலபமாக இருக்கும். யோசேப்புக்கு அப்படித்தான் இருந்தது. ஒழுக்கக்கேட்டில் ஈடுபடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கடவுள் அவர்முன் ஒரு நிஜமான நபராக இருந்ததால், அவரை வேதனைப்படுத்திவிடக் கூடாது என்று யோசேப்பு நினைத்தார். (ஆதி. 39:9) யெகோவா நமக்கும் நிஜமானவராக இருக்க வேண்டுமென்றால், நாம் நேரமெடுத்து அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும், பைபிளைப் படிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், அவரோடு இருக்கும் நட்பு வளரும். அப்படியொரு நல்ல நட்பு இருந்தால், அவரைக் காயப்படுத்துகிற மாதிரி எதையும் செய்துவிட மாட்டோம்.—யாக். 4:8.

உயிருள்ள கடவுளிடம் நெருங்கி போகும்போது நம்மால் அவருக்கு உண்மையாக இருக்க முடியும் (பாராக்கள் 14-15)


15. வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களுக்கு நடந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எபிரெயர் 3:12)

15 யெகோவா உயிருள்ள கடவுள் என்பதை மறக்கிறவர்கள் அவரை விட்டு விலகி போக நிறைய வாய்ப்பு இருக்கிறது. வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேலர்களுக்கு அதுதான் நடந்தது. யெகோவா உயிரோடு இருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர் தங்களைக் கவனித்துக்கொள்வாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்தது. சொல்லப்போனால், “யெகோவா நம்மோடு இருக்கிறாரா இல்லையா?” என்றுகூட அவர்கள் கேட்டார்கள். (யாத். 17:2, 7) கடைசியில், யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்தார்கள். அவர்களுடைய உதாரணம் நமக்கு ஒரு எச்சரிப்பு! நாம் அவர்களைப் போல் இருந்துவிடக் கூடாது!எபிரெயர் 3:12-ஐ வாசியுங்கள்.

16. நம்முடைய விசுவாசத்தை எது ஆட்டம்காண வைக்கலாம்?

16 யெகோவாவிடம் நெருங்கிப் போக முடியாத மாதிரி இந்த உலகம் செய்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதையே இன்று நிறைய பேர் ஏற்றுக்கொள்வதில்லை. கடவுள் விரும்புகிற மாதிரி வாழாதவர்களுடைய வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரியலாம். இதையெல்லாம் பார்க்கும்போது, கடவுள்மேல் நாம் வைத்திருக்கிற விசுவாசம் ஆட்டம்காண வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி சூழ்நிலைகளில், கடவுள் இருக்கிறாரா என்று நாம் சந்தேகப்பட மாட்டோம். ஆனால், நம்மேல் அவருக்கு அக்கறை இருக்கிறதா, நமக்கு உதவி செய்வாரா என்ற சந்தேகம் வந்துவிடலாம். சங்கீதம் 73-ஐ எழுதியவருக்கு அந்தச் சந்தேகம் வந்தது. கடவுளுடைய சட்டங்களை மதிக்காதவர்கள் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பதை அவர் பார்த்தார். கடவுளுக்குச் சேவை செய்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்றுகூட அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.—சங். 73:11-13.

17. யெகோவாவோடு எப்போதும் நெருங்கியிருக்க எது உதவி செய்யும்?

17 யோசிக்கும் விதத்தை அந்தச் சங்கீதக்காரர் எப்படி மாற்றிக்கொண்டார்? யெகோவாவை மறந்துவிடுகிறவர்களுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்பதை அவர் யோசித்துப் பார்த்தார். (சங். 73:18, 19, 27) யெகோவாவுக்குச் சேவை செய்வதால் அவருக்கு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதையும் யோசித்துப் பார்த்தார். (சங். 73:24) நாமும் அவரை மாதிரியே, யெகோவா இதுவரைக்கும் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார் என்று யோசிக்கலாம். ஒருவேளை, யெகோவாவுக்குச் சேவை செய்யாமல் இருந்திருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது அவருக்கு உண்மையாக இருக்க முடியும். அந்தச் சங்கீதக்காரர் கடைசியில் சொன்ன மாதிரி, “கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது” என்று நம்மாலும் சொல்ல முடியும்.—சங். 73:28.

18. எதிர்காலத்தை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

18 இந்தக் கடைசி நாட்களில் நமக்கு எப்படிப்பட்ட சவால்கள் வந்தாலும் அதைக் கண்டிப்பாக நம்மால் சமாளிக்க முடியும். ஏனென்றால், நாம் “உயிருள்ள உண்மைக் கடவுளுக்கு ஊழியம்” செய்கிறோம். (1 தெ. 1:9) நாம் வணங்குகிற கடவுள் நிஜமானவர்; தன்னை வணங்குகிறவர்களுக்கு உதவி செய்கிறவர். அந்தக் காலத்தில் இருந்தே, தன்னுடைய ஊழியர்களுக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார்; இன்றைக்கும் அவர் நம்மோடு இருக்கிறார். ரொம்ப சீக்கிரத்தில் இந்த உலகம் பயங்கரமான மிகுந்த உபத்திரவத்தைச் சந்திக்கப் போகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் நாம் தனியாகத் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. (ஏசா. 41:10) “‘யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன்’ . . . என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.”—எபி. 13:5, 6.

பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!