வாழ்க்கை சரிதை
யெகோவா என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்
ஒருநாள் ராத்திரி, வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் பார்த்தேன்; முட்டிப்போட்டு ஜெபம் செய்ய தோன்றியது. அப்போது எனக்கு பத்து வயது! யெகோவாவைப் பற்றி கொஞ்ச நாளுக்கு முன்புதான் கேள்விப்பட்டிருந்தேன். இருந்தாலும், என் மனதில் இருந்த எல்லாவற்றையும் சொல்லி ஜெபம் செய்தேன். ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாவோடு வாழ்நாள் முழுக்க நண்பராக இருப்பதற்கு அந்த ஜெபம்தான் ஒரு ஆரம்பப் படி. (சங். 65:2) கடவுளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாவிட்டாலும் நான் ஏன் அவரிடம் ஜெபம் செய்தேன் என்று இப்போது சொல்கிறேன்.
எங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு சந்திப்பு
டிசம்பர் 22, 1929 அன்று, பெல்ஜியம் ஆர்டனில் இருக்கிற நொவில் என்ற சின்ன கிராமத்தில்தான் நான் பிறந்தேன். அங்கே நிறைய பண்ணைகள் இருந்தன. சின்ன வயதில் அப்பா அம்மாவோடு பண்ணையில் இருந்த ஞாபகங்கள் இன்னும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. நானும் என்னுடைய தம்பி ரேமண்டும் பண்ணையில் வேலை செய்வோம், பால் கறப்போம், அறுவடை செய்வதற்கும் உதவுவோம். எங்களுடைய சின்ன கிராமத்தில் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக வேலை செய்வோம். ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்போம்.
என் அப்பா எமீலும் அம்மா ஆலிஸும் கத்தோலிக்க மதத்தில் பக்தியோடு இருந்தார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாஸ்-க்குத் தவறாமல் போய்விடுவார்கள். கிட்டத்தட்ட 1939-ல் இங்கிலாந்தில் இருந்த சில பயனியர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்திருந்தார்கள். அப்பாவிடம் கான்ஸலேஷன் பத்திரிகையைக் கொடுத்தார்கள். (இப்போது அதை விழித்தெழு! பத்திரிகை என்று சொல்கிறோம்.) அந்தப் பத்திரிகையில் இருந்தது உண்மை என்பதை அப்பா உடனே புரிந்துகொண்டார்; அதனால் பைபிளை வாசிக்க ஆரம்பித்தார். மாஸ்-க்கு போவதை நிறுத்தியபோது எங்களிடம் பாசமாகப் பழகிய அக்கம்பக்கத்தினர் பயங்கரமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். அப்பா கத்தோலிக்க மதத்தை விட்டுப் போய்விடக் கூடாது என்று கட்டாயப்படுத்தினார்கள்; நிறைய சண்டையும் வந்தது.
அப்பா இப்படிக் கஷ்டப்படுவதைப் பார்த்தபோது எனக்கும் கஷ்டமாக இருந்தது. கடவுளிடம் உதவி கேட்க வேண்டும் என்று தோன்றியது. அப்போதுதான் நான் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்தேன். ஒருகட்டத்தில், அக்கம்பக்கத்தினர் எங்களை எதிர்ப்பதை நிறுத்திவிட்டார்கள். அப்போது எனக்குப் பயங்கரச் சந்தோஷமாக இருந்தது. யெகோவா உண்மையிலேயே ‘ஜெபத்தைக் கேட்கிறார்’ என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தேன்.
இரண்டாம் உலகப் போரின்போது
மே 10, 1940 அன்று, பெல்ஜியம் மீது நாசி ஜெர்மனி படையெடுத்தது. நிறைய பேர் நாட்டைவிட்டு தப்பித்துப் போனார்கள். நாங்கள் குடும்பமாக பிரான்சின் தெற்குப் பகுதிக்குத் தப்பித்துப் போனோம். போகிற வழியில், ஜெர்மன் படையும் பிரஞ்சு படையும் பயங்கரமாக மோதிக்கொண்டிருந்த இடங்களில் நாங்கள் மாட்டிக்கொண்டோம். ஆனாலும் தொடர்ந்து பயணம் செய்தோம்.
நாங்கள் எங்கள் பண்ணைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, எங்களுடைய முக்கால்வாசி பொருள்கள் திருடப்பட்டிருந்தன. எங்களுடைய நாய் பாபி மட்டும்தான் எங்களுக்காகக் காத்திருந்தது. இதையெல்லாம் பார்த்தபோது, ‘இந்த மாதிரி போர்களும் கஷ்டங்களும் ஏன் நடக்கிறது’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட அதேசமயத்தில், எமீல் ஷ்ரான்ஸ் a என்ற சகோதரர் எங்களைச் சந்தித்தார். அவர் ஒரு மூப்பராகவும் பயனியராகவும் இருந்தார். நாம் ஏன் கஷ்டப்படுகிறோம் என்பதற்கும் என் மனதில் இருந்த மற்ற கேள்விகளுக்கும் அவர் பைபிளிலிருந்து பதில்களைக் காட்டினார். அதனால், நான் யெகோவாவிடம் இன்னும் நெருக்கமாகப் போனேன். அவர் உண்மையிலேயே ஒரு அன்பான கடவுள் என்பதை நம்ப ஆரம்பித்தேன்.
போர் முடிவதற்கு முன்பே எங்களால் நிறைய சகோதரர்களோடு பழக முடிந்தது. ஆகஸ்ட் 1943-ல் ஜோசே நிக்கோலா மினே என்ற சகோதரர் எங்களுடைய பண்ணைக்கு வந்து ஒரு பேச்சு கொடுத்தார். அப்போது, “யாரெல்லாம் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். என் அப்பாவும் நானும் கை தூக்கினோம். எங்கள் பண்ணைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன ஆற்றில் நாங்கள் ஞானஸ்நானம் எடுத்தோம்.
டிசம்பர் 1944-ல், ஜெர்மன் படை மேற்கு ஐரோப்பாவில் கடைசி தாக்குதலை நடத்தியது. அது பயங்கரமாக இருந்தது! அந்தத் தாக்குதலை பேட்டில் ஆஃப் பல்ஜ் (Battle of Bulge) என்று சொல்வார்கள். நாங்கள் இருந்த இடத்துக்கு ரொம்பப் பக்கத்தில்தான் அது நடந்தது. அதனால், கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு பேஸ்மென்டிலேயே இருந்தோம். ஒருநாள் மிருகங்களுக்குத் தீனி போடுவதற்காக நான் வெளியே வந்தேன். அப்போது திடீரென்று பண்ணையில் குண்டு போட ஆரம்பித்தார்கள்; தானியக் கிடங்கின் கூரை முழுவதும் நாசமானது. மிருகங்களைக் கட்டி வைக்கிற இடத்தில் ஒரு அமெரிக்க வீரர் இருந்தார். அவர் என்னிடம் “கீழே படுத்துக்கொள்” என்று சத்தமாகச் சொன்னார். நான் உடனே ஓடிப்போய் அவர் பக்கத்தில் படுத்துக்கொண்டேன். என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் தன்னுடைய ஹெல்மெட்டை எனக்குப் போட்டுவிட்டார்.
யெகோவாவிடம் நெருங்கினேன்
போர் முடிந்த பிறகு, லீஜ் சபையில் இருந்த சகோதர சகோதரிகளோடு எங்களால் பழக முடிந்தது. அந்தச் சபை, நாங்கள் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் வடக்கில் இருந்தது. கொஞ்ச நாளுக்குப் பிறகு, எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்த பேஸ்டோன் என்ற இடத்தில் ஒரு சின்ன தொகுதியை ஆரம்பித்தோம். வரி சம்பந்தப்பட்ட ஒரு வேலையை நான் செய்ய ஆரம்பித்தேன். சட்டம் படிப்பதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு, நான் நோட்டரி கிளர்க்காக வேலை செய்தேன். 1951-ல் பேஸ்டோனில் ஒரு சின்ன வட்டார மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தோம். கிட்டத்தட்ட 100 பேர் வந்திருந்தார்கள். அவர்களில் எல்லீ ரூட்டர் என்ற சகோதரியும் ஒருவர். அவள் ரொம்பச் சுறுசுறுப்பாக ஊழியம் செய்துகொண்டிருந்த ஒரு பயனியர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 50 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு
வந்திருந்தாள். சீக்கிரத்திலேயே நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம், நிச்சயமும் பண்ணிக்கொண்டோம். கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கு எல்லீக்கு ஏற்கெனவே அழைப்பு கிடைத்திருந்தது. ஆனால், அதில் கலந்துகொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. அதனால், அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதி உலகத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினாள். அப்போது அமைப்பை வழிநடத்திக்கொண்டிருந்த சகோதரர் நார் அதற்குப் பதில் அனுப்பினார். ‘ஒருநாள் உங்கள் கணவரோடு அதில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கலாம்’ என்று அவர் அன்பாக எழுதியிருந்தார். பிப்ரவரி 1953-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்.அதே வருஷத்தில், எல்லீயும் நானும் யாங்கீ ஸ்டேடியத்தில் நடந்த நியு வேர்ல்ட் சொசைட்டி அசம்பிளியில் கலந்துகொள்வதற்காக நியு யார்க்குக்குப் போனோம். அங்கே நாங்கள் ஒரு சகோதரரைப் பார்த்தோம். அவர் எங்களுக்கு ஒரு நல்ல வேலையைக் கொடுப்பதாகச் சொன்னார். அமெரிக்காவுக்கே குடிமாறி வந்துவிடுங்கள் என்றும் சொன்னார். ஆனால், அதைப் பற்றி நன்றாக யோசித்து ஜெபம் செய்த பிறகு, அந்த வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தோம். பெல்ஜியமுக்கே திரும்பிப் போய், பேஸ்டோனில் இருந்த சின்ன தொகுதியோடு சேர்ந்து சேவை செய்யலாம் என்று நினைத்தோம்; அப்போது அங்கே கிட்டத்தட்ட 10 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். அடுத்த வருஷம் எங்களுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு செர்கே என்று பெயர் வைத்தோம். ஆனால், ஏழே மாசத்தில் செர்கே உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டான். எங்கள் மனதில் இருந்த வேதனையையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினோம். உயிர்த்தெழுதல் நம்பிக்கைதான் எங்களுக்குப் பலம் கொடுத்தது.
முழுநேர சேவை
அக்டோபர் 1961-ல் பயனியர் செய்வதற்கு ஏற்ற மாதிரி ஒரு பகுதி நேர வேலை எனக்குக் கிடைத்தது. அதே நாளில் பெல்ஜியம் கிளை அலுவலக ஊழியர் எனக்கு ஃபோன் செய்தார். ஒரு வட்டார ஊழியராக (இப்போது, வட்டாரக் கண்காணி என்று அழைக்கிறோம்) என்னால் சேவை செய்ய முடியுமா என்று கேட்டார். “இந்த நியமிப்பைச் செய்வதற்கு முன்பு கொஞ்ச நாள் நாங்கள் பயனியர்களாக சேவை செய்ய முடியுமா?” என்று கேட்டேன். எங்களுக்கு அனுமதி கிடைத்தது. எட்டு மாசங்களுக்கு நாங்கள் பயனியர்களாகச் சேவை செய்தோம். பிறகு, செப்டம்பர் 1962-ல் வட்டாரச் சேவையை ஆரம்பித்தோம்.
இரண்டு வருஷங்கள் வட்டாரச் சேவை செய்த பிறகு, ப்ருஸ்ஸெல்ஸில் இருந்த கிளை அலுவலகத்தில் சேவை செய்வதற்கு எங்களுக்கு அழைப்பு கிடைத்தது. அக்டோபர் 1964-ல் நாங்கள் அங்கே சேவை செய்ய ஆரம்பித்தோம். இந்தப் புது நியமிப்பு எங்களுக்கு நிறைய ஆசீர்வாதங்களை அள்ளித்தந்தது. 1965-ல் சகோதரர் நார் எங்கள் கிளை அலுவலகத்தைச் சந்தித்தார். அவர் வந்துவிட்டுப் போன கொஞ்ச நாளிலேயே என்னைக் கிளை அலுவலக ஊழியராக நியமித்தார்கள். அது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. பிறகு, 41-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கு எல்லீக்கும் எனக்கும் அழைப்பு கிடைத்தது. சகோதரர் நார் 13 வருஷங்களுக்கு முன்பு சொன்ன வார்த்தைகள் அப்போது நிஜமானது! கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, நாங்கள் மறுபடியும் பெல்ஜியம் கிளை அலுவலகத்துக்கு வந்தோம்.
சட்ட உரிமைகளுக்காகப் போராடினோம்
சட்டம் சம்பந்தமாக எனக்கு சில விஷயங்கள் தெரிந்திருந்ததால், ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் இருந்த யெகோவாவின் மக்களுடைய உரிமைகளுக்காக என்னால் போராட முடிந்தது. (பிலி. 1:7) கிட்டத்தட்ட 55-க்கும் அதிகமான நாடுகளில் இருந்த அதிகாரிகளைச் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடுகளில் நம்முடைய வேலைக்குத் தடையோ கட்டுப்பாடுகளோ இருந்தன. அந்த அதிகாரிகளைச் சந்தித்தபோது, சட்டம் சம்பந்தமாக எனக்கு இருந்த அனுபவத்தைச் சொல்வதற்குப் பதிலாக, “நான் கடவுளுடைய ஊழியர்” என்று அறிமுகப்படுத்திக்கொள்வேன். நான் வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். ஏனென்றால், “ராஜாவின் [அல்லது நீதிபதியின்] இதயம் யெகோவாவின் கையில் நீரோடைபோல் இருக்கிறது. தான் விரும்பும் திசையில் அதை அவர் திருப்பிவிடுகிறார்” என்று எனக்குத் தெரியும்.—நீதி. 21:1.
என் மனதைத் தொட்ட ஒரு அனுபவத்தைச் செல்ல வேண்டுமென்றால், அது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரோடு பேசியதுதான்! அவரிடம் பேசுவதற்கு நான் நிறைய தடவை அனுமதி கேட்டேன். ஒருவழியாக, என்னை சந்திப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அவரைப் பார்த்தபோது, “உனக்கு ஐந்து நிமிஷங்கள்தான் தருவேன், அதற்குமேல் ஒரு நிமிஷம்கூட கிடையாது!” என்று சொன்னார். நான் உடனே தலை குனிந்து ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது, “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். நான் நிமிர்ந்து அவரைப் பார்த்து, “கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால், நீங்களும் அவருடைய ஊழியர்தான்” என்று சொன்னேன். “நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். ரோமர் 13:4-ஐக் காட்டினேன். அவர் ஒரு புராட்டஸ்டன்டாக இருந்ததால், பைபிளைப் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது. அந்த வசனம் அவருக்குப் பிடித்திருந்தது. அதனால் அரை மணிநேரம் பேசுவதற்கு நேரம் கொடுத்தார். அந்தச் சந்திப்பு ரொம்ப நன்றாகப் போனது. ‘சாட்சிகளுடைய வேலையை நான் உயர்வாக மதிக்கிறேன்’ என்றும் சொன்னார்.
பல வருஷங்களாகவே, யெகோவாவுடைய மக்கள் ஐரோப்பாவில் நிறைய வழக்குகளில் போராடியிருக்கிறார்கள். நடுநிலையோடு இருப்பதற்காக, பிள்ளை வளர்ப்பு உரிமைக்காக, வரி சம்பந்தமாக மற்றும் இன்னும் சில உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறார்கள். இதில் நிறைய வழக்குகளில் உதவி செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. யெகோவா எப்படியெல்லாம் நம்மை வழிநடத்தி, நமக்கு வெற்றி கொடுக்கிறார் என்பதை நான் கண்ணாரப் பார்த்திருக்கிறேன். மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு 140-க்கும் அதிகமான வழக்குகளில் வெற்றி கிடைத்திருக்கிறது!
கியூபாவில் நம் வளர்ச்சி
1990-களில், உலகத் தலைமை அலுவலகத்தில் இருந்த சகோதரர் ஃபிலிப் ப்ரம்லி மற்றும் இத்தாலியிலிருந்த சகோதரர் வால்டர் ஃபார்னெட்டியோடு சேர்ந்து நான் வேலை செய்தேன். கியூபாவில் இருந்த சகோதர சகோதரிகளுடைய மதச் சுதந்தரத்துக்காக நாங்கள் போராடினோம். ஏனென்றால், அங்கே நம் வேலைக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. பெல்ஜியமில் இருந்த கியூபா நாட்டின் தூதரகத்துக்கு நாங்கள் எழுதினோம். எங்களிடம் பேசுவதற்காக ஒரு அதிகாரியை நியமித்தார்கள்; நாங்கள் அவரைச் சந்தித்தோம். ஆரம்பத்தில், நம்மைப் பற்றி அவர்கள் புரிந்துவைத்திருந்த சில தப்பான விஷயங்களை எங்களால் தெளிவுபடுத்த முடியவில்லை.
யெகோவாவிடம் ஜெபம் செய்த பிறகு, கியூபாவில் இருந்த நம் சகோதரர்களுக்கு 5,000 பைபிள்களை அனுப்புவதற்கு அனுமதி கேட்டோம். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அந்த பைபிள்கள் பாதுகாப்பாகச் சகோதர சகோதரிகளிடம் போய்ச் சேர்ந்தன. இதிலிருந்து யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததைப் புரிந்துகொண்டோம். அதனால், இன்னும் 27,500 பைபிள்களை அனுப்புவதற்கு அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி கிடைத்தது. கியூபாவில் இருந்த ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் சொந்தமாக ஒரு பைபிள் கிடைக்க உதவி செய்ததை நினைத்துச் சந்தோஷப்பட்டேன்.
சட்டம் சம்பந்தமான உதவிகளைச் செய்வதற்காக, நான் நிறைய தடவை கியூபாவுக்குப் போனேன். அந்தச் சமயங்களில், அங்கிருந்த நிறைய அதிகாரிகளோடு என்னால் ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முடிந்தது.
ருவாண்டாவில் இருக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்தது
1994-ல், ருவாண்டாவில், டுட்ஸி இனத்துக்கு எதிராக நடந்த இனப்படுகொலையில் 10,00,000-க்கும் அதிகமான மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். வருத்தமான விஷயம் என்னவென்றால் நம்முடைய சகோதர சகோதரிகள் சிலர்கூட கொல்லப்பட்டார்கள். நிவாரண உதவி செய்வதற்காக சீக்கிரத்திலேயே சில சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
தலைநகர் கிகாலிக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, மொழிபெயர்ப்பு அலுவலகமும் பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்த இடமும் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. சில சகோதர சகோதரிகள் அரிவாள்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டோம். அதேசமயத்தில், ஒருவருக்கொருவர் எப்படி உண்மையான அன்பைக் காட்டினார்கள் என்றும் கேள்விப்பட்டோம். டூட்சி இனத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் தன்னுடைய அனுபவத்தைச் சொன்னார். அவர் ஒரு குழிக்குள் 28 நாட்கள் ஒளிந்திருந்தாராம். ஹூடூ இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்தான் அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள். கிகாலியில் நடந்த ஒரு கூட்டத்தில், 900-க்கும் அதிகமான சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தோம்.
அடுத்து நாங்கள் எல்லையைக் கடந்து செயிர் என்ற இடத்துக்குப் போனோம். (இப்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு) கோமா என்ற நகரத்துக்குப் பக்கத்தில் இருந்த அகதிகள் முகாமில் சகோதர சகோதரிகளைக் கண்டுபிடிப்பதற்காக அங்கே போனோம். ஆனால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தோம். அந்தச் சமயத்தில் ஒருவர் எங்களைப் பார்த்தபடி நடந்து வந்தார். நாங்கள் அவரிடம், “யெகோவாவின் சாட்சிகள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டோம். “நானும் ஒரு யெகோவாவின் சாட்சிதான். வாருங்கள், நான் உங்களை நிவாரணக் குழுவிடம் கூட்டிக்கொண்டுப் போகிறேன்” என்று அவர் சொன்னார். நிவாரணக் குழுவில் இருந்தவர்களை நாங்கள் உற்சாகப்படுத்தினோம். பிறகு, கிட்டத்தட்ட 1,600 அகதிகளைச் சந்தித்தோம். பைபிளிலிருந்து அவர்களுக்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் கொடுத்தோம். ஆளும் குழுவிடமிருந்து வந்த கடிதத்தில் இருந்த சில விஷயங்களையும் சொன்னோம். அதில் இப்படிச் சொல்லியிருந்தது: “உங்களுக்காக நாங்கள் எப்போதும் ஜெபம் செய்கிறோம். யெகோவா உங்களைக் கைவிடவே மாட்டார் என்று எங்களுக்குத் தெரியும்.” இந்த வார்த்தைகள் அந்தச் சகோதர சகோதரிகளுடைய மனதை ஆழமாகத் தொட்டது. ஆளும் குழு சொன்னது எவ்வளவு உண்மை! இன்று, ருவாண்டாவில் 30,000-க்கும் அதிகமான சாட்சிகள் சந்தோஷமாக யெகோவாவை வணங்குகிறார்கள்!
தொடர்ந்து உண்மையாக இருக்க உறுதியாக இருக்கிறேன்
கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட 58 வருஷங்களுக்குப் பிறகு, அதாவது 2011-ல், நான் நெஞ்சார நேசித்த என் மனைவி எல்லீயை மரணத்தில் பறிகொடுத்தேன். என்னுடைய வேதனையை ஜெபத்தில் யெகோவாவிடம் கொட்டினேன். அவர் எனக்கு ஆறுதல் கொடுத்தார். நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதும் எனக்கு ஆறுதலாக இருந்தது.
இப்போது எனக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. இருந்தாலும், நான் ஒவ்வொரு வாரமும் ஊழியத்தில் கலந்துகொள்கிறேன். அதோடு, பெல்ஜியம் கிளை அலுவலகத்தில் இருக்கிற சட்ட இலாகாவுக்கு உதவி செய்கிறேன், என்னுடைய அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்கிறேன், பெத்தேல் குடும்பத்தில் இருக்கிற இளம் சகோதர சகோதரிகளுக்கு மேய்ப்பு சந்திப்பு செய்கிறேன். இவையெல்லாம் எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 84 வருஷங்களுக்கு முன்பு நான் யெகோவாவிடம் முதல் தடவையாக ஜெபம் செய்தேன். அப்போது முதல், யெகோவா என் கூடவே இருந்திருக்கிறார். நான் இன்னும் அவரிடம் நெருங்கிப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். வாழ்நாள் முழுக்க யெகோவா என்னுடைய ஜெபத்தைக் கேட்டு அதற்குப் பதில் கொடுத்திருப்பதை நினைத்து நான் ரொம்ப ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.—சங். 66:19. b