Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 23

பாட்டு 28 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

யெகோவா நம்மை விருந்தாளிகளாக அழைக்கிறார்!

யெகோவா நம்மை விருந்தாளிகளாக அழைக்கிறார்!

“என் கூடாரம் அவர்களோடு இருக்கும். நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.”எசே. 37:27, அடிக்குறிப்பு.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவின் அடையாள அர்த்தமுள்ள கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பதன் அர்த்தம் என்ன... அவருடைய விருந்தாளிகளை அவர் எப்படிக் கவனித்துக்கொள்கிறார்... என்றெல்லாம் கற்றுக்கொள்வோம்.

1-2. யெகோவா தன்னை உண்மையாக வணங்குகிறவர்களுக்கு என்ன அழைப்பைக் கொடுக்கிறார்?

 யெகோவா யார் என்று உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஒருவேளை, ‘யெகோவா என் அப்பா, என் கடவுள், என் ஃப்ரெண்டு’ என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். அவரை வேறு வார்த்தைகளில்கூட நீங்கள் விவரிக்கலாம். ஆனால், உங்களை விருந்தாளியாகக் கூப்பிட்டு உபசரிக்கும் ஒருவராக உங்களால் அவரைப் பார்க்க முடிகிறதா?

2 யெகோவா தன்னை உண்மையாக வணங்குகிறவர்களைத் தன் கூடாரத்துக்கு விருந்தாளிகளாக அழைப்பதாக தாவீது ராஜா எழுதியிருக்கிறார். “யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?” என்று அவர் கேட்டார். (சங். 15:1) நாம் யெகோவாவின் விருந்தாளிகளாக, அதாவது அவருடைய நண்பர்களாக, இருக்க முடியும் என்பதை இந்த வசனத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். எவ்வளவு பெரிய அழைப்பை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்! இதைவிடப் பெரிய கௌரவம் வேறு ஏதாவது இருக்க முடியுமா!

தன் கூடாரத்துக்கு வந்து தங்கும்படி யெகோவா அழைக்கிறார்

3. யெகோவாவின் முதல் விருந்தாளி யார், யெகோவாவும் அந்த விருந்தாளியும் எந்தளவு நெருக்கமாக இருந்தார்கள்?

3 எல்லாவற்றையும் படைப்பதற்கு முன்பு யெகோவா தனியாகத்தான் இருந்தார். அதன் பிறகு, தன்னுடைய முதல் மகனைப் படைத்தார். அப்போது, யெகோவா தன்னுடைய கூடாரத்துக்குத் தன் மகனை முதல் விருந்தாளியாக அழைத்ததுபோல் இருந்தது. முதன்முதலில் தன் கூடாரத்துக்கு ஒரு விருந்தாளி வந்ததை நினைத்து யெகோவா ரொம்ப சந்தோஷப்பட்டார். அவருடைய மகன் அவருக்கு “செல்லப்பிள்ளையாக” இருந்ததாக பைபிள் சொல்கிறது. அவருடைய மகனும் ‘[யெகோவாமுன்] எப்போதும் சந்தோஷமாக இருந்தார்.’—நீதி. 8:30.

4. வேறு யாரையெல்லாம் யெகோவா தன் கூடாரத்துக்கு விருந்தாளிகளாக அழைத்தார்?

4 அதன் பிறகு, யெகோவா தேவதூதர்களைப் படைத்தார். அப்போது, அவர்களையும் தன் கூடாரத்துக்கு விருந்தாளிகளாக அவர் அழைத்ததுபோல் இருந்தது. அந்தத் தேவதூதர்களை “கடவுளுடைய மகன்கள்” என்று பைபிள் சொல்கிறது; அவர்கள் யெகோவாவோடு சந்தோஷமாக இருப்பதாகவும் அது சொல்கிறது. (யோபு 38:7, அடிக்குறிப்பு; தானி. 7:10) நிறைய வருஷங்களாக, யெகோவாவோடு பரலோகத்தில் வாழ்ந்தவர்கள் மட்டும்தான் அவருடைய கூடாரத்தில் விருந்தாளிகளாக இருந்தார்கள். பிறகு, கடவுள் மனிதர்களைப் படைத்தார். அந்தச் சமயத்திலிருந்து, அவருடைய கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்க மனிதர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உதாரணத்துக்கு, ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், யோபு போன்றவர்கள் கடவுளுடைய விருந்தாளிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் ‘உண்மைக் கடவுளுடைய’ வழியில் நடந்தார்கள் என்றும், அவருடைய நண்பர்களாக இருந்தார்கள் என்றும் பைபிள் சொல்கிறது.—ஆதி. 5:24; 6:9; யோபு 29:4; ஏசா. 41:8.

5. எசேக்கியேல் 37:26, 27-ல் சொல்லியிருக்கும் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

5 எத்தனையோ நூற்றாண்டுகளாக, யெகோவா தன் நண்பர்களைத் தன்னுடைய கூடாரத்துக்கு விருந்தாளிகளாக அழைத்துவந்திருக்கிறார். (எசேக்கியேல் 37:26, 27-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) தன்னை உண்மையாக வணங்குகிறவர்கள் தன்னோடு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் யெகோவாவின் ஆசை என்பதை எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. “அவர்களோடு சமாதான ஒப்பந்தம்” செய்வதாக அதில் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களும் யெகோவாவின் கூடாரத்தில் ‘ஒரே மந்தையாக’ இருக்கப்போகும் காலத்தைப் பற்றி எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (யோவா. 10:16) அந்தக் காலம் இதுதான்!

நாம் எங்கிருந்தாலும் சரி, கடவுள் நம்மைக் கவனித்துக்கொள்கிறார்

6. யெகோவாவின் கூடாரத்தில் எப்போது ஒருவரால் விருந்தாளியாக ஆக முடியும், யெகோவாவின் கூடாரம் எங்கே இருக்கிறது?

6 பைபிள் காலங்களில், ஒருவருடைய கூடாரம் ஓய்வெடுப்பதற்கான இடமாகவும், வெயில், மழை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் இடமாகவும் இருந்தது. தங்கள் கூடாரத்துக்கு விருந்தாளிகளாக வருகிறவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வது மக்களின் வழக்கமாக இருந்தது. நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும்போது, அவருடைய கூடாரத்தில் விருந்தாளியாகப் போய்த் தங்குகிறோம் என்று சொல்லலாம். (சங். 61:4) யெகோவாவின் கூடாரத்தில் நமக்கு ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கிறது, அவருடைய மற்ற விருந்தாளிகளுடைய நட்பும் கிடைக்கிறது. யெகோவாவின் கூடாரம் ஒரேவொரு இடத்தில் மட்டும் இருப்பதாக நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. நீங்கள் ஒருவேளை ஒரு விசேஷ மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாட்டுக்குப் போயிருந்தால், கடவுளுடைய கூடாரத்தில் இருக்கும் மற்றவர்களையும் அங்கே பார்த்திருப்பீர்கள். அப்படியென்றால், யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்கள் எங்கே இருந்தாலும் சரி, அங்கே யெகோவாவின் கூடாரம் இருக்கிறது.—வெளி. 21:3.

7. இறந்துபோன யெகோவாவின் ஊழியர்கள் இன்னமும் அவருடைய கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? (படத்தையும் பாருங்கள்.)

7 இறந்துபோன யெகோவாவின் ஊழியர்கள் இன்னமும் அவருடைய கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்கிறார்களா? இருக்கிறார்கள்! எப்படிச் சொல்லலாம்? யெகோவா இன்னமும் அவர்களைத் தன்னுடைய ஞாபகத்தில் வைத்திருக்கிறார், அதனால் அவரைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இயேசு இப்படிச் சொன்னார்: “இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதை மோசேயும்கூட முட்புதரைப் பற்றிய தன் பதிவில் சொல்லியிருக்கிறார். அதில், யெகோவாவை ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று அவர் அழைத்திருக்கிறார். கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்.”—லூக். 20:37, 38.

இறந்துபோன யெகோவாவின் ஊழியர்கள்கூட அவருடைய கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்கிறார்கள் (பாரா 7)


கிடைக்கும் நன்மைகளும் எதிர்பார்க்கப்படும் தகுதிகளும்

8. யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?

8 நிஜமான கூடாரத்தில் ஓய்வும் பாதுகாப்பும் கிடைப்பதுபோல் யெகோவாவின் கூடாரத்திலும் பாதுகாப்பு கிடைக்கிறது. அதில் விருந்தாளிகளாக இருப்பவர்கள், அவரோடு இருக்கும் நட்பைப் பாதிக்கும் விஷயங்களிலிருந்தும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள். நாம் யெகோவாவோடு நெருக்கமாக இருக்கும்போது, நம்மை நிரந்தரமாகப் பாதிக்கும் எந்தவொரு கெடுதலையும் சாத்தானால் செய்ய முடியாது. (சங். 31:23; 1 யோ. 3:8) புதிய உலகத்திலும் யெகோவா தன்னுடைய உண்மையுள்ள நண்பர்களைப் பாதுகாப்பார். அவரோடு இருக்கும் நட்பைப் பாதிக்கும் விஷயங்களிலிருந்து மட்டுமல்ல, மரணத்திலிருந்தும் பாதுகாப்பார்.—வெளி. 21:4.

9. தன் விருந்தாளிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

9 யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட கௌரவம்! நம்மால் என்றென்றும் அவருடைய நெருக்கமான நண்பர்களாக இருக்க முடியும்! ஆனால், அவருடைய கூடாரத்தில் தொடர்ந்து விருந்தாளிகளாக இருப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? யாராவது நம்மை விருந்தாளியாகக் கூப்பிட்டால், அவர் எதிர்பார்ப்பது போல நடந்துகொள்ள நினைப்போம். உதாரணத்துக்கு, வீட்டுக்குள் வருவதற்குமுன் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வர வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தால் அதைக் கண்டிப்பாகச் செய்வோம். அதேபோல், யெகோவா தன் விருந்தாளிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொண்டு அதன்படி நடக்க நாம் கண்டிப்பாக விரும்புவோம். யெகோவாமேல் நாம் அன்பு வைத்திருப்பதால் “அவரை முழுமையாகப் பிரியப்படுத்த” நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். (கொலோ. 1:10) யெகோவா நம் நண்பர்தான், அதேசமயத்தில் நம் கடவுளாகவும் அப்பாவாகவும் இருக்கிறார். இதை நம் மனதில் வைத்துக்கொண்டு, அவருக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையைக் கொடுக்க வேண்டும். (சங். 25:14) எப்போதும் அவருக்குப் பயபக்தியைக் காட்ட வேண்டும். அந்தப் பயபக்தி, அவருடைய மனதைக் கஷ்டப்படுத்திவிடாமல் இருக்க நமக்கு உதவும். நம் கடவுளுடைய வழியில் எப்போதும் ‘அடக்கத்தோடு நடக்க வேண்டும்’ என்றுதான் நாம் எப்போதும் ஆசைப்படுகிறோம்.—மீ. 6:8.

இஸ்ரவேலர்களை யெகோவா பாரபட்சம் இல்லாமல் நடத்தினார்

10-11. யெகோவா பாரபட்சம் காட்டாதவர் என்பதற்கு ஒரு உதாரணம் என்ன?

10 யெகோவா தன் விருந்தாளிகளிடம் பாரபட்சம் காட்டுவதில்லை. (ரோ. 2:11) சீனாய் வனாந்தரத்தில் யெகோவா இஸ்ரவேலர்களை நடத்திய விதத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம்.

11 எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை யெகோவா விடுதலை செய்த பிறகு, வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய குருமார்களை நியமித்தார். அந்தப் பரிசுத்த கூடாரத்தில் இருந்த மற்ற வேலைகளைச் செய்ய லேவியர்களை அவர் நியமித்தார். அப்படியென்றால், வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்தவர்களை அல்லது அதற்குப் பக்கத்தில் தங்கியிருந்தவர்களை மட்டும்தான் யெகோவா விசேஷமாகக் கவனித்துக்கொண்டாரா? இல்லை! யெகோவா பாரபட்சம் காட்டாதவர்.

12. இஸ்ரவேலர்களிடம் யெகோவா பாரபட்சம் இல்லாமல் நடந்துகொண்டார் என்பதை என்னென்ன விஷயங்கள் காட்டின? (யாத்திராகமம் 40:38) (படத்தையும் பாருங்கள்.)

12 இஸ்ரவேலர்கள் வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்தார்களோ இல்லையோ, அதற்குப் பக்கத்தில் தங்கியிருந்தார்களோ இல்லையோ, அவர்கள் ஒவ்வொருவராலும் யெகோவாவின் நெருக்கமான நண்பராக ஆக முடிந்தது. உதாரணத்துக்கு, வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகத் தூணையும் நெருப்புத் தூணையும் யெகோவா அற்புதமாக வரவைத்தபோது முழு தேசத்துக்கும் அவை தெரியும்படி பார்த்துக்கொண்டார். (யாத்திராகமம் 40:38-ஐ வாசியுங்கள்.) அந்த மேகம் புதிய திசையில் நகர ஆரம்பித்தபோது, வழிபாட்டுக் கூடாரத்திலிருந்து ரொம்பத் தூரத்தில் தங்கியிருந்தவர்களால்கூட அதைப் பார்க்க முடிந்தது; உடனே அவர்கள் தங்கள் பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தையும் பிரித்து எடுத்துக்கொண்டு, மற்ற எல்லாரோடும் சேர்ந்து அங்கிருந்து கிளம்ப முடிந்தது. (எண். 9:15-23) அதேபோல், ஒரு இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் என்பதற்கு அடையாளமாக இரண்டு எக்காளங்கள் ஊதப்பட்டபோது, அந்தச் சத்தத்தை எல்லாராலும் கேட்க முடிந்தது. (எண். 10:2) அப்படியென்றால், ஒருவர் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பக்கத்தில் தங்கியிருந்தார் என்பதற்காக மற்றவர்களைவிட அவர் யெகோவாவோடு இன்னும் அதிக நெருக்கமாக இருந்தார் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு இஸ்ரவேலராலும் யெகோவாவின் விருந்தாளியாக இருக்க முடிந்தது, அவருடைய வழிநடத்துதலும் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கவும் முடிந்தது. அதேபோல் இன்றும், இந்த உலகத்தில் நாம் எங்கே இருந்தாலும் சரி, யெகோவா நம்மேல் அன்பு காட்டுகிறார்... நம்மைக் கவனித்துக்கொள்கிறார்... நம்மைப் பாதுகாக்கிறார்... என்பதில் உறுதியாக இருக்கலாம்.

முகாமுக்கு நடுவில் இருந்த வழிபாட்டுக் கூடாரம், யெகோவா பாரபட்சம் இல்லாதவர் என்பதற்கு அத்தாட்சியாக இருந்தது (பாரா 12)


இன்றும் யெகோவா பாரபட்சம் காட்டுவதில்லை

13. இன்றும் யெகோவா பாரபட்சம் காட்டுவதில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

13 இன்று யெகோவாவின் மக்களில் சிலர் உலகத் தலைமை அலுவலகத்துக்குப் பக்கத்திலோ ஏதாவது ஒரு கிளை அலுவலகத்துக்குப் பக்கத்திலோ குடியிருக்கிறார்கள். இன்னும் சிலர் அந்த இடங்களில் சேவை செய்கிறார்கள். அதனால், அங்கு நடக்கும் நிறைய விஷயங்களில் அவர்களால் கலந்துகொள்ள முடிகிறது, பொறுப்பில் இருக்கும் சகோதரர்களோடு நெருங்கிப் பழகவும் முடிகிறது. வேறு சிலர் பயணக் கண்காணிகளாகச் சேவை செய்கிறார்கள் அல்லது வேறு விதமான விசேஷ முழுநேர சேவை செய்கிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளில் முக்கால்வாசி பேருக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. உங்களுக்கும் அப்படித்தானா? அப்படியென்றால், ஒரு விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்: நீங்களும் யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்கிறீர்கள், அவர் உங்கள்மேலும் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்! தன் கூடாரத்தில் இருக்கும் ஒவ்வொருவரையுமே யெகோவா நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். (1 பே. 5:7) தன் மக்கள் எல்லாருக்குமே ஆன்மீக உணவையும், வழிநடத்துதலையும், பாதுகாப்பையும் அவர் தருகிறார்.

14. யெகோவா பாரபட்சம் காட்டாதவர் என்பதற்கு இன்னொரு உதாரணம் என்ன?

14 யெகோவா பாரபட்சம் காட்டாதவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், உலகம் முழுவதும் இருக்கும் எல்லாருக்குமே பைபிள் கிடைக்கும்படி அவர் செய்திருக்கிறார். பைபிள் ஆரம்பத்தில் எபிரெயு, அரமேயிக், கிரேக்கு என்ற மூன்று மொழிகளில் எழுதப்பட்டது. அந்த மொழிகளை வாசிக்கத் தெரிந்தவர்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக யெகோவாவோடு நெருக்கமாக இருக்கிறார்களா? இல்லை!—மத். 11:25.

15. யெகோவா பாரபட்சம் காட்டாதவர் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

15 நாம் நிறைய படித்திருந்தால் மட்டும்தான் அல்லது ஆரம்பத்தில் பைபிள் எழுதப்பட்ட மொழிகளைத் தெரிந்து வைத்திருந்தால் மட்டும்தான் யெகோவா நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொள்வார் என்பதில்லை. யெகோவா தன்னுடைய ஞானம் பொதிந்த வார்த்தைகளை உலகம் முழுவதும் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கிறார். அவர்கள் நிறைய படித்திருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. அவருடைய புத்தகமான பைபிள் இன்று ஆயிரக்கணக்கான மொழிகளில் கிடைக்கிறது. அதனால், உலகம் முழுவதும் இருக்கும் எல்லாருமே அதில் இருக்கும் போதனைகளிலிருந்து நன்மை அடைகிறார்கள், கடவுளோடு எப்படி நண்பராகலாம் என்றும் தெரிந்துகொள்கிறார்கள்.—2 தீ. 3:16, 17.

இன்று பைபிள் எல்லாருக்குமே கிடைப்பது, யெகோவா பாரபட்சம் இல்லாதவர் என்பதை எப்படிக் காட்டுகிறது? (பாரா 15)


எப்போதும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ளுங்கள்

16. அப்போஸ்தலர் 10:34, 35 சொல்வதுபோல், நாம் எப்படி யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி எப்போதுமே நடந்துகொள்ளலாம்?

16 யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம்! அவர் உபசரிக்கும் அளவுக்கு அன்போடும் பாசத்தோடும் உபசரிக்கிறவர்கள் வேறு யாருமே கிடையாது! அதுமட்டுமல்ல, நம் எல்லாரையுமே பாரபட்சம் இல்லாமல் அவர் விருந்தாளியாக ஏற்றுக்கொள்கிறார். நம்முடைய இடம், பின்னணி, கல்வி, இனம், வயது, பாலினம் என எதையுமே அவர் பார்ப்பதில்லை. அதேசமயத்தில், தனக்குக் கீழ்ப்படிகிறவர்களை மட்டும்தான் அவர் விருந்தாளிகளாக ஏற்றுக்கொள்கிறார்.அப்போஸ்தலர் 10:34, 35-ஐ வாசியுங்கள்.

17. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 “யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?” என்று தாவீது கேட்டார். (சங்கீதம் 15:1) இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை எழுத கடவுளுடைய சக்தி அவரைத் தூண்டியது. நாம் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொண்டு, தொடர்ந்து அவருடைய நண்பராக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 32 என்றும் நாம் யெகோவாவின் பக்கம்