படிப்புக் கட்டுரை 29
உங்களால் செய்ய முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுங்கள்!
‘ஒவ்வொருவனும் . . . மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படட்டும்.’—கலா. 6:4.
பாட்டு 34 உத்தம பாதையில் செல்வோம்
இந்தக் கட்டுரையில்... *
1. யெகோவா ஏன் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை?
எல்லாமே ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று யெகோவா நினைப்பதில்லை. அதனால்தான், வித்தியாச வித்தியாசமான தாவரங்கள்... மிருகங்கள்... என்று ஏராளமாகப் படைத்திருக்கிறார். மனிதர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைத்திருக்கிறார். அதனால்தான், ஒருவரை இன்னொருவரோடு அவர் ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை. நம்முடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்றுதான் அவர் பார்க்கிறார். (1 சா. 16:7) நம்மால் எது முடியும், எது முடியாது, நாம் எப்படி வளர்க்கப்பட்டோம் என எல்லாமே யெகோவாவுக்குத் தெரியும். நம்மால் முடியாததை அவர் ஒருபோதும் கேட்பது இல்லை. அதனால், யெகோவா நம்மை எப்படிப் பார்க்கிறாரோ அதே மாதிரி நம்மை நாம் பார்ப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் நம்மைப் பற்றி அளவுக்கு அதிகமாகவும் நினைக்க மாட்டோம், ரொம்ப குறைவாகவும் நினைக்க மாட்டோம். இப்படி, நமக்குத் “தெளிந்த புத்தி” இருக்கிறது என்பதைக் காட்டுவோம்.—ரோ. 12:3.
2. நாம் ஏன் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது?
2 இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு சகோதரரோ சகோதரியோ நன்றாக ஊழியம் செய்கிறார்கள். (எபி. 13:7) இப்போது, அவர்களை மாதிரியே நீங்களும் ஊழியம் செய்ய வேண்டும் என்று நினைப்பது தப்பா? இல்லை. (பிலி. 3:17) அவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் தப்பு. ஏனென்றால், அப்படிச் செய்யும்போது நாட்கள் போக போக, நீங்கள் அவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட ஆரம்பித்துவிடலாம், சோர்ந்துபோய்விடலாம். நீங்கள் எதற்குமே லாயக்கில்லை என்று நினைக்க ஆரம்பித்துவிடலாம். அதுமட்டுமல்ல, போன கட்டுரையில் பார்த்த மாதிரி சபையில் இருக்கிற மற்றவர்களோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தோம் என்றால் சபையின் சமாதானமும் ஒற்றுமையும் பாதிக்கப்படும். அதனால்தான், “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்” என்று யெகோவா அறிவுரை கொடுக்கிறார்.—கலா. 6:4.
3. நீங்கள் என்னென்ன முன்னேற்றங்களைச் செய்திருக்கிறீர்கள்?
3 யெகோவாவின் சேவையில் நீங்கள் நிறைய முன்னேற்றங்களைச் செய்திருக்கலாம். இதை எல்லாம் நினைத்து நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். உதாரணத்துக்கு, ஞானஸ்நானம் எடுக்க சங். 141:2) ஊழியத்தில் நன்றாகப் பேசுவதற்கும் கற்பிக்கும் கருவிகளை திறமையாகப் பயன்படுத்துவதற்கும் கற்றுக்கொண்டீர்களா? யெகோவாவின் உதவியால் நீங்கள் ஒரு நல்ல கணவனாக... மனைவியாக... அப்பா அம்மாவாக... ஆகி இருக்கிறீர்களா? அப்படி என்றால், அதையெல்லாம் நினைத்து நீங்கள் ரொம்ப சந்தோஷப்படலாம். நீங்கள் செய்திருக்கிற முன்னேற்றங்களை நினைத்து திருப்தியாக இருக்கலாம்.
வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து அதை நீங்கள் அடைந்திருக்கலாம். யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பால்தான் நீங்கள் அதைச் செய்தீர்கள். அதற்குப் பின்பும், நீங்கள் என்னென்ன முன்னேற்றங்களைச் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். பைபிளையும் மற்ற பிரசுரங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு அதிகமாகி இருக்கிறதா? முன்பைவிட, இப்போது நீங்கள் உங்கள் மனதிலிருந்து ஜெபம் செய்கிறீர்களா? (4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
4 ஒவ்வொருவரும் சில முன்னேற்றங்களைச் செய்திருக்கலாம். அதைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கு நாம் அவர்களுக்கு உதவலாம். அதே சமயத்தில், மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு உதவலாம். அப்பாவும் அம்மாவும் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம் என்பதையும், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எப்படி உதவலாம் என்பதையும், சகோதர சகோதரிகளுக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம் என்பதையும், சகோதர சகோதரிகளாக நாமும் ஒருவருக்கொருவர் எப்படி உதவலாம் என்பதையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். கடைசியாக, நம்முடைய திறமைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மாதிரி, எட்டிப் பிடிக்க முடிந்த இலக்குகளை வைப்பதற்கு பைபிள் நியமங்கள் எப்படி உதவும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.
பெற்றோர்களும் தம்பதிகளும் என்ன செய்யலாம்?
5. எபேசியர் 6:4 சொல்கிறபடி அப்பா அம்மா என்ன செய்யக் கூடாது?
5 அப்பாவும் அம்மாவும் ஒரு பிள்ளையை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடக் கூடாது. அந்தப் பிள்ளையால் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால், அந்தப் பிள்ளை மனமுடைந்து போய்விடும். (எபேசியர் 6:4-ஐ வாசியுங்கள்.) ஸச்சீக்கோ * என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்: “என்கூட படிக்கிறவங்களவிட நான் முதல் இடத்தில இருக்கணும்னு ஆசிரியர்கள் எதிர்பாத்தாங்க. அதுமட்டும் இல்லாம, நான் பள்ளியில நல்லா படிச்சாதான் ஆசிரியர்களுக்கும், சத்தியத்தில இல்லாத என்னோட அப்பாவுக்கும் யெகோவாவின் சாட்சிகள்மேல நல்ல அபிப்பிராயம் வரும்னு அம்மா சொன்னாங்க. சொல்லப்போனா, எல்லா பரிட்சைலயும் நான் நூறு மார்க் எடுக்கணும்னு அவங்க ஆசப்பட்டாங்க. அது என்னால முடியவே முடியல. படிப்பு முடிச்சு நிறைய வருஷம் ஆயிட்டாலும் இன்னைக்கும் சில சமயங்கள்ல நான் செய்யறத பாத்து யெகோவா சந்தோஷப்படுவாராங்கற சந்தேகம் எனக்கு வந்துடும்” என்று அவர் சொல்கிறார்.
6. சங்கீதம் 131:1, 2-ல் இருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 சங்கீதம் 131:1, 2-ல் இருந்து பெற்றோர்கள் அருமையான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். (வாசியுங்கள்.) ‘பெரிய காரியங்களுக்காகவும்’ வரம்புக்கு மிஞ்சிய காரியங்களுக்காகவும் தான் “ஆசைப்படுவதில்லை” என்று தாவீது ராஜா அதில் சொல்லியிருக்கிறார். அவர் மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் இருந்ததால் தன்னைத் தானே ‘தேற்றிக்கொண்டு . . . நிம்மதியாக’ இருந்தார். தாவீதிடமிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? பெற்றோர்கள் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் தங்களுடைய வரம்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும், பிள்ளைகளுடைய வரம்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. பிள்ளைகளுடைய பலம், பலவீனங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அவர்களால் முடிந்த இலக்குகளை எட்டிப் பிடிப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும். மரியானா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என்கூட பிறந்த மூணு பேர் கூடயும் மத்த பிள்ளைங்க கூடயும் அம்மா என்னை ஒப்பிடவே மாட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் யெகோவா ஒவ்வொரு திறமைய கொடுத்திருக்காருன்னும் ஒவ்வொருத்தரையும் அவர் தங்கங்களா பாக்கிறார்னும் அம்மா சொல்வாங்க. அதனால அவ்வளவா யார் கூடயும் என்னை நான் ஒப்பிட்டு பாக்க மாட்டேன். அம்மா இப்படி வளத்ததுக்காக அவங்களுக்கு ரொம்ப நன்றி!”
7-8. ஒரு கணவர் எப்படித் தன்னுடைய மனைவிக்கு மதிப்பு கொடுக்கலாம்?
7 யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒரு கணவர் தன்னுடைய மனைவியை மதிக்க வேண்டும். (1 பே. 3:7) மதிப்பது என்றால் தன்னுடைய மனைவியைக் கவனித்துக்கொள்வது என்றும் அவளுக்கு மரியாதை கொடுப்பது என்றும் அர்த்தம். மனைவியை மதிக்கிற ஒரு கணவர் அவளை முக்கியமானவளாக நினைப்பார். அவளால் முடியாததைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். மற்ற பெண்களோடு ஒப்பிடவும் மாட்டார். ஒருவேளை, அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன ஆகும்? ரோசா என்கிற சகோதரி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். அவருடைய கணவர் சத்தியத்தில் இல்லை. அவர் கணவர் எப்போதுமே ரோசாவை மற்ற பெண்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார். அவருடைய மனதைக் குத்திக் கிழிக்கிற மாதிரி எப்போதுமே பேசி கொண்டிருப்பதால், யாருக்குமே தன்மேல் அன்பு இல்லை என்று அவர் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தன்னுடைய சுயமரியாதை போய்விட்டதாகவும் நினைத்தார். “யெகோவா என்னை மதிக்கிறாருங்கறத நான் அடிக்கடி ஞாபகப்படுத்திக்க வேண்டியிருந்தது” என்று அவர் சொல்கிறார். ஆனால், யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒரு கணவர், தன்னுடைய மனைவியை மதிப்பார். அப்படி மதிக்கவில்லை என்றால், மனைவியிடம் இருக்கிற பந்தம் மட்டுமல்ல யெகோவாவுடன் இருக்கிற பந்தமும் பாதிக்கப்படும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். *
8 தன்னுடைய மனைவியை மதிக்கிற ஒரு கணவர், மற்றவர்களுக்கு முன்பு அவளைப் பற்றி நல்ல விதமாகப் பேசுவார். ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி சொல்வார், அவளைப் பாராட்டுவார். (நீதி. 31:28) இதைத்தான் போன கட்டுரையில் பார்த்த கேத்தரீனா என்ற சகோதரியின் கணவர் செய்தார். கேத்தரீனா சின்ன வயதில் இருந்தபோது, மற்ற பெண்களோடும் நண்பர்களோடும் அவருடைய அம்மா அவரை எப்போதுமே ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார். அதனால், மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தன்னை எடை போட ஆரம்பித்துவிட்டார். சத்தியத்துக்கு வந்த பின்பும்கூட அந்தப் பழக்கம் அவருக்கு இருந்தது! ஆனால், இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவதற்கும் அவரைப் பற்றிச் சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்வதற்கும் அவருடைய கணவர் உதவி செய்தார். “என்னோட கணவர் என்னை நேசிக்கிறாரு. நான் செய்ற நல்ல விஷயங்களுக்காக என்னை பாராட்டுவாரு. எனக்காக ஜெபம் செய்வாரு. யெகோவாவோட அருமையான குணங்கள ஞாபகப்படுத்திகிட்டே இருப்பாரு. என்னோட எண்ணத்த மாத்திக்கவும் உதவறாரு” என்று அவர் சொல்கிறார்.
மூப்பர்களும் மற்றவர்களும் எப்படி உதவலாம்?
9-10. மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு சகோதரிக்கு மூப்பர்கள் எப்படி உதவி செய்தார்கள்?
9 யாருக்காவது மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிற பழக்கம் இருந்தால், அவர்களுக்கு மூப்பர்களால் உதவ முடியும். ஹனோனி என்ற சகோதரியைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர் சின்ன வயதில் இருந்தபோது யாருமே அவரைப் பாராட்ட மாட்டார்கள். “நான் மத்தவங்களோட பழகறதுக்கு கூச்சப்பட்டேன். ‘மத்த பிள்ளைங்கதான் சூப்பர், நான் எல்லாம் ஒன்னுமே இல்லை’னு நினைச்சேன். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே மத்தவங்களோட என்னை ஒப்பிட்டு பாத்துட்டேதான் இருந்தேன்” என்று அவர் சொல்கிறார். சத்தியத்துக்கு வந்த பின்பும் அவருக்கு அந்தப் பழக்கம் இருந்தது. அதனால், சபையில் ‘நானெல்லாம் ஒரு ஆளா?’ என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால், இன்றைக்குச் சந்தோஷமாக பயனியர் ஊழியம் செய்துகொண்டிருக்கிறார். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
1 தெசலோனிக்கேயர் 1:2, 3 வசனங்கள படிச்சு காட்டினாங்க. அது என் மனச ஆழமா தொட்டுச்சு! இந்த அருமையான மேய்ப்பர்களுக்கு ரொம்ப நன்றி. சபையில நானும் மத்தவங்களுக்கு பிரயோஜனமா இருக்கறேங்கறத இப்ப நான் புரிஞ்சுகிட்டேன்” என்று அவர் சொல்கிறார்.
10 ஹனோனிக்கு மூப்பர்கள் உதவி செய்தார்கள். சபையில் அவரும் பிரயோஜனமான ஆள் என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்கள். அவர் நல்ல முன்மாதிரி வைத்துக்கொண்டிருப்பதற்காக அவரைப் பாராட்டினார்கள். “சகோதரிகள்ல சிலருக்கு உதவச் சொல்லி, சில சமயங்கள்ல மூப்பர்கள் என்னை கேட்டுகிட்டாங்க. அதனால, நானும் மத்தவங்களுக்கு பிரயோஜனமா இருக்கறேங்கற உணர்வு எனக்கு வந்துச்சு. இளம் சகோதரிகள் சிலருக்கு நான் உதவனப்போ மூப்பர்கள் எனக்கு நன்றி சொன்னாங்க. அப்பறம்11. ஏசாயா 57:15-ல் சொல்லி இருக்கிறபடி, ‘நெஞ்சம் நொறுங்கியவர்களுக்கும் துவண்டுபோனவர்களுக்கும்’ நாம் எப்படி உதவலாம்?
11 ஏசாயா 57:15-ஐ வாசியுங்கள். ‘நெஞ்சம் நொறுங்கியவர்களையும் துவண்டுபோனவர்களையும்’ யெகோவா ரொம்ப அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார். மூப்பர்கள் மட்டுமல்ல, நம் எல்லாராலும் இந்த மாதிரி இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு உதவ முடியும். நிறைய வழிகளில் நாம் அதைச் செய்யலாம். அதில் ஒரு வழி, அவர்கள்மீது நாம் அக்கறை வைத்திருக்கிறோம் என்பதை அவர்களுக்குக் காட்டுவது. அவர்கள்மீது யெகோவா எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (நீதி. 19:17) அதோடு, நாம் மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் இருப்பதன் மூலம் சகோதர சகோதரிகளுக்கு உதவலாம். மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகிற அளவுக்கு நாம் நடந்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, நமக்கு இருக்கிற திறமைகளையும் அறிவையும் ஒருவரையொருவர் பலப்படுத்துவதற்காகப் பயன்படுத்த வேண்டும்.—1 பே. 4:10, 11.
12. சாதாரண ஜனங்கள் இயேசுவுடன் இருக்க வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டார்கள்? (அட்டைப் படம்)
12 சீஷர்களை இயேசு எப்படி நடத்தினார் என்பதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். இதுவரைக்கும் பூமியில் வாழ்ந்தவர்களிலேயே அவர்தான் மாமனிதர். இருந்தாலும், அவர் ‘சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருந்தார்.’ (மத். 11:28-30) அவருக்கு ஏராளமான அறிவும் ஞானமும் இருந்தது. ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர் தம்பட்டம் அடிக்கவில்லை. மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பாமர மக்களுக்குப் புரிகிற மாதிரியான உதாரணங்களைச் சொன்னார். (லூக். 10:21) ஆனால், அன்றைக்கு இருந்த மதத் தலைவர்கள் பெருமை பிடித்தவர்களாக இருந்தார்கள். சாதாரண ஜனங்களை கடவுள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று நினைக்க வைத்தார்கள். ஆனால், இயேசு ஒருபோதும் அப்படிச் செய்யவில்லை. (யோவா. 6:37) அதற்குப் பதிலாக, சாதாரண ஜனங்களை அவர் கௌரவப்படுத்தினார்.
13. இயேசு தன்னுடைய சீஷர்களை நடத்திய விதத்திலிருந்து அவர் கனிவானவர் என்பதையும் அன்பானவர் என்பதையும் எப்படிப் புரிந்துகொள்ள முடிகிறது?
13 இயேசு தன்னுடைய சீஷர்களை நடத்திய விதத்திலிருந்து அவர் கனிவானவர் என்பதையும் அன்பானவர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. சீஷர்களுக்கு வித்தியாசமான திறமைகளும் சூழ்நிலைகளும் இருந்தன என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். எல்லாராலும் ஒரே விதமான பொறுப்புகளைச் செய்ய முடியாது என்றும் எல்லாராலும் ஊழியத்தில் ஒரே விதமான பலன்களைத் தர முடியாது என்றும் அவருக்குத் தெரியும். ஆனாலும், முழு இதயத்தோடு அவர்கள் செய்த சேவையை அவர் பாராட்டினார். சீஷர்களுடைய சூழ்நிலையை அவர் நன்றாகப் புரிந்துகொண்டார் என்பது தாலந்தைப் பற்றி அவர் சொன்ன உவமையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த உவமையில், எஜமானர் ஒவ்வொரு அடிமைக்கும் “அவனவனுடைய திறமைக்கு ஏற்றபடி” வேலை கொடுத்தார். அதில் ஒரு அடிமை இன்னொரு அடிமையைவிட நிறைய சம்பாதித்தான். ஆனால், அந்த இரண்டு அடிமையையும், “சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே” என்று சொல்லி அந்த எஜமானர் பாராட்டினார்.—மத். 25:14-23.
14. இயேசு மாதிரியே நாம் எப்படி மற்றவர்களை நடத்தலாம்?
14 இயேசு நம்மிடமும் கனிவாகவும் அன்பாகவும் நடந்துகொள்கிறார். ஒவ்வொருவருடைய திறமைகளும் சூழ்நிலைகளும் வேறுபடுகின்றன என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நமக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது அவர் சந்தோஷப்படுகிறார். நாமும் இயேசு மாதிரியே மற்றவர்களை நடத்த வேண்டும். ஒரு சகோதரரோ சகோதரியோ ‘மத்தவங்க செய்ற அளவுக்கு என்னால செய்ய முடியலையே’ என நினைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில், அவர் கூனிக் குறுகுவது மாதிரி நாம் நடத்தி விடக் கூடாது. ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்றும் அவரை நினைக்க வைத்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, யெகோவாவுக்குத் தங்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறபோது நாம் மனதாரப் பாராட்ட வேண்டும்.
எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள்
15-16. எட்ட முடிந்த இலக்குகளை வைத்ததால் ஒரு சகோதரிக்கு எப்படி நன்மை கிடைத்தது?
15 யெகோவாவின் சேவையில் இலக்குகளை வைக்கும்போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். நாம் எந்தத் திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். அதற்கு, உங்களுடைய திறமைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி இலக்குகளை வையுங்கள். மற்றவர்கள் வைக்கிற அதே இலக்குகளை வைக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்போதுதான், நாம் சோர்ந்துவிட மாட்டோம். (லூக். 14:28) இப்போது பயனியர் ஊழியம் செய்கிற மிடோரி என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம்.
16 மிடோரியின் அப்பா யெகோவாவின் சாட்சி கிடையாது. மிடோரியோடு பிறந்தவர்களோடும் அவருடன் படித்தவர்களோடும் மிடோரியை அவர் ஒப்பிட்டுப் பார்த்து மட்டம் தட்டுவார். அதனால், “நான் எதுக்குமே லாயக்கில்லனு நினச்சேன்” என்று மிடோரி சொல்கிறார். அவர் வளர வளர தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார். “நான் தினமும் பைபிள படிச்சேன், அது என் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு. யெகோவா என்னை எந்தளவுக்கு நேசிக்கிறாருங்கிறதயும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது” என்று அவர் சொல்கிறார். அதுமட்டுமல்ல, எட்ட முடிந்த இலக்குகளை அவர் வைத்தார். அதை எட்டிப் பிடிப்பதற்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். இப்படியெல்லாம் செய்ததால் யெகோவாவின் சேவையில் அவரால் முன்னேற முடிந்தது. அதை நினைத்து அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
உங்களால் முடிந்ததை யெகோவாவுக்குத் தொடர்ந்து செய்யுங்கள்
17. நம்முடைய “மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே” இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும், அதனால் என்ன நன்மை?
17 நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை மாற்றிக்கொள்வதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். அதனால்தான், “உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்” என்று யெகோவா அறிவுரை கொடுக்கிறார். (எபே. 4:23, 24) இதைச் செய்வதற்கு நாம் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும், பைபிள் படிக்க வேண்டும், படித்ததை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். தொடர்ந்து இதையெல்லாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். பலத்துக்காக யெகோவாவை நம்பி இருக்க வேண்டும். மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுகிற எண்ணம் நமக்கு வந்தால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு யெகோவாவின் சக்தி உதவி செய்யும். அதுமட்டுமல்ல, மற்றவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் குணமும், தலைக்கனமும் நம்முடைய மனதில் துளிர்விட்டால் அதைக் கண்டுபிடித்து முளையிலேயே கிள்ளி எறியவும் யெகோவா உதவுவார்.
18. இரண்டு நாளாகமம் 6:29, 30-ல் இருக்கிற வார்த்தைகள் உங்களுக்கு ஏன் ஆறுதலாக இருக்கின்றன?
18 இரண்டு நாளாகமம் 6:29, 30-ஐ வாசியுங்கள். யெகோவாவுக்கு நம்முடைய மனதில் இருப்பது எல்லாமே தெரியும். இந்த உலகத்தில் இருக்கிற கெட்ட விஷயங்களையும் நமக்குள்ளே ஊறிப் போயிருக்கிற தவறான எண்ணங்களையும் நாம் எதிர்த்துப் போராடுவதை அவர் பார்க்கிறார். இந்தப் போராட்டத்தில் நாம் எந்தளவுக்கு முயற்சி எடுக்கிறோம் என்பதை அவர் பார்க்கும்போது, நம்மேல் அவருக்கு இருக்கும் அன்பு அதிகமாகிறது.
19. நம்மேல் வைத்திருக்கிற அன்பை விளக்குவதற்கு யெகோவா என்ன உதாரணத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்?
19 யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கிற அந்தப் பாசப்பிணைப்பு பற்றிச் சொல்லியிருக்கிறார். (ஏசா. 49:15) ஒரு குழந்தைக்குத் தாயான ரேச்சல் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “என் மக ஸ்டெஃபானி குறை பிரசவத்தில பிறந்தா. அவள மொதமொதலா பாக்கறப்போ ரொம்ப குட்டியா இருந்தா, பாக்கறக்கே பாவமா இருந்துச்சு. அவள ஒரு மாசம் இன்குபேட்டர்ல வச்சிருந்தாங்க. அந்த சமயத்துல தினமும் அவள கையில தூக்கி வச்சுக்கிறதுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் எனக்கு அனுமதி கொடுத்தாங்க. அப்போ அவளுக்கும் எனக்கும் ஒரு பாசப்பிணைப்பு உருவாச்சு. இன்னைக்கு அவளுக்கு ஆறு வயசு. அவ வயசு பிள்ளைகளவிட அவ ரொம்ப குட்டியாதான் இருக்கா. உயிரோட இருக்கறதுக்காக அவ நிறைய போராடி இருக்கா. அதனால, அவள எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ பிறந்ததுக்கு அப்பறம் என் வாழ்க்கையே ரொம்ப சந்தோஷமா மாறிடுச்சு!” என்று அவர் சொல்கிறார். இதே மாதிரிதான் யெகோவாவும். தனக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதற்காக போராடுகிறவர்களை அவர் ரொம்ப நேசிக்கிறார். இதைத் தெரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
20. உங்களைப் பார்த்து நீங்களே ஏன் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்?
20 யெகோவாவின் குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. நீங்களும் அந்தக் குடும்பத்தில் முக்கியமானவர்தான். மற்ற ஜனங்களைவிட நீங்கள் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்கள் என்பதற்காக அவர் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. உங்களுடைய இதயத்தை அவர் பார்த்தார். தாழ்மையான உள்ளத்தைக் கவனித்தார். அவர் கற்றுக்கொடுப்பதை ஏற்றுக்கொள்கிற மனமும் அதற்கு ஏற்ற மாதிரி உங்களை மாற்றிக்கொள்கிற மனமும் இருப்பதைக் கவனித்தார். அதனால், உங்களைத் தேர்ந்தெடுத்தார். (சங். 25:9) அவருக்குச் சேவை செய்வதற்கு உங்களால் முடிந்ததை எல்லாம் செய்வதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கிறீர்கள், உண்மையாக நடந்துகொள்கிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு ‘நேர்மையான, நல்ல இதயம்’ இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. (லூக். 8:15) அதனால், யெகோவாவுக்குத் தொடர்ந்து உங்களால் முடிந்ததை எல்லாம் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது ‘[உங்களை] பார்த்து’ நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.
பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்
^ பாரா. 5 யெகோவா நம்மை யாரோடும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால், நம்மில் சிலர் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மைத் தாழ்வாக நினைத்துக்கொள்கிறோம். இப்படிச் செய்வது ஏன் நல்லது இல்லை என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, குடும்பத்தில் இருக்கிறவர்களையும் சபையில் இருக்கிறவர்களையும் யெகோவா எப்படிப் பார்க்கிறாரோ, அதே மாதிரி அவர்கள் தங்களைப் பார்ப்பதற்கு நாம் எப்படி உதவலாம் என்பதையும் பார்ப்போம்.
^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
^ பாரா. 7 இங்கே கணவருக்காகச் சில விஷயங்கள் சொல்லப்பட்டாலும், இது மனைவிகளுக்கும் பொருந்தும்.
^ பாரா. 58 படவிளக்கம்: குடும்ப வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. பிள்ளைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து நோவாவின் பேழையைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிள்ளையும் செய்ததைப் பார்த்து அப்பா அம்மா ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.
^ பாரா. 62 படவிளக்கம்: ஒரு சின்னப் பிள்ளையைத் தனியாக வளர்க்கும் அம்மா துணைப் பயனியர் சேவை செய்யத் திட்டம் போடுகிறார். அந்தக் குறிக்கோளை அடைய முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார்.