Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 28

போட்டி போடாதீர்கள்—சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள்

போட்டி போடாதீர்கள்—சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள்

“வறட்டு கௌரவம் பார்க்காமலும், ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும், ஒருவர்மேல் ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.”—கலா. 5:26.

பாட்டு 101 ஒற்றுமையாக உழைப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1. போட்டி போடும் குணம் இருப்பதால் மக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்?

இன்றைக்கு மக்கள் எதற்கெடுத்தாலும் போட்டி போடுகிறார்கள். உதாரணத்துக்கு, தொழிலதிபர்கள் தாங்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகச் சதி வேலைகளைச் செய்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எதிரணியில் இருக்கிற வீரர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துகிறார்கள். மாணவர்கள் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நுழைவுத் தேர்வில் மோசடி செய்கிறார்கள். ஆனால், இது எல்லாமே தப்பு என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், இது எல்லாமே “பாவ இயல்புக்குரிய செயல்கள்.” (கலா. 5:19-21) ஆனால், நமக்கே தெரியாமல் சபையில் இருக்கும் மற்றவர்களோடு போட்டி போட வாய்ப்பு இருக்கிறதா? இந்தக் கேள்வியை யோசித்துப் பார்ப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். ஏனென்றால், போட்டி போடும் குணம் வந்துவிட்டால் சகோதரர்களுக்குள்ளே இருக்கிற ஒற்றுமை பாழாகிவிடும்.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

2 என்னென்ன குணங்களால் சகோதர சகோதரிகளுடன் நாம் போட்டி போட வாய்ப்பு இருக்கிறது? அந்தக் காலத்தில் இருந்த ஊழியர்களால் எப்படி மற்றவர்களோடு போட்டி போடாமல் இருக்க முடிந்தது? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதற்கு முன்பு, நம்முடைய உள்ளெண்ணங்களை நாம் எப்படி எடைபோட்டுப் பார்க்கலாம் என்பதைப் பற்றிக் கவனிக்கலாம்.

உங்கள் உள்ளெண்ணங்களை எடைபோட்டுப் பாருங்கள்

3. என்னென்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

3 நம்முடைய உள்ளெண்ணங்களை அவ்வப்போது எடைபோட்டுப் பார்ப்பது நல்லது. நம்மை இப்படி எல்லாம் கேட்டுக்கொள்ளலாம்: ‘மத்தவங்களோட ஒப்பிட்டு பாத்து என்னோட மதிப்ப நான் எடை போடறேனா? எல்லாத்தையுமே நான்தான் சூப்பரா செய்வேன்னு காட்டிக்க விரும்பறேனா? ஒரு சகோதரரையோ சகோதரியையோ விட ஒரு விஷயத்த நான்தான் நல்லா செய்வேன்னு நினைக்கிறேனா? இல்ல, யெகோவாவ சந்தோஷப்படுத்தறதுக்காக எல்லாத்தையும் செய்யறேனா?’ இந்தக் கேள்விகளை நாம் ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும்? பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

4. கலாத்தியர் 6:3, 4-ல் சொல்லி இருக்கிறபடி, மற்றவர்களோடு ஏன் நம்மை நாம் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது?

4 மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. (கலாத்தியர் 6:3, 4-ஐ வாசியுங்கள்.) ஏன்? அப்படிச் செய்தால் இரண்டு பிரச்சினைகள் வரலாம். ஒன்று, நம்மையே நாம் உயர்வாக நினைக்க ஆரம்பித்துவிடலாம். அதனால், நமக்குத் தலைக்கனம் வந்துவிடலாம். இரண்டு, நம்மையே நாம் தாழ்வாக நினைக்க ஆரம்பித்துவிடலாம். அதனால், நாம் சோர்ந்து போய்விடலாம். இந்த இரண்டில் எதைச் செய்தாலும் நமக்குத் தெளிந்த புத்தி இல்லை என்று அர்த்தம். (ரோ. 12:3) கிரீஸில் வாழ்கிற கேத்தரீனா * என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “என்னைவிட அழகா இருக்கிறவங்க, ஊழியத்த நல்லா செய்றவங்க, நிறைய நண்பர்களை வெச்சிருக்கிறவங்களோட என்னை ஒப்பிட்டு பாத்தேன். அதனால, நான் எதுக்குமே லாயக்கில்லைனு நினச்சேன்.” நம்முடைய அழகைப் பார்த்தோ, பேச்சுத்திறமையைப் பார்த்தோ, எந்தளவுக்கு நாம் பிரபலமாக இருக்கிறோம் என்பதைப் பார்த்தோ யெகோவா நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் அவர்மேல் அன்பு காட்டினோம், அவருடைய மகனின் பேச்சைக் கேட்பதற்குத் தயாராக இருந்தோம். இதை எல்லாம் பார்த்துதான் அவர் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.—யோவா. 6:44; 1 கொ. 1:26-31.

5. சகோதரர் ஹுன்னிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

5 நாம் இன்னொரு கேள்வியும் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘சமாதானம் பண்றவர்னு நான் பேர் எடுத்திருக்கேனா? இல்லேனா, எதுக்கெடுத்தாலும் வாக்குவாதம் பண்றவர்னு பேர் எடுத்திருக்கேனா?’ தென் கொரியாவில் வாழ்கிற சகோதரர் ஹுன்னின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். பொறுப்பில் இருக்கிற மற்ற சகோதரர்கள் இவரைவிட தங்களை உயர்வாக காட்டிக்கொள்வதாக இவர் நினைத்தார். அதனால் என்ன ஆனது? “சகோதரர்கள்கிட்ட குறை கண்டுபுடிச்சுட்டே இருந்தேன். நிறைய சமயங்கள்ல அவங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்கல. நான் அப்படி நடந்துகிட்டதால சபையோட ஒற்றுமையே போயிடுச்சு” என்று அவர் சொல்கிறார். ஆனால், ஹுன்னின் நண்பர்கள் அவரிடம் இருக்கிற பிரச்சினையைப் புரிந்துகொள்ள உதவி செய்தார்கள். அவரும் தன்னுடைய குணத்தை மாற்றிக்கொண்டார். அதனால், இன்றைக்கு ஒரு நல்ல மூப்பராகச் சேவை செய்கிறார். ஒருவேளை, சமாதானத்துக்காகப் பாடுபடாமல் போட்டி போடுகிற எண்ணம் நமக்குள் இருக்கிறது என்று தெரிய வந்தால் நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

வறட்டு கௌரவம் பார்க்காதீர்கள், வயிற்றெரிச்சல் படாதீர்கள்

6. கலாத்தியர் 5:26 சொல்கிற மாதிரி என்னென்ன குணங்கள் நமக்குள்ளே போட்டி போடுகிற எண்ணத்தை வளர்க்கும்?

6 கலாத்தியர் 5:26-ஐ வாசியுங்கள். என்னென்ன குணங்களால் நாம் போட்டி போட ஆரம்பித்துவிடலாம்? ஒரு குணம், வறட்டு கௌரவம் பார்ப்பது. இந்தக் குணம் இருக்கிறவர்கள் தலைக்கனம் பிடித்தவர்களாக இருப்பார்கள், சுயநலமாக நடந்துகொள்வார்கள். இன்னொரு குணம், வயிற்றெரிச்சல் படுவது. இந்தக் குணம் இருக்கிறவர்கள் மற்றவர்களிடம் இருப்பது தங்களுக்கு வேண்டும் என்று நினைப்பதோடு, அவர்களிடம் இருப்பது இல்லாமல் போக வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். இந்தக் குணம் இருந்தால், மற்றவர்களை நாம் வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். இந்த இரண்டு குணங்களும் உண்மையிலேயே மோசமான குணங்கள். இவை எல்லாம் நம்மிடம் அண்டாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. வறட்டு கௌரவமும் வயிற்றெரிச்சல் படுகிற குணமும் இருந்தால் என்ன ஆகும்? விளக்குங்கள்.

7 வறட்டு கௌரவம் பார்ப்பதும், வயிற்றெரிச்சல் படுவதும், விமானத்தின் எரிபொருளில் கலந்துவிட்ட மாசுத்துகள்கள் மாதிரி. எரிபொருளில் மாசுத்துகள்கள் இருந்தாலும், அந்த விமானத்தால் புறப்பட முடியலாம், கொஞ்சம் தூரம் வரைக்கும் பறக்க முடியலாம். ஆனால், போக போக அந்த மாசுத்துகள்கள் என்ஜினின் குழாயில் அடைத்துவிடலாம். விமானம் தரை இறங்குவதற்கு முன்பு என்ஜின் செயலிழந்துபோய் விபத்து நடந்துவிடலாம். அதே மாதிரி, ஒருவர் யெகோவாவுக்குக் கொஞ்சம் காலம் வரைக்கும் சேவை செய்யலாம். ஆனால், அவருக்கு வறட்டு கௌரவம் வந்துவிட்டால்... மற்றவர்களைப் பார்த்து அவர் வயிற்றெரிச்சல் பட்டால்... யெகோவாவுடன் இருக்கிற பந்தத்தை இழந்துவிடுவார். அவருக்குச் சேவை செய்வதையே நிறுத்திவிடுவார். (நீதி. 16:18) அதனால் அவருக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, பாதிப்புதான். அப்படி என்றால், வறட்டு கௌரவமும் வயிற்றெரிச்சல் படுகிற குணமும் நமக்குள் வராமல் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

8. வறட்டு கௌரவம் நமக்குள்ளே வராமல் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

8 அப்போஸ்தலன் பவுல் சொன்ன மாதிரி நடந்துகொண்டால் வறட்டு கௌரவம் நமக்குள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். “எதையும் பகையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்” என்று பிலிப்பியர் சபைக்கு அவர் எழுதினார். (பிலி. 2:3) மற்றவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாக நினைத்தால், நம்மிடம் இல்லாத திறமைகள் அவர்களிடம் இருக்கின்றன என்பதற்காக, அவர்களோடு போட்டி போட மாட்டோம். அதற்குப் பதிலாக, அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுவோம். அதுவும் அவர்களுடைய திறமைகளை யெகோவாவைப் புகழ்வதற்காக அவர்கள் பயன்படுத்தும்போது அவர்களைப் பார்த்து நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம். அதே மாதிரி, நம்முடைய சகோதர சகோதரிகளும் அப்போஸ்தலன் பவுல் சொன்ன மாதிரி நடந்துகொண்டார்கள் என்றால் நம்மிடம் இருக்கிற நல்லதை அவர்கள் பார்ப்பார்கள், நம்மைப் பாராட்டுவார்கள். இப்படி, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து சபை சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கு பாடுபட முடியும்.

9. மற்றவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

9 நாம் அடக்கமாக இருந்தால், அதாவது நம்முடைய வரம்புகளைப் புரிந்து நடந்துகொண்டால், மற்றவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட மாட்டோம். அடக்கமாக நடந்துகொண்டோம் என்றால், மற்றவர்களைவிட நம்மிடம்தான் நிறைய திறமைகள் இருக்கின்றன என்று நிரூபிப்பதிலேயே குறியாக இருக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, நம்மைவிட திறமைசாலிகளாக இருப்பவர்களிடமிருந்து எப்படிக் கற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்போம். உதாரணத்துக்கு, ஒரு சகோதரர் சபையில் அருமையாக பொதுப் பேச்சு கொடுக்கலாம். அவரிடம் பொதுப் பேச்சை எப்படித் தயாரிப்பது என்று நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஒரு சகோதரி நன்றாகச் சமைக்கலாம். அவரிடம் சமையல் குறிப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சபையில் இருக்கிற ஒருவரால் மற்றவர்களிடம் சுலபமாகப் பழக முடியலாம். அப்போது, நண்பர்களை உருவாக்குவது எப்படி என்று ஓர் இளம் சகோதரரோ ஒரு சகோதரியோ அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இப்படி எல்லாம் செய்யும்போது, மற்றவர்களைப் பார்த்து நாம் வயிற்றெரிச்சல் பட மாட்டோம், நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்வோம்.

கடவுளுடைய ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கிதியோன் மனத்தாழ்மையானவராக இருந்ததால் எப்பிராயீம் வம்சத்தைச் சேர்ந்தவர்களோடு சமாதானமாக இருக்க முடிந்தது (பாரா 10-12)

10. கிதியோன் என்ன சூழ்நிலையைச் சந்தித்தார்?

10 கிதியோனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். அவர் மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஒரு தடவை, அவருக்கும் அவருடன் சேர்ந்த 300 பேருக்கும் யெகோவா மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். ஆனால், அதை நினைத்து அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளவில்லை. இப்போது, எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கிதியோனைப் பார்ப்பதற்கு வருகிறார்கள். எதற்காக? அவரைப் பாராட்டுவதற்காக இல்லை. அவரிடம் சண்டை போடுவதற்காக. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய கோத்திரத்தைப் பெருமையாக நினைத்தார்கள். கிதியோன் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்திருந்தார். அவருடைய மக்களைக் காப்பாற்றி இருந்தார். எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார்கள். கிதியோன் போருக்குப் போனபோது, ஆரம்பத்தில் தங்களுடைய கோத்திரத்தைக் கூப்பிடவில்லை என்று கோபித்துக்கொண்டார்கள்.—நியா. 8:1.

11. எப்பிராயீம் வம்சத்தைச் சேர்ந்தவர்களிடம் கிதியோன் என்ன சொன்னார்?

11 கிதியோன் எப்பிராயீம் வம்சத்தைச் சேர்ந்தவர்களிடம், “உங்களைப் போல நான் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை” என்று மனத்தாழ்மையோடு சொன்னார். அதற்கு பின்பு, ஒரு தடவை அவர்களுக்குக் கடவுள் எப்படி வெற்றி கொடுத்தார் என்பதை ஞாபகப்படுத்தினார். அதனால், அவர்களுடைய “கோபம் தணிந்தது.” (நியா. 8:2, 3) இப்படி, மனத்தாழ்மையோடு பதில் சொன்னதால் கடவுளுடைய மக்களுக்கு இடையில் சமாதானம் இருக்கும்படி கிதியோன் பார்த்துக்கொண்டார்.

12. எப்பிராயீம் வம்சத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் கிதியோனிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

12 எப்பிராயீம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் நடந்துகொண்டதிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். அதாவது, நம்மைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்காமல் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். குடும்பத் தலைவர்களும் மூப்பர்களும் கிதியோனிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். நாம் செய்ததை நினைத்து யாராவது நம்மேல் வருத்தப்பட்டால் அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். அதோடு, அவர்கள் செய்த நல்லதைப் பாராட்ட வேண்டும். இப்படிச் செய்வதற்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது. அதுவும், அவர்களிடம் தப்பு வைத்துக்கொண்டு நம்மிடம் கோபித்துக்கொள்ளும்போது அப்படிப் பண்ணுவதற்கு ரொம்பவே மனத்தாழ்மை தேவை. நாம் செய்ததுதான் சரி என்று நிரூபிப்பதைவிட மற்றவர்களிடம் சமாதானமாக இருப்பதுதான் முக்கியம்.

எல்லாவற்றையும் யெகோவா பார்த்துக்கொள்வார் என்று நம்பியதால், அன்னாளால் மனசமாதானத்தோடு இருக்க முடிந்தது (பாரா 13-14)

13. அன்னாளுக்கு என்ன பிரச்சினை இருந்தது, அவள் அதை எப்படிச் சமாளித்தாள்?

13 அன்னாளைப் பற்றி இப்போது பார்க்கலாம். லேவி வம்சத்தைச் சேர்ந்த எல்க்கானாவை அவள் கல்யாணம் பண்ணியிருந்தாள். அவருக்கு பெனின்னாள் என்று இன்னொரு மனைவியும் இருந்தாள். பெனின்னாளைவிட அன்னாளை அவர் ரொம்ப நேசித்தார். “பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள், ஆனால் அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை.” அதனால், அன்னாளை பெனின்னாள் குத்திக்காட்டிக் கொண்டே இருந்தாள். “அவளை நோகடித்தாள், அவளைப் பழித்துப் பேசிக்கொண்டே இருந்தாள்.” அப்போது அன்னாளுக்கு எப்படி இருந்தது? அவள் ரொம்பவே மனம் உடைந்துபோனாள்! அவள் “அழுதுகொண்டே இருந்தாள், சாப்பிடவே இல்லை.” (1 சா. 1:2, 6, 7) ஆனாலும், பெனின்னாளை அன்னாள் பழிவாங்கியதாக பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் யெகோவாவிடம் கொட்டினாள். தன்னுடைய பிரச்சினையை யெகோவா சரிசெய்வார் என்று நம்பினாள். பெனின்னாள் மனம் மாறினாளா? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், ஒரு விஷயம் நமக்கு நிச்சயமாகத் தெரியும். யெகோவாவிடம் தன்னுடைய பிரச்சினையை ஒப்படைத்த பின்பு, அன்னாள் மன சமாதானத்தோடு இருந்தாள். “அதன் பிறகு அவள் முகம் வாடியிருக்கவில்லை.”—1 சா. 1:10, 18.

14. அன்னாளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 அன்னாளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம்முடன் யாராவது போட்டி போட்டாலும் நம்மால் நிலைமையைச் சரிசெய்ய முடியும். எப்படி? நாம் திருப்பி அவர்களோடு போட்டி போடக் கூடாது. யாராவது நமக்குக் கெட்டது செய்தால் நாமும் திருப்பி கெட்டது செய்யக் கூடாது. அவர்களிடம் சமாதானமாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். (ரோ. 12:17-21) இப்படிச் செய்தால், அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றாலும் நம்மால் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் இருக்க முடியும்.

ஊழிய வேலையை யெகோவாதான் ஆசீர்வதிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டதால் அப்பொல்லோவும் பவுலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைப்படவில்லை (பாரா 15-18)

15. அப்பொல்லோவும் பவுலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?

15 அப்பொல்லோவைப் பற்றியும் அப்போஸ்தலன் பவுலைப் பற்றியும் பார்க்கலாம். இரண்டு பேருக்குமே வேதவசனங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. இரண்டு பேருமே பிரபலமானவர்களாக இருந்தார்கள். அருமையான போதகர்களாக இருந்தார்கள். நிறைய சீஷர்களை உருவாக்கினார்கள். ஆனால், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைப்படவில்லை.

16. அப்பொல்லோ எப்படிப்பட்டவர்?

16 அப்பொல்லோ ‘அலெக்சந்திரியாவைச் சேர்ந்தவர்.’ முதல் நூற்றாண்டில் அந்த நகரம் பிரபலமான கல்வி மையமாக இருந்தது. அவர் திறமையாகப் பேசுகிறவராக இருந்தார். “வேதவசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்.” (அப். 18:24) அவர் கொரிந்துவில் இருந்த சமயத்தில் அந்தச் சபையில் இருந்த சிலருக்கு அவரை ரொம்ப பிடித்திருந்தது. சொல்லப்போனால், மற்ற சகோதரர்களைவிட, ஏன், அப்போஸ்தலன் பவுலைவிட, அவரை ரொம்ப பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். (1 கொ. 1:12, 13) இதையெல்லாம் அப்பொல்லோ ஆதரித்தாரா? நிச்சயம் அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவர் கொரிந்துவை விட்டுப் போன பின்பு, திரும்பவும் அங்கே வரச் சொல்லி அப்போஸ்தலன் பவுல் கேட்டுக்கொண்டார். (1 கொ. 16:12) ஒருவேளை, அப்பொல்லோ சபையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதாக பவுல் நினைத்திருந்தால் அப்படிச் சொல்லி இருந்திருக்க மாட்டார். நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்கும் அப்பொல்லோ தன்னுடைய திறமைகளைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவர் மனத்தாழ்மையான ஆளாக இருந்தார். உதாரணத்துக்கு, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ‘கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக அவருக்கு விளக்கியபோது’ அதை அவர் கௌரவக் குறைச்சலாக நினைக்கவில்லை.—அப். 18:24-28.

17. சபை சமாதானமாக இருப்பதற்காக பவுல் என்ன செய்தார்?

17 அப்பொல்லோ செய்த நல்ல செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் பவுலுக்கு நன்றாகத் தெரியும். தன்னைவிட அப்பொல்லோவை எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்பதை நினைத்து அவர் கவலைப்படவில்லை. “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்று அந்தச் சபையில் இருந்த சிலர் சொன்னபோது பெருமைப்படவும் இல்லை. அதற்குப் பதிலாக, எல்லாருடைய கவனத்தையும் யெகோவா பக்கமும் இயேசு கிறிஸ்து பக்கமும் திருப்பினார். (1 கொ. 3:3-6) இதிலிருந்து அவர் மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டார் என்பது தெரிகிறது.

18. ஒன்று கொரிந்தியர் 4:6, 7 சொல்கிறபடி, அப்பொல்லோவிடம் இருந்தும் பவுலிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

18 அப்பொல்லோவிடம் இருந்தும் பவுலிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒருவேளை, யெகோவாவின் சேவையில் நாம் நிறைய செய்துகொண்டிருக்கலாம். நிறைய பேர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு உதவியிருக்கலாம். ஆனால், யெகோவாவின் ஆசீர்வாதத்தால்தான் இதை எல்லாம் நம்மால் செய்ய முடிந்தது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொல்லோவிடம் இருந்தும் பவுலிடமிருந்தும் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். அதாவது, நமக்கு எந்தளவுக்குப் பொறுப்புகள் இருக்கிறதோ அந்தளவுக்குச் சபையின் சமாதானத்தைக் கட்டிக்காக்கிற கடமையும் இருக்கிறது. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பைபிளைப் பயன்படுத்தி சபை சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கு உதவுகிறார்கள். தங்களை அவர்கள் முக்கியமானவர்களாக நினைப்பதில்லை. சபையில் இருக்கிற எல்லாரும் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்கும் அவருடைய வழியில் நடப்பதற்கும் உதவுகிறார்கள். இதற்காக, நாம் அவர்களுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்.1 கொரிந்தியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.

19. நாம் எல்லாரும் என்ன செய்வதற்கு உறுதியாக இருக்க வேண்டும்? (“ போட்டி போடாதீர்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

19 நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் சில திறமைகளைக் கொடுத்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் ‘ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்கு’ நாம் பயன்படுத்த வேண்டும். (1 பே. 4:10) நாம் செய்வது ஒன்றுமே இல்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், நாம் செய்கிற சின்னச் சின்ன செயல்கள் ஒரு உடையில் இருக்கிற தையல்கள் மாதிரி. சின்ன சின்ன தையல்கள் எல்லாம் சேர்ந்து எப்படி ஒரு உடையை அழகாக்குகிறதோ அதே மாதிரி நாம் செய்யும் சின்னச் சின்ன செயல்கள் எல்லாம் சேர்ந்து சபையின் ஒற்றுமையை வளர்க்கிறது. அதனால், போட்டி போடுகிற குணம் ஒரு துளி அளவுகூட நம் மனதில் வராத மாதிரி நாம் பார்த்துக்கொள்ளலாம். சபையில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.—எபே. 4:3.

பாட்டு 80 “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்”

^ பாரா. 5 ஒரு மண் பாத்திரத்தில் சின்னதாக விரிசல் இருந்தாலும், அது சீக்கிரத்தில் உடைந்துபோவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே மாதிரி சபையில் போட்டி போடும் குணம் சின்னதாகத் தலைதூக்கினாலும் சபையின் ஒற்றுமையும் சமாதானமும் கெட்டுப்போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்துவிட்டால், யெகோவாவை நிம்மதியாக வணங்க முடியாமல் போய்விடும். இந்தக் கட்டுரையில் நாம் எப்படி மற்றவர்களுடன் போட்டி போடாமல் இருக்கலாம் என்பதைப் பற்றியும், சபையின் சமாதானத்துக்காக எப்படிப் பாடுபடலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 4 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.