Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 30

அன்பில் தொடர்ந்து வளருங்கள்!

அன்பில் தொடர்ந்து வளருங்கள்!

“எல்லாவற்றிலேயும் அன்பினால் வளருகிறவர்களாக இருக்க வேண்டும்.”—எபே. 4:15.

பாட்டு 2 யெகோவா என்பதே உங்கள் பெயர்

இந்தக் கட்டுரையில்... a

1. பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது என்னவெல்லாம் கற்றுக்கொண்டீர்கள்?

 முதன் முதலில் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது என்னவெல்லாம் கற்றுக்கொண்டீர்கள் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்று தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? ஆச்சரியமாக இருந்திருக்கும். கடவுள் யாரையும் நரகத்தில் போட்டு சித்திரவதை செய்வதில்லை என்று தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? ‘அப்பாடா’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பீர்கள். இறந்துபோன உங்கள் பிரியமானவர்களை மறுபடியும் பார்க்க முடியும், பூஞ்சோலை பூமியில் அவர்களோடு வாழ முடியும் என்று தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? மெய்சிலிர்த்துப் போயிருப்பீர்கள்.

2. பைபிளில் இருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொண்டதோடு வேறு என்ன முன்னேற்றம் நீங்கள் செய்திருக்கிறீர்கள்? (எபேசியர் 5:1, 2)

2 கடவுளுடைய வார்த்தையைப் படிக்கப் படிக்க யெகோவாமேல் உங்களுக்கு அன்பு வளர்ந்திருக்கும். கற்றுக்கொண்ட மாதிரி செய்வதற்கு அந்த அன்பு உங்களைத் தூண்டியிருக்கும். பைபிள் நியமங்களுக்கு ஏற்ற மாதிரி நீங்கள் நல்ல நல்ல முடிவுகள் எடுத்தீர்கள். கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதனால், உங்களுடைய யோசிக்கும் விதத்தையும் நடத்தையையும் மாற்றிக்கொண்டீர்கள். அன்பான அப்பா செய்வதைப் பார்த்து குழந்தையும் அப்படியே செய்வது மாதிரி, நீங்களும் உங்கள் பரலோக அப்பாவைப் பார்த்து அவர் மாதிரியே நடந்துகொண்டீர்கள்.எபேசியர் 5:1, 2-ஐ வாசியுங்கள்.

3. நமக்கு நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

3 நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில் யெகோவாமேல் எனக்கு இருந்த அன்பைவிட இப்போது என்னுடைய அன்பு அதிகமாகியிருக்கிறதா? சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுகிற விஷயத்தில் நான் யெகோவா மாதிரி ஆகியிருக்கிறேனா?’ ஒருவேளை ‘ஆரம்பத்தில் இருந்த அன்பு’ குறைந்த மாதிரி நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், சோர்ந்துவிடாதீர்கள். ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு இப்படித்தான் நடந்தது. அதற்காக இயேசு அவர்களை ஒதுக்கித்தள்ளவில்லை. நம்மையும் அவர் ஒதுக்கித்தள்ள மாட்டார். (வெளி. 2:4, 7) ஏனென்றால், பைபிள் படிக்க ஆரம்பித்தபோது நமக்குள் மலர்ந்த அன்பை மறுபடியும் தூண்டி எழுப்ப முடியும் என்று அவருக்குத் தெரியும்.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பை நாம் எப்படித் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இப்படி நாம் அன்பைப் பலப்படுத்திக்கொள்ளும்போது நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றும் பார்ப்போம்.

யெகோவாமேல் வைத்திருக்கும் அன்பில் வளருங்கள்

5-6. (அ) அப்போஸ்தலன் பவுல் ஊழியம் செய்த சமயத்தில் என்ன பிரச்சினைகளைச் சந்தித்தார்? (ஆ) யெகோவாவுக்கு தொடர்ந்து சேவை செய்ய எது அவரைத் தூண்டியது?

5 யெகோவாவுக்கு சேவை செய்வது பவுலுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால், நிறைய பிரச்சினைகளையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. பவுல் அடிக்கடி ரொம்ப தூரம் பயணம் செய்தார். அந்தக் காலத்தில் அதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை. அப்படிப் பயணம் செய்யும்போது சிலசமயம் “ஆறுகளால் வந்த ஆபத்துகளையும், திருடர்களால் வந்த ஆபத்துகளையும்” அவர் சந்தித்தார். அவருடைய எதிரிகளிடமிருந்து அடி உதைகூட வாங்கியிருக்கிறார். (2 கொ. 11:23-27) அதோடு, யாருக்காக ஓடி ஓடிப்போய் உதவி செய்தாரோ அந்த சகோதரர்களே சிலசமயங்களில் நன்றியில்லாமல் நடந்துகொண்டார்கள்.—2 கொ. 10:10; பிலி. 4:15.

6 யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கு பவுலுக்கு எது உதவியது? கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும் யெகோவாவின் குணங்களைப் பற்றி பவுல் நன்றாக தெரிந்துகொண்டார். யெகோவா தன்னை நேசிக்கிறார் என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. (ரோ. 8:38, 39; எபே. 2:4, 5) அவரும் யெகோவாவை ரொம்ப ரொம்ப நேசிக்க ஆரம்பித்தார். யெகோவாமேல் இருந்த அன்பை அவர் எப்படிக் காட்டினார்? அவர் ‘பரிசுத்தவான்களுக்காக சேவை செய்தார், அதைத் தொடர்ந்து செய்தார்.’—எபி. 6:10.

7. யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற அன்பில் வளருவதற்கு ஒரு வழி என்ன?

7 கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் படிப்பதன் மூலமாக கடவுள்மேல் இருக்கும் அன்பில் நாம் வளர முடியும். பைபிளில் நீங்கள் படிக்கிற ஒவ்வொரு பகுதியும் யெகோவாவைப் பற்றி என்ன சொல்கிறது என்று யோசித்துப் பாருங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா என்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது? நான் யெகோவாமேல் அன்பு காட்டுவதற்கு, இந்தப் பகுதி எனக்கு எப்படி உதவி செய்கிறது?’

8. யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற அன்பில் வளருவதற்கு ஜெபம் எப்படி நமக்கு உதவும்?

8 யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற அன்பில் வளருவதற்கு இன்னொரு வழி, தினமும் அவரிடம் ஜெபம் செய்வது. நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அவரிடம் கொட்ட வேண்டும். (சங். 25:4, 5) யெகோவா, நம் ஜெபங்களைக் கேட்டு அதற்கு பதில் கொடுப்பார். (1 யோ. 3:21, 22) ஆசியாவில் இருக்கிற கென் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பத்தில், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டதை வைத்து எனக்கு அவர்மேல் அன்பு வந்தது. ஆனால், என்னுடைய ஜெபங்களுக்கு அவர் பதில் கொடுத்ததைப் பார்த்தபோது, அவர்மேல் இருந்த அன்பு இன்னும் அதிகமானது. அதனால், அவருக்கு எது பிடிக்குமோ அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.” b

மற்றவர்கள்மேல் வைத்திருக்கும் அன்பில் வளருங்கள்

9. சகோதர சகோதரிகள்மேல் இருந்த அன்பில் தீமோத்தேயு தொடர்ந்து வளர்ந்து வந்தார் என்று எப்படிச் சொல்லலாம்?

9 பவுல் ஒரு கிறிஸ்தவராகி கொஞ்ச காலத்துக்குப் பிறகு, ஒரு இளைஞரை சந்தித்தார். அவர்தான் தீமோத்தேயு. தீமோத்தேயுவுக்கு யெகோவாமேலும் அன்பு இருந்தது, மக்கள்மேலும் அன்பு இருந்தது. சில வருஷங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி பிலிப்பியர்களிடம் பவுல் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய விஷயங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு [தீமோத்தேயுவை] போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை.” (பிலி. 2:20) பவுல் இங்கு தீமோத்தேயுவின் திறமைகளைப் பற்றிப் பேசவில்லை. அவர் அருமையான பேச்சாளர் என்பதைப் பற்றியோ எல்லாவற்றையும் ஒழுங்காக செய்பவர் என்பதைப் பற்றியோ சொல்லவில்லை. சகோதர சகோதரிகள்மேல் தீமோத்தேயு வைத்திருந்த அன்புதான் பவுலுடைய மனதைத் தொட்டது. தீமோத்தேயு தங்களுடைய சபைக்கு எப்போது வருவார் என்று அன்றைக்கு இருந்தவர்கள் ஆசையாக காத்திருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.—1 கொ. 4:17.

10. சகோதர சகோதரிகள்மேல் இருந்த அன்பை, ஆன்னாவும் அவருடைய கணவரும் எப்படிக் காட்டினார்கள்?

10 நாமும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு எப்படியெல்லாம் உதவி செய்யலாம் என்று வழிதேடுகிறோம். (எபி. 13:16) போன கட்டுரையில் வந்த ஆன்னாவுடைய அனுபவத்தைப் பார்க்கலாம். ஒரு பெரிய புயலுக்குப் பிறகு, ஆன்னாவும் அவருடைய கணவரும் ஒரு குடும்பத்தை நலம் விசாரிக்க அவர்கள் வீட்டுக்குப் போனார்கள். புயலில் அவர்களுடைய வீட்டுக் கூரை இடிந்து விழுந்திருந்தது. அவர்கள் போட்டுக்கொள்வதற்கு சுத்தமான துணிமணி எதுவும் இல்லை. ஆன்னா இப்படிச் சொல்கிறார்: “அவர்களுடைய துணிமணியை எடுத்துக்கொண்டுபோய் துவைத்து, அயன் செய்து, மடித்துக் கொடுத்தோம். இது ஒன்றும் பெரிய உதவி இல்லை. ஆனால் இன்றுவரை எங்கள் இரண்டு குடும்பத்துக்கும் நெருக்கமான பந்தம் இருப்பதற்கு அதுதான் காரணம். நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.” சகோதர சகோதரிகள்மேல் ஆன்னாவுக்கும் அவருடைய கணவருக்கும் இருந்த அன்புதான் தேவையான உதவிகளைச் செய்ய அவர்களைத் தூண்டியது.—1 யோ. 3:17, 18.

11. (அ) மற்றவர்களுக்கு அன்பு காட்டி அவர்களுக்கு உதவி செய்யும்போது பெரும்பாலும் அவர்கள் அதை எப்படி நினைக்கலாம்? (ஆ) நீதிமொழிகள் 19:17-ன் படி, நாம் மற்றவர்களுக்கு அன்பான விஷயங்களைச் செய்யும்போது யெகோவா என்ன செய்வார்?

11 நாம் மற்றவர்களை கருணையோடு, அன்பாக நடத்தும்போது நாம் யெகோவாவைப் போல் நடந்துகொள்ள முயற்சி செய்கிறோம் என்பதை அவர்கள் பார்ப்பார்கள். நாம் அன்பாக செய்த விஷயங்கள் நமக்குப் பெரிதாக தெரியாவிட்டாலும் அவர்கள் அதைப் பெரிதாக நினைப்பார்கள். ஏற்கெனவே பார்த்த கென்-ஐப் பற்றிப் பார்க்கலாம். அவருக்கு யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது இன்னும் அவருடைய மனதில் பசுமையாக இருக்கிறது. அவர் இப்படிச் சொல்கிறார்: “என்னை ஊழியத்துக்குக் கூட்டிக்கொண்டுப் போன ஒவ்வொரு சகோதரிக்கும் நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் என் வீட்டுக்கே வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போவார்கள். நாங்கள் சேர்ந்து ஏதாவது சாப்பிடுவோம். பின்பு, பத்திரமாக என்னை வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். இப்போதுதான் புரிகிறது, இதையெல்லாம் செய்வதற்கு அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்று! ஆனால் அதையெல்லாம் அவர்கள் சந்தோஷமாக செய்தார்கள்.” நாம் செய்த உதவிகளுக்கு எல்லாராலும் நமக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்பது உண்மைதான். தனக்கு உதவி செய்தவர்களைப் பற்றி கென் இப்படிச் சொல்கிறார்: “அவர்கள் எனக்காக செய்த எல்லா விஷயங்களுக்கும் நான் திருப்பிச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களெல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் யெகோவாவுக்குத் தெரியும். எனக்காக யெகோவா அவர்களுக்கு திருப்பிச் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.” கென் சொல்வது உண்மைதான். நாம் மற்றவர்களுக்குக் கருணையோடு செய்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட யெகோவா கவனிக்கிறார். அதைத் தனக்கே கொடுத்த பலியாக அவர் பார்க்கிறார். அதோடு, தனக்கே கொடுத்த கடனாகவும் அதை நினைக்கிறார். அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.நீதிமொழிகள் 19:17-ஐ வாசியுங்கள்.

யெகோவாவின் சேவையில் முன்னேறுகிற ஒருவர் மற்றவர்களுக்கு என்னென்ன வழிகளில் உதவி செய்யலாம் என்று யோசித்துப் பார்ப்பார் (பாரா 12)

12. சபையில் இருக்கிறவர்களிடம் சகோதரர்கள் எப்படி அன்பு காட்டலாம்? (படங்களையும் பாருங்கள்.)

12 நீங்கள் ஒரு சகோதரராக இருக்கிறீர்கள் என்றால், மற்றவர்கள்மேல் எப்படி அன்பு காட்டி, அவர்களுக்கு உதவி செய்யலாம்? ஜோர்டன் ஒரு இளம் சகோதரர். தான் சபையில் இன்னும் என்ன செய்யலாம் என்று அவர் ஒரு மூப்பரிடம் கேட்டார். ஜோர்டன் இதுவரை செய்த முன்னேற்றங்களுக்காக அந்த மூப்பர் அவரைப் பாராட்டிவிட்டு இன்னும் என்ன செய்யலாம் என்பதற்கு சில ஆலோசனைகளைக் கொடுத்தார். உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றத்துக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து எல்லாரையும் வரவேற்பதற்கு சொன்னார். கூட்டங்களில் பதில் சொல்வதற்கும், தொகுதியோடு சேர்ந்து தவறாமல் ஊழியம் செய்வதற்கும் சொன்னார். அதோடு, சகோதர சகோதரிகளுக்கு ஏதாவது உதவி தேவையா என்று யோசித்துப் பார்த்து அதை செய்யச் சொன்னார். மூப்பர் சொன்ன மாதிரி ஜோர்டன் செய்தபோது, சில விஷயங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று மட்டுமல்ல, சகோதர சகோதரிகள்மேல் எப்படி அன்பு காட்ட வேண்டும் என்றும் கற்றுக்கொண்டார். ஜோர்டன் இன்னொரு உண்மையையும் கற்றுக்கொண்டார். ஒரு சகோதரர் உதவி ஊழியராக ஆகும்போது அவர் உதவி செய்ய ஆரம்பிப்பது இல்லை; அவர் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் உதவியைத் தொடருகிறார்.1 தீ. 3:8-10, 13.

13. மறுபடியும் மூப்பராக சேவை செய்வதற்கு அன்பு எப்படி ஒரு சகோதரருக்கு உதவி செய்தது?

13 நீங்கள் முன்பு ஒரு உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சேவை செய்திருக்கிறீர்களா? நீங்கள் முன்பு செய்த சேவையையும் அதைச் செய்ய உங்களைத் தூண்டிய அன்பையும் யெகோவா மறப்பதில்லை. (1 கொ. 15:58) இப்போது நீங்கள் தொடர்ந்து காட்டி வரும் அன்பையும் அவர் கவனிக்கிறார். கிறிஸ்டியன் என்ற சகோதரர், மூப்பராக சேவை செய்வதிலிருந்து நீக்கப்பட்டார். அது அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நான் பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அன்பால் தூண்டப்பட்டு யெகோவாவுக்கு சேவை செய்வதற்கு என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.” காலப்போக்கில், மறுபடியும் அவர் மூப்பராக நியமிக்கப்பட்டார். “மறுபடியும் ஒரு மூப்பராக சேவை செய்வதற்கு ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால், நான் திரும்பவும் சேவை செய்ய வேண்டும் என்று யெகோவாவே விரும்புகிறார். அப்படியென்றால், அவர்மேல் இருக்கும் அன்பினாலும், சகோதர சகோதரிகள்மேல் இருக்கும் அன்பினாலும் அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று கிறிஸ்டியன் சொல்கிறார்.

14. ஜார்ஜியாவில் இருக்கிற சகோதரி சொன்ன விஷயத்தில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

14 யெகோவாவுடைய மக்கள் மற்றவர்கள்மேலும் அன்பு காட்டுகிறார்கள். (மத். 22:37-39) உதாரணத்துக்கு, ஜார்ஜியா நாட்டில் இருக்கிற எலானா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பத்தில், யெகோவாமேல் இருந்த அன்பினால்தான் நான் ஊழியம் செய்தேன். ஆனால், என் பரலோக அப்பாமேல் அன்பு வளர வளர மக்கள்மேல் இருந்த அன்பும் வளர்ந்தது. அவர்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைகள் இருக்கின்றன... எதைப் பற்றிப் பேசுவது அவர்களுடைய மனதைத் தொடும்... என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். அவர்களைப் பற்றி இப்படி யோசிக்க யோசிக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையும் அதிகமானது.”—ரோ. 10:13-15.

மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதால் கிடைக்கும் பலன்கள்

அன்பால் ஒருவருக்கு செய்யும் ஒரேவொரு உதவிகூட பல பேருக்குப் பலன்களைத் தரலாம் (பாராக்கள் 15-16)

15-16. படத்தில் காட்டப்பட்டுள்ளது போல், மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

15 நம் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டும்போது அவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் பயனடைகிறார்கள். உதாரணத்துக்கு, கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்த பிறகு, பவுலோவும் அவருடைய மனைவியும் வயதான நிறைய சகோதரிகளுக்கு, எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி எப்படி சாட்சி கொடுக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் ஒரு சகோதரிக்கு அதைப் பயன்படுத்துவது கஷ்டமாக இருந்தது. ஆனால் கடைசியில் அதைப் பயன்படுத்த கற்றுக்கொண்டார். அதைப் பயன்படுத்தி அவருடைய சொந்தக்காரர்களை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழைத்தார். அவர்களில் 60 பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துகொண்டார்கள்! பவுலோவும் அவருடைய மனைவியும் எடுத்த முயற்சிகளால் அந்த சகோதரியும் அவருடைய சொந்தக்காரர்களும் பயனடைந்தார்கள். பிறகு, அந்த சகோதரி பவுலோவுக்கு இப்படி எழுதினார்: “எங்களை மாதிரி வயதானவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. யெகோவா எங்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்... எங்களுக்கு உதவ நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறீர்கள்... என்பதையெல்லாம் நான் மறக்கவே மாட்டேன்.”

16 இந்த மாதிரி அனுபவங்களிலிருந்து பவுலோ ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். அறிவையோ திறமையையோ விட அன்புதான் மிக முக்கியம் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு காலத்தில் நான் வட்டாரக் கண்காணியாக இருந்தேன். சகோதர சகோதரிகள் நான் கொடுத்த பேச்சுகளை ஒருவேளை மறந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்காக நான் செய்த உதவிகளை அவர்கள் இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.”

17. நாம் அன்பு காட்டுவதால் வேறு யாரும்கூட பயனடைகிறார்கள்?

17 நாம் மற்றவர்கள்மேல் அன்பு காட்டும்போது, நமக்கே அது நிறைய பலன்களைக் கொண்டுவரும். அதை நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். நியுசிலாந்தில் இருக்கிற ஜோனத்தனுக்கும் இப்படித்தான் நடந்தது. ஒரு சனிக்கிழமை மதியம், கொளுத்தும் வெயிலில், ஒரு பயனியர் சகோதரர் தனியாக ஊழியம் செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். அடுத்த வாரத்தில் இருந்து, சனிக்கிழமை மதியம் அவரோடு சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று ஜோனத்தன் முடிவு செய்தார். இப்படி அவர் அன்பு காட்டியது தனக்கே பிரயோஜனமாக இருக்கும் என்று அந்த சமயத்தில் அவர் யோசித்துக்கூட பார்க்கவில்லை. ஜோனத்தன் இப்படிச் சொல்கிறார்: “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய வாழ்க்கையில் அந்த சமயத்தில் ஊழியத்தில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் இருந்தது. ஆனால், அந்த சகோதரர் மற்றவர்களுக்கு ரொம்ப அருமையாக சொல்லிக் கொடுத்ததையும் அவருக்கு ஊழியத்தில் கிடைத்த பலன்களையும் பார்த்தபோது ஊழியம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது. அவர் எனக்கு ஒரு நல்ல நண்பராக ஆனார். ஆன்மீக விஷயங்களில் வளருவதற்கும், ஊழியத்தை சந்தோஷமாக செய்வதற்கும், யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கும் அவர் எனக்கு உதவி செய்தார்.”

18. நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்?

18 யெகோவா, நாம் அவர்மேல் வைத்திருக்கும் அன்பிலும் மற்றவர்கள்மேல் வைத்திருக்கும் அன்பிலும் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி, யெகோவாவுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமாகவும் அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பதன் மூலமாகவும் ஜெபத்தில் அவரிடம் தவறாமல் பேசுவதன் மூலமாகவும் யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பில் வளர முடியும். நம் சகோதர சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதன் மூலமாக அவர்கள்மேல் வைத்திருக்கும் அன்பில் வளர முடியும். இப்படி அன்பில் வளர வளர யெகோவாவோடும் சகோதர சகோதரிகளோடும் இன்னும் நெருங்கி இருப்போம். அந்த நட்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!

பாட்டு 109 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

a நாம் புதிதாக யெகோவாவின் சாட்சியாக ஆகியிருந்தாலும் சரி, ரொம்ப காலமாக யெகோவாவின் சாட்சியாக இருந்தாலும் சரி, நம் எல்லாராலும் முன்னேற முடியும். யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பில் நாம் எப்படித் தொடர்ந்து முன்னேறலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இதை நீங்கள் படிக்கும்போது, ஏற்கெனவே எந்தளவு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதையும் இன்னும் எப்படி முன்னேறலாம் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.