Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 31

“உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும்” இருங்கள்

“உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும்” இருங்கள்

“என் அன்பான சகோதரர்களே, . . . உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும் . . . இருங்கள்.”—1 கொ. 15:58.

பாட்டு 122 அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!

இந்தக் கட்டுரையில்... a

1-2. எந்த விதத்தில் ஒரு கிறிஸ்தவர் உயரமான கட்டடம் போல இருக்கிறார்? (1 கொரிந்தியர் 15:58)

 1978-ல், ஜப்பானில் டோக்கியோ நகரத்தில், 60-மாடி கட்டடத்தைக் கட்டினார்கள். அது அவ்வளவு உயரமாக இருந்ததால், அங்கு அடிக்கடி வரும் நிலநடுக்கத்தை அது எப்படி தாக்குப்பிடிக்கும் என்று மக்கள் யோசித்தார்கள். ஆனால் அந்தக் கட்டடத்தை வடிவமைத்த இன்ஜினியர்கள், அது உறுதியாக இருப்பது மட்டுமல்ல, நிலநடுக்கத்தால் ஏற்படுகிற அதிர்வுகளைத் தாக்குப்பிடிக்கும் விதத்திலும் அதைக் கட்டினார்கள். அந்த அதிர்வுகள் வரும்போது அந்தக் கட்டடம் வளைந்துகொடுக்கும், ஆனால் இடிந்து விழாது. கிறிஸ்தவர்களும் இந்தக் கட்டடத்தைப் போலத்தான் இருக்கிறார்கள். எந்த விதத்தில்?

2 ஒரு கிறிஸ்தவர் உறுதியானவராக மட்டுமல்ல வளைந்துகொடுப்பவராகவும் இருக்க வேண்டும். யெகோவாவுடைய சட்டங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் கீழ்ப்படியும் விஷயத்தில் அவர் உறுதியானவராக, அசைக்க முடியாதவராக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.) ‘கீழ்ப்படியத் தயாரானவராக’, யெகோவாவுடைய சட்டங்களை விட்டுக்கொடுக்காதவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், எப்போதெல்லாம் முடியுமோ, அல்லது எப்போதெல்லாம் தேவைப்படுமோ, அப்போதெல்லாம் அவர் ‘நியாயமானவராக,’ அதாவது வளைந்துகொடுப்பவராக, இருக்க வேண்டும். (யாக். 3:17) இப்படிச் சமநிலையோடு இருக்கக் கற்றுக்கொள்கிற ஒரு கிறிஸ்தவர், ரொம்ப கறாரானவராகவும் இருக்க மாட்டார், ஏனோதானோவென்றும் இருக்க மாட்டார். இந்தக் கட்டுரையில், நாம் எப்படி அசைக்க முடியாதவர்களாக இருக்கலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். உறுதியாக இருக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தைப் பலவீனமாக்க சாத்தான் முயற்சி செய்கிறான். அதற்காக அவன் பயன்படுத்தும் ஐந்து வழிகளைப் பற்றியும் அதை நாம் எப்படி எதிர்த்து நிற்கலாம் என்பதைப் பற்றியும் இதில் பார்ப்போம்.

உறுதியானவர்களாக இருக்க வேண்டும்-எதில்?

3. சட்டங்களைக் கொடுப்பதில் உயர்ந்த அதிகாரம் இருக்கிற கடவுள், அப்போஸ்தலர் 15:28, 29-ல் என்ன சட்டங்களைக் கொடுத்திருக்கிறார்?

3 சட்டங்களைக் கொடுப்பதில் ரொம்ப உயர்ந்த அதிகாரம் யெகோவாவுக்குத்தான் இருக்கிறது. அவருடைய மக்களுக்கு அவர் எப்போதுமே தெளிவான சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 33:22) உதாரணத்துக்கு, கிறிஸ்தவர்கள் உறுதியாக இருக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றி முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழு சொன்னது. அவை: (1) சிலை வழிபாட்டை ஒதுக்கித்தள்ளுவது, யெகோவாவை மட்டுமே வணங்குவது, (2) இரத்தம் புனிதமானது என்ற யெகோவாவுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிவது, (3)  பைபிளின் உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது. (அப்போஸ்தலர் 15:28, 29-ஐ வாசியுங்கள்.) இந்த மூன்று முக்கியமான விஷயங்களில் இன்று கிறிஸ்தவர்கள் எப்படி உறுதியாக இருக்கலாம்?

4. நாம் யெகோவாவை மட்டும்தான் வணங்குகிறோம் என்பதை எப்படிக் காட்டுகிறோம்? (வெளிப்படுத்துதல் 4:11)

4 சிலை வழிபாட்டை ஒதுக்கித்தள்ளுகிறோம், யெகோவாவை மட்டுமே வணங்குகிறோம். தன்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். (உபா. 5:6-10) இயேசுவை சாத்தான் சோதித்தபோதுகூட, யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று இயேசு தெளிவாகச் சொன்னார். (மத். 4:8-10) அதனால், நாம் எந்த சிலையையும் வணங்க மாட்டோம். அதுமட்டுமல்ல, நாம் மனிதர்களையும் கடவுளாக்கிவிட மாட்டோம். உதாரணத்துக்கு, மதத் தலைவர்களையோ அரசியல் தலைவர்களையோ, அல்லது விளையாட்டு, சினிமா, இசை போன்ற துறைகளில் பிரபலமாக இருக்கிறவர்களையோ, கடவுளைப் போல் நினைத்து கொண்டாட மாட்டோம். நாம் யெகோவாவின் ஆட்கள், ‘எல்லாவற்றையும் படைத்த’ அவரை மட்டும்தான் வணங்குவோம்.வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.

5. உயிரும் இரத்தமும் புனிதமானது என்பதைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் சட்டத்துக்கு நாம் ஏன் கீழ்ப்படிகிறோம்?

5 உயிரும் இரத்தமும் புனிதமானது என்று யெகோவா கொடுத்திருக்கும் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிகிறோம். ஏன்? ஏனென்றால், இரத்தம் உயிரைக் குறிக்கிறது என்று யெகோவா சொல்கிறார். உயிர் என்பது யெகோவா கொடுத்த விலைமதிக்க முடியாத பரிசு. (லேவி. 17:14) முதல் முதலில் மனிதர்கள் மிருகங்களுடைய இறைச்சியை சாப்பிடுவதற்கு யெகோவா அனுமதித்தபோது அதன் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருந்தார். (ஆதி. 9:4) இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த திருச்சட்டத்திலும் இதே கட்டளையை மறுபடியும் கொடுத்தார். (லேவி. 17:10) முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழு மூலமாக, எல்லா கிறிஸ்தவர்களும் ‘இரத்தத்துக்கு . . . விலகியிருக்க’ வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்தார். (அப். 15:28, 29) மருத்துவ விஷயங்களில் முடிவெடுக்கும்போது, இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் நாம் உறுதியோடு இருக்கிறோம். b

6. யெகோவாவுடைய உயர்ந்த ஒழுக்க நெறிகளின்படி வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

6 யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க நெறிகளை நாம் விட்டுக்கொடுப்பதில்லை. (எபி. 13:4) அப்போஸ்தலன் பவுல் ஒரு பலமான ஆலோசனையைக் கொடுக்கிறார். நம் உடல் உறுப்புகளை ‘சாகடிக்க’ வேண்டும் என்று சொல்கிறார். அதாவது, கெட்ட ஆசைகளை வேரோடு பிடுங்கி எறிவதற்கு கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். பாலியல் முறைகேட்டில் நம்மைக் கொண்டுபோய் விடுகிற எந்த விஷயத்தையும் நாம் பார்ப்பதும் இல்லை, செய்வதும் இல்லை. (கொலோ. 3:5-ன் அடிக்குறிப்பு; யோபு 31:1) தவறு செய்வதற்கான தூண்டுதல் வரும்போது அந்த யோசனைகளை உடனடியாகத் தூக்கியெறிந்துவிடுகிறோம். யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற நட்பைக் கெடுக்கிற மாதிரி எதையுமே நாம் செய்ய மாட்டோம்.

7. என்ன செய்ய நாம் உறுதியாக இருக்க வேண்டும், ஏன்?

7 நாம் ‘மனப்பூர்வமாகக் கீழ்ப்படிய’ வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (ரோ. 6:17) அவர் சொல்வது எல்லாமே நம்முடைய நல்லதுக்குத்தான். அவருடைய சட்டங்களை நாம் மாற்ற முடியாது. (ஏசா. 48:17, 18; 1 கொ. 6:9, 10) யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்வதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். சங்கீதக்காரர் இப்படிச் சொல்கிறார்: “எல்லா சமயத்திலும், கடைசிவரையிலும், உங்களுடைய விதிமுறைகளின்படி நடக்க உறுதியாக இருக்கிறேன்.” இதே மாதிரி உறுதியாக இருக்கத்தான் நாமும் முடிவு செய்திருக்கிறோம். (சங். 119:112) ஆனால், நம்முடைய இந்த உறுதியை பலவீனமாக்க சாத்தான் முயற்சி செய்கிறான். அதற்கு அவன் என்ன வழிகளைப் பயன்படுத்துகிறான்?

நம் உறுதியை பலவீனமாக்க சாத்தான் பயன்படுத்தும் வழிகள்

8. நம் மனஉறுதியை உடைப்பதற்கு சாத்தான் எப்படித் துன்புறுத்தலைப் பயன்படுத்துகிறான்?

8 துன்புறுத்தல். பிசாசு நம்மை உடலளவிலும் மனதளவிலும் தாக்கி நம் உறுதியை உடைக்கப் பார்க்கிறான். யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரித்து, அப்படியே “விழுங்கலாம்” என்று அவன் குறியாக இருக்கிறான். (1 பே. 5:8) யெகோவா பக்கம் உறுதியாக நின்றதால் ஆரம்பகால கிறிஸ்தவர்களை எதிரிகள் பயமுறுத்தினார்கள், அடித்து உதைத்தார்கள், கொலையும் செய்தார்கள். (அப். 5:27, 28, 40; 7:54-60) இன்றும் சாத்தான் துன்புறுத்தலைப் பயன்படுத்துகிறான். எப்படிச் சொல்கிறோம்? ரஷ்யாவிலும் மற்ற நாடுகளிலும் இருக்கிற நம் சகோதர சகோதரிகளை அங்கிருக்கும் அரசாங்கங்கள் கொடுமைப்படுத்துகின்றன. வேறு விதங்களிலும்கூட நம் சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

9. மறைமுகமான அழுத்தத்தைக் குறித்து நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

9 மறைமுகமான அழுத்தங்கள். நேரடியாகத் தாக்குவதோடுகூட “சூழ்ச்சிகளை” பயன்படுத்தியும் சாத்தான் தாக்குகிறான். (எபே. 6:11) உதாரணமாக, ராபர்ட் என்ற சகோதரருக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். எந்த சூழ்நிலையிலும் தனக்கு இரத்தம் கொடுக்கக் கூடாது என்று அந்த சகோதரர் டாக்டர்களிடம் சொன்னார். அறுவை சிகிச்சை செய்கிற டாக்டரும் அதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சைக்கு முந்தின நாள் ராத்திரி, மயக்க மருந்து கொடுக்கிற டாக்டர், சகோதரர் ராபர்ட்டைப் போய்ப் பார்த்தார். அதுவும் அவருடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் வீட்டுக்குப் போன பிறகு! அவர் ராபர்ட்டிடம், ‘டாக்டர்கள் உங்களுக்கு பெரும்பாலும் இரத்தம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் தேவைப்பட்டால் கொடுப்பதற்காக, அதைத் தயாராக மட்டும் வைத்திருப்பார்கள்’ என்று சொன்னார். ராபர்ட்டின் குடும்பத்தில் யாரும் பக்கத்தில் இல்லாததால் அவர் தன் மனதை மாற்றிக்கொள்வார் என்று ஒருவேளை அந்த டாக்டர் நினைத்திருக்கலாம். ஆனால் ராபர்ட் உறுதியாக இருந்தார். தனக்கு என்ன நடந்தாலும் இரத்தம் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

10. மனித யோசனைகள் ஏன் ரொம்ப ஆபத்தானது? (1 கொரிந்தியர் 3:19, 20)

10 மனித யோசனைகள். இன்று நிறைய மக்கள் யெகோவாவின் சட்டங்களை மதிப்பதில்லை. நாமும் அவர்களைப் போலவே யோசிக்க ஆரம்பித்தோம் என்றால், யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் ஒதுக்கித்தள்ள ஆரம்பித்துவிடுவோம். (1 கொரிந்தியர் 3:19, 20-ஐ வாசியுங்கள்.) “இந்த உலகத்தின் ஞானம்” கெட்ட ஆசைகளுக்குத் தீனி போட்டு மக்களை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வைக்கிறது. பெர்கமுவிலும் தியத்தீராவிலும் இருந்த நிறைய மக்கள் ரொம்ப ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தார்கள், சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த ஊரிலிருந்த சில கிறிஸ்தவர்கள் அவர்களைப் போலவே நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பொறுத்துக்கொண்டதால், இந்த இரண்டு ஊர்களில் இருந்த சபைகளுக்கும் இயேசு கடுமையான ஆலோசனை கொடுத்தார். (வெளி. 2:14, 20) இன்றும் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் தங்களுடைய தவறான கருத்துகளை நம்மேல் திணிக்கப் பார்க்கலாம். நம் குடும்பத்தில் இருக்கிறவர்களும் நம்மோடு பழகுகிறவர்களும் நம்முடைய மனதை மாற்றப் பார்க்கலாம். நாம் இவ்வளவு கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை என்று சொல்லி யெகோவாவுடைய சட்டங்களை மீறத் தூண்டலாம். உதாரணத்துக்கு, ஒழுக்கம் சம்பந்தமாக பைபிள் சொல்வதெல்லாம் நம் காலத்துக்கு ஒத்துவராது, அப்படியெல்லாம் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்லலாம்.

11. நாம் எதை செய்யவே கூடாது?

11 சில சமயங்களில், யெகோவா கொடுக்கிற வழிநடத்துதல் அவ்வளவு தெளிவாக இல்லை என்று நாம் காரணம் சொல்லலாம். “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சி” போவதற்குக்கூட நமக்குத் தோன்றலாம். (1 கொ. 4:6) இந்தப் பாவத்தைத்தான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்கள் செய்தார்கள். யெகோவா கொடுத்த திருச்சட்டத்தோடு, இவர்கள் சொந்தமாக நிறைய சட்டங்களைப் போட்டார்கள். இப்படி சாதாரண மக்கள்மேல் ஒரு பெரிய சுமையை சுமத்தினார்கள். (மத். 23:4) இன்று யெகோவா தன்னுடைய வார்த்தை மூலமாகவும் தன்னுடைய அமைப்பு மூலமாகவும் தெளிவான வழிநடத்துதலை கொடுக்கிறார். நாம் புதிதாக எதையும் சேர்க்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. (நீதி. 3:5-7) அதனால், பைபிளில் எழுதப்பட்டதைத் தாண்டி நாம் போக மாட்டோம் அல்லது சகோதர சகோதரிகளுடைய தனிப்பட்ட விஷயங்களில் சட்டங்களைப் போட மாட்டோம்.

12. சாத்தான் எப்படி ‘வஞ்சனையான வீண் கருத்துகளை’ பயன்படுத்துகிறான்?

12 வஞ்சனைகள். இன்று மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கும் அவர்களுக்குள் பிரிவினைகளை உண்டாக்குவதற்கும் சாத்தான் ‘வஞ்சனையான வீண் கருத்துகளையும்’ “இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களையும்” பயன்படுத்துகிறான். (கொலோ. 2:8) முதல் நூற்றாண்டில், மனித தத்துவங்களையும் பைபிள் அடிப்படையில் இல்லாத யூத போதனைகளையும் சாத்தான் பயன்படுத்தினான். அதோடு, கிறிஸ்தவர்கள் கட்டாயம் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற போதனையையும் பயன்படுத்தினான். இவையெல்லாமே வஞ்சனைகள், அதாவது மக்களை ஏமாற்றுபவை. ஏனென்றால், உண்மையான ஞானத்தைக் கொடுக்கிற யெகோவாவிடம் இருந்து மக்களுடைய கவனத்தை அது திசைத்திருப்பியது. இன்று, அரசியல் தலைவர்களின் தூண்டுதலால் உண்டாக்கப்படுகிற சதி கோட்பாடுகளையும் பொய்யான செய்தி அறிக்கைகளையும் சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். மீடியா மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவற்றைப் பரப்பிவிடுகிறான். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் இதையெல்லாம் நாம் கண்ணார பார்த்தோம். c ஆனால் யெகோவாவின் சாட்சிகள், அவர்களுடைய அமைப்பு கொடுத்த வழிநடத்துதலைக் கேட்டு நடந்துகொண்டார்கள். அதனால், மற்ற மக்களைப் போல் பொய்யான செய்திகளை நம்பி தேவையில்லாமல் கவலைப்படவில்லை.—மத். 24:45.

13. கவனம் சிதறாமல் இருக்க நாம் ஏன் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

13 கவனச்சிதறல்கள். ‘மிக முக்கியமான காரியங்களிலிருந்து’ நம் கவனம் சிதறிவிடக் கூடாது. (பிலி. 1:9, 10) கவனச்சிதறல்கள், எக்கச்சக்கமான நேரத்தையும் நம்முடைய சக்தியையும் உறிஞ்சிவிடும். அதனால் பிரயோஜனமான விஷயங்களைச் செய்ய முடியாமல் போய்விடும். அன்றாட விஷயங்கள்கூட நம் கவனத்தைச் சிதறடிக்கலாம். சாப்பிடுவது, குடிப்பது, பொழுதுபோக்கு, வேலை—இந்த மாதிரி விஷயங்களுக்கு ரொம்ப முக்கியமான இடத்தைக் கொடுத்துவிட்டால் நம் கவனம் சிதறிவிடும். (லூக். 21:34, 35) அதோடு, போராட்டங்கள், அரசியல் விவாதங்கள் என்று தினமும் செய்திகள் சரமாரியாக வந்து நம்மைத் தாக்குகின்றன. இந்த மாதிரி செய்திகளாலும் நம் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஏதாவது ஒரு பக்கம் நம் மனது சாய ஆரம்பித்துவிடும். நாம் இதுவரை பார்த்த எல்லா விஷயங்களையும் பயன்படுத்தி, சாத்தான் நம் உறுதியை பலவீனமாக்குவதற்கு முயற்சி செய்கிறான். அவனுடைய தாக்குதலை நாம் எப்படி முறியடிக்கலாம், எப்படித் தொடர்ந்து உறுதியோடு இருக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

நாம் எப்படி உறுதியாக இருக்கலாம்?

உறுதியானவர்களாக இருப்பதற்கு, உங்களுடைய அர்ப்பணத்தையும் ஞானஸ்நானத்தையும் பற்றி நினைத்துப் பாருங்கள்; கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள்; உள்ளத்தை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்; யெகோவாவை நம்புங்கள் (பாராக்கள் 14-18)

14. யெகோவா பக்கம் உறுதியாக இருப்பதற்கு உதவும் ஒரு விஷயம் என்ன?

14 நீங்கள் ஏன் உங்களை அர்ப்பணித்தீர்கள், ஞானஸ்நானம் எடுத்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். யெகோவா பக்கம் நிற்பதற்காகத்தான் நீங்கள் அதைச் செய்தீர்கள். இதுதான் சத்தியம் என்று நீங்கள் எதை வைத்து முடிவு செய்தீர்கள் என்றும் யோசித்துப் பாருங்கள். நீங்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள். உங்கள் பரலோக அப்பாவாக அவர்மேல் மரியாதையும் அன்பும் காட்ட ஆரம்பித்தீர்கள். உங்களுடைய விசுவாசம் வளர்ந்தது. நீங்கள் மனம் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள். யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வதை நிறுத்தினீர்கள். அவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய ஆரம்பித்தீர்கள். கடவுள் உங்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டார் என்று தெரிந்துகொண்டபோது உங்களுக்கு நிம்மதியாக இருந்தது. (சங். 32:1, 2) சபைக் கூட்டங்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள். நீங்கள் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களையெல்லாம் மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தீர்கள். உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தீர்கள். இப்போது நீங்கள் வாழ்வுக்கான வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். வழிமாறி போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள்.—மத். 7:13, 14.

15. படிப்பதும் படித்த விஷயங்களை ஆழமாக யோசிப்பதும் ஏன் நல்லது?

15 கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். ஒரு மரத்தின் வேர் எந்தளவுக்கு ஆழமாக மண்ணுக்குள் போகிறதோ அந்தளவுக்கு அந்த மரம் உறுதியானதாக இருக்கும். அதே மாதிரி, யெகோவாமேல் நமக்கு இருக்கிற விசுவாசம் ஆழமாக வேரூன்றி இருந்ததென்றால், நாம் உறுதியானவர்களாக இருப்போம். மரம் வளர வளர, அதன் வேர் ஆழமாகவும் பக்கவாட்டிலும் பரந்து விரிந்து போகும். அதே மாதிரி, கடவுளுடைய வார்த்தையை படித்து ஆழமாக யோசிக்கும்போது நம் விசுவாசம் பலமாகும். அதோடு, கடவுளுடைய வழிகள்தான் சிறந்தது என்ற நம் நம்பிக்கை இன்னும் உறுதியாகும். (கொலோ. 2:6, 7) முன்னாடி காலத்தில், யெகோவா அவருடைய மக்களைப் பாதுகாத்தார், வழிநடத்தினார், அறிவுரைகளையும் கொடுத்தார். இதெல்லாம் எப்படி அவர்களுக்குப் பிரயோஜனமாக இருந்தது என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, தரிசனத்தில் பார்த்த ஆலயத்தை ஒரு தேவதூதர் எவ்வளவு துல்லியமாக அளவு எடுத்தார் என்பதை எசேக்கியேல் உன்னிப்பாக கவனித்தார். அது எசேக்கியேலைப் பலப்படுத்தியது. அந்தத் தரிசனத்தில் இருந்து நாமும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். தூய வணக்கத்தில் யெகோவா வைத்திருக்கிற நெறிமுறைகளை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று அதிலிருந்து கற்றுக்கொள்கிறோம். d (எசே. 40:1-4; 43:10-12) அதனால், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற ஆழமான விஷயங்களைப் படித்து நன்றாக யோசித்துப் பார்ப்பதற்கு நாமும் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது நமக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.

16. உறுதியான உள்ளம் எப்படி ராபர்ட்டை பாதுகாத்தது? (சங்கீதம் 112:7)

16 உள்ளத்தை உறுதியாக்குங்கள். தாவீது ராஜா யெகோவாமேல் நிறைய அன்பு வைத்திருந்தார். அது குறையவே குறையாது என்பதை அவர் இப்படிப் பாடினார்: “கடவுளே, நான் உள்ளத்தில் உறுதியோடு இருக்கிறேன்.” (சங். 57:7) அவரைப் போல நாமும் நம்முடைய உள்ளத்தை உறுதியாக்க முடியும்; யெகோவாமேல் நம்பிக்கை வைக்க முடியும். (சங்கீதம் 112:7-ஐ வாசியுங்கள்.) ஏற்கெனவே நாம் பார்த்த ராபர்ட்டும் உள்ளத்தை உறுதியாக வைத்திருந்தார். ராபர்ட்டிடம் டாக்டர்கள், ஒரு அவசரத்துக்கு இரத்தத்தை தயாராக வைத்துக்கொள்வதாக சொன்னபோது அவர் என்ன செய்தார்? ‘அப்படி நீங்கள் செய்வதாக இருந்தால் நான் இப்போதே ஆஸ்பத்திரியை விட்டுப் போகிறேன்’ என்று அவர் உடனடியாக சொல்லிவிட்டார். இந்தச் சம்பவத்தைப் பற்றி பின்பு ராபர்ட் இப்படிச் சொன்னார்: “அந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகமும் எனக்கு இருக்கவில்லை, என்ன ஆகிவிடுமோ என்ற பயமும் எனக்கு இருக்கவில்லை.” உள்ளத்தை உறுதியாக வைத்திருந்தது அவருக்கு எப்படி உதவியாக இருந்தது என்று பார்த்தீர்களா?

பலமான விசுவாசத்தை நாம் வளர்த்துக்கொண்டால், என்ன பிரச்சினை வந்தாலும் நாம் உறுதியானவர்களாக நிலைத்திருப்போம் (பாரா 17)

17. ராபர்ட்டின் அனுபவத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

17 ராபர்ட் எப்படி உறுதியாக இருக்க முடிந்தது? ஆஸ்பத்திரிக்கு போவதற்கு ரொம்ப முன்னாடியே, உறுதியோடு இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துவிட்டார். முதலில், அவர் யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். இரண்டாவதாக, உயிர் மற்றும் இரத்தத்தின் புனிதத்தைப் பற்றி பைபிளும் பைபிள் அடிப்படையில் வந்த நம் பிரசுரங்களும் என்ன சொல்கிறது என்று ரொம்ப கவனமாகப் படித்தார். மூன்றாவதாக, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் அவர் பலன் கொடுப்பார் என்பதில் ராபர்ட்டுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. எந்த மாதிரி பிரச்சினைகள் வந்தாலும், உள்ளத்தை உறுதியாக வைத்துக்கொள்ள நம்மாலும் முடியும்.

பாராக்கும் அவருடைய ஆட்களும் சிசெராவின் படையை தைரியமாகத் துரத்திக்கொண்டு போகிறார்கள் (பாரா 18)

18. யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்கு பாராக்கின் உதாரணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

18 யெகோவாவை நம்புங்கள். யெகோவா கொடுத்த வழிநடத்துதல்மேல் நம்பிக்கை வைத்ததால் பாராக்குக்கு எப்படி வெற்றி கிடைத்தது என்று யோசித்துப் பாருங்கள். கானானியப் படைத் தலைவனாக இருந்த சிசெராவையும் அவனுடைய படையையும் எதிர்த்து இஸ்ரவேலர்களை யெகோவா போருக்குப் போகச் சொன்னார். அந்த சமயத்தில் இஸ்ரவேலர்கள் போருக்குத் தயாராக இல்லை. அவர்களிடம் ஆயுதங்கள்கூட இல்லை. கேடயமும் இல்லை, ஈட்டியும் இல்லை. ஆனால் கானானியர்களிடம் எல்லா ஆயுதங்களும் இருந்தன. (நியா. 5:8) இருந்தாலும் மலையிலிருந்து இறங்கிப் போய், சமவெளியில் சிசெராவையும் அவனுடைய 900 ரதங்களையும் நேருக்கு நேர் சந்திக்கச் சொல்லி, தீர்க்கதரிசனம் சொல்கிற தெபோராள் பாராக்கிடம் சொன்னாள். சமவெளியில், மின்னலாக பாய்ந்து வருகிற ரதங்களை எதிர்த்து ஜெயிப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம் என்பது பாராக்குக்குத் தெரியும். ஆனாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து பாராக் சண்டைக்குப் போனார். அவரும் அவருடைய வீரர்களும் தாபோர் மலையிலிருந்து இறங்கி வரும்போது யெகோவா பயங்கரமான மழையைப் பெய்ய வைத்தார். சிசெராவின் ரதங்கள் சேற்றில் நன்றாகச் சிக்கிக் கொண்டன. பாராக்குக்கு யெகோவா வெற்றியைக் கொடுத்தார். (நியா. 4:1-7, 10, 13-16) நாமும் யெகோவாமேலும் அவருடைய அமைப்பு மூலமாக அவர் கொடுக்கிற வழிநடத்துதல் மேலும் நம்பிக்கை வைத்தால் நமக்கும் வெற்றி நிச்சயம்.—உபா. 31:6.

உறுதியானவர்களாக இருக்க உறுதியாய் இருங்கள்

19. நீங்கள் ஏன் தொடர்ந்து உறுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

19 இந்த பொல்லாத உலகத்தில் நாம் வாழ்கிற வரைக்கும் உறுதியானவர்களாக இருப்பதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டும். (1 தீ. 6:11, 12; 2 பே. 3:17) துன்புறுத்தலோ, மறைமுகமான அழுத்தங்களோ, மனித யோசனைகளோ, வஞ்சனைகளோ, கவனச் சிதறல்களோ நம்மை அலைக்கழிக்க விடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (எபே. 4:14) யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பிலும் பக்தியிலும் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அசைக்க முடியாதவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம், நாம் நியாயமானவர்களாகவும், அதாவது வளைந்துகொடுக்கிறவர்களாகவும், நடந்துகொள்ள வேண்டும். யெகோவாவும் இயேசுவும் வளைந்துகொடுப்பதில் எப்படிச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 129 சகித்தே ஒடுவோம்!

a ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே, சரி எது தவறு எது என்று மனிதர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற கருத்தை சாத்தான் பரப்பிவருகிறான். யெகோவாவுடைய சட்டங்களையும் அவருடைய அமைப்புக் கொடுக்கிற வழிநடத்துதல்களையும் நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். இன்று சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற வர்கள், யெகோவாவுடைய கட்டளைகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு நடக்கிறார்கள். அவர்களைப் போல் நடந்துகொள்ளாமல் இருப்பதற்கும், எப்போதும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நம்முடைய தீர்மானத்தில் உறுதியாக இருப்பதற்கும் இந்தக் கட்டுரை உதவும்.

b இரத்தத்தைப் பற்றி கடவுள் சொல்லியிருக்கிற விஷயத்துக்கு ஒரு கிறிஸ்தவர் எப்படிக் கீழ்ப்படியலாம் என்று தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் 39-வது பாடத்தைப் பாருங்கள்.

cபொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்” என்ற கட்டுரையை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.