படிப்புக் கட்டுரை 32
யெகோவாவைப் போல் வளைந்துகொடுங்கள்
“நீங்கள் வளைந்துகொடுப்பவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்.”—பிலி. 4:5, அடிக்குறிப்பு.
பாட்டு 89 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்
இந்தக் கட்டுரையில்... a
1. எந்த விதத்தில் கிறிஸ்தவர்கள் ஒரு மரம்போல் இருக்கிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
காற்று அடிக்கும்போது தென்னை மரத்தை கவனித்திருக்கிறீர்களா? அது வளைந்தாலும் முறியாது. இதிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். சில மரங்கள் சீக்கிரத்தில் முறியாமல் ரொம்ப நாள் வாழ்வதற்கு காரணம், அதனுடைய வளைந்துகொடுக்கும் தன்மைதான். நாம் தொடர்ந்து யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்ய வேண்டுமென்றால் நாமும் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதோடு, மற்றவர்களுடைய கருத்துகளையும் அவர்களுடைய முடிவுகளையும் நாம் மதிக்க வேண்டும். இப்படிச் செய்தால், நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருப்போம்.
2. சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்வதற்கு எந்த குணங்கள் நமக்கு உதவும்? இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்?
2 யெகோவாவுடைய ஊழியர்களாக இருப்பதால், நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். அதே சமயத்தில், மனத்தாழ்மையோடும் கரிசனையோடும் நடந்துகொள்ள வேண்டும். தங்களுடைய சூழ்நிலை மாறியபோது அதை சமாளிப்பதற்கு இந்த குணங்கள் சிலருக்கு உதவியது. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நமக்கு எப்படி இந்த குணங்கள் உதவும் என்றும் பார்ப்போம். அதற்கு முன், வளைந்துகொடுப்பதில் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கும் யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.
யெகோவாவும் இயேசுவும் வளைந்துகொடுப்பவர்கள்
3. யெகோவா வளைந்துகொடுப்பவராக இருக்கிறார் என்று எதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்?
3 யெகோவா உறுதியானவராகவும் அசைக்க முடியாதவராகவும் இருக்கிறார். அதனால்தான், பைபிள் அவரை “கற்பாறை” என்று சொல்கிறது. (உபா. 32:4) ஆனால், அவர் வளைந்துகொடுப்பவராகவும் இருக்கிறார். இந்த உலக நிலைமைகள் மாற மாற, தான் வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றுவதற்காக யெகோவா வளைந்துகொடுக்கிறார். மனிதர்களை யெகோவா தன்னுடைய சாயலில் படைத்திருப்பதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி நம்மாலும் வளைந்துகொடுக்க முடியும். அதோடு, அவர் தெளிவான நியமங்களை பைபிளில் கொடுத்திருப்பதால், என்ன மாற்றம் வந்தாலும் நம்மால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். யெகோவா “கற்பாறை” மாதிரி இருந்தாலும் வளைந்துகொடுப்பவராக இருக்கிறார் என்பதை, அவருடைய சொந்த முன்மாதிரியிலிருந்தும் அவர் தந்திருக்கும் நியமங்களிலிருந்தும் நாம் தெரிந்துகொள்கிறோம்.
4. யெகோவா வளைந்துகொடுக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள். (லேவியராகமம் 5:7, 11)
4 யெகோவாவுடைய வழி குறை இல்லாதது, நியாயமானது. மக்களிடம் அவர் கறாராக நடந்துகொள்வதில்லை. உதாரணத்துக்கு, யெகோவா இஸ்ரவேலர்களிடம் எவ்வளவு நியாயமாக நடந்துகொண்டார், அதாவது வளைந்துகொடுத்துப் போனார், என்று யோசித்துப் பாருங்கள். ஏழைகளும் பணக்காரர்களும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. சில சந்தர்ப்பங்களில், ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பலி கொடுப்பதற்கு அவர் அனுமதித்தார்.—லேவியராகமம் 5:7, 11-ஐ வாசியுங்கள்.
5. யெகோவாவுடைய மனத்தாழ்மைக்கும் கரிசனைக்கும் ஒரு உதாரணம் கொடுங்கள்.
5 யெகோவாவிடம் இருக்கிற மனத்தாழ்மையும் கரிசனையும்தான் வளைந்துகொடுப்பதற்கு அவரைத் தூண்டுகிறது. உதாரணத்துக்கு, சோதோமில் இருந்த கெட்ட மக்களை அழிக்கப் போகிற சமயத்தில், யெகோவா எந்தளவுக்கு மனத்தாழ்மையாக நடந்துகொண்டார் என்று பாருங்கள். அந்த ஊரில் இருந்த லோத்து என்ற நல்ல மனிதரை மலைகளுக்குத் தப்பி ஓடச் சொல்லி, தேவதூதர்கள் மூலமாக யெகோவா சொன்னார். ஆனால் அங்கு போவதற்கு லோத்து பயந்தார். அதனால் தானும் தன்னுடைய குடும்பமும் பக்கத்தில் இருந்த சோவார் என்ற சின்ன ஊருக்குத் தப்பித்து போகலாமா என்று லோத்து கெஞ்சிக் கேட்டார். சோவாரையும் அழிக்க வேண்டுமென்றுதான் யெகோவா நினைத்திருந்தார். ‘நான் என்ன சொன்னேனோ அதை மட்டும் நீ செய்’ என்று லோத்துவிடம் யெகோவா சொல்லியிருக்கலாம். ஆனால், யெகோவா லோத்து கேட்டதற்கு அனுமதி கொடுத்தார். அவருக்காக ஒரு ஊரையே யெகோவா அழிக்காமல் விட்டுவிட்டார். (ஆதி. 19:18-22) பல நூறு வருஷங்களுக்குப் பிறகு, நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யெகோவா கரிசனை காட்டினார். அந்த ஊரையும் அதில் வாழ்கிற பொல்லாத மக்களையும் அழிக்கப் போவதாக யோனா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார். ஆனால் நினிவே மக்கள் மனம் திருந்தியதை பார்த்தபோது, அவர்களுக்காக யெகோவா பரிதாபப்பட்டார். அந்த நகரத்தை அழிக்காமல் விட்டுவிட்டார்.—யோனா 3:1, 10; 4:10, 11.
6. இயேசு எப்படி யெகோவா மாதிரியே வளைந்துகொடுத்தார் என்று சொல்லுங்கள்.
6 யெகோவா மாதிரியே இயேசுவும் வளைந்துகொடுத்தார். “வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்” பிரசங்கிப்பதற்காகத்தான் இயேசு பூமிக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும், அவர் வளைந்துகொடுக்கிறவராக நடந்துகொண்டார். ஒருசமயம், ‘பேய் பிடித்திருக்கிற’ தன்னுடைய மகளை குணப்படுத்தச் சொல்லி ஒரு பெண், இயேசுவிடம் கெஞ்சிக் கேட்டாள். அந்தப் பெண் ஒரு இஸ்ரவேலராக இல்லாவிட்டாலும்கூட, இயேசு அவள்மேல் கரிசனை காட்டினார், அவளுடைய மகளை குணப்படுத்தினார். (மத். 15:21-28) இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். “என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனை . . . நானும் ஒதுக்கித்தள்ளுவேன்” என்று இயேசு ஒருசமயம் சொல்லியிருந்தார். (மத். 10:33) ஆனால், மூன்று தடவை தன்னை தெரியாது என்று சொன்ன பேதுருவை இயேசு ஒதுக்கித்தள்ளினாரா? இல்லை. பேதுரு மனம் திருந்தியதையும், அவர் வைத்திருந்த விசுவாசத்தையும் இயேசு நினைத்துப் பார்த்தார். உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவை இயேசு சந்தித்தார். தான் அவரை மன்னித்ததையும் அவர் மேல் அன்பு வைத்திருந்ததையும் கண்டிப்பாக பேதுருவிடம் இயேசு சொல்லியிருப்பார்.—லூக். 24:33, 34.
7. பிலிப்பியர் 4:5 சொல்கிறபடி, நாம் என்ன பெயர் எடுக்க ஆசைப்படுகிறோம்?
7 யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் வளைந்துகொடுக்கிறவர்கள் என்று இதுவரை பார்த்தோம். நாம் எப்படி இருக்கிறோம்? நாம் நியாயமானவர்களாக, அதாவது வளைந்துகொடுக்கிறவர்களாக, இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (பிலிப்பியர் 4:5-ஐயும் அதன் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) வேறொரு பைபிள் மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தை இப்படிப் போட்டிருக்கிறார்கள்: “நீங்கள் நியாயமானவர்கள் என்று பெயர் எடுக்க வேண்டும்.” நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? வளைந்துகொடுக்கிறவர், விட்டுக்கொடுக்கிறவர், பொறுத்துக்கொள்கிறவர் என்று நான் பெயர் எடுத்திருக்கிறேனா? அல்லது, ரொம்ப கறாரு, கடுகடு பேர்வழி, பிடிவாதக்காரர் என்று பெயர் எடுத்திருக்கிறேனா? நான் நினைக்கிற மாதிரிதான் ஒரு விஷயத்தை மற்றவர்கள் செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறேனா? அல்லது, மற்றவர்களுடைய கருத்தை காதுகொடுத்துக் கேட்கிறேனா? மற்றவர்கள் சொல்கிற மாதிரி ஒன்றை செய்ய முடியுமென்றால் அதற்கு ஒத்துப்போகிறேனா?’ நாம் எந்தளவுக்கு வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்கிறோமோ, அந்தளவுக்கு நாம் யெகோவா மாதிரியும் இயேசு மாதிரியும் நடந்துகொள்கிறோம் என்று சொல்லலாம். எந்த இரண்டு சூழ்நிலைகளில் நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம். ஒன்று, நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது. இரண்டு, மற்றவர்களுடைய கருத்துகளும் அவர்களுடைய தீர்மானங்களும் நம்முடைய பார்வையில் வித்தியாசமாக இருக்கும்போது.
சூழ்நிலை மாறும்போது வளைந்துகொடுங்கள்
8. நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது வளைந்துகொடுப்பதற்கு எது உதவி செய்யும்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
8 நம்முடைய சூழ்நிலை மாறும்போது நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், அப்படிப்பட்ட மாற்றங்கள் நாம் எதிர்பார்க்காத கஷ்டங்களைக் கொண்டுவரலாம். ஒருவேளை, திடீரென்று நமக்கு ஏதாவது பெரிய நோய் வந்துவிடலாம். இல்லையென்றால், நாம் வாழ்கிற இடத்தில் பொருளாதார நிலைமையோ அரசியல் நிலைமையோ திடீரென்று மாறிவிடலாம். அதனால் வாழ்க்கையை ஓட்டுவதே கஷ்டமாகிவிடலாம். (பிர. 9:11; 1 கொ. 7:31) நம்முடைய நியமிப்புகளில் மாற்றம் வரும்போதுகூட நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். என்ன மாதிரியான பிரச்சினைகள் வந்தாலும் இந்த நான்கு படிகளை எடுத்தால் புதிய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நம்மையே மாற்றிக்கொள்ள, வளைந்துகொடுக்க முடியும்: (1) எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், (2) கடந்த காலத்தை விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள், (3) வாழ்க்கையில் இருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசியுங்கள், (4) மற்றவர்களுக்காக ஏதாவது செய்யுங்கள். b இந்த நான்கு விஷயங்களைச் செய்ததால், நம்முடைய சகோதர சகோதரிகள் எப்படிப் பயனடைந்தார்கள் என்று இப்போது பார்க்கலாம்.
9. திடீரென்று வந்த பிரச்சினைகளை ஒரு மிஷனரி தம்பதி எப்படிச் சமாளித்தார்கள்?
9 எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இம்மானுவெல்லும் பிரான்சஸ்காவும் வெளிநாட்டுக்கு மிஷனரிகளாக போனார்கள். ஆனால் திடீரென்று கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் அவர்கள் அந்த ஊருடைய மொழியைக் கற்றுக்கொண்டு, சபையில் இருந்த சகோதர சகோதரிகளோடு பழக ஆரம்பித்திருந்தார்கள். அதற்குள் இப்படியாகிவிட்டது. அதனால், இப்போது அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. திடீரென்று பிரான்சஸ்காவின் அம்மாவும் இறந்துவிட்டார். அந்த நேரத்தில் அவர்களுடைய குடும்பத்தோடு இருக்க வேண்டுமென்று பிரான்சஸ்காவின் மனது அடித்துக்கொண்டது. ஆனால், பெருந்தொற்றினால் அவர்களால் அங்கே போக முடியவில்லை. இந்தக் கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு எது அவர்களுக்கு உதவி செய்தது? முதலாவதாக, இம்மானுவெல்லும் பிரான்சஸ்காவும் சேர்ந்து யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள். அந்தந்த நாளை மட்டும் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தைக் கேட்டு வேண்டினார்கள். சரியான நேரத்தில் தன்னுடைய அமைப்பு மூலமாக யெகோவா அவர்களுடைய ஜெபத்துக்குப் பதில் கொடுத்தார். உதாரணத்துக்கு, வீடியோவில் பார்த்த ஒரு சகோதரருடைய பேட்டி அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. அதில் அந்தச் சகோதரர், ‘எவ்வளவு சீக்கிரம் நாம் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நமக்கு சந்தோஷம் திரும்ப கிடைக்கும். அப்போதுதான், அந்தப் புதிய சூழ்நிலையில் நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய முடியும்’ என்பதாக சொல்கிறார். c இரண்டாவதாக, போன் மூலமாக சாட்சி கொடுப்பதில் அவர்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள முடிவு செய்தார்கள். அதில் ஒரு பைபிள் படிப்பும்கூட அவர்களுக்குக் கிடைத்தது. மூன்றாவதாக, சகோதர சகோதரிகள் கொடுத்த உதவியை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுடைய அன்புக்கு நன்றியோடு இருந்தார்கள். ஒரு அன்பான சகோதரி, தினமும் ஒரு பைபிள் வசனத்தையும் அதோடு சேர்த்து ஒரு சின்னக் குறிப்பையும் அவர்களுக்கு எழுதி அனுப்பினார்—அதுவும் ஒரு வருஷத்துக்கு! நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது நாமும் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால் நம்மால் செய்ய முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுவோம்.
10. தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் வந்தபோது, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி ஒரு சகோதரி எப்படி தன்னை மாற்றிக்கொண்டார்?
10 கடந்த காலத்தை பற்றி யோசிக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்; வாழ்க்கையில் இருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசியுங்கள். ரொமேனியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா என்ற சகோதரி ஜப்பானில் இருந்தார். அவர் இருந்த சபையில் ஆங்கில மொழிக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. அது அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. பிறகு, அவர் ஜப்பான் மொழி சபைக் கூட்டத்துக்குப் போக ஆரம்பித்தார். கடந்த காலத்தைப் பற்றி அவர் யோசித்து கொண்டிருப்பதற்கு பதிலாக, ஜப்பான் மொழியில் ஊழியத்தை நன்றாக செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார். அந்த மொழியை நன்றாகக் கற்றுக்கொள்வதற்கு முன்பு அவரோடு வேலை செய்த ஒரு பெண்ணிடம் உதவி கேட்டார். பைபிளையும், இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டையும் பயன்படுத்தி அந்த மொழியைக் கற்றுக்கொடுக்க அந்தப் பெண்ணும் ஒத்துக்கொண்டார். கிறிஸ்டினா ஜப்பான் மொழியில் நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டார். அதைவிட நல்ல விஷயம் என்னவென்றால், அந்த பெண் பைபிளை பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். நாமும் கடந்த காலத்தைப் பற்றி யோசிக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் இருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். அப்படிச் செய்தால், எதிர்பார்க்காத மாற்றங்கள் எதிர்பார்க்காத ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.
11. பணக் கஷ்டம் வந்தபோது ஒரு தம்பதி எப்படி அந்தச் சூழ்நிலையைச் சமாளித்தார்கள்?
11 மற்றவர்களுக்காக ஏதாவது செய்யுங்கள். நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருந்த ஒரு நாட்டில் ஒரு தம்பதி வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோது அவர்களுடைய வருமானமும் போய்விட்டது. இந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி எப்படி அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டார்கள்? முதலில், தங்களுடைய செலவுகளைக் குறைக்க முயற்சி செய்தார்கள். அடுத்ததாக, அவர்களுடைய சொந்த பிரச்சனையைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்கள். அதற்காக எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஊழியம் செய்தார்கள். (அப். 20:35) அதைப் பற்றி அந்தக் கணவர் சொல்லும்போது, “ஊழியத்தில் பிஸியாக இருந்ததால் தேவையில்லாத யோசனைகளில் நேரம் செலவு செய்வதற்கு பதிலாக கடவுளுடைய விருப்பத்தை செய்வதில் நிறைய நேரம் செலவிட்டோம்” என்று சொல்கிறார். நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதுவும், ஊழியம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
12. ஊழியத்தில் வளைந்துகொடுக்கிறவர்களாக இருப்பதற்கு அப்போஸ்தலன் பவுலின் உதாரணம் நமக்கு எப்படி உதவி செய்யும்?
12 ஊழியத்தில் நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். வேற வேற இடங்களையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த வித்தியாசப்பட்ட மக்களை நாம் ஊழியத்தில் பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் கடவுளை பற்றி ஒவ்வொரு விதமான கருத்து இருக்கிறது. அப்படிப்பட்டவர்களிடம் பேசும் விஷயத்தில், அப்போஸ்தலன் பவுலிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர் வளைந்துகொடுக்கிறவராக இருந்தார். இயேசு அவரை “மற்ற தேசத்து மக்களுக்கு . . . அப்போஸ்தலனாக” நியமித்தார். (ரோ. 11:13) அதனால், யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் படித்தவர்களுக்கும் கிராமத்து மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ராஜாக்களுக்கும் பவுல் பிரசங்கித்தார். இப்படிப்பட்ட வித்தியாசமான மக்களின் மனதை தொடுவதற்காக, அவர் “எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும்” ஆனார். (1 கொ. 9:19-23) அந்த மக்களுடைய கலாச்சாரம், பின்னணி, நம்பிக்கைளைப் பற்றியெல்லாம் பவுல் யோசித்துப் பார்த்தார். அதனால் அவரவருக்கு ஏற்ற மாதிரி அவரால் பேச முடிந்தது. நாமும் வளைந்துகொடுக்கிறவர்களாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி பேச முயற்சி செய்தால், ஊழியத்தில் முன்னேற முடியும்.
மற்றவர்களுடைய கருத்துகளை மதியுங்கள்
13. மற்றவர்களுடைய கருத்துகளை மதித்தோம் என்றால் 1 கொரிந்தியர் 8:9-ல் சொல்லியிருக்கிற என்ன ஆபத்தை நாம் தவிர்க்கலாம்?
13 நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்கும்போது மற்றவர்களுடைய கருத்துகளை மதிப்போம். உதாரணத்துக்கு, சில சகோதரிகளுக்கு மேக்கப் போடுவது பிடிக்கும். மற்ற சிலர் மேக்கப் போட வேண்டாமென்று நினைக்கலாம். ஒருசிலர், அளவாக குடிக்கலாமென்று நினைக்கிறார்கள். வேறு சிலர், குடிக்கவே வேண்டாமென்று நினைக்கலாம். உடல்நலத்தை பொறுத்த வரைக்கும், எல்லாருமே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் எடுத்துக்கொள்கிற மருத்துவ முறைகள் வித்தியாசப்படலாம். இந்த மாதிரி விஷயங்களில், நாம் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக்கொண்டு நம்முடைய கருத்தை மற்றவர்கள்மேல் திணிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், மற்றவர்களுக்கு நாம் தடைக்கல்லாகிவிடலாம். தேவையில்லாத பிரிவினைகளையும் ஏற்படுத்திவிடலாம். ஆனால், அப்படியெல்லாம் நாம் நடந்துகொள்ளவே மாட்டோம்! (1 கொரிந்தியர் 8:9-ஐ வாசியுங்கள்; 10:23, 24) சமநிலையாக இருப்பதற்கும் சமாதானத்தை காத்துக்கொள்வதற்கும் பைபிள் நியமங்கள் எப்படி உதவி செய்கிறது என்பதைப் பற்றி இரண்டு உதாரணங்களை பார்க்கலாம்.
14. உடை உடுத்தும் விஷயத்திலும் முடி அலங்காரம் செய்யும் விஷயத்திலும் என்ன பைபிள் நியமங்களை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?
14 உடையும் தலைமுடியும். ஒரு குறிப்பிட்ட உடையைத்தான் போட வேண்டுமென்று சட்டங்கள் கொடுப்பதற்கு பதிலாக, முடிவெடுக்க உதவும் நியமங்களை யெகோவா கொடுத்திருக்கிறார். நாம் கடவுளுக்குப் புகழ் சேர்க்கிற மாதிரி உடை உடுத்த வேண்டும். நாம் உடை உடுத்தும் விதம், நாம் நியாயமானவர்கள், அடக்கமானவர்கள், “தெளிந்த புத்தி” உள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும். (1 தீ. 2:9, 10; 1 பே. 3:3) அதனால், தேவையில்லாமல் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பது போல் நம் உடை இருக்கக் கூடாது. உடையைப் பற்றியோ முடி அலங்காரத்தை பற்றியோ சொந்தமாக சட்டங்கள் போடாமல் இருக்க, பைபிள் நியமங்கள் மூப்பர்களுக்கு உதவி செய்யும். உதாரணத்துக்கு, ஒரு சபையில் இருந்த சில இளம் சகோதரர்கள் அப்போது பிரபலமாக இருந்த ஸ்டைலில் முடி வெட்டியிருந்தார்கள். அதாவது, அவர்கள் முடியை குட்டையாக வெட்டியும் சற்று பரட்டையாகவும் விட்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மூப்பர்கள் நினைத்தார்கள். எந்தச் சட்டமும் போடாமல் இவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவி செய்வார்கள்? வட்டாரக் கண்காணி அந்த மூப்பர்களுக்கு உதவி செய்தார். அந்த இளம் சகோதரர்களிடம் இப்படிப் பேசிப் பார்க்கச் சொன்னார்: “நீங்கள் மேடையில் இருந்து பேச்சு கொடுக்கும் போது, வந்திருக்கிறவர்கள் உங்கள் பேச்சை கவனிக்காமல் நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறீர்கள் என்று கவனித்தால் நீங்கள் போட்டிருக்கும் உடையிலோ ஹேர் ஸ்டைலிலோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.” அந்த சகோதரர்கள் என்ன செய்ய வேண்டுமென்று புரிந்துகொள்ள இந்த விதத்தில் சொன்னதே போதுமானதாக இருந்தது. மூப்பர்கள் தனியாக சட்டங்கள் போட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. d
15. மருத்துவ விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு என்ன பைபிள் சட்டங்களும் நியமங்களும் நமக்கு உதவி செய்யும்? (ரோமர் 14:5)
15 மருத்துவம். தன்னுடைய உடம்பை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவருடைய சொந்த உரிமை. (கலா. 6:5) கிறிஸ்தவர்கள் மருத்துவ சிகிச்சையை தேர்ந்தெடுக்கும்போது, இரத்தத்துக்கும் ஆவியுலகத் தொடர்புக்கும் விலகி இருக்க வேண்டுமென்ற பைபிள் சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும். (அப். 15:20; கலா. 5:19, 20) இந்த விஷயங்களைத் தவிர, எந்த மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை அவரவர் முடிவு செய்துகொள்ளலாம். சிலர், பொது மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். வேறு சிலர், மாற்று மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு மருத்துவ சிகிச்சை, உங்களுக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ படலாம். அதை நீங்கள் ரொம்ப உறுதியாக நம்பலாம். இருந்தாலும், இந்த விஷயத்தில் முடிவெடுப்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை. அதை நாம் மதிக்க வேண்டும். அதனால், இந்த விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: (1) கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் நம்முடைய நோய்களை முழுமையாகவும், நிரந்தரமாகவும் குணப்படுத்த முடியும். (ஏசா. 33:24) (2) ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவருக்கு எது நல்லது என்பதை அவர்தான் ‘நன்றாக உறுதிப்படுத்திக்கொள்ள’ வேண்டும். (ரோமர் 14:5-ஐ வாசியுங்கள்.) (3) மற்றவர்கள் எடுத்த முடிவை வைத்து அவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது; மற்றவர்களுக்கு நாம் தடைக்கல்லாகிவிடக் கூடாது. (ரோ. 14:13) (4) கிறிஸ்தவர்கள் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். சொந்தக் கருத்துகளைவிட சபையின் ஒற்றுமைதான் முக்கியம் என்பதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். (ரோ. 14:15, 19, 20) இதையெல்லாம் நாம் செய்தால் சகோதர சகோதரிகளிடம் நமக்கு நெருக்கமான நட்பு இருக்கும், சபையும் சமாதானமாக இருக்கும்.
16. மற்ற மூப்பர்களிடம் நடந்துகொள்கிற விஷயத்தில், ஒரு மூப்பர் எப்படி வளைந்துகொடுக்கிறவராக இருக்கலாம்? (படங்களையும் பாருங்கள்.)
16 வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்கும் விஷயத்தில் மூப்பர்கள் நல்ல மாதிரி வைக்க வேண்டும். (1 தீ. 3:2, 3) உதாரணத்துக்கு, மற்ற மூப்பர்களைவிட ஒரு மூப்பருக்கு வயது அதிகம் என்பதால், அவருடைய கருத்தைத்தான் எப்போதும், எல்லாரும் ஏற்றக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு நல்ல முடிவு எடுப்பதற்கு யெகோவாவுடைய சக்தி எந்த முப்பரை வேண்டுமானாலும் தூண்டலாம் என்பதை அவர் புரிந்துவைத்திருக்க வேண்டும். பைபிள் நியமங்கள் மீறப்படாத வரைக்கும், நியாயமாக நடந்துகொள்கிற, வளைந்துகொடுக்கிற மூப்பர்கள், மூப்பர் குழுவில் பெரும்பாலானவர்கள் எடுக்கிற முடிவுகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள்—தனிப்பட்ட விதமாக அவர்களுக்கு வேறு கருத்து இருந்தாலும்கூட!
வளைந்துகொடுப்பதால் வரும் பலன்கள்
17. வளைந்துகொடுப்பதால் நாம் என்னென்ன பலன்களை அனுபவிப்போம்?
17 வளைந்துகொடுப்பதால் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். நாம் சகோதர, சகோதரிகளோடு நெருக்கமாக இருப்போம். சபையில் சமாதானம் நிறைந்திருக்கும். வித்தியாச வித்தியாசமான குணங்கள் இருக்கிற, பல கலாச்சாரங்களில் இருந்து வந்த மக்களோடு சேர்ந்து யெகோவாவை ஒற்றுமையாக வணங்குவதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, வளைந்துகொடுக்கிற நம் கடவுளான யெகோவா மாதிரி நடந்துகொள்வதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம்.
பாட்டு 90 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்
a யெகோவாவும் இயேசுவும் வளைந்துகொடுக்கிறவர்கள். நாமும் அப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருந்தால் நம்முடைய சூழ்நிலை மாறும்போது, உதாரணமாக நம் ஆரோக்கியத்திலோ பொருளாதார விஷயத்திலோ மாற்றங்கள் வரும்போது, அதற்கேற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்வது கஷ்டமாக இருக்காது. நாம் வளைந்துகொடுத்துப் போகும்போது, சபை சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கு நம்மால் உதவி செய்ய முடியும்.
b எண் 4, 2016 விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த, “மாற்றங்களை சமாளிப்பது எப்படி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c சகோதரர் டிமிட்ரி மிஹைலஃப்புடன் பேட்டி என்ற வீடியோவை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.
d இதைப் பற்றிக் கூடுதலாக தெரிந்துகொள்ள இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 52-ஐப் பாருங்கள்.