Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 30

பாட்டு 36 நம் இதயத்தை பாதுகாப்போம்

இஸ்ரவேல் ராஜாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

இஸ்ரவேல் ராஜாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

“நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.”மல். 3:18.

என்ன கற்றுக்கொள்வோம்?

இஸ்ரவேல் ராஜாக்களை யெகோவா எதை வைத்து எடை போட்டார் என்றும் அதிலிருந்து இன்று நம்மிடம் அவர் எதை எதிர்பார்க்கிறார் என்றும் கற்றுக்கொள்வோம்.

1-2. இஸ்ரவேலை ஆட்சி செய்த சில ராஜாக்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

 இஸ்ரவேலை ஆட்சி செய்த 40-க்கும் அதிகமான ராஜாக்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. a அவர்களைப் பற்றிய பதிவுகளில், அவர்கள் செய்த சில விஷயங்கள் வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, சில நல்ல ராஜாக்கள்கூட சில கெட்ட விஷயங்களைச் செய்தார்கள். நல்ல ராஜாவான தாவீதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். யெகோவா அவரைப் பற்றி இப்படிச் சொன்னார்: ‘என் ஊழியனான தாவீது . . . முழு இதயத்தோடு என் வழியில் நடந்தான். எனக்குப் பிடித்ததை மட்டுமே செய்தான்.’ (1 ரா. 14:8) ஆனால், அவரும் பெரிய பாவத்தைச் செய்தார். கல்யாணமான ஒரு பெண்ணோடு பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டார். அவளுடைய கணவரைப் போரில் கொல்வதற்குக்கூட திட்டம் போட்டார்.—2 சா. 11:4, 14, 15.

2 அதேசமயத்தில், யெகோவாவுக்கு உண்மையில்லாத நிறைய ராஜாக்கள் சில நல்ல விஷயங்களையும் செய்தார்கள். ரெகொபெயாமைப் பற்றி யோசித்துப் பாருங்கள். யெகோவாவின் பார்வையில் அவர் “மோசமான காரியங்களைச் செய்தார்.” (2 நா. 12:14) ஆனாலும், பத்து கோத்திரங்களைத் தன்னுடைய ராஜ்யத்திலிருந்து பிரிக்கும்படி கடவுள் கொடுத்த கட்டளைக்கு அவர் கீழ்ப்படிந்தார். அதுமட்டுமல்ல, கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக நகரங்களையும் பலப்படுத்தினார்.—1 ரா. 12:21-24; 2 நா. 11:5-12.

3. என்ன முக்கியமான கேள்வி வருகிறது, இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்கள் நல்ல விஷயங்களையும் செய்தார்கள், கெட்ட விஷயங்களையும் செய்தார்கள். அப்படியிருக்கும்போது, யெகோவா எதை வைத்து ஒரு ராஜாவை உண்மையுள்ளவர் அல்லது உண்மையில்லாதவர் என்று முடிவு பண்ணினார்? இந்த முக்கியமான கேள்விக்குப் பதில் கண்டுபிடித்தால், யெகோவா நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்று புரிந்துகொள்ள முடியும். இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்களை மூன்று விஷயங்களை வைத்து யெகோவா எடை போட்டார்: (1) அவர்களுடைய இதயம் எப்படி இருந்தது, (2) அவர்கள் மனம் திருந்திய விதம், (3) உண்மை வணக்கத்துக்கு ஆதரவு கொடுத்த விதம். இப்போது இந்த மூன்று விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

முழு இதயத்தோடு யெகோவாவை வணங்கினார்கள்

4. உண்மையுள்ள ராஜாக்களுக்கும் உண்மையில்லாத ராஜாக்களுக்கும் இருந்த ஒரு வித்தியாசம் என்ன?

4 யெகோவாவுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்த ராஜாக்கள் அவரை முழு இதயத்தோடு வணங்கினார்கள். b நல்ல ராஜாவான யோசபாத் “யெகோவாவை முழு இதயத்தோடு” வணங்கினார். (2 நா. 22:9) யோசியாவைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “யோசியா முழு இதயத்தோடு . . . யெகோவா பக்கம் திரும்பினார்; . . . அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேறெந்த ராஜாவும் அவரைப் போல் இருக்கவில்லை.” (2 ரா. 23:25) அதேசமயத்தில், வயதான காலத்தில் மோசமான விஷயங்களைச் செய்த சாலொமோனைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அவர் “யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை” என்று சொல்கிறது. (1 ரா. 11:4) யெகோவாவுக்கு உண்மையாக இல்லாத இன்னொரு ராஜாவான அபியாமைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: அவர் “யெகோவா தேவனுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொள்ளவில்லை.”—1 ரா. 15:3.

5. யெகோவாவை முழு இதயத்தோடு வணங்குவது என்றால் என்ன அர்த்தம்?

5 அப்படியென்றால், யெகோவாவை முழு இதயத்தோடு வணங்குவது என்றால் என்ன அர்த்தம்? முழு இதயத்தோடு யெகோவாவை வணங்குகிற ஒரு நபர் கடமைக்காக அவரை வணங்க மாட்டார்; அவர்மேல் ரொம்ப அன்பும் பயபக்தியும் இருப்பதால் அவரை வணங்குவார். அந்த அன்பையும் பயபக்தியையும் அவர் தன்னுடைய வாழ்நாள் முழுக்கக் காட்டுவார்.

6. நாம் எப்படி எப்போதும் முழு இதயத்தோடு யெகோவாவை வணங்கலாம்? (நீதிமொழிகள் 4:23; மத்தேயு 5:29, 30)

6 நாம் எப்படி உண்மையுள்ள ராஜாக்களை மாதிரி முழு இதயத்தோடு யெகோவாவை வணங்கலாம்? யெகோவாமேல் இருக்கிற அன்பைக் கெடுத்துப்போடுகிற விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் அப்படிச் செய்யலாம். மோசமான பொழுதுபோக்கு, கெட்ட நண்பர்கள், நிறைய பணம் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் போன்ற எல்லாவற்றையும் நாம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவையெல்லாம் நம்முடைய இதயத்தை இரண்டாக ஆக்கிவிடும். ஏதோவொரு விஷயம் யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பைக் குறைக்கிறது என்று கண்டுபிடித்தால், அதை எடுத்துப் போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிமொழிகள் 4:23-ஐயும் மத்தேயு 5:29, 30-ஐயும் வாசியுங்கள்.

7. யெகோவாமேல் இருக்கிற அன்பைக் கெடுத்துப்போடுகிற விஷயங்களைத் தவிர்ப்பது ஏன் முக்கியம்?

7 நம் இதயம் இரண்டாக ஆவதற்கு நாம் விடவே கூடாது. ஜாக்கிரதையாக இல்லையென்றால், யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்தால் கெட்ட விஷயங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் நமக்கு வந்துவிடலாம். இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: புயல் அடிக்கிற ஒரு குளிரான நாளில் நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். வீட்டுக்குப் போன உடனே உங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்காக ஸ்வெட்டர் போடுகிறீர்கள், வேறு சில உடைகளையும் போட்டுக்கொள்கிறீர்கள். ஆனால், கதவைத் திறந்தே வைத்திருந்தால் ஏதாவது பிரயோஜனம் இருக்குமா? இல்லை. குளிர்ந்த காற்று சுலபமாக வீட்டுக்குள்ளே வந்துவிடும். இதிலிருந்து என்ன புரிகிறது? யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்கு ஆன்மீக உணவை எடுத்துக்கொண்டால் மட்டும் போதாது, மோசமான விஷயங்கள் இதயத்தைப் பாதிக்காத மாதிரி நம் இதயக் கதவை மூடவும் வேண்டும். இந்த உலகத்தின் குளிர்ந்த “காற்று,” அதாவது கடவுளுக்குப் பிடிக்காத மனப்பான்மை, நம்முடைய இதயத்துக்குள் நுழைந்து அதை இரண்டாக பிளந்துவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.—எபே. 2:2.

பாவங்களைவிட்டு மனம் திருந்தினார்கள்

8-9. கண்டிப்பு கிடைத்தபோது தாவீது ராஜாவும் எசேக்கியா ராஜாவும் எப்படி நடந்துகொண்டார்கள்? (படத்தைப் பாருங்கள்.)

8 ஏற்கெனவே பார்த்த மாதிரி, தாவீது ராஜா ரொம்ப மோசமான பாவத்தைச் செய்தார். ஆனால் அவர் செய்த பாவத்தைப் பற்றி நாத்தான் தீர்க்கதரிசி பேசியபோது, தாவீது மனத்தாழ்மையோடு மனம் திருந்தினார். (2 சா. 12:13) நாத்தானை ஏமாற்றுவதற்கோ, தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கோ தாவீது மனம் திருந்திய மாதிரி நடிக்கவில்லை; அவர் உண்மையிலேயே மனம் திருந்தினார். சங்கீதம் 51-ல் அவர் சொன்ன வார்த்தைகளிலிருந்து, தான் செய்ததை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டார் என்பது புரிகிறது.—சங். 51:3, 4, 17, மேல்குறிப்பு.

9 எசேக்கியா ராஜாவும் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார். அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்ததால் . . . அவர்மீதும் யூதாமீதும் எருசலேம்மீதும் கடவுளுக்குப் பயங்கர கோபம் வந்தது.” (2 நா. 32:25) எசேக்கியாவுக்கு ஏன் தலைக்கனம் வந்தது? ஒருவேளை, அவருக்கு இருந்த செல்வ செழிப்பை நினைத்து... அசீரியர்களை ஜெயித்ததை நினைத்து... அல்லது நோயிலிருந்து அற்புதமாகக் குணமானதை நினைத்து... அவருக்குத் தலைக்கனம் வந்திருக்கலாம். பாபிலோனியர்களிடம் தனக்கு இருந்த எல்லா செல்வத்தையும் காட்டியதற்கும் ஒருவேளை பெருமைதான் காரணமாக இருந்திருக்கலாம். அதனால், ஏசாயா தீர்க்கதரிசி அவரைக் கண்டித்தார். (2 ரா. 20:12-18) தாவீது மாதிரியே எசேக்கியாவும் மனத்தாழ்மையோடு மனம் திருந்தினார். (2 நா. 32:26) யெகோவா எசேக்கியாவைப் பற்றிக் கடைசியாக என்ன நினைத்தார்? தனக்கு உண்மையுள்ள ராஜாவாகத்தான் அவரைப் பார்த்தார். எசேக்கியா, “யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்” என்று பைபிள் சொல்கிறது.—2 ரா. 18:3.

செய்த பாவத்துக்காக கண்டிப்பு கிடைத்தபோது தாவீது ராஜாவும் எசேக்கியா ராஜாவும் மனத்தாழ்மையோடு மனம் திருந்தினார்கள் (பாராக்கள் 8-9)


10. கண்டிப்பு கிடைத்தபோது அமத்சியா ராஜா எப்படி நடந்துகொண்டார்?

10 இப்போது, யூதாவை ஆட்சி செய்த அமத்சியா ராஜாவைப் பற்றிப் பார்க்கலாம். அவர் யெகோவாவுக்குப் பிரியமான விஷயங்களைச் செய்தார்தான்; இருந்தாலும் அவர் “முழு இதயத்தோடு செய்யவில்லை.” (2 நா. 25:2) அவர் என்ன தப்பு செய்தார்? ஏதோமியர்களைத் தோற்கடிப்பதற்கு யெகோவா உதவி செய்த பிறகு, அமத்சியா ஏதோமியர்களின் கடவுள்களை வணங்கினார். c இதைப் பற்றி யெகோவாவின் தீர்க்கதரிசி அவரிடம் பேசியபோது, அந்தத் தீர்க்கதரிசி சொன்னதை அவர் கேட்கக்கூட விரும்பவில்லை; அந்த தீர்க்கதரிசியை அனுப்பிவிட்டார்.—2 நா. 25:14-16.

11. 2 கொரிந்தியர் 7:9, 11 சொல்கிற மாதிரி, யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)

11 இந்த உதாரணங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? செய்த பாவங்களிலிருந்து நாம் மனம் திருந்த வேண்டும்; அதை மறுபடியும் செய்யாமல் இருக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஒருவேளை, மூப்பர்களிடமிருந்து ஏதாவது ஆலோசனை கிடைத்தால், அதுவும் நமக்குச் சாதாரணமாக தெரிகிற ஒரு விஷயத்துக்காக ஆலோசனை கிடைத்தால், என்ன செய்வது? யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இல்லை என்றோ மூப்பர்கள் நம்மை ஒதுக்கிவிட்டார்கள் என்றோ நினைக்கக்கூடாது. இஸ்ரவேலை ஆட்சி செய்த நல்ல ராஜாக்களுக்குக்கூட ஆலோசனையும் கண்டிப்பும் தேவைப்பட்டது. (எபி. 12:6) அதனால், நமக்கு ஆலோசனை கிடைக்கும்போது நாம் (1) மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், (2) தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும், (3) யெகோவாவுக்கு முழு இதயத்தோடு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும். நம்முடைய பாவங்களைவிட்டு மனம் திருந்தும்போது யெகோவா நம்மை மன்னிப்பார்.2 கொரிந்தியர் 7:9, 11-ஐ வாசியுங்கள்.

ஆலோசனை கிடைக்கும்போது (1) மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், (2) தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும், (3) யெகோவாவுக்கு முழு இதயத்தோடு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் (பாரா 11) f


உண்மை வணக்கத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள்

12. உண்மையுள்ள ராஜாக்கள் முக்கியமாக என்ன செய்தார்கள்?

12 யெகோவா யாரையெல்லாம் உண்மையுள்ள ராஜாக்களாகப் பார்த்தாரோ, அவர்கள் எல்லாருமே உண்மை வணக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்தார்கள். தேசத்தில் இருந்த மக்களையும் அப்படிச் செய்ய உற்சாகப்படுத்தினார்கள். உண்மைதான், நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி அவர்கள் சில தவறுகளைச் செய்தார்கள்தான். ஆனால் அவர்கள் யெகோவாவை மட்டும்தான் வணங்கினார்கள். பொய் வணக்கத்தைத் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்ட கடுமையாகப் போராடினார்கள். d

13. யெகோவா ஏன் ஆகாப் ராஜாவை உண்மையில்லாதவராக முடிவு பண்ணினார்?

13 உண்மையில்லாதவர்கள் என்று யெகோவா முடிவு பண்ண ராஜாக்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் செய்த எல்லாமே தவறில்லைதான். பொல்லாத ராஜாவான ஆகாபைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாபோத் கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டபோது, அந்தக் கொலைக்கு தானும் ஒருவிதத்தில் காரணமாகிவிட்டதை நினைத்து வருத்தப்பட்டார்; ஓரளவு மனத்தாழ்மையையும் காட்டினார். (1 ரா. 21:27-29) வேறு என்ன நல்ல விஷயத்தைச் செய்தார்? நிறைய நகரங்களைக் கட்டினார்; இஸ்ரவேலுக்காக போர் செய்து ஜெயித்தார். (1 ரா. 20:21, 29; 22:39) ஆனால், அவர் படுமோசமான ஒரு விஷயத்தையும் செய்தார். தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்டு பொய் வணக்கத்தை ஊக்குவித்தார். அந்தப் பாவத்துக்காக அவர் மனம் திருந்தவே இல்லை.—1 ரா. 21:25, 26.

14. (அ) யெகோவா ஏன் ரெகொபெயாம் ராஜாவை உண்மையில்லாதவராகப் பார்த்தார்? (ஆ) உண்மையில்லாத பெரும்பாலான ராஜாக்கள் என்ன தவறு செய்தார்கள்?

14 இன்னொரு உண்மையில்லாத ராஜாவான ரெகொபெயாமைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஏற்கெனவே பார்த்த மாதிரி, அவர் சில நல்ல விஷயங்களைச் செய்தார்தான். ஆனால் தன்னுடைய ஆட்சி உறுதியான பிறகு, யெகோவாவின் சட்டத்தை ஒதுக்கித்தள்ளினார்; பொய் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார். (2 நா. 12:1) உண்மை வணக்கத்தில் ஒரு கால், பொய் வணக்கத்தில் ஒரு கால் என்று இருந்தார். (1 ரா. 14:21-24) ரெகொபெயாமும் ஆகாபும் மட்டுமல்ல, இன்னும் நிறைய ராஜாக்கள் உண்மை வணக்கத்தை விட்டு வழிதவறிப் போனார்கள். சொல்லப்போனால், உண்மையில்லாத ராஜாக்களில் பெரும்பாலானவர்கள் ஏதோவொரு விதத்தில் பொய் வணக்கத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு ராஜா நல்லவரா கெட்டவரா என்று முடிவு பண்ண யெகோவா பார்த்த ஒரு முக்கியமான விஷயம், அவர்கள் உண்மை வணக்கத்துக்கு ஆதரவு கொடுத்தார்களா இல்லையா என்பதுதான்.

15. உண்மை வணக்கத்துக்கு ஆதரவு கொடுப்பதை யெகோவா ஏன் ரொம்ப முக்கியமாக நினைக்கிறார்?

15 உண்மை வணக்கத்துக்கு ஆதரவு கொடுப்பதை யெகோவா ஏன் அவ்வளவு முக்கியமாக நினைத்தார்? அதற்கு ஒரு காரணம், மக்கள் சரியான விதத்தில் தன்னை வணங்குவதற்கு உதவி செய்கிற பொறுப்பு ராஜாக்களுக்கு இருந்தது. அதுமட்டுமல்ல, பொய் கடவுள்களை வணங்கியபோது மக்கள் வேறு பாவங்களையும் செய்தார்கள்; மற்றவர்களை மோசமாகவும் நடத்தினார்கள். (ஓசி. 4:1, 2) இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரவேல் ராஜாக்களும் மக்களும் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அதனால், பொய் கடவுள்களை மக்கள் வணங்கியபோது அது யெகோவாவுக்கு எதிராக செய்த துரோகமாக பைபிள் சொல்கிறது. (எரே. 3:8, 9) ஒரு நபர் தன்னுடைய துணைக்குத் துரோகம் செய்யும்போது அது அந்தத் துணையை நேரடியாகவே பாதிக்கும்; அது அவருடைய மனதை ரொம்பக் காயப்படுத்துகிறது. அதேமாதிரி, யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒருவர் பொய் வணக்கத்தில் ஈடுபடும்போது யெகோவாவுக்கு நேரடியாகவே துரோகம் செய்கிற மாதிரி இருக்கும்; அது யெகோவாவுடைய மனதை ரொம்பக் காயப்படுத்தும். eஉபா. 4:23, 24.

16. யெகோவா எதை வைத்து ஒருவரை நீதிமானாகவோ கெட்டவனாகவோ பார்க்கிறார்?

16 இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பொய் வணக்கத்தை நாம் அறவே தவிர்க்க வேண்டும். ஆனால் அதுமட்டும் போதாது! உண்மை வணக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்; யெகோவாவுடைய சேவையைச் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும். யெகோவா எப்படி ஒருவரை நல்லவராகவும் கெட்டவராகவும் பார்க்கிறார் என்பதைப் பற்றி மல்கியா தீர்க்கதரிசி ரொம்பத் தெளிவாகச் சொன்னார். அவர் இப்படி எழுதினார்: “நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.” (மல். 3:18) யெகோவா நம்மையும் நீதிமானாகப் பார்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அதனால், யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்த நாம் எதையுமே அனுமதிக்கக்கூடாது. அது நம்மிடம் இருக்கிற பாவ இயல்பாக இருந்தாலும் சரி, நாம் செய்கிற தவறுகளாக இருந்தாலும் சரி! சொல்லப்போனால், யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்துவதே ஒரு பெரிய பாவம்தான்!

17. வாழ்க்கைத் துணையை ஏன் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

17 நீங்கள் கல்யாணம் செய்ய யோசித்துக்கொண்டு இருந்தால், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க மல்கியாவுடைய வார்த்தைகள் உங்களுக்கு உதவும். ஒரு நபரிடம் சில நல்ல குணங்கள் இருக்கலாம். ஆனால், அவர் உண்மை கடவுளை வணங்கவில்லை என்றால் யெகோவாவின் பார்வையில் அவர் நீதிமானாக இருப்பாரா? (2 கொ. 6:14) ஒரு கணவராக அல்லது மனைவியாக, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்த அவர் உதவுவாரா? சாலொமோன் ராஜாவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவருடைய மனைவிகளிடம் சில நல்ல குணங்கள் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் யெகோவாவை வணங்கவில்லை. அதனால், கொஞ்சம் கொஞ்சமாக சாலொமோனை பொய் வணக்கம் பக்கம் இழுத்தார்கள்.—1 ரா. 11:1, 4.

18. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்?

18 பெற்றோர்களே, ராஜாக்களைப் பற்றிய பைபிள் பதிவுகளைப் பயன்படுத்தி யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை வளர்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஒரு ராஜா தன்னை வணங்கினாரா மக்களையும் அப்படிச் செய்ய உற்சாகப்படுத்தினாரா என்பதை வைத்துதான் அவரை நல்லவராகவோ கெட்டவராகவோ யெகோவா பார்த்தார் என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். வாழ்க்கையில் எந்த விஷயத்தையும்விட ஆன்மீக விஷயங்கள்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதை உங்கள் சொல்லாலும் செயலாலும் காட்டுங்கள். பைபிள் படிப்பது, கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்வது போன்றவைதான் முக்கியம் என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். (மத். 6:33) இல்லையென்றால், ‘அப்பா-அம்மா யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள்... அதனால்தான் நானும் யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன்’ என்று பிள்ளைகள் நினைத்து விடுவார்கள். இப்படி நினைத்தால், உண்மை வணக்கத்தை அவர்கள் இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிடவோ அதை விட்டு ஒரேயடியாக போய்விடவோ வாய்ப்பிருக்கிறது.

19. யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்தியவர்களால் மறுபடியும் அவருடைய நண்பராக ஆக முடியுமா? (“ உங்களால் யெகோவாவிடம் திரும்பி வர முடியும்!” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

19 ஒருவர் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிட்டால் அவரால் மறுபடியும் யெகோவாவின் நண்பராக ஆக முடியுமா? முடியும்! அவர் மனம் திருந்தி மறுபடியும் யெகோவாவை வணங்க ஆரம்பிக்கலாம். அதற்கு, அவர் தன்னிடம் இருக்கிற பெருமையைத் தூக்கிப்போட்டுவிட்டு மூப்பர்கள் கொடுக்கிற உதவியை மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். (யாக். 5:14) யெகோவாவுடைய பிரியத்தைச் சம்பாதிப்பதால் கிடைக்கிற பலன்களை எதனோடும் ஒப்பிட முடியாது; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!

20. உண்மையுள்ள ராஜாக்கள் மாதிரி நாம் இருந்தால் யெகோவா நம்மை எப்படிப் பார்ப்பார்?

20 இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்களிடமிருந்து இதுவரைக்கும் நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொண்டோம்? நாமும் யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கும்போது அந்த உண்மையுள்ள ராஜாக்களை மாதிரி இருக்கலாம். செய்கிற தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், மனம் திருந்த வேண்டும், தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒரே உண்மையான கடவுளை வணங்குவது எந்தளவுக்கு முக்கியம் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்களும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், தனக்குப் பிரியமானதைச் செய்கிற ஒரு நபராக அவர் உங்களைப் பார்ப்பார்.

பாட்டு 45 என் இதயத்தின் தியானம்

a இந்தக் கட்டுரையில் “இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்கள்” என்று சொல்லும்போது, அது யெகோவாவின் மக்களை ஆட்சி செய்த எல்லா ராஜாக்களையும் குறிக்கிறது. அவர்கள் ஒருவேளை யூதாவின் இரண்டு கோத்திர ராஜ்யத்தை ஆட்சி செய்த ராஜாக்களாக இருக்கலாம், அல்லது இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தை ஆட்சி செய்த ராஜாக்களாக இருக்கலாம், அல்லது ஒட்டுமொத்தமாக 12 கோத்திரங்களையும் ஆட்சி செய்த ராஜாக்களாக இருக்கலாம்.

b வார்த்தையின் விளக்கம்: “இதயம்” என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற வார்த்தை, பொதுவாக ஒரு நபர் உள்ளுக்குள்ளே எப்படி இருக்கிறார் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் அவருடைய ஆசைகள், எண்ணங்கள், குணங்கள், மனப்பான்மை, திறமைகள், உணர்ச்சிகள், லட்சியங்கள் எல்லாமே உட்பட்டிருக்கிறது.

c அந்தக் காலத்தில், தாங்கள் தோற்கடித்த தேசங்களின் கடவுள்களை வணங்குகிற பழக்கம் இஸ்ரவேலர்களாக இல்லாத ராஜாக்கள் மத்தியில் இருந்தது.

d ஆசா ராஜா ரொம்ப மோசமான பாவங்களைச் செய்தார். (2 நா. 16:7, 10) ஆனால், பைபிள் அவரைப் பற்றி நல்ல விதமாகச் சொல்கிறது. ஆரம்பத்தில் அவருக்குக் கிடைத்த கண்டிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பிறகு அவர் மனம் திருந்தி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் செய்த கெட்ட விஷயங்களைவிட நல்ல விஷயங்கள் அதிகமாக இருந்தது. ஆசா ராஜா யெகோவாவை மட்டும்தான் வணங்கினார். தன்னுடைய ராஜ்யத்திலிருந்து சிலை வழிபாட்டை ஒழித்துக்கட்ட கடுமையாகப் போராடினார்.—1 ரா. 15:11-13; 2 நா. 14:2-5.

e கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் முதல் இரண்டு கட்டளைகளுமே யெகோவாவைத் தவிர வேறு யாரையும், வேறு எதையும் வணங்கக் கூடாது என்பதுதான்.—யாத். 20:1-6.

f பட விளக்கம்: ஒரு இளம் மூப்பர் ஒரு சகோதரரிடம் குடிப்பழக்கத்தை பற்றிப் பேசுகிறார். அந்தச் சகோதரர் அவருக்குக் கிடைத்த ஆலோசனையை மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்கிறார், தேவையான மாற்றங்களைச் செய்கிறார், யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாகச் சேவை செய்கிறார்.