படிப்புக் கட்டுரை 28
பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்
எது உண்மை என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
“சத்தியத்தை உங்கள் இடுப்புவாராகக் கட்டிக்கொண்டு . . . உறுதியாக நில்லுங்கள்.”—எபே. 6:14, 15.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவிடமிருந்து கற்றுக்கொண்ட உண்மைகளுக்கும் சாத்தானும் நம் எதிரிகளும் பரப்புகிற பொய்களுக்கும் இருக்கிற வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1. பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட உண்மைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
யெகோவாவுடைய மக்களான நமக்கு பைபிளில் இருக்கிற உண்மைகள் ரொம்பப் பிடிக்கும். அதை வைத்துதான் நம்முடைய விசுவாசத்தையே வளர்த்திருக்கிறோம். (ரோ. 10:17) கிறிஸ்தவ சபையை “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக” யெகோவா ஏற்படுத்தியிருக்கிறார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். (1 தீ. 3:15) நம்மை ‘வழிநடத்துகிறவர்களுக்கும்’ நாம் சந்தோஷமாக கீழ்ப்படிகிறோம். ஏனென்றால், அவர்கள் பைபிளிலிருந்து உண்மைகளை நமக்கு விளக்கிச் சொல்கிறார்கள். கடவுளுடைய விருப்பத்தோடு ஒத்துப்போகிற வழிநடத்துதல்களைக் கொடுக்கிறார்கள்.—எபி. 13:17.
2. யாக்கோபு 5:19 சொல்கிற மாதிரி, சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகும்கூட நமக்கு என்ன ஆபத்து இருக்கிறது?
2 நாம் சத்தியத்தை ஏற்றிருக்கலாம்; கடவுளுடைய அமைப்பு தருகிற வழிநடத்துதல்கள் நமக்குத் தேவை என்பதையும் புரிந்துவைத்திருக்கலாம். இருந்தாலும், நாம் வழிதவறிப் போய்விட வாய்ப்பு இருக்கிறது. (யாக்கோபு 5:19-ஐ வாசியுங்கள்.) பைபிள்மேலும் அமைப்பு தருகிற வழிநடத்துதல்மேலும் நமக்கு இருக்கிற நம்பிக்கை குறைய வேண்டும் என்றுதான் சாத்தான் ஆசைப்படுகிறான்.—எபே. 4:14.
3. உண்மையின் பக்கம் உறுதியாக நிற்பது ஏன் ரொம்ப முக்கியம்? (எபேசியர் 6:13-15)
3 எபேசியர் 6:13-15-ஐ வாசியுங்கள். சீக்கிரத்தில் சாத்தான் யெகோவாவுக்கு எதிராக இந்த உலகத்தில் இருக்கிற தேசங்களைத் திருப்பி விடுவான். அதற்குப் படுமோசமான பொய்களை அவன் சொல்வான்; அந்தப் பொய்கள் உண்மைகள் மாதிரியே தெரியலாம். (வெளி. 16:13, 14) யெகோவாவுடைய மக்களை வழிதவறிப் போக வைப்பதற்கும் அவன் நிறைய முயற்சி செய்வான். (வெளி. 12:9) அதனால், உண்மைக்கும் பொய்க்கும் இருக்கிற வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பதற்கும் உண்மைக்குக் கீழ்ப்படிவதற்கும் நாம் கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். (ரோ. 6:17; 1 பே. 1:22) ஏனென்றால், நாம் மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பதே அதைப் பொறுத்துதான் இருக்கிறது.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 இந்தக் கட்டுரையில், பைபிள் சொல்கிற உண்மைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும் கடவுளுடைய அமைப்பு கொடுக்கிற வழிநடத்துதல்களை ஏற்றுக்கொள்வதற்கும் உதவுகிற இரண்டு குணங்களை நாம் பார்ப்போம். அதோடு, உண்மையின் பக்கம் உறுதியாக நிற்பதற்கு உதவுகிற மூன்று குறிப்புகளைப் பார்ப்போம்.
உண்மைகளைப் புரிந்துகொள்ள தேவையான குணங்கள்
5. உண்மைகளைப் புரிந்துகொள்ள யெகோவாமேல் இருக்கிற பயபக்தி எப்படி உதவும்?
5 யெகோவாமேல் பயபக்தி. நமக்கு யெகோவாமேல் நிறைய அன்பு இருக்கிறது; அதனால் அவருக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக் கூடாது என்று ஆசைப்படுகிறோம். இதுதான் நாம் அவருக்குக் காட்டுகிற பயபக்தி. அவருடைய அங்கீகாரம் நமக்கு வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால், சரிக்கும் தப்புக்கும் இடையில் இருக்கிற வித்தியாசத்தையும் உண்மைக்கும் பொய்க்கும் இருக்கிற வித்தியாசத்தையும் நாம் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். (நீதி. 2:3-6; எபி. 5:14) யெகோவாமேல் இருக்கிற பயபக்தியைவிட மனிதர்கள்மேல் இருக்கிற பயம் அதிகமாகிவிடாதபடி நாம் பார்த்துக்கொள்வது முக்கியம். ஏனென்றால், பெரும்பாலும் மனிதர்களுக்குப் பிடித்தது யெகோவாவுக்குப் பிடிக்காததாக இருக்கலாம்.
6. உளவு பார்க்கப் போன பத்து பேர் மனிதர்களைப் பார்த்து பயந்ததால் எப்படி உண்மைகளைத் தெளிவாகச் சொல்லாமல் போய்விட்டார்கள்?
6 யெகோவாமேல் இருக்கும் பயபக்தியைவிட மனிதர்கள்மேல் இருக்கும் பயம் அதிகமாக இருந்தால் நாம் உண்மையை விட்டு விலகிப் போய்விட வாய்ப்பிருக்கிறது. கானான் தேசத்தை உளவு பார்க்கப் போன 12 கோத்திரத் தலைவர்களின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களில் பத்து பேருக்கு யெகோவாமேல் இருந்த அன்பைவிட கானானியர்கள்மேல் இருந்த பயம்தான் அதிகமாக இருந்தது. அந்தப் பத்து பேர் இஸ்ரவேலர்களிடம் “அவர்கள் நம்மைவிட பலசாலிகள், நம்மால் அவர்களை எதிர்க்க முடியாது” என்று சொன்னார்கள். (எண். 13:27-31) அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் உண்மைதான். மனிதர்களுடைய பார்வையில் அந்தக் கானானியர்கள் இஸ்ரவேலர்களைவிட பலசாலிகளாகத்தான் இருந்தார்கள். ஆனால் இஸ்ரவேலர்களால் ஜெயிக்கவே முடியாது என்று சொன்னது உண்மை இல்லை. ஏனென்றால், அவர்கள் யெகோவாவைப் பற்றி யோசிக்கவில்லை. இஸ்ரவேலர்களிடம் யெகோவா என்ன எதிர்பார்த்தார் என்பதை அந்தப் பத்து பேர் யோசித்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, யெகோவா தங்களுக்காக ஏற்கெனவே என்ன செய்திருக்கிறார் என்பதையும் அவர்கள் யோசித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு முன்னால் கானானியர்கள் ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்திருப்பார்கள். ஆனால், யோசுவாவும் காலேபும் அந்தப் பத்து பேர் மாதிரி இல்லை. யெகோவாவுடைய அங்கீகாரம் தங்களுக்கு வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால் மக்களிடம் “யெகோவாவுக்கு நம்மேல் பிரியம் இருந்தால், அந்தத் தேசத்துக்கு நிச்சயம் நம்மைக் கூட்டிக்கொண்டு போவார், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குத் தருவார்” என்று சொன்னார்கள்.—எண். 14:6-9.
7. யெகோவாமேல் இருக்கிற பயபக்தியை எப்படி அதிகமாக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)
7 ஒவ்வொரு தடவை நாம் முடிவு எடுக்கும்போதும் யெகோவாவை எப்படிச் சந்தோஷப்படுத்தலாம் என்று நாம் யோசிக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்மேல் இருக்கிற பயபக்தி அதிகமாகும். (சங். 16:8) பைபிள் பதிவுகளைப் படிக்கும்போது, ‘இந்தச் சூழ்நிலையில் நான் இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பேன்’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, அந்தப் பத்து பேர் வந்து தவறான அறிக்கையைச் சொன்னபோது அதைக் கேட்டுக்கொண்டு இருந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் சொன்னதை நம்பியிருப்பீர்களா? மனிதர்களைப் பார்த்து பயந்திருப்பீர்களா? இல்லையென்றால், மனிதர்கள்மேல் இருக்கிற பயத்தைவிட யெகோவாமேல் இருக்கிற அன்பு உங்களுக்கு அதிகமாக இருந்திருக்குமா? யோசுவாவும் காலேபும் சொன்ன உண்மைகளை இஸ்ரவேலர்களுடைய ஒரு மொத்த தலைமுறையே புரிந்துகொள்ளாமல் போய்விட்டார்கள். அதனால் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போகிற வாய்ப்பையும் இழந்தார்கள்.—எண். 14:10, 22, 23.
8. எந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள நாம் உழைக்க வேண்டும், ஏன்?
8 மனத்தாழ்மை. யார் மனத்தாழ்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் யெகோவா உண்மைகளை வெளிப்படுத்துகிறார். (மத். 11:25) நமக்கு ஒருவர் பைபிளில் இருந்து உண்மைகளைச் சொல்லிக் கொடுத்தபோது நாம் அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டோம். (அப். 8:30, 31) ஆனால், போகப் போக நமக்குப் பெருமை வந்துவிடாதபடி எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி பெருமை வந்துவிட்டால், பைபிள் நியமங்களும் அமைப்பு தருகிற வழிநடத்துதல்களும் சரியாக இருப்பது போல நம்முடைய தனிப்பட்ட கருத்துகளும் சரியானதுதான் என்று நினைக்க ஆரம்பித்துவிடுவோம்.
9. நாம் எப்படி எப்போதும் மனத்தாழ்மையாக இருக்கலாம்?
9 யெகோவா எவ்வளவு பிரமாண்டமானவர், அவரோடு ஒப்பிடும்போது நாம் வெறும் தூசிதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்திருந்தால், நாம் எப்போதும் மனத்தாழ்மையாக இருப்போம். (சங். 8:3, 4) மனத்தாழ்மையாக இருப்பதற்கும் மற்றவர்கள் ஏதாவது சொல்லி கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதற்கும் நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நம்முடைய சொந்தக் கருத்துக்களைவிட பைபிள் மூலமாகவும் அமைப்பு மூலமாகவும் யெகோவா சொல்கிற கருத்துக்களை உயர்வாக நினைப்பதற்கு அவர் கண்டிப்பாக உதவுவார். அதனால் நீங்கள் பைபிள் படிக்கும்போது, மனத்தாழ்மையாக இருப்பவர்களை யெகோவாவுக்கு எந்தளவுக்கு பிடிக்கும்... அதேசமயத்தில் பெருமை பிடித்தவர்களை, திமிர் பிடித்தவர்களை, கர்வம் உள்ளவர்களை எந்தளவுக்கு வெறுக்கிறார்... என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்கள். ஒருவேளை, உங்களுக்கு ஓரளவு அதிகாரத்தைத் தருகிற ஒரு பொறுப்பு கிடைத்தால் மனத்தாழ்மையாக இருக்க இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள்.
உண்மையின் பக்கம் எப்படி உறுதியாக நிற்கலாம்
10. தன்னுடைய மக்களுக்கு வழிநடத்துதல்களைக் கொடுக்க யெகோவா யாரை பயன்படுத்தியிருக்கிறார்?
10 அமைப்பு தருகிற ஆலோசனைகளை எப்போதும் நம்புங்கள். இஸ்ரவேலர்களுக்கு ஆலோசனைகளைக் கொடுக்க யெகோவா மோசேயையும், அவருக்குப் பிறகு யோசுவாவையும் பயன்படுத்தினார். (யோசு. 1:16, 17) இவர்களைக் கடவுளுடைய பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டபோது இஸ்ரவேலர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ சபை உருவானது. அந்தச் சமயத்தில், 12 அப்போஸ்தலர்கள் வழிநடத்துதல்களைக் கொடுத்தார்கள். (அப். 8:14, 15) கொஞ்ச நாட்களுக்குப் பிறகு எருசலேமில் இருந்த சில மூப்பர்களும் அப்போஸ்தலர்களோடு சேர்ந்து வழிநடத்துதல்களைக் கொடுத்தார்கள். இந்த உண்மையுள்ள ஆண்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கு எல்லாரும் கீழ்ப்படிந்தபோது, “சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.” (அப். 16:4, 5) இன்றைக்கும் யெகோவாவுடைய அமைப்பு தருகிற ஆலோசனைகளை நாம் கேட்டு நடக்கும்போது நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும். ஒருவேளை, யெகோவா நியமித்தவர்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டால் அவருக்கு எப்படியிருக்கும்? இதற்குப் பதில் தெரிந்துகொள்ள இஸ்ரவேலர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
11. மக்களை வழிநடத்துவதற்காக யெகோவா தேர்ந்தெடுத்த மோசேயைச் சிலர் மதிக்காமல் போனபோது என்ன நடந்தது? (படத்தையும் பாருங்கள்.)
11 இஸ்ரவேலர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போய்க் கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்று பார்க்கலாம். சில முக்கியமான ஆட்கள் மோசேக்கு எதிராகவும் யெகோவா அவருக்குக் கொடுத்திருந்த பொறுப்புக்கு எதிராகவும் கேள்வி எழுப்பினார்கள். மோசே மட்டுமல்ல, “ஜனங்கள் எல்லாருமே பரிசுத்தமானவர்கள். யெகோவா அவர்களோடு இருக்கிறார்” என்று சொன்னார்கள். (எண். 16:1-3) “ஜனங்கள் எல்லாருமே” யெகோவாவுடைய பார்வையில் பரிசுத்தமாக இருந்தது உண்மைதான். ஆனால், அவர்களை வழிநடத்துவதற்காக யெகோவா மோசேயைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார். (எண். 16:28, 29) மோசேயைக் குறை சொன்னது மூலமாக அந்தக் கலகக்காரர்கள் உண்மையில் யெகோவாவைக் குறை சொன்னார்கள். யெகோவாவுடைய விருப்பம் என்ன என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத்தான் யோசித்தார்கள். அதாவது, நிறைய அதிகாரமும் அந்தஸ்தும் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதனால், கலகம் செய்த அந்தத் தலைவர்களையும் அவர்களுக்குத் துணைபோன ஆயிரக்கணக்கானவர்களையும் யெகோவா அழித்தார். (எண். 16:30-35, 41, 49) இன்றைக்கும், அமைப்பின் ஏற்பாடுகளை யாராவது மதிக்காமல் போனால் யெகோவா அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது.
12. யெகோவாவின் அமைப்பை நாம் ஏன் நம்பலாம்?
12 யெகோவாவின் அமைப்பை நாம் தாராளமாக நம்பலாம். பைபிள் உண்மைகளை நாம் புரிந்து வைத்திருக்கிற விதத்தில் ஏதாவது மாற்றம் தேவைப்படுகிறபோது, அல்லது நம்முடைய வேலை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிற விதத்தில் மாற்றங்கள் தேவைப்படுகிறபோது அதைச் செய்ய அமைப்பை வழிநடத்துகிறவர்கள் தயங்குவது இல்லை. (நீதி. 4:18) ஏனென்றால், அவர்கள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதை முக்கியமாக நினைக்கிறார்கள். பைபிள் அடிப்படையில் முடிவுகள் எடுக்க தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். சொல்லப்போனால், யெகோவாவின் மக்கள் எல்லாருமே அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்.
13. ‘பயனுள்ள வார்த்தைகள்’ எதைக் குறிக்கிறது, அதைப் பயன்படுத்தி நாம் என்ன செய்ய வேண்டும்?
13 ‘பயனுள்ள வார்த்தைகளைப் பின்பற்றிக்கொண்டே இருங்கள்.’ (2 தீ. 1:13) இங்கே சொல்லப்பட்டிருக்கிற ‘பயனுள்ள வார்த்தைகள்’ பைபிளில் இருக்கிற கிறிஸ்தவ போதனைகளைக் குறிக்கிறது. (யோவா. 17:17) நம்முடைய எல்லா நம்பிக்கைகளுக்கும் அடிப்படையாக இருப்பதே இந்தப் போதனைகள்தான். “பயனுள்ள வார்த்தைகளை” பயன்படுத்தி நம்முடைய நம்பிக்கைகளைச் சோதித்துப் பார்க்க அமைப்பு நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது. அப்படிச் செய்தால் நமக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
14. ‘பயனுள்ள வார்த்தைகளின்’ அடிப்படையில் இல்லாத விஷயங்களைச் சில கிறிஸ்தவர்கள் எப்படி நம்ப ஆரம்பித்தார்கள்?
14 ஒருவேளை நம்முடைய நம்பிக்கைகள் ‘பயனுள்ள வார்த்தைகளின்’ அடிப்படையில் இல்லாமல் போனால் என்ன ஆகும்? ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். முதல் நூற்றாண்டில், யெகோவாவுடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டது என்று சில கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு வதந்தி பரவிக்கொண்டிருந்தது. பவுல் எழுதியதாக சொல்லி ஒரு கடிதம் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். அதை வைத்து அவர்கள் அப்படி நம்ப ஆரம்பித்திருக்கலாம். தெசலோனிக்கேயாவில் இருந்த சில கிறிஸ்தவர்கள் எதையுமே சோதித்துப் பார்க்காமல் அந்த வதந்தியை நம்பிவிட்டார்கள், அதை மற்றவர்களுக்கும் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். பவுல் அவர்களோடு இருந்த சமயத்தில் அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருந்தால் ஏமாந்துபோயிருக்க மாட்டார்கள். (2 தெ. 2:1-5) கேள்விப்படுகிற எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என்று பவுல் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். இனிமேலும் அவர்கள் குழம்பிப்போய்விடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தை இப்படிச் சொல்லி முடித்தார்: “பவுலாகிய நானே கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன். இதுதான் என்னுடைய ஒவ்வொரு கடிதத்துக்கும் அடையாளம், இதுதான் என் கையெழுத்து.”—2 தெ. 3:17.
15. உண்மை மாதிரியே தெரிகிற பொய்களிலிருந்து எப்படி நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்? ஒரு உதாரணம் சொல்லுங்கள். (படங்களையும் பாருங்கள்.)
15 தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட உண்மைகளோடு ஒத்துப்போகாத ஒரு விஷயத்தையோ அதிர்ச்சி தரும் ஒரு வதந்தியையோ கேள்விப்பட்டால் அதை உடனே நம்பிவிடக் கூடாது. நம்முடைய யோசிக்கும் திறனைப் பயன்படுத்த வேண்டும். முன்னாள் சோவியத் யூனியனில், அமைப்பிடம் இருந்து வந்ததாக சொல்லி எதிரிகள் ஒரு கடிதத்தை சகோதரர்களிடம் கொடுத்தார்கள். அந்தக் கடிதத்தில், ‘பிரிந்துபோய் நீங்களே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருந்தது. அந்தக் கடிதம் பார்ப்பதற்கு உண்மையிலேயே அமைப்பிடமிருந்து வந்த மாதிரியே இருந்தது. ஆனால் உண்மையாக இருந்த சகோதரர்கள் அதைப் பார்த்து ஏமாந்துவிடவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயங்களோடு அந்தக் கடிதம் ஒத்துப்போகவில்லை. இன்றைக்குக்கூட எதிரிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தவும் நம்மைக் குழப்பவும் முயற்சி செய்யலாம். அந்த மாதிரி சமயங்களில் நாம் உடனே ‘நிதானத்தை இழந்துவிட’ கூடாது. அதற்குப் பதிலாக, நாம் ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கிற உண்மைகளோடு அந்த விஷயம் ஒத்துப்போகிறதா என்று யோசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நாம் ஏமாந்துவிட மாட்டோம்.—2 தெ. 2:2; 1 யோ. 4:1.
16. சிலர் பொய்களைப் பரப்பினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று ரோமர் 16:17, 18 சொல்கிறது?
16 யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களோடு எப்போதும் ஒற்றுமையாக இருங்கள். நாம் எல்லாரும் ஒற்றுமையாக தன்னை வணங்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். உண்மைகள் பக்கம் உறுதியாக நின்றால்தான் நம்மால் ஒற்றுமையாக இருக்க முடியும். பொய்யான தகவல்களைப் பரப்புகிறவர்கள் சபையில் பிரிவினைகளை ஏற்படுத்துவார்கள். அதனால் “அவர்களிடமிருந்து விலகியிருங்கள்” என்று கடவுள் எச்சரிக்கிறார். ஒருவேளை அப்படிச் செய்யாவிட்டால், நாமும் அந்தப் பொய்களை நம்பி யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விடுவோம்.—ரோமர் 16:17, 18-ஐ வாசியுங்கள்.
17. உண்மை எது என்பதைப் புரிந்துகொண்டு அதன் பக்கம் உறுதியாக நின்றால் நமக்கு என்ன நன்மை?
17 உண்மை எது என்பதைப் புரிந்துகொண்டு அதன் பக்கம் உறுதியாக நின்றால் யெகோவாவோடு நெருக்கமாக இருப்போம். நம்முடைய விசுவாசமும் பலமாக இருக்கும். (எபே. 4:15, 16) சாத்தான் பரப்புகிற பொய்யான போதனைகளையும் செய்திகளையும் நம்பி நாம் ஏமாந்துவிட மாட்டோம். மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவா நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார். அதனால் உண்மைகள் பக்கம் உறுதியாக நில்லுங்கள். “அப்போது, சமாதானத்தின் கடவுள் உங்களோடு இருப்பார்!”—பிலி. 4:8, 9.
பாட்டு 122 அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!
a பட விளக்கம் : பல வருஷங்களுக்கு முன்பு முன்னாள் சோவியத் யூனியனில் நடந்த ஒரு சம்பவம் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. உலகத் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த மாதிரி ஒரு கடிதம் சகோதரர்களுக்குக் கிடைத்தது. ஆனால் அது உண்மையிலேயே எதிரிகளிடமிருந்து வந்தது. இன்றைக்கு நம்முடைய நாட்களிலும், எதிரிகள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி யெகோவாவுடைய அமைப்பைப் பற்றித் தப்பான செய்திகளைப் பரப்புகிறார்கள்.