Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 27

பாட்டு 73 தைரியத்தைத் தாருங்கள்

சாதோக்கைப் போல் தைரியமாக இருங்கள்

சாதோக்கைப் போல் தைரியமாக இருங்கள்

“[சாதோக்] பலசாலியாகவும் தைரியசாலியாகவும் இருந்த இளம் வீரர்.”1 நா. 12:28.

என்ன கற்றுக்கொள்வோம்?

சாதோக்கின் உதாரணம் தைரியமாக இருக்க நமக்கு எப்படி உதவும் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. சாதோக் யார்? (1 நாளாகமம் 12:22, 26-28)

 இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்: தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆக்குவதற்காக 3,40,000-க்கும் அதிகமான ஆண்கள் ஒன்றாகக் கூடி வந்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் அவர்கள் எப்ரோன் மலைப்பகுதியில் இருக்கிறார்கள். அந்த இடம் ‘ஜே-ஜே’ என்று இருக்கிறது! எல்லாரும் சந்தோஷமாகப் பேசி சிரித்துக்கொண்டும், யெகோவாவைப் புகழ்ந்து பாட்டு பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். மக்களுடைய சந்தோஷ ஆரவாரம் எப்ரோன் மலைப்பகுதி முழுவதும் எதிரொலிக்கிறது. (1 நா. 12:39) அந்தக் கூட்டத்தில் சாதோக் என்ற ஒரு இளைஞரும் இருந்தார். ஒருவேளை, அவரை நிறையப் பேர் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால், யெகோவா அவரைக் கவனித்தார். அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். (1 நாளாகமம் 12:22, 26-28-ஐ வாசியுங்கள்.) யார் இந்த சாதோக்?

2 சாதோக் ஒரு குருவாகச் சேவை செய்தார். தலைமை குரு அபியத்தாரோடு சேர்ந்து சேவை செய்தார். கடவுள் சாதோக்குக்கு நிறைய ஞானத்தையும், தன்னுடைய விருப்பத்தைப் புரிந்துகொள்கிற திறமையையும் கொடுத்திருந்தார். அதனால், அவர் இறைவாக்கு சொல்கிறவராக இருந்தார். (2 சா. 15:27) பொதுவாக, ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டால் மக்கள் சாதோக்கைத் தேடிப் போவார்கள். அவர் ரொம்ப தைரியசாலியாகவும் இருந்தார். இந்தக் கட்டுரையில் அவருடைய தைரியத்தைப் பற்றி நாம் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

3. (அ) யெகோவாவை வணங்குகிறவர்களுக்கு ஏன் தைரியம் தேவை? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இந்தக் கடைசி நாட்களில், சாத்தான் யெகோவாவுடைய மக்களை என்றைக்கும் இல்லாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டிருக்கிறான். (1 பே. 5:8) சாத்தானையும் அவனுடைய பொல்லாத உலகத்தையும் யெகோவா அழிப்பதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிற இந்தச் சமயத்தில் தைரியத்தையும் காட்ட வேண்டியிருக்கிறது. (சங். 31:24) சாதோக்கை மாதிரியே தைரியத்தைக் காட்டுவதற்கு மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.

கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுங்கள்

4. கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிக்க நமக்கு ஏன் தைரியம் தேவைப்படுகிறது? (படத்தையும் பாருங்கள்.)

4 யெகோவாவுடைய மக்களாக, கடவுளுடைய அரசாங்கத்துக்கு நாம் முழு ஆதரவைக் கொடுக்கிறோம். (மத். 6:33) ஆனால், இதற்குத் தைரியம் தேவைப்படுகிறது. ஏன்? இந்த மோசமான உலகத்தில் யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழ்வதற்கும், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. (1 தெ. 2:2) இன்றைக்கு உலகத்தில் அரசியல் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல் நடுநிலையோடு இருப்பதற்குக்கூட நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. (யோவா. 18:36) அரசியலிலோ ராணுவத்திலோ சேராததால் யெகோவாவுடைய மக்களில் நிறையப் பேர் பணம் பொருளை இழந்திருக்கிறார்கள், துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளுக்கு மற்றவர்கள் ஆதரவு கொடுக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? (பாரா 4)


5. தாவீதுக்கு ஆதரவு கொடுக்க சாதோக்குக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது?

5 தாவீது ராஜாவாக ஆனதைக் கொண்டாடுவதற்காக மட்டுமே சாதோக் எப்ரோனுக்குப் போகவில்லை. அவர் தன்னுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போர் செய்யத் தயாராக போயிருந்தார். (1 நா. 12:38) தாவீதோடு சேர்ந்து போருக்குப் போவதற்கும் இஸ்ரவேல் தேசத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கும் அவர் தயாராக இருந்தார். ஒரு போர் வீரராக சாதோக்குக்கு அனுபவமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் உண்மையிலேயே தைரியத்தைக் காட்டியிருக்கிறார்.

6. சாதோக்குக்கு தாவீது எப்படி ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார்? (சங்கீதம் 138:3)

6 குருவாக இருந்த சாதோக்குக்கு எப்படி இவ்வளவு தைரியம் கிடைத்தது? அவரைச் சுற்றியிருந்த தைரியசாலிகளைப் பார்த்து அவர் தைரியத்தை வளர்த்திருப்பார். உதாரணத்துக்கு, தாவீதை எடுத்துக்கொள்ளுங்கள். தாவீது ரொம்பத் தைரியமாக “இஸ்ரவேலின் படைக்குத் தலைமை தாங்கி” வழிநடத்தினார். அதைப் பார்த்து, இஸ்ரவேலில் இருந்த எல்லாருமே தாவீது ராஜாவாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். (1 நா. 11:1, 2) எதிரிகளைத் தோற்கடிப்பதற்கு தாவீது எப்போதும் யெகோவாவை நம்பியிருந்தார். (சங். 28:7; சங்கீதம் 138:3-ஐ வாசியுங்கள்.) இவை எல்லாவற்றையுமே சாதோக் பார்த்திருப்பார். இன்னும் சிலரைப் பார்த்துக்கூட சாதோக் தைரியத்தை வளர்த்திருக்கலாம். யோய்தா, அவருடைய மகன் பெனாயா, தந்தை வழி குடும்பத் தலைவர்கள் 22 பேர் போன்றவர்களைப் பார்த்தும் அவர் தைரியத்தை வளர்த்திருப்பார். இவர்கள் எல்லாரும் தாவீது ராஜாவாக ஆவதற்கு ஆதரவாக இருந்தார்கள். (1 நா. 11:22-25; 12:26-28) தாவீதைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்கள்.

7. (அ) தைரியமாக இருப்பதைப் பற்றி இன்றைக்கு யாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) வீடியோவில் பார்த்த மாதிரி, சகோதரர் நிசிலுவின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

7 யெகோவாவுடைய அரசாங்கத்தை ஆதரித்தவர்களைப் பற்றி யோசிக்கும்போது நமக்குத் தைரியமும், பலமும் கிடைக்கும். நம்முடைய ராஜா இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் இருந்தபோது அரசியல் விஷயங்களில் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். (மத். 4:8-11; யோவா. 6:14, 15) பலத்துக்காக அவர் எப்போதுமே யெகோவாவை நம்பியிருந்தார். இன்றும்கூட நிறைய இளம் சகோதரர்கள் ராணுவத்திலும் அரசியல் விஷயங்களிலும் தலையிடாமல் நடுநிலையோடு இருக்கிறார்கள். அவர்களுடைய உதாரணங்களை jw.org வெப்சைட்டில் நீங்கள் பார்க்கலாம். a

சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள்

8. எந்த மாதிரி சூழ்நிலைகளில் மூப்பர்களுக்குத் தைரியம் தேவைப்படலாம்?

8 ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது என்றால் யெகோவாவுடைய மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும். (2 கொ. 8:4) ஆனால் சில சமயங்களில், இதைச் செய்வதற்குத் தைரியம் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, திடீரென்று ஒரு போர் வெடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில் சகோதர சகோதரிகளுக்குச் சாப்பாடு, துணிமணி மற்றும் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் தேவைப்படலாம். பைபிளும் மற்ற பிரசுரங்களும்கூட கையில் இல்லாமல் போய்விடலாம். சகோதர சகோதரிகளுக்கு உற்சாகமும், ஆதரவும்கூட தேவைப்படும். இந்த மாதிரி சமயங்களில், ஆடுகள்மேல் இருக்கிற அன்பால் மூப்பர்கள் உயிரையே பணயம் வைத்து உதவி செய்யக் களத்தில் இறங்குகிறார்கள். (யோவா. 15:12, 13) சொல்லப்போனால், அவர்கள் எல்லாரும் சாதோக் மாதிரி தைரியத்தைக் காட்டுகிறார்கள்.

9. 2 சாமுவேல் 15:27-29 சொல்கிற மாதிரி, தாவீது சாதோக்கை என்ன செய்யச் சொன்னார்? (படத்தையும் பாருங்கள்.)

9 தாவீதுடைய மகன் அப்சலோம் ஆட்சியைப் பறிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான். அந்தச் சமயத்தில், தாவீதின் உயிர் ஆபத்தில் இருந்தது. (2 சா. 15:12, 13) அதனால், தாவீது உடனடியாக எருசலேமிலிருந்து கிளம்ப வேண்டியிருந்தது. அவர் தன்னுடைய ஊழியர்களிடம்: “எழுந்திருங்கள், இங்கிருந்து ஓடிவிடலாம். இல்லாவிட்டால் அப்சலோமிடமிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது!” என்று சொன்னார். (2 சா. 15:14) தாவீதும் அவருடைய ஊழியர்களும் எருசலேமை விட்டு போய்க்கொண்டிருந்தபோது தாவீதுக்கு ஒரு யோசனை வந்தது. யாராவது ஒருவர் எருசலேமிலேயே இருந்து அப்சலோம் போடுகிற திட்டங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அதனால், சாதோக்கையும் மற்ற குருமார்களையும் எருசலேமுக்கு அனுப்பினார். அங்கே தங்கி அப்சலோமுடைய திட்டங்களைத் தனக்குத் தெரியப்படுத்தும்படி சொன்னார். (2 சாமுவேல் 15:27-29-ஐ வாசியுங்கள்.) இந்த வேலை ரொம்ப ரொம்ப ஆபத்தானது. ஏனென்றால் அப்சலோம் திமிர் பிடித்தவன், பழிவாங்கத் துடிப்பவன், கொடூரமானவன். சாதோக்கும் மற்ற குருமார்களும் தாவீதுக்காக ரகசியமாக வேலை செய்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியவந்தால் அவர்களுடைய நிலைமை என்ன ஆகியிருக்கும்!

உயிருக்கு ஆபத்தான ஒரு வேலையை தாவீது சாதோக்குக்குக் கொடுத்தார் (பாரா 9)


10. சாதோக்கும் மற்றவர்களும் தாவீதை எப்படிப் பாதுகாத்தார்கள்?

10 சாதோக்கையும் இன்னொரு நண்பரான ஊசாயையும் பயன்படுத்தி தாவீது ஒரு திட்டம் தீட்டினார். (2 சா. 15:32-37) தாவீதின் திட்டத்துக்கு ஏற்ற மாதிரி ஊசாய் அப்சலோமிடம் போனார், அவனுடைய நம்பிக்கையைச் சம்பாதித்தார்; தாவீதைத் தாக்குவதற்கு ஒரு ஆலோசனையைக் கொடுத்தார். இந்த ஆலோசனையால், தாக்குதலுக்குத் தயாராக தாவீதுக்குக் கொஞ்ச நேரம் கிடைத்தது. அதற்குப் பிறகு, ஊசாய் சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் இந்தத் திட்டத்தைப் பற்றிச் சொன்னார். (2 சா. 17:8-16) அவர்கள் இரண்டு பேரும் இதைப் பற்றி தாவீதுக்குச் செய்தி அனுப்பினார்கள். (2 சா. 17:17) யெகோவாவின் உதவியோடு சாதோக்காலும் மற்ற குருமார்களாலும் தாவீதின் உயிரைப் பாதுகாக்க முடிந்தது.—2 சா. 17:21, 22.

11. சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்போது நாம் எப்படி சாதோக் மாதிரி தைரியத்தைக் காட்டலாம்?

11 ஆபத்தான சமயங்களில், சகோதரர்களுக்கு உதவி செய்யச் சொல்லி நம்மிடம் சொல்லப்பட்டால் நாம் எப்படி சாதோக் மாதிரி தைரியத்தைக் காட்டலாம்? (1) ஆலோசனைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், நாம் ஒற்றுமையாக இருப்பது ரொம்ப முக்கியம். கிளை அலுவலகத்திலிருந்து வரக்கூடிய வழிநடத்துதலுக்கு ஒத்துழைப்பதும் ரொம்ப முக்கியம். (எபி. 13:17) ஒரு பேரழிவு வருவதற்கு முன்பு எப்படித் தயாராக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பேரழிவு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அமைப்பு சொல்லியிருக்கிற அறிவுரைகளை மூப்பர்கள் அடிக்கடி மறுபார்வை செய்ய வேண்டும். (1 கொ. 14:33, 40) (2) தைரியமாக இருங்கள்; அதேசமயத்தில் கவனமாகவும் இருங்கள். (நீதி. 22:3) செயல்படுவதற்கு முன்பு நன்றாக யோசியுங்கள். தேவையில்லாமல் ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள். (3) யெகோவாவை நம்புங்கள். யெகோவா உங்கள்மேலும், சகோதரர்கள்மேலும் அக்கறை வைத்திருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக மற்றவர்களுக்கு உதவ அவர் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்.

12-13. விக்டர் மற்றும் விட்டாலியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)

12 உக்ரைனில், சகோதர சகோதரிகளுக்குச் சாப்பாடும் உணவும் கொடுப்பதற்காகச் சகோதரர்கள் விக்டர் மற்றும் விட்டாலி தங்கள் உயிரையே பணயம் வைத்து உழைத்தார்கள். விக்டர் இப்படிச் சொல்கிறார்: “எங்கெல்லாம் சாப்பாடு கிடைக்கும் என்று நாங்கள் தேடிக்கொண்டே இருந்தோம். . . . எங்களைச் சுற்றி துப்பாக்கி சுடுகிற சத்தம் அடிக்கடி கேட்டது. ஒரு சகோதரர் அவருடைய கடையிலிருந்து உணவு பொருள்களைத் தருவதாகச் சொன்னார். அவர் தாராள மனதோடு இதைச் செய்ததால் நிறையப் பிரஸ்தாபிகளுக்குச் சாப்பிட கொஞ்சம் உணவு கிடைத்தது. எங்களுடைய டிரக்கில் உணவு பொருள்களை ஏற்றிக்கொண்டு இருக்கும்போது எங்களுக்குப் பக்கத்தில், கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரத்தில் ஒரு வெடிகுண்டு விழுந்தது. ‘பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்ய எனக்குத் தைரியத்தைத் தாருங்கள்’ என்று அந்த நாள் முழுக்க நான் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.”

13 விட்டாலி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “எங்களுக்கு உண்மையிலேயே ரொம்பத் தைரியம் தேவைப்பட்டது. . . . நான் செய்த முதல் பயணம் 12 மணிநேரம் எடுத்தது. போகிற வழியெல்லாம் நான் ஜெபம் பண்ணிக்கொண்டேதான் போனேன்.” விட்டாலி தைரியமாக இருந்தார். அதேசமயத்தில், ரொம்ப கவனமாகவும் இருந்தார். அவர் தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “நான் யெகோவாவிடம் ஞானத்துக்காக ஜெபம் செய்தேன். அதேசமயத்தில், தேவையில்லாமல் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவும் உதவுங்கள் என்றும் ஜெபம் செய்தேன். அதிகாரிகள் எந்தச் சாலையில் பயணம் செய்வதற்கு அனுமதி கொடுத்திருந்தார்களோ அதில் மட்டும்தான் நான் வண்டி ஓட்டினேன். சகோதர சகோதரிகள் ஒன்றாகச் சேர்ந்து உழைத்ததைக் கண்ணாரப் பார்த்தபோது என்னுடைய விசுவாசம் பலமானது. எங்களுடைய வண்டி வருவதற்காக சாலையில் இருந்த இடைஞ்சல்களைச் சகோதர சகோதரிகள் எடுத்துப்போட்டார்கள். நிவாரணப் பொருள்களைச் சேகரித்து வைத்தார்கள். அதையெல்லாம் வண்டியில் ஏற்றுவதற்கும் உதவி செய்தார்கள். நாங்கள் வழியில் சாப்பிடுவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும்கூட ஏற்பாடு செய்தார்கள்.”

ஆபத்தான சமயத்தில் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்போது தைரியமாக இருங்கள், அதேசமயத்தில் கவனமாகவும் இருங்கள் (பாராக்கள் 12-13)


யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்

14. நாம் ரொம்ப நேசிக்கிற ஒருவர் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போகும்போது நமக்கு எப்படி இருக்கும்?

14 சில சோதனைகள் நம்மை ரொம்பவே சோர்வாக ஆக்கிவிடலாம். நம் குடும்பத்தில் இருக்கிறவரோ நெருங்கிய நண்பரோ யெகோவாவை விட்டு போகும்போது நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. (சங். 78:40; நீதி. 24:10) ஒருவேளை, அந்த நபர் நம்மோடு ரொம்ப நெருக்கமாக இருந்தால் இந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். இந்த வலியை சமாளிக்க சாதோக்கின் உதாரணம் உங்களுக்கு உதவும்.

15. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க சாதோக்குக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது? (1 ராஜாக்கள் 1:5-8)

15 சாதோக்கின் நெருங்கிய நண்பர் அபியத்தார் ஒருசமயத்தில் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விட்டார். இது தாவீதுடைய ஆட்சியின் கடைசியில் நடந்தது. அப்போது தாவீது மரணப் படுக்கையில் இருந்தார். அவருடைய மகன் அதோனியா அடுத்த ராஜாவாக ஆவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தான். ஆனால் சாலொமோன்தான் ராஜாவாக ஆவார் என்று யெகோவா ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருந்தார். (1 நா. 22:9, 10) இந்தச் சமயத்தில்தான் சாதோக்கின் நண்பர் அபியத்தார் சாலொமோனை ஆதரிக்காமல் அதோனியாவை ஆதரித்தார். (1 ராஜாக்கள் 1:5-8-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்ததால் தாவீதுக்கு மட்டுமல்ல, யெகோவாவுக்கே அவர் உண்மையில்லாமல் போய்விட்டார். இந்தச் சூழ்நிலையில் சாதோக்கின் மனம் எந்தளவுக்கு உடைந்து போயிருக்கும்! 40 வருஷங்களுக்கும் மேலாக சாதோக்கும் அபியத்தாரும் குருமார்களாக சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். (2 சா. 8:17) அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து “உண்மைக் கடவுளின் பெட்டியை” கவனித்து வந்திருந்தார்கள். (2 சா. 15:29) ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தாவீதின் ஆட்சியைத்தான் ஆதரித்து வந்திருந்தார்கள். யெகோவாவுடைய சேவையில் இன்னும் நிறையச் செய்திருக்கிறார்கள்.—2 சா. 19:11-14.

16. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க சாதோக்குக்கு எது உதவி செய்திருக்கும்?

16 அபியத்தார் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போனாலும் சாதோக் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். தாவீதும் சாதோக்கை எப்போதுமே சந்தேகப்பட்டதில்லை. அதோனியாவின் சதித்திட்டங்கள் வெளியே தெரிய வந்தபோது, சாதோக், நாத்தான் மற்றும் பெனாயாவை தாவீது நம்பினார். சாலொமோனை ராஜாவாக அபிஷேகம் செய்யும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தார். (1 ரா. 1:32-34) யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களோடு, அதாவது நாத்தானோடும் தாவீதுக்கு ஆதரவாக இருந்த மற்றவர்களோடும் இருந்தது, சாதோக்கைக் கண்டிப்பாக தைரியப்படுத்தியிருக்கும், உற்சாகப்படுத்தியிருக்கும். (1 ரா. 1:38, 39) சாலொமோன், ராஜாவாக ஆன பிறகு “அபியத்தாருக்குப் பதிலாக சாதோக்கைக் குருவாக நியமித்தார்.”—1 ரா. 2:35.

17. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போனாலும் நீங்கள் எப்படி சாதோக் மாதிரி இருக்கலாம்?

17 நீங்கள் எப்படி சாதோக் மாதிரி நடந்துகொள்ளலாம்? உங்களுக்கு நெருக்கமான ஒருவர் யெகோவாவை விட்டுப் போனாலும் நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதைக் காட்டுங்கள். (யோசு. 24:15) அந்தச் சமயத்தில், உங்களுக்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் யெகோவா கொடுப்பார். நிறைய ஜெபம் பண்ணுங்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களோடு நெருங்கிப் பழகுங்கள். நீங்கள் உண்மையாக இருப்பதை யெகோவா ரொம்பப் பெரிதாக நினைக்கிறார்; அதற்காக உங்களைக் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.—2 சா. 22:26.

18. மார்க்கோ மற்றும் சிட்சே தம்பதியின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

18 சகோதரர் மார்க்கோ மற்றும் அவருடைய மனைவி சிட்சேயின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். அவர்களுடைய இரண்டு மகள்கள் சத்தியத்தை விட்டுப் போய்விட்டார்கள். மார்க்கோ இப்படிச் சொல்கிறார்: “பொதுவாக, குழந்தைகள் பிறந்த நாளிலிருந்தே நாம் அவர்கள்மேல் உயிரையே வைத்திருப்போம். அவர்களுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று பார்த்துப் பார்த்து வளர்ப்போம். ஆனால் அவர்கள் யெகோவாவை விட்டுப் போகும்போது நம்முடைய மனசு அப்படியே நொறுங்கிவிடும். இந்தச் சூழ்நிலையில் யெகோவா எங்கள் கூடவே இருந்திருக்கிறார். எப்போதெல்லாம் நான் ரொம்பச் சோர்ந்து போவேனோ அப்போதெல்லாம் என்னுடைய மனைவி என்னைப் பலப்படுத்துவாள். எப்போதெல்லாம் அவள் சோர்ந்துபோய் இருக்கிறாளோ அப்போதெல்லாம் நான் அவளைப் பலப்படுத்துவேன்.” சிட்சே இப்படிச் சொல்கிறார்: “யெகோவா மட்டும் எங்களுக்குப் பலத்தைக் கொடுக்கவில்லை என்றால் இந்தச் சூழ்நிலையைக் கண்டிப்பாக எங்களால் சமாளித்திருக்க முடியாது. இதற்கெல்லாம் ஒரு விதத்தில் நானும் காரணம் என்று நினைத்து நான் வேதனைப்பட்டுக்கொண்டு இருந்தேன். யெகோவாவிடம் இதைப் பற்றிச் சொன்னேன். கொஞ்ச நாளுக்கு அப்புறம் ஒரு சகோதரி என்னிடம் வந்து பேசினார். அவரை நான் பார்த்தே பல வருஷம் ஆகியிருந்தது. ஆனால் அவர் என்னிடம் வந்து என் தோள்மேல் கையைப் போட்டு, என்னைப் பார்த்து ‘சிட்சே, இதெல்லாம் உன் தப்பு இல்லை’ என்று சொன்னார். யெகோவாவுடைய உதவி இருப்பதால் எங்களால் இப்போது சந்தோஷமாக அவருக்குச் சேவை செய்ய முடிகிறது.”

19. நீங்கள் என்ன செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள்?

19 தன்னை வணங்குகிற எல்லாருமே சாதோக் மாதிரி தைரியமாக இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (2 தீ. 1:7) ஆனால், நம்முடைய சொந்த முயற்சியால் அப்படி ஒரு தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. நாம் அவரை நம்பி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனால், தைரியத்தைக் காட்ட வேண்டிய சூழ்நிலைகளில் உதவிக்காக யெகோவாவிடம் போங்கள். சாதோக் மாதிரியே உங்களையும் தைரியமுள்ள ஒரு நபராக யெகோவா ஆக்குவார்!—1 பே. 5:10.

பாட்டு 126 விழிப்பாய், தைரியமாய் நில்லுங்கள்!