Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 29

பாட்டு 121 சுயக்கட்டுப்பாடு அவசியம்

சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்!

சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்!

“சோதனைக்கு இணங்கிவிடாதபடி நீங்கள் விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.”மத். 26:41.

என்ன கற்றுக்கொள்வோம்?

பாவம் செய்வதையும் பாவம் செய்வதற்குக் காரணமாக இருக்கும் விஷயங்களையும் தவிர்ப்பது ஏன் முக்கியம் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. (அ) இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு என்ன எச்சரிப்பைக் கொடுத்தார்? (ஆ) சீஷர்கள் ஏன் இயேசுவை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்? (படங்களையும் பாருங்கள்.)

 “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது.” a (மத். 26:41ஆ) மனிதர்களுடைய பாவ இயல்பை இயேசு நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. இந்த வார்த்தைகளைச் சொல்வதன்மூலம், நம்மை நாமே அளவுக்கு அதிகமாக நம்பக் கூடாது என்ற எச்சரிப்பை இயேசு கொடுத்தார். இதைச் சொல்வதற்கு கொஞ்சம் முன்பு, அவருடைய சீஷர்கள் ‘என்ன ஆனாலும் சரி, எஜமானை விட்டு போகவே மாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்னார்கள். (மத். 26:35) அவர்களுடைய எண்ணம் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும், கஷ்டமான ஒரு சூழ்நிலை வரும்போது தடுமாற வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் போய்விட்டார்கள். அதனால்தான் இயேசு அவர்களிடம், “சோதனைக்கு இணங்கிவிடாதபடி நீங்கள் விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்லி எச்சரித்தார்.—மத். 26:41அ.

2 வருத்தமான விஷயம் என்னவென்றால், இயேசுவின் சீஷர்கள் விழித்திருக்கவில்லை. இயேசு கைது செய்யப்பட்டபோது அவருக்குத் துணையாக நிற்காமல், சோதனைக்கு இணங்கி விட்டார்கள். அதாவது, பயந்து அவரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள். ஜாக்கிரதையாக இல்லாததால்தான், என்ன செய்ய மாட்டோம் என்று சொன்னார்களோ அதையே செய்தார்கள்.—மத். 26:56.

விழித்திருக்கவும் சோதனைக்கு இணங்கிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கவும் இயேசு சீஷர்களிடம் சொன்னார். ஆனாலும், அவர்கள் இயேசுவை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் (பாராக்கள் 1-2)


3. (அ) யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்க வேண்டுமென்றால் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையை ஏன் தவிர்க்க வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப ஆபத்தானது. யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் தப்பு செய்ய வேண்டும் என்ற ஆசை நமக்கு வந்துவிடலாம். (ரோ. 5:12; 7:21-23) சில சூழ்நிலைகளில் தப்பான விஷயங்கள் ரொம்ப கவர்ச்சியாகத் தெரியும்; திடீரென்று அந்த மாதிரி சூழ்நிலைகளில் நாம் மாட்டிக்கொள்ளலாம். எப்போதுமே யெகோவாவுக்கும் அவருடைய மகன் இயேசுவுக்கும் நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், சோதனைக்கு இணங்கிவிடாதபடி எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதைச் செய்யத்தான் இந்தக் கட்டுரை நமக்கு உதவி செய்யும். முதலில், எந்த மாதிரியான சூழ்நிலைகளில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். அடுத்து, நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்கலாம் என்று பார்க்கலாம். கடைசியாக, தொடர்ந்து ஜாக்கிரதையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

எந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

4-5. சின்ன சின்ன தவறுகளைக்கூட செய்துவிடாதபடி நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

4 சின்ன தவறுகள்கூட யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தைக் கெடுத்துவிடலாம். பெரிய பாவத்தைச் செய்துவிட அது காரணமாகவும் ஆகிவிடலாம்.

5 பாவம் செய்வதற்கானத் தூண்டுதல் நம் எல்லாருக்குமே வரும். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலவீனம் இருக்கிறது. சில விஷயங்கள் சுலபமாக நம்மைப் பாவம் செய்ய வைத்துவிடலாம். உதாரணத்துக்கு, ஒரு நபருக்கு, பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் ஆசை வரலாம். இன்னொரு நபருக்கு, சுய இன்ப பழக்கம் அல்லது ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் போன்ற அசுத்தமான விஷயங்களைச் செய்ய தூண்டுதல் வரலாம். வேறு சிலருக்கு, மனித பயம், பெருமை அல்லது கோபம் போன்றவை இருக்கலாம். யாக்கோபு சொன்னதுபோல், “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்.”—யாக். 1:14.

6. நாம் எதைப் பற்றி நேர்மையாக யோசித்துப் பார்க்க வேண்டும்?

6 எந்தெந்த விஷயங்கள் உங்களைச் சுலபமாகப் பாவம் செய்ய வைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியுமா? ‘என்னிடம் பலவீனம் என்று ஒன்றும் கிடையாது, எந்தச் சூழ்நிலையிலும் நான் பாவம் செய்துவிட மாட்டேன்’ என்று ஒருவர் சொல்லிக்கொண்டால், அவர் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறார் என்று அர்த்தம். (1 யோ. 1:8) ஏனென்றால், ‘ஆன்மீக தகுதியுள்ளவர்கள்கூட’ ஜாக்கிரதையாக இல்லையென்றால், தவறு செய்துவிட வாய்ப்பிருக்கிறது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (கலா. 6:1) அதனால், நமக்கு என்னென்ன பலவீனங்கள் இருக்கின்றன என்று நேர்மையாக யோசித்துப் பார்க்க வேண்டும்; பிறகு, உண்மையிலேயே அது நம் பலவீனம்தான் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.—2 கொ. 13:5.

7. எதற்கு நாம் விசேஷ கவனம் கொடுக்க வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

7 நம்மிடம் என்ன பலவீனம் இருக்கிறது என்று கண்டுபிடித்தப் பிறகு அதை எதிர்த்துக் கடினமாகப் போராட வேண்டும். இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: பைபிள் காலங்களில் நகரத்தைச் சுற்றியிருந்த மதில்களில் ரொம்பப் பலவீனமாக இருந்த பகுதி கதவுகள்தான். அதனால், அந்தக் கதவுகளுக்கு விசேஷ கவனம் கொடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். நமக்கு என்ன பாடம்? நம்முடைய பலவீனம் என்ன என்பதைக் கண்டுபிடித்து அதற்கு விசேஷ கவனத்தை நாம் கொடுக்க வேண்டும்.—1 கொ. 9:27.

எப்படி ஜாக்கிரதையாக இருப்பது?

8-9. நீதிமொழிகள் 7-வது அதிகாரத்தில் வருகிற இளைஞன், மோசமான பாவம் செய்வதை எப்படித் தவிர்த்திருக்கலாம்? (நீதிமொழிகள் 7:8, 9, 13, 14, 21)

8 நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்கலாம்? நீதிமொழிகள் 7-வது அதிகாரத்தில் வருகிற இளைஞனிடமிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம். அவன் ஒழுக்கங்கெட்ட ஒரு பெண்ணோடு பாலியல் முறைகேடு என்ற பெரிய பாவத்தைச் செய்துவிடுகிறான். வசனம் 22-ல் அவன் “உடனே” அந்தப் பெண்ணுக்குப் பின்னால் போனதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், முந்தின வசனங்கள் காட்டுவதுபோல், அவன் ஏற்கெனவே சில தவறான படிகளை எடுத்திருக்கிறான்; அதனால்தான் கடைசியில் இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்துவிடுகிறான்.

9 இந்தப் பாவத்தைச் செய்வதற்கு முன்பு அவன் என்னென்ன தவறான படிகளை எடுத்தான்? முதலில், சாயங்கால நேரத்தில் அந்த ஒழுக்கக்கேடான பெண் வாழ்ந்த “தெரு முனையின் வழியாகப் போனான்.” பிறகு, அந்தப் பெண்ணின் வீடு இருந்த திசையில் நடந்துபோனான். (நீதிமொழிகள் 7:8, 9-ஐ வாசியுங்கள்.) அடுத்து, அந்தப் பெண்ணைப் பார்த்த பிறகும் அவன் வேறு பக்கமாக போகவில்லை. அதற்குப் பதிலாக, அவள் கொடுத்த முத்தத்தை ஏற்றுக்கொண்டான். சமாதான பலியைக் கொடுத்துவிட்டு வந்ததாக அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். ஒருவேளை, தான் நல்லவள் என்று காட்டிக்கொள்வதற்காக அவள் இதையெல்லாம் சொல்லியிருக்கலாம். (நீதிமொழிகள் 7:13, 14, 21-ஐ வாசியுங்கள்.) இந்தத் தவறான படிகளை அந்த இளைஞன் தவிர்த்திருந்தால், சோதனைக்கு இணங்கி பாலியல் முறைகேடு என்ற பெரிய பாவத்தைச் செய்திருக்க மாட்டான்.

10. நீதிமொழிகள் 7-வது அதிகாரத்தில் வருகிற இளைஞன் செய்த அதே தவறை இன்று ஒருவர் எப்படிச் செய்ய வாய்ப்பிருக்கிறது?

10 இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இளைஞனை மாதிரியே யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு ‘எல்லாமே திடீரென்று நடந்துவிட்டது’ என்று அவர் சொல்லலாம். ஆனால், உண்மையிலேயே என்ன நடந்தது என்று அவர் யோசித்துப் பார்த்தால், அந்தப் பாவத்தைச் செய்வதற்கு முன்பு ஏற்கெனவே அவர் சில தவறான படிகளை எடுத்திருப்பார். ஒருவேளை கெட்ட நண்பர்கள் அவருக்கு இருந்திருக்கலாம், தப்பான பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கலாம், போகக் கூடாத இடங்களுக்குப் போயிருக்கலாம்; ஒருவேளை, நேரிலோ, இன்டர்நெட் வழியாகவோ அப்படி போயிருக்கலாம். அதோடு, ஜெபம் செய்வது, பைபிள் படிப்பது, கூட்டங்களுக்கு வருவது, ஊழியத்தில் கலந்துகொள்வது போன்றவற்றைக்கூட அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். நீதிமொழிகளில் வருகிற இளைஞன் மாதிரியே அவர் திடீரென்று பாவம் செய்திருக்க வாய்ப்பில்லை.

11. ஒரு பாவத்தைச் செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நாம் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

11 நமக்கு என்ன பாடம்? பாவம் செய்வதை மட்டுமல்ல, பாவம் செய்வதற்குக் காரணமாக இருக்கும் விஷயங்களையும் நாம் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தைத்தான் சாலொமோன் இந்தப் பதிவில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லும்போது, “அவளுடைய பாதைகளில் மயங்கித் திரியாதீர்கள்“ என்று சொன்னார். (நீதி. 7:25) அதுமட்டுமல்ல, இவளைப் போன்ற நடத்தைகெட்ட ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லும்போதும், “அவளைவிட்டு நீ தூரமாக விலகியிரு. அவளுடைய வீட்டு வாசல் பக்கம்கூட போகாதே” என்று சொன்னார். (நீதி. 5:3, 8) பாவம் செய்யத் தூண்டுகிற சூழ்நிலைகளைத் தவிர்த்தால், நாம் பாவம் செய்துவிட மாட்டோம். b கிறிஸ்தவர்களாக, சில விஷயங்களைச் செய்வதில் தவறில்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த மாதிரி விஷயங்கள்கூட நம்மைப் பாவம் செய்யத் தூண்டும் என்றால் அவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.—மத். 5:29, 30.

12. யோபு என்ன தீர்மானம் எடுத்தார், பாவம் செய்யாமல் இருக்க அது அவருக்கு எப்படி உதவியது? (யோபு 31:1)

12 பாவம் செய்யத் தூண்டுகிற சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். யோபு அதைத்தான் செய்தார். தவறான ஆசையோடு எந்தப் பெண்ணையும் பார்க்க மாட்டேன் என்று அவர் தன் “கண்களோடு ஒப்பந்தம்” செய்திருந்தார். (யோபு 31:1-யும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) இப்படி ஒரு தீர்மானத்தை எடுத்து, அதில் உறுதியாக இருந்ததால்தான், ஒழுக்கக்கேடு என்ற பாவத்தில் அவர் விழுந்துவிடவில்லை. நாமும் அவரை மாதிரியே செய்ய வேண்டும்.

13. யோசிக்கிற விதத்தில்கூட ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)

13 நாம் யோசிக்கிற விதத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (யாத். 20:17) தப்பான விஷயங்களைப் பற்றிக் கனவு காண்பதில் எந்தத் தவறும் இல்லை, அதைச் செய்வதுதான் தவறு என்று சிலர் நினைக்கலாம். அப்படி நினைப்பது ரொம்ப ஆபத்தானது. தப்பான விஷயங்களை ஒருவர் மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்தால், அதை எப்படியாவது செயல்படுத்திவிட வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தீவிரமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால், அவரே அவருக்காகக் குழியை வெட்டுவது போல் அது இருக்கும். உண்மைதான், அவ்வப்போது நம் மனதுக்குள் கெட்ட ஆசை வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த மாதிரி எண்ணங்கள் வந்தால், அதை உடனே எடுத்துப்போட்டு விட்டு நல்ல விஷயங்களை யோசிக்க வேண்டும். கெட்ட எண்ணங்களை வளர விட்டால், அது தீவிரமான ஒரு ஆசையாக நமக்குள் உருவெடுக்கும், அதை எதிர்த்துப் போராடுவதும் கஷ்டமாகிவிடும். கடைசியில் பெரிய பாவத்தைச் செய்துவிடுவோம்.—பிலி. 4:8; கொலோ. 3:2; யாக். 1:13-15.

பாவ ஆசைகளைத் தூண்டுகிற எல்லாவற்றையுமே நாம் தவிர்க்க வேண்டும் (பாரா 13)


14. சோதனைக்கு இணங்கிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேறு எதுவும் நமக்கு உதவும்?

14 சோதனைக்கு இணங்கிவிடாமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கு நாம் வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? யெகோவாவுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதால் எப்போதுமே நமக்குத்தான் நன்மை என்பதை உறுதியாக நம்ப வேண்டும். உண்மைதான், நம்முடைய எண்ணங்களையும் ஆசைகளையும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வைத்துக்கொள்வது சிலசமயம் போராட்டமாக இருக்கலாம். ஆனால், யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்யும்போது நமக்குக் கிடைக்கிற மன சமாதானத்தோடு ஒப்பிடும்போது இந்தப் போராட்டம் ஒன்றும் பெரிதல்ல.

15. நல்ல ஆசைகளை வளர்த்துக்கொள்வது, சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எப்படி உதவும்?

15 நல்ல ஆசைகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘கெட்டதை வெறுத்து நல்லதை நேசிக்க’ கற்றுக்கொண்டால், எப்போதுமே சரியானதைச் செய்ய வேண்டும் என்றும் பாவம் செய்யத் தூண்டுகிற சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் உறுதியாக இருப்போம். (ஆமோ. 5:15) சரியான ஆசைகளை வளர்த்துக்கொண்டால், பாவம் செய்யத் தூண்டுகிற சூழ்நிலைகள் திடீரென்று வந்தால்கூட நாம் அதற்கு இணங்கிவிட மாட்டோம், உறுதியாக இருப்போம்.

16. ஆன்மீக விஷயங்களில் மூழ்கி இருப்பது ஜாக்கிரதையாக இருக்க நமக்கு எப்படி உதவும்? (படங்களையும் பாருங்கள்.)

16 நல்ல ஆசைகளை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அதற்கு, ஆன்மீக விஷயங்களில் மூழ்கி இருக்க வேண்டும். கூட்டங்களில் இருக்கும்போதும் ஊழியம் செய்யும்போதும் தப்பு செய்வதற்கான ஆசை வராது. அதற்குப் பதிலாக, யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஆசைதான் வரும். (மத். 28:19, 20; எபி. 10:24, 25) அதேபோல், பைபிளைப் படித்து அதைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகும்; கெட்டதை வெறுக்க வேண்டும் என்ற எண்ணமும் வரும். (யோசு. 1:8; சங். 1:2, 3; 119:97, 101) இயேசு தன்னுடைய சீஷர்களிடம் என்ன சொன்னார் என்று ஞாபகம் இருக்கிறதா? “சோதனைக்கு இணங்கிவிடாதபடி நீங்கள் . . . தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்றார். (மத். 26:41) நம்முடைய பரலோக அப்பாவிடம் நாம் நிறைய நேரம் பேசும்போது, அதாவது ஜெபம் செய்யும்போது, அவருடைய உதவி நமக்குக் கிடைக்கும். அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நம் தீர்மானமும் பலமாகும்.—யாக். 4:8.

ஆன்மீக விஷயங்களில் மூழ்கி இருப்பது சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க உதவும் (பாரா 16) c


தொடர்ந்து ஜாக்கிரதையாக இருங்கள்

17. பேதுருவுக்கு இருந்த பலவீனம் என்ன?

17 நம்மிடம் இருக்கும் சில பலவீனங்களை நம்மால் முழுமையாக மேற்கொள்ள முடியும். ஆனால், சில பலவீனங்கள் அவ்வப்போது தலைதூக்கலாம். அதை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கலாம். அப்போஸ்தலன் பேதுருவுடைய உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். மனிதர்களைப் பார்த்து பயந்ததால், இயேசுவை யாரென்றே தெரியாதென்று மூன்று தடவை சொன்னார். (மத். 26:69-75) பிறகு, அவர் தன்னுடைய பயத்தை மேற்கொண்டதுபோல் தெரிகிறது. நியாயசங்கத்துக்கு முன்பு அவர் தைரியமாக சாட்சி கொடுத்தார். (அப். 5:27-29) ஆனால், கொஞ்ச வருஷங்களுக்குப் பிறகு “விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்குப் பயந்து” வேறு தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களோடு சாப்பிடுவதை அவர் நிறுத்திவிட்டார். (கலா. 2:11, 12) பேதுருவின் பயம் திரும்பவும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. ஒருவேளை, அவருக்குள் இருந்த அந்தப் பலவீனம் முழுமையாகப் போகாமல் இருந்திருக்கலாம்.

18. சில பலவீனங்கள் என்ன செய்யலாம்?

18 இதே மாதிரி ஒரு சூழ்நிலை நமக்கும் வர வாய்ப்பு இருக்கிறதா? நமக்குள் இருக்கும் ஏதோவொரு பலவீனத்தை நாம் தூக்கிப்போட்டு விட்டதாக நினைக்கலாம். ஆனால், அது மறுபடியும் எட்டிப்பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு சகோதரருடைய அனுபவத்தைப் பாருங்கள். அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தை நான் விட்டு 10 வருஷங்கள் ஆகிவிட்டது. இனிமேலும் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால், உண்மை என்னவென்றால், அதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஒரு ஓரத்தில் இருந்திருக்கிறது. அது எட்டிப்பார்ப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது.” பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தச் சகோதரர் சோர்ந்துபோய்விடவில்லை. இந்தப் பலவீனத்தை எதிர்த்து தினம் தினம், புதிய உலகம் வரும்வரை போராட வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். தன்னுடைய மனைவி மற்றும் சபை மூப்பர்கள் கொடுத்த உதவியை ஏற்றுக்கொண்டார். இந்தப் பலவீனத்தை எதிர்த்து போராட நிறைய முயற்சி எடுத்தார்.

19. ஏதோவொரு பலவீனத்தை நம்மால் மேற்கொள்ளவே முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்?

19 ஏதோவொரு பலவீனத்தை எதிர்த்துப் போராடுவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? “விழித்திருங்கள்” என்று இயேசு கொடுத்த ஆலோசனையைக் கடைப்பிடிப்பதன்மூலம் அந்தப் பலவீனத்தை உங்களால் சமாளிக்க முடியும். ஒருவேளை, அந்தச் சோதனையை சமாளிக்க நீங்கள் மனதளவில் உறுதியாக இருக்கலாம்; ஆனாலும் தவறு செய்யத் தூண்டுகிற சூழ்நிலைகளைத் தவிர்த்துவிடுங்கள். (1 கொ. 10:12) அந்தப் பலவீனத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உங்களுக்கு ஏற்கெனவே எவையெல்லாம் உதவி செய்திருக்கிறதோ அவற்றை தொடர்ந்து செய்யுங்கள். நீதிமொழிகள் 28:14 இப்படிச் சொல்கிறது: “எப்போதும் கவனமாக நடந்துகொள்கிறவன் சந்தோஷமானவன்.”—2 பே. 3:14.

ஜாக்கிரதையாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

20-21. (அ) சோதனைக்கு இணங்கிவிடாமல் இருந்தால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? (ஆ) நம்முடைய பங்கைச் செய்யும்போது யெகோவா நமக்காக என்ன செய்வார்? (2 கொரிந்தியர் 4:7)

20 சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க நாம் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாக வீண்போகாது. பாவம் செய்வதால் கிடைக்கிற ‘தற்காலிகச் சந்தோஷத்தை’ யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதால் கிடைக்கிற சந்தோஷத்தோடு ஒப்பிடவே முடியாது. (எபி. 11:25; சங். 19:8) ஏனென்றால், அவருக்குப் பிடித்த மாதிரி வாழ்கிற விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதி. 1:27) அப்படி வாழும்போது நமக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கும், முடிவில்லாத வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கும்.—1 தீ. 6:12; 2 தீ. 1:3; யூ. 20, 21.

21 ‘உடல் பலவீனமாக இருப்பது’ உண்மைதான்; அதற்காக, நம்மிடம் இருக்கும் பலவீனங்களை நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்று அர்த்தம் இல்லை. நமக்குத் தேவைப்படுகிற சக்தியைக் கொடுக்க யெகோவா தயாராக இருக்கிறார். (2 கொரிந்தியர் 4:7-ஐ வாசியுங்கள்.) ஆனால், ஒரு விஷயத்தைக் கவனியுங்கள்: இயல்புக்கு மிஞ்சிய சக்தியைத்தான் கடவுள் தருகிறார். அப்படியென்றால், நமக்கு இருக்கிற இயல்பான சக்தியைப் பயன்படுத்துவது நம்முடைய கையில்தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி சோதனையைச் சமாளிக்க ஒவ்வொரு நாளும் நாம் போராட வேண்டும். நம் பங்கைச் செய்யும்போது யெகோவா நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கொடுப்பார், நமக்கு இன்னும் நிறைய சக்தியைக் கொடுப்பார். (1 கொ. 10:13) யெகோவாவுடைய உதவியோடு சோதனையை நம்மால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்!

பாட்டு 47 தினமும் ஜெபம் செய்வாய்

a வார்த்தைகளின் விளக்கம்: மத்தேயு 26:41-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிற “உள்ளம்” என்ற வார்த்தை, ஏதோவொரு விஷயத்தைச் சொல்லவோ செய்யவோ ஒருவருடைய இதயத்தில் ஏற்படுகிற தூண்டுதலைக் குறிக்கிறது. ‘உடல்’ என்ற வார்த்தை நம்முடைய பாவ இயல்பைக் குறிக்கிறது. அதனால்தான், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருந்தாலும் நாம் கவனமாக இல்லையென்றால், ஆசைகளுக்கு இணங்கி தவறு செய்துவிட வாய்ப்பிருக்கிறது.

b ஒரு பெரிய பாவத்தைச் செய்த நபர் அதிலிருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 57, குறிப்புகள் 1-3-ஐப் பார்க்கலாம். அதோடு, நவம்பர் 2020 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 27-29-ல் பாராக்கள் 12-17-ஐப் பார்க்கலாம்.

c பட விளக்கம்: ஒரு சகோதரர் காலையில் தினவசனம் படிக்கிறார், மதிய உணவு சாப்பிடும்போது பைபிள் வாசிக்கிறார், சாயங்காலத்தில் வார நாள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.