Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர்களே, திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!

இளைஞர்களே, திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!

“வாழ்வின் பாதையை நீங்கள் எனக்குக் காட்டுகிறீர்கள்.”—சங். 16:11.

பாடல்கள்: 41, 120

1, 2. வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது சாத்தியம்தான் என்பதை டோனியின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?

அப்பா இல்லாத பிள்ளையாக டோனி வளர்ந்தான். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவனுக்கு, படிப்பில் அவ்வளவாக விருப்பம் இல்லை. படிப்பை நிறுத்திவிடும் எண்ணம்கூட இருந்தது. வாரயிறுதி நாட்களில், சினிமாவுக்குப் போவான்; நண்பர்களோடு சேர்ந்து நேரம் செலவிடுவான். அவன் முரடனும் அல்ல, போதைப் பொருளுக்கு அடிமையானவனும் அல்ல. அதேசமயத்தில், எந்த அர்த்தமும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தான். கடவுள் இருக்கிறாரா என்பதில்கூட அவனுக்குச் சந்தேகம் இருந்தது. ஒருநாள், இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவனைச் சந்தித்தார்கள். அப்போது, கடவுளைப் பற்றி அவனுக்கு இருந்த சந்தேகங்களை அவர்களிடம் கேட்டான். உயிர் படைக்கப்பட்டதா? மற்றும் உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அவர்கள் கொடுத்தார்கள்.

2 அடுத்த தடவை சாட்சிகள் அவனைச் சந்தித்தபோது, அவனுடைய யோசிக்கும் விதம் தலைகீழாக மாறியிருந்தது! அந்தச் சிற்றேடுகள் ரொம்பவே கசங்கியிருந்தன. ஏனென்றால், அந்தளவுக்கு அவற்றைப் படித்திருந்தான்! டோனி அவர்களிடம், “கடவுள்னு ஒருத்தர் இருக்கணும்னு தோணுது” என்றான். பிறகு, பைபிளைப் படிக்க ஆரம்பித்தான்; வாழ்க்கையைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. பைபிளைப் படிப்பதற்கு முன்பு, அவன் நல்ல மாணவனாக இல்லை. ஆனால் இப்போது, பள்ளியில் இருந்த சிறந்த மாணவர்களில் டோனியும் ஒருவன்! பள்ளி முதல்வருக்குப் பயங்கர ஆச்சரியம்! “உன்னோட மனப்பான்மையிலயும், படிப்பிலயும் நிறைய முன்னேற்றம் செஞ்சிருக்க. யெகோவாவின் சாட்சிகளோட பழகுறதுதான் அதுக்கு காரணமா?” என்று அவர் கேட்டார். டோனி அதற்கு, ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு, தான் கற்றுக்கொள்வதை அவரிடம் சொன்னான். பிறகு என்ன நடந்தது? உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றான்; இப்போது ஒழுங்கான பயனியராகவும், உதவி ஊழியராகவும் இருக்கிறான். அப்பா இல்லாத பிள்ளையான தனக்கு, அன்பான அப்பா யெகோவா கிடைத்ததை நினைத்து டோனி ரொம்பவே சந்தோஷப்படுகிறான்.—சங். 68:5.

யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள் வெற்றி நிச்சயம்

3. இளைஞர்களுக்கு யெகோவா என்ன அறிவுரையைக் கொடுக்கிறார்?

3 இளைஞர்கள்மேல் யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை டோனியின் அனுபவம் காட்டுகிறது. உங்களுக்கு உண்மையான வெற்றி கிடைக்க வேண்டும் என்றும், நீங்கள் திருப்தியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார். அதனால்தான், “மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே” நினை என்று சொல்கிறார். (பிர. 12:1) எப்போதுமே இது சுலபமாக இருக்கும் என்று சொல்ல முடியாது; ஆனால், முயற்சி செய்தால் நிச்சயம் முடியும். இளைஞராக இருக்கும்போதும் சரி, வளர்ந்து ஆளான பிறகும் சரி, கடவுளுடைய உதவியால் நீங்கள் வெற்றி பெற முடியும். இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைக் கைப்பற்ற இஸ்ரவேலர்களுக்கு எது உதவியது என்றும், ராட்சதனான கோலியாத்தை வீழ்த்துவதற்கு தாவீதுக்கு எது உதவியது என்றும் பார்க்கலாம்.

4, 5. இஸ்ரவேலர்கள் கானான் தேசத்தைக் கைப்பற்றியதிலிருந்தும், கோலியாத்தைத் தாவீது வீழ்த்தியதிலிருந்தும் நாம் என்ன அருமையான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படங்கள்)

4 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் காலடியெடுத்து வைக்கவிருந்த சமயத்தில், இஸ்ரவேலர்களுக்கு யெகோவா என்ன ஆலோசனைகளைக் கொடுத்தார்? திறமையான படைவீரர்களாக இருக்கும்படி அல்லது போர்ப் பயிற்சி எடுக்கும்படி சொன்னாரா? இல்லை! (உபா. 28:1, 2) தனக்குக் கீழ்ப்படியும்படியும் தன்னை நம்பும்படியும் சொன்னார். (யோசு. 1:7-9) மனிதர்களின் பார்வையில் இது ஓர் அர்த்தமில்லாத ஆலோசனையாகப் படலாம்; ஆனால், இஸ்ரவேலர்களுக்கு இதுதான் அருமையான ஆலோசனையாக இருந்தது. கானானியர்களை வீழ்த்துவதற்கு திரும்பத் திரும்ப தன்னுடைய மக்களுக்கு யெகோவா உதவினார். (யோசு. 24:11-13) கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கு விசுவாசம் தேவைப்படுகிறது; அப்படி விசுவாசம் வைக்கும்போது, எப்போதுமே வெற்றிதான்! அன்றும் சரி, இன்றும் சரி, இதுதான் உண்மை!

5 கோலியாத் ஒரு மாவீரனாக இருந்தான். கிட்டத்தட்ட 9 12 அடி உயரத்தில் இருந்த அவன், பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தான். (1 சா. 17:4-7) தாவீதின் கையிலோ வெறும் கவண் இருந்தது; அதோடு, கடவுள்மீது விசுவாசம் இருந்தது. விசுவாசம் இல்லாத ஒருவரின் பார்வையில், கோலியாத்தோடு போர் செய்யப்போன தாவீது முட்டாளாகத்தான் இருந்திருப்பார். உண்மையில், கோலியாத்துதான் முட்டாள்!—1 சா. 17:48-51.

6. இந்தக் கட்டுரையில் நாம் என்ன பார்க்கப்போகிறோம்?

6 சந்தோஷமாக இருப்பதற்கும், வாழ்க்கையில் இன்னுமதிக வெற்றி பெறுவதற்கும் உதவுகிற நான்கு விஷயங்களை முந்தின கட்டுரையில் பார்த்தோம். ஆன்மீகத் தேவைகள்மீது கவனமாக இருக்க வேண்டும்... கடவுளை நேசிக்கும் நண்பர்களைச் சம்பாதிக்க வேண்டும்... நல்ல இலக்குகளை வைக்க வேண்டும்... கடவுள் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்... என்றெல்லாம் தெரிந்துகொண்டோம். இந்தக் கட்டுரையில், இந்த நான்கு விஷயங்களைச் செய்வதன் மூலம் எப்படி இன்னுமதிக பிரயோஜனமடையலாம் என்று பார்க்கலாம். அதற்கு, 16-ம் சங்கீதத்தில் இருக்கிற சில நியமங்களைப் பற்றிச் சிந்திக்கலாம்.

உங்கள் ஆன்மீகத் தேவைகள்மீது கவனமாக இருங்கள்

7. (அ) ஆன்மீகச் சிந்தையுள்ள ஒருவரை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? (ஆ) தாவீதின் “பங்கு” எது, அவருடைய வாழ்க்கையில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

7 ஆன்மீகச் சிந்தையுள்ள ஒருவருக்கு கடவுள்மீது விசுவாசம் இருக்கும்; கடவுள் பார்ப்பதுபோல் அவர் எல்லாவற்றையும் பார்ப்பார். தன்னுடைய வாழ்க்கையை யெகோவா வழிநடத்தும்படி விடுவார்; அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். (1 கொ. 2:12, 13) ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதனுக்கு தாவீது ஓர் அருமையான உதாரணம்! “யெகோவாதான் என் பங்கு” என்று அவர் பாடினார். (சங். 16:5) கடவுளோடு தனக்கிருந்த நெருங்கிய பந்தம் உட்பட, தனக்கிருந்த ‘பங்குக்காக’ தாவீது நன்றியோடு இருந்தார்; யெகோவாவிடம் அடைக்கலம் புகுந்தார். (சங். 16:1) அதனால்தான், “எனக்குள் சந்தோஷம் பொங்கி வழிகிறது” என்று அவரால் சொல்ல முடிந்தது. யெகோவாவிடம் அவருக்கிருந்த நெருங்கிய பந்தத்தைவிட வேறு எதுவும் அவருக்கு இந்தளவு சந்தோஷத்தைத் தந்திருக்க முடியாது!—சங்கீதம் 16:9, 11-ஐ வாசியுங்கள்.

8. உங்களுக்கு உண்மையான திருப்தியைத் தருகிற சில விஷயங்கள் என்ன?

8 பணத்தையும் இன்பங்களையும் தேடிப் போகிறவர்களால் தாவீது அனுபவித்த சந்தோஷத்தை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. (1 தீ. 6:9, 10) கனடாவில் இருக்கிற ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “உண்மையான திருப்திங்குறது, வாழ்க்கையில என்ன கிடைக்குதுங்குறது பொறுத்து கிடையாது, எல்லா நல்ல பரிசுகளையும் தர்ற யெகோவாவுக்கு என்ன கொடுக்குறோங்குறத பொறுத்துதான் இருக்கு.” (யாக். 1:17) யெகோவாமீது விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால்... அவருக்குச் சேவை செய்தால்... உங்கள் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும், திருப்திக்கும் பஞ்சம் இருக்காது. விசுவாசத்தைப் பலப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவோடு நேரம் செலவு செய்யுங்கள்! அதாவது, பைபிளைப் படியுங்கள்; அவருடைய அற்புதமான படைப்புகளைக் கவனியுங்கள்; உங்கள்மேல் அவர் காட்டுகிற அன்பு உட்பட, அவருடைய குணங்களை யோசித்துப் பாருங்கள்!—ரோ. 1:20; 5:8.

9. உங்களை வடிவமைப்பதற்கு பைபிளை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்?

9 சிலசமயங்களில், ஓர் அன்பான அப்பாவைப் போல், தேவைப்படும் சமயங்களில் யெகோவா நம்மைத் திருத்துகிறார்; இதன் மூலமும் நம்மீது அன்பு காட்டுகிறார். இப்படித் திருத்தப்படுவதை தாவீது மதித்தார். அதனால்தான், “எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை நான் புகழ்வேன். ராத்திரியில்கூட என்னுடைய அடிமனதின் யோசனைகள் என்னைத் திருத்துகின்றன” என்று சொன்னார். (சங். 16:7) கடவுளுடைய எண்ணங்களைப் பற்றித் தாவீது ஆழமாகச் சிந்தித்தார்; அவருடைய எண்ணங்களை தன்னுடைய எண்ணங்களாக்கிக்கொண்டார். கடவுளுடைய யோசனைகள் தன்னை வடிவமைப்பதற்கு அனுமதித்தார். அதாவது, தான் இன்னும் சிறந்த நபராக ஆவதற்காக, கடவுளுடைய எண்ணங்கள் தன்னை மாற்றும்படி அனுமதித்தார். நீங்களும் அவரைப் போலவே செய்தால், கடவுள்மீது உங்களுக்கு அன்பு பெருகும்; அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசை அதிகமாகும்; முதிர்ச்சியான ஒரு கிறிஸ்தவராக ஆவீர்கள். “ஆராய்ச்சி செய்றப்பவும், அத பத்தி ஆழமா யோசிக்கிறப்பவும் எனக்காகவே இத யெகோவா எழுதியிருக்குறாருனு தோணும்” என்று க்றிஸ்டின் என்ற சகோதரி சொல்கிறார்.

10. ஏசாயா 26:3-ல் சொல்லியிருக்கிறபடி, ஆன்மீகச் சிந்தையுள்ளவராக இருப்பது எந்த விதங்களில் உங்களுக்கு உதவும்?

10 ஆன்மீகச் சிந்தை இருந்தால், இந்த உலகத்தையும் அதன் எதிர்காலத்தையும் கடவுள் எப்படிப் பார்க்கிறாரோ, அப்படி நீங்கள் பார்ப்பீர்கள். ஏராளமான அறிவையும் விவேகத்தையும் யெகோவா தருகிறார். ஏனென்றால், வாழ்க்கையில் எது முக்கியம் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தைப் பயமில்லாமல் சந்திக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார். (ஏசாயா 26:3-ஐ வாசியுங்கள்.) அமெரிக்காவில் இருக்கிற ஜோஷ்வா என்ற சகோதரர், “நீங்க யெகோவாவோட நெருங்கியிருந்தீங்கனா, எது முக்கியம் எது முக்கியம் இல்லங்குறத தெளிவா புரிஞ்சுக்குவீங்க” என்று சொல்கிறார்.

உண்மையான நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்

11. தன்னுடைய நண்பர்களை தாவீது எப்படித் தேர்ந்தெடுத்தார்?

11 சங்கீதம் 16:3-ஐ வாசியுங்கள். நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தாவீதுக்குத் தெரிந்திருந்தது. யெகோவாவை நேசிக்கிறவர்களை அவர் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தார்; அதனால், அவருடைய மனதில் ‘சந்தோஷம் பொங்கியது.’ தன்னுடைய நண்பர்களை ‘பரிசுத்தவான்கள்’ என்று அவர் சொன்னார். ஏனென்றால், யெகோவாவுடைய ஒழுக்கத் தராதரங்களின்படி வாழ அவர்கள் முயற்சி செய்தார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தாவீது எப்படி உணர்ந்தாரோ, அதேபோல் உணர்ந்த இன்னொரு சங்கீதக்காரர் சொல்வதைக் கவனியுங்கள். “உங்களுக்குப் பயந்து நடக்கிற எல்லாருக்கும் நான் நண்பன். உங்கள் ஆணைகளின்படி நடக்கிற எல்லாருக்கும் நான் தோழன்” என்று அவர் சொன்னார். (சங். 119:63) முந்தின கட்டுரையில் பார்த்தபடி, யெகோவாவை நேசித்து, அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களின் மத்தியில் உங்களுக்கும் நல்ல நண்பர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள். அதற்காக, உங்கள் வயதில் இருப்பவர்களைத்தான் நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

12. தாவீதும் யோனத்தானும் ஏன் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்?

12 தன்னுடைய வயதிலிருப்பவர்களை மட்டுமே தாவீது நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கவில்லை. தாவீதின் நெருங்கிய நண்பர்களில் யார் உங்களுக்கு ஞாபகம் வருகிறார்கள்? ஒருவேளை யோனத்தான் ஞாபகத்துக்கு வரலாம். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற அருமையான நட்பிலேயே இவர்களுடைய நட்பும் ஒன்று! ஆனால், தாவீதைவிட யோனத்தான் கிட்டத்தட்ட 30 வயது மூத்தவர் என்பது தெரியுமா? அப்படியிருந்தும், அவர்கள் எப்படி நல்ல நண்பர்களாக இருந்தார்கள்? இரண்டு பேருக்கும் கடவுள்மேல் விசுவாசம் இருந்தது. இரண்டு பேரும் ஒருவர்மீது ஒருவர் மதிப்பு மரியாதை வைத்திருந்தார்கள். கடவுளுடைய எதிரிகளை எதிர்த்துப் போர் செய்தபோது, தாவீது காட்டிய தைரியத்தை யோனத்தானும், யோனத்தான் காட்டிய தைரியத்தைத் தாவீதும் உயர்வாக மதித்தார்கள்.—1 சா. 13:3; 14:13; 17:48-50; 18:1.

13. உங்கள் நட்பு வட்டாரத்தை எப்படி விரிவாக்கலாம்? ஓர் உதாரணம் சொல்லுங்கள்.

13 யெகோவாவை நேசித்து, அவர்மேல் விசுவாசம் வைத்திருப்பவர்களோடு நட்பை வளர்த்துக்கொண்டால், தாவீது மற்றும் யோனத்தானைப் போலவே நம் மனதிலும் ‘சந்தோஷம் பொங்கும்’. “உலகம் முழுசும், வேற வேற பின்னணியிலிருந்தும் கலாச்சாரத்திலிருந்தும் வந்தவங்க எனக்கு நண்பர்களா இருக்காங்க” என்று நிறைய வருஷங்களாகக் கடவுளுக்குச் சேவை செய்யும் கீரா என்ற சகோதரி சொல்கிறார். நீங்களும் இவரைப் போல செய்தால், நம் எல்லாரையும், பைபிளும் கடவுளுடைய சக்தியும் எப்படி யெகோவாவை வணங்குகிற ஒரே உலகளாவிய குடும்பத்தில் இணைத்திருக்கின்றன என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

நல்ல இலக்குகளை வையுங்கள்

14. (அ) நீங்கள் எப்படி நல்ல இலக்குகளை வைக்கலாம்? (ஆ) தங்களுடைய இலக்குகளைப் பற்றி இளைஞர்கள் சிலர் என்ன சொல்கிறார்கள்?

14 சங்கீதம் 16:8-ஐ வாசியுங்கள். கடவுளுக்குச் சேவை செய்வதைத்தான் தாவீது முக்கியமாக நினைத்தார். இலக்குகளை வைக்கும் விஷயத்தில் தாவீதைப் பின்பற்றும்போதும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார் என்பதைப் பற்றி எப்போதும் யோசிக்கும்போதும் உங்கள் வாழ்க்கை திருப்தி நிறைந்ததாக இருக்கும். ஸ்டீவன் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு இலக்க அடையறதுக்காக உழைக்குறப்பவும், அதை அடையறப்பவும், நான் செஞ்சிருக்குற முன்னேற்றங்கள பார்க்குறப்பவும் எனக்கு திருப்தியா இருக்கு.” ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் சகோதரர் இப்போது வேறொரு நாட்டில் சேவை செய்கிறார். “வயசானதுக்கு அப்புறம் என் வாழ்க்கைய திரும்பி பார்க்குறப்ப, ‘எனக்காகத்தான் இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கே’ன்னு நினைக்குற மாதிரி என் வாழ்க்கை இருந்துட கூடாது” என்று அவர் சொல்கிறார். நீங்களும் அவரைப் போல் உணர்கிறீர்களா? அப்படியென்றால், கடவுளுக்குப் புகழ் சேர்க்கவும் மற்றவர்களுக்கு உதவவும் உங்கள் திறமைகளைப் பயன்படுத்துங்கள். (கலா. 6:10) யெகோவாவின் சேவையில் இலக்குகளை வையுங்கள். அவற்றை அடைவதற்காக, யெகோவாவிடம் உதவி கேளுங்கள். உங்கள் ஜெபத்துக்கு அவர் பதில் கொடுப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.—1 யோ. 3:22; 5:14, 15.

15. நீங்கள் என்னென்ன இலக்குகளை வைக்கலாம்? (“ நீங்கள் யோசித்துப் பார்க்க சில இலக்குகள்...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

15 நீங்கள் என்னென்ன இலக்குகளை வைக்கலாம்? சபைக் கூட்டங்களில் உங்கள் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பயனியர் அல்லது பெத்தேல் சேவை செய்வதைப் பற்றி ஏன் நினைத்துப் பார்க்கக் கூடாது? ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதைப் பற்றியும் யோசித்துப் பார்க்கலாம்; அப்படிச் செய்யும்போது, நிறைய பேரிடம் நல்ல செய்தியைச் சொல்ல முடியும். முழுநேர சேவை செய்யும் பாராக் என்ற இளம் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “ஒவ்வொரு நாள் கண் முழிக்கறப்பவும், என் சக்தி முழுசயும் யெகோவாவுக்காக பயன்படுத்த றேன்னு நினைக்குறப்ப சந்தோஷமா இருக்கு. வேற எந்த வேலையாலும் இந்த சந்தோஷத்த கொடுக்க முடியாது.”

கடவுள் கொடுத்த சுதந்திரத்தை மதியுங்கள்

16. யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் பற்றி தாவீது எப்படி உணர்ந்தார், ஏன்?

16 சங்கீதம் 16:2, 4-ஐ வாசியுங்கள். கடவுளுடைய சட்டங்கள் மற்றும் நியமங்களின்படி வாழும்போது, நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று முந்தின கட்டுரையில் பார்த்தோம். நல்லதை நேசிக்கவும், கெட்டதை வெறுக்கவும் கற்றுக்கொண்டோம். (ஆமோ. 5:15) “நல்லதையெல்லாம்” யெகோவாதான் தருகிறார் என்று தாவீது சொன்னார். நல்லது என்றால், ஒழுக்க ரீதியில் சிறந்து விளங்குவது என்று அர்த்தம். யெகோவா எதைச் செய்தாலும் நல்லதைத்தான் செய்கிறார்; நம்மிடம் இருக்கிற நல்லவையெல்லாம் அவரிடமிருந்துதான் வருகிறது. அவரைப் போலவே நடந்துகொள்ளவும், அவர் எதை விரும்புகிறாரோ அதை விரும்பவும் தாவீது கடினமாக முயற்சி செய்தார். அதோடு, கடவுள் எதை கெட்டது என்று சொன்னாரோ, அதை வெறுக்கக் கற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட கெட்டதில் ஒன்றுதான், சிலை வழிபாடு. அதாவது, யெகோவாவைத் தவிர வேறு யாரையாவது அல்லது வேறு எதையாவது வணங்குவது! சிலை வழிபாடு, மனிதர்களின் தரத்தைத் தாழ்த்துகிறது; யெகோவாவுக்கு மட்டுமே உரிய மகிமையை வேறு யாருக்கோ வேறெதாவதுக்கோ கொடுக்கிறது.—ஏசா. 2:8, 9; வெளி. 4:11.

17, 18. (அ) பொய்க் கடவுள்களைக் கும்பிடுவதால் ஏற்படும் கெட்ட விளைவுகளைப் பற்றி தாவீது என்ன சொன்னார்? (ஆ) மக்களுக்கு “கஷ்டத்துக்குமேல் கஷ்டம்” வருவதற்கு என்ன காரணம்?

17 பைபிள் காலங்களில், ஒழுக்கக்கேடு என்பது பெரும்பாலும் பொய் மதத்தின் ஒரு பாகமாகவே இருந்தது. (ஓசி. 4:13, 14) ஒழுக்கக்கேட்டை அவ்வளவு விரும்பியதால், நிறைய பேர் பொய்க் கடவுள்களைக் கும்பிட ஆசைப்பட்டார்கள். ஆனால், அப்படிக் கும்பிட்டது அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்ததா? இல்லவே இல்லை! அவர்களுக்கு ‘கஷ்டத்துக்குமேல் கஷ்டம்தான்’ வரும் என்று தாவீது சொன்னார். தங்கள் பிள்ளைகளைக்கூட அவர்கள் பலிகொடுத்தார்கள். (ஏசா. 57:5) அவர்களுடைய கொடூர குணத்தை யெகோவா வெறுத்தார். (எரே. 7:31) அந்தக் காலத்தில் நீங்கள் இருந்திருந்தால், உங்கள் அப்பா அம்மா யெகோவாவை வணங்குபவர்களாக இருப்பதை நினைத்து எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பீர்கள்!

18 ஓரினச்சேர்க்கை உட்பட பாலியல் ஒழுக்கக்கேட்டை இன்று நிறைய பொய் மதங்கள் ஏற்றுக்கொள்கின்றன. ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழும் மக்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால், ‘கஷ்டத்துக்குமேல் கஷ்டத்தைத்தான்’ அவர்கள் அனுபவிக்கிறார்கள். (1 கொ. 6:18, 19) இளைஞர்களே, அப்படிக் கஷ்டப்படுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதனால், உங்கள் பரலோகத் தகப்பன் சொல்பேச்சைக் கேளுங்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிவது நன்மையைத் தேடித் தருகிறது என்பதை முழுமையாக நம்புங்கள். ஒழுக்கக்கேட்டால் வரும் வேதனைகளைக் கவனமாக யோசித்துப் பாருங்கள். அதனால் ஏற்படுகிற வேதனைகளை நினைத்துப்பார்க்கும்போது, இப்போது கிடைக்கும் தற்காலிகச் சந்தோஷம் ஒன்றுமே கிடையாது. (கலா. 6:8) ஆரம்பத்தில் பார்த்த ஜோஷ்வா இப்படிச் சொல்கிறார்: “சுதந்திரத்த நம்ம இஷ்டத்துக்கு பயன்படுத்தலாம். ஆனா, அத தவறா பயன்படுத்துனா நிச்சயம் திருப்தி கிடைக்காது.”

19, 20. யெகோவாமேல் விசுவாசம் வைக்கும்போதும், அவருக்குக் கீழ்ப்படியும்போதும் இளைஞர்கள் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்?

19 “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவா. 8:31, 32) பொய் மதம்... அறியாமை... மூடநம்பிக்கை... என எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கிடைத்திருப்பதற்காக, யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்! எதிர்காலத்தில், ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலைக்காக’ நாம் ஆர்வமாகக் காத்திருக்கிறோம். (ரோ. 8:21) நீங்கள் கிறிஸ்துவின் போதனைகளின்படி நடந்தால், அந்தச் சுதந்திரத்தை இப்போதே ஓரளவு அனுபவிக்கலாம். இப்படி, வெறுமனே தெரிந்துகொள்வதால் மட்டுமல்ல, அதன்படி வாழ்வதன் மூலமும் “சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள்.

20 இளைஞர்களே, யெகோவா உங்களுக்குத் தந்திருக்கும் சுதந்திரத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள். அதை ஞானமாகப் பயன்படுத்துங்கள். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் விதத்தில் இப்போதே நல்ல முடிவுகளை எடுக்க அது உதவும். ஓர் இளம் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “சின்ன வயசுல நம்மளோட சுதந்திரத்த ஞானமா பயன்படுத்துனா, பின்னாடி முக்கியமான முடிவுகளை எடுக்குறதுக்கு உதவியா இருக்கும். சரியான வேலையில சேர்றதுக்கு... கல்யாணம் பண்றதா இல்லனா கொஞ்ச நாளைக்கு கல்யாணத்த தள்ளிப்போடறதானு முடிவு எடுக்குறதுக்கு உதவியா இருக்கும்.”

21. “உண்மையான வாழ்வை” நீங்கள் எப்படி அடையலாம்?

21 இந்த உலகத்தில், ‘சந்தோஷமான வாழ்க்கை’ என்று மக்கள் எதைச் சொல்கிறார்களோ, அதுவும்கூட குறுகியதுதான்! நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்! (யாக். 4:13, 14) அதனால், “உண்மையான வாழ்வை,” அதாவது புதிய உலகத்தில் வாழப்போகும் முடிவில்லாத வாழ்வை, அடைவதற்குத் தகுந்த விதத்தில் முடிவுகளை எடுப்பதுதான் நீங்கள் செய்யும் மிகச் சிறந்த காரியம். (1 தீ. 6:19) தன்னை வணங்கும்படி யெகோவா யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அது நம் ஒவ்வொருவருடைய முடிவு. அதனால், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள தினமும் முயற்சி செய்வதன் மூலமும், அவர் கொடுக்கும் ‘நன்மையான’ காரியங்களுக்கு நன்றியோடு இருப்பதன் மூலமும், அவரை உங்கள் ‘பங்காக’ ஆக்கிக்கொள்ளுங்கள். (சங். 103:5) அளவில்லாத சந்தோஷத்தை அவர் என்றென்றும் அள்ளித் தருவார் என்பதில் உறுதியாக இருங்கள்.—சங். 16:11.