Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர்களே, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளர் ஆசைப்படுகிறார்!

இளைஞர்களே, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளர் ஆசைப்படுகிறார்!

“வாழ்நாளெல்லாம் உன்னை நன்மைகளால் திருப்திப்படுத்துகிறார்.”—சங். 103:5.

பாடல்கள்: 89, 4

1, 2. எதிர்காலத்துக்காகத் திட்டம் போடும்போது, படைப்பாளர் சொல்வதைக் கேட்பது ஏன் ஞானமானது? (ஆரம்பப் படங்கள்)

நீங்கள் ஓர் இளைஞரா? அப்படியென்றால், எதிர்காலத்தைப் பற்றிய நிறைய அறிவுரைகள் உங்களைத் தேடிவந்திருக்கும்! கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால், உயர்கல்வி படிக்க வேண்டும் அல்லது நல்ல வேலையில் சேர வேண்டும் என்று ஆசிரியர்கள்... ஆலோசகர்கள்... என எல்லாரும் சொல்லலாம். ஆனால், வித்தியாசமான ஓர் அறிவுரையை யெகோவா கொடுக்கிறார். பள்ளியில் நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவது உண்மைதான். ஏனென்றால், நீங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (கொலோ. 3:23) உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கிற முடிவுகளை இளமைப் பருவத்திலேயே நீங்கள் எடுக்க வேண்டும் என்பதும் யெகோவாவுக்குத் தெரியும். அதனால், இந்தக் கடைசி நாட்களில், அவருடைய நோக்கத்தையும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதையும் மனதில் வைத்து சில முடிவுகளை எடுப்பதற்கு அவர் அருமையான நியமங்களைக் கொடுத்திருக்கிறார்.—மத். 24:14.

2 யெகோவாவுக்கு எல்லாமே தெரியும்! எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதும், இந்த உலகத்துக்கு எவ்வளவு சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது என்பதும் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். (ஏசா. 46:10; மத். 24:3, 36) உங்களைப் பற்றியும் அவருக்குத் தெரியும்! எது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும், எது உங்கள் சந்தோஷத்தைப் பறித்துவிடும் என்பதும் அவருக்குத் தெரியும். மனிதர்களுடைய அறிவுரைகள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், அவை பைபிளின் அடிப்படையில் இல்லையென்றால் உண்மையிலேயே ஞானமானவையாக இருக்காது.—நீதி. 19:21.

யெகோவாவிடமிருந்துதான் ஞானம் வருகிறது!

3, 4. கெட்ட அறிவுரையைக் கேட்டதால், ஆதாம் ஏவாளும் எதிர்கால சந்ததியாரும் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்?

3 கெட்ட அறிவுரைகள் ரொம்பக் காலத்திலிருந்தே கொடுக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்குக் கெட்ட அறிவுரை கொடுத்த முதல் ஆள் சாத்தான்தான்! தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொண்டால், ஆதாமும் ஏவாளும் ரொம்பவே சந்தோஷமாக இருப்பார்கள் என்று அவன் ஏவாளிடம் சொன்னான். (ஆதி. 3:1-6) ஆனால், சாத்தான் ஒரு சுயநலவாதி! ஆதாம் ஏவாளும் அவர்களுடைய எதிர்கால சந்ததியும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதும் அவரை வணங்க வேண்டும் என்பதும் அவனுடைய ஆசை அல்ல. தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதும், தன்னை வணங்க வேண்டும் என்பதும்தான் அவனுடைய ஆசை. அவர்களுக்காக அவன் எதையுமே செய்ததில்லை. அவர்களிடம் இருக்கிற எல்லாமே யெகோவா கொடுத்ததுதான். ஆதாமுக்கு ஏவாளையும், ஏவாளுக்கு ஆதாமையும் அவர் கொடுத்தார். அவர்கள் குடியிருக்க, அழகான தோட்டத்தைக் கொடுத்தார். என்றென்றும் அழியாத பரிபூரண உடலையும் கொடுத்தார்.

4 ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாதது வருத்தமான விஷயம். அப்படிச் செய்ததன் மூலம் தங்களுக்கு உயிர் கொடுத்தவரோடு இருந்த தொடர்பை அவர்களாகவே அறுத்துக்கொண்டார்கள். அதன் விளைவோ படுமோசமானதாக இருந்தது. ஒரு செடியிலிருந்து பூக்களைப் பறிக்கும்போது, அவை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாடிவிடுகின்றனவோ, அதேபோல் யெகோவாவிடமிருந்த தொடர்பை அறுத்துக்கொண்டதால், ஆதாமும் ஏவாளும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையடைந்தார்கள். கடைசியில் செத்துப்போனார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் கஷ்டத்தை அனுபவித்தார்கள். (ரோ. 5:12) இன்றும், கடவுள் சொல்வதை பெரும்பாலானவர்கள் காதில் வாங்கிக்கொள்வதே இல்லை; தங்கள் இஷ்டப்படிதான் நடக்கிறார்கள். (எபே. 2:1-3) விளைவு? யெகோவாவை எதிர்ப்பவர்களுக்கு ‘ஞானம் இல்லை’ என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 21:30.

5. மனிதர்கள்மேல் கடவுளுக்கு என்ன நம்பிக்கை இருந்தது, அவருடைய நம்பிக்கை சரிதானா?

5 நிறைய இளைஞர்கள் உட்பட, மக்கள் நிறைய பேர் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவார்கள், தனக்குச் சேவை செய்வார்கள் என்ற உறுதியான நம்பிக்கை யெகோவாவுக்கு இருந்தது. (சங். 103:17, 18; 110:3) இதுபோன்ற இளைஞர்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார்! நீங்களும் அதில் ஒருவரா? அப்படியென்றால், கடவுளிடமிருந்து நீங்கள் ஏராளமான ‘நன்மைகளை’ அனுபவிக்கிறீர்கள் என்பது நிச்சயம்; அது உங்கள் சந்தோஷத்தைக் கூட்டுகிறது. (சங்கீதம் 103:5-ஐ வாசியுங்கள்; நீதி. 10:22) அந்த நன்மைகளில் நான்கைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அவை: (1) ஆன்மீக உணவு, (2) நல்ல நண்பர்கள், (3) நல்ல இலக்குகள், (4) உண்மையான சுதந்திரம்.

உங்கள் ஆன்மீகத் தேவைகளை யெகோவா பூர்த்தி செய்கிறார்

6. உங்கள் ஆன்மீகத் தேவையைப் பற்றி நீங்கள் ஏன் அக்கறையோடு இருக்க வேண்டும், யெகோவா உங்களுக்கு எப்படி உதவுகிறார்?

6 மிருகங்களுக்கு ஆன்மீகத் தேவை என்று எதுவும் இல்லை. அதாவது, படைப்பாளரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு இல்லை. ஆனால், நமக்கு அது இருக்கிறது. (மத். 4:4) கடவுள் சொல்வதைக் கேட்கும்போது, விவேகம்... ஞானம்... சந்தோஷம்... இவையெல்லாம் கிடைக்கின்றன. “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:3) நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள, யெகோவா பைபிளைக் கொடுத்திருக்கிறார்; ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின்’ மூலம் பிரசுரங்களையும் கொடுக்கிறார். (மத். 24:45) இந்தப் பிரசுரங்களை ஆன்மீக உணவு என்று சொல்கிறோம். ஏனென்றால், நம் விசுவாசத்தை இவை வளர்க்கின்றன. யெகோவாவோடு இருக்கிற பந்தத்தையும் பலப்படுத்துகின்றன. போஷாக்கு நிறைந்த விதவிதமான ஆன்மீக உணவை நாம் ருசித்து மகிழ்கிறோம்!—ஏசா. 65:13, 14.

7. கடவுளிடமிருந்து கிடைக்கும் ஆன்மீக உணவு உங்களுக்கு எப்படி உதவும்?

7 ஆன்மீக உணவு, உங்களுக்கு ஞானத்தையும் தெளிவாக யோசிக்கும் திறமையையும் தரும்; இவை இரண்டும் நிறைய வழிகளில் உங்களைப் பாதுகாக்கும். (நீதிமொழிகள் 2:10-14-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, படைப்பாளர் என்று யாரும் இல்லை... பணம் பொருள் இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும்... போன்ற பொய்களை அடையாளம் கண்டுபிடிக்க இந்தக் குணங்கள் உதவும். வேதனையில் கொண்டுபோய்விடும் ஆசைகளையும் பழக்கவழக்கங்களையும் ஒழித்துக்கட்டவும் இவை உதவும். ஞானமாக நடந்துகொள்ளவும், தெளிவாக யோசிக்கவும் உங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். அப்போது, யெகோவா உங்களை நேசிக்கிறார் என்பதையும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்பதையும் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.—சங். 34:8; ஏசா. 48:17, 18.

8. இப்போதே கடவுளிடம் நெருங்கி வருவது ஏன் முக்கியம், எதிர்காலத்தில் இது எப்படி உங்களுக்குப் பிரயோஜனத்தைத் தரும்?

8 சீக்கிரத்தில் சாத்தானுடைய உலகம் ஒழியப்போகிறது. யெகோவாவால் மட்டும்தான் நம்மைக் காப்பாற்ற முடியும்; நம் தேவைகள் எல்லாவற்றையும், ஏன், அடுத்தவேளை சாப்பாட்டைக்கூட அவரால்தான் தர முடியும். (ஆப. 3:2, 12-19) அதனால், யெகோவாவிடம் நெருங்கி வரவும், அவர்மேல் இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்தவும் இதுதான் சரியான சமயம்! (2 பே. 2:9) இப்படிச் செய்தால், உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் சரி, தாவீதைப் போலவே உங்களாலும் சொல்ல முடியும். “யெகோவாவை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன். அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது” என்று அவர் சொன்னார்.—சங். 16:8.

அருமையான நண்பர்களை யெகோவா தருகிறார்

9. (அ) யோவான் 6:44-ன்படி, யெகோவா என்ன செய்கிறார்? (ஆ) சத்தியத்தில் இல்லாத ஒருவரை முதன்முதலில் பார்த்துப் பேசுவதற்கும், சத்தியத்தில் இருக்கும் ஒருவரை முதன்முதலில் பார்த்துப் பேசுவதற்கும் என்ன வித்தியாசம்?

9 சத்தியத்தில் இல்லாத ஒருவரை நீங்கள் முதன்முதலில் பார்த்துப் பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒருவேளை அவருடைய பெயர், பார்ப்பதற்கு அவர் எப்படி இருக்கிறார் போன்ற விஷயங்கள் தெரியலாம். ஆனால், வேறொன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சத்தியத்தில் இருக்கும் ஒருவரை முதன்முதலில் பார்த்துப் பேசுகிறீர்கள் என்றால், அது முழுக்க முழுக்க வித்தியாசமான ஓர் அனுபவம். ஏனென்றால், யெகோவாவை அவர் நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடமிருக்கும் ஏதோவொரு நல்ல விஷயத்தைப் பார்த்துதான் தன்னை வணங்குகிற குடும்பத்தில் யெகோவா அவரை ஈர்த்திருக்கிறார் என்பதும் தெரியும். (யோவான் 6:44-ஐ வாசியுங்கள்.) ஒருவர் எங்கிருந்து வந்திருந்தாலும் சரி, எந்தச் சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும் சரி, அவரைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே நிறைய விஷயங்கள் தெரியும், அவருக்கும் உங்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியும்!

உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்றும், நீங்கள் நல்ல இலக்குகளை வைக்க வேண்டும் என்றும் யெகோவா ஆசைப்படுகிறார் (பாராக்கள் 9-12)

10, 11. யெகோவாவின் சாட்சிகளுக்கு இடையில் இருக்கிற ஒற்றுமை என்ன, இதில் நீங்கள் எப்படிச் சம்பந்தப்படுகிறீர்கள்?

10 யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒருவரை பார்த்துப் பேசிய உடனே, மிக முக்கியமான விஷயங்களில் ஏற்கெனவே நீங்கள் இரண்டு பேரும் ஒத்துப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பாஷையும் அவருடைய பாஷையும் வித்தியாசப்பட்டாலும், இரண்டு பேரும் சத்தியம் என்ற ‘சுத்தமான பாஷை’ பேசுகிறீர்கள்! (செப். 3:9) அதாவது, இரண்டு பேரும் கடவுளை நம்புகிறீர்கள், ஒரே விதமான ஒழுக்கத் தராதரங்களின்படி வாழ்கிறீர்கள், ஒரே விதமான எதிர்கால நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது! ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், நிலையான நட்பை அனுபவிக்கவும் இவை உதவும்.

11 அதனால், யெகோவாவை வணங்கினால், உங்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். உலகம் முழுவதும் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்; நீங்கள் இதுவரை அவர்களைப் பார்க்கவில்லை என்றாலும், அவர்கள் உங்கள் நண்பர்கள்தான்! யெகோவாவின் சாட்சிகளைவிட வேறு யாருக்கு இப்பேர்ப்பட்ட விலைமதிப்பில்லாத பரிசு கிடைக்கும்?

நல்ல இலக்குகளை வைக்க யெகோவா உதவுகிறார்

12. என்னென்ன நல்ல இலக்குகளை நீங்கள் வைக்கலாம்?

12 பிரசங்கி 11:9–12:1-ஐ வாசியுங்கள். ஏதாவதொரு இலக்கை அடைய முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்களா? ஒருவேளை, தினமும் பைபிளைப் படிப்பது... கூட்டங்களில் நன்றாகப் பதில் சொல்வது... நியமிப்புகளை நன்றாகச் செய்வது போன்ற இலக்குகளை நீங்கள் வைத்திருக்கலாம். அல்லது, ஊழியத்தில் இன்னும் திறமையாக பைபிளைப் பயன்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கலாம். நீங்கள் முன்னேறிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தாலோ, மற்றவர்கள் கவனித்து உங்களைப் பாராட்டினாலோ உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் ரொம்பச் சந்தோஷப்படுவீர்கள், அப்படிச் சந்தோஷப்படவும் வேண்டும்! ஏனென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறாரோ, அதைத்தான் செய்கிறீர்கள்; இயேசுவும் அப்படித்தான் செய்தார்.—சங். 40:8; நீதி. 27:11.

13. உலக லட்சியங்களுக்காக உழைப்பதைவிட யெகோவாவுக்குச் சேவை செய்வது நல்லது என்று எப்படிச் சொல்லலாம்?

13 யெகோவாவுக்குச் சேவை செய்வதில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறீர்களா? அப்படியென்றால், சந்தோஷத்தையும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் தருகிற வேலையைச் செய்கிறீர்கள்! “நம் எஜமானுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாதென்று அறிந்து, உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும் எந்நேரமும் நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாகவும் இருங்கள்” என்று பவுல் சொன்னார். (1 கொ. 15:58) ஆனால், பணம் சம்பாதிப்பது அல்லது பேர்புகழைத் தேடிப்போவது போன்ற உலக லட்சியங்களுக்காக மக்கள் உழைக்கும்போது, அவர்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைப்பதில்லை. வெற்றி கிடைத்தாலும் அடிக்கடி வெறுமை உணர்வுதான் அவர்களை வாட்டுகிறது. (லூக். 9:25) சாலொமோன் ராஜாவின் அனுபவம் இதைத்தான் காட்டுகிறது.—ரோ. 15:4.

14. சாலொமோனுடைய அனுபவத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?

14 இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பணத்திலும் அதிகாரத்திலும் கொடிகட்டிப் பறந்தவர்களில் சாலொமோனும் ஒருவர்! ஒருசில விஷயங்களை அவர் செய்து பார்த்தார். “சந்தோஷமாகப் பொழுது போக்கலாம், அதனால் என்ன பயன் கிடைக்கிறதென்று பார்க்கலாம்” என்று தனக்குள் அவர் சொல்லிக்கொண்டார். (பிர. 2:1-10) அதனால், மாடமாளிகைகளைக் கட்டினார், கண்களைக் கவருகிற தோட்டங்களையும் பூங்காக்களையும் அமைத்தார். அதோடு, தான் ஆசைப்பட்டதையெல்லாம் செய்தார். ஆனால், அவருக்குத் திருப்தியும் சந்தோஷமும் கிடைத்ததா? தான் செய்த எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்த சாலொமோன், “எல்லாமே வீண்தான்” என்று சொன்னார். அதோடு, “உண்மையிலேயே பிரயோஜனமான எதுவுமே . . . இல்லை” என்றார். (பிர. 2:11) சாலொமோன் கற்றுக்கொண்ட பாடத்தை நீங்களும் கற்றுக்கொள்வீர்களா?

15. சங்கீதம் 32:8 சொல்கிறபடி விசுவாசம் ஏன் தேவை, அது உங்களுக்கு எப்படி உதவும்?

15 தவறுகள் செய்து, அதனால் மோசமான விளைவுகளை அனுபவித்த பிறகுதான் சிலர் பாடம் கற்றுக்கொள்கிறார்கள். உங்களுக்கு இப்படி நடக்க யெகோவா விரும்புவதில்லை. தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். இப்படிச் செய்வதற்கு விசுவாசம் தேவை என்பது உண்மைதான். ஆனால், அப்படி விசுவாசத்தால் தூண்டப்பட்டு உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளை நினைத்து நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள். ‘தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பை’ யெகோவாவும் ஒருபோதும் மறக்க மாட்டார். (எபி. 6:10) அதனால், பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்காக கடினமாக முயற்சி செய்யுங்கள். அப்போது, நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்; நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் பரலோகத் தகப்பன் ஆசைப்படுகிறார் என்பதையும் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.

கடவுள் உங்களுக்கு உண்மையான சுதந்திரத்தைத் தருகிறார்

16. சுதந்திரத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும், அதை ஏன் ஞானமாகப் பயன்படுத்த வேண்டும்?

16 “யெகோவாவின் சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரம் உண்டு” என்று பவுல் எழுதினார். (2 கொ. 3:17) யெகோவா சுதந்திரத்தை விரும்புகிறார், சுதந்திரத்தை விரும்புகிற விதத்தில்தான் உங்களையும் படைத்திருக்கிறார். ஆனால், அதை நீங்கள் ஞானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்; அது உங்களைப் பாதுகாக்கும். உங்கள் நண்பர்களில் சிலர் ஆபாசத்தைப் பார்க்கலாம், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழலாம், உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகளை விளையாடலாம், போதைப் பொருள்களையோ மதுபானத்தையோ துஷ்பிரயோகம் செய்யலாம். பார்ப்பதற்கு இவையெல்லாம் ஜாலியாக இருக்கும், சந்தோஷத்தைத் தருவதுபோல் தோன்றும். ஆனால், பெரும்பாலும் மோசமான விளைவுகளில்தான் போய் முடியும். அதாவது, நோய் வந்துவிடலாம், கெட்ட விஷயங்களுக்கு அடிமையாகிவிடலாம், அல்லது செத்துக்கூட போய்விடலாம். (கலா. 6:7, 8) இந்தப் பழக்கங்களில் ஈடுபடுகிற இளைஞர்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையான சுதந்திரம் கிடையாது!—தீத். 3:3.

17, 18. (அ) கடவுளுக்குக் கீழ்ப்படிவது உண்மையான சுதந்திரத்தைத் தருகிறது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இன்றிருக்கும் மனிதர்களைவிட, ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும் எந்த விதத்தில் அதிக சுதந்திரத்தை அனுபவித்தார்கள்?

17 யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது நன்மையைத் தருகிறது. அப்படிக் கீழ்ப்படியும்போது, உடல்நிலையும் நன்றாக இருக்கும்; உண்மையான சுதந்திரமும் கிடைக்கும். (சங். 19:7-11) சுதந்திரத்தை ஞானமாகப் பயன்படுத்தும்போது, அதாவது கடவுளுடைய பரிபூரணமான சட்டங்களையும் நியமங்களையும் பின்பற்ற முடிவெடுக்கும்போது, நீங்கள் பொறுப்பானவர்கள் என்பதை, கடவுளுக்கும் உங்கள் அப்பா அம்மாவுக்கும் நிரூபித்துக் காட்டுகிறீர்கள். அப்போது, உங்கள் அப்பா அம்மா உங்களை நம்புவதற்கும் அதிக சுதந்திரத்தைத் தருவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. சீக்கிரத்தில் தன்னுடைய உண்மை ஊழியர்களுக்கு பரிபூரண சுதந்திரத்தைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். அதை ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலை’ என்று பைபிள் சொல்கிறது.—ரோ. 8:21.

18 இதுபோன்ற சுதந்திரத்தைத்தான் ஆதாமும் ஏவாளும் அனுபவித்தார்கள். ஏதேன் தோட்டத்தில், ஒரே ஒரு விஷயத்தைத்தான் செய்ய வேண்டாம் என்று கடவுள் சொன்னார். குறிப்பிட்ட ஒரு மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது என்று அவர் சொன்னார். (ஆதி. 2:9, 17) அந்தச் சட்டத்தைக் கொடுத்ததன் மூலம் அநியாயமாகவும் ரொம்பவே கறாராகவும் கடவுள் நடந்துகொண்டாரா? கிடையவே கிடையாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், மனிதர்கள் எவ்வளவு சட்டங்களைப் போடுகிறார்கள்! அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எந்தளவு மக்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்! ஆனால், ஆதாம் ஏவாளுக்கு ஒரே ஒரு சட்டத்தைத்தான் யெகோவா கொடுத்தார்!

19. சுதந்திரமாக இருப்பதற்கு நமக்கு உதவுகிற எந்த விஷயத்தை யெகோவாவும் இயேசுவும் நமக்குச் சொல்லித்தருகிறார்கள்?

19 யெகோவா நம்மை நடத்தும் விதத்தில் ரொம்ப ஞானமாக நடந்துகொள்கிறார். சட்டங்களைக் கொடுத்து நம்மைத் திணறடிக்காமல், அன்பின் சட்டத்துக்குக் கீழ்ப்படியும்படி பொறுமையாகச் சொல்லித்தருகிறார். அவருடைய நியமங்களின்படி வாழவும், கெட்டதை வெறுக்கவும் சொல்லித்தருகிறார். (ரோ. 12:9) அவருடைய மகன் இயேசு, மக்கள் ஏன் கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, மலைப் பிரசங்கத்தின் மூலம் உதவியிருக்கிறார். (மத். 5:27, 28) அதோடு, புதிய உலகத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக, நல்லது கெட்டதை அவர் எப்படிப் பார்க்கிறாரோ, அதேபோல் பார்ப்பதற்கு நமக்குத் தொடர்ந்து சொல்லித்தருவார். (எபி. 1:9) நம்முடைய மனதையும் உடலையும் பரிபூரணமாக்குவார். கெட்ட காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்கூட தோன்றாத அந்தக் காலத்தை... பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் வரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லாத அந்தக் காலத்தை... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! கடைசியில், யெகோவா வாக்குக் கொடுக்கிற ‘மகிமையான விடுதலையை’ நாம் அனுபவிப்போம்.

20. (அ) தனக்கிருக்கும் சுதந்திரத்தை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார்? (ஆ) நீங்கள் எப்படி அவரைப் போல் நடந்துகொள்ளலாம்?

20 இருந்தாலும், புதிய உலகத்தில், நம்முடைய சுதந்திரத்துக்கு வரம்புகள் இருக்கும். எப்படி? கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பால் தூண்டப்பட்டுதான் நம்முடைய சுதந்திரத்தைப் பயன்படுத்துவோம். அப்படி அன்பால் வழிநடத்தப்படும்போது, நாம் யெகோவாவைப் போல் நடந்துகொள்வோம். யெகோவாவுக்கு எல்லையில்லாத சுதந்திரம் இருந்தாலும், நம்மை நடத்தும் விதம் உட்பட எல்லாவற்றையுமே அன்பால் தூண்டப்பட்டுதான் செய்கிறார். (1 யோ. 4:7, 8) அதனால், யெகோவாவைப் போல் நடந்துகொள்ளும்போதுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்போம் என்று சொல்வது நியாயமாக இருக்கிறது, இல்லையா?

21. (அ) யெகோவாவைப் பற்றித் தாவீது எப்படி உணர்ந்தார்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

21 யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கும் நல்ல விஷயங்கள் எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருக்கிறீர்களா? உங்களுக்கு அவர் ஆன்மீக உணவு கொடுக்கிறார், நல்ல நண்பர்களைத் தருகிறார், நல்ல இலக்குகளை வைக்க உதவுகிறார், எதிர்காலத்தில் பரிபூரண சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதோடு, வேறுசில அருமையான பரிசுகளையும் தந்திருக்கிறார். (சங். 103:5) சங்கீதம் 16:11-ல் தாவீது ஜெபம் செய்ததைப் போலவே ஒருவேளை நீங்களும் உணரலாம்: “வாழ்வின் பாதையை நீங்கள் எனக்குக் காட்டுகிறீர்கள். உங்களுடைய சன்னிதியில் அளவில்லாத சந்தோஷம் உண்டு. உங்களுடைய வலது பக்கத்தில் முடிவில்லாத மகிழ்ச்சி உண்டு.” அடுத்த கட்டுரையில், 16-ம் சங்கீதத்தில் இருக்கிற விலைமதிக்க முடியாத வேறுசில சத்தியங்களைப் பற்றிப் பார்க்கலாம். மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள அது உதவும்.