Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.

நம்மீது கடவுள் அனுதாபம் காட்டுகிறார் என்பதை எந்த வசனங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்?

எகிப்தில் இஸ்ரவேலர்கள் கொத்தடிமைகளாகக் கஷ்டப்பட்டபோது, கடவுளுக்கு அவர்களுடைய வேதனைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அதை அவரால் உணரவும் முடிந்தது. (யாத். 3:7; ஏசா. 63:9) நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நம்மால் அனுதாபத்தைக் காட்ட முடியும். கடவுளுடைய அன்பைப் பெறத் தகுதியில்லாதவர்களாக நாம் உணர்ந்தாலும், அவர் நம்மேல் அனுதாபம் காட்டுகிறார்.—wp18.3, பக்கங்கள் 8-9.

மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களைத் தாழ்வாகப் பார்ப்பது தவறு என்பதை இயேசு எப்படிப் புரியவைத்தார்?

இயேசுவின் காலத்திலிருந்த யூதர்கள் நிறைய பேரின் மனதில் தப்பெண்ணம் வேரூன்றியிருந்தது. மனத்தாழ்மையாக இருக்க வேண்டுமென்று கிறிஸ்து வலியுறுத்தினார். அதோடு, தங்களுடைய இனத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வது தவறு என்பதைத் தெளிவுபடுத்தினார். ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாகப் பார்க்க வேண்டுமென்று தன் சீஷர்களிடம் சொன்னார்.—w18.06, பக்கங்கள் 9-10.

வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழைய மோசேயைக் கடவுள் அனுமதிக்காததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

யெகோவாவின் நெருங்கிய நண்பராக மோசே இருந்தார். (உபா. 34:10) வனாந்தரத்தின் வழியாக இஸ்ரவேலர்கள் செய்த 40 வருஷ பயணத்தின் முடிவில், தண்ணீர் இல்லையென்று சொல்லி இரண்டாவது தடவையாக அவர்கள் குறைசொன்னார்கள். கற்பாறையைப் பார்த்துப் பேசும்படி மோசேயிடம் கடவுள் சொன்னார். ஆனால், கற்பாறையை அவர் அடித்தார். யெகோவா கொடுத்த வழிநடத்துதலுக்கு மோசே கீழ்ப்படியாததால் அல்லது அந்த அற்புதத்திற்கான மகிமையை யெகோவாவுக்குக் கொடுக்காததால், அவர்மீது யெகோவாவுக்குப் பயங்கரக் கோபம் வந்திருக்கலாம். (எண். 20:6-12) யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதும் அவருக்கு மகிமை சேர்ப்பதும் எவ்வளவு முக்கியம் என்ற பாடத்தை இது சொல்லித்தருகிறது.—w18.07, பக்கங்கள் 13-14.

வெளித்தோற்றத்தை வைத்து மற்றவர்களை எடைபோட்டால், சுலபமாக நாம் தவறு செய்துவிடுவோம் என்று எப்படிச் சொல்லலாம்?

மூன்று விஷயங்களின் அடிப்படையில் மக்கள் மற்றவர்களை எடைபோடுகிறார்கள். (1) இனம் அல்லது நாடு, (2) பணம், (3) வயது. கடவுளைப் போல, நாமும் மற்றவர்களை பாரபட்சம் இல்லாமல் நடத்த முயற்சி செய்வது ரொம்ப முக்கியம். (அப். 10:34, 35)—w18.08, பக்கங்கள் 8-12.

வயதான கிறிஸ்தவர்கள் எந்தெந்த வழிகளில் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம்?

வயதான கிறிஸ்தவர்களுடைய நியமிப்பில் மாற்றம் ஏற்பட்டாலும், கடவுள் அவர்களைத் தொடர்ந்து உயர்வாக மதிக்கிறார். அவர்களால் மற்றவர்களுக்கு உதவ முடியும். உதாரணத்துக்கு, பிரஸ்தாபிகளின் துணை சத்தியத்தில் இல்லாதபோது அவர்களுக்கு உதவலாம். செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவலாம், பைபிள் படிப்புகளை நடத்தலாம், எல்லா விதமான ஊழியத்தையும் செய்யலாம்.—w18.09, பக்கங்கள் 8-11.

கற்பிப்பதற்கான கருவிகளில் எவையெல்லாம் இருக்கின்றன?

கான்டாக்ட் கார்டுகள், கூட்டங்களுக்கான அழைப்பிதழ்கள், நன்றாக வடிவமைக்கப்பட்ட எட்டு துண்டுப்பிரதிகள், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கின்றன. அதோடு, சில சிற்றேடுகளும், பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிற இரண்டு புத்தகங்களும், பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோ உட்பட நான்கு வீடியோக்களும் இருக்கின்றன.—w18.10, பக்கம் 16.

நீதிமொழிகள் 23:23 சொல்வதுபோல், கிறிஸ்தவர்கள் எப்படி ‘சத்தியத்தை வாங்கலாம்’?

சத்தியத்தைக் கற்றுக்கொள்ள நாம் பணம் தர வேண்டியதில்லை. இருந்தாலும், அதைக் கற்றுக்கொள்ள நம் பங்கில் முயற்சி தேவை; நேரம் செலவிடுவதும் அவசியம்—w18.11, பக்கம் 4.

தன்னுடைய மனைவி கோமரை ஓசியா நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஒன்றுக்கும் அதிகமான தடவை கோமர் முறைகேடான உறவில் ஈடுபட்டாள். ஆனாலும், ஓசியா அவளை மன்னித்து அவளோடு சேர்ந்துவாழ்ந்தார். கல்யாணமான ஒரு கிறிஸ்தவர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டால், தவறு செய்யாத அவருடைய துணை அவரை மன்னிக்கலாம். தவறு செய்யாத துணை, தனக்குத் துரோகம் செய்த துணையோடு உடலுறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தால், அவரை அவர் மன்னித்துவிட்டார் என்று அர்த்தம். அதற்குப் பிறகு, விவாகரத்து செய்வதற்கு எந்த வேதப்பூர்வமான காரணமும் இல்லை.—w18.12, பக்கம் 13.