Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நீதிமான்கள் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவார்கள்’

‘நீதிமான்கள் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவார்கள்’

டயானா என்ற சகோதரிக்கு 80 வயதுக்கும் மேல் ஆகிறது. கடந்த சில வருஷங்களாக கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்து அவரை வாட்டியெடுத்தது. அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட அவருடைய கணவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்; கடைசியில் இறந்துவிட்டார். அவருடைய இரண்டு மகன்களும் இறந்துவிட்டார்கள். அவருக்கும் மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டது. வேதனைக்கு மேல் வேதனை அவரைத் தாக்கினாலும், கூட்டங்களிலும் ஊழியத்திலும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார்; அப்படி அவர் சந்தோஷமாக இருப்பதை சகோதர சகோதரிகளால் எப்போதுமே பார்க்க முடிகிறது.

ஜான் என்ற சகோதரர் 43 வருஷங்களுக்கும் மேல் பயணக் கண்காணியாகச் சேவை செய்துவந்தார். அந்தச் சேவையை அவர் ரொம்ப நேசித்ததால், வேறு எந்தச் சேவையையும் அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உடல்நிலை மோசமானதால், அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால், தொடர்ந்து பயணக் கண்காணியாக அவரால் சேவை செய்ய முடியவில்லை. இருந்தாலும், அவர் தன்னுடைய சந்தோஷத்தை இழக்கவில்லை. நன்றாகப் பழக்கப்பட்ட சகோதரர்கள் அவரை மாநாடுகளில் பார்க்கும்போது, அவர் எப்போதும் போல் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

டயானாவாலும் ஜானாலும் எப்படி எப்போதும் போல் சந்தோஷமாக இருக்க முடிகிறது? வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும்? ரொம்பவே நேசித்த ஒரு நியமிப்பை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை வரும்போதும், ஒருவரால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில் இதுதான்: ‘நீதிமான்கள் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவார்கள்!’ (சங். 64:10) எது நமக்கு நிரந்தர சந்தோஷத்தைத் தரும், எது தராது என்பதைத் தெரிந்துகொண்டால், இந்த வசனத்தில் இருக்கும் உண்மையை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

தற்காலிகச் சந்தோஷத்தைத் தருபவை

சில விஷயங்கள், பெரும்பாலும் எல்லா சமயத்திலும் நமக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. உதாரணத்துக்கு, காதலிக்கும் இரண்டு பேர் கல்யாணம் செய்துகொள்ளும்போது அவர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அதேபோல், குழந்தையைப் பெற்றெடுப்பது... யெகோவாவின் சேவையில் ஒரு புதிய நியமிப்பைப் பெறுவது... போன்றவை நமக்கு நிச்சயம் சந்தோஷத்தைத் தரும். ஏனென்றால், இவையெல்லாம் யெகோவாவிடமிருந்து வரும் பரிசுகள்! அவர் தான் திருமணத்தை ஆரம்பித்து வைத்தார், அவர் தான் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறனைக் கொடுத்தார், அவர்தான் தன்னுடைய அமைப்பில் சேவை செய்யும் பாக்கியத்தையும் கொடுத்திருக்கிறார்.—ஆதி. 2:18, 22; சங். 127:3; 1 தீ. 3:1.

இருந்தாலும், நம்முடைய சந்தோஷம் தற்காலிகமானதாக ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, கணவனோ மனைவியோ உண்மையில்லாமல் நடந்துகொள்ளும்போது அல்லது இறந்துவிடும்போது, ஒருவருடைய சந்தோஷம் பறிபோகிறது. (எசே. 24:18; ஓசி. 3:1) பிள்ளைகள், கடவுளுக்கும் அப்பா அம்மாவுக்கும் கீழ்ப்படியாமல் போகலாம்; ஒருவேளை சபைநீக்கம்கூட செய்யப்படலாம். உதாரணத்துக்கு, சாமுவேலின் மகன்கள், யெகோவாவுக்குப் பிடித்தமாதிரி அவருக்குச் சேவை செய்யவில்லை. இப்போது தாவீதுடைய விஷயத்துக்கு வரலாம். பத்சேபாளுடன் அவர் பாவம் செய்ததால், அவருடைய குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் வந்தன. (1 சா. 8:1-3; 2 சா. 12:11) இதுபோன்ற விஷயங்கள், சந்தோஷத்தைத் தருவதில்லை; வலியையும் வேதனையையும்தான் தருகின்றன.

சிலசமயங்களில் வியாதி நம்மைத் தாக்கலாம், குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியிருக்கலாம் அல்லது அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அதனால், நம்முடைய நியமிப்பைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போகலாம். இப்படி, தங்களுடைய நியமிப்பைத் தொடர்ந்து செய்ய முடியாமல்போன நிறைய பேர், அந்த நியமிப்பில் அனுபவித்த சந்தோஷம் இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

நமக்குச் சந்தோஷத்தைத் தருகிற விஷயங்கள் எப்போதுமே நிலையானது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அப்படியென்றால், கஷ்டமான சூழ்நிலைகள் மத்தியிலும் நிரந்தர சந்தோஷம் சாத்தியமா? நிச்சயம் அது சாத்தியம்தான் என்பதை சாமுவேல், தாவீது மற்றும் வேறுசில ஊழியர்களுடைய அனுபவம் காட்டுகிறது. இவர்கள் எல்லாரும் கஷ்டங்களை அனுபவித்தார்கள்; ஆனால், சந்தோஷத்தை இழக்கவில்லை.

நிரந்தர சந்தோஷத்தைத் தருபவை

உண்மையான சந்தோஷம் என்றால் என்னவென்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. பூமிக்கு வருவதற்கு முன்பு அவர் யெகோவாவுக்குமுன் ‘எப்போதும் சந்தோஷமாக இருந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 8:30) ஆனால், பூமிக்கு வந்த பின்பு, சிலசமயங்களில் பயங்கரக் கஷ்டங்களை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், தன் தகப்பனுடைய விருப்பத்தைச் செய்வது அவருக்குச் சந்தோஷத்தைத் தந்தது. (யோவா. 4:34) வேதனை நிறைந்த அவருடைய கடைசி மணித்துளிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? “தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக . . . மரக் கம்பத்தில் வேதனைகளைச் சகித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 12:2) அதனால், உண்மையான சந்தோஷத்தைப் பற்றி இயேசு சொன்ன இரண்டு விஷயங்களிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

ஒருசமயம், இயேசுவின் 70 சீஷர்கள், ஊழியத்தை முடித்துவிட்டு சந்தோஷத்தோடு திரும்பி வந்தார்கள். அவர்கள் செய்த எல்லா விஷயங்களையும் நினைத்து, முக்கியமாக, பேய்களைத் துரத்தியதை நினைத்து, ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். ஆனால் இயேசு அவர்களிடம், “பேய்கள் உங்களுக்கு அடங்கிவிடுவதை நினைத்து சந்தோஷப்படாதீர்கள்; உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்தே சந்தோஷப்படுங்கள்” என்று சொன்னார். (லூக். 10:1-9, 17, 20) இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதுதான் மிக மிக முக்கியமானது; எந்தவொரு விசேஷ நியமிப்பையும்விட இதுதான் அதிக சந்தோஷத்தைத் தருகிறது.

இன்னொரு சமயம், இயேசு ஒரு பெரிய கூட்டத்திடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து அசந்துபோன ஒரு யூதப் பெண், இயேசுவின் தாய் சந்தோஷமானவள் என்று அவரிடம் சொன்னாள். ஆனால் இயேசு, “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்” என்று சொன்னார். (லூக். 11:27, 28) பிள்ளைகள் நல்ல விஷயங்களைச் செய்யும்போது, அவர்களை நினைத்து பெற்றோர்கள் பெருமைப்படுவார்கள்; அது அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தரும். ஆனால், எது நிரந்தர சந்தோஷத்தைத் தரும்? யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதும், அவரோடு ஒரு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வதும்தான்!

நமக்கு யெகோவாவின் அங்கீகாரம் இருக்கிறது என்பதை உணரும்போது, நம்முடைய மனதில் சந்தோஷம் ஊற்றெடுக்கிறது. சோதனைகள் நமக்குச் சந்தோஷத்தைத் தருவதில்லை என்றாலும், யெகோவா நம்மை அங்கீகரிக்கிறார் என்ற உணர்வை அந்தச் சோதனைகளால் எடுத்துப்போட முடியாது. சொல்லப்போனால், சோதனைகள் மத்தியிலும் நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய சந்தோஷம் இன்னும் அதிகமாகும். (ரோ. 5:3-5) அதோடு, தன்மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு யெகோவா தன்னுடைய சக்தியைத் தருகிறார்; இந்தச் சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்றுதான் சந்தோஷம்! (கலா. 5:22) ‘நீதிமான்கள் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவார்கள்’ என்று சங்கீதம் 64:10 ஏன் சொல்கிறது என்று இப்போது புரிகிறது, இல்லையா?

தொடர்ந்து சந்தோஷத்தோடு இருக்க ஜான் என்ற சகோதரருக்கு எது உதவியது?

கஷ்டங்களை அனுபவித்தபோதிலும் டயானாவும் ஜானும் ஏன் சந்தோஷத்தை இழக்கவில்லை என்பதும் இப்போது புரிகிறது, இல்லையா? டயானா இப்படிச் சொல்கிறார்: “ஒரு குழந்தை எப்படி அப்பா அம்மாவோட அரவணைப்புல இருக்கோ, அதே மாதிரி நான் யெகோவாவோட அரவணைப்புல இருக்கேன்.” அதோடு, “சிரிச்ச முகத்தோட தொடர்ந்து ஊழியம் செய்றதுக்கு தேவையான சக்தியை கொடுத்து அவர் என்னை ஆசீர்வதிச்சிருக்குறாரு” என்றும் அவர் சொல்கிறார். ஜானைப் பற்றி என்ன சொல்லலாம்? தன்னுடைய நியமிப்பைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போனபோதும் அவரால் எப்படிச் சந்தோஷமாகவும், ஊழியத்தில் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிந்தது? “ஊழியப் பயிற்சி பள்ளியில போதகரா சேவை செய்ற நியமிப்பு 1998-ல எனக்கு கிடைச்சது. அதுக்கு அப்புறம், முன்னவிட நான் அதிகமாக படிக்க ஆரம்பிச்சேன்” என்று அவர் சொல்கிறார். யெகோவா கொடுக்கும் எந்தவொரு நியமிப்பையும் ஏற்றுக்கொள்ள, தானும் தன்னுடைய மனைவியும் தயாராக இருந்ததாகவும், அதனால் மாற்றங்கள் செய்வது சுலபமாக இருந்ததாகவும் அவர் சொல்கிறார். அதுவும், “எந்த மனவருத்தமும் இல்லாம நாங்க மாற்றங்கள செஞ்சோம்” என்று சொல்கிறார்.

சங்கீதம் 64:10 சொல்வது எவ்வளவு உண்மை என்பதை நிறைய பேர் ருசித்துப் பார்த்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, அமெரிக்க கிளை அலுவலகத்தில் 30 வருஷங்களுக்கும் மேல் சேவை செய்துவந்த ஒரு தம்பதியைப் பற்றிப் பார்க்கலாம். அவர்கள் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். “நீங்க நேசிக்கிற ஒண்ணு இல்லாம போறப்போ, வருத்தப்படறது இயல்புதான்” என்று அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், “அதுக்காக எப்ப பார்த்தாலும் அத நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்க முடியாது” என்று அவர்கள் சொன்னார்கள். புதிய நியமிப்புக் கிடைத்தவுடன், உடனடியாகச் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். “நாங்க குறிப்பிட்ட சில விஷயங்கள சொல்லி யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம். எங்க ஜெபத்துக்கு பதில் கிடைச்சத பார்த்தப்போ, எங்களுக்கு உற்சாகமா இருந்துச்சு; சந்தோஷமா இருந்துச்சு. நாங்க சபைக்குப் போய் கொஞ்ச நாள்லயே மத்த சகோதர சகோதரிகள் பயனியர் ஊழியத்தை ஆரம்பிச்சாங்க. நல்லா முன்னேற்றம் செய்ற ரெண்டு பைபிள் படிப்புகள கொடுத்து யெகோவா எங்கள ஆசீர்வதிச்சாரு” என்று அவர்கள் சொன்னார்கள்.

“என்றென்றும் அனுபவித்து மகிழுங்கள்”

எப்போதுமே சந்தோஷமாக இருப்பது சாத்தியம் இல்லை என்பது உண்மைதான். சிலசமயங்களில் நாம் வருத்தமாக இருப்போம். ஆனால், சங்கீதம் 64:10-லிருக்கிற வார்த்தைகளைச் சொல்லி யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். நாம் சோர்வாக இருக்கும்போதுகூட ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கலாம். அதாவது, நாம் உண்மையாக இருக்கும்வரை, எப்பேர்ப்பட்ட வேதனையை நாம் அனுபவித்தாலும் சரி, ‘யெகோவாவை நினைத்து சந்தோஷப்பட’ முடியும்! “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” படைக்கப்போவதாக யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதி நிறைவேறப்போகிற காலத்துக்காகவும் நாம் காத்திருக்கலாம். அப்போது, எல்லாரும் பரிபூரணமானவர்களாக ஆவோம்; யெகோவா செய்யப்போகிற எல்லாவற்றையும் ‘என்றென்றும் அனுபவித்து மகிழ்வோம்.’—ஏசா. 65:17, 18.

யெகோவாவின் வாக்குறுதியில் என்ன அடங்கியிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! பரிபூரண ஆரோக்கியம் நமக்கு இருக்கும்; ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியோடு படுக்கையிலிருந்து எழுவோம். கடந்த கால அனுபவங்கள் எதுவும் நம்மை சோகத்தில் மூழ்கடிக் காது; அவற்றால் ஏற்பட்ட வலியை இனிமேலும் நாம் சுமக்க வேண்டியிருக்காது. “முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது” என்று யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். 12 வயது சிறுமியை இயேசு உயிரோடு எழுப்பியபோது, அவளுடைய அப்பா அம்மா “அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை” என்று பைபிள் சொல்கிறது. (மாற். 5:42) இறந்துபோன நம்முடைய அன்பானவர்கள் உயிரோடு எழுந்து வரும்போது, நம்முடைய சந்தோஷத்துக்கும் அளவே இருக்காது. கடைசியில், இந்த உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரும் உண்மையான அர்த்தத்தில் நீதிமான்களாக இருப்பார்கள்; ‘யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவார்கள்.’