Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“

”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“

“நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்.”—லூக். 23:43.

பாடல்கள்: 19, 134

1, 2. பூஞ்சோலை எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் சொல்லலாம்?

கொரியாவில் இருக்கிற சியோல் நகரத்தில் நடந்த ஒரு மாநாட்டுக்கு, நிறைய நாடுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஸ்டேடியத்தை விட்டுப் புறப்பட்டபோது, உள்ளூர் சகோதரர்கள் அவர்களைச் சுற்றி நின்றுகொண்டு, “பூஞ்சோலையில் சந்திக்கலாம்” என்று சொல்லி, அவர்களை வழியனுப்பிவைத்தார்கள். மனதைத் தொடும் ஒரு காட்சியாக அது இருந்தது! எந்தப் பூஞ்சோலையைப் பற்றி அவர்கள் பேசியிருப்பார்கள்?

2 காட்டுப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பள்ளத்தாக்கை மக்கள் பார்க்கும்போது, “ஆ! இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு! பூஞ்சோலைனா இப்படித்தான் இருக்கணும்!” என்று சொல்லலாம். பூஞ்சோலை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒருநாள் இந்தப் பூமி முழுவதும் பூஞ்சோலையாக மாறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

3. பூஞ்சோலையைப் பற்றி பைபிளில் முதன்முதலில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

3 ஆரம்பத்தில் இந்தப் பூமியில் ஒரு பூஞ்சோலை இருந்தது என்றும், எதிர்காலத்தில் இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும் என்றும் பைபிள் சொல்கிறது. பூஞ்சோலையைப் பற்றி பைபிளில் முதன்முதலில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? முதல் புத்தகத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது! உதாரணத்துக்கு, ஒரு கத்தோலிக்க பைபிள் (TNBCLC), ஆதியாகமம் 2:8-ஐ இப்படி மொழிபெயர்க்கிறது: “ஆண்டவராகிய கடவுள் ஆதியிலே ஓர் இன்ப வனத்தை நட்டிருந்தார். தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) எபிரெய மொழியில் சொல்லப்பட்டிருக்கும் ஏதேன் தோட்டம் என்ற வார்த்தை தான் இங்கே ‘இன்ப வனம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஏதேன் என்றால் ‘இன்பம்’ என்று அர்த்தம். அந்தத் தோட்டம் உண்மையிலேயே ஓர் இன்பமான, ரம்மியமான இடமாக இருந்தது. அழகு நிறைந்த ஒரு பூஞ்சோலையாக அது இருந்தது! சாப்பிடுவதற்கு அங்கே ஏராளமான உணவு இருந்தது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே சமாதானம் நிலவியது.—ஆதி. 1:29-31.

4. ஏதேன் தோட்டத்தை ஒரு பூஞ்சோலை என்று சொல்வது சரியா? விளக்குங்கள்.

4 “தோட்டம்” என்பதற்கான எபிரெய வார்த்தை, கிரேக்க மொழியில் பரதீஸாஸ் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மெக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் ஸைக்ளோப்பீடியா, இந்த வார்த்தையைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “கிரேக்க மொழி பேசும் ஒரு சுற்றுலாப் பயணி இந்த வார்த்தையைக் கேட்டால், அழகான... விசாலமான... எந்த ஆபத்தும் வராதபடி நன்றாகப் பாதுகாக்கப்பட்ட... விதவிதமான பழங்களைக் கொடுக்கும் மரங்கள் நிறைந்த... தெளிந்த நீரோடைகள் ஓடுகிற... ஆட்டு மந்தையும் மான் கூட்டமும் மேய்கிற பச்சைப்பசேலென்ற ஆற்றங்கரையைக் கொண்ட... ஓர் அழகான தோட்டம்தான் அவருடைய மனதுக்கு வரும்.”—ஆதி. 2:15, 16-ஐ ஒப்பிடுங்கள்.

5, 6. ஆதாமும் ஏவாளும் பூஞ்சோலையில் வாழும் பாக்கியத்தை ஏன் இழந்தார்கள், சிலர் என்ன யோசிக்கலாம்?

5 அப்படிப்பட்ட ஒரு தோட்டத்தில்தான், அதாவது ஒரு பூஞ்சோலையில்தான், ஆதாமையும் ஏவாளையும் யெகோவா குடிவைத்தார். ஆனால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால், அங்கே வாழும் பாக்கியத்தை இழந்துவிட்டார்கள்; தங்கள் பிள்ளைகளும் அதில் வாழ முடியாதபடி செய்துவிட்டார்கள். (ஆதி. 3:23, 24) மனிதர்கள் அந்தத் தோட்டத்தில் தொடர்ந்து குடியில்லாதபோதிலும், நோவாவின் காலத்தில் வந்த பெரிய வெள்ளம்வரை அது இருந்ததாகத் தெரிகிறது.

6 ‘எதிர்காலத்துல பூமி பூஞ்சோலையா மாறுமா?’ என்று சிலர் யோசிக்கலாம். அதைப் பற்றி அத்தாட்சிகள் என்ன காட்டுகின்றன? உங்கள் அன்பானவர்களோடு சேர்ந்து பூஞ்சோலையில் வாழும் நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், எதன் அடிப்படையில் அப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் ஏன் அப்படி நம்புகிறீர்கள் என்பதை விளக்க முடியுமா?

எதிர்காலத்தில் ஒரு பூஞ்சோலை—அத்தாட்சிகள்!

7, 8. (அ) ஆபிரகாமிடம் கடவுள் என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்? (ஆ) கடவுள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்டபோது ஆபிரகாம் எதைப் பற்றி நினைத்திருப்பார்?

7 பூஞ்சோலை சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள நாம் பைபிளைத்தான் புரட்டிப் பார்க்க வேண்டும். ஏனென்றால், ஆரம்பத்தில் இருந்த பூஞ்சோலையை உருவாக்கியவரான யெகோவா தந்த புத்தகம் அது! தன்னுடைய நண்பரான ஆபிரகாமிடம் கடவுள் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். ஆபிரகாமின் ‘சந்ததியை கடற்கரை மணலைப் போல பெருகப் பண்ணுவதாக’ அவர் சொன்னார். பிறகு, “நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற முக்கியமான வாக்குறுதியைக் கொடுத்தார். (ஆதி. 22:17, 18) பிற்பாடு, ஆபிரகாமின் மகனிடமும் பேரனிடமும் அதே வாக்குறுதியைக் கொடுத்தார்.ஆதியாகமம் 26:4-ஐயும், 28:14-ஐயும் வாசியுங்கள்.

8 மனிதர்கள் தங்களுக்குரிய கடைசி பரிசை பரலோகத்தில் இருக்கும் ஒரு பூஞ்சோலையில் பெறுவார்கள் என்று ஆபிரகாம் நம்பினாரா? அப்படி நம்பியதாக பைபிளில் சொல்லப்படவில்லை. “பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும்” ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கடவுள் வாக்குக் கொடுத்தபோது, அந்த ஆசீர்வாதம் பூமியில்தான் கிடைக்கும் என்று ஆபிரகாம் நினைத்திருப்பார். பூமி மறுபடியும் பூஞ்சோலையாக மாறும் என்று நம்புவதற்கு இந்த ஒரு அத்தாட்சி மட்டும்தான் இருக்கிறதா?

9, 10. பூமி மறுபடியும் பூஞ்சோலையாக மாறும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு, பிற்பாடு கொடுக்கப்பட்ட என்னென்ன வாக்குறுதிகள் அத்தாட்சியாக இருக்கின்றன?

9 ‘பொல்லாதவர்கள் யாருமே இல்லாத’ ஓர் எதிர்காலத்தைப் பற்றி எழுதும்படி ஆபிரகாமின் சந்ததியாரில் ஒருவரான தாவீதைக் கடவுள் தூண்டினார். (சங். 37:1, 2, 10) பொல்லாதவர்களுக்குப் பதிலாக, “தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்” என்று தாவீது முன்கூட்டியே சொன்னார். அதோடு, “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்றும் சொன்னார். (சங். 37:11, 29; 2 சா. 23:2) கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய ஆசைப்பட்டவர்கள்மீது இந்த வாக்குறுதி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? நீதிமான்கள் மட்டுமே வாழும் காலம் கண்டிப்பாக வரும் என்றும், ஏதேன் தோட்டத்தைப் போல இந்தப் பூமி மறுபடியும் பூஞ்சோலையாக மாறும் என்றும் நம்புவதற்கு அவர்களுக்கு நல்ல காரணம் இருந்திருக்கும்.

10 காலங்கள் போகப்போக, கடவுளை வணங்குவதாக சொல்லிக்கொண்ட இஸ்ரவேலர்கள் யெகோவாவையும் அவருடைய உண்மை வணக்கத்தையும் ஒதுக்கித்தள்ளினார்கள். அதனால், பாபிலோனியர்கள் வந்து தன்னுடைய மக்களைத் தோற்கடித்து, தேசத்தை நாசமாக்கி, நிறைய பேரை கைதிகளாகக் கொண்டுபோகும்படி யெகோவா விட்டுவிட்டார். (2 நா. 36:15-21; எரே. 4:22-27) ஆனால், 70 வருஷங்கள் கழித்து அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவருவார்கள் என்று கடவுளுடைய தீர்க்கதரிசிகள் முன்கூட்டியே சொல்லியிருந்தார்கள். அந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின; இன்று வாழும் நமக்கும் அவை பிரயோஜனமாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் பூமி பூஞ்சோலையாக மாறும் என்பதை அவை எப்படி ஆதரிக்கின்றன என்று கவனியுங்கள்.

11. ஏசாயா 11:6-9-ல் இருக்கும் தீர்க்கதரிசனம் எப்படி முதன்முதலில் நிறைவேறியது, இன்னும் என்ன கேள்விகள் நம் மனதுக்கு வரலாம்?

11 ஏசாயா 11:6-9-ஐ வாசியுங்கள். இஸ்ரவேலர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வரும்போது, அங்கே சமாதானம் நிலவும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா முன்கூட்டியே சொல்லியிருந்தார். மிருகங்களாலோ மனிதர்களாலோ ஆபத்து வரும் என்று அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அப்போது, இளைஞர்களும் வயதானவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். இதை வாசிக்கும்போது ஏதேன் தோட்டத்தில் இருந்த சமாதானமான சூழல் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறதா? (ஏசா. 51:3) “கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று ஏசாயா சொன்னார். இஸ்ரவேல் தேசம் மட்டுமல்ல, பூமி முழுவதும் என்று அவர் சொல்வதைக் கவனியுங்கள். இது எப்போது நடக்கும்? எதிர்காலத்தில்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது!

12. (அ) பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள்? (ஆ) ஏசாயா 35:5-10-ல் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் எதிர்காலத்திலும் நிறைவேறும் என்பதை எது காட்டுகிறது?

12 ஏசாயா 35:5-10-ஐ வாசியுங்கள். பாபிலோனிலிருந்து திரும்பி வரும் இஸ்ரவேலர்களுக்கு, மிருகங்களாலோ மனிதர்களாலோ எந்த ஆபத்தும் வராது என்று ஏசாயா மறுபடியும் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். அதோடு, ஏதேன் தோட்டத்தைப் போலவே அந்தத் தேசத்தில் தண்ணீர் பாய்ந்தோடும் என்றும், அங்கே அமோக விளைச்சல் இருக்கும் என்றும் அவர் சொல்லியிருந்தார். (ஆதி. 2:10-14; எரே. 31:12) இந்தத் தீர்க்கதரிசனம் இஸ்ரவேலர்களின் காலத்திலேயே முழுமையாக நிறைவேறியதா? இந்தத் தீர்க்கதரிசனத்தில் வேறு என்ன வாக்குறுதிகள் இருந்தன என்று கவனியுங்கள். கண் தெரியாதவர்களும் காது கேட்காதவர்களும் நடக்க முடியாதவர்களும் குணமாவார்கள் என்று ஏசாயா சொன்னார். பாபிலோனிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்களிடம் இந்த வாக்குறுதி நிறைவேறவில்லை. அப்படியென்றால், இது எப்போது நிறைவேறும்? எல்லா விதமான வியாதிகளையும் எதிர்காலத்தில் சரிசெய்யப் போவதாக இந்தத் தீர்க்கதரிசனத்தின் மூலம் கடவுள் சொன்னார்.

13, 14. இஸ்ரவேலர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்தபோது ஏசாயா 65:21-23-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது, அந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் என்னென்ன விஷயங்கள் எதிர்காலத்தில் நிறைவேறும்? (ஆரம்பப் படம்)

13 ஏசாயா 65:21-23-ஐ வாசியுங்கள். யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பியபோது, அங்கே வசதியான வீடுகளோ பயிரிடப்பட்ட வயல் நிலங்களோ திராட்சைத் தோட்டங்களோ இருக்கவில்லை. ஆனால், கடவுளுடைய ஆசீர்வதித்தால் காலப்போக்கில் நிலைமை மாறியது. வீடுகளைக் கட்டி குடியிருந்தபோதும், தாங்கள் பயிரிட்டவற்றிலிருந்து சுவையான உணவைச் சாப்பிட்டபோதும் அவர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே இருந்திருக்காது.

14 “மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும்” என்று இந்தத் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கவனித்தீர்களா? சில வகையான மரங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்கின்றன. மனிதர்கள் அப்படி வாழ்வதற்கு நல்ல ஆரோக்கியம் தேவை! ஏசாயா முன்னறிவித்த அந்தச் சமாதானமான, அருமையான சூழலில் மனிதர்களால் வாழ முடிந்திருந்தால், அது உண்மையிலேயே ஒரு பூஞ்சோலையாக இருந்திருக்கும், இல்லையா? அப்படியென்றால், அந்தத் தீர்க்கதரிசனம் எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேறும்!

பூஞ்சோலையைப் பற்றி இயேசு கொடுத்த வாக்கு எப்படி நிறைவேறும்? (பாராக்கள் 15, 16)

15. ஏசாயா புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில ஆசீர்வாதங்கள் என்ன?

15 பூமி மறுபடியும் பூஞ்சோலையாக மாறும் என்பதை, இதுவரை நாம் பார்த்த வாக்குறுதிகள் எப்படி ஆதரிக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். இந்தப் பூமி, கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களால் நிறைந்திருக்கும். மிருகங்களாலோ கொடூரமான மனிதர்களாலோ ஆபத்து வரும் என்று நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை. கண் தெரியாதவர்களும் காது கேட்காதவர்களும் நடக்க முடியாதவர்களும் குணமாவார்கள். தங்களுக்கென்று வீடுகளைக் கட்டி மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்; அவர்களே பயிர் செய்து சாப்பிடுவார்கள். மரங்களின் ஆயுள் காலத்தைவிட அவர்களுடைய ஆயுள் காலம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை, அதாவது பூஞ்சோலை பூமியில் வாழும் வாழ்க்கை, மனிதர்களுக்குக் கிடைக்கும் என்பதற்கான அத்தாட்சிகளை பைபிள் தருகிறது. ஆனால் நாம் சந்திக்கும் சிலர், ‘பூமியில பூஞ்சோலை வரும்னு இந்த தீர்க்கதரிசனங்கள் சொல்லலையே’ என்று கேட்கலாம். அப்போது என்ன செய்வீர்கள்? இந்தப் பூமியில்தான் பூஞ்சோலை வரும் என்று நம்புவதற்கு நியாயமான காரணம் உங்களிடம் இருக்கிறதா? இதுவரை வாழ்ந்ததிலேயே மிகப் பெரிய மனிதரான இயேசு, நமக்கு ஒரு நியாயமான காரணத்தைக் கொடுத்திருக்கிறார்.

“நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்”

16, 17. பூஞ்சோலையைப் பற்றி இயேசு எப்போது பேசினார்?

16 இயேசு எந்தத் தவறும் செய்யாதவராக இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டு மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியும் இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியும் தொங்கவிடப்பட்டார்கள். அவர்களில் ஒருவன், இயேசுதான் ராஜா என்பதைப் புரிந்துகொண்டு, “இயேசுவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னான். (லூக். 23:39-42) அந்தக் குற்றவாளிக்கு இயேசு கொடுத்த வாக்குறுதிக்கும் உங்கள் எதிர்காலத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அந்த வாக்குறுதி லூக்கா 23:43-ல் இருக்கிறது. இயேசுவின் இந்த வார்த்தைகளை எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்பதில் பல கருத்துகள் இருக்கின்றன. தமிழ் O.V. (BSI) பைபிள் இதை இப்படி மொழிபெயர்க்கிறது: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ‘இன்று,’ என்று சொன்னபோது, இயேசு உண்மையில் என்ன சொல்லவந்தார்?

17 இன்றிருக்கும் நிறைய மொழிகளில் காற்புள்ளி, முக்காற்புள்ளி போன்ற நிறுத்தக் குறிகள் பயன்படுத்தப்படுகின்றன; வாக்கியங்களும் மாற்றி அமைக்கப்படுகின்றன. வாக்கியத்தின் அர்த்தம் தெளிவாக இருப்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது. ஆனால், இப்போது இருக்கும் ஆரம்பக் கால கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளில் இதுபோன்ற நிறுத்தக் குறிகள் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை. அதனால், இந்தக் கேள்விகள் நம் மனதில் வருகின்றன: “‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பூஞ்சோலையில் இருப்பாய்’ என்று இயேசு சொன்னாரா?” அல்லது, “‘இன்றைக்கு உனக்குச் சொல்கிறேன் நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்’ என்று சொன்னாரா?” இயேசு என்ன சொன்னதாக தாங்கள் நினைத்தார்களோ, அதற்கு ஏற்றபடி மொழிபெயர்ப்பாளர்கள் வாக்கியத்தை மாற்றி அமைத்திருக்கலாம் அல்லது நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. இதை எப்படிச் சொல்கிறோம்? இன்றிருக்கும் பைபிள் மொழிபெயர்ப்புகளில் இதைப் பார்க்க முடிகிறது.

18, 19. இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள எது நமக்கு உதவுகிறது?

18 தன்னுடைய மரணத்தைப் பற்றி சீஷர்களிடம் இயேசு என்ன சொன்னார்? ‘மனிதகுமாரன் ராத்திரி பகலாக மூன்று நாட்களுக்குக் கல்லறைக்குள் இருப்பார்’ என்று சொன்னார். அதோடு, “மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்” என்றும் சொன்னார். (மத். 12:40; 16:21; 17:22, 23; மாற். 10:34) அவர் சொன்னது அப்படியே நடந்தது என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப். 10:39, 40) இயேசுவும் அந்தக் குற்றவாளியும், தாங்கள் இறந்துபோன அதேநாளில் பூஞ்சோலைக்குள் போகவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழுப்பும்வரை, அவர் “கல்லறையில்” [“ஹேடீசில்”] இருந்தார் என்று பைபிள் சொல்கிறது.—அப். 2:31, 32. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

19 தன்னுடைய வாக்குறுதியைப் பற்றி அந்தக் குற்றவாளியிடம் சொல்வதற்காக, “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன்” என்ற வார்த்தைகளோடு இயேசு ஆரம்பித்தார். இப்படிப் பேசுவது, மோசேயின் காலத்திலும் வழக்கமாக இருந்தது. “இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் ஒருசமயத்தில் சொன்னார்.—உபா. 6:6; 7:11; 8:1, 19; 30:15.

20. இயேசு சொன்ன விஷயத்தைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலை எது ஆதரிக்கிறது?

20 இயேசு வாழ்ந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பைபிள் மொழிபெயர்ப்பாளர் இப்படிச் சொன்னார்: “இந்த வாக்கியத்தில் ‘இன்று’ என்ற வார்த்தைக்குத்தான் அதிக வலிமை இருக்கிறது. அதனால், ‘உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்’ என்றுதான் இந்த வசனத்தைப் படிக்க வேண்டும். அன்று அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது; ஆனால், அது பிற்பாடு நிறைவேறவிருந்தது.” அந்தப் பகுதியிலிருந்த மக்கள் பொதுவாக அப்படித்தான் பேசுவார்கள் என்றும், “ஒரு குறிப்பிட்ட நாளில் கொடுக்கப்படுகிற வாக்குறுதி, கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” என்பதைத்தான் அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியாக் மொழிபெயர்ப்பு இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்க்கிறது: “ஆமேன், இன்று நான் உனக்குச் சொல்கிறேன் நீ என்னோடுகூட ஏதேன் தோட்டத்தில் இருப்பாய்.” இயேசுவின் இந்த வாக்குறுதி நம்மை உற்சாகப்படுத்துகிறது, இல்லையா?

21. அந்தக் குற்றவாளி எங்கே போவதற்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஏன்?

21 அந்தக் குற்றவாளியிடம் பரலோகப் பூஞ்சோலையைப் பற்றி இயேசு பேசவில்லை. இது நமக்கு எப்படித் தெரியும்? ஒன்று: தன்னோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக, தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களோடு இயேசு செய்த ஒப்பந்தத்தைப் பற்றி அந்தக் குற்றவாளிக்குத் தெரியாது. (லூக். 22:29) இரண்டு: அந்தக் குற்றவாளி ஞானஸ்நானம்கூட எடுக்கவில்லை. (யோவா. 3:3-6, 12) இதிலிருந்து, அந்தக் குற்றவாளி பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், இயேசு அவனுக்கு வாக்குக் கொடுத்தபோது, பூமியில் வரப்போகும் பூஞ்சோலையைப் பற்றித்தான் பேசியிருக்க வேண்டும். பல வருஷங்களுக்குப் பிறகு, அப்போஸ்தலன் பவுல் ஒரு தரிசனத்தைப் பார்த்தார். அதில் ஒரு மனிதன், ‘பூஞ்சோலைக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டான்.’ (2 கொ. 12:1-4) தானும் மற்ற அப்போஸ்தலர்களும் இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் வரவிருந்த ஒரு பூஞ்சோலையைப் பற்றிப் பவுல் பேசினார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்தப் பூஞ்சோலை பூமியில் வருமா? நீங்கள் அங்கே இருப்பீர்களா?

பூஞ்சோலை எப்படி இருக்கும்?

22, 23. நாம் எதற்காகக் காத்திருக்கலாம்?

22 “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்” என்று தாவீது சொன்னதை யோசித்துப் பாருங்கள். (சங். 37:29; 2 பே. 3:13) பூமியில் இருக்கும் எல்லாரும் கடவுளுடைய நீதியான நியமங்களுக்குக் கீழ்ப்படியும் ஒரு காலத்தைப் பற்றித் தாவீது பேசினார். “மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும்” என்று ஏசாயா 65:22 சொல்கிறது. புதிய உலகத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்யும் மக்கள் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்வார்கள் என்பதை இந்த வாக்குறுதி காட்டுகிறது. இதை நம்பலாமா? கண்டிப்பாக! ஏனென்றால், வெளிப்படுத்துதல் 21:1-4 சொல்கிறபடி கடவுள் மனிதர்களை ஆசீர்வதிப்பார். அந்த ஆசீர்வாதங்களில் “மரணம்” இல்லாத வாழ்க்கையும் ஒன்று!

23 பூஞ்சோலையைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்கள் தெளிவாக இருக்கின்றன. பூஞ்சோலையில் என்றென்றும் வாழும் பாக்கியத்தை ஆதாமும் ஏவாளும் இழந்துபோனார்கள். ஆனால், இந்தப் பூமி மறுபடியும் ஒரு பூஞ்சோலையாக மாறும்! கடவுள் வாக்குக் கொடுத்தது போலவே பூமியிலிருக்கும் மக்களை அவர் ஆசீர்வதிப்பார். நீதிமான்களும் தாழ்மையானவர்களும் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்றும், அதிலே அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் தாவீது சொன்னார். அதோடு, அழகு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையில் சந்தோஷமாக வாழ்வதற்காக ஆசையோடு காத்திருப்பதற்கு ஏசாயா புத்தகத்திலிருக்கும் தீர்க்கதரிசனங்கள் நமக்கு உதவுகின்றன. அந்தப் பூஞ்சோலை எப்போது வரும்? குற்றவாளியிடம் இயேசு கொடுத்த அந்த வாக்கு எப்போது நிறைவேறுகிறதோ அப்போது வரும். நீங்களும் அந்தப் பூஞ்சோலையில் வாழலாம்! “பூஞ்சோலையில் சந்திக்கலாம்” என்று கொரியாவில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட சகோதர சகோதரிகள் சொன்ன வார்த்தைகள் அப்போது நிஜமாகும்.

^ பாரா. 18 “இன்று” என்று சொன்னபோது, தான் சாகப்போவதையும், அதேநாளில் அல்லது 24 மணிநேரத்துக்குள், தான் பூஞ்சோலையில் இருக்கப்போவதாகவும் இயேசு சொன்னதாக அறிஞர்கள் நிறைய பேர் நம்புகிறார்கள் என்று மார்வின் பேட் என்ற பேராசிரியர் சொல்கிறார். ஆனால், இந்தக் கருத்து பைபிளில் இருக்கிற மற்ற விஷயங்களோடு ஒத்துப்போவதில்லை என்றும் அவர் சொல்கிறார். உதாரணத்துக்கு, இயேசு இறந்த பிறகு அவர் கல்லறையில் இருந்ததாகவும், பிற்பாடுதான் அவர் பரலோகத்துக்குப் போனதாகவும் பைபிள் சொல்கிறது.—மத். 12:40; அப். 2:31; ரோ. 10:7.

^ பாரா. 21 இந்தப் பத்திரிகையில் இருக்கும் “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.