Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவா எங்களுக்கு அன்போடு உதவினார்

யெகோவா எங்களுக்கு அன்போடு உதவினார்

நானும் என் மனைவி டானியலேவும் அப்போதுதான் ஹோட்டலுக்குள் நுழைந்தோம். வரவேற்பறையில் இருந்தவர், “சார், எல்லை காவற்படை போலீஸுக்கு கொஞ்சம் ஃபோன் பண்ணுறீங்களா?” என்று என்னிடம் கேட்டார். சில மணிநேரத்துக்கு முன்புதான் ஆப்பிரிக்க நாடான காபோனுக்கு வந்து சேர்ந்திருந்தோம். 1970-களிலிருந்து நம்முடைய வேலை அந்த நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தது.

டானியலே எப்போதுமே உஷாராக இருப்பாள். “நீங்க ஃபோன் பண்ண வேண்டியதே இல்லை. அவங்க ஏற்கெனவே வந்துட்டாங்க” என்று என் காதில் கிசுகிசுத்தாள். அப்போது ஒரு வண்டி ஹோட்டலுக்கு முன்னால் வந்து நின்றது. சில நிமிடங்களில் நாங்கள் கைது செய்யப்பட்டோம். ஆனால், டானியலே என்னை எச்சரித்தது நல்லதாக இருந்தது; ஏனென்றால், என்னிடம் இருந்த சில ஆவணங்களை அங்கிருந்த ஒரு சகோதரரிடம் ஒப்படைக்க எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.

என் மனைவி தைரியமானவள், ஆன்மீக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள். இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைத்ததற்காக நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று காவல் நிலையத்துக்குப் போகும் வழியில் நினைத்தேன். நானும் டானியலேவும் ஒரு ‘டீமாக’ சேர்ந்து வேலை செய்த நிறைய சந்தர்ப்பங்களில் இது வெறும் ஒரு சந்தர்ப்பம்தான். பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்த நாடுகளுக்கு நாங்கள் ஏன் போனோம் என்று சொல்கிறேன்.

யெகோவா அன்பாக என் கண்களைத் திறந்தார்

பிரான்சின் வடக்கே இருந்த க்ரவா என்ற சின்ன ஊரில், 1930-ம் வருஷம் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன். ஒவ்வொரு வாரமும், குடும்பமாக ஆராதனைக்குப் போய்விடுவோம். சர்ச்சின் வேலைகளை அப்பா மும்முரமாகச் செய்வார். ஆனால், எனக்குக் கிட்டத்தட்ட 14 வயது இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் சர்ச்சின் வெளிவேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் ஜெர்மானியப் படை பிரான்சை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. நாஸி கொள்கைகளை ஆதரித்த விஷி அரசாங்கத்தை ஆதரிக்கும்படி எங்கள் பாதிரி எப்போதுமே சொல்லிவந்தார். அவர் சொன்னதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பிரான்சில் இருந்த நிறைய பேரைப் போல் நாங்களும் பிபிசி வானொலியை ரகசியமாகக் கேட்டுவந்தோம். அது கூட்டணி நாடுகளைப் பற்றிய செய்தியை ஒலிபரப்பியது. செப்டம்பர் 1944-ல் கூட்டணி நாடுகள் முன்னேறி வந்தபோது, அவர் அப்படியே ‘கட்சிமாறினார்’. கூட்டணி நாடுகளின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நன்றி சொல்லும் ஆராதனைக்கு ஏற்பாடு செய்தார். அவர் இப்படி நடந்துகொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது; குருமார்கள்மீது எனக்கு இருந்த நம்பிக்கையும் குறைந்தது.

போர் முடிந்த கொஞ்ச காலத்திலேயே அப்பா இறந்துவிட்டார். அக்காவுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி பெல்ஜியத்தில் குடியிருந்துவந்தார். அதனால், அம்மாவை நான் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. என் முதலாளியும் அவருடைய மகன்களும் தீவிர கத்தோலிக்க பக்தர்கள். அந்த கம்பெனியில் எனக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால், சீக்கிரத்தில் ஒரு சோதனையும் காத்திருந்தது.

யெகோவாவின் சாட்சியாக மாறியிருந்த என் அக்கா சிமோன், 1953-ல் எங்களைப் பார்க்க வந்தார். அவரிடம் இருந்த பைபிளை வைத்து, எரிநரகம்... திரித்துவம்... அழியாத ஆத்துமா... போன்ற கத்தோலிக்க சர்ச்சின் போதனைகள் பொய்யானவை என்பதைத் திறமையாக எடுத்துச் சொன்னார். அவர் கத்தோலிக்க பைபிளைப் பயன்படுத்தாததைப் பற்றி முதலில் வாக்குவாதம் செய்தேன். ஆனால், அவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பதைச் சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன். பழைய காவற்கோபுர பத்திரிகைகள் சிலவற்றை அவர் எனக்குக் கொடுத்தார். அவற்றை என்னுடைய படுக்கை அறையில் அன்று ராத்திரியே ஒருபக்கம் விடாமல் படித்தேன். இதுதான் சத்தியம் என்பதைச் சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன். ஆனால், யெகோவாவின் சாட்சியாக மாறினால் வேலை பறிபோய்விடுமோ என்று பயந்தேன்.

சில மாதங்கள்வரை, நானாகவே பைபிளையும் காவற்கோபுர பத்திரிகைகளையும் படித்துவந்தேன். கடைசியில், ராஜ்ய மன்றத்துக்குப் போக முடிவெடுத்தேன். சபையிலிருந்த அன்பான சூழல் என் மனதைத் தொட்டது. முதிர்ச்சியான ஒரு சகோதரரோடு சேர்ந்து ஆறு மாதங்கள் பைபிள் படிப்புப் படித்தேன்; செப்டம்பர் 1954-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். என் அம்மாவும் தங்கையும் சீக்கிரத்திலேயே சாட்சிகளாக ஆனார்கள். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

யெகோவாவை நம்பி முழுநேர சேவையில் இறங்கினேன்

1958-ல், நியு யார்க் நகரத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆனால், அந்த மாநாட்டுக்குக் கொஞ்ச வாரங்களுக்கு முன்பு அம்மா இறந்துவிட்டார்; அது எனக்கு வேதனையாக இருந்தது. மாநாடு முடிந்து ஊருக்குத் திரும்பியதும் வேலையை விட்டுவிட்டு, பயனியர் சேவையை ஆரம்பித்தேன். ஏனென்றால், இப்போது நான் யாரையும் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. பிறகு, சுறுசுறுப்பாக பயனியர் சேவை செய்துகொண்டிருந்த டானியலே டெலியோடு எனக்கு நிச்சயம் ஆனது. 1959, மே மாதத்தில் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்.

டானியலே தன்னுடைய முழுநேர சேவையை பிரிட்டானியின் கிராமப்புறங்களில் ஆரம்பித்திருந்தாள். அந்தப் பகுதி அவளுடைய வீட்டிலிருந்து ரொம்பத் தூரத்தில் இருந்தது. கத்தோலிக்கர்கள் குடியிருந்த அந்தப் பகுதிகளில் பிரசங்கிப்பதற்கும், கிராமப்புறப் பகுதிகளுக்கு சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவதற்கும் அவளுக்குத் தைரியம் தேவைப்பட்டது. என்னைப் போலவே அவளுக்கும் பிரசங்க வேலையைப் பற்றிய அவசர உணர்வு இருந்தது. ஏனென்றால், உலக முடிவு எவ்வளவு சீக்கிரத்தில் வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. (மத். 25:13) அவள் ஊழியத்துக்காக நிறைய தியாகங்கள் செய்தது, முழுநேர ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய எங்களுக்கு உதவியது.

கல்யாணமாகி கொஞ்ச நாட்களிலேயே வட்டார சேவையை ஆரம்பித்தோம். எளிமையான வாழ்க்கை வாழ முடிவெடுத்தோம். முதன்முதலாக நாங்கள் சந்தித்த சபையில் 14 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். எங்களைத் தங்கவைக்க அவர்களுக்கு வசதி இல்லை; ராஜ்ய மன்றத்தின் மேடையிலேயே ஒரு மெத்தையைப் போட்டு தூங்கினோம். அது எங்களுக்கு அவ்வளவு சௌகரியமாக இல்லைதான்; ஆனால், எங்கள் முதுகெலும்புக்கு ரொம்பவே சௌகரியமாக இருந்தது!

எங்களுடைய சின்ன காரில் சபைகளைச் சந்தித்தபோது

நாங்கள் ரொம்ப பிஸியாக இருந்தாலும், பயண வேலைக்குத் தகுந்தபடி டானியலே தன்னை மாற்றிக்கொண்டாள். எதிர்பார்க்காமல் நடக்கிற மூப்பர்கள் கூட்டத்தில் நான் அடிக்கடி கலந்துகொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், அவள் குறையே சொல்லமாட்டாள்; பொறுமையாக எங்களுடைய சின்ன காரில் காத்திருப்பாள். இரண்டு வருஷங்கள்தான் வட்டார சேவை செய்தோம். தம்பதிகள் ஒளிவுமறைவில்லாமல் பேசிக்கொள்வதும், ‘டீமாக’ சேர்ந்து வேலை செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் அந்தச் சமயத்தில் கற்றுக்கொண்டோம்.—பிர. 4:9.

புதுவிதமான சேவையில் கிடைத்த சந்தோஷம்

1962-ல், 37-வது கிலியட் பள்ளிக்கு அழைப்பு வந்தது; அந்தப் பள்ளி, நியு யார்க்கில் இருக்கிற புருக்லினில், பத்து மாதங்களுக்கு நடந்தது. அதில் கலந்துகொண்ட 100 மாணவர்களில் 13 தம்பதிகள் இருந்தார்கள். தம்பதியாகக் கலந்துகொண்டதை நாங்கள் பாக்கியமாக நினைத்தோம். விசுவாசத்தில் தூண்களாக இருந்த ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ், யுலிஸிஸ் க்ளாஸ், அலெக்ஸாண்டர் ஹெச். மேக்மில்லன் போன்றவர்களோடு பழகிய நினைவுகள் இன்றுவரை என் நெஞ்சைவிட்டு நீங்கவே இல்லை.

ஒன்றாகச் சேர்ந்து கிலியட் பள்ளியில் கலந்துகொண்டது சந்தோஷத்தை அள்ளித் தந்தது

எங்களுடைய பயிற்சியின்போது, கூர்ந்து கவனிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளும்படி சொல்லப்பட்டது. சில சனிக்கிழமைகளின் மத்தியானத்தில், வகுப்பு முடிந்தவுடன், நியு யார்க்கிலிருந்த சில இடங்களைப் பார்ப்பதற்காக எங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; அதுவும் எங்களுடைய பயிற்சியின் ஒரு பாகமாக இருந்தது. நாங்கள் பார்த்தவற்றைப் பற்றி திங்கள்கிழமையன்று ‘டெஸ்ட்’ எழுத வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். சனிக்கிழமைகளில் பெரும்பாலும் ரொம்பவே களைப்பாகத்தான் திரும்புவோம். ஆனாலும், சுற்றிப் பார்ப்பதற்காக எங்களைக் கூட்டிக்கொண்டு போன சகோதரர் (பெத்தேல் ஊழியர்) நாங்கள் பார்த்தவற்றை மறக்காமல் இருப்பதற்காக அப்போதே சில கேள்விகளைக் கேட்பார். அப்படிக் கேட்டது ‘டெஸ்ட்’ எழுதுவதற்குத் தேவையான முக்கிய விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள உதவியது. ஒரு தடவை, ஒரு சனிக்கிழமை மத்தியானம் முழுவதும் நியு யார்க் நகரத்தைச் சுற்றினோம். வானிலை ஆய்வுக்கூடத்துக்குப் போனோம்; எரிகற்களைப் பற்றியும் விண்கற்களைப் பற்றியும் தெரிந்துகொண்டோம். பிறகு, அமெரிக்கன் ம்யூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி என்ற அருங்காட்சியகத்துக்குப் போனோம்; அங்கே, வெவ்வேறு விதமான முதலைகளைப் பற்றித் தெரிந்துகொண்டோம். பெத்தேலுக்கு வந்ததற்குப் பிறகு, எங்களைக் கூட்டிக்கொண்டுபோன சகோதரர், “எரிகற்களுக்கும் விண்கற்களுக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்க பார்க்கலாம்” என்று கேட்டார். டானியலே ரொம்பவே களைப்பாக இருந்ததால், “விண்கற்களுக்கு பல் நீளமா இருக்கும்” என்று சொல்லிவிட்டாள்.

ஆப்பிரிக்காவில் இருக்கிற உண்மையுள்ள சகோதர சகோதரிகளை சந்தித்ததில் ரொம்பச் சந்தோஷப்பட்டோம்

கிலியட் பள்ளி முடிந்ததற்குப் பிறகு, பிரான்ஸ் கிளை அலுவலகத்துக்கே நியமிக்கப்பட்டோம்! அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கே 53 வருஷங்களுக்கும்மேல் நாங்கள் ஒன்றுசேர்ந்து சேவை செய்தோம். 1976-ல், கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன். அதோடு, ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் இருந்த எந்தெந்த நாடுகளில் நம் வேலை தடை செய்யப்பட்டிருந்ததோ, கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்ததோ, அந்த நாடுகளுக்குப் பயணம் செய்யும் பொறுப்பும் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் ஆரம்பத்தில் சொன்ன காபோனுக்கு இப்படித்தான் போயிருந்தோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதுபோன்ற எதிர்பாராத நியமிப்புகளைச் செய்யுமளவுக்கு எனக்குத் திறமை இல்லாததாக உணர்ந்தேன். ஆனால், எந்த நியமிப்பாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு, டானியலே எனக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறாள்.

1988-ல், பாரிஸில் நடந்த “தெய்வீக நீதி” மாநாட்டில் பேச்சுக் கொடுத்த சகோதரர் தியோடர் ஜாரக்ஸின் பேச்சை மொழிபெயர்த்தபோது

ஒன்றுசேர்ந்து சோதனைகளைச் சந்தித்தோம்

பெத்தேலுக்குப் போனதிலிருந்தே எங்களுக்கு அந்த வாழ்க்கை பிடித்துப்போனது. கிலியட் பள்ளிக்குப் போவதற்கு முன்பு வெறும் ஐந்து மாதங்களுக்குள் டானியலே ஆங்கிலம் கற்றுவைத்திருந்ததால், நம்முடைய பிரசுரங்களை அவளால் திறமையாக மொழிபெயர்க்க முடிந்தது. பெத்தேல் வாழ்க்கை ரொம்பவே திருப்தியாக இருந்தது. சபை நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், எங்கள் சந்தோஷம் இரட்டிப்பானது. முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்திவிட்டு பாரிஸின் மெட்ரோ ரயிலில் திரும்பிவருவதற்குள் ராத்திரி ரொம்ப நேரமாகிவிடும். இரண்டு பேரும் ரொம்பவே களைத்துப்போயிருந்தாலும் சந்தோஷமாக இருப்போம். அந்த நாட்களை இப்போது ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறேன். திடீரென்று டானியலேவின் உடல்நிலை ரொம்ப மோசமானதால், அவள் ஆசைப்பட்டது போல அவளால் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை.

1993-ல், அவளுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சை, தீவிரமான கீமோதெரபி என சிகிச்சை ரொம்பவே வேதனையாக இருந்தது. 15 வருஷங்களுக்குப் பிறகு, மறுபடியும் அவளுக்குப் புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. ஆனால், இந்தத் தடவை வந்தது ரொம்பவே தீவிரமாகப் பரவக்கூடியதாக இருந்தது. இருந்தாலும், மொழிபெயர்ப்பு வேலையை அவள் ரொம்ப நேசித்ததால், உடல்நிலை ஓரளவு நன்றாக இருக்கும்போதெல்லாம் வேலை செய்வதற்கு முயற்சி எடுத்தாள்.

டானியலேவின் உடல்நிலை ரொம்பவே மோசமாக இருந்தாலும், பெத்தேலைவிட்டுப் போவதைப் பற்றி நாங்கள் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. அதேசமயத்தில், வியாதியோடு பெத்தேலில் இருப்பதில் சில சவால்கள் இருக்கின்றன; அதுவும், உங்கள் உடல்நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று மற்றவர்களுக்குத் தெரியாதபோது சொல்லவே வேண்டாம்! (நீதி. 14:13) டானியலே 80 வயதை நெருங்கிக்கொண்டிருந்தாலும், அவள் எப்போதும் அழகாக இருந்ததால், அவளைப் பார்த்தால் உடல்நிலை சரியில்லாதவள் என்று சொல்லவே முடியாது. தன்னுடைய நிலைமையை நினைத்து அவள் பரிதாபப்படவில்லை; மற்றவர்களுக்கு உதவுவதில் கண்ணும்கருத்துமாக இருந்தாள். கஷ்டத்தில் இருப்பவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பது, அவர்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. (நீதி. 17:17) ஓர் ஆலோசகரைப் போல் அவள் எப்போதும் காட்டிக்கொண்டது இல்லை. இருந்தாலும், புற்றுநோயைப் பார்த்துப் பயப்படாமல் இருக்க நிறைய சகோதரிகளுக்கு உதவ தன்னுடைய அனுபவத்தை அவள் பயன்படுத்தினாள்.

புதுப்புது சவால்களையும் நாங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. டானியலேவால் முழு நேரமும் வேலை செய்ய முடியாமல் போனபோது, நிறைய வழிகளில் எனக்கு உதவுவதற்கு முடிவெடுத்தாள். அவளுடைய உதவியால்தான் 37 வருஷங்களாக கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக என்னால் சேவை செய்ய முடிந்தது. என்னுடைய வேலைகளை நான் சுலபமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அவள் நிறைய உதவிகளைச் செய்தாள். உதாரணத்துக்கு, தினமும் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து எங்கள் அறையில் மதிய உணவு சாப்பிடுவதற்கும், கொஞ்ச நேரம் சாவகாசமாக இருப்பதற்கும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அவள் செய்துவைப்பாள்.—நீதி. 18:22.

தினமும் கவலைகளைச் சமாளித்தோம்

டானியலே எப்போதும் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பாள்; சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பாள். மூன்றாவது தடவையாக அவளைப் புற்றுநோய் தாக்கியது. எங்கள் பலமெல்லாம் வற்றிவிட்டது. கீமோதெரபியும் ரேடியோதெரபியும் அவளுடைய பலத்தை உறிஞ்சின; சிலசமயங்களில், அவளால் நடக்கக்கூட முடியவில்லை. திறமையான மொழிபெயர்ப்பாளராக இருந்த என் அன்பு மனைவி, நன்றாகப் பேச முடியாமல் கஷ்டப்பட்டதைப் பார்த்தபோது என் நெஞ்சே உடைந்துவிட்டது.

எங்கள் பலமெல்லாம் போய்விட்டதைப் போல் உணர்ந்தாலும், விடாமல் ஜெபம் செய்தோம். தாங்க முடியாத சோதனைகளை யெகோவா எப்போதும் அனுமதிக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருந்தோம். (1 கொ. 10:13) பைபிள்... பெத்தேல் மருத்துவ இலாகா... அன்போடு எங்களை ஆதரித்து வந்த நம்முடைய ஆன்மீகக் குடும்பம்... ஆகியவற்றின் மூலம் யெகோவா எங்களுக்கு உதவுகிறார். அதற்காக எப்போதும் நன்றியோடு இருப்பதற்கு முயற்சி செய்கிறோம்.

எந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்வது என்ற விஷயத்தில், எப்போதும் யெகோவாவின் வழிநடத்துதலுக்காகக் கேட்டோம். ஒருகட்டத்தில், எந்தச் சிகிச்சையும் பலன் தரவில்லை. ஒவ்வொரு தடவை கீமோதெரபி கொடுத்ததற்குப் பிறகும், அவள் சுயநினைவை இழந்தாள். அவளுக்கு 23 வருஷங்களாக சிகிச்சை கொடுத்துவந்த டாக்டரால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை; எந்த மாற்று சிகிச்சையையும் பரிந்துரை செய்யவும் முடியவில்லை. நாங்கள் கைவிடப்பட்டதைப் போல் உணர்ந்தோம்; அடுத்து என்ன நடக்கும் என்பதும் தெரியவில்லை. பிறகு, வேறொரு புற்றுநோய் நிபுணர் டானியலேவுக்குச் சிகிச்சை தர ஒத்துக்கொண்டார். கவலைகளிலிருந்து வெளியே வர யெகோவாவே உதவியதுபோல் இருந்தது!

அந்தந்த நாளுக்கான கவலையைச் சமாளிக்க நாங்கள் கற்றுக்கொண்டோம். இயேசு சொன்னதைப் போல், ‘அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் இருக்கும்.’ (மத். 6:34) நம்பிக்கையான மனப்பான்மையும், நகைச்சுவை உணர்வும் எங்களுக்கு உதவின. இரண்டு மாதங்களாக கீமோதெரபி இல்லாமல் டானியலே இருந்தபோது, சிரித்துக்கொண்டே என்னிடம், “உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, இதுவரைக்கும் இவ்வளவு நல்லா நான் இருந்ததே இல்ல!” என்று குறும்பாகச் சொன்னாள். (நீதி. 17:22) அவள் அவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாலும், நம்பிக்கையான குரலில் புதிய ராஜ்யப் பாடல்களைப் பாடிப் பழகுவாள்; அது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அவள் எப்போதும் நம்பிக்கையான மனநிலையோடு இருந்ததால், என்னுடைய வரம்புகளைச் சமாளிக்க என்னால் முடிந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கல்யாணமான இந்த 57 வருஷத்தில், என்னுடைய எல்லா தேவைகளையும் அவள் அருமையாக கவனித்துக்கொண்டாள். முட்டையை அவிக்கக்கூட அவள் என்னை விட்டதில்லை; அந்தளவுக்குக் கவனித்துக்கொண்டாள். அதனால், அவளுடைய உடல்நிலை ரொம்பவே மோசமானபோது, பாத்திரங்களைக் கழுவவும் துணிதுவைக்கவும் எளிமையான சமையல் செய்யவும் நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சிலசமயங்களில், கண்ணாடி டம்ளர்களை உடைத்திருக்கிறேன்; ஆனால், அவளுக்காக வேலை செய்ததில் நான் சந்தோஷப்பட்டேன். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

யெகோவாவின் அன்புள்ள தயவுக்கு நன்றியோடு இருக்கிறேன்

வாழ்க்கையைப் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. உடல்நலப் பிரச்சினையாலும் முதுமையாலும் எங்களுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தது உண்மைதான்; ஆனால், அவற்றிலிருந்து பிரயோஜனமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன். ஒன்று: நாம் நெஞ்சார நேசிக்கும் துணையை கவனித்துக்கொள்ள முடியாதளவுக்கு வேலையில் மூழ்கிவிடக் கூடாது. நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும்போதே, நம் பாசத்துக்குரியவர்களைக் கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். (பிர. 9:9) இரண்டு: சின்னச் சின்ன விஷயங்களுக்காக ரொம்பக் கவலைப்படக் கூடாது; அப்படிக் கவலைப்பட்டால், நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிற ஆசீர்வாதங்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும்.—நீதி. 15:15.

என்னுடைய முழுநேர சேவையை நினைத்துப் பார்க்கும்போது, கற்பனைகூட செய்ய முடியாதளவுக்கு யெகோவா ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. “யெகோவா எனக்கு அன்போடு உதவினார்” என்று சொன்ன சங்கீதக்காரரைப் போல்தான் நானும் உணர்கிறேன்.—சங். 116:7.

^ பாரா. 32 இந்தக் கட்டுரை தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில், சகோதரி டானியலே போகார்ட் இறந்துவிட்டார். அப்போது, அவருக்கு 78 வயது.