உங்களுக்கு நினைவிருக்கிறதா?
2019-ல் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளிலிருந்து இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.
“உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்” என்று கடவுள் கொடுத்த வாக்குறுதிக்கு என்ன அர்த்தம்? (ஏசா. 54:17)
‘கொடுங்கோலர்களின் கோபத்தை’ போன்ற அழிவு உண்டாக்குகிற சக்திகளிலிருந்து கடவுள் நம்மைப் பாதுகாப்பார் என்று நாம் நம்பலாம். (ஏசா. 25:4, 5) நம் எதிரிகளால் நமக்கு நிரந்தரப் பாதிப்பை ஒருபோதும் கொண்டுவர முடியாது.—w19.01, பக்கங்கள் 6-7.
கானானியர்களிடமும் வழிதவறிப்போன இஸ்ரவேலர்களிடமும் யெகோவா நடந்துகொண்ட விதம் எப்படி அவருடைய நீதியை எடுத்துக்காட்டுகிறது?
அசிங்கமான பாலியல் செயல்களில் ஈடுபட்டவர்களையும், பெண்கள் மற்றும் பிள்ளைகளைத் தவறாக நடத்தியவர்களையும் யெகோவா தண்டித்தார். தன்னுடைய மக்கள் தனக்குக் கீழ்ப்படிந்தபோதும், மற்றவர்களை நியாயமாக நடத்தியபோதும் அவர்களை ஆசீர்வதித்தார்.—w19.02, பக்கங்கள் 22-23.
யெகோவாவை வணங்காத ஒருவர் ஜெபம் செய்யும்போது நாம் அங்கே இருந்தால் என்ன செய்வது?
நாம் அமைதியாகவும் மரியாதையாகவும் இருப்போம்; ஒருபோதும் “ஆமென்” சொல்ல மாட்டோம். மற்றவர்களுடைய கையைப் பிடித்துக்கொள்ளவும் மாட்டோம். மனதுக்குள் நாம் ஜெபம் செய்துகொள்ளலாம்.—w19.03, பக்கம் 31.
குழந்தை பாலியல் வன்கொடுமை எவ்வளவு பெரிய பாவம்?
பாதிக்கப்பட்டவருக்கும், சபைக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், கடவுளுக்கும் விரோதமான பாவம் அது. வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்று நாட்டின் சட்டம் சொன்னால், அதற்கு மூப்பர்கள் ஒத்துழைப்பார்கள்.—w19.05, பக்கங்கள். 9-10.
மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை எப்படி மாற்றிக்கொள்வது?
முக்கியமான வழிகள்: ஜெபத்தில் யெகோவாவிடம் பேசுங்கள், உங்களையே சோதித்துப்பார்க்கும் குறிக்கோளோடு படித்ததை ஆழமாக யோசியுங்கள், நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்.—w19.06, பக்கம் 11.
துன்புறுத்தலுக்கு நாம் எப்படி இப்போதே தயாராகலாம்?
யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை நாம் பலப்படுத்த வேண்டும். அவர் நம்மை நேசிக்கிறார் என்பதிலும், நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். தினமும் பைபிளைப் படிக்க வேண்டும், தவறாமல் ஜெபம் செய்ய வேண்டும். கடவுளுடைய அரசாங்கம் ஆசீர்வாதங்களைப் பொழியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ரொம்பப் பிடித்த வசனங்களையும் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் பாடல்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும்.—w19.07, பக்கங்கள் 2-4.
மீட்படைய நம்முடைய குடும்பத்தாருக்கு எப்படி உதவலாம்?
அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது முக்கியம். உங்கள் நடத்தை பேசட்டும். பொறுமையாக இருங்கள், சாதுரியமாகப் பேசுங்கள்.—w19.08, பக்கங்கள் 15-17.
மத்தேயு 11:28-ல் இயேசு வாக்குக் கொடுத்த புத்துணர்ச்சியை நாம் எப்படி அடையலாம்?
நமக்குத் தங்கமான கண்காணிகள் இருக்கிறார்கள், ஆருயிர் நண்பர்கள் இருக்கிறார்கள், அருமையான வேலையும் இருக்கிறது.—w19.09, பக்கம் 23.
ஆர்வத்தையும் செயல்படுவதற்கான வல்லமையையும் கடவுள் எப்படி நமக்குத் தருவார்? (பிலி. 2:13)
பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, கடவுள் நமக்குப் பலத்தைத் தருவார். அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கான ஆர்வத்தையும், செயல்படுவதற்கான வல்லமையையும் தருவார். தன்னுடைய சக்தியைக் கொடுத்து நம்முடைய திறமைகளை அவரால் பட்டைதீட்ட முடியும்.—w19.10, பக்கம் 21.
முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் நாம் எடுக்க வேண்டிய ஞானமான படிகள் என்ன?
ஐந்து படிகள்: ஆழமாக ஆராய்ச்சி செய்யுங்கள். ஞானத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். உங்கள் உள்நோக்கங்களை பரிசோதித்துப் பாருங்கள். திட்டவட்டமான குறிக்கோள்களை வையுங்கள். யதார்த்தமாக இருங்கள்.—w19.11, பக்கங்கள் 27-29.
ஏவாளிடம் சாத்தான் பேசியபோது அழியாத ஆத்துமா என்ற தவறான கோட்பாட்டை மனதில் வைத்துதான் பேசினானா?
அப்படி இருக்க வாய்ப்பே இல்லை! ஏவாளுடைய உடல்தான் அழியுமே தவிர அவளுடைய ஆத்துமா எங்கேயாவது உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்று சாத்தான் சொல்லவில்லை. அவள் ‘கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டாள்’ என்றுதான் சொன்னான். பெரிய வெள்ளம் வந்து கெட்டவர்களை அழித்தபோது பொய் மத நம்பிக்கைகளும் அழிந்துபோயின. பாபேலில் மொழிகளைக் கடவுள் குழப்பியபோது, ஜனங்கள் “பூமி முழுவதும்” சிதறிப்போனார்கள். மனிதர்களுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற தவறான நம்பிக்கை அதற்கு முன்பே பிறந்திருக்க வேண்டும்.—w19.12, பக்கம் 15.