Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

ஒருவர் செய்த பாவத்தை உறுதிசெய்ய இரண்டு சாட்சிகளாவது தேவை என்று பைபிள் சொல்கிறது. (எண். 35:30; உபா. 17:6; 19:15; மத். 18:16; 1 தீ. 5:19) ஆனால், நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் “வயல்வெளியில்” பலாத்காரம் செய்யப்பட்டபோது அவள் கூச்சல் போட்டதால், அவள்மீது எந்தக் குற்றமும் இல்லை என்றும் அவன்மேல் குற்றம் இருப்பதாகவும் திருச்சட்டம் சொன்னது. இந்தக் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்குச் சாட்சிகள் இல்லாதபோதும், அவளை நிரபராதி என்றும் அவனை குற்றவாளி என்றும் திருச்சட்டம் ஏன் சொன்னது?

பலாத்காரம் செய்தவனுடைய குற்றத்தை உறுதிப்படுத்துவதைப் பற்றி உபாகமம் 22:25-27 முக்கியப்படுத்திக் காட்டவில்லை. ஏனென்றால், அவன் குற்றவாளி என்று ஏற்கெனவே இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் நிரபராதி என்பதை உறுதிப்படுத்துவதைப் பற்றித்தான் இந்தச் சட்டம் முக்கியமாகப் பேசுகிறது. எந்த மாதிரியான சூழலைப் பற்றி இந்த வசனங்கள் பேசுகின்றன என்று பாருங்கள்.

இந்த வசனங்களுக்கு முன்பிருக்கிற வசனங்கள், “ஊருக்குள்” இருக்கிற நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொள்பவனைப் பற்றிப் பேசுகின்றன. நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண், கல்யாணமான பெண்ணாகத்தான் கருதப்பட்டாள். அதனால், அவளைக் கெடுத்ததன் மூலம் விபச்சாரம் செய்ததற்கான குற்றத்தை அவன் சுமக்கிறான். அந்தப் பெண்ணைப் பற்றி என்ன சொல்லலாம்? “அந்தப் பெண் ஊருக்குள் இருந்தும் உதவிக்காகக் கூச்சல் போடவில்லை.” ஒருவேளை அவள் கூச்சல் போட்டிருந்தால், நிச்சயம் அது மற்றவர்கள் காதில் விழுந்திருக்கும்; அவர்களும் அவளைக் காப்பாற்றியிருப்பார்கள். அவள் அப்படிச் செய்யாததால், விபச்சாரம் செய்ததில் அவளுக்கும் பங்கு இருந்திருக்கிறது. அதனால், அவளும் குற்றவாளிதான்.—உபா. 22:23, 24.

இதைப் பற்றிச் சொன்ன பிறகு, வித்தியாசமான இன்னொரு சூழ்நிலையைப் பற்றித் திருச்சட்டம் சொல்கிறது. “ஆனால், நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வயல்வெளியில் அவன் பார்த்து அவளைப் பலாத்காரம் செய்தால், அவன் மட்டும்தான் கொல்லப்பட வேண்டும். அந்தப் பெண்ணை நீங்கள் ஒன்றும் செய்யக் கூடாது. மரண தண்டனை பெற வேண்டிய அளவுக்கு எந்தக் குற்றமும் அவள் செய்யவில்லை. ஒருவன் இன்னொருவனைத் தாக்கி படுகொலை செய்வதைப் போலத்தான் இதையும் கருத வேண்டும். ஏனென்றால், அந்தப் பெண்ணை வயல்வெளியில் அவன் கெடுத்தபோது அவள் கூச்சல் போட்டும், காப்பாற்ற யாரும் வராமல் போய்விட்டார்கள்” என்று சொல்கிறது.—உபா. 22:25-27.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, ‘அவள் கூச்சல் போட்டதாகவும், காப்பாற்ற யாரும் வராமல் போய்விட்டதாகவும்’ நீதிபதிகள் நம்பினார்கள். அதனால், அவள்மேல் விபச்சாரம் செய்ததற்கான குற்றம் சுமத்தப்படவில்லை. ஆனால், அவளை அவன் “பலாத்காரம்” செய்ததால், கற்பழிப்பு மற்றும் விபச்சாரம் செய்ததற்கான குற்றம் அவன்மேல் சுமத்தப்பட்டது.

இப்படி, அந்தப் பெண் நிரபராதி என்ற விஷயத்தைத் திருச்சட்டம் முக்கியப்படுத்திக் காட்டினாலும், அந்த மனிதன்மீது கற்பழிப்பு மற்றும் விபச்சாரம் செய்ததற்கான குற்றம் இருப்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்த விஷயங்களை நீதிபதிகள் ‘நன்றாக விசாரித்திருப்பார்கள்’ என்றும், கடவுள் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்த தெளிவான நியமங்களின் அடிப்படையில் முடிவு எடுத்திருப்பார்கள் என்றும் நாம் உறுதியாக நம்பலாம்.—உபா. 13:14; 17:4; யாத். 20:14.