Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 52

பெற்றோர்களே, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

பெற்றோர்களே, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

“பிள்ளைகள் யெகோவா தரும் சொத்து.”—சங். 127:3.

பாட்டு 88 பிள்ளைகள், தேவன் தந்த சொத்து

இந்தக் கட்டுரையில்... *

1. பெற்றோர்களுக்கு யெகோவா என்ன பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்?

பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற ஆசையோடுதான் முதல் தம்பதியை யெகோவா படைத்தார். அதனால்தான், “பிள்ளைகள் யெகோவா தரும் சொத்து” என்று பைபிள் சொல்கிறது. (சங். 127:3) இந்த வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது? இதை யோசித்துப்பாருங்கள்: உங்கள் நெருங்கிய நண்பர், ஒரு பெரிய தொகையை உங்களிடம் கொடுத்து அதைப் பத்திரமாக வைத்திருக்கும்படி சொல்கிறார். இப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள்மீது அவர் வைத்திருக்கிற நம்பிக்கையைப் பார்த்து நீங்கள் ஒருவேளை பூரித்துப்போவீர்கள். ஆனால், ‘இந்த பணத்த எப்படி பத்திரமா பார்த்துக்கப்போறேன்?’ என்ற கவலை உங்களுக்கு வரலாம். பெற்றோர்களே, இதைவிட ரொம்பவே மதிப்புள்ள ஒரு சொத்தை, நம் நெருங்கிய நண்பரான யெகோவா உங்கள் கையில் கொடுத்திருக்கிறார். உங்கள் பிள்ளைகள்தான் அந்தச் சொத்து! அவர்களை நன்றாகவும் சந்தோஷமாகவும் பார்த்துக்கொள்கிற பொறுப்பை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

2. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்?

2 தம்பதிகள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டுமா என்பதையும், எப்போது பெற்றெடுப்பது என்பதையும் யார் முடிவு செய்ய வேண்டும்? குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கு தம்பதிகள் என்ன செய்யலாம்? ஞானமான முடிவுகள் எடுப்பதற்கு உதவுகிற சில பைபிள் நியமங்களை இப்போது பார்க்கலாம்.

தம்பதிகளின் முடிவுக்கு மதிப்புக் காட்டுங்கள்

3. (அ) பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைப் பற்றி யார் முடிவு எடுக்க வேண்டும்? (ஆ) எந்தெந்த பைபிள் நியமங்களைக் குடும்பத்தாரும் நண்பர்களும் மனதில் வைக்க வேண்டும்?

3 சில கலாச்சாரங்களில், “பத்து மாசத்துல ஒரு குழந்தைய பெத்து எங்க கையில கொடுத்துடணும்” என்று புதுமணத் தம்பதிகளிடம் சொல்கிறார்கள். குழந்தையைப் பெற்றெடுக்கும்படி, குடும்பத்தில் இருக்கிறவர்களும் மற்றவர்களும் அவர்களைக் கட்டாயப்படுத்தலாம். “எங்க சபையில, பிள்ளைங்கள வெச்சிருக்கிற சிலர், குழந்தைய பெத்துக்க சொல்லி பிள்ளைங்க இல்லாதவங்கள கட்டாயப்படுத்துவாங்க” என்று ஆசியாவைச் சேர்ந்த ஜெத்ரோ என்ற சகோதரர் சொல்கிறார். ஆசியாவைச் சேர்ந்த ஜெஃப்ரி என்ற இன்னொரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “வயசானதுக்கு அப்புறம் உங்கள பாத்துக்க யாருமே இருக்க மாட்டாங்கனு பிள்ளைங்க இல்லாத தம்பதிகள்கிட்ட சிலர் சொல்றாங்க.” ஆனால், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைப் பற்றித் தம்பதிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்களுடைய முடிவு! அவர்களுடைய பொறுப்பு!! (கலா. 6:5, அடிக்குறிப்பு.) புதுமணத் தம்பதிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று குடும்பத்தாரும் நண்பர்களும் நினைக்கிறார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைப் பற்றித் தம்பதிகள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதை எல்லாருமே ஞாபகத்தில் வைக்க வேண்டும்.—1 தெ. 4:11.

4-5. எந்த இரண்டு விஷயங்களைப் பற்றித் தம்பதிகள் கலந்துபேச வேண்டும், இதைப் பற்றிப் பேச எது சரியான சமயம்? விளக்குங்கள்.

4 பிள்ளைகளை எப்போது பெற்றெடுக்கலாம்? எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுக்கலாம்? இவைதான், பிள்ளைகளைப் பெற்றெடுக்க விரும்பும் தம்பதிகளுக்கு முன்னால் இருக்கிற இரண்டு முக்கியமான விஷயங்கள். தம்பதிகள் இவற்றைப் பற்றிப் பேசுவதற்கு எது சரியான சமயமாக இருக்கும்? அப்படிப் பேசுவது ஏன் முக்கியம்?

5 பெரும்பாலும், இந்த விஷயங்களைப் பற்றி கல்யாணத்துக்கு முன்பாகவே பேசுவது நல்லது. ஏன்? ஒரு காரணம், இந்த விஷயத்தில் இரண்டு பேருக்குமே ஒரே கருத்து இருப்பது ரொம்ப முக்கியம். அதோடு, குழந்தைகளைப் பெற்றெடுக்க அவர்கள் விரும்பினால், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரா என்று யோசித்துப்பார்ப்பதும் ரொம்ப முக்கியம். பிள்ளைகள் பிறந்துவிட்டால் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கே அதிக நேரமும் சக்தியும் செலவாகும் என்பதால், கல்யாணமாகி ஒன்று அல்லது இரண்டு வருஷங்கள் கழித்து பிள்ளைகளைப் பெற்றெடுக்கலாம் என்று சில தம்பதிகள் முடிவு செய்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், கல்யாண வாழ்க்கைக்கு தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்ளவும் அந்தக் காலப்பகுதி உதவியாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.—எபே. 5:33.

6. நாம் வாழும் காலத்தை மனதில் வைத்து சில தம்பதிகள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள்?

6 சில தம்பதிகள், நோவாவின் மூன்று மகன்களையும் மருமகள்களையும் தங்களுடைய முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள். அந்த மூன்று தம்பதிகளும் கல்யாணம் செய்துகொண்ட உடனேயே பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை. (ஆதி. 6:18; 9:18, 19; 10:1; 2 பே. 2:5) நம்முடைய நாட்களை ‘நோவாவின் நாட்களுக்கு’ இயேசு ஒப்பிட்டார். அதோடு, ‘சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் கடைசி நாட்களில்’ நாம் வாழ்கிறோம். (மத். 24:37; 2 தீ. 3:1) இதை மனதில் வைத்து, யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக சில தம்பதிகள் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப்போடுகிறார்கள்.

பிள்ளைகளைப் பெற்றெடுப்பதா . . . எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுப்பது . . . போன்ற விஷயங்களை முடிவு செய்யும்போது, ஞானமான தம்பதிகள் ‘செலவைக் கணக்கு பார்க்கிறார்கள்’ (பாரா 7) *

7. லூக்கா 14:28, 29 மற்றும் நீதிமொழிகள் 21:5-ல் இருக்கிற நியமங்கள் தம்பதிகளுக்கு எப்படி உதவும்?

7 ஞானமாக நடந்துகொள்கிற சில தம்பதிகள், குழந்தைகளைப் பெற்றெடுக்கலாமா வேண்டாமா என்றும் எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுக்கலாம் என்றும் முடிவெடுப்பதற்குமுன்பு ‘செலவைக் கணக்கு பார்க்கிறார்கள்.’ (லூக்கா 14:28, 29-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகளை வளர்ப்பதற்கு பணம் மட்டுமல்ல, நேரமும் சக்தியும்கூட செலவாகும் என்பதை அனுபவமுள்ள பெற்றோர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அதனால், இந்தக் கேள்விகளைத் தம்பதிகள் யோசித்துப்பார்ப்பது ரொம்ப முக்கியம்: ‘குடும்பத்தோட அடிப்படை தேவைகள பூர்த்தி செய்றதுக்கு ரெண்டு பேருமே வேலைக்கு போக வேண்டியிருக்குமா? எதெல்லாம் அடிப்படை தேவைங்குறதுல ரெண்டு பேரோட கருத்தும் ஒத்துப்போகுதா? ரெண்டு பேருமே வேலைக்கு போறதா இருந்தா பிள்ளைங்கள யார் பாத்துக்குவாங்க? எப்படி யோசிக்கணும் நடந்துக்கணும்னு யார் அவங்களுக்கு சொல்லி தருவாங்க?’ இந்தக் கேள்விகளைக் கலந்துபேசும்போது, நீதிமொழிகள் 21:5-ல் இருக்கிற வார்த்தைகளைத் தம்பதிகள் மனதில் வைப்பது நல்லது. (வாசியுங்கள்.)

அன்பான ஒரு கணவர், தன் மனைவிக்கு உதவுவதற்காகத் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்கிறார் (பாரா 8)

8. தம்பதிகள் என்ன சவால்களை எதிர்பார்க்கலாம், அன்பான ஒரு கணவர் என்ன செய்வார்?

8 அப்பா அம்மா இரண்டு பேருடைய நேரமும் பிள்ளைகளுக்குத் தேவை. இரண்டு பேருமே தங்களுடைய சக்தியைச் செலவிடுவது அவசியம். ஆனால், ஒரு தம்பதிக்கு அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்துவிட்டால், ஒவ்வொரு பிள்ளையுடைய தேவைகளையும் கவனிப்பது சவால்தான்! சின்னஞ் சிறுசுகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் சிலர், தாங்கள் திக்குமுக்காடிப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக தாய்மார்கள், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் சோர்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில், பைபிளைப் படிப்பதும் ஜெபம் செய்வதும் ஊழியம் செய்வதும் அவர்களுக்குச் சிரமமாக இருக்கலாம். கூட்டங்களில் கவனிப்பதும் அவற்றிலிருந்து பிரயோஜனமடைவதும் சிரமமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், அன்பான ஒரு கணவர், கூட்டங்களிலும் வீட்டிலும் தன் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதன் மூலம் தன் மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கலாம். வீட்டு வேலைகள் செய்வதிலும் தன் மனைவிக்கு உதவலாம். அப்படிப்பட்ட ஒரு கணவர், குடும்ப வழிபாட்டிலிருந்து குடும்பத்தார் எல்லாரும் பிரயோஜனமடைவதற்காகக் கடினமாக முயற்சி செய்வார். குடும்பத்தோடு தவறாமல் ஊழியத்துக்கும் போவார்.

யெகோவாவை நேசிக்கப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

9-10. பிள்ளைகளுக்கு உதவ நினைக்கும் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

9 பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கக் கற்றுக்கொள்வதற்கு ஓர் அப்பா அம்மா எப்படி உதவலாம்? மோசமான இந்த உலகத்திலிருந்து பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம்? இதோ சில படிகள்!

10 உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். சிம்சோனின் அப்பா மனோவாவும் அவருடைய மனைவியும் என்ன செய்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். தங்களுக்கு ஒரு மகன் பிறக்கப்போகிறான் என்று தெரிந்தவுடன் அவனை எப்படி வளர்ப்பது என்று சொல்லித்தரும்படி அவர்கள் யெகோவாவிடம் கேட்டார்கள்.

11. நியாயாதிபதிகள் 13:8 காட்டுகிறபடி, மனோவாவின் உதாரணத்தைப் பெற்றோர்கள் எப்படிப் பின்பற்றலாம்?

11 போஸ்னியா-ஹெர்ஸிகோவினா நாட்டைச் சேர்ந்த நிஹாத்-அல்மா தம்பதி, மனோவாவிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். “‘நல்ல அப்பா அம்மாவா இருக்குறது எப்படினு சொல்லிக்கொடுங்க யெகோவாவே’னு மனோவா மாதிரியே நாங்களும் கெஞ்சி கேட்டோம். பைபிள், பிரசுரங்கள், கூட்டங்கள், மாநாடுகள் மூலமா அவர் எங்களோட ஜெபத்துக்கு பதில் கொடுத்தாரு” என்று அவர்கள் சொல்கிறார்கள்.நியாயாதிபதிகள் 13:8-ஐ வாசியுங்கள்.

12. யோசேப்பும் மரியாளும் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தார்கள்?

12 வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியம்தான். இருந்தாலும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் பிள்ளைகளின் மனதில் ஆழமாகப் பதியும். இதைத்தான் யோசேப்பும் மரியாளும் செய்தார்கள். இயேசுவுக்கும் தங்களுடைய மற்ற பிள்ளைகளுக்கும் நல்ல முன்மாதிரியாக இருந்தார்கள். குடும்பத்துக்காக யோசேப்பு ஓயாமல் உழைத்தார். அதோடு, யெகோவாவை வணங்க தன் குடும்பத்தாருக்கு உதவினார். (உபா. 4:9, 10) பஸ்காவைக் கொண்டாடுவதற்காக “ஒவ்வொரு வருஷமும்” அவர் தன்னுடைய குடும்பத்தை எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போனார். குடும்பமாகப் போக வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லாதபோதும் அவர் அப்படிச் செய்தார். (லூக். 2:41, 42) குடும்பமாகப் பயணம் செய்வது அவ்வளவு சௌகரியமாக இருக்காது என்றும், நேரமும் பணமும் ரொம்ப செலவாகும் என்றும் அன்றிருந்த அப்பாமார்கள் நினைத்திருக்கலாம். ஆனால், யோசேப்பு அப்படி நினைக்கவில்லை. யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர் உயர்வாக மதித்தார். அவற்றை மதிப்பதற்குப் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தார். மரியாளைப் பற்றி என்ன சொல்லலாம்? அவருக்கு வேதவசனங்கள் நன்றாகத் தெரிந்திருந்தன. கடவுளுடைய வார்த்தையை நேசிக்க வேண்டும் என்பதைத் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தன் பிள்ளைகளுக்கு அவர் நிச்சயம் கற்றுக்கொடுத்திருப்பார்.

13. யோசேப்பு-மரியாளின் உதாரணத்தை ஒரு தம்பதி எப்படிப் பின்பற்றினார்கள்?

13 மேலே சொல்லப்பட்ட நிஹாத்-அல்மா தம்பதி, யோசேப்பு-மரியாளின் உதாரணத்தையும் பின்பற்ற ஆசைப்பட்டார்கள். கடவுள்மேல் அன்பு காட்டவும் அவருக்குச் சேவை செய்யவும் தங்கள் மகனுக்கு உதவ இது அவர்களுக்கு எப்படிக் கைகொடுத்தது? அவர்களே சொல்வதைக் கவனியுங்கள்: “யெகோவா கொடுத்திருக்கிற நியமங்களின்படி வாழ்றது எவ்வளவு நல்லதுங்குறத நாங்க வாழ்ந்த விதத்தின் மூலமா எங்க மகனுக்கு காட்டுனோம்.” நிஹாத் இப்படிச் சொல்கிறார்: “உங்களோட பிள்ளை எப்படிப்பட்ட ஆளா இருக்கணும்னு ஆசைப்படுறீங்களோ அந்த மாதிரி நீங்களும் இருங்க.”

14. பிள்ளைகள் யாரோடு பழகுகிறார்கள் என்பது அப்பா அம்மாவுக்கு ஏன் தெரிந்திருக்க வேண்டும்?

14 நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க உதவுங்கள். தங்கள் பிள்ளைகள் யாரோடு பழகுகிறார்கள்... என்ன செய்கிறார்கள்... என்பதைப் பற்றி அப்பா அம்மா இரண்டு பேருக்கும் தெரிய வேண்டும். பிள்ளைகள் யாரோடு ஃபோனில் பேசுகிறார்கள்... சோஷியல் மீடியா மூலம் யாரோடு பழகுகிறார்கள்... என்றும் அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுடைய யோசனைகளிலும் நடத்தையிலும் அவர்களுடைய நண்பர்களின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும்.—1 கொ. 15:33.

15. ஜெசி என்ற சகோதரரிடமிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

15 பெற்றோர்களே, கம்ப்யூட்டரையோ மொபைல் ஃபோனையோ பயன்படுத்த உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்ன செய்யலாம்? பிலிப்பைன்ஸில் இருக்கிற ஜெசி என்கிற ஓர் அப்பா இப்படிச் சொல்கிறார்: “எலக்ட்ரானிக் சாதனங்கள எப்படி பயன்படுத்துறதுனு எங்களுக்கு தெரியாது. ஆனாலும் அதுல இருக்கிற ஆபத்துகள பத்தி எங்க பிள்ளைங்ககிட்ட சொல்லுவோம்.” தங்களுக்குப் பயன்படுத்தத் தெரியாது என்பதற்காக பிள்ளைகளும் பயன்படுத்தக் கூடாது என்று ஜெசி தடை போடவில்லை. “ஒரு புது மொழிய கத்துக்குறதுக்கும், கூட்டங்களுக்கு தயாரிக்குறதுக்கும், தினமும் பைபிள படிக்குறதுக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள பயன்படுத்துறது நல்லதுனு பிள்ளைங்ககிட்ட சொல்லுவேன்” என்கிறார் அவர். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், மெசேஜ் அனுப்புவதைப் பற்றியும் ஃபோட்டோக்களை இன்டர்நெட்டில் போடுவதைப் பற்றியும் நம் வெப்சைட்டில் இருக்கிற ஆலோசனைகளை உங்கள் பிள்ளைகளோடு கலந்து பேசியிருக்கிறீர்களா? (டெக்ஸ்ட்டிங்கை பற்றியும் ஆன்-லைன் ஃபோட்டோ ஷேரிங்கை பற்றியும் தெரிந்துகொள்ள jw.org® வெப்சைட்டில் டீனேஜர்கள் பகுதியைப் பாருங்கள்.) எலெக்ட்ரானிக் சாதனங்களும் நீங்களும்—யார் கட்டுப்பாட்டில் யார்?என்ற வீடியோவையும் சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா?என்ற வீடியோவையும் உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து பார்த்திருக்கிறீர்களா? * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) எலக்ட்ரானிக் சாதனங்களை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்று பிள்ளைகளுக்குச் சொல்லித் தர இவை ரொம்ப உதவியாக இருக்கும்.—நீதி. 13:20.

16. பெற்றோர்கள் நிறைய பேர் என்ன செய்திருக்கிறார்கள், அதன் பலன் என்ன?

16 கடவுளுடைய சேவையில் நல்ல முன்மாதிரிகளாக இருப்பவர்களோடு பிள்ளைகள் பழகுவதற்காக பெற்றோர்கள் நிறைய பேர் கடினமாக முயற்சி செய்கிறார்கள். கோட் டீவார் என்ற நாட்டில் இருக்கிற தானி-போமின் தம்பதி எடுத்த முயற்சியைப் பாருங்கள். வட்டாரக் கண்காணிகளைத் தங்களுடைய வீட்டில் அவர்கள் அடிக்கடி தங்கவைத்தார்கள். “இப்படி செஞ்சது எங்க பையனுக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்துச்சு. பின்னால என் மகன் ஒரு பயனியரா ஆனான், இப்ப துணை வட்டாரக் கண்காணியா சேவை செய்றான்” என்று தானி சொல்கிறார். நீங்களும் தானியைப் போலவே ஏதாவது செய்ய முடியுமா?

17-18. பிள்ளைகளுக்கு எப்போது பயிற்சி கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்?

17 சின்ன வயதிலேயே பயிற்சி கொடுக்க ஆரம்பியுங்கள். முடிந்தளவு சீக்கிரமாகவே பயிற்சி கொடுப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். (நீதி. 22:6) அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து பயணம் செய்த தீமோத்தேயுவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும், அவருடைய “சிசுப் பருவத்திலிருந்தே” அவருக்குப் பயிற்சி கொடுத்தார்கள்.—2 தீ. 1:5; 3:15.

18 கோட் டீவாரில் இருக்கிற ஸான் க்ளோட்-பீஸ் என்ற இன்னொரு தம்பதி என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள். யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் ஆறு பிள்ளைகளுக்கும் அவர்களால் உதவ முடிந்தது! இந்த வெற்றியின் ரகசியத்தைப் பற்றி அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “எங்க பிள்ளைங்க பிறந்து கொஞ்ச நாள்லயே, அதாவது அவங்க கைக்குழந்தைகளா இருந்தப்பவே, கடவுளுடைய வார்த்தைய அவங்க இதயத்துல பதிய வைக்க ஆரம்பிச்சிட்டோம்” என்று சொல்கிறார்கள். (உபா. 6:6, 7) ஐனிக்கேயாள் மற்றும் லோவிசாளின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்.

19. கடவுளுடைய வார்த்தையைப் பிள்ளைகளின் மனதில் பதிய வைப்பது எதைக் குறிக்கிறது?

19 யெகோவா சொல்லியிருக்கும் விஷயங்களைப் பிள்ளைகளின் ‘மனதில் பதிய வைப்பது’ எதைக் குறிக்கிறது? ஒரு விஷயத்தை “கற்றுக்கொடுப்பதையும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பதையும்” குறிக்கிறது. இதற்கு, பிள்ளைகளோடு பெற்றோர்கள் நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது பெற்றோருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அதன்படி செய்யவும் பிள்ளைகளுக்கு உதவ பெற்றோர்கள் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் எப்படிப் பயிற்சி கொடுக்கலாம் என்று அப்பா அம்மா யோசித்துப்பார்க்க வேண்டும் (பாரா 20) *

20. பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் சங்கீதம் 127:4 எப்படி உதவும்?

20 பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள். 127-ம் சங்கீதம், பிள்ளைகளை அம்புகளுக்கு ஒப்பிடுகிறது. (சங்கீதம் 127: 4-ஐ வாசியுங்கள்.) பொதுவாக, எல்லா அம்புகளும் ஒரேமாதிரி இருக்காது. சில அம்புகள் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும், சில அம்புகள் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அவற்றின் அளவுகளும் ஒரேமாதிரி இருக்காது. சில அம்புகள் பெரியதாக இருக்கும், சில அம்புகள் சிறியதாக இருக்கும். அதேபோல், பிள்ளைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. அதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் எப்படிப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அப்பா அம்மா முடிவு செய்ய வேண்டும். இஸ்ரேல் நாட்டில் வாழ்கிற ஒரு தம்பதி, தங்களுடைய இரண்டு பிள்ளைகளையும் நல்லபடியாக வளர்த்தார்கள். அந்தப் பிள்ளைகளும் யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள். அந்தத் தம்பதியால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? “ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியா பைபிள் படிப்பு நடத்தினோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். இப்படிச் செய்தது அவர்களுக்குப் பிரயோஜனமாக இருந்தது. இப்படிச் செய்வது தங்கள் குடும்பத்துக்கும் பிரயோஜனமாக இருக்குமா என்று அந்தந்த குடும்பத் தலைவர்கள் முடிவு செய்யலாம்.

யெகோவா உங்களுக்குக் கைகொடுப்பார்

21. பெற்றோர்களுக்கு யெகோவா எப்படிக் கைகொடுப்பார்?

21 பெற்றோர்களே! உங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நினைத்து நீங்கள் திக்குமுக்காடலாம். ஆனால் கவலைப்படாதீர்கள்! பிள்ளைகள் யெகோவா தந்த பரிசு. உங்களுக்குக் கைகொடுக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். உதவி கேட்டு நீங்கள் ஜெபம் செய்யும்போது, யெகோவா அதை காதுகொடுத்து கேட்பார். பைபிள், பிரசுரங்கள், சபையில் இருக்கிற முதிர்ச்சியுள்ள பெற்றோர்களின் முன்மாதிரி, அவர்கள் தருகிற ஆலோசனைகள் ஆகியவற்றின் மூலம் யெகோவா உங்கள் ஜெபத்துக்கு பதில் கொடுப்பார்.

22. பிள்ளைகளுக்குப் பெற்றோர்களால் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த சொத்து எது?

22 பிள்ளை வளர்ப்பு என்பது, 20 வருஷங்களுக்குச் செய்ய வேண்டிய ஒரு வேலை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், ‘பெற்றோர்’ என்ற பொறுப்பு அதோடு முடிந்துவிடுவதில்லை. அன்பு... நேரம்... பைபிள் அடிப்படையிலான பயிற்சி... இவைதான் பிள்ளைகளுக்குப் பெற்றோர்களால் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த சொத்து. பயிற்சி கொடுக்கும்போது, ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்ளும். ஆனால், யெகோவாவை நேசிக்கிற அப்பா அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நிறைய பேர், ஆசியாவைச் சேர்ந்த ஜோயன்னா மா என்ற சகோதரியைப் போல்தான் நினைக்கிறார்கள். “என்னோட அப்பா அம்மா, தேவையான சமயத்துல என்னை கண்டிச்சாங்க. யெகோவாவ நேசிக்கிறதுக்கு கத்துக்கொடுத்தாங்க. அவங்க கொடுத்த பயிற்சிய நான் நினைச்சு பார்க்குறேன். அதுக்காக அவங்களுக்கு ரொம்ப நன்றியோட இருக்கேன். அவங்க எனக்கு உயிர் கொடுத்தது மட்டுமில்ல, பிரயோஜனமான ஒரு வாழ்க்கையையும் கொடுத்திருக்காங்க” என்று அவர் சொல்கிறார். (நீதி. 23:24, 25) லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இவரைப் போல்தான் நினைக்கிறார்கள்!

பாட்டு 104 யெகோவாவைப் போற்றுவோம், வா!

^ பாரா. 5 தம்பதிகள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டுமா? அப்படியென்றால், எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுப்பது? யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்? நம் காலத்தில் வாழும் சிலருடைய உதாரணங்களும் பைபிள் நியமங்களும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.

^ பாரா. 15 ஜூன் 2018 பயிற்சிப் புத்தகத்தில் இருக்கிற “சோஷியல் நெட்வொர்க்—படுகுழியில் விழுந்துவிடாதீர்கள்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 60 படங்களின் விளக்கம்: பிள்ளைகளைப் பெற்றெடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு தம்பதி கலந்து பேசுகிறார்கள். பிள்ளை வளர்ப்பில் இருக்கிற சந்தோஷங்களையும் பொறுப்புகளையும் நினைத்துப்பார்க்கிறார்கள்.

^ பாரா. 64 படங்களின் விளக்கம்: தங்கள் பிள்ளைகளின் வயதையும் திறமைகளையும் மனதில் வைத்து ஒரு தம்பதி அவர்களுக்குத் தனித்தனியாகப் படிப்பு நடத்துகிறார்கள்.