Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 51

யெகோவாவைப் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்?

யெகோவாவைப் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்?

“உங்களுடைய பெயரைத் தெரிந்தவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைப்பார்கள். யெகோவாவே, உங்களைத் தேடி வருகிறவர்களை நீங்கள் கைவிடவே மாட்டீர்கள்.”—சங். 9:10.

பாட்டு 64 சத்யத்தை நெஞ்சில் வை

இந்தக் கட்டுரையில்... *

1-2. ஆன்ஜலீட்டோ சொல்வதை வைத்துப் பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் அப்பா அம்மா ஒரு யெகோவாவின் சாட்சியா? அப்படியென்றால், யெகோவாவோடு இருக்கும் நட்பு என்பது பரம்பரைச் சொத்து கிடையாது என்பதை ஞாபகம் வையுங்கள். அதனால், உங்கள் அப்பா அம்மாவிடமிருந்து அது தானாகவே உங்களுக்கு வந்துவிடும் என்று நினைக்காதீர்கள். நம் பெற்றோர் யெகோவாவை வணங்கினாலும் சரி இல்லை என்றாலும் சரி, நாம்தான் யெகோவாவோடு நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

2 ஆன்ஜலீட்டோ என்ற சகோதரர் என்ன சொன்னார் என்று பாருங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில்தான் அவர் வளர்க்கப்பட்டார். சின்ன வயதில், கடவுளோடு தனக்கு ஒரு நெருக்கமான நட்பு இல்லாததுபோல் அவருக்குத் தோன்றியது. “என் குடும்பத்துல இருக்கிறவங்க யெகோவாவ வணங்குனாங்க. அதனால நானும் வணங்குனேன்” என்று அவர் சொல்கிறார். ஒருகட்டத்தில், பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசித்துப்பார்ப்பதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதுமட்டுமல்ல, அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்யவும் ஆரம்பித்தார். இதனால் என்ன ஆனது? அவர் இப்படிச் சொல்கிறார்: “என்னோட பாசமான அப்பா யெகோவாகிட்ட நெருங்கி போறதுக்கு ஒரே வழி அவர பத்தி நிறைய தெரிஞ்சிக்கிறதுதான்.” அவருடைய அனுபவம் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. யெகோவாவைப் பற்றி வெறுமனே சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பதற்கும், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கும் என்ன வித்தியாசம்? யெகோவாவைப் பற்றி நாம் எப்படி நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்?

3. யெகோவாவைப் பற்றி வெறுமனே சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பதற்கும் அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

3 யெகோவாவின் பெயரையும், அவர் சொன்ன, செய்த சில விஷயங்களையும் தெரிந்துவைத்திருப்பதால் நமக்கு யெகோவாவைப் பற்றித் தெரியும் என்று நாம் நினைத்துக்கொள்ளலாம். ஆனால், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. யெகோவாவைப் பற்றியும் அவருடைய அருமையான குணங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு நேரம் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான், சில விஷயங்களை அவர் ஏன் சொல்கிறார், ஏன் செய்கிறார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்போது, நம்முடைய யோசனைகளும் முடிவுகளும் செயல்களும் அவருக்குப் பிடித்த மாதிரி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட உடனே நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.

4. பைபிளில் இருக்கும் உதாரணங்களைப் படிப்பது நமக்கு எப்படி உதவும்?

4 யெகோவாவை வணங்குவதென்று நாம் முடிவு எடுக்கும்போது, சிலர் நம்மைக் கேலி செய்யலாம். கூட்டங்களுக்குப் போக ஆரம்பிக்கும்போது, இன்னும் அதிகமாக நம்மை எதிர்க்கலாம். ஆனால் நாம் யெகோவாவை நம்பினால், நம்மை ஒருபோதும் அவர் கைவிட மாட்டார். அவரை நம்புவதன் மூலம், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நட்புக்கு அஸ்திவாரம் போட ஆரம்பித்திருக்கிறோம் என்று சொல்லலாம். கடவுளோடு இணைபிரியாத நட்பை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு நம்மால் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக! நம்மைப் போன்ற பாவ இயல்புள்ளவர்களான மோசே மற்றும் தாவீது ராஜாவால் அதைச் செய்ய முடிந்ததென்றால், நம்மாலும் முடியும். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அலசி ஆராயும்போது, இரண்டு கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம். (1) யெகோவாவைப் பற்றி அவர்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள்? (2) அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

‘பார்க்க முடியாதவரை’ மோசே பார்த்தார்

5. என்ன செய்வதென்று மோசே முடிவு எடுத்தார்?

5 தான் கற்றுக்கொண்டதை மோசே செயல்படுத்தினார். அவருக்குச் சுமார் 40 வயது ஆனபோது, “பார்வோனுடைய மகளின் மகன்” என்று அழைக்கப்படுவதைவிட, கடவுளுடைய மக்களான இஸ்ரவேலர்களோடு பழகுவதைத்தான் அவர் விரும்பினார். (எபி. 11:24) பெரிய அந்தஸ்தை இழக்கக்கூட அவர் தயங்கவில்லை. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களின் பக்கம் சேர்ந்தால், கடவுளாகக் கருதப்பட்ட பார்வோனின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தும் அவர் தைரியமான முடிவு எடுத்தார். அவருக்கு எந்தளவு விசுவாசம் இருந்திருக்க வேண்டும்! யெகோவாவின் மேல் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பந்தத்துக்கு அந்த நம்பிக்கைதான் அஸ்திவாரமாக இருந்தது.—நீதி. 3:5.

6. மோசேயிடமிருந்து நமக்கு என்ன பாடம்?

6 பாடங்கள்: யெகோவாவைத்தான் வணங்க வேண்டும் என்றும் அவருடைய மக்களின் பக்கம் இருக்க வேண்டும் என்றும் மோசே முடிவு எடுத்தார். நாமும் அவரைப் போலவே முடிவு எடுப்போமா? யெகோவாவை வணங்குவதற்கு நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்; மற்றவர்களின் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் நம்முடைய பரலோகத் தந்தையை நம்பினால், அவர் நிச்சயம் நமக்குப் பக்கபலமாக இருப்பார்.

7-8. மோசே எதைப் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொண்டார்?

7 யெகோவாவின் குணங்களைப் பற்றி மோசே தெரிந்துகொண்டே இருந்தார்; கடவுளுடைய விருப்பத்தை விடாமல் செய்தார். அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை வழிநடத்திக் கொண்டு போகும்படி யெகோவா மோசேயிடம் சொன்னபோது, அந்த பொறுப்பைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை. அதைச் செய்ய தனக்குத் தகுதியில்லை என்று யெகோவாவிடம் அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால் யெகோவா, கரிசனையோடு அவருக்கு உதவினார். (யாத். 4:10-16) அதனால், இடியைப் போல் இருந்த நியாயத்தீர்ப்பு செய்திகளை பார்வோனிடம் மோசேயால் சொல்ல முடிந்தது. பிறகு, இஸ்ரவேலர்களை யெகோவா காப்பாற்றி, பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் அழித்தபோது, அவருடைய வல்லமையை மோசே பார்த்தார்.—யாத். 14:26-31; சங். 136:15.

8 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வெளியே வந்த பிறகு, தொட்டதற்கெல்லாம் குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும், யெகோவா அவர்களிடம் பொறுமையாக இருந்ததை மோசே கவனித்தார். (சங். 78:40-43) இன்னொரு சமயம், மோசே சொன்னதைக் கேட்டு யெகோவா தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டார். இப்படி, அவர் காட்டிய மிகச் சிறந்த மனத்தாழ்மையையும் மோசே கவனித்தார்.—யாத். 32:9-14.

9. எபிரெயர் 11:27 காட்டுகிறபடி, மோசேக்கு யெகோவாவோடு எப்படிப்பட்ட பந்தம் இருந்தது?

9 இஸ்ரவேலர்கள் பயணம் செய்த அந்தக் காலத்துக்குப் பிறகு, யெகோவாவோடு மோசேக்கு இருந்த பந்தம் இன்னும் பலமானது. எப்படிச் சொல்கிறோம்? தன்னுடைய பரலோகத் தந்தையைப் பார்ப்பதுபோல் மோசே உணர்ந்தார்! (எபிரெயர் 11:27-ஐ வாசியுங்கள்.) அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கமான பந்தத்தைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசினார்.’—யாத். 33:11.

10. யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

10 பாடங்கள்: யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவருடைய குணங்களைப் பற்றிக் கற்றுக்கொள்வதோடு, அவருடைய விருப்பத்தையும் செய்ய வேண்டும். ‘எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்தான்’ இன்று யெகோவாவின் விருப்பம்! (1 தீ. 2:3, 4) அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கான ஒரு வழி, அவரைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித்தருவது!

11. மற்றவர்களுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுக்கும்போது நாம் எப்படி அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறோம்?

11 உண்மை என்னவென்றால், மற்றவர்களுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுக்கும்போது நாமும் அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறோம். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: நல்ல உள்ளம் படைத்த மக்களைக் கண்டுபிடிக்க யெகோவா உதவும்போது, அவருடைய கரிசனையை உணருகிறோம். (யோவா. 6:44; அப். 13:48) நம்மோடு பைபிள் படிப்பவர்கள் தங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை விட்டுவிடும்போதும் புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள ஆரம்பிக்கும்போதும், பைபிளின் வல்லமையைப் பார்க்கிறோம். (கொலோ. 3:9, 10) தன்னைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் மீட்புப் பெறுவதற்கும் நம் பகுதியில் இருப்பவர்களுக்கு யெகோவா வாய்ப்புகளைக் கொடுக்கும்போது, அவருடைய பொறுமையை உணருகிறோம்.—ரோ. 10:13-15.

12. யாத்திராகமம் 33:13 காட்டுகிறபடி மோசே என்ன கேட்டார், ஏன்?

12 யெகோவாவோடு இருந்த பந்தத்தை மோசே லேசாக எடுத்துக்கொள்ளவில்லை. வல்லமையான செயல்களைச் செய்வதற்கு யெகோவா மோசேயைப் பயன்படுத்தியிருந்ததால், அவருக்கு நிச்சயம் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். இருந்தாலும், யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள உதவும்படி மோசே கேட்டார். (யாத்திராகமம் 33:13-ஐ வாசியுங்கள்.) யெகோவாவிடம் இந்த வேண்டுகோளை வைத்தபோது, மோசே 80 வயதைத் தாண்டியிருந்தார். இருந்தாலும், கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டது வெறும் கையளவுதான் என்பதையும் தெரியாதது கடலளவு என்பதையும் அவர் உணர்ந்தார்.

13. கடவுளோடு இருக்கிற நட்பை பொக்கிஷம்போல் பார்க்கிறோம் என்பதைக் காட்டுகிற ஒரு வழி என்ன?

13 பாடங்கள்: நாம் எத்தனை வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தாலும், அவரோடு இருக்கும் பந்தத்தை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடவுளோடு நமக்கு இருக்கிற நட்பை பொக்கிஷம்போல் பார்க்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வழி, அவரிடம் ஜெபம் செய்வது!

14. கடவுளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள ஜெபம் ஏன் ஒரு முக்கிய வழியாக இருக்கிறது?

14 நல்ல பேச்சுத்தொடர்பு, பந்தங்களை இணைக்கிற பாலமாக இருக்கிறது. அதனால், கடவுளிடம் அடிக்கடி பேசுங்கள். உங்கள் இதயத்தின் ஆழத்தில் இருக்கிற எண்ணங்களை அவர் முன் கொட்டத் தயங்காதீர்கள். (எபே. 6:18) துருக்கியில் வாழும் கிறிஸ்டா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என்னோட எண்ணங்கள ஒவ்வொரு தடவையும் யெகோவாகிட்ட சொல்றப்போ, அவர் எனக்கு உதவி செய்றத பார்க்குறப்போ, அவர் மேல இருக்கிற அன்பும் நம்பிக்கையும் அதிகமாகுது. என்னோட ஜெபத்துக்கு அவர் எப்படி பதில் கொடுக்குறாருங்குறத பார்க்குறப்போ, அவர் என்னோட அப்பாவாவும் நண்பராவும் இருக்கிறத உணர முடியுது.”

யெகோவாவின் இதயத்துக்குப் பிடித்தமானவர்

15. தாவீது ராஜாவைப் பற்றி யெகோவா என்ன சொன்னார்?

15 யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசத்தில் தாவீது ராஜா பிறந்தார். ஆனால், தன்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் யெகோவாவை வணங்குகிறார்கள் என்பதற்காக தாவீது அவரை வணங்கவில்லை. யெகோவாவோடு ஒரு நல்ல நட்பை அவர் வளர்த்துக்கொண்டார். யெகோவாவும் அவரை நெஞ்சார நேசித்தார். அதனால்தான், அவரை தன்னுடைய ‘இதயத்துக்குப் பிடித்தமானவன்’ என்று சொன்னார். (அப். 13:22) யெகோவாவோடு தாவீதால் எப்படி அப்படியொரு அன்யோன்யமான நட்பை வளர்த்துக்கொள்ள முடிந்தது?

16. படைப்புகளைப் பார்த்து யெகோவாவைப் பற்றி தாவீது என்ன கற்றுக்கொண்டார்?

16 படைப்புகளிலிருந்து யெகோவாவைப் பற்றி தாவீது கற்றுக்கொண்டார். சின்ன வயதில், தன்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்ப்பதற்காக பல மணிநேரங்கள் திறந்தவெளியில் தாவீது இருந்தார். அதுபோன்ற சமயங்களில், யெகோவாவின் படைப்புகளைப் பற்றி அவர் ஆழமாக யோசித்துப்பார்த்திருப்பார். இரவு வானில் கொத்துக்கொத்தாக இருந்த நட்சத்திரங்களைப் பார்த்தது மட்டுமல்ல, அவற்றைப் படைத்தவருடைய குணங்களைப் பற்றியும் யோசித்திருப்பார். அதனால், “வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது. ஆகாயம் அவருடைய கைவண்ணத்தை அறிவிக்கிறது” என்று எழுதினார். (சங். 19:1, 2) மனிதர்கள் எவ்வளவு அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை யோசித்துப்பார்த்தபோது, யெகோவா எவ்வளவு ஞானமுள்ளவர் என்பதை அவர் புரிந்துகொண்டார். (சங். 139:14) யெகோவாவின் கைவண்ணங்களைப் பற்றி ஆழமாக யோசிக்க யோசிக்க, அவருக்கு முன்னால் தான் ஒன்றுமே இல்லை என்பதை தாவீது உணர்ந்தார்.

17. படைப்புகளைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போது என்ன கற்றுக்கொள்வீர்கள்?

17 பாடங்கள்: படைப்புகளை ரசியுங்கள். அழகு கொஞ்சும் பூமியை யெகோவா படைத்திருக்கிறார். அதனால், ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருக்காதீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் அழகான உலகத்தைப் பாருங்கள், வியந்துபோவீர்கள்! செடி கொடிகள், மிருகங்கள், மனிதர்கள் என யெகோவாவின் கைவண்ணங்களைப் பற்றி யோசியுங்கள். யெகோவாவைப் பற்றி அவை உங்களுக்குச் சொல்லித்தரும். இப்படிச் செய்யும்போது, ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பான தந்தையைப் பற்றி ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். (ரோ. 1:20) அவர்மீது இருக்கும் அன்பு வளர்ந்துகொண்டே போவதைப் பார்ப்பீர்கள்.

18. பதினெட்டாம் சங்கீதம் காட்டுகிறபடி, தாவீது எதை ஒத்துக்கொண்டார்?

18 யெகோவாதான் தனக்கு உதவுகிறார் என்பதை தாவீது உணர்ந்தார். தன் அப்பாவின் ஆடுகளை சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் தாவீது காப்பாற்றினார். கொடூரமான அந்த மிருகங்களை கொன்றுபோடுவதற்கு யெகோவாதான் தனக்கு உதவினார் என்பதை அவர் புரிந்துகொண்டார். ராட்சதனான கோலியாத்தை தோற்கடித்தபோதும் யெகோவாவின் வழிநடத்துதலை அவர் உணர்ந்தார். (1 சா. 17:37) பொறாமைபிடித்த சவுல் ராஜாவிடமிருந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த சமயத்திலும், யெகோவாதான் தன்னைப் பாதுகாத்தார் என்பதைப் புரிந்துகொண்டார். (சங். 18, மேல்குறிப்பு) தாவீது தலைக்கனம் பிடித்தவராக இருந்திருந்தால், அதெல்லாம் தான் செய்த சாதனைதான் என்று தம்பட்டம் அடித்திருப்பார். ஆனால், ஒருபோதும் அவர் அப்படிச் செய்யவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் யெகோவாவின் கை இருந்ததை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டார்.—சங். 138:6.

19. தாவீதின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

19 பாடங்கள்: ‘உதவி செய்யுங்க யெகோவாவே’ என்று கேட்பதோடு நாம் நிறுத்திக்கொள்ளக் கூடாது. அவர் நமக்கு எப்போது உதவுகிறார், எப்படி உதவுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைபாடுகளை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டால், நம்மால் முடியாததைச் செய்துமுடிக்க யெகோவா உதவுவார். யெகோவாதான் நமக்கு உதவுகிறார் என்பதை உணரும் ஒவ்வொரு தடவையும் அவரோடு இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். இது எவ்வளவு உண்மை என்பதை, யெகோவாவுக்குப் பல வருஷங்கள் உண்மையோடு சேவை செய்த சகோதரர் ஐசக்கின் அனுபவம் காட்டுகிறது. அவர் பிஜி தீவில் இருக்கிறார். “என் வாழ்க்கைய திரும்பி பார்க்குறப்போ, நான் பைபிள படிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் யெகோவா எப்படியெல்லாம் உதவியிருக்காருங்குறது தெரியுது. யெகோவா நிஜமானவரு!” என்று அவர் சொல்கிறார்.

20. யெகோவாவோடு தாவீதுக்கு இருந்த பந்தத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

20 யெகோவாவின் குணங்களை தாவீது வளர்த்துக்கொண்டார். தன்னுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளும் திறமையோடுதான் யெகோவா நம்மைப் படைத்தார். (ஆதி. 1:26) அதனால், அவருடைய குணங்களைப் பற்றி எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு அதிகமாக அவற்றை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். தன்னுடைய பரலோகத் தந்தையைப் பற்றி தாவீது நன்றாகத் தெரிந்துவைத்திருந்ததால், மற்றவர்களோடு பழகும்போதும் அவரைப் போலவே நடந்துகொண்டார். ஒருசமயம், யெகோவாவுக்கு எதிராக தாவீது பெரிய பாவத்தைச் செய்தார். பத்சேபாளோடு முறைகேடான உறவுகொண்டார். பிறகு, அவளுடைய கணவரைக் கொன்றுபோட்டார். (2 சா. 11:1-4, 15) ஆனாலும், தாவீதுக்கு யெகோவா இரக்கம் காட்டினார். அதற்கு ஒரு காரணம், யெகோவாவைப் போலவே தாவீதும் மற்றவர்கள்மேல் இரக்கம் காட்டியிருந்தார்! யெகோவாவோடு தாவீதுக்கு அவ்வளவு பலமான பந்தம் இருந்ததால், இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்களிலேயே தாவீதுக்கு மக்களின் இதயத்தில் தனி இடம் இருந்தது. மற்ற ராஜாக்கள் பார்த்துப் பின்பற்றுமளவுக்கு தாவீதை யெகோவா முன்மாதிரியாக வைத்திருந்தார்.—1 ரா. 15:11; 2 ரா. 14:1-3.

21. எபேசியர் 4:24; 5:1 சொல்வதுபோல் ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதால்’ என்ன நன்மை?

21 பாடங்கள்: நாம் ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.’ அப்படிச் செய்வது நமக்கு நன்மையைச் சேர்ப்பது மட்டுமல்ல, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் வழி திறக்கும். கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது, நாம் அவருடைய பிள்ளைகள் என்பதை நிரூபிக்கிறோம்.எபேசியர் 4:24; 5:1-ஐ வாசியுங்கள்.

யெகோவாவைப் பற்றி அதிகமதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்

22-23. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்ட விஷயங்களின்படி வாழும்போது நமக்கு என்ன நன்மை?

22 இதுவரை பார்த்ததுபோல், படைப்புகளைக் கவனிப்பதன் மூலமும் பைபிளைப் படிப்பதன் மூலமும் நாம் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். மோசே மற்றும் தாவீது உட்பட, நாம் பின்பற்ற வேண்டிய நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் மூலம் யெகோவா தன்னுடைய பங்கைச் செய்துவிட்டார். நாம் நம்முடைய பங்கில், அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக நம் கண்களையும் காதுகளையும் இதயத்தையும் திறக்க வேண்டும்.

23 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதை நாம் ஒருபோதும் நிறுத்திவிட மாட்டோம். (பிர. 3:11) அவரைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் என்பதைவிட, அதை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். அவரைப் பற்றித் தெரிந்துகொண்ட விஷயங்களின்படி வாழும்போதும், அவரைப் போலவே நடந்துகொள்ளும்போதும் அவர் நம்மிடம் நெருங்கி வருவார். (யாக். 4:8) அவரைத் தேடிப்போகிறவர்களை அவர் கைவிடவே மாட்டார் என்ற உறுதியைத் தன்னுடைய வார்த்தையின் மூலம் யெகோவா கொடுத்திருக்கிறார்!

பாட்டு 95 ‘யெகோவா நல்லவரென்று ருசித்துப் பாருங்கள்’

^ பாரா. 5 கடவுள் இருக்கிறார் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். ஆனால், அவரைப் பற்றி அவர்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. அப்படியென்றால், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வது என்றால் என்ன? அவரோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளும் விஷயத்தில் மோசேயிடமிருந்தும் தாவீதிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.