Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 50

யெகோவா உங்களுக்கு விடுதலை தருவார்

யெகோவா உங்களுக்கு விடுதலை தருவார்

“தேசத்திலுள்ள எல்லாருக்கும் விடுதலையை அறிவிக்க வேண்டும்.”—லேவி. 25:10.

பாட்டு 136 கடவுளுடைய ஆட்சி வருக!

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) சில நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்? (“ இஸ்ரவேலர்கள் கொண்டாடிய விடுதலை வருஷம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) (ஆ) லூக்கா 4:16-19 காட்டுகிறபடி இயேசு எதைப் பற்றிச் சொன்னார்?

சில நாடுகளைச் சேர்ந்த மக்கள், ஏதாவது ஒரு முக்கியமான சம்பவம் நடந்து 50 வருஷங்கள் ஆனவுடன், அதைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு வாரம் முழுவதும் அவர்கள் அதைக் கொண்டாடலாம். ஏன், அதைவிட அதிக நாட்களுக்கும் கொண்டாடலாம். ஆனால், கடைசியில் அந்தக் கொண்டாட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது; அந்த நாளும் அவர்களுடைய மனதைவிட்டுப் போய்விடுகிறது.

2 பூர்வ இஸ்ரவேலில், ஒவ்வொரு 50-வது வருஷத்திலும் ஒரு கொண்டாட்டம் இருந்தது; ஒரு வருஷம் முழுவதும் இஸ்ரவேலர்கள் அதைக் கொண்டாடினார்கள். அது அவர்களுக்கு விடுதலை வருஷமாக இருந்தது! அதைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? ஏனென்றால், நம்மை விடுதலை செய்வதற்காக யெகோவா செய்திருக்கும் ஓர் ஏற்பாட்டை அது ஞாபகப்படுத்துகிறது. இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்த விடுதலையைவிட, இந்த ஏற்பாட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் விடுதலை மிகச் சிறந்தது. ஏனென்றால், இது நிரந்தரமான ஒரு விடுதலை! சொல்லப்போனால், இந்த ஏற்பாட்டிலிருந்து இப்போதே நன்மையடைகிறோம். இந்த அற்புதமான விடுதலையைப் பற்றி இயேசுவும் சொன்னார்.—லூக்கா 4:16-19-ஐ வாசியுங்கள்.

விடுதலை வருஷத்தில் இஸ்ரவேலர்கள் ரொம்பச் சந்தோஷமாக இருந்தார்கள். ஏனென்றால், அடிமைகளாக இருந்தவர்கள் தங்கள் குடும்பத்துக்குத் திரும்பி வந்தார்கள், அவர்களுடைய பரம்பரைச் சொத்தும் அவர்களுடைய கைக்கு வந்துசேர்ந்தது (பாரா 3) *

3. லேவியராகமம் 25:8-12-ன்படி, விடுதலை வருஷத்தின்போது இஸ்ரவேலர்கள் எப்படி நன்மையடைந்தார்கள்?

3 இஸ்ரவேலர்களுக்கு கடவுள் ஏற்பாடு செய்த விடுதலை வருஷத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, இயேசு சொன்ன விடுதலையைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். யெகோவா இஸ்ரவேலர்களிடம், “50-ஆம் வருஷத்தை நீங்கள் புனிதமாக்கி, தேசத்திலுள்ள எல்லாருக்கும் விடுதலையை அறிவிக்க வேண்டும். அந்த வருஷம் உங்களுக்கு விடுதலை வருஷமாக இருக்கும். அவரவர் தங்களுடைய பரம்பரை நிலத்துக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் திரும்பிப்போக வேண்டும்” என்று சொன்னார். (லேவியராகமம் 25:8-12-ஐ வாசியுங்கள்.) வாராந்தர ஓய்வுநாளின் மூலம் இஸ்ரவேலர்கள் எப்படி நன்மையடைந்தார்கள் என்று முந்தின கட்டுரையில் பார்த்தோம். அப்படியென்றால், ‘விடுதலை வருஷம்’ என்ற ஏற்பாட்டின் மூலம் இஸ்ரவேலர்கள் எப்படி நன்மையடைந்தார்கள்? கடன் தொல்லையில் மாட்டிக்கொண்ட ஓர் இஸ்ரவேலன், தன்னுடைய நிலத்தை விற்றுவிட்டதாக வைத்துக்கொள்வோம். விடுதலை வருஷத்தின்போது, அவன் விற்ற நிலம் அவனுடைய கைக்கே வந்துசேரும். அதன் மூலம், அவனால் தன்னுடைய ‘பரம்பரை நிலத்துக்கு திரும்பிப்போக’ முடிந்தது. அவனுடைய பிள்ளைகளின் கையைவிட்டும் அந்த நிலம் போகாமல் இருந்தது. இன்னொரு சூழ்நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். நிறைய கடன் வாங்கிவிட்டு அதைத் திரும்பக் கொடுக்க முடியாததால், தன்னுடைய பிள்ளையை அடிமையாக விற்க வேண்டிய நிலைமை ஓர் இஸ்ரவேலனுக்கு வந்திருக்கலாம். அல்லது அவனே ஒரு அடிமையாகப் போயிருக்கலாம். ஆனால் விடுதலை வருஷத்தின்போது, அடிமைகளாகப் போனவர்களால் தங்கள் ‘குடும்பத்துக்கு திரும்பிப்போக’ முடிந்தது. இப்படி, ஒருவர்கூட நிரந்தர அடிமையாக இருக்கவில்லை. தன்னுடைய மக்கள்மீது யெகோவாவுக்கு எந்தளவு அக்கறை இருந்தது என்பதை இது காட்டுகிறது, இல்லையா?

4-5. இஸ்ரவேலர்களின் விடுதலை வருஷத்தைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

4 விடுதலை வருஷத்தால் இன்னொரு நன்மையும் கிடைத்தது. அதைப் பற்றி மோசேயின் மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்: “உங்களுக்குள் யாரும் ஏழையாக இருக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா சொத்தாகக் கொடுக்கிற தேசத்தில் யெகோவா உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.” (உபா. 15:4) அன்றிருந்த நிலைமைக்கும் இன்றிருக்கும் நிலைமைக்கும் எவ்வளவு வித்தியாசம்! இன்று, பணக்காரர்கள் சொத்துக்குமேல் சொத்துகளைக் குவித்துக்கொண்டே போகிறார்கள்; ஏழைகளோ பரம ஏழைகளாக ஆகிக்கொண்டே போகிறார்கள்!

5 கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று திருச்சட்டத்தின் கீழ் இல்லை. அதனால், அடிமைகளை விடுதலை செய்வது... கடன்களை ரத்து செய்வது... பரம்பரை நிலத்தைத் திரும்பக் கொடுப்பது... போன்ற விடுதலை வருஷத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை நாம் செய்வதில்லை. (ரோ. 7:4; 10:4; எபே. 2:15) இருந்தாலும், விடுதலை வருஷம் என்ற ஏற்பாட்டைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அனுபவித்ததைப் போன்ற ஒரு விடுதலையை நம்மாலும் அனுபவிக்க முடியும் என்பதை அது ஞாபகப்படுத்துகிறது.

இயேசு விடுதலையை அறிவித்தார்!

6. எதிலிருந்து மனிதர்களுக்கு விடுதலை தேவை?

6 நம்எல்லாருக்கும் விடுதலை தேவை! ஏனென்றால், பாவத்தின் கொடூர பிடியில் நாம் அடிமைகளாக சிக்கித் தவிக்கிறோம். பாவத்தின் விளைவாக நமக்கு வயதாகிறது, நோய் வருகிறது, கடைசியில் சாவும் நம்மைத் தேடி வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்களைக் கண்ணாடியில் பார்க்கும்போதும், சிகிச்சைக்காக மருத்துவரிடம் போகும்போதும், இந்த உண்மையை நிறைய பேர் உணருகிறார்கள். அதுமட்டுமல்ல, மிக மோசமான தவறுகளைச் செய்யும்போது நாம் சோர்ந்துவிடுகிறோம். ‘உடலில் இருக்கிற பாவச் சட்டம் [தன்னை] சிறைபிடித்து வைத்திருப்பதாக’ அப்போஸ்தலன் பவுல் சொன்னார். “எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்! மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்?” என்றும் சொன்னார்.—ரோ. 7:23, 24.

7. விடுதலையைப் பற்றி ஏசாயா என்ன சொன்னார்?

7 சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பாவத்திலிருந்து விடுதலை கிடைப்பதற்கு யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். இயேசுவின் மூலம்தான் நமக்கு அந்த விடுதலை கிடைக்கும்! நமக்குக் கிடைக்கப்போகும் மாபெரும் விடுதலையைப் பற்றி, இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்கு 700 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா சொன்னார். இஸ்ரவேலர்கள் அனுபவித்த விடுதலை வருஷத்தைவிட அது மிகச் சிறந்ததாக இருக்கும்! “உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது. ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார். உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும், சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும் . . . என்னை அனுப்பினார்” என்று ஏசாயா எழுதினார். (ஏசா. 61:1, 2) இந்தத் தீர்க்கதரிசனத்தை யார் நிறைவேற்றுவார்?

8. விடுதலையைப் பற்றி ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தை யார் நிறைவேற்றினார்?

8 இயேசு தன் ஊழியத்தை ஆரம்பித்த பிறகு, விடுதலையைப் பற்றிய அந்த முக்கியமான தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்தது. தன்னுடைய சொந்த ஊரான நாசரேத்திலிருந்த ஒரு ஜெபக்கூடத்துக்குப் போய், அங்கே கூடியிருந்த யூதர்களுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசனத்தை அவர் வாசித்தார். அவர் வாசித்தது இதுதான்: “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நல்ல செய்தியைச் சொல்ல அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார். கைப்பற்றப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காகவும், யெகோவாவின் அனுக்கிரகக் காலத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்.” பிறகு, அந்தத் தீர்க்கதரிசனத்தைத் தனக்குப் பொருத்தினார். (லூக். 4:16-19, 21) இந்தத் தீர்க்கதரிசனத்தை இயேசு எப்படி நிறைவேற்றினார்?

விடுதலை—முதலில் யாருக்கு?

நாசரேத்திலிருந்த ஜெபக்கூடத்தில் இயேசு விடுதலையை அறிவிக்கிறார் (பாராக்கள் 8-9)

9. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் எதிலிருந்து விடுதலையை எதிர்பார்த்தார்கள்?

9 இயேசு வாசித்த ஏசாயா தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் நிறைவேற ஆரம்பித்தது. “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிவிட்டது” என்று சொன்னதன் மூலம் இயேசு அதை உறுதிப்படுத்தினார். (லூக். 4:21) அவர் வாசித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த நிறைய பேர், அரசியல் மாற்றம் ஏற்படும் என்று நினைத்திருக்கலாம். ஒருவேளை, ரோம ஆட்சியிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைப்பதற்கு அது வழி செய்யும் என்று நம்பியிருக்கலாம். “அவர்தான் இஸ்ரவேலை விடுவிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தோம்” என வேறொரு சந்தர்ப்பத்தில் சொன்ன இரண்டு மனிதர்களைப் போல் அவர்கள் நினைத்திருக்கலாம். (லூக். 24:13, 21) ஆனால், ரோமின் கொடுங்கோலாட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தும்படி இயேசு தன்னைப் பின்பற்றியவர்களைத் தூண்டவில்லை. ‘அரசனுடையதை அரசனுக்கு . . . கொடுங்கள்’ என்றுதான் சொன்னார். (மத். 22:21) அப்படியிருக்கும்போது, எந்த விதத்தில் அன்றிருந்த மக்களுக்கு இயேசு விடுதலை தந்தார்?

10. மக்களுக்கு எதிலிருந்து இயேசு விடுதலை கொடுத்தார்?

10 இரண்டு விஷயங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருவதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார். முதலாவதாக, யூத மதத் தலைவர்களுடைய பாரமான போதனைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை தந்தார். மனித பாரம்பரியங்கள் மற்றும் தவறான நம்பிக்கைகளின் பிடியில் யூதர்கள் நிறைய பேர் சிக்கித் தவித்தார்கள். (மத். 5:31-37; 15:1-11) ஆன்மீக வழிகாட்டிகள் என்று சொல்லிக்கொண்டவர்கள், உண்மையில் குருட்டு வழிகாட்டிகளாகத்தான் இருந்தார்கள். மேசியாவையும் அவர் கொடுத்த ஆன்மீக ஒளியையும் ஒதுக்கித்தள்ளியதன் மூலம் இருளிலும் பாவத்திலும்தான் அவர்கள் மூழ்கிக் கிடந்தார்கள். (யோவா. 9:1, 14-16, 35-41) ஆனால் இயேசு, சரியான போதனைகள் மூலமும் தன்னுடைய முன்மாதிரியின் மூலமும், தவறான போதனைகளிலிருந்து வெளியே வர தாழ்மையான ஜனங்களுக்கு உதவினார்.—மாற். 1:22; 2:23–3:5.

11. இயேசு கொடுக்கப்போகிற இன்னொரு விடுதலை எது?

11 இரண்டாவதாக, வழிவழியாகக் கடத்தப்பட்ட பாவம் என்ற சிறையிலிருந்து மக்கள் விடுதலை அடைய இயேசு வழி செய்தார். எப்படியென்றால், அவருடைய மீட்புப் பலியில் விசுவாசம் வைத்து, அந்த விசுவாசத்தைச் செயலில் காட்டுபவர்களின் பாவங்களைக் கடவுள் மன்னிக்கிறார். (எபி. 10:12-18) “மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 8:36) விடுதலை வருஷத்தில் இஸ்ரவேலர்கள் அனுபவித்த விடுதலையைவிட இது அற்புதமான விடுதலையாக இருக்கும்! எப்படி? விடுதலை வருஷத்தில் விடுவிக்கப்பட்ட ஓர் இஸ்ரவேலன் மறுபடியும் அடிமையாக ஆகியிருக்கலாம் அல்லது மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கலாம். ஆனால், இயேசு கொடுக்கப்போகிற விடுதலை முடிவில்லாத விடுதலை!

12. இயேசு அறிவித்த விடுதலையிலிருந்து முதலில் யார் நன்மையடைந்தார்கள்?

12 கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று அப்போஸ்தலர்களையும் உண்மையுள்ள மற்ற ஆண்களையும் பெண்களையும் தன்னுடைய சக்தியால் யெகோவா அபிஷேகம் செய்தார். தன்னுடைய மகன்களாக அவர்களைத் தத்தெடுத்தார். இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக அவர்கள் எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்பப்படவிருந்தார்கள். (ரோ. 8:2, 15-17) நாசரேத்திலிருந்த ஜெபக்கூடத்தில் இயேசு அறிவித்த அந்த விடுதலையிலிருந்து முதலில் நன்மையடைந்தவர்கள் இவர்கள்தான்! யூத மதத் தலைவர்களுடைய பொய்ப் போதனைகளுக்கும் வேதப்பூர்வமற்ற பழக்கவழக்கங்களுக்கும் இனிமேலும் அவர்கள் அடிமைகளாக இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, மரணத்தில் கொண்டுபோய்விடுகிற பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாக கடவுள் அவர்களைக் கருதினார். அடையாளப்பூர்வ விடுதலை வருஷம், கி.பி. 33-ல் கிறிஸ்துவின் சீஷர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட சமயத்தில் ஆரம்பித்து ஆயிர வருஷ ஆட்சி முடியும்வரை நீடிக்கிறது. அப்படியென்றால், இந்த இடைப்பட்ட காலத்தில் என்னென்ன அருமையான விஷயங்கள் நடக்கும்?

லட்சக்கணக்கானவர்களுக்குக் கிடைக்கும் விடுதலை!

13-14. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் இயேசு அறிவித்த விடுதலையிலிருந்து நன்மையடைகிறார்கள்?

13 இன்று, எல்லா தேசங்களிலிருந்தும் வருகிற நேர்மை உள்ளம் படைத்த லட்சக்கணக்கான ஜனங்கள் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். (யோவா. 10:16) இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காகக் கடவுள் அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதாக பைபிள் சொல்கிறது. நீங்களும் அவர்களில் ஒருவரா?

14 அப்படியென்றால், பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிறவர்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்களில் சிலவற்றை இப்போதே நீங்கள் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். உதாரணத்துக்கு, இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பதால், உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி யெகோவாவிடம் உங்களால் கேட்க முடிகிறது. அதனால், கடவுளுடைய அங்கீகாரத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது. இது உங்களுக்கு மனசமாதானத்தைத் தருகிறது. (எபே. 1:7; வெளி. 7:14, 15) பொய்ப் போதனைகளின் பிடியிலிருந்து விடுதலை அடைந்திருப்பதால் நீங்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்களையும் நினைத்துப்பாருங்கள். அதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவா. 8:32) சந்தோஷத்தை அள்ளித் தருகிற விடுதலை இல்லையா இது!

15. எப்படிப்பட்ட விடுதலையும் ஆசீர்வாதங்களும் நமக்காகக் காத்திருக்கின்றன?

15 மிகப் பெரிய ஒரு விடுதலை எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது! பொய் மதங்களையும் கறைபடிந்த மனித ஆட்சியையும் இயேசு சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார். தன்னை வணங்குகிற ‘திரள் கூட்டமான மக்களை’ கடவுள் காப்பாற்றப்போகிறார். பூஞ்சோலை பூமியில் அருமையான ஆசீர்வாதங்களைத் தரப் போகிறார். (வெளி. 7:9, 14) ஏராளமான மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; ஆதாம் செய்த பாவத்தால் ஏற்பட்டிருக்கிற எல்லா மோசமான பாதிப்புகளிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது!—அப். 24:15.

16. மனிதர்களுக்குக் காத்திருக்கிற அற்புதமான விடுதலை என்ன?

16 பரிபூரண ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ளவும், மறுபடியும் கடவுளுடைய மகன்களாக ஆகவும், ஆயிர வருஷ ஆட்சியில் கிறிஸ்துவும் அவருடைய சக ஆட்சியாளர்களும் நமக்கு உதவுவார்கள். விடுதலை வருஷத்தின்போது இஸ்ரவேலர்கள் விடுதலையை அனுபவித்தார்கள். ஆனால், அதைவிட மகத்தான விடுதலையை ஆயிர வருஷ ஆட்சியில் நாம் அனுபவிப்போம். அதாவது, பாவத்தின் பிடியிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும்.

பிரயோஜனமான, திருப்தியான வேலைகளை புதிய உலகத்தில் சந்தோஷமாகச் செய்வோம் (பாரா 17)

17. கடவுளுடைய மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்று ஏசாயா 65:21-23 சொல்கிறது? (அட்டைப் படம்)

17 எதிர்காலத்தில் பூமியில் நாம் அனுபவிக்கப்போகிற வாழ்க்கையைப் பற்றி ஏசாயா 65:21-23 சொல்கிறது. (வாசியுங்கள்.) பூஞ்சோலை பூமியில், எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே ஓய்வு மட்டும்தான் எடுப்போம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பிரயோஜனமான, திருப்தியான வேலையை கடவுளுடைய மக்கள் அப்போது செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆயிர வருஷ ஆட்சி முடிந்த பின்பு, “படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும்” என்பதில் நாம் நம்பிக்கையாக இருக்கலாம்.—ரோ. 8:21.

18. பிரகாசமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது என்பதை நாம் ஏன் நம்பலாம்?

18 வேலை செய்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் இஸ்ரவேலர்களுக்கு நேரம் இருக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். ஆயிர வருஷ ஆட்சியிலும் தன்னுடைய மக்களுக்கு அதைத்தான் அவர் செய்யப்போகிறார். அப்போது, யெகோவாவின் வழிபாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்வதற்குக் கண்டிப்பாக நேரம் இருக்கும். பூஞ்சோலை பூமியிலும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கடவுளை வணங்குவது ரொம்ப முக்கியம். கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியில், உண்மையுள்ள மனிதர்களுடைய முகத்திலிருக்கிற சந்தோஷக் களை எப்போதும் நீங்காது. ஏனென்றால், எல்லாருக்கும் திருப்தியான வேலை இருக்கும். எல்லாருமே யெகோவாவுக்குச் சேவை செய்வோம்!

பாட்டு 129 நம் நங்கூர நம்பிக்கை

^ பாரா. 5 அன்றிருந்த இஸ்ரவேலர்கள் விடுதலையை அனுபவிப்பதற்கு யெகோவா விசேஷமான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். அதுதான் விடுதலை வருஷம் என்ற ஏற்பாடு! கிறிஸ்தவர்களாகிய நாம் திருச்சட்டத்தின் கீழ் இல்லையென்றாலும், அந்த ஏற்பாட்டைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், நமக்காக யெகோவா செய்திருக்கும் முக்கியமான ஒரு விஷயத்தை அது ஞாபகப்படுத்துகிறது. அதைப் பற்றியும் அதிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: அடிமைகளாக இருந்தவர்கள், விடுதலை வருஷத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதனால், தங்கள் குடும்பத்துக்கு அவர்களால் திரும்பிப்போக முடிந்தது, அவர்களுடைய பரம்பரைச் சொத்தும் திரும்பக் கிடைத்தது.