Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 49

வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் “ஒரு நேரம் இருக்கிறது”

வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் “ஒரு நேரம் இருக்கிறது”

“தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்.”—மாற். 6:31.

பாட்டு 128 உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது

இந்தக் கட்டுரையில்... *

1. வேலை செய்வதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

வேலை! இதைப் பற்றி உங்கள் பகுதியில் வாழும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? நிறைய நாடுகளில், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் வேர்வை சிந்தி உழைக்கிறார்கள்! ஏகப்பட்ட வேலைகளை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது!! அப்படிச் செய்பவர்களுக்கு, கொஞ்சம் தலைசாய்க்கவோ மனைவி மக்களோடு நேரம் செலவழிக்கவோ கடவுளைப் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ளவோ நேரம் இருப்பதில்லை. (பிர. 2:23) வேறு சிலருக்கு, வேலை என்றாலே கசக்கிறது. வேலை செய்யாமல் இருக்க தங்களால் முடிந்த எல்லா சாக்குப்போக்குகளையும் சொல்கிறார்கள்.—நீதி. 26:13, 14.

2-3. வேலை செய்கிற விஷயத்தில் யெகோவாவும் இயேசுவும் நமக்கு எப்படி முன்மாதிரி வைத்திருக்கிறார்கள்?

2 ஆனால், யெகோவாவும் இயேசுவும் வேலையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம். “என் தகப்பன் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார், நானும் வேலை செய்துவருகிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவா. 5:17) வேலை செய்வதை யெகோவா விரும்புகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கணக்கிலடங்காத தேவதூதர்களையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் படைப்பதற்கு யெகோவா எவ்வளவு வேலை செய்திருப்பார்! கண்ணைக் கவருகிற படைப்புகளை இந்த அழகான பூமியிலும் அவர் படைத்திருக்கிறார். “யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை! அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள். பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது” என்று சங்கீதக்காரர் சொன்னது எவ்வளவு உண்மை!—சங். 104:24.

3 தன் அப்பாவை இயேசு அப்படியே பின்பற்றினார். யெகோவா “வானத்தைப் படைத்தபோது” இயேசு அவருக்குப் பக்கத்தில் “கைதேர்ந்த கலைஞனாக” இருந்தார். (நீதி. 8:27-31) இந்தப் பூமியில் வாழ்ந்தபோதும் அருமையான வேலைகளைச் செய்தார். அந்த வேலைகள் அவருக்கு உணவைப் போல் இருந்தன. கடவுள்தான் அவரை அனுப்பினார் என்பதற்கு அவை அத்தாட்சியாக இருந்தன.—யோவா. 4:34; 5:36; 14:10.

4. ஓய்வெடுப்பதைப் பற்றி யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4 கடினமாக உழைக்கிற விஷயத்தில் யெகோவாவும் இயேசுவும் நமக்கு முன்மாதிரி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும்போது, நாம் ஓய்வே எடுக்கக் கூடாது என்று அர்த்தமா? இல்லை! யெகோவாவுக்குக் களைப்பு என்பதே கிடையாது; அதனால், ஓய்வு என்பது அவருக்கு அவசியம் இல்லை. ஆனால், வானத்தையும் பூமியையும் படைத்துவிட்டு அவர் ‘ஓய்வெடுத்ததாக’ பைபிள் சொல்கிறது. (யாத். 31:17) அப்படியென்றால், படைப்பு வேலைகளை நிறுத்திவிட்டு, தான் படைத்தவற்றைப் பார்த்து ரசிப்பதற்கு யெகோவா நேரம் எடுத்துக்கொண்டார் என்று தெரிகிறது! இயேசுவைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்தப் பூமியில் இருந்தபோது அவர் கடினமாக உழைத்தார். அதேசமயத்தில், தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து ஓய்வெடுக்கவும் உணவை ரசித்து ருசித்து சாப்பிடவும் நேரம் ஒதுக்கினார்.—மத். 14:13; லூக். 7:34.

5. நிறைய பேருக்கு இருக்கிற ஒரு சவால் என்ன?

5 வேலையை நாம் நன்றாக அனுபவித்துச் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. நாம் கடின உழைப்பாளிகளாக இருக்க வேண்டும், சோம்பேறிகளாக இருக்கக் கூடாது. (நீதி. 15:19) ஒருவேளை, உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நீங்கள் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கலாம். கிறிஸ்துவின் சீஷராக இருக்கிற எல்லாருக்கும் பிரசங்க வேலையைச் செய்கிற பொறுப்பும் இருக்கிறது. அதேசமயத்தில், போதுமான ஓய்வும் அவசியம். வேலை... ஊழியம்... ஓய்வு... என எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குவது உங்களுக்குச் சிலசமயங்களில் சவாலாக இருக்கிறதா? அப்படியென்றால், எந்தளவு வேலை செய்ய வேண்டும், எந்தளவு ஓய்வு தேவை என்று எப்படித் தெரிந்துகொள்வது?

வேலையும் ஓய்வும்—சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

6. வேலையைப் பற்றியும் ஓய்வைப் பற்றியும் இயேசுவுக்கு சரியான எண்ணம் இருந்தது என்பதை மாற்கு 6:30-34 எப்படிக் காட்டுகிறது?

6 வேலையைப் பற்றிய சரியான எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். “ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது” என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சாலொமோன் ராஜா எழுதினார். நடுவது... கட்டுவது... அழுவது... சிரிப்பது... நடனம் ஆடுவது... என நிறைய விஷயங்களைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார். (பிர. 3:1-8) வேலையும் ஓய்வும் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள்! இந்த இரண்டையும் இயேசு சரியான இடத்தில் வைத்திருந்தார். ஒருதடவை, பிரசங்க வேலையில் கடினமாக உழைத்துவிட்டு அப்போஸ்தலர்கள் திரும்பிவந்தார்கள். “சாப்பிடுவதற்குக்கூட அவர்களுக்கு நேரமே கிடைக்கவில்லை.” அப்போது, “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்” என்று இயேசு அவர்களைக் கூப்பிட்டார். (மாற்கு 6:30-34-ஐ வாசியுங்கள்.) இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்றாலும், அவர்கள் எல்லாருக்கும் ஓய்வு அவசியம் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது.

7. ஓய்வுநாளைப் பற்றித் தெரிந்துகொள்வது நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?

7 சிலசமயங்களில், நமக்கு ஓய்வும் சின்னச் சின்ன மாற்றங்களும் தேவை. அந்தக் காலத்தில் வாழ்ந்த தன்னுடைய ஊழியர்களுக்கு யெகோவா செய்திருந்த ஓய்வுநாள் ஏற்பாடு இதைக் காட்டுகிறது. நாம் இன்று திருச்சட்டத்தின் கீழ் இல்லையென்றாலும், ஓய்வுநாள் ஏற்பாட்டைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் நாம் பிரயோஜனமடையலாம். வேலையைப் பற்றியும் ஓய்வைப் பற்றியும் நாம் என்ன நினைக்கிறோம் என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு இது உதவும்.

ஓய்வுநாள்—ஓய்வுக்கும் கடவுளை வழிபடுவதற்குமான நேரம்!

8. யாத்திராகமம் 31:12-15 சொல்கிறபடி, ஓய்வுநாள் என்ன செய்வதற்கான நாள்?

8 ஆறு நாட்களில் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) படைப்பு வேலைகளை முடித்த பிறகு, பூமியில் தன்னுடைய படைப்பு வேலைகளை கடவுள் நிறுத்தினார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 2:2) இருந்தாலும், வேலை செய்வதைக் கடவுள் விரும்புகிறார்; மற்ற வழிகளில் அவர் “வேலை செய்துவந்திருக்கிறார்.” (யோவா. 5:17) ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு ஏழாம் “நாளில்” கடவுள் ஓய்வெடுக்கத் தொடங்கினார். அதேபோல், ஆறு நாட்களுக்கு வேலை செய்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வு எடுக்கும்படி அவர் இஸ்ரவேலர்களிடம் சொன்னார். தனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் ஓய்வுநாள் ஓர் அடையாளமாக இருக்கும் என்று அவர் சொன்னார். அது “முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய” நாளாகவும், ‘யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாளாகவும்’ இருந்தது. (யாத்திராகமம் 31:12-15-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகள், அடிமைகள் என யாருமே வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை; பண்ணை விலங்குகளும் அனுமதிக்கப்படவில்லை. (யாத். 20:10) யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள ஓய்வுநாள் மக்களுக்கு உதவியது.

9. ஓய்வுநாளைப் பற்றி இயேசுவின் காலத்திலிருந்த சிலருக்கு என்ன தவறான எண்ணம் இருந்தது?

9 ஓய்வுநாள் கடவுளுடைய மக்களுக்கு நன்மையைத் தரும் நாளாக இருந்தது. ஆனால், இயேசுவின் காலத்திலிருந்த மதத் தலைவர்களில் நிறைய பேர் ஓய்வுநாள் சம்பந்தமாகக் கெடுபிடியான சட்டங்களைப் போட்டிருந்தார்கள். ஓய்வுநாளன்று, கொஞ்சம் கதிர்களைப் பறித்து வாயில் போடுவது அல்லது வியாதியாக இருப்பவர்களைக் குணமாக்குவதுகூட தவறு என்று சொன்னார்கள். (மாற். 2:23-27; 3:2-5) ஆனால், கடவுள் இப்படியெல்லாம் சொல்லவில்லை என்பதைத் தன்னுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் இயேசு தெளிவுபடுத்தினார்.

இயேசுவின் குடும்பத்தார், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கு ஓய்வுநாளைப் பயன்படுத்திக்கொண்டார்கள் (பாரா 10) *

10. ஓய்வுநாளைப் பற்றி இயேசு என்ன நினைத்தார் என்பதை மத்தேயு 12:9-12 எப்படிக் காட்டுகிறது?

10 இயேசுவும் அவரைப் பின்பற்றிய யூதர்களும் திருச்சட்டத்தின் கீழ் இருந்ததால், ஓய்வுநாளைக் கடைப்பிடித்தார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஓய்வுநாளன்று மற்றவர்களுக்கு உதவுவதிலும் அன்பான செயல்களைச் செய்வதிலும் தவறில்லை என்பதை, தன்னுடைய சொல்லாலும் செயலாலும் இயேசு காட்டினார். “ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று அவர் நேரடியாகச் சொன்னார். (மத்தேயு 12:9-12-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்வது ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை. ஓய்வுநாளின் சிறப்பம்சம் என்ன என்பதை இயேசுவின் செயல்கள் தெளிவாகக் காட்டின. தினமும் செய்கிற வேலைகளிலிருந்து விடுபட்டு, கடவுளை வணங்குவதில் கவனம் செலுத்துவதற்காகத்தான் ஓய்வுநாள் ஏற்பாட்டை கடவுள் செய்திருந்தார். தன்னுடைய சொந்த ஊரான நாசரேத்திலிருந்தபோது, “தன்னுடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபக்கூடத்துக்குப் போய், வாசிப்பதற்காக [இயேசு] எழுந்து நின்றார்” என்று பைபிள் சொல்கிறது. (லூக். 4:15-19) கடவுளோடு நெருங்கிவருவதற்கு ஓய்வுநாளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு குடும்பத்தில்தான் அவர் வளர்ந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

வேலை—நீங்கள் அதை எப்படி நினைக்கிறீர்கள்?

11. கடினமாக உழைக்கிற விஷயத்தில் இயேசுவுக்கு முன்மாதிரியாக இருந்தது யார்?

11 தன்னுடைய வளர்ப்பு மகனான இயேசுவுக்கு தச்சு வேலையைக் கற்றுக்கொடுத்தபோது, வேலையைப் பற்றிய கடவுளுடைய எண்ணத்தையும் யோசேப்பு அவரிடம் சொல்லியிருப்பார். (மத். 13:55, 56) தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற யோசேப்பு ஒவ்வொரு நாளும் வேர்வை சிந்தி உழைத்ததை இயேசு பார்த்திருப்பார். பிற்பாடு தன்னுடைய சீஷர்களிடம், “வேலையாள் தன் கூலியைப் பெறத் தகுதியானவன்” என்று இயேசு சொன்னார். (லூக். 10:7) வேர்வை சிந்தி உழைப்பது எப்படி என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது!

12. கடின உழைப்பைப் பற்றி பவுல் என்ன நினைத்தார், எந்த வசனங்கள் அதைக் காட்டுகின்றன?

12 அப்போஸ்தலன் பவுலின் விஷயத்திலும் இது உண்மையாக இருந்தது. இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனைகளைப் பற்றியும் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதுதான் பவுலின் முக்கிய வேலையாக இருந்தது. இருந்தாலும், தன்னுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவர் வேலை செய்தார். யாருக்கும் “அதிக பாரமாக” இருக்கக் கூடாது என்பதற்காக, அவர் “இரவும் பகலும் பாடுபட்டு வேலை” செய்ததைப் பற்றி தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (2 தெ. 3:8; அப். 20:34, 35) தான் வேலை செய்ததாக பவுல் சொன்னபோது, கூடார வேலையைப் பற்றி அவர் சொல்லியிருக்கலாம். அவர் கொரிந்து நகரத்தில் இருந்தபோது, ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதியோடு தங்கியிருந்தார். ‘அவர்கள் கூடாரத் தொழில் செய்பவர்களாக’ இருந்ததால், பவுல் “அவர்களோடு வேலை பார்த்தார்.” “இரவும் பகலும்” வேலை செய்ததாக பவுல் சொன்னபோது, ஓய்வே எடுக்காமல் வேலை செய்ததாகச் சொன்னாரா? இல்லை. கூடார வேலை செய்வதை அவ்வப்போது நிறுத்தினார். உதாரணத்துக்கு, ஓய்வுநாட்களிலும் மற்ற சமயங்களிலும் அவர் கூடார வேலை செய்யவில்லை. அந்தச் சமயங்களில், யூதர்களிடம் பிரசங்கிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால், அவர்களும் ஓய்வுநாளின்போது வேலை செய்திருக்க மாட்டார்கள்.—அப். 13:14-16, 42-44; 16:13; 18:1-4.

13. பவுல் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன?

13 அப்போஸ்தலன் பவுல் நமக்கு அருமையான முன்மாதிரி! தன்னுடைய பிழைப்புக்கென்று ஒரு வேலை செய்தபோதும், “நல்ல செய்தியை அறிவிக்கும் பரிசுத்த வேலையை” தவறாமல் செய்துவந்தார். (ரோ. 15:16; 2 கொ. 11:23) அதைச் செய்யும்படி மற்றவர்களையும் கேட்டுக்கொண்டார். அதனால், ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதி, “கிறிஸ்து இயேசுவின் சேவையில் [அவருடைய] சக வேலையாட்களாக” இருந்தார்கள். (ரோ. 12:11; 16:3) “எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாக” இருக்கும்படி கொரிந்தியர்களை பவுல் கேட்டுக்கொண்டார். (1 கொ. 15:58; 2 கொ. 9:8) “வேலை செய்ய ஒருவனுக்கு இஷ்டம் இல்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது” என்று எழுதும்படியும் யெகோவா அவரைத் தூண்டினார்.—2 தெ. 3:10.

14. யோவான் 14:12-ல் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

14 பிரசங்கிப்பதும் சீஷராக்குவதும்தான் இந்தக் கடைசி நாட்களில் நாம் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமான வேலை! தன்னுடைய சீஷர்கள் தன்னைவிட பெரிய வேலைகளைச் செய்வார்கள் என்று இயேசு சொன்னார். (யோவான் 14:12-ஐ வாசியுங்கள்.) அவரைப் போல நாம் அற்புதங்களைச் செய்வோம் என்று அவர் சொல்லவில்லை. அவருடைய சீஷர்கள் நிறைய இடங்களில் பிரசங்கிப்பார்கள் என்றும், நிறைய பேரிடம் பிரசங்கிப்பார்கள் என்றும், அவரைவிட ரொம்பக் காலத்துக்குப் பிரசங்கிப்பார்கள் என்றும்தான் சொன்னார்.

15. என்னென்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?

15 நீங்கள் வேலைக்குப் போகிறவராக இருந்தால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வேலை செய்ற இடத்துல, கடின உழைப்பாளிங்குற பேரை நான் எடுத்திருக்கேனா? சொன்ன நேரத்துக்குள்ள வேலைய முடிக்கிறேனா, அத ரொம்ப நல்லா செய்றேனா?’ இந்தக் கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று உங்களால் சொல்ல முடிந்தால், உங்கள் முதலாளியின் நம்பிக்கையை உங்களால் சம்பாதிக்க முடியும் என்று சொல்லலாம். அதோடு, உங்களோடு வேலை செய்கிறவர்கள், நீங்கள் சொல்கிற நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது, பிரசங்கித்து கற்பிக்கிற வேலைக்கு வரலாம். இதைப் பற்றி இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஊழியத்த சுறுசுறுப்பா செய்றவருனு பேர் எடுத்திருக்கேனா? ஊழியத்துக்காக நல்லா தயாரிக்கிறேனா? ஆர்வம் காட்டுனவங்கள சீக்கிரம் போய் பார்க்குறேனா? எல்லா வகையான ஊழியத்துலயும் கலந்துக்குறேனா?’ இந்தக் கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று உங்களால் பதில் சொல்ல முடிந்தால், நீங்கள் சந்தோஷமாக ஊழியம் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஓய்வு—உங்கள் கருத்து என்ன?

16. ஓய்வைப் பற்றி இயேசுவுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் இருந்த எண்ணத்துக்கும் இன்றிருக்கிற நிறைய பேருடைய எண்ணத்துக்கும் என்ன வித்தியாசம்?

16 தனக்கும் அப்போஸ்தலர்களுக்கும் அவ்வப்போது ஓய்வு தேவை என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி, இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டிருக்கிற அந்தப் பணக்காரனைப் போல்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். “நீ ஓய்வெடு, சாப்பிட்டுக் குடித்துச் சந்தோஷமாக இரு” என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். (லூக். 12:19; 2 தீ. 3:4) ஓய்வெடுப்பதிலும் சுகபோகமாக வாழ்வதிலும்தான் அவனுடைய கவனம் இருந்தது. ஆனால், இயேசுவும் அப்போஸ்தலர்களும் அப்படி இருக்கவில்லை. தங்களுடைய சந்தோஷத்தைப் பற்றியே அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கவில்லை.

வேலையையும் ஓய்வையும் அதனதன் இடத்தில் வைக்கும்போது, புத்துணர்ச்சி தருகிற நல்ல வேலைகளில் கவனம் செலுத்த முடியும் (பாரா 17) *

17. வேலை முடிந்து ஓய்வு கிடைக்கும் நேரத்தையும் வார விடுமுறை நாட்களையும் நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

17 வேலை முடிந்து ஓய்வு கிடைக்கும் நேரத்தையும் வார விடுமுறை நாட்களையும் ஓய்வெடுப்பதற்கு மட்டுமல்ல, பிரசங்கிப்பதற்கும் கூட்டங்களுக்குப் போவதற்கும் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், இயேசுவைப் போலவே நடந்துகொள்கிறோம். சீஷராக்கும் வேலையையும் கூட்டங்களில் கலந்துகொள்வதையும் மிக மிக முக்கியமாக நாம் நினைக்கிறோம். அதனால்தான், இவற்றைச் செய்வதற்குக் கடினமாக முயற்சி செய்கிறோம். (எபி. 10:24, 25) விடுமுறையில் எங்கேயாவது போகும்போதுகூட, எப்போதும்போல் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்கிறோம். அதோடு, நாம் சந்திக்கிற ஆட்களிடம் பைபிளைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்புகளைத் தேடுகிறோம்.—2 தீ. 4:2.

18. நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம்முடைய ராஜா கிறிஸ்து இயேசு விரும்புகிறார்?

18 நம்முடைய ராஜா கிறிஸ்து இயேசு, நம்மால் முடியாததை நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. அதோடு, வேலையையும் ஓய்வையும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி நமக்குச் சொல்லித்தருகிறார். இதற்காக நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். (எபி. 4:15) போதுமான ஓய்வை நாம் எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம்முடைய தேவைகளுக்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், புத்துணர்ச்சி தருகிற சீஷராக்கும் வேலையைச் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். அடுத்த கட்டுரையில், கொடூரமான ஒரு அடிமைத்தனத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

பாட்டு 60 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

^ பாரா. 5 வேலையையும் ஓய்வையும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த வாராந்தர ஓய்வுநாளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். வேலையையும் ஓய்வையும் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள இது நமக்கு உதவும்.

^ பாரா. 8 இது 24 மணிநேரங்களைக் கொண்ட நாட்கள் கிடையாது. இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில் இருக்கும் “யெகோவாவின் சாட்சிகள் படைப்புக் கோட்பாட்டை நம்புகிறார்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள் (எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்).

^ பாரா. 10 ஓய்வுநாள் சட்டத்தைச் சீஷர்கள் மிகவும் மதித்தார்கள். இயேசுவின் உடலில் போடுவதற்குத் தேவையான நறுமணப் பொருள்களையும் வாசனை எண்ணெயையும் தயாரிப்பதற்கு ஓய்வுநாள் முடியும்வரை காத்திருந்தார்கள்.—லூக். 23:55, 56.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: ஓய்வுநாளன்று, யோசேப்பு தன்னுடைய குடும்பத்தை ஜெபக்கூடத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.

^ பாரா. 58 படங்களின் விளக்கம்: தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உழைக்கும் ஒரு குடும்பத் தலைவர், விடுமுறையை குடும்பத்தோடு செலவிடுகிறார். ஆனால் அந்தச் சமயத்திலும் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்.