படிப்புக் கட்டுரை 52
சோர்வை உங்களால் துரத்தியடிக்க முடியும்!
“யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்.”—சங். 55:22.
பாட்டு 38 யெகோவாமேல் பாரத்தைப் போடுங்கள்!
இந்தக் கட்டுரையில்... *
1. சோர்வு நம்மைத் தாக்கும்போது என்ன நடக்கலாம்?
ஒவ்வொரு நாளும் நமக்கு பிரச்சினைகள் வருகின்றன, போகின்றன. நம்மால் முடிந்த அளவுக்கு அவற்றை நாம் சமாளித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், சோர்வாக இருக்கும்போது அப்படிச் சமாளிப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். நம்முடைய நம்பிக்கையையும் தைரியத்தையும் சந்தோஷத்தையும் அது தட்டிப் பறித்துவிடலாம். “இக்கட்டில் தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால், உன் பலம் குறைந்துவிடும்” என்று நீதிமொழிகள் 24:10 சொல்கிறது. இந்த வசனம் சொல்வதைப் போல், பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாத அளவுக்கு சோர்வு நம் பலத்தை எல்லாம் உறிஞ்சிவிடலாம்.
2. எதையெல்லாம் நினைத்து நாம் சோர்ந்துபோகலாம், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
2 நிறைய விஷயங்களை நினைத்து நாம் சோர்ந்துபோகலாம். நாம் செய்யும் தவறுகள், நம்மிடம் இருக்கிற குறைகள், உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவை நமக்கு சோர்வை ஏற்படுத்தலாம். அதோடு, யெகோவாவின் சேவையில் நாம் ஆசைப்படுகிற பொறுப்புகள் கிடைக்காமல் போகும்போதோ, நம்முடைய ஊழியப் பகுதியில் இருப்பவர்கள் நம்முடைய செய்தியைக் காதுகொடுத்து கேட்காதபோதோ நாம் சோர்ந்துபோகலாம். இந்த மாதிரியான சமயங்களில் சோர்வை எப்படிச் சமாளிப்பது என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
தவறுகளோடும் பலவீனங்களோடும் போராடும்போது
3. நம்மை நாமே நொந்துகொள்ளாமல் இருப்பதற்கு எது உதவும்?
3 நம்முடைய தவறுகளையும் பலவீனங்களையும் நினைத்து நம்மை நாமே நொந்துகொள்ளலாம். அதனால், ‘நான் எங்கே புதிய உலகத்துக்குள்ள போக போறேன்?’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், அந்த எண்ணம் ரொம்ப ஆபத்தானது. அப்படியென்றால், நம்முடைய தவறுகளை நினைத்து நம்மை நாமே நொந்துகொள்ளாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் எல்லாருமே ‘பாவம் செய்பவர்கள்தான்’ என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். (ரோ. 3:23) யெகோவா அப்பா குறை கண்டுபிடிப்பவரும் அல்ல, பரிபூரணத்தை எதிர்பார்ப்பவரும் அல்ல. அவர் அன்பான அப்பா! நமக்கு உதவி செய்ய விரும்புகிறார், நம்மீது பொறுமையாக இருக்கிறார். தவறுகளை எதிர்த்துப் போராடுவதற்கும், நம்முடைய பலவீனங்களை நினைத்து நம்மை நாமே நொந்துகொள்ளாமல் இருப்பதற்கும் நாம் எடுக்கிற முயற்சிகளை அவர் பார்க்கிறார். அந்தப் போராட்டத்தில் ஜெயிப்பதற்கு உதவுகிறார்.—ரோ. 7:18, 19.
4-5. ஒன்று யோவான் 3:19, 20-ன்படி, டெபோராவும் மரியாவும் சோர்வை எப்படிச் சமாளித்தார்கள்?
4 டெபோராவுக்கும் மரியாவுக்கும் * என்ன நடந்தது என்று பார்க்கலாம். சின்ன வயதிலிருந்தே டெபோராவை யாரும் அன்பாக நடத்தியதும் இல்லை, பாராட்டியதும் இல்லை. அதனால், தான் எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணம் அவளுடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சின்னதாக ஏதாவது தவறு செய்தாலும் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதுபோல் அவள் நினைப்பாள். மரியாவுக்கும் அதே பிரச்சினைதான் இருந்தது. அவளையும் யாரும் அன்பாக நடத்தியது இல்லை. அதனால், தான் எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணத்தை அவள் வளர்த்துக்கொண்டாள். சத்தியத்துக்கு வந்த பிறகும், யெகோவாவின் சாட்சி என்று சொல்லிக்கொள்ள தனக்குத் தகுதி இல்லை என்று அவள் நினைத்தாள்.
5 ஆனாலும், டெபோராவும் மரியாவும் யெகோவாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிடவில்லை. அவர்களால் எப்படி முடிந்தது? தங்களுடைய மனதில் இருந்த பாரத்தை எல்லாம் யெகோவாவிடம் கொட்டினார்கள். (சங். 55:22) கசப்பான அனுபவங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது யெகோவாவுக்குத் தெரியும் என்பதை புரிந்துகொண்டார்கள். நாம் எல்லாரும் இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்: நம்மிடம் நல்ல குணங்களே இல்லை என்று நாம் நினைத்தாலும் யெகோவா நம்மிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்க்கிறார்!—1 யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள்.
6. முன்பு செய்த தவறையே ஒருவர் திரும்பவும் செய்துவிட்டால், எந்த மாதிரியான எண்ணங்கள் அவருக்கு வரலாம்?
6 சிலர் கெட்ட பழக்கங்களில் ஊறிப்போயிருக்கலாம். கடினமாகப் போராடி அதைவிட்டு வெளியே வந்திருக்கலாம். ஆனால், திரும்பவும் அந்தப் பழக்கத்தில் விழுந்துவிடலாம். அப்போது, ரொம்பவே சோர்ந்துவிடலாம். இப்படிச் சோர்ந்துபோவது இயல்புதான். (2 கொ. 7:10) ஆனால், “நான் எதுக்குமே லாயக்கில்ல, யெகோவா என்னை மன்னிக்கவே மாட்டாரு” என்று ஒருபோதும் நாம் நினைக்கக் கூடாது. ஏனென்றால், அது உண்மை கிடையாது. அதோடு, நாம் அப்படி நினைத்தால், யெகோவாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் சோர்ந்துபோனால் நம் பலம் குறைந்துவிடும் என்று நீதிமொழிகள் 24:10 சொல்வதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நாம் ஒரேயடியாக சோர்ந்துவிடுவதற்குப் பதிலாக, நாம் செய்த தவறுக்கு யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டு, அவருக்கும் நமக்கும் இருக்கிற ‘பிரச்சினையைச் சரிசெய்துகொள்ள’ வேண்டும். (ஏசா. 1:18) நாம் உண்மையிலேயே மனம் திருந்தினால் நிச்சயம் யெகோவா நம்மை மன்னிப்பார். அதோடு, மூப்பர்களிடமும் உதவி கேட்க வேண்டும். யெகோவாவிடம் இருக்கிற பந்தத்தைச் சரி செய்துகொள்ள அவர்கள் பொறுமையோடு உதவுவார்கள்.—யாக். 5:14, 15.
7. பலவீனங்களோடு போராடும்போது நாம் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?
7 பிரான்சில் இருக்கிற ஸாலூக் என்ற மூப்பர், பலவீனங்களோடு போராடுபவர்களிடம் இப்படிச் சொல்வார்: “யெகோவாவோட பார்வையில யாரு நீதிமான்கள்னா, தப்பு செஞ்சாலும் அத நினைச்சு வருத்தப்பட்டு தங்கள மாத்திக்கிறவங்கதான். தப்பே செய்யாதவங்க இல்ல.” (ரோ. 7:21-25) அதனால், பலவீனங்களோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் உங்களை நீங்களே நொந்துகொள்ளாதீர்கள். நாம் எல்லாருமே தவறு செய்பவர்களாக இருப்பதால், மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவாவின் அளவற்ற கருணை நமக்குத் தேவைப்படுகிறது.—எபே. 1:7; 1 யோ. 4:10.
8. நாம் சோர்வாக இருக்கும்போது யாரிடம் உதவி கேட்கலாம்?
8 நம்மைப் பலப்படுத்துவதற்கு சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். நாம் பேசும்போது, அவர்கள் காதுகொடுத்து கேட்பார்கள். நம்மைப் பலப்படுத்துகிற வார்த்தைகளைச் சொல்வார்கள். (நீதி. 12:25; 1 தெ. 5:14) நைஜீரியாவில் இருக்கிற ஜாய் என்ற சகோதரி, சோர்வைச் சமாளிக்கப் போராட வேண்டியிருந்தது. “சகோதர சகோதரிகள் இல்லனா என்னோட நிலைமை என்ன ஆகியிருக்கும்னே தெரியாது. அவங்க வழியா யெகோவா என்னோட ஜெபத்துக்கு பதில் கொடுக்குறாரு. மனசு உடைஞ்சு போயிருக்கிறவங்கள நான் எப்படி பலப்படுத்தலானுகூட அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். அதேசமயத்தில், ஒரு விஷயத்தை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, நமக்கு எப்போது உற்சாகம் தேவை என்பது எல்லா சமயத்திலும் சகோதர சகோதரிகளுக்குத் தெரியாது. அதனால், உதவி தேவைப்படும் சமயத்தில், முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளிடம் நாமாகவே போய் உதவி கேட்க வேண்டும்.
நோயால் அவதிப்படும்போது
9. சங்கீதம் 41:3-ம் 94:19-ம் நம்மை எப்படிப் பலப்படுத்துகின்றன?
9 நமக்கு ஆதரவு கொடுக்க யெகோவா இருக்கிறார். நமக்கு உடல்நிலை சரியில்லாதபோது, முக்கியமாக தீராத நோயால் கஷ்டப்படும்போது, நாம் நம்பிக்கை இழந்து சோர்ந்துபோய்விடலாம். நம்முடைய நோயை யெகோவா அற்புதமான விதத்தில் குணமாக்கவில்லை என்றாலும் நமக்குத் தேவையான ஆறுதலைத் தருவார். நோயோடு போராடுவதற்குத் தேவையான பலத்தையும் கொடுப்பார். (சங்கீதம் 41:3-யும், 94:19-யும் வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, நம்முடைய வீட்டு வேலைகளைச் செய்வதற்கும், கடைக்குப் போய் வருவதற்கும் சகோதர சகோதரிகள் நமக்கு உதவலாம். நம்மோடு சேர்ந்து அவர்கள் ஜெபம் செய்யலாம். அல்லது, பைபிளில் இருக்கிற அருமையான விஷயங்களை யெகோவா நமக்கு ஞாபகப்படுத்தலாம். நோய்நொடியோ வேதனையோ இல்லாத புதிய உலகத்தைப் பற்றி... மற்ற அருமையான வாக்குறுதிகளைப் பற்றி... அவர் நமக்கு ஞாபகப்படுத்தலாம்.—ரோ. 15:4.
10. எசாங்கால் எப்படி மீண்டுவர முடிந்தது?
10 நைஜீரியாவில் வாழ்கிற எசாங் என்பவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாமல் போய்விட்டது. இனி வாழ்க்கை முழுவதும் அவரால் நடக்கவே முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். “அத கேட்ட உடனே என் மனசு அப்படியே உடைஞ்சு போயிடுச்சு” என்று எசாங் சொல்கிறார். ஆனால், அவர் அப்படியே இருந்துவிட்டாரா? இல்லை! அதிலிருந்து மீண்டுவந்தார். எப்படி அவரால் முடிந்தது? “நானும் என் மனைவியும் யெகோவாகிட்ட ஜெபம் செய்றதயும் பைபிள் படிக்கறதயும் நிறுத்தவே இல்ல. அதோட, புது உலகத்துல வாழப் போற வாழ்க்கையையும் மத்த ஆசீர்வாதங்களயும் நெனச்சு பார்த்தோம்” என்று அவர் சொல்கிறார்.
11. நோயோடு போராடியபோதும் சின்டியால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடிந்தது?
11 மெக்சிகோவில் வாழ்கிற சின்டி என்ற சகோதரிக்கு என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம். உயிருக்கு ஆபத்தான ஒரு நோய் அவருக்கு வந்தது. இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிச் சமாளித்தார்? அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, தினமும் பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டுமென்று ஒரு குறிக்கோள் வைத்தார். அவர் இப்படி எழுதுகிறார்: “அப்படிச் செய்ததால் என்னுடைய அறுவை சிகிச்சை... வலி... வேதனை... இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் மற்றவர்களைப் பற்றி யோசிக்க முடிந்தது. நான் டாக்டர்களிடமும் நர்சுகளிடமும் பேசும்போது, அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி விசாரிப்பேன். இந்தத் தொழிலை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று கேட்பேன். அப்படிக் கேட்டதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை சுலபமாகக் கண்டுபிடிக்க முடிந்தது. அதில் நிறைய பேர், ஒரு நோயாளி, டாக்டரையோ நர்சையோ பார்த்து ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்பது அபூர்வம்தான் என்று சொன்னார்கள். தங்கள்மேல் அக்கறை காட்டியதற்கு நன்றியும் சொன்னார்கள். சிலர், அவர்களுடைய போன் நம்பரையும் கொடுத்தார்கள். இந்தக் கஷ்டமான காலத்தில் யெகோவா எனக்கு உதவி செய்வார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இந்த அளவுக்கு என்னால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.”—நீதி. 15:15.
12-13. நோயாலோ நடமாட முடியாமலோ கஷ்டப்படுகிறவர்கள் எப்படி ஊழியம் செய்கிறார்கள், அதனால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?
12 நோயால் கஷ்டப்படுபவர்களாலோ நடமாட முடியாமல் இருப்பவர்களாலோ, அதிகமாக ஊழியம் செய்ய முடியாமல் போகலாம். அதை நினைத்து அவர்கள் சோர்ந்துபோகலாம். ஆனாலும், அவர்களில் நிறைய பேர், பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு *
தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். அமெரிக்காவில் வாழ்ந்த லாரல் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். 37 வருஷங்களாக அவர் இயந்திரத்துக்குள்தான் படுத்திருந்தார்! அந்த இயந்திரத்துக்குள் இருந்தால்தான் அவரால் மூச்சு விட முடியும். புற்றுநோய்... பெரிய பெரிய அறுவை சிகிச்சைகள்... தீராத தோல் வியாதி... என அவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்படி, பயங்கரமான வியாதியோடு போராடிக்கொண்டிருந்தாலும் அவர் சும்மா இருந்துவிடவில்லை. நர்சுகளிடமும் அவருக்கு உதவுவதற்காக அவருடைய வீட்டுக்கு வருபவர்களிடமும் பைபிளைப் பற்றி சொன்னார். அதனால், குறைந்தபட்சம் 17 பேர் யெகோவாவின் சாட்சி ஆவதற்கு அவரால் உதவ முடிந்தது.13 வீட்டிலோ முதியோர் இல்லங்களிலோ அல்லது இதுபோன்ற மற்ற இடங்களிலோ முடங்கிக் கிடப்பவர்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பிரான்சில் இருக்கும் ரிச்சர்ட் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்க கண்ணுல படுற மாதிரி பிரசுரங்கள வைச்சுக்குறது நல்லது. அப்படி செஞ்சா, அத பார்க்கிறவங்க அத பத்தி கேட்க வாய்ப்பு இருக்கு. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியாத சகோதர சகோதரிகளுக்கு இது உற்சாகத்த தரும்.” அதோடு, கடிதம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் சாட்சி கொடுப்பதன் மூலமும் இவர்களால் ஊழியம் செய்ய முடியும்.
பொறுப்புகள் கிடைக்காதபோது
14. தாவீது ராஜா என்ன அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார்?
14 வயது, உடல் ஆரோக்கியம் மற்றும் வேறுசில காரணங்களால் சபையிலோ நம்முடைய வட்டாரத்திலோ நமக்கு சில பொறுப்புகள் கிடைக்காமல் போகலாம். அந்த மாதிரியான சமயங்களில், தாவீது ராஜாவிடமிருந்து அருமையான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று அவர் ரொம்ப ஆசைப்பட்டார். ஆனால், அந்த வேலைக்காக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிந்த உடனே, யாரை யெகோவா தேர்ந்தெடுத்தாரோ அவருக்கு தன்னுடைய முழு ஆதரவைக் காட்டினார். ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்கு ஏராளமான பணம்பொருளை தாராளமாகக் கொடுத்தார். தாவீது ராஜா நமக்கு ஓர் அருமையான முன்மாதிரி!—2 சா. 7:12, 13; 1 நா. 29:1, 3-5.
15. யூயக் என்ற சகோதரர் சோர்வை எப்படிச் சமாளித்தார்?
15 பிரான்சில் இருக்கிற யூயக் என்ற சகோதரரைப் பற்றி இப்போது பார்க்கலாம். உடல்நலப் பிரச்சினையால் தொடர்ந்து அவரால் மூப்பராக சேவை செய்ய முடியவில்லை. வீட்டில் இருக்கிற சின்னச் சின்ன வேலைகளைச் செய்வதுகூட அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அவர் இப்படி எழுதுகிறார்: “ஆரம்பத்தில் சோர்ந்துபோய்விட்டேன். எதற்குமே நான் லாயக்கில்லை என்று நினைத்தேன். காலப்போக்கில், என்னுடைய வரம்புகளைப் புரிந்துகொள்வது முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டேன். யெகோவாவுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை சந்தோஷமாக செய்தேன். சோர்ந்துபோய் விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ரொம்ப களைத்துப்போயிருந்தாலும் தொடர்ந்து போராடிய கிதியோனைப் போலவும், அவரோடு இருந்த 300 ஆட்களைப் போலவும் நானும் தொடர்ந்து போராடுவேன்.”—நியா. 8:4.
16. தேவதூதர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 உண்மையுள்ள தேவதூதர்களிடமிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். பொல்லாத ராஜாவான ஆகாபின் ஆட்சிக்காலத்தில், அவரை ஏமாற்றுவதற்கு தேவதூதர்களிடம் யெகோவா ஆலோசனை கேட்டார். நிறைய தேவதூதர்கள் ஆலோசனை 1 ரா. 22:19-22) அப்போது மற்ற தேவதூதர்கள், ‘இவ்வளவு நேரம் ஆலோசனை சொன்னதுல என்னோட நேரம் வீணானதுதான் மிச்சம்’ என்று நினைத்து சோர்ந்துபோயிருப்பார்களா? நிச்சயம் அப்படி நினைத்திருக்க மாட்டார்கள். அந்தத் தேவதூதர்கள் உண்மையிலேயே மனத்தாழ்மையுள்ளவர்கள். எல்லா புகழும் யெகோவாவுக்கு போய்ச் சேர வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டிருப்பார்கள்.—நியா. 13:16-18; வெளி. 19:10.
சொன்னார்கள். ஆனால், ஒரு தேவதூதர் சொன்ன ஆலோசனையை யெகோவா ஏற்றுக்கொண்டார். அவர் சொன்னபடி செய்வதற்கு அவரையே அனுப்பினார். (17. நீங்கள் ஆசைப்பட்ட நியமிப்பு கிடைக்காதபோது ஏன் சோர்ந்துபோய்விடக் கூடாது?
17 ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதும், அவருடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதும் பெரிய பாக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். நியமிப்புகள் வரலாம், போகலாம். ஆனால், அவை நம்மை யெகோவாவுக்குப் பிரியமானவர்களாக ஆக்கிவிடாது. நாம் மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் நடந்துகொள்ளும்போதுதான் யெகோவாவுக்கும் சரி, சகோதர சகோதரிகளுக்கும் சரி நம்மைப் பிடிக்கும். அதனால், இந்தக் குணங்களைக் காட்ட உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள். இந்தக் குணங்களைக் காட்டிய நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி, சகோதர சகோதரிகளுக்காக சந்தோஷமாக சேவை செய்யுங்கள்.—சங். 138:6; 1 பே. 5:5.
மக்கள் காதுகொடுத்துக் கேட்காதபோது
18-19. உங்கள் ஊழியப் பகுதியில் இருப்பவர்கள் நீங்கள் சொல்லும் செய்தியைக் காதுகொடுத்து கேட்காததுபோல் தோன்றினாலும், நீங்கள் எப்படிச் சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்கலாம்?
18 ஒருவேளை, உங்கள் ஊழியப் பகுதியில் இருக்கிற மக்கள் நீங்கள் சொல்லும் செய்தியை காதுகொடுத்து கேட்காமல் இருக்கலாம். அல்லது கொஞ்சப் பேரை மட்டுமே வீடுகளில் பார்க்க முடியலாம். அப்போது நீங்கள் சோர்ந்துபோயிருக்கிறீர்களா? உங்கள் சந்தோஷத்தை இழக்காமல் இருப்பதற்கும் அதை அதிகப்படுத்துவதற்கும் என்ன செய்யலாம்? “ சந்தோஷமாக ஊழியம் செய்ய...” என்ற பெட்டியில் இருக்கிற சில நடைமுறையான ஆலோசனைகள் உங்களுக்கு உதவும். அதோடு, ஊழியத்தைப் பற்றி சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக்கொள்வதில் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன?
19 நாம் ஊழியம் செய்வதற்கான முக்கியக் காரணமே கடவுளுடைய பெயரையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்காகத்தான். நாம் ஊழியம் செய்யும்போது யெகோவாவுடனும் இயேசுவுடனும் தேவதூதர்களுடனும் சேர்ந்து வேலை செய்கிற பாக்கியம் நமக்குக் கிடைக்கிறது. (மத். 28:19, 20; 1 கொ. 3:9; வெளி. 14:6, 7) கொஞ்சப் பேர் மட்டும்தான் வாழ்வுக்கான பாதையில் வருவார்கள் என்று இயேசு தெளிவாக சொன்னார். (மத். 7:13, 14) யெகோவாவும், தனக்கு யார் சேவை செய்வதற்கு விரும்புகிறார்களோ அவர்களைத்தான் தன்னிடம் ஈர்க்கிறார். (யோவா. 6:44) அதனால், நீங்கள் சொல்லும் செய்தியை ஒருவர் காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் சோர்ந்துபோகாதீர்கள். ஒருவேளை, அடுத்த தடவை அவர் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
20. சோர்வைச் சமாளிப்பதைப் பற்றி எரேமியா 20:8, 9-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
20 எரேமியா தீர்க்கதரிசியிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் சொன்ன செய்தியை மக்கள் மதிக்கவே இல்லை. அவரை கண்டபடி பேசினார்கள். “நாள் முழுவதும்” கிண்டல் செய்துகொண்டே இருந்தார்கள். (எரேமியா 20:8, 9-ஐ வாசியுங்கள்.) ஒரு கட்டத்தில், எரேமியா மிகவும் சோர்ந்துபோய் ‘இனிமேல் பிரசங்கிக்கவே கூடாது’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால், பிரசங்கிப்பதை அவர் நிறுத்திவிட்டாரா? இல்லை. ஏனென்றால், ‘யெகோவாவுடைய . . . செய்தி’ அவருடைய எலும்புகளில் அடைத்து வைக்கப்பட்ட நெருப்பைப் போல் இருந்தது. அதனால், அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. இன்று நாமும் நம்முடைய இதயத்தை கடவுளுடைய வார்த்தையால் நிரப்பும்போது நம்மாலும் பேசாமல் இருக்க முடியாது. அப்படி நிரப்புவதற்கு, நாம் தினமும் பைபிளைப் படித்து, ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால், நாம் இன்னும் சந்தோஷமாக ஊழியம் செய்ய முடியும். நாம் சொல்லும் செய்தியையும் நிறைய பேர் காதுகொடுத்து கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.—எரே. 15:16.
21. சோர்வை நாம் எப்படித் துரத்தியடிக்கலாம்?
21 “சோர்வுங்குறது சாத்தான் பயன்படுத்துற வலிமையான ஆயுதம்” என்று ஏற்கெனவே பார்த்த டெபோரா சொல்கிறார். ஆனால், யெகோவாவுக்கு முன்னால் சாத்தானுடைய ஆயுதங்கள் எல்லாம் வெறும் தூசுதான்! அதனால், என்ன காரணத்துக்காக சோர்வு வந்தாலும் சரி, உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சுங்கள். தவறுகளோடும் பலவீனங்களோடும் நீங்கள் போராடும்போது அவர் உங்களுக்கு உதவுவார். நோயால் அவதிப்படும்போது அவர் உங்களைத் தாங்குவார். பொறுப்புகள் கிடைக்காதபோது சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க உங்களுக்கு உதவி செய்வார். உங்களுடைய செய்தியை மக்கள் காதுகொடுத்து கேட்காதபோது ஊழியத்தைப் பற்றி சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள உதவுவார். அதனால், உங்கள் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... என்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள். அவருடைய உதவியோடு நிச்சயம் உங்களால் சோர்வைத் துரத்தியடிக்க முடியும்!
பாட்டு 56 யெகோவாவே, கேளும் என் ஜெபம்
^ பாரா. 5 நாம் எல்லாருமே சிலசமயங்களில் சோர்ந்துவிடுகிறோம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். யெகோவாவின் துணையோடு நிச்சயம் சோர்வை நம்மால் துரத்தியடிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
^ பாரா. 4 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
^ பாரா. 12 லாரல் நிஸ்பெட்டின் வாழ்க்கை சரிதையை ஜனவரி 22, 1993, விழித்தெழு! பத்திரிகையில் (ஆங்கிலம்) பாருங்கள்.
^ பாரா. 69 படவிளக்கம்: ஒரு சகோதரி ஒரு கட்டத்தில் சோர்ந்துபோகிறார். ஆனால், முன்பு யெகோவாவுக்கு செய்த சேவையை நினைத்துப் பார்க்கிறார். அவரிடம் ஜெபம் செய்கிறார். தான் முன்பு செய்ததையும், இப்போது செய்துவருவதையும் யெகோவா நிச்சயம் மறக்க மாட்டார் என்பதை உறுதியாக நம்புகிறார்.