வாசகர் கேட்கும் கேள்விகள்
பவுலின் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் இறந்துபோனவர்களுக்காக ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்று 1 கொரிந்தியர் 15:29 சொல்கிறதா?
இல்லை. பைபிளிலும் சரி வரலாற்றிலும் சரி, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆனால், சில மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தைத் தவறாக மொழிபெயர்த்திருப்பதால் பவுலின் காலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்ததாக சிலர் நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு, தமிழ் O.V (BSI) பைபிள் இப்படிச் சொல்கிறது: “மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்?”
இதைப் பற்றி பைபிள் அறிஞர்கள் இரண்டு பேர் என்ன சொன்னார்கள் என்று பாருங்கள். “இறந்தவங்களுக்காக ஞானஸ்நானம் எடுத்தாங்கனு நம்புறதுக்கு வரலாற்றிலயும் சரி பைபிள்லயும் சரி எந்த ஆதாரமும் இல்ல” என்று டாக்டர் க்ரகெரி லாக்வுட் சொன்னார். பேராசிரியர் கார்டன். டி. ஃபி இப்படி எழுதினார்: ‘இதற்கு முன்பு இப்படி ஒரு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக வரலாறும் சொல்லவில்லை, பைபிளும் சொல்லவில்லை. புதிய ஏற்பாடும் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஞானஸ்நானம் எடுத்ததாகவோ, அப்போஸ்தலர்கள் இறந்ததற்குப் பிறகு உருவான சர்ச்சுகளில் இப்படிப்பட்ட ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாகவோ எந்தப் பதிவும் இல்லை.’
இயேசுவைப் பின்பற்றுபவர்கள், ‘எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுக்க’ வேண்டும் என்றும், இயேசு கட்டளையிட்ட ‘எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க’ வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது. (மத். 28:19, 20) ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு, யெகோவாவைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள்மீது விசுவாசம் வைக்க வேண்டும். அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏற்கெனவே இறந்துபோன ஒருவரால் இதையெல்லாம் எப்படிச் செய்ய முடியும்? இப்படிப்பட்ட ஒருவருக்காக இன்னொருவர் எப்படி ஞானஸ்நானம் எடுக்க முடியும்?—பிர. 9:5, 10; யோவா. 4:1; 1 கொ. 1:14-16.
அப்படியென்றால், பவுல் என்ன சொல்லவருகிறார்?
கொரிந்திய கிறிஸ்தவர்கள் சிலர், இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என்று சொன்னார்கள். (1 கொ. 15:12) அவர்களுடைய எண்ணம் தவறு என்று பவுல் சொன்னார். அவர் உயிரோடு இருந்தபோதும், “தினமும் நான் சாவை எதிர்ப்படுகிறேன்” என்று சொன்னார். ஏனென்றால், அந்தளவுக்கு அவர் ஆபத்துகளைச் சந்தித்தார். ஆனாலும், தான் இறந்ததற்குப் பிறகு, இயேசுவைப் போலவே தன்னையும் கடவுள் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்புவார் என்று நம்பினார்.—1 கொ. 15:30-32, 42-44.
கொரிந்துவிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலர், தாங்கள் தினமும் ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்பு சாக வேண்டியிருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. “கிறிஸ்து இயேசுவுக்குள் [அவர்கள்] ஞானஸ்நானம்” எடுத்திருக்கிறார்கள் என்றால், “அவருடைய மரணத்துக்குள்ளும் ஞானஸ்நானம்” எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். (ரோ. 6:3) அப்படியென்றால், இயேசுவைப் போலவே அவர்கள் சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்பு சாக வேண்டியிருக்கும்.
இயேசு தண்ணீரில் ஞானஸ்நானம் எடுத்து இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, தன்னுடைய அப்போஸ்தலர்கள் இரண்டு பேரிடம், “நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்கள்” என்று சொன்னார். (மாற். 10:38, 39) தண்ணீரில் ஞானஸ்நானம் எடுத்ததைப் பற்றி இயேசு இங்கே சொல்லவில்லை. கடவுளுக்கு உண்மையாக இருப்பதால், தான் சாக வேண்டியிருக்கும் என்பதைத்தான் அவர் சொன்னார். “கிறிஸ்துவோடு சேர்ந்து நாம் பாடுகளை அனுபவித்தால் அவரோடு சேர்ந்து மகிமையையும் பெறுவோம்” என்று அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். (ரோ. 8:16, 17; 2 கொ. 4:17) அதனால், அவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்பு இயேசுவைப் போலவே சாக வேண்டியிருக்கும்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, 1 கொரிந்தியர் 15:29-ஐ இப்படி மொழிபெயர்ப்பதுதான் சரியாக இருக்கும்: “இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், இறந்தவர்களாய் இருப்பதற்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு என்ன பிரயோஜனம்? இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படவே மாட்டார்கள் என்றால், அப்படி இறந்தவர்களாய் இருப்பதற்காக அவர்கள் ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?”