Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

அடுத்தவர்களுடைய “உயிருக்கு உலை வைக்கக் கூடாது” என்று லேவியராகமம் 19:16-ல் சொல்லியிருக்கிற கட்டளைக்கு என்ன அர்த்தம்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். இந்த விஷயத்தை வலியுறுத்துவதற்காக அவர் இப்படிச் சொன்னார்: “அடுத்தவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது. அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கக் கூடாது. நான் யெகோவா.”—லேவி. 19:2, 16.

அடுத்தவர்களுடைய உயிருக்கு “உலை வைக்கக் கூடாது” என்று சொன்னதற்கு என்ன அர்த்தம்? லேவியராகமத்தைப் பற்றிக் குறிப்பிடுகிற ஒரு யூத புத்தகம் இப்படிச் சொல்கிறது: “இந்த வசனத்தில் இருக்கிற இந்தப் பகுதியை . . . மொழிபெயர்ப்பது ரொம்பக் கஷ்டம். ஏனென்றால், இந்தப் பகுதி எபிரெயுவில் ஒரு மரபுத்தொடராக சொல்லப்பட்டிருக்கிறது. ‘பக்கத்தில் நிற்காதே’ என்பதுதான் அதன் நேரடி அர்த்தம்.”

லேவியராகமம் 19:16-ல் இருக்கிற இந்தப் பகுதியை சில அறிஞர்கள் லேவியராகமம் 19:15-உடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள். அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது. ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது. எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும்.” இந்த அறிஞர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், 16-ஆம் வசனத்தில் இருக்கிற ‘பக்கத்தில் நிற்காதே’ என்ற வாக்கியத்துக்கு இதுதான் அர்த்தம். அதாவது, நீதிமன்ற வழக்குகளில்... வியாபார விஷயங்களில்... இல்லையென்றால், குடும்ப விவகாரங்களில்... மற்றவர்களுக்கு அநீதி செய்யக் கூடாது, சுய லாபத்துக்காக நேர்மை இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. உண்மைதான், இவற்றையெல்லாம் நாம் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஆனால், நியாயமாகப் பார்த்தால், 16-ம் வசனத்தில் இருக்கிற அந்தப் பகுதியை வேறு விதமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது கிசுகிசுப்பதைவிட ரொம்ப மோசமானது. மற்றவர்களைப் பற்றி கிசுகிசுத்தாலே நிறைய பிரச்சினைகள் வரும். ஆனால், இல்லாததையும் பொல்லாததையும் பேசும்போது அதைவிட பயங்கரமான பிரச்சினைகள் வரலாம். (நீதி. 10:19; பிர. 10:12-14; 1 தீ. 5:11-15; யாக். 3:6) இப்படிச் செய்கிறவர்கள், ஒருவருடைய மதிப்பு மரியாதையைக் கெடுத்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, அவரைப் பற்றி பொய்சாட்சி சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால், அவருடைய உயிரே போய்விடலாம். நாபோத்தின் விஷயத்தில் இதுதான் நடந்தது. இரண்டு பேர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னதால் அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார். (1 ரா. 21:8-13) இதிலிருந்து என்ன தெரிகிறது? லேவியராகமம் 19:16-ன் இரண்டாவது பாகம் சொல்வதுபோல், நாம் இல்லாததையும் பொல்லாததையும் பேசும்போது ஒருவருடைய உயிருக்கே உலை வைத்து விடுவோம்.

ஒருவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதற்கு இன்னொரு காரணம், அவர்மேல் இருக்கிற வெறுப்புதான். “தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான். கொலைகாரன் எவனுக்கும் முடிவில்லாத வாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்” என்று 1 யோவான் 3:15 சொல்கிறது. அப்படியென்றால், மற்றவர்களுடைய உயிருக்கு உலை வைக்க கூடாது என்று லேவியராகமம் 19:16-ல் சொல்லிவிட்டு, அடுத்த வசனத்தில் ‘உள்ளத்தில்கூட உங்கள் சகோதரனை வெறுக்காதீர்கள்’ என்று கடவுள் சொல்லியிருப்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இல்லையா?—லேவி. 19:17.

அடுத்தவர்களுடைய “உயிருக்கு உலை வைக்கக் கூடாது” என்ற அழுத்தம் திருத்தமான அறிவுரையை லேவியராகமம் 19:16-ல் கடவுள் கொடுத்திருக்கிறார். மற்றவர்களைப் பற்றிக் கெட்ட எண்ணங்களை நாம் வளர்த்துக்கொள்ளக் கூடாது. அவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிவிடக் கூடாது. சுருக்கமாகச் சொன்னால், ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலோ அவர்மேல் நாம் பொறாமைப்பட்டாலோ அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிவிடுவோம். அப்படிப் பேசினால், அவர்மேல் நமக்கு வெறுப்பு இருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்தக் குணம் நமக்கு இருக்கவே கூடாது.—மத். 12:36, 37.