Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 53

இளம் சகோதரர்களே​—⁠முதிர்ச்சியுள்ள ஆண்களாக ஆகுங்கள்

இளம் சகோதரர்களே​—⁠முதிர்ச்சியுள்ள ஆண்களாக ஆகுங்கள்

“சகோதரர்களே, . . . புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததிலோ குழந்தைகளாக இல்லாமல் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்.”—1 கொ. 14:20.

பாட்டு 135 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’

இந்தக் கட்டுரையில்... a

1. இளம் சகோதரர்கள் என்ன செய்ய வேண்டும்?

 அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியர்களுக்கு இப்படி எழுதினார்: “சகோதரர்களே, . . . புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததிலோ குழந்தைகளாக இல்லாமல் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்.” (1 கொ. 14:20) பவுல் சொன்ன இந்த ஆலோசனையை எல்லா கிறிஸ்தவ ஆண்களும் கடைப்பிடிக்க வேண்டும். கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து பைபிள் நியமங்களை வாழ்க்கையில் பொருத்தும்போது ஒருவர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக முடியும். (லூக். 2:52) இளம் சகோதரர்கள் ஒரு முதிர்ச்சியுள்ள சகோதரராக ஆவது ஏன் முக்கியம்?

2-3. இளம் சகோதரர்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவது ஏன் முக்கியம்?

2 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு குடும்பத்திலும் சபையிலும் நிறைய முக்கியமான பொறுப்புகள் இருக்கின்றன. இளம் சகோதரர்களே, எதிர்காலத்தில் உங்களுக்கு என்னென்ன பொறுப்புகளை இருக்கின்றன என்று நீங்கள் கண்டிப்பாக யோசித்திருப்பீர்கள். முழுநேர சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை நீங்கள் வைத்திருக்கலாம். அல்லது, ஒரு உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சேவை செய்ய நீங்கள் குறிக்கோள் வைத்திருக்கலாம். கல்யாணம் பண்ணி குழந்தைகளைப் பெற்று எடுக்க வேண்டும் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். (எபே. 6:4; 1 தீ. 3:1) உங்களுடைய குறிக்கோள்களை அடையவும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவும், நீங்கள் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆக வேண்டும். b

3 முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முக்கியமான சில திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் பொறுப்புகளை நல்லபடியாக செய்ய இப்போதே நீங்கள் எப்படித் தயாராகலாம்? அதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

முதிர்ச்சிக்குக் கொண்டுசெல்லும் படிகள்

இயேசு காட்டிய குணங்களை நீங்களும் காட்டினால் முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரராக ஆக முடியும் (பாரா 4)

4. நல்ல உதாரணங்களை நீங்கள் எங்கே கண்டுபிடிக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

4 நல்ல உதாரணங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். நிறைய இளம் ஆண்களுடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்கள் எல்லாரும் கடவுள்மேல் அன்பு வைத்திருந்தார்கள். கடவுளுடைய மக்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நல்லபடியாக செய்தார்கள். உங்கள் குடும்பத்திலும் சபையிலும்கூட முதிர்ச்சியுள்ள ஆண்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களுடைய உதாரணத்தையும் நீங்கள் பின்பற்றலாம். (எபி. 13:7) எல்லாவற்றையும்விட இயேசு கிறிஸ்து உங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. (1 பே. 2:21) இவர்கள் எல்லாருடைய உதாரணத்தையும் ஆழமாக படித்துப்பாருங்கள். அவர்களுக்கு இருந்த குணங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். (எபி. 12:1, 2) பிறகு, அவர்களை மாதிரியே எப்படி நடந்துகொள்ளலாம் என்று யோசியுங்கள்.

5. யோசிக்கும் திறனை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம், அது ஏன் முக்கியம்? (சங்கீதம் 119:9)

5 “யோசிக்கும் திறனை” வளர்த்துக்கொள்ளுங்கள், பாதுகாத்துக்கொள்ளுங்கள். (நீதி. 3:21) யோசிக்கும் திறன் இருக்கும் ஒருவர் அவசரப்பட்டு எதையும் செய்துவிட மாட்டார். இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளவும் அதைத் தொடர்ந்து காட்டவும் கடினமாக முயற்சி எடுங்கள். ஏன் அதற்குக் கடின முயற்சி தேவை? மனதில் தோன்றுவதை யோசிக்காமல் அப்படியே செய்கிற இளைஞர்கள்தான் இன்று உலகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். (நீதி. 7:7; 29:11) அதுமட்டுமல்ல, மீடியாவில் என்ன பார்க்கிறீர்களோ அதேமாதிரி யோசிக்க வேண்டும் என்றும், செய்ய வேண்டும் என்றும்கூட உங்களுக்குத் தோன்றலாம். அப்படியென்றால் யோசிக்கும் திறனை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? முதலில், பைபிள் நியமங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். அந்த நியமங்கள் உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசியுங்கள். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி தீர்மானங்கள் எடுக்க இந்த நியமங்களைப் பயன்படுத்துங்கள். (சங்கீதம் 119:9-ஐ வாசியுங்கள்.) யோசிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதுதான் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு முக்கிய படி. (நீதி. 2:11, 12; எபி. 5:14) யோசிக்கும் திறன் உங்களுக்கு இரண்டு சூழ்நிலைமைகளில் உதவும்: (1) சகோதரிகளுடன் பழகும்போது (2) உடை, தோற்றம் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கும்போது.

6. சகோதரிகளுக்கு மரியாதை காட்ட இளம் சகோதரர்களுக்கு யோசிக்கும் திறன் எப்படி உதவும்?

6 பெண்களை மதித்து நடப்பதற்கு யோசிக்கும் திறமை உதவும். ஒரு இளம் சகோதரருக்கு ஒரு சகோதரியை பிடித்துப் போகலாம். அவரைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை, அது இயல்புதான்! இருந்தாலும், யோசிக்கும் திறமை இருக்கிற ஒருவருக்கு ஒரு சகோதரியை கல்யாணம் பண்ணும் எண்ணம் இல்லை என்றால் அவரைக் காதலிப்பது போல் எந்த சிக்னலும் கொடுக்க மாட்டார். ‘அந்த சகோதரருக்கு என்னை பிடித்திருக்கிறதோ... அவர் என்னை காதலிக்கிறாரோ...’ என்று ஒரு சகோதரி யோசிக்கிற மாதிரி அவர் எதையும் சொல்லவோ செய்யவோ மாட்டார். (1 தீ. 5:1, 2) ஒருவேளை, அவரும் ஒரு சகோதரியும் காதலிக்கிறார்கள் என்றால், அந்த சகோதரியுடைய பெயரைக் கெடுக்கிற மாதிரி எதையும் செய்துவிட மாட்டார். அந்த சகோதரியோடு அவர் தனியாக இருக்க மாட்டார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நேரம் செலவு செய்யும்போது, இன்னொருவர் தங்களுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.—1 கொ. 6:18.

7. உடை மற்றும் தோற்றம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது யோசிக்கும் திறனை எப்படிப் பயன்படுத்தலாம்?

7 உடை மற்றும் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுப்பதன் மூலமாகவும் இளம் சகோதரர்கள் யோசிக்கும் திறனைப் பயன்படுத்தலாம். புதுப் புது ஸ்டைலில் உடைகளை வடிவமைத்து அதைப் பிரபலப்படுத்துகிறவர்கள் பெரும்பாலும் யெகோவாவை வணங்காதவர்களாக அல்லது மோசமான வாழ்க்கை வாழ்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஒழுக்கக்கேடான யோசனைகள் அவர்கள் வடிவமைக்கும் உடைகளில் தெரிகிறது. உதாரணத்திற்கு, உடலோடு ஒட்டியிருக்கிற உடைகளை அவர்கள் வடிவமைக்கிறார்கள். அல்லது, ஆண்களை பெண்களைப் போல் காட்டுகிற உடைகளைத் தயாரிக்கிறார்கள். அதனால், உடைகளை தேர்ந்தெடுக்கும்போது இளம் சகோதரர்கள் பைபிள் நியமங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும். சபையில் இருக்கிற நல்ல உதாரணங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் எடுக்கும் முடிவு எனக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டுகிறதா? மற்றவர்களை மதிக்கிறேன் என்பதைக் காட்டுகிறதா? நான் போடுகிற உடை நான் யெகோவாவை வணங்குகிறேன் என்பதைக் காட்டுகிறதா?’ (1 கொ. 10:31-33; தீத். 2:6) யோசிக்கும் திறன் இருக்கிற ஒரு இளம் சகோதரர், சகோதர சகோதரிகளுடைய மதிப்பு மரியாதையை மட்டுமல்ல யெகோவாவுடைய மதிப்பு மரியாதையையும் சம்பாதிப்பார்.

8. இளம் சகோதரர்கள் எப்படிப் பொறுப்பாக நடந்துகொள்ளலாம்?

8 பொறுப்பானவர்களாக இருங்கள். பொறுப்புள்ள ஒரு இளைஞர், தான் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் கண்ணும் கருத்துமாக செய்வார். (லூக். 16:10) இயேசுவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் எதையுமே ஏனோதானோவென்று பொறுப்பில்லாமல் செய்யவில்லை. யெகோவா தனக்குக் கொடுத்த எல்லா நியமிப்புகளையும் சரியாக செய்து முடித்தார். அது ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் அதை செய்தார். மக்கள்மேல் நிறைய அன்பு வைத்திருந்தார். முக்கியமாக, தன்னுடைய சீஷர்களை ரொம்ப நேசித்தார், அவர்களுக்காக உயிரையே கொடுத்தார். (யோவா. 13:1) ஒருவர் உங்களுக்கு வேலை கொடுத்தால், இயேசுவை மாதிரியே அதை நல்லபடியாக செய்து முடிக்க முயற்சி எடுங்கள். ஒருவேளை, அந்த வேலையை எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றால், மனத்தாழ்மையாக முதிர்ச்சியுள்ள சகோதரர்களிடம் உதவிக் கேளுங்கள். வேலையை செய்து முடித்தால் போதும் என்று ஏனோதானோவென்று செய்யாதீர்கள். (ரோ. 12:11) அதற்குப் பதிலாக, உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற நியமிப்பை “மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக முழு மூச்சோடு செய்யுங்கள்.” (கொலோ. 3:23) நீங்கள் தவறே செய்ய மாட்டீர்கள் என்று சொல்ல முடியாது. அதனால், ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை மனத்தாழ்மையாக ஒத்துக்கொள்ளுங்கள்.—நீதி. 11:2.

திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

9. இளம் சகோதரர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

9 முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரராக ஆக வேண்டும் என்றால், வாழ்க்கைக்குத் தேவையான சில திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்வது முக்கியம். சபையில் சில பொறுப்புகளை செய்ய அது உங்களுக்கு உதவும். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்கு உங்களுக்கு ஒரு வேலை தேவை. அதைக் கண்டுபிடிக்கவும், மற்றவர்களோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்ளவும் இந்த மாதிரியான திறமைகள் தேவை. சில திறமைகளைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

நன்றாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் சபைக்கும் பிரயோஜனமாக இருக்கும் (பாராக்கள் 10-11)

10-11. வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வது இளம் சகோதரர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்? சபையில் இருக்கிறவர்களுக்கு அது எப்படி உதவியாக இருக்கும்? (சங்கீதம் 1:1-3) (படத்தையும் பாருங்கள்.)

10 நன்றாக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொள்ளுங்கள். தினமும் பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசிக்கும் ஒரு நபர் சந்தோஷமாக இருப்பார். அவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். (சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.) தினமும் பைபிளை வாசிக்கும்போது யெகோவா எப்படி யோசிக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். அப்படித் தெரிந்துகொண்டால், நாம் தெளிவாக யோசிப்போம். பைபிள் வசனங்களை எந்த சூழ்நிலையில் எப்படிப் பொருத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வோம். (நீதி. 1:3, 4) இப்படியெல்லாம் செய்கிற சகோதரர்கள் சபைக்குத் தேவை. ஏன்?

11 பைபிளில் இருந்து கற்றுக்கொடுக்க தெரிந்த, ஆலோசனை கொடுக்க தெரிந்த சகோதரர்களிடம்தான் சபையில் இருக்கிறவர்கள் உதவி கேட்டு வருவார்கள். (தீத். 1:9) உங்களுக்கு நன்றாக வாசிக்கவும் எழுதவும் தெரிந்தால், பேச்சுகளை நன்றாக தயாரித்துக் கொடுக்க முடியும், பதில்களையும் சொல்ல முடியும். இது மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும். அதுமட்டுமல்ல, பைபிள் படிக்கும்போது நல்ல குறிப்புகளை எழுதி வைக்க முடியும். கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பேச்சுகளைக் கேட்கும்போது நீங்கள் குறிப்புகளை எடுத்துக்கொள்ள முடியும். இந்தக் குறிப்புகள் உங்கள் விசுவாசத்தையும் பலப்படுத்தும், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.

12. பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ள எது உங்களுக்கு உதவும்?

12 பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு சகோதரருக்குப் பேச்சுத் திறமை ரொம்ப முக்கியம். பேச்சுத் திறமை இருக்கிற ஒரு சகோதரர் மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்பார். அவர்களுடைய மனதில் ஓடுகிற எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வார். (நீதி. 20:5) பேசுகிறவருடைய தொனி எப்படி இருக்கிறது, முகபாவனைகள் எப்படி இருக்கிறது, அவருடைய சைகைகள் என்ன சொல்கிறது என்பதையும் புரிந்துகொள்வார். மக்களுடன் நிறைய நேரம் நீங்கள் செலவு செய்தால்தான் இதையெல்லாம் உங்களால் கற்றுக்கொள்ள முடியும். ஈ-மெயில் அல்லது மெஸேஜ் மூலம் மட்டுமே மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தால், நேரில் பேசுவது உங்களுக்குக் கஷ்டமாக ஆகிவிடலாம். அதனால், மற்றவர்களோடு நேரில் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள்.—2 யோ. 12.

வேலை கிடைப்பதற்கு தேவையான திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்வது நல்லது (பாரா 13)

13. இளம் சகோதரர்கள் வேறு எதையும் கற்றுக்கொள்ள வேண்டும்? (1 தீமோத்தேயு 5:8) (படத்தையும் பாருங்கள்.)

13 உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவர் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் நன்றாகப் பார்த்துக்கொள்வார். (1 தீமோத்தேயு 5:8-ஐ வாசியுங்கள்.) சில நாடுகளில், அப்பாவிடமிருந்தோ சொந்தக்காரர்களிடமிருந்தோ இளம் பிள்ளைகள் தொழில் கற்றுக்கொள்கிறார்கள். வேறு சில நாடுகளில், பள்ளியிலேயே தொழிலையோ சில திறமைகளையோ கற்றுக்கொள்கிறார்கள். எப்படி இருந்தாலும் சரி, ஒரு வேலையை கண்டுபிடிப்பதற்கு அல்லது நீங்களாகவே ஒரு தொழில் செய்வதற்குத் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். (அப். 18:2, 3; 20:34; எபே. 4:28) கடினமாக உழைக்கிறவர் என்ற பெயரை எடுங்கள். ‘அவர் ஒரு வேலையை ஆரம்பித்தால் அதைக் கண்டிப்பாக செய்து முடிப்பார்’ என்று மற்றவர்கள் உங்களைப் பற்றி சொல்லுமளவுக்கு நடந்துகொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்தால், உங்களுக்கு வேலை கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வேலையை உங்களால் தக்க வைத்துக்கொள்ளவும் முடியும். இவ்வளவு நேரம் நாம் பார்த்தக் குணங்களும், திறமைகளும் எதிர்காலத்தில் வருகிற பொறுப்புகளை நல்லபடியாக செய்யவும், முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கும் உங்களுக்கு உதவும். எதிர்காலத்தில் உங்களுக்கு வரும் சில பொறுப்புகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

எதிர்கால பொறுப்புகளை செய்ய தயாராகுங்கள்

14. முழுநேர சேவை செய்வதற்கு இளம் சகோதரர்கள் எப்படித் தயார் ஆகலாம்?

14 முழுநேர சேவை. நிறைய முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் சின்ன வயதிலேயே முழுநேர சேவையை ஆரம்பித்திருக்கிறார்கள். இளம் வயதிலேயே நீங்கள் பயனியர் செய்ய ஆரம்பித்தால், வித்தியாசமான ஆட்களோடு சேர்ந்து எப்படி வேலை செய்வது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். அதுமட்டுமல்ல, கிடைக்கிற வருமானத்தை வைத்து பட்ஜெட் போட்டு வாழவும் கற்றுக்கொள்வீர்கள். (பிலி. 4:11-13) துணைப் பயனியர் சேவைதான் முழுநேர சேவைக்கு ஆரம்பப் படி. ஒரு ஒழுங்கான பயனியராக ஆவதற்கு, துணைப் பயனியராக கொஞ்ச நாள் சேவை செய்ததுதான் நிறைய பேருக்கு உதவியிருக்கிறது. பயனியர் சேவை, மற்ற முழுநேர சேவை செய்வதற்கான வாய்ப்புகளையும் திறந்துவைக்கும். அதாவது, கட்டுமான வேலை அல்லது பெத்தேல் சேவையைக்கூட நீங்கள் பிற்பாடு செய்யலாம்.

15-16. இளம் சகோதரர்கள் உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சேவை செய்வதற்கு எப்படித் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்?

15 உதவி ஊழியர் அல்லது மூப்பர். சபையில் ஒரு மூப்பராக ஆகி சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆணுக்கும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குறிக்கோளை வைத்து உழைக்கிறவர், “சிறந்த வேலையை விரும்புகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 3:1) ஒரு சகோதரர் மூப்பராக சேவை செய்வதற்கு முன்பு உதவி ஊழியராக ஆக வேண்டும்; அதற்கான தகுதிகளை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். உதவி ஊழியர்கள் மூப்பர்களுக்கு நிறைய விதங்களில் உதவி செய்கிறார்கள். மூப்பர்களும் சரி, உதவி ஊழியர்களும் சரி, சகோதர சகோதரிகளுக்கு மனத்தாழ்மையாக சேவை செய்கிறார்கள். ஊழியத்தையும் சுறுசுறுப்பாக செய்கிறார்கள். 17-லிருந்து 19 வயதுக்குள் இருக்கிற இளம் சகோதரர்கள்கூட உதவி ஊழியர்களாக ஆகலாம். அதேபோல், 20 வயது இருக்கிற உதவி ஊழியர்களுக்கு மூப்பராக ஆவதற்கான எல்லா தகுதிகளும் இருந்தால் அவர்களும்கூட மூப்பராக நியமிக்கப்படலாம்.

16 உதவி ஊழியராகவும் மூப்பராகவும் ஆக வேண்டுமென்றால், ஒருவருக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. யெகோவாவின் மேலும் குடும்பத்தின் மேலும் சபையின் மேலும் இருக்கிற அன்பின் அடிப்படையில் இந்தத் தகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (1 தீ. 3:1-13; தீத். 1:6-9; 1 பே. 5:2, 3) இந்தத் தகுதிகளை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? பைபிள் சொல்கிற ஒவ்வொரு தகுதியையும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அதையெல்லாம் வளர்த்துக்கொள்வதற்கு உதவ சொல்லி யெகோவாவிடம் ஜெபம் பண்ணுங்கள். c

ஒரு கணவன் தன் குடும்பத்தை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், அவர்களுடைய தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும், உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் யெகோவாவோடு நெருங்கியிருக்க உதவ வேண்டும். (பாரா 17)

17. ஒரு கணவராகவும் நல்ல குடும்பத் தலைவராகவும் ஆவதற்கு இளம் சகோதரர்கள் எப்படித் தயாராகலாம்? (படத்தையும் பாருங்கள்.)

17 கணவர் மற்றும் குடும்பத் தலைவர். இயேசு சொன்னதுபோல் சில முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ ஆண்கள் கல்யாணம் பண்ணாமலேயே இருக்க முடிவு செய்கிறார்கள். (மத். 19:12) ஒருவேளை, நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைத்தால் கணவர் மற்றும் குடும்பத் தலைவர் என்ற பொறுப்புகளையும் எடுத்து செய்ய வேண்டியிருக்கும். (1 கொ. 11:3) ஒரு கணவர் தன்னுடைய மனைவியை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், அவளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும், உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும், கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவ வேண்டும். கணவர்கள் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (எபே. 5:28, 29) இந்தக் கட்டுரையில் பார்த்ததுபோல், யோசிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது, பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வது ஒரு நல்ல கணவராகவும் குடும்பத் தலைவராகவும் ஆவதற்கு உங்களுக்கு உதவும்.

18. நல்ல அப்பாவாக ஆவதற்கு ஒரு இளம் சகோதரர் எப்படித் தயார் ஆகலாம்?

18 அப்பா. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு அப்பாவாக ஆகலாம். ஒரு நல்ல அப்பாவாக இருப்பது எப்படி என்று யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (எபே. 6:4) யெகோவா தன்னுடைய மகன் இயேசுமேல் அன்பு வைத்திருந்ததையும், அவரை ஏற்றுக்கொண்டதையும் வெளிப்படையாக சொன்னார். (மத். 3:17) நீங்களும் ஒரு அப்பாவாக ஆகும்போது, உங்கள் பிள்ளைகளை நேசிக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சொல்லுங்கள். அவர்கள் ஏதாவது நல்ல விஷயங்களை செய்யும்போது அவர்களை வாயாரப் பாராட்டுங்கள். யெகோவாவை மாதிரியே நடந்துகொள்ளும் அப்பாக்களால் நல்ல பிள்ளைகளை வளர்க்க முடியும்; அந்த பிள்ளைகள் முதிர்ச்சியுள்ள ஆண்களாகவும் பெண்களாகவும் வளருவார்கள். இதையெல்லாம் செய்வதற்கு இப்போதே நீங்கள் எப்படித் தயாராகலாம்? குடும்பத்திலும் சபையிலும் இருக்கிறவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை செயலில் காட்டுங்கள். அவர்களைத் தாராளமாகப் பாராட்டுங்கள். (யோவா. 15:9) இப்படியெல்லாம் செய்யும்போது யெகோவாவுக்கும் குடும்பத்துக்கும் சபைக்கும் நீங்கள் ஒரு பெரிய சொத்தாக இருப்பீர்கள்.

இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

நிறைய இளம் சகோதரர்கள் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடித்ததால் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கிறார்கள் (பாராக்கள் 19-20)

19-20. முதிர்ச்சியுள்ள ஒரு நபராக ஆவதற்கு இளம் சகோதரர்களுக்கு எதுவெல்லாம் உதவி செய்யும்? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

19 இளம் சகோதரர்களே, நீங்கள் தானாகவே முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக மாறிவிட மாட்டீர்கள். இந்தக் கட்டுரையில் பார்த்ததுபோல், நல்ல உதாரணங்களைப் பற்றி யோசியுங்கள், யோசிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள், பொறுப்பானவர்களாக நடந்துகொள்ளுங்கள், வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளைக் கற்றுக்கொள்ளுங்கள், எதிர்கால பொறுப்புகளுக்காக இப்போதே தயாராகுங்கள்.

20 உங்கள் முன்பு இருக்கிற வேலைகளைப் பற்றி யோசிக்கும்போது, அவை உங்களுக்கு மலை போல் தெரியலாம். ஆனால், கவலைப்படாதீர்கள்! உங்களால் கண்டிப்பாக அதைத் தாண்டி வர முடியும். உங்களுக்கு உதவ யெகோவா ஆசையாகக் காத்திருக்கிறார். (ஏசா. 41:10, 13) உதவி செய்ய சகோதர சகோதரிகளும் இருக்கிறார்கள். முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரராக நீங்கள் ஆகும்போது, உங்களுடைய வாழ்க்கை கண்டிப்பாக சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும். இளம் சகோதரர்களே, நாங்கள் உங்களை ரொம்ப நேசிக்கிறோம். ஒரு முதிர்ச்சியுள்ள சகோதரராக ஆவதற்கு நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா கட்டாயம் ஆசீர்வதிப்பார்.—நீதி. 22:4.

பாட்டு 65 முன்னே செல்வோமே!

a கிறிஸ்தவ சபைக்கு முதிர்ச்சியுள்ள ஆண்கள் தேவை. இளம் சகோதரர்களே, முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக எப்படி ஆகலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

b போன கட்டுரையில் வந்த ‘வார்த்தைகளின் விளக்கத்தைப்’ பாருங்கள்.

c யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 5, 6-ஐப் பாருங்கள்.