Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 52

இளம் சகோதரிகளே​—⁠முதிர்ச்சியுள்ள பெண்களாக ஆகுங்கள்

இளம் சகோதரிகளே​—⁠முதிர்ச்சியுள்ள பெண்களாக ஆகுங்கள்

“பெண்கள் . . . பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.”—1 தீ. 3:11.

பாட்டு 133 வாலிபத்தில் யெகோவாவை சேவியுங்கள்!

இந்தக் கட்டுரையில்... a

1. ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

 ஒரு குழந்தை வேகமாக வளர்ந்து பெரிய ஆளாக ஆவதைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த வளர்ச்சி தானாக நடக்கிறது. ஆனால், முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக வளருவது, தானாக நடக்கிற விஷயம் கிடையாது. b (1 கொ. 13:11; எபி. 6:1) அப்படி வளருவதற்கு யெகோவாவோடு ஒரு நல்ல பந்தம் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவருடைய சக்தியும் நமக்குத் தேவை. அப்போதுதான், நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும், வாழ்க்கைக்கு உதவுகிற திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும், எதிர்காலத்தில் வருகிற பொறுப்புகளை எடுத்து செய்யவும் தயாராக முடியும்.—நீதி. 1:5

2. ஆதியாகமம் 1:27-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

2 யெகோவா மனிதர்களைப் படைக்கும்போது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார். (ஆதியாகமம் 1:27-ஐ வாசியுங்கள்) ஆண்களும் பெண்களும் பார்க்க வேறு வேறு மாதிரி இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேசமயத்தில், வேறு சில விதங்களிலும் அவர்கள் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆண்களும் பெண்களும் வெவ்வேறு பொறுப்புகளை செய்கிற மாதிரி யெகோவா அவர்களைப் படைத்திருக்கிறார். அதனால், அந்த பொறுப்புகளை நன்றாக செய்வதற்கு சில குணங்களும் திறமைகளும் அவர்களுக்குத் தேவை. (ஆதி. 2:18) ஒரு இளம் சகோதரி எப்படி முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவ பெண்ணாக ஆகலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அடுத்தக் கட்டுரையில் இளம் சகோதரர்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

ரெபெக்காள், எஸ்தர், அபிகாயில் மாதிரியான உண்மையுள்ள பெண்கள் காட்டிய குணங்களை நீங்களும் காட்டும்போது ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ பெண்ணாக நீங்கள் ஆகலாம் (பாராக்கள் 3-4)

3-4. இளம் சகோதரிகள் யாரிடமிருந்து எல்லாம் கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

3 யெகோவாவை நேசித்து, அவருக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பெண்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. (“பைபிளில் வரும் பெண்கள்—நாம் என்ன கற்றுக்கொள்லாம்?” என்ற ஆங்கில கட்டுரையை jw.org–ல் பாருங்கள்.) முக்கிய வசனம் சொல்வதுபோல், “பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும்” அவர்கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, உங்கள் சபையிலும் முதிர்ச்சியுள்ள சகோதரிகள் இருப்பார்கள். அவர்களிடமிருந்தும் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

4 இளம் சகோதரிகளே, உங்களுக்குத் தெரிந்த முதிர்ச்சியுள்ள சகோதரிகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்களிடம் இருக்கிற நல்ல நல்ல குணங்களைக் கவனியுங்கள். பிறகு, அந்தக் குணங்களை நீங்கள் எப்படிக் காட்டலாம் என்று யோசியுங்கள். சகோதரிகளுக்குத் தேவைப்படுகிற மூன்று முக்கியமான குணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

5. முதிர்ச்சியுள்ள சகோதரியாக ஆவதற்கு மனத்தாழ்மை ஏன் ரொம்ப முக்கியம்?

5 ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக இருப்பதற்கு மனத்தாழ்மை ரொம்ப முக்கியம். ஒரு சகோதரி மனத்தாழ்மையாக இருந்தால், அவருக்கு யெகோவாவோடும் மற்றவர்களோடும் நல்ல பந்தம் இருக்கும். (யாக். 4:6) உதாரணத்துக்கு, யெகோவாவை நேசிக்கிற ஒரு சகோதரி, அவர் ஏற்படுத்திய தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்—சபையிலும்! குடும்பத்திலும்! c1 கொ. 11:3.

6. மனத்தாழ்மையைப் பற்றி ரெபெக்காளிடமிருந்து இளம் சகோதரிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 ரெபெக்காளின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் புத்திசாலியான பெண். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தைரியமாக சில தீர்மானங்களை எடுத்தார். எப்போது எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்துவைத்திருந்தார். (ஆதி. 24:58; 27:5-17) அதேசமயத்தில், அவர் மரியாதையோடு நடந்துகொண்டார், தலைமை ஸ்தானம் ஏற்பாட்டுக்கு அடிபணிந்து நடந்தார். (ஆதி. 24:17, 18, 65) நீங்களும் ரெபெக்காளைப் போலவே மனத்தாழ்மையாக யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்தால், குடும்பத்திலும் சபையிலும் நல்ல முன்மாதிரியாக இருப்பீர்கள்.

7. இளம் சகோதரிகள் எப்படி எஸ்தரைப் போல் அடக்கமாக இருக்கலாம்?

7 எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தேவைப்படுகிற இன்னொரு குணம் அடக்கம். “அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 11:2) அந்த குணத்தைக் காட்டிய கடவுள்பக்தியுள்ள ஒரு பெண்தான் எஸ்தர். அவர் அடக்கமானவராக இருந்ததால், ராணியாக ஆன பிறகும் பெருமைப்பிடித்தவராக மாறிவிடவில்லை. தன்னுடைய சொந்தக்காரர் மொர்தெகாய் சொன்னதைக் கேட்டு அதன்படி செய்தார். (எஸ்தர் 2:10, 20, 22) நீங்களும் மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதன் மூலம் அடக்கம் என்ற குணத்தைக் காட்டலாம்.—தீத். 2:3-5.

8. 1 தீமோத்தேயு 2:9, 10-ல் இருக்கும் ஆலோசனையை சகோதரிகள் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

8 இன்னொரு விதத்திலும் எஸ்தர் அடக்கம் என்ற குணத்தைக் காட்டினார். அவர் “ரொம்ப அழகாகவும் லட்சணமாகவும்” இருந்தார். ஆனாலும், மற்றவர்களுடைய கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைக்கவில்லை. (எஸ்தர் 2:7, 15) நீங்கள் எப்படி எஸ்தரைப் போல் நடந்துகொள்ளலாம்? 1 தீமோத்தேயு 2:9, 10 சொல்கிறபடி செய்வதன் மூலம் நடந்துகொள்ளலாம். (வாசியுங்கள்.) கிறிஸ்தவ பெண்கள் அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும் உடை உடுத்த வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் அங்கே சொல்லியிருக்கிறார். அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைகள், கிறிஸ்தவ பெண்கள் மரியாதையான விதத்திலும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கும் விதத்திலும் உடை உடுத்த வேண்டும் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. சகோதரிகளே, அடக்கமாக உடை உடுத்தும் உங்களை நாங்கள் பாராட்டுகிறோம்!

9. அபிகாயிலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 முதிர்ச்சியுள்ள சகோதரிகள் காட்ட வேண்டிய இன்னொரு குணம் பகுத்தறிவு. பகுத்தறிவு என்றால் என்ன? சரி எது, தவறு எது என்பதைப் புரிந்துகொண்டு சரியானதை தேர்ந்தெடுக்கிற திறமைதான் அது! அபிகாயிலைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவருடைய கணவர் தவறான ஒரு முடிவை எடுத்ததால், அவருடைய வீட்டில் இருந்த எல்லாருடைய உயிரும் ஆபத்தில் இருந்தது. அப்போது அபிகாயில் உடனடியாக செயலில் இறங்கினார். அவர் பகுத்தறிவை காட்டியதால் எல்லாருடைய உயிரும் காப்பாற்றப்பட்டது. (1 சா. 25:14-23, 32-35) எப்போது பேச வேண்டும்... எப்போது பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்... என்பதைத் தெரிந்துகொள்ளவும் பகுத்தறிவு கைகொடுக்கும். அதோடு, மற்றவர்கள்மேல் அக்கறை காட்டும்போது அளவோடு இருப்பதற்கும் இந்தக் குணம் உதவும்.—1 தெ. 4:11.

திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

நன்றாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டது உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது? (பாரா 11)

10-11. வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்படி பிரயோஜனமாக இருக்கும்? (படத்தையும் பாருங்கள்.)

10 வாழ்க்கைக்கு தேவையான திறமைகளை பெண்கள் வளர்த்துக்கொள்வது முக்கியம்! சின்ன வயதில் கற்றுக்கொள்ளும் திறமைகள் வாழ்நாள் முழுவதும் கைகொடுக்கும். சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

11 நன்றாக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொள்ளுங்கள். சில கலாச்சாரங்களில், பெண்கள் இதையெல்லாம் கற்றுக்கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களாக இருக்கிற ஒவ்வொருவருமே இந்தத் திறமையை வளர்த்துக்கொள்வது முக்கியம். d (1 தீ. 4:13) அதனால், கஷ்டமாக இருந்தாலும் அதை கற்றுக்கொள்ளுங்கள். அப்படி செய்வது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்குமா? நிச்சயமாக! ஒரு வேலையைக் கண்டுபிடிக்க இது உங்களுக்கு உதவும். பைபிளை நன்றாகப் படிக்கவும் மற்றவர்களுக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கவும் இந்தத் திறமை தேவை. எல்லாவற்றையும்விட, நீங்கள் பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது யெகோவாவிடம் நெருங்கிப் போவீர்கள்.—யோசு. 1:8; 1 தீ. 4:15.

12. பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ள நீதிமொழிகள் 31:26 எப்படி உதவும்?

12 பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களுக்கு பேச்சுத் திறமை முக்கியம். இதைப் பற்றி யாக்கோபு இப்படி சொன்னார்: “ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.” (யாக். 1:19) மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கும்போது அவர்கள்மேல் “அனுதாபத்தை” காட்டுவோம். (1 பே. 3:8) ஒருவர் என்ன சொல்கிறார் அல்லது எப்படி உணர்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பொருத்தமான கேள்விகளைக் கேளுங்கள். பிறகு, என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை யோசிக்க சில நொடிகள் எடுத்துக்கொள்ளுங்கள். (நீதி. 15:28, அடிக்குறிப்பு) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் சொல்வது உண்மைதானா? அது அவரை உற்சாகப்படுத்துமா? அவர்மேல் மரியாதையும் அன்பும் இருக்கிறதை காட்டுமா?’ பேச்சுத் திறமையுள்ள முதிர்ச்சியான சகோதரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 31:26-ஐ வாசியுங்கள்.) அவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். நீங்கள் எந்தளவுக்கு இந்தத் திறமையை வளர்த்துக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு மற்றவர்களோடு உங்களுக்கு நல்ல பந்தம் இருக்கும்.

வீட்டு வேலைகளை நன்றாக செய்ய கற்றுக்கொண்ட ஒரு பெண், குடும்பத்துக்கும் சபைக்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறார் (பாரா 13)

13. வீட்டு வேலைகளைப் பொறுப்பாக செய்வதற்கு நீங்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

13 வீட்டு வேலைகளை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நிறைய இடங்களில் வீட்டு வேலைகளைப் பெண்கள்தான் செய்கிறார்கள். வீட்டு வேலைகளைப் பொறுப்பாக செய்வதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள உங்கள் அம்மாவிடமோ, வேறொரு சகோதரியிடமோ உதவி கேளுங்கள். சிண்டி என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “கஷ்டப்பட்டு வேலை செய்தால் சந்தோஷம் கிடைக்கும் என்ற முக்கியமான பாடத்தை அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தார். சமைப்பது, சுத்தம் பண்ணுவது, துணி தைப்பது, மளிகை சாமான்கள் வாங்குவது, இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டது என் வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. யெகோவாவின் சேவையில் நிறைய செய்யவும் உதவியாக இருந்தது. எப்படி உபசரிப்பது என்றும் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதனால், நிறைய சகோதர சகோதரிகளோடு பழக முடிந்தது, அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவும் முடிந்தது.” (நீதி. 31:15, 21, 22) வீட்டு வேலைகளைப் பொறுப்பாக செய்கிற... உபசரிக்கும் குணம் இருக்கிற... ஒரு பெண் குடும்பத்துக்கும் சபைக்கும் உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம்!—நீதி. 31:13, 17, 27; அப். 16:15

14. கிரிஸ்டலின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள், எது உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்?

14 உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். எல்லா கிறிஸ்தவர்களும் இதைக் கற்றுக்கொள்வது முக்கியம். அதோடு, இருப்பதை வைத்து திருப்தியாக வாழவும் பழக வேண்டும். (பிலி. 4:11; 2 தெ. 3:7, 8) கிரிஸ்டல் என்ற சகோதரி சொல்வதைப் பாருங்கள்: “பள்ளியில் நான் என்ன பாடத்தைத் தேர்ந்தெடுத்தால் என் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்று அப்பா அம்மா சொன்னார்கள். அக்கவுன்ட்ஸ் பாடத்தை எடுத்து படிக்க அப்பா சொன்னார். அது எனக்குப் பிரயோஜனமாக இருந்தது.” வேலை கிடைப்பதற்காக திறமைகளை வளர்த்துக்கொள்வது முக்கியம்தான். ஆனால், அதுமட்டுமே போதாது. எப்படி பட்ஜெட் போடுவது என்றும், அதற்கு ஏற்றபடி எப்படி வாழ்வது என்றும் நீங்கள் கற்றுக்கொள்வது நல்லது. (நீதி. 31:16, 18) யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்துக்கொள்ளுங்கள். அதனால், தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்; எளிமையாக வாழ்ந்தாலே போதும் என்று திருப்தியாக இருங்கள்.—1 தீ. 6:8.

எதிர்காலத்துக்காக தயாராகுங்கள்

15-16. கல்யாணமாகாத சகோதரிகள் மற்றவர்களுக்கு எப்படி ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்? (மாற்கு 10:29, 30)

15 யெகோவாவுக்குப் பிடித்த குணங்களையும் வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளையும் வளர்த்துக்கொள்வது எதிர்கால பொறுப்புகளை நல்லபடியாக செய்ய உதவும். எதிர்காலத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய சில முடிவுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

16 கொஞ்சக் காலத்துக்கு கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க முடிவெடுக்கலாம். சில கலாச்சாரங்களில் கல்யாணம் செய்யாமல் இருப்பதை யாரும் விரும்புவது கிடையாது. அப்படிப்பட்ட இடங்களில்கூட, இயேசுவின் வார்த்தைகளை மனதில் வைத்து சிலர் கல்யாணம் செய்யாமல் இருக்க நினைக்கிறார்கள் (மத். 19:10-12) வேறுசிலர், சூழ்நிலைமையின் காரணத்தால் கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்கள். காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அப்படிப்பட்டவர்களை யெகோவாவும் இயேசுவும் தாழ்வாகப் பார்ப்பதில்லை. உலகம் முழுவதும் இருக்கிற சபைகளில், கல்யாணமாகாத சகோதரிகள் நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் காட்டுகிற அன்பாலும் அக்கறையாலும் நிறைய பேருக்கு கூடப்பிறந்த சகோதரிகள் மாதிரியும் அம்மாக்கள் மாதிரியும் ஆகியிருக்கிறார்கள்.—மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்; 1 தீ. 5:2.

17. முழுநேர சேவை செய்ய இளம் சகோதரிகள் எப்படி தயாராகலாம்?

17 முழுநேர சேவை செய்ய முடிவெடுக்கலாம். உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலையில், சகோதரிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. (சங். 68:11) முழுநேர சேவையை ஆரம்பிப்பதைப் பற்றி நீங்கள் இப்போதே யோசித்துப்பாருங்கள். பயனியராகவோ, கட்டுமான ஊழியராகவோ, பெத்தேலிலோ நீங்கள் சேவை செய்யலாம். அதனால், ஒரு குறிக்கோள் வையுங்கள். அதைப் பற்றி ஜெபம் செய்யுங்கள். ஏற்கெனவே அந்தக் குறிக்கோளை அடைந்தவர்களிடம் பேசுங்கள். அதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, எதார்த்தமான ஒரு திட்டத்தைப் போடுங்கள். முழுநேர சேவையை நீங்கள் ஆரம்பித்துவிட்டால், யெகோவாவின் சேவையில் உங்களுக்கு இன்னும் நிறைய கதவுகள் திறக்கும்.

கல்யாணம் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் உங்களுடைய துணையை ரொம்ப கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் (பாரா 18)

18. ஒரு சகோதரி வாழ்க்கைத் துணையை ஏன் ரொம்ப கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

18 கல்யாணம் செய்ய முடிவெடுக்கலாம். இந்தக் கட்டுரையில் பார்த்த குணங்களும் திறமைகளும், ஒரு நல்ல மனைவியாக ஆவதற்கு உங்களுக்கு உதவும். ஆனால் நீங்கள் கல்யாணம் செய்ய நினைத்தால், உங்கள் துணையைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். ஏனென்றால், வாழ்க்கையில் நீங்கள் எடுக்கிற முக்கியமான முடிவு அது! கல்யாணத்துக்குப் பிறகு அவர்தான் உங்களுக்குத் தலையாக இருப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள்! (ரோ. 7:2; எபே. 5:23, 33) இந்தக் கேள்விகளை யோசித்துப்பாருங்கள்: ‘அவர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரா? வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கிறாரா? ஞானமான முடிவுகளை எடுக்கிறாரா? தவறு செய்தால் அதை ஒத்துக்கொள்கிறாரா? பெண்களை மதிக்கிறாரா? நான் யெகோவாவோடு நெருக்கமாக இருக்க அவரால் எனக்கு உதவ முடியுமா? என்னுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வாரா? என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்து நடப்பாரா? அவர் பொறுப்புகளை எடுத்து செய்கிறாரா? சபையில் அவருக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன, அதையெல்லாம் எப்படி செய்துகொண்டிருக்கிறார்?’ (லூக். 16:10; 1 தீ. 5:8) உங்களுக்கு ஒரு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு நல்ல மனைவியாக ஆவதற்கு இப்போதே தயாராக வேண்டும்.

19. மனைவியை ‘உதவியாளர்’ என்று பைபிள் சொல்வது ஏன் தரக்குறைவானது இல்லை?

19 ஒரு நல்ல மனைவியை கணவருக்கு ‘உதவியாளர்’ என்றும், “துணை” என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதி. 2:18) இப்படி சொல்வதால், பைபிள் மனைவிகளைத் தரக்குறைவாக பேசுகிறது என்று அர்த்தமா? கண்டிப்பாக இல்லை! சொல்லப்போனால், சங்கீதம் 54:4, எபிரெயர் 13:6 போன்ற வசனங்களில் யெகோவாவையும் பைபிள் “துணை” என்று சொல்கிறது. மூல மொழியில் இந்த வார்த்தைக்கான அர்த்தம் “உதவியாளர்.” அப்படிப் பார்த்தால், மனைவியை உதவியாளர் என்று பைபிள் சொல்வது உண்மையிலேயே அவர்களுக்கு ஒரு கவுரவம்! ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் அவருக்கு உதவியாளராக இருக்கிறார். உதாரணத்துக்கு, குடும்பத்துக்காக கணவர் முடிவுகள் எடுக்கும்போது அதை செயல்படுத்துவதற்காக கணவரோடு சேர்ந்து ஒத்துழைக்கிறார். யெகோவாவை நேசிப்பதால், தன்னுடைய கணவருக்கு இருக்கிற நல்ல பெயரைக் கெடுக்காத மாதிரி நடந்துகொள்கிறார். (நீதி. 31:11, 12; 1 தீ. 3:11) யெகோவாமேல் இருக்கும் அன்பைப் பலப்படுத்துவதன் மூலமும் வீட்டிலும் சபையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமும் ஒரு நல்ல மனைவியாக ஆவதற்கு இப்போதே நீங்கள் தயாராகலாம்.

20. குடும்பம் சந்தோஷமாக இருக்க ஒரு அம்மா என்னவெல்லாம் செய்யலாம்?

20 அம்மாவாக ஆகலாம். கல்யாணத்துக்குப் பிறகு உங்களுக்குக் குழந்தைகள் பிறக்கலாம். (சங். 127:3) அதனால், ஒரு நல்ல அம்மாவாக ஆவதற்கு என்ன தேவை என்பதைப் பற்றி முன்கூட்டியே யோசியுங்கள். ஒரு நல்ல மனைவியாக ஆவதற்கும் அம்மாவாக ஆவதற்கும் இந்தக் கட்டுரையில் படித்த குணங்களும் திறமைகளும் உதவும். நீங்கள் அன்பாக, கரிசனையாக, பொறுப்பாக நடந்துகொண்டால் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும், உங்கள் பிள்ளைகளும் பாதுகாப்பாக உணர்வார்கள். அவர்கள் ஒரு அன்பான சூழலில் வளருவார்கள்.—நீதி. 24:3.

பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதை கடைப்பிடித்ததால் நிறைய இளம் பெண்கள் முதிர்ச்சியுள்ள சகோதரிகளாக ஆகியிருக்கிறார்கள் (பாரா 21)

21. சகோதரிகளைப் பற்றி நினைக்கும்போது நமக்கு எப்படி இருக்கிறது, ஏன்? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

21 இளம் சகோதரிகளே, உங்களை நாங்கள் ரொம்ப நேசிக்கிறோம். நீங்கள் யெகோவாவுக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் நிறைய செய்கிறீர்கள். (எபி. 6:10) நல்ல குணங்களை வளர்க்கவும் வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளை வளர்க்கவும் நீங்கள் கடுமையாக முயற்சி செய்கிறீர்கள். அதனால், உங்களுடைய வாழ்க்கைக்கும் உங்களை சுற்றி இருக்கிறவர்களுடைய வாழ்க்கைக்கும் சந்தோஷம் சேர்க்கிறீர்கள். அதுமட்டுமல்ல, உங்களுக்கு வரப்போகிற பொறுப்புகளுக்காகவும் நீங்கள் நன்றாக தயாராகிறீர்கள். உண்மையிலேயே, நீங்கள் யெகோவாவுடைய அமைப்புக்குக் கிடைத்த பெரிய சொத்து!

பாட்டு 137 அன்றும் இன்றும் மின்னும் பெண்கள்!

a இளம் சகோதரிகளே, உங்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம்... வாழ்க்கைக்கு உதவுகிற திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம்... எதிர்கால பொறுப்புகளை எடுத்துச் செய்ய தயாராவதன் மூலம்... நீங்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ பெண்ணாக ஆகலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, யெகோவாவின் சேவையில் உங்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.

b வார்த்தைகளின் விளக்கம்: ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர், இந்த உலகம் சொல்வதுபோல் வாழாமல் கடவுளுடைய சக்தி வழிநடத்துவதுபோல் வாழ்வார். அவர் இயேசு மாதிரி நடந்துகொள்வார். அதோடு, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு கடினமாக உழைப்பார், மற்றவர்கள்மேல் உண்மையான அன்பு காட்டுவார்.

d வாசிக்கும் பழக்கம் ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ள, “வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு முக்கியம்—பகுதி 1: வாசிப்பதா பார்ப்பதா?” என்ற கட்டுரையை jw.org-ல் பாருங்கள்.