Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இந்த வருஷத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளைப் படித்தீர்களா? கீழே இருக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?

‘யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்வதில்’ என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது? (ரோ. 12:2)

மனதைப் புதுப்பிப்பதற்கு ஒருசில நல்ல விஷயங்களைச் செய்தால் மட்டுமே போதாது; உள்ளுக்குள்ளே நாம் எப்படி இருக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்து, தேவையான எல்லா மாற்றங்களையும் செய்ய வேண்டும்.—w23.01, பக். 8-9.

உலக சம்பவங்களைக் கவனிக்கும் விஷயத்தில் எப்படி சமநிலையோடு இருக்கலாம்?

இன்று நடக்கும் சம்பவங்கள் பைபிள் தீர்க்கதரிசனங்களை எப்படி நிறைவேற்றுகின்றன என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், அவற்றைப் பற்றி நாமாகவே எதையாவது ஊகிக்கக் கூடாது. அப்படிச் செய்வது, சபையில் பிரிவினையை ஏற்படுத்தும். பிரசுரங்களின் அடிப்படையில்தான் பேச வேண்டும். (1 கொ. 1:10)—w23.02, பக். 16.

இயேசுவின் ஞானஸ்நானத்துக்கும் சீஷர்களின் ஞானஸ்நானத்துக்கும் என்ன வித்தியாசம்?

கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசத்தில் இயேசு பிறந்ததால், நம்மைப் போல் அவர் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டிய அவசியமில்லை. அதோடு, அவர் பரிபூரண மனிதராக இருந்ததால், மனம் திருந்த வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.—w23.03, பக். 5.

கூட்டங்களில் பதில் சொல்ல மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்?

சுருக்கமாகப் பதில் சொன்னால், நிறையப் பேர் பதில் சொல்ல முடியும். நிறையக் குறிப்புகள் சொல்வதைத் தவிர்த்தால், மற்றவர்கள் சொல்வதற்கும் குறிப்புகள் இருக்கும்.—w23.04, பக். 23.

ஏசாயா 35:8-ல் இருக்கும் “பரிசுத்தமான வழி” எதைக் குறிக்கிறது?

அடையாள அர்த்தமுள்ள இந்த நெடுஞ்சாலை, முதலில், பாபிலோனில் இருந்து யூதர்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்த பாதையைத் குறித்தது. இன்று? 1919-க்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அந்த சாலையைத் தயார்படுத்தும் வேலை ஆரம்பித்துவிட்டது. பைபிள் மொழிபெயர்ப்பும் அச்சடிப்பு வேலைகளும் மற்ற வேலைகளும் நடந்தன. இதில் பயணம் செய்து பலர் ஆன்மீக பூஞ்சோலைக்குள் வருகிறார்கள்; எதிர்கால ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள இது அவர்களை வழிநடத்தும்.—w23.05, பக். 15-19.

நீதிமொழிகள் 9-ல் வரும் அடையாள அர்த்தமுள்ள இரண்டு பெண்களிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

‘புத்தியில்லாத பெண்ணின்’ அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் ‘கல்லறைக்கு’ போகிறார்கள். இன்னொரு பெண், ‘உண்மையான ஞானத்தை’ குறிக்கிறாள். அவளுடைய அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் “புத்தியின் பாதையில்” போய் என்றென்றும் வாழ்வார்கள். (நீதி. 9:1, 6, 13, 18) —w23.06, பக். 22-24.

லோத்துவிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து யெகோவா மனத்தாழ்மையுள்ளவர், வளைந்துகொடுப்பவர் என்று எப்படித் தெரிகிறது?

யெகோவா லோத்துவை மலைகளுக்குத் தப்பி ஓடச் சொன்னார். ஆனால், சோவாருக்கு போகலாமா என்று லோத்து கெஞ்சிக் கேட்டபோது, யெகோவா அனுமதித்தார்.—w23.07, பக். 21.

கணவர் ஆபாசத்தைப் பார்த்தால் மனைவி என்ன செய்யலாம்?

மனைவி தன்மீது பழி போட்டுக்கொள்ளக் கூடாது. யெகோவாவோடு தனக்கு இருக்கும் பந்தத்தின் மேல் கவனத்தை வைக்க வேண்டும். வேதனையில் தவித்த பெண்களுக்கு எப்படி ஆறுதல் கிடைத்தது என்று ஆராயலாம். தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்க கணவருக்கு உதவலாம்.—w23.08, பக். 14-17.

நம்பிக்கைகளைப் பற்றி ஒருவர் கேள்விக் கேட்டால் சாந்தமாக பதில் சொல்ல விவேகம் எப்படி உதவும்?

கேட்பவர் ஏன் அப்படி நினைக்கிறார் என்று யோசித்தால் சாந்தமாக பதில் சொல்ல முடியும்.—w23.09, பக். 17.

பலம் பெறுவதைப் பற்றி மரியாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

மேசியாவுக்கு அம்மாவாக ஆகப்போவது தெரிந்ததும், மரியாள் மற்றவர்களிடமிருந்து பலத்தைப் பெற்றுக்கொண்டார். காபிரியேலும் எலிசபெத்தும் அவரைப் பலப்படுத்தினார்கள். நமக்கும் சகோதர சகோதரிகளிடமிருந்து பலம் கிடைக்கும்.—w23.10, பக். 15.

ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுக்கலாம்?

ஜெபங்களைக் கவனித்துக் கேட்பதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். நாம் கேட்கிற விஷயங்கள் தன் விருப்பத்தோடு எப்படி ஒத்துப்போகிறது என்று பார்க்கிறார். (எரே. 29:12) ஒரேமாதிரியான ஜெபங்களுக்கு அவர் வித்தியாசமானப் பதில்களைத் தரலாம். ஆனாலும், எப்போதுமே அவர் நமக்குத் துணையாக இருப்பார். —w23.11, பக். 21-22.

ரோமர் 5:2-ல் ‘நம்பிக்கையை’ பற்றி சொல்லப்பட்டிருக்கும்போது, 4-வது வசனம் ஏன் அதைப் பற்றி மறுபடியும் சொல்கிறது?

நல்ல செய்தியைக் கேள்விப்படும்போது, பூஞ்சோலையில் வாழும் நம்பிக்கை ஒருவருக்குக் கிடைக்கிறது. ஆனால் உபத்திரவங்களை சகிக்கும்போது, கடவுளுடைய அங்கீகாரத்தை அவர் உணருவார். அப்போது, அந்த நம்பிக்கை இன்னும் பலமாகிறது. அந்த நம்பிக்கை எப்போதும் அவர் கண் முன் இருக்கும்.—w23.12, பக். 12-13.