படிப்புக் கட்டுரை 51
நம் நம்பிக்கை நிஜமாகும்!
“நம்பிக்கை ஏமாற்றம் தராது.”—ரோ. 5:5.
பாட்டு 142 நம்பிக்கை ஒரு நங்கூரம்
இந்தக் கட்டுரையில்... a
1. ஆபிரகாமின் நம்பிக்கை எதன் அடிப்படையில் இருந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஆபிரகாமின் சந்ததி மூலமாக எல்லாத் தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று யெகோவா அவருக்கு வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதி. 15:5; 22:18) ஆபிரகாமுக்கு யெகோவாமேல் பலமான விசுவாசம் இருந்ததால், அவர் கொடுத்த வாக்குறுதி கண்டிப்பாக நடக்கும் என்று நம்பினார். ஆபிரகாமுக்கு 100 வயதானது, அவருடைய மனைவிக்கு 90 வயதானது; ஆனால், அவர்களுக்கு இன்னமும் ஒரு மகன் பிறக்கவில்லை. (ஆதி. 21:1-7) இருந்தாலும் கடவுள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், நிறையத் தேசங்களுக்கு தான் தகப்பனாக ஆவார் என்பதில் ஆபிரகாம் “விசுவாசம் வைத்தார்.” (ரோ. 4:18) அவருடைய நம்பிக்கை நிஜமானது! ரொம்ப நாள் காத்திருந்த மகன், ஈசாக்கு பிறந்தான். கடவுள் தான் சொன்னதைக் கண்டிப்பாக செய்வார் என்பதில் ஆபிரகாம் எப்படி அந்தளவுக்கு உறுதியாக இருந்தார்?
2. யெகோவாவுடைய வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்று ஆபிரகாம் ஏன் உறுதியோடு நம்பினார்?
2 ஆபிரகாமுக்கு யெகோவாவைப் பற்றி ரொம்ப நன்றாகத் தெரிந்திருந்ததால், “கடவுளால் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்பதை முழுமையாக நம்பினார்.” (ரோ. 4:21) யெகோவாவும் ஆபிரகாமை ஏற்றுக்கொண்டார், அவர் காட்டிய விசுவாசத்தால் அவரை நீதிமானாக பார்த்தார். (யாக். 2:23) ரோமர் 4:18-ல் சொல்லியிருப்பதுபோல், ஆபிரகாமுக்கு விசுவாசமும் இருந்தது, நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கையைப் பற்றி ரோமர் 5-வது அதிகாரத்தில் அப்போஸ்தலன் பவுல் என்ன சொல்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.
3. நம்பிக்கையைப் பற்றி பவுல் என்ன சொல்கிறார்?
3 ”நம்பிக்கை ஏமாற்றம் தராது” என்று பவுல் சொல்கிறார். (ரோ. 5:5) அதோடு, அந்த நம்பிக்கை எப்படி வளரும் என்றும் அவர் சொல்கிறார். ரோமர் 5:1-5-ல் இருக்கும் விஷயங்களைப் படிக்கும்போது உங்களுடைய அனுபவத்தைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அப்படி செய்யும்போது, உங்களுடைய நம்பிக்கை எப்படிப் படிப்படியாக வளர்ந்திருக்கிறது என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களுடைய நம்பிக்கையை இன்னும் எப்படிப் பலப்படுத்தலாம் என்றும் பார்ப்போம். முதலில், பவுல் சொன்ன அந்த மகத்தான நம்பிக்கையைப் பற்றிப் பார்க்கலாம்.
நம்முடைய மகத்தான நம்பிக்கை
4. ரோமர் 5:1, 2-ல் எதைப் பற்றி சொல்லியிருக்கிறது?
4 ரோமர் 5:1, 2-ஐ வாசியுங்கள். ரோமிலிருந்த சகோதர சகோதரிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதினார். அங்கிருந்த சகோதர சகோதரிகள் யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் கற்றுக்கொண்டார்கள், விசுவாசத்தைக் காட்டினார்கள், கிறிஸ்தவர்களாக ஆனார்கள். அவர்கள் காட்டிய “விசுவாசத்தால்,” கடவுள் அவர்களை ‘நீதிமான்களாக ஏற்றுக்கொண்டார்.’ அவருடைய சக்தியைக் கொடுத்து அவர்களை அபிஷேகம் செய்தார். இப்படி, அவர்களுக்கு ஒரு அற்புதமான நம்பிக்கையைக் கொடுத்தார், அந்த நம்பிக்கை கண்டிப்பாக நடக்கும் என்ற உறுதியையும் கொடுத்தார்.
5. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
5 எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியபோது கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்த நம்பிக்கையைப் பற்றி சொன்னார். அதாவது, ‘பரிசுத்தவான்களுக்கான ஆஸ்தி’ அவர்களுக்குக் கிடைக்கும் என்று சொன்னார். (எபே. 1:18) கொலோசெயர்களுக்கு எழுதும்போது, அந்த நம்பிக்கை எங்கே நிறைவேறும் என்று பவுல் விளக்கினார். “உங்களுடைய பரலோக நம்பிக்கை” என்று அவர் சொன்னார். (கொலோ. 1:4, 5) அப்படியென்றால், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை இதுதான்: இறந்த பிறகு பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டு அங்கே என்றென்றும் வாழ்வார்கள்; கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள்.—1 தெ. 4:13-17; வெளி. 20:6.
6. பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சகோதரர் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றி என்ன சொன்னார்?
6 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தங்களுக்கு இருக்கிற நம்பிக்கையை உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களில் ஒருவரான சகோதரர் ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ், இப்படிச் சொன்னார்: “எங்களுக்கு இருக்கிற நம்பிக்கை கண்டிப்பாக நிஜமாகும். சிறுமந்தையில் இருக்கிற 1,44,000 பேரில் கடைசி நபர் வரை அது நிறைவேறும். நாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அது முழுமையாக நிறைவேறும்.” பல வருஷங்கள் கடவுளுக்கு உண்மையாக சேவை செய்த பிறகு 1991-ல் அவர் இப்படிச் சொன்னார்: “அந்த நம்பிக்கையின்மேல் எங்களுக்கு இருக்கிற மதிப்பு குறையவே இல்லை. . . . அதற்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், அதை இன்னும் அதிகமாக நாங்கள் மதிக்கிறோம். லட்சக்கணக்கான வருஷங்கள் ஆனாலும் அதற்காக காத்திருப்பது வீண்போகாது. எங்களுக்குக் கிடைத்திருக்கும் நம்பிக்கையை எப்போதும்விட இப்போது நான் உயர்வாக மதிக்கிறேன்.”
7-8. நிறையப் பேருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (ரோமர் 8:20, 21)
7 இன்று யெகோவாவை வணங்கும் நிறைய பேருக்கு வேறொரு நம்பிக்கை இருக்கிறது. ஆபிரகாமுக்கும் இதே நம்பிக்கைத்தான் இருந்தது. அதாவது, கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை! (எபி. 11:8-10, 13) இந்த மகத்தான நம்பிக்கையைப் பற்றியும் பவுல் எழுதினார். (ரோமர் 8:20, 21-ஐ வாசியுங்கள்.) இந்த நம்பிக்கையைப் பற்றி முதல்முதலில் தெரிந்துகொண்டபோது, எது உங்களுடைய மனதைத் தொட்டது? பாவமே இல்லாமல் எல்லாரும் பரிபூரணமாக வாழப்போகும் காலத்தை நினைத்து சந்தோஷப்பட்டீர்களா? அல்லது, நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறந்துபோயிருந்தால், அவரை மறுபடியும் இந்தப் பூமியில் பார்க்க முடியும் என்பதை நினைத்து சந்தோஷப்பட்டீர்களா? கடவுள் கொடுத்திருக்கும் இந்த ‘நம்பிக்கையின்’ அடிப்படையில், எதிர்காலத்தில் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும் என்று காத்திருக்கிறோம்.
8 பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, நமக்குக் கிடைத்திருக்கிற மகத்தான நம்பிக்கையை நினைத்து சந்தோஷப்படலாம். அதுமட்டுமல்ல நாட்கள் போகப்போக இந்த நம்பிக்கை இன்னும் பலமாகும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் பவுல் அடுத்து விளக்குகிறார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவருடைய வார்த்தைகளை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது நம்முடைய நம்பிக்கை வளர்ந்துகொண்டே போகும்... அது கண்டிப்பாக நிறைவேறும்... என்று உறுதியாக நம்புவோம்.
நம்பிக்கை வளரும்—எப்படி?
9-10. பவுலின் வாழ்க்கை காட்டுவதுபோல், கிறிஸ்தவர்கள் எதை சந்திக்க வேண்டியிருக்கலாம்? (ரோமர் 5:3) (படங்களையும் பாருங்கள்.)
9 ரோமர் 5:3-ஐ வாசியுங்கள். உபத்திரவங்களை சந்திக்கும்போது நம்முடைய நம்பிக்கை இன்னும் பலமாக வாய்ப்பிருக்கிறது என்று பவுல் இங்கே சொல்கிறார். இதைக் கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சொல்லப்போனால், கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கிற எல்லாருக்கும் உபத்திரவங்கள் கண்டிப்பாக வரும். பவுலும் உபத்திரவங்களை சந்தித்தார். தெசலோனிக்கேயர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்: “நமக்குக் கண்டிப்பாக உபத்திரவம் வரும் என்று உங்களோடு இருந்தபோதே நாங்கள் பல தடவை சொன்னோம்; அதன்படியே உபத்திரவம் வந்துவிட்டது.” (1 தெ. 3:4) கொரிந்தியர்களுக்கு இப்படி எழுதினார்: “எங்களுக்கு வந்த சோதனையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம் . . . பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது.”—2 கொ. 1:8; 11:23-27.
10 இன்று நமக்கும், ஏதோவொரு விதத்தில் உபத்திரவம் வரும் என்று எதிர்பார்க்கலாம். (2 தீ. 3:12) இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய சீஷராக ஆனதால் உங்களுக்கு உபத்திரவங்கள் வந்திருக்கிறதா? ஒருவேளை நண்பர்களோ சொந்தக்காரர்களோ உங்களைக் கேலி செய்திருக்கலாம்; மோசமாகக்கூட நடத்தியிருக்கலாம். அல்லது, நேர்மையாக நடந்துகொண்டதால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குப் பிரச்சினை வந்திருக்கலாம். (எபி. 13:18) அல்லது, ஊழியம் செய்வதால் அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு வந்திருக்கலாம். இப்படி, எந்த மாதிரி உபத்திரவங்கள் வந்தாலும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பவுல் சொன்னார். ஏன் அப்படி சொன்னார்?
11. எந்த மாதிரி கஷ்டங்கள் வந்தாலும் அதை சகித்திருப்பதற்கு நாம் ஏன் உறுதியோடு இருக்க வேண்டும்?
11 உபத்திரவம் நமக்குள் ஒரு முக்கியமான குணத்தை வளர்க்கிறது. ரோமர் 5:3 சொல்வதுபோல் “உபத்திரவம் சகிப்புத்தன்மையை” உண்டாக்குகிறது. கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே கண்டிப்பாக உபத்திரவங்கள் வரும். அதனால், எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அதையெல்லாம் சகித்திருக்க வேண்டும். அப்போதுதான், நம் நம்பிக்கை நிறைவேறுவதை நம்மால் பார்க்க முடியும். பாறை நிலத்தில் விழுந்த விதைகளைப் பற்றி இயேசு ஒரு உதாரணத்தில் சொன்னார். அந்த நிலத்தைப் போல் இருப்பவர்கள் ஆரம்பத்தில் கடவுளுடைய வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், “உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன்” அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். (மத். 13:5, 6, 20, 21) உண்மைதான், எதிர்ப்பையோ கஷ்டங்களையோ சந்திப்பது சுலபம் இல்லை. ஆனால் அதையெல்லாம் சகித்திருக்கும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். எப்படி?
12. கஷ்டங்களை சகித்திருந்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?
12 கஷ்டங்களை சகித்திருப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி யாக்கோபும் எழுதினார். “உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையானவர்களாகவும், எந்தக் குறையுமில்லாமல் எல்லா விதத்திலும் நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள்” என்று அவர் எழுதினார். (யாக். 1:2-4) சகிப்புத்தன்மை ஒரு வேலையை செய்வதாக யாக்கோபு எழுதினார். அது என்ன? பொறுமை, விசுவாசம், கடவுளை நம்பியிருப்பது போன்ற குணங்களை இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்வதற்கு அது உதவுகிறது. சகித்திருப்பதால் இன்னொரு முக்கியமான நன்மையும் இருக்கிறது.
13-14. சகித்திருப்பதால் என்ன கிடைக்கும்? அது எப்படி நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும்? (ரோமர் 5:4)
13 ரோமர் 5:4-ஐ வாசியுங்கள். உபத்திரவங்களை சகித்திருந்தால் “கடவுளுடைய அங்கீகாரம்” கிடைக்கும் என்று பவுல் எழுதினார். அப்படியென்றால், சகித்திருக்கும்போது கடவுள் உங்களை ஏற்றுக்கொள்வார். அதற்காக உபத்திரவங்களால் நாம் வேதனைப்படும்போது அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார் என்று அர்த்தமில்லை. அந்த உபத்திரவங்களில் நாம் சகித்திருப்பதைப் பார்த்துதான் சந்தோஷப்படுகிறார்; சகித்திருப்பதால் நம்மை ஏற்றுக்கொள்கிறார். கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவது எவ்வளவு பெரிய பாக்கியம்! —சங். 5:12.
14 ஆபிரகாம் சோதனைகளை எப்படி உண்மையோடு சகித்திருந்தார் என்பதை யோசித்துப்பாருங்கள். அப்படி சகித்திருந்ததால் கடவுளுடைய அங்கீகாரத்தை சம்பாதித்தார். யெகோவா அவரை நண்பராக பார்த்தார், நீதிமானாகக் கருதினார். (ஆதி. 15:6; ரோ. 4:13, 22) நம்முடைய விஷயத்திலும் அதுதான் உண்மை. கடவுளுடைய சேவையில் நாம் எவ்வளவு செய்கிறோம், நமக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்து கடவுள் நம்மை அங்கீகரிப்பதில்லை. உபத்திரவங்களை நாம் உண்மையோடு சகித்திருப்பதால்தான் அவர் நம்மை அங்கீகரிக்கிறார். நம்முடைய வயது... சூழ்நிலைமை... திறமை... இதெல்லாம் எப்படியிருந்தாலும் சரி, நம் எல்லாராலும் சகித்திருக்க முடியும். நீங்கள் ஏதோவொரு சோதனையைச் சகித்துக்கொண்டு யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வருகிறீர்களா? அப்படியென்றால், கடவுளுடைய அங்கீகாரம் உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தாராளமாக நம்பலாம். இதைத் தெரிந்துகொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்களுடைய நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறும் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.
பலமான நம்பிக்கை
15. ரோமர் 5:4, 5-ல் பவுல் என்ன சொல்கிறார், இதைப் படிக்கும்போது என்ன கேள்வி நம் மனதுக்கு வரலாம்?
15 சோதனைகளை சகித்துக்கொண்டால் நமக்கு யெகோவாவின் அங்கிகாரம் கிடைக்கும் என்று பவுல் விளக்கினார். அதைத் தொடர்ந்து அவர் இப்படிச் சொல்கிறார்: “கடவுளுடைய அங்கீகாரம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்பது நமக்குத் தெரியும். அந்த நம்பிக்கை ஏமாற்றம் தராது.” (ரோ. 5: 4, 5) ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஏற்கெனவே ஒரு நம்பிக்கை இருந்தது. அதைப் பற்றி ரோமர் 5:2-ல் அவர் சொன்னார். அதாவது, ‘கடவுள் நம்மை மகிமைப்படுத்துவார் என்ற நம்பிக்கை’ அவர்களுக்கு இருந்ததாக சொன்னார். அப்படியிருக்கும்போது, பவுல் ஏன் மறுபடியும் ‘நம்பிக்கை உண்டாகும்’ என்று 4, 5 வசனங்களில் சொல்கிறார் என்ற கேள்வி நமக்கு வரலாம்.
16. நம்பிக்கை எப்படி வளரும்? (படங்களையும் பாருங்கள்.)
16 நம்பிக்கை என்பது வளர்ந்துகொண்டே இருக்கும் ஒரு விஷயம் என்பதை மனதில் வைத்துக்கொண்டால், பவுல் சொல்ல வருவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதை யோசித்துப்பாருங்கள்: முதல்முதலில் எதிர்கால நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாழ்க்கை ஒரு கனவு போல் இருந்திருக்கலாம்; அதெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால், யெகோவாவைப் பற்றியும் பைபிளில் அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, அந்த நம்பிக்கை நிஜமாகும் என்பதை இன்னும் உறுதியாக நம்ப ஆரம்பித்திருப்பீர்கள்.
17. ஞானஸ்நானத்துக்குப் பிறகும் நம்பிக்கை எப்படி வளர்ந்துகொண்டே இருக்கும்?
17 ஞானஸ்நானத்துக்குப் பிறகு, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் பலமாக பலமாக, உங்கள் நம்பிக்கையும் வளர்ந்துகொண்டே இருக்கும். (எபி. 5:13–6:1) ரோமர் 5:2-4-ல் சொல்லப்பட்டிருப்பதை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்கு நிறைய உபத்திரவங்கள் வந்திருக்கும், அதையெல்லாம் சகித்திருப்பீர்கள். அதனால், கடவுளுடைய அங்கீகாரம் உங்களுக்கு இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அவருடைய ஆதரவு உங்களுக்கு இருக்கிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்கும். அந்த நம்பிக்கை வந்ததால், அவர் வாக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் இன்னும் உறுதியாக இருப்பீர்கள். ஆரம்பத்தில் இருந்ததைவிட அந்த நம்பிக்கை இப்போது இன்னும் பலமாகி இருக்கும். அந்த நம்பிக்கை எப்போதும் உங்கள் கண்முன் இருக்கும், உங்கள் நெஞ்சோடு கலந்திருக்கும். அதை சுற்றியே உங்கள் வாழ்க்கையும் இருக்கும். நீங்கள் வாழும் விதம்... குடும்பத்தை நடத்தும் விதம்... முடிவுகளை எடுக்கும் விதம்... நேரத்தைப் பயன்படுத்தும் விதம்... இவையெல்லாமே அந்த நம்பிக்கையை கண் முன் வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும்.
18. யெகோவா என்ன உத்தரவாதம் கொடுக்கிறார்?
18 அடுத்ததாக, அந்த நம்பிக்கையைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தை பவுல் சொல்கிறார். அந்த நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறும் என்று சொல்கிறார். அதை எப்படி நாம் உறுதியாக நம்பலாம்? கடவுள் கொடுத்த உத்தரவாதத்தைப் பற்றியும் பவுல் அதில் சொல்கிறார். “அந்த நம்பிக்கை ஏமாற்றம் தராது. ஏனென்றால், கடவுள் தன்னுடைய சக்தியை நமக்குத் தந்து தன்னுடைய அன்பை நம் இதயங்களில் பொழிந்திருக்கிறார்” என்று சொல்கிறார். (ரோ. 5:5) அதனால் அந்த நம்பிக்கை, உங்கள் நம்பிக்கை, கண்டிப்பாக நிறைவேறும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.
19. எதை நீங்கள் உறுதியாக நம்பலாம்?
19 யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றியும் அவரை ஏற்றுக்கொண்டு தன்னுடைய நண்பராக ஆக்கிக்கொண்டதைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள். ஆபிரகாமுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. அதைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்த பின்பு கடவுள் வாக்குறுதி கொடுத்ததைப் பெற்றுக்கொண்டார்.” (எபி. 6:15; 11:9, 18; ரோ. 4:20-22) அவர் ஏமாந்து போகவில்லை. நீங்களும் ஏமாந்துபோக மாட்டீர்கள். நீங்கள் கடவுளுக்கு உண்மையாக இருந்தால், உங்களுடைய நம்பிக்கையும் வீண்போகாது. உங்களுடைய நம்பிக்கை வெறும் கானல் நீர் கிடையாது, அது நிஜம். அதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம்! (ரோ. 12:12) பவுல் இப்படி எழுதினார்: “நீங்கள் கடவுள்மேல் விசுவாசம் வைத்திருப்பதால், நம்பிக்கை தருகிற கடவுள் உங்களை எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பட்டும். அப்போது, கடவுளுடைய சக்தியின் வல்லமையால் உங்களுடைய நம்பிக்கை அதிகமதிகமாகப் பலப்படும்.”—ரோ. 15:13.
பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை
a நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? அது கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் எப்படி உறுதியாக இருக்கலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிட, இப்போது உங்கள் நம்பிக்கை இன்னும் பலமாகியிருக்கும். எப்படி என்று புரிந்துகொள்ள ரோமர் 5-வது அதிகாரத்தை அலசிப்பார்க்கலாம்.