Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மதுபானம்-கடவுளின் பார்வையில்!

மதுபானம்-கடவுளின் பார்வையில்!

யெகோவா நமக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பரிசுகளைப் பயன்படுத்துவதற்கு, சொந்தமாக தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார். இவற்றை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம். யெகோவா கொடுத்திருக்கும் பரிசுகளில் திராட்சமதுவும் ஒன்று! “உணவு சிரித்து மகிழ்வதற்கு உதவும், திராட்சமது சந்தோஷமாக வாழ்வதற்கு உதவும்” என்கிறது பைபிள். (பிர. 10:19; சங். 104:15) ஆனால், மதுபானத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் சிலருக்குப் பிரச்சினைகள் வந்திருக்கின்றன. மதுபானத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி, வித்தியாசமான கலாச்சாரங்களில் வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. அப்படியென்றால், இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு ஞானமான முடிவை எடுக்கலாம்?

நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, எப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் சரி, கடவுள் தந்திருக்கும் ஆலோசனைகளின்படி முடிவுகளை எடுத்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

இன்று, மதுபானம் குடிப்பது சாதாரணமாக ஆகிவிட்டது; மொடா குடிகாரர்களும் இருக்கிறார்கள். மதுபானம் எடுப்பது மனதுக்கு அமைதியைத் தருகிறது என்று சிலர் சொல்கிறார்கள். ‘பிரச்சினைகளை மறப்பதற்காக குடிக்கிறோம்’ என்கிறார்கள் இன்னும் சிலர். வேறுசில இடங்களில், தன்னை ஒரு பெரிய ஆளாக, அல்லது ஒரு ‘ஆம்பளையாக’ காட்டிக்கொள்வதற்காக குடிக்கிறார்கள்.

நம்மைப் படைத்தவர் இது சம்பந்தமாக நிறைய ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். அதிகமாக குடித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை வரும் என்றும் எச்சரிக்கிறார். இந்த எச்சரிப்பை நீதிமொழிகள் 23:29-35-ல் பார்க்கிறோம். போதையில் இருப்பவர் என்னவெல்லாம் செய்வார் என்றும் அவருக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் என்றும் அந்தப் பதிவு தத்ரூபமாக விவரிக்கிறது. a ஐரோப்பாவில் வாழ்கிற டானியெல் என்ற மூப்பர், ஒரு கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று சொல்கிறார்: “அளவுக்கு அதிகமாக குடிக்கிற பழக்கம் எனக்கு இருந்ததால் தவறான முடிவுகளை எடுத்தேன். அதனால் வந்த கசப்பான அனுபவங்கள், மறையாத தழும்புகளை விட்டுவிட்டு போயிருக்கின்றன.”

இந்த விஷயத்தில், கிறிஸ்தவர்கள் தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம்? அதிகமாக குடிப்பதால் வரும் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம்? கடவுள் கொடுத்திருக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதன் மூலம்தான்!

மதுபானத்தைப் பற்றிய பைபிளின் கருத்து என்ன? சிலர் ஏன் அதைக் குடிக்கிறார்கள்? இப்போது இதை அலசிப்பார்க்கலாம்.

பைபிள் தரும் ஆலோசனை

அளவோடு குடிப்பதை பைபிள் வேண்டாம் என்று சொல்வதில்லை. திராட்சமது குடிப்பது சந்தோஷத்தைத் தரும் என்று அது ஒத்துக்கொள்கிறது. “நீ போய் சந்தோஷமாகச் சாப்பிட்டு, ஆனந்தமாகத் திராட்சமது குடி” என்று அது சொல்கிறது. (பிர. 9:7) இயேசுவும்கூட சில சமயங்களில் திராட்சமது குடித்தார். யெகோவாவின் மற்ற ஊழியர்களும் சிலசமயம் மதுபானம் எடுத்திருக்கிறார்கள்.—மத். 26:27-29; லூக். 7:34; 1 தீ. 5:23.

அளவோடு மதுபானம் எடுப்பதற்கும் குடிவெறிக்கும் இருக்கும் வித்தியாசத்தை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. ‘குடிவெறியை விட்டுவிடு’ என்று அது சொல்கிறது. (எபே. 5:18) அதோடு, “குடிகாரர்கள் . . . கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும் சொல்கிறது. (1 கொ. 6:10) போதை தலைக்கேறும் அளவுக்குக் குடிப்பதையும் குடிவெறியையும் யெகோவா வெறுக்கிறார் என்று இந்த வசனங்கள் காட்டுகின்றன, இல்லையா? நம்முடைய கலாச்சாரத்தில் என்ன பழக்கம் இருந்தாலும் சரி, மதுபானம் குடிப்பது சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கும் ஆலோசனையைக் கடைப்பிடிப்பது நல்லது.

‘எவ்வளவு குடித்தாலும் நான் நிதானமாக இருப்பேன்’ என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த நினைப்பு ஆபத்தானது! ‘திராட்சமதுவுக்கு அடிமையாகிற’ ஆணோ பெண்ணோ, ஒழுக்கம் தவறிவிட வாய்ப்பிருக்கிறது; யெகோவாவோடு இருக்கிற பந்தத்தையும் இழக்க வாய்ப்பிருக்கிறது. (தீத். 2:3; நீதி. 20:1) கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போக முடியாதபடி “குடிவெறி” ஒரு தடையாகலாம் என்று இயேசுவும் சொன்னார். (லூக். 21:34-36) அப்படியென்றால், அதிகமாக குடித்துப் படுகுழியில் விழுந்துவிடாமல் இருக்க கிறிஸ்தவர்கள் எப்படி தங்களையே பாதுகாத்துக்கொள்ளலாம்?

ஏன்? எப்போது? எவ்வளவு? யோசியுங்கள்...

உங்களுடைய ஊரில் இருக்கிறவர்கள் பொதுவாக எவ்வளவு குடிக்கிறார்கள்... எப்போதெல்லாம் குடிக்கிறார்கள்... என்பதை பார்த்து அதேபோல் செய்ய நினைப்பது ஆபத்தானது. அதனால்தான், குடிப்பது சாப்பிடுவது சம்பந்தப்பட்ட விஷயங்களில் கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்கிறார்கள். “நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” என்று பைபிளும் சொல்கிறது. (1 கொ. 10:31) நாம் யோசித்துப்பார்க்க வேண்டிய சில கேள்விகளையும் பைபிள் நியமங்களையும் இப்போது பார்க்கலாம்:

மற்றவர்கள் முன்பு வித்தியாசமாக தெரியக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக நான் குடிக்கிறேனா? யாத்திராகமம் 23:2 இப்படிச் சொல்கிறது: “நிறைய பேர் தப்பு செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு தப்பு செய்யக் கூடாது.” யெகோவா இந்த எச்சரிப்பை இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார். தன்னை வணங்காத மக்களை மாதிரியே இஸ்ரவேலர்கள் நடந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அப்படி சொன்னார். இந்த ஆலோசனை இன்று வாழும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். மதுபானம் குடிக்கும் விஷயத்தில் மற்றவர்கள் யோசிக்கிற மாதிரியே நாமும் யோசிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவுடைய சட்டங்களை மீற ஆரம்பித்துவிடுவோம். கடைசியில், அவருக்கும் நமக்கும் இருக்கிற பந்தம்கூட உடைந்துவிடும்.—ரோ. 12:2.

‘நான் ஒரு பெரிய ஆள்’ என்று காட்டிக்கொள்வதற்காக குடிக்கிறேனா? சில கலாச்சாரங்களில் அதிகமாக குடிப்பதையும் அடிக்கடி குடிப்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். (1 பே. 4:3) ஆனால், 1 கொரிந்தியர் 16:13-ல் என்ன ஞானமான ஆலோசனை இருக்கிறது என்று பாருங்கள்: “விழிப்புடன் இருங்கள், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருங்கள், ஆண்மகனாக செயல்படுங்கள், பலமடையுங்கள்.” மதுபானம் ஒரு நபரை உண்மையிலேயே பலமுள்ள ஒரு ஆண்மகனாக ஆக்குமா? இல்லை! மதுபானத்தை அதிகமாக எடுக்கும் ஒரு நபரால் தெளிவாக யோசிக்கவோ செயல்படவோ முடியாது. போதையில் இருக்கும் ஒரு நபர் தள்ளாடுவார் என்றும் தடுமாறுவார் என்றும் ஏசாயா 28:7 சொல்கிறது. இதெல்லாம் வைத்து பார்க்கும்போது, அதிகமாக குடிப்பதால் மக்கள் உங்களை ஒரு பெரிய ஆளாக பார்க்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, பலவீனமான முட்டாள்தனமான ஒருவராகத்தான் பார்ப்பார்கள்.

யெகோவாதான் உண்மையிலேயே நமக்கு பலம் தருகிறார். அவர் தரும் பலத்தை பெற்றுக்கொள்ள நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். (சங். 18:32) இதை எப்படி செய்வது? ஜாக்கிரதையாக இருப்பதன் மூலமும், யெகோவாவோடு இருக்கும் பந்தம் முறிந்துவிடும்படி எந்த ஒரு முடிவையும் எடுத்துவிடாமல் இருப்பதன் மூலமும் அப்படி செய்யலாம். இயேசு பூமியில் இருந்தபோது பலமுள்ளவராக இருந்தார். தனக்கும் யெகோவாவுக்கு இடையில் இருந்த பந்தத்தை பலமாக வைத்திருந்தார். அதனால் அவர் தைரியமானவராகவும் சரியானதை செய்வதில் உறுதியானவராகவும் இருந்தார். மக்களின் மதிப்பு மரியாதையை சம்பாதித்திருந்தார்.

பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக நான் குடிக்கிறேனா? “கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் [யெகோவா] எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்” என்று சங்கீதக்காரர் எழுதினார். (சங். 94:19) பிரச்சினைக்கு மேல் பிரச்சினை உங்களைத் திணறடிக்கும்போது உதவிக்காக மதுபானத்தைத் தேடிப் போகாதீர்கள். யெகோவாவிடம் போங்கள். அந்தமாதிரி சமயங்களில் யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் பண்ணுங்கள். சபையில் இருக்கிற ஒரு முதிர்ச்சியுள்ள நபரிடம் ஆலோசனைக் கேளுங்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அதிகமாக குடிக்கும்போது உங்களால் நிதானமாக யோசிக்க முடியாமல் போய்விடும். சரியானதை செய்ய வேண்டும் என்ற உறுதியும் இல்லாமல் போய்விடும். (ஓசி. 4:11) நாம் முன்பு பார்த்த டானியெல் சொல்வதை கவனியுங்கள்: “டென்ஷனை குறைப்பதற்காக நான் குடித்தேன். ஆனால் குற்ற உணர்வுதான் அதிகமானது. நான் குடித்ததால் என்னுடைய பிரச்சினைகள் குறையவில்லை, அதிகமாகத்தான் ஆனது. நல்ல நண்பர்களை நான் இழந்துவிட்டேன். என்னைப் பற்றி நினைக்கும்போது எனக்கே கேவலமாக இருந்தது.” குடிப்பழக்கத்திலிருந்து டானியெலால் எப்படி வெளியே வர முடிந்தது? “பிரச்சினைகளை சமாளிக்க எனக்கு யெகோவாதான் தேவை, மதுபானம் கிடையாது என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டேன். அதனால், பிரச்சினைகளிலிருந்து என்னால் ஒரு வழியாக வெளியே வர முடிந்தது” என்று அவர் சொல்கிறார். ஆழமாக கிணற்றில் மாட்டிக்கொண்டதுபோல் நம்முடைய சூழ்நிலைமை இருந்தாலும் யெகோவா நம்மை தூக்கிவிடுவார்.—பிலி. 4:6, 7; 1 பே. 5:7.

நீங்கள் அவ்வப்போது குடிப்பீர்களா? இந்த விஷயத்தில் நீங்கள் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகளை யோசித்துப்பாருங்கள்: ‘என்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் அல்லது நெருங்கிய நண்பர் நான் அதிகமாகக் குடிக்கிறேன், அடிக்கடி குடிக்கிறேன் என்று சொல்கிறார்களா?’ அப்படி சொல்கிறார்கள் என்றால், நீங்கள் உங்களுக்கே தெரியாமல் குடிப்பதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ‘எப்போதும் குடிப்பதைவிட இப்போதெல்லாம் நான் நிறைய குடிக்கிறேனா?’ ஆமாம் என்று தோன்றினால், குடிப்பழக்கத்துக்கு நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ‘கொஞ்ச நாள்கூட என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லையா?’ ஆமாம் என்றால், குடிப்பழக்கத்துக்கு ஏற்கெனவே அடிமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஒரு டாக்டரிடம் போய் உதவி எடுத்துக்கொள்வது நல்லது.

குடிப்பதால் இவ்வளவு பிரச்சினைகள் வருவதால் சில கிறிஸ்தவர்கள் மதுபானம் பக்கமே போகக்கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். வேறு சிலர், மதுபானத்தின் சுவைப் பிடிக்காததால் அதை எடுப்பதில்லை. இந்த மாதிரி ஒரு காரணத்தால் அல்லது வேறு ஏதோவொரு காரணத்தால் உங்களோடு இருக்கும் ஒருவர் குடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவரை கிண்டல் பண்ணாதீர்கள். அவர் எடுக்கிற முடிவை மதித்து நடப்பதன் மூலம் அவர்மேல் அன்பு காட்டுங்கள்.

குடிக்கும் விஷயத்தில் சில கிறிஸ்தவர்கள் தங்களுக்கென்று சில வரம்புகளை வைத்துக்கொள்கிறார்கள். எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை ஒரு கிறிஸ்தவர் முன்னாடியே முடிவு செய்யலாம். அல்லது, எவ்வளவு அடிக்கடி குடிப்பது என்று முடிவு செய்யலாம். உதாரணத்துக்கு, வாரத்தில் ஒரு தடவை குடிக்க அவர் நினைக்கலாம். இல்லையென்றால், சாப்பாட்டோடு கொஞ்சமாக குடிக்க நினைக்கலாம். வேறு சில கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட மதுபானத்தைக் குடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவாக போதை ஏறாத வைன், பீர் மாதிரியான பானங்களை அளவோடு குடிக்க அவர்கள் முடிவு செய்யலாம். அதிகமாக போதை ஏறுகிற பானங்களை குடிக்க வேண்டாம் என்ற முடிவை அவர்கள் எடுக்கலாம்; அவற்றை மற்ற பானங்களோடு கலந்துகூட குடிக்க வேண்டாம் என்று அவர்கள் நினைக்கலாம். ஒரு நபர் இந்த மாதிரி வரம்புகளை வைத்துக்கொண்டால், அதை கடைப்பிடிப்பது அவருக்கு சுலபமாக இருக்கும். இப்படியெல்லாம் வரம்புகள் வைத்துக்கொண்டால் மற்றவர்கள் அசிங்கமாக நினைப்பார்களோ என்று ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

குடிப்பதைப் பற்றி முடிவு எடுக்கும்போது மற்றவர்களையும் மனதில் வைப்பது நல்லது. ரோமர் 14:21 இப்படி சொல்கிறது: “இறைச்சி சாப்பிடுவதோ திராட்சமது குடிப்பதோ வேறெதாவது செய்வதோ உங்கள் சகோதரனுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால், அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது.” இந்த ஆலோசனையை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? சகோதர அன்பை காட்டுவதன் மூலமாக! நீங்கள் குடிப்பதால் இன்னொருவருடைய உணர்வுகள் புண்படும் என்றால் நீங்கள் என்ன செய்யலாம்? அவர்மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், அந்த சமயத்தில் நீங்கள் குடிக்காமல்கூட இருக்கலாம். இப்படியெல்லாம் செய்தால் அவர்மேல் உங்களுக்கு அக்கறையும் மதிப்பு மரியாதையும் இருப்பதைக் காட்டுகிறீர்கள். அதுமட்டுமல்ல, உங்களுக்குப் பிரயோஜனமானதை மட்டுமே தேடாமல் மற்றவர்களுக்கு பிரயோஜனமானதை மனதில் வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.—1 கொ. 10:24.

அதுமட்டுமல்ல, குடித்துவிட்டு வண்டி ஓட்டக் கூடாது, மெஷின்களை இயக்கக் கூடாது, ஒரு குறிப்பிட்ட வயதுக்குக்கீழ் இருக்கிறவர்கள் குடிக்கக் கூடாது போன்ற சட்டங்களை அரசாங்கம் போட்டிருக்கலாம். இந்த சட்டங்களையும் மனதில் வைத்து ஒரு கிறிஸ்தவர் முடிவெடுக்க வேண்டும்.—ரோ. 13:1-5.

யெகோவா நமக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பரிசுகளை அனுபவிப்பதற்கான சுதந்திரத்தையும் கொடுத்து நம்மைக் கவுரவப்படுத்தி இருக்கிறார். எதை சாப்பிடுவது, எதை குடிப்பது என்று முடிவு செய்கிற சுதந்திரமும் அதில் ஒன்று. அதனால், நம்முடைய அப்பா யெகோவாவை சந்தோஷப்படுத்துகிற முடிவுகளை எடுப்பதன் மூலம் அவர் கொடுத்திருக்கும் சுதந்திரத்தைப் பொக்கிஷமாக நினைக்கிறோம் என்பதை நாம் காட்டலாம்.

a அதிகமாக குடிப்பதால் கொலை, தற்கொலை முயற்சி, பாலியல் குற்றங்கள், துணையை துன்புறுத்துவது, ஆபத்தான செக்ஸ் பழக்க வழக்கங்கள், கருச்சிதைவு மாதிரியான ஆபத்துகள் வருகின்றன என்று அமெரிக்காவில் இருக்கிற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை சொல்கிறது.