படிப்புக் கட்டுரை 50
விசுவாசமும் செயல்களும் நம்மை நீதிமானாக ஆக்கும்
‘நம் தகப்பனாகிய ஆபிரகாம் . . . காட்டிய விசுவாசத்தின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்.’—ரோ. 4:12.
பாட்டு 119 நமக்குத் தேவை விசுவாசம்
இந்தக் கட்டுரையில்... a
1. ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றிப் படிக்கும்போது உங்களுக்கு என்னென்ன கேள்விகள் வரலாம்?
நிறையப் பேர் ஆபிரகாமைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரைப் பற்றி அவர்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், உங்களுக்கு அவரைப் பற்றி நிறைய தெரியும். உதாரணத்துக்கு, ‘விசுவாசம் வைக்கிற . . . எல்லாருக்கும் அவர் தகப்பன்’ என்று தெரியும். (ரோ. 4:11) ‘அவரைப் போலவே என்னாலும் பலமான விசுவாசத்தைக் காட்ட முடியுமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். கண்டிப்பாக காட்ட முடியும்!
2. ஆபிரகாமின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்வது ஏன் முக்கியம்? (யாக்கோபு 2:22, 23)
2 ஆபிரகாமைப் போல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள, நாம் அவருடைய வாழ்க்கையைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவர் தூரமான ஒரு தேசத்துக்குப் போனார், பல வருஷங்கள் கூடாரங்களில் வாழ்ந்தார், உயிரையே வைத்திருந்த மகனை பலிகொடுக்கும் அளவுக்குப் போனார். எவ்வளவு பலமான விசுவாசம்! அவர் காட்டிய விசுவாசத்தாலும், அவருடைய செயல்களாலும் யெகோவா அவரை ஏற்றுக்கொண்டார்; நீதிமானாக பார்த்தார். (யாக்கோபு 2:22, 23-ஐ வாசியுங்கள்.) நாம் எல்லாருமே, முக்கியமாக நீங்களும், தன்னுடைய நண்பராக வேண்டும் என்றும் தன்னுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் யெகோவா நினைக்கிறார். அதனால்தான், பவுலையும் யாக்கோபையும் பயன்படுத்தி ஆபிரகாமைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். ரோமர் 4 மற்றும் யாக்கோபு 2-ஆம் அதிகாரங்களில் ஆபிராமைப் பற்றி ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.
3. பவுலும் யாக்கோபும் எந்த முக்கியமான வசனத்தை மேற்கோள் காட்டினார்கள்?
3 பவுல் மற்றும் யாக்கோபு, இரண்டு பேருமே ஆதியாகமம் 15:6-ஐ மேற்கோள் காட்டிப் பேசினார்கள். அந்த வசனம் இப்படி சொல்கிறது: “யெகோவாமேல் ஆபிராம் விசுவாசம் வைத்தார். அதனால், அவர் ஆபிராமை நீதிமானாகக் கருதினார்.” நீதிமானாக இருப்பது என்றால், கடவுளுடைய பார்வையில் குற்றமற்றவராக இருப்பதையும், அவருடைய அங்கீகாரத்தை பெற்றவராக இருப்பதையும் குறிக்கிறது. பாவிகளாக இருக்கும் குறையுள்ள மனிதர்களை குற்றமற்றவர்களாக யெகோவா பார்க்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம்! கடவுள் உங்களையும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஆனால் அது சாத்தியமா? சாத்தியம்தான்! யெகோவா ஏன் ஆபிரகாமை நீதிமான் என்று சொன்னார் என்றும், நம்மையும் அவர் அப்படி சொல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் இப்போது பார்க்கலாம்.
நீதிமானாக இருக்க விசுவாசம் தேவை
4. மனிதர்கள் நீதிமான்களாக ஆவதற்கு எது தடையாக இருக்கிறது?
4 ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில், எல்லா மனிதர்களும் பாவிகள் என்று பவுல் சொன்னார். (ரோ. 3:23) அப்படியென்றால், நாம் எப்படிக் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாகவும் குற்றமற்றவர்களாகவும் இருக்க முடியும்? அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியும்? ஆபிரகாமின் உதாரணத்தைப் பயன்படுத்தி பவுல் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தார்.
5. எதன் அடிப்படையில் ஆபிரகாமை யெகோவா நீதிமான் என்று சொன்னார்? (ரோமர் 4:2-4)
5 ஆபிரகாம் கானான் தேசத்தில் வாழ்ந்தபோது யெகோவா அவரை நீதிமான் என்று சொன்னார். எதை வைத்து அப்படி சொன்னார்? ஆபிரகாம் திருச்சட்டத்தை அப்படியே கடைப்பிடித்ததாலா? இல்லை! (ரோ. 4:13) ஆபிரகாமை நீதிமான் என்று சொல்லி கிட்டத்தட்ட 400 வருஷங்கள் கழித்துதான் திருச்சட்டமே கொடுக்கப்பட்டது. அப்படியென்றால், எதை வைத்து யெகோவா அவரை நீதிமான் என்று சொன்னார்? அவர் காட்டிய விசுவாசத்தை வைத்துதான்! இதிலிருந்து யெகோவாவின் அளவற்ற கருணை தெரிகிறது, இல்லையா?—ரோமர் 4:2-4-ஐ வாசியுங்கள்.
6. எதை வைத்து ஒரு பாவியை யெகோவா நீதிமான் என்று சொல்கிறார்?
6 ஒருவன் “கடவுள்மேல் விசுவாசம் வைக்கும்போது, அவன் நீதிமானாகக் கருதப்படுகிறான்” என்று பவுல் எழுதினார். (ரோ. 4:5) அவர் தொடர்ந்து இப்படி எழுதினார்: “செயல்கள் இல்லாமல் கடவுளால் நீதிமானாகக் கருதப்படுகிற மனிதனுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி தாவீதும் சொல்கிறார்: ‘யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் சந்தோஷமானவர்கள். எந்த மனிதருடைய பாவத்தை யெகோவா ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாரோ அவர் சந்தோஷமானவர்.’ யாருடைய குற்றம் மன்னிக்கப்படுகிறதோ, யாருடைய பாவம் மூடப்படுகிறதோ, அவர் சந்தோஷமானவர். யெகோவா யாரைக் குற்றவாளி என்று தீர்க்காமல் இருக்கிறாரோ, யாருடைய மனதில் சூதுவாது இல்லையோ, அவர் சந்தோஷமானவர்.” (ரோ. 4:6-8; சங். 32:1, 2) தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுடைய பாவங்களை யெகோவா முழுமையாக மன்னிக்கிறார்; அதை மூடுகிறார். அதற்குமேல் அவர் அதை கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாது. அவர்கள் காட்டும் விசுவாசத்தின் அடிப்படையில் அவர்களை குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் பார்க்கிறார்.
7. எந்த அர்த்தத்தில் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் நீதிமான்களாக கருதப்பட்டார்கள்?
7 பாவிகளாக இருந்தாலும், ஆபிரகாமையும் தாவீதையும் மற்ற உண்மையுள்ள ஊழியர்களையும் கடவுள் நீதிமான்கள் என்று சொன்னார். அதற்கு காரணம், இவர்கள் காட்டிய விசுவாசம்! தன்னை வணங்காத மக்களோடு ஒப்பிடும்போது, இவர்கள் காட்டிய விசுவாசத்தால் கடவுள் இவர்களை குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் பார்த்தார். (எபே. 2:12) யெகோவாவோடு ஒரு நல்ல பந்தம் வேண்டுமென்றால், விசுவாசம் தேவை என்று பவுல் தெளிவாக விளக்கினார். விசுவாசத்தைக் காட்டியதால்தான் ஆபிரகாமும் தாவீதும் யெகோவாவின் நண்பர்களாக ஆனார்கள். நாமும் விசுவாசத்தைக் காட்டினால் கடவுளுடைய நண்பராக ஆகலாம்.
விசுவாசமும் செயல்களும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கின்றன?
8-9. பவுலும் யாக்கோபும் எழுதியதை சிலர் எப்படித் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள், ஏன்?
8 விசுவாசத்துக்கும் செயல்களுக்கும் இருக்கிற சம்பந்தத்தைப் பற்றி கிறிஸ்தவ மதத்தலைவர்கள் பல நூற்றாண்டுகளாகவே விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர், இயேசுவை நம்பினாலே போதும் மீட்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். “இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள், இரட்சிக்கப்படுவீர்கள்!” என்று அவர்கள் சொல்வதை நீங்கள்கூட கேட்டிருக்கலாம். “செயல்கள் இல்லாமல் கடவுளால் நீதிமானாகக் கருதப்பட” முடியும் என்ற பவுலின் வார்த்தைகளை அவர்கள் ஆதாரமாக காட்டலாம். (ரோ. 4:6) வேறுசிலர், ‘புனித ஸ்தலங்களுக்கு பயணம் செய்தால்... நாலு பேருக்கு நல்லது செய்தால்... இரட்சிக்கப்படுவோம்’ என்கிறார்கள். இவர்கள் யாக்கோபு 2:24 சொல்வதை ஆதாரமாக காட்டலாம். அந்த வசனம் இப்படி சொல்கிறது: “ஒரு மனிதன் விசுவாசத்தால் மட்டுமல்ல, அவனுடைய செயல்களாலும் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்.”
9 இப்படிப்பட்ட வித்தியாசமான நம்பிக்கைகள் இருப்பதால், விசுவாசம் மற்றும் செயல்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பவுலுக்கும் யாக்கோபுக்கும் வேறுபட்ட கருத்து இருந்ததாக சில பைபிள் அறிஞர்கள் நம்புகிறார்கள். ‘விசுவாசம்தான் முக்கியம் செயல்கள் அல்ல’ என்று பவுல் நம்பியதாகவும், ‘செயல்கள் முக்கியம்’ என்று யாக்கோபு நம்பியதாகவும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் சொல்கிறார்கள். “விசுவாசம் போதும், செயல்கள் தேவையில்லை என்று பவுல் சொன்னதற்கான காரணத்தை யாக்கோபால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று இறையியல் பேராசிரியர் ஒருவர் சொன்னார். ஆனால், பவுல் மற்றும் யாக்கோபு, இவர்கள் இரண்டு பேருமே கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் எழுதினார்கள். (2 தீ. 3:16) அதனால், அவர்கள் சொல்லியிருப்பதை புரிந்துகொள்ள, அவர்கள் எழுதிய மற்ற விஷயங்களையும் அலசிப் பார்க்க வேண்டும்.
10. எந்த ‘செயல்களை’ பற்றி பவுல் பேசினார்? (ரோமர் 3:21, 28) (படத்தையும் பாருங்கள்.)
10 ரோமர் 3, 4 அதிகாரங்களில் “திருச்சட்டத்தின் செயல்களை” பற்றித்தான் பவுல் பேசினார். அதாவது, இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிவதைப் பற்றிப் பேசினார். (ரோமர் 3:21, 28-ஐ வாசியுங்கள்.) பவுலுடைய காலத்தில் வாழ்ந்த சில யூத கிறிஸ்தவர்கள், திருச்சட்டத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவர்களுக்கு ஆபிரகாமின் உதாரணத்தைக் காட்டி, ஒருவர் கடவுளுக்கு முன்பு நீதிமானாக இருக்க வேண்டுமென்றால் “திருச்சட்டத்தின் செயல்கள்” தேவையில்லை என்றும் விசுவாசம்தான் தேவை என்றும் பவுல் புரியவைத்தார். அப்படியென்றால், கடவுள்மேலும் இயேசுமேலும் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால், கடவுளுடைய அங்கீகாரம் நமக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இது கொடுக்கிறது.
11. எந்த மாதிரியான செயல்களைப் பற்றி யாக்கோபு பேசினார்?
11 யாக்கோபு 2-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் “செயல்கள்,” பவுல் சொன்ன “திருச்சட்டத்தின் செயல்கள்” கிடையாது. ஒரு கிறிஸ்தவர் தினமும் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி யாக்கோபு சொன்னார். இந்த மாதிரியான செயல்கள், அவருக்கு உண்மையிலேயே கடவுள்மேல் விசுவாசம் இருக்கிறதா என்பதைக் காட்டும். இதைப் புரிந்துகொள்ள யாக்கோபு பயன்படுத்திய இரண்டு உதாரணங்களை பார்க்கலாம்.
12. விசுவாசத்துக்கும் செயல்களுக்கும் இருக்கிற சம்பந்தத்தை யாக்கோபு எப்படி விளக்கினார்? (படத்தையும் பாருங்கள்.)
12 முதல் உதாரணத்தில், கிறிஸ்தவர்கள் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதை யாக்கோபு புரியவைக்கிறார். பணக்காரர்களை நன்றாக நடத்திவிட்டு, ஏழைகளை தாழ்வாக பார்க்கும் ஒரு நபரைப் பற்றி அவர் அந்த உதாரணத்தில் சொல்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் தனக்கு விசுவாசம் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், அதற்கு ஏற்ற செயல்களை செய்கிறாரா? இல்லை. (யாக். 2:1-5, 9) இரண்டாவது உதாரணத்தில், இன்னொரு நபரைப் பற்றி யாக்கோபு சொல்கிறார். ‘உடையோ உணவோ இல்லாமல்’ கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிற ஒரு சகோதரரையோ சகோதரியையோ அவர் பார்க்கிறார். இருந்தாலும், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒருவர் தனக்கு விசுவாசம் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும் அதனால் என்ன பிரயோஜனம்? அதற்கு ஏற்ற செயல்கள் அவரிடம் இல்லையே. அதனால்தான், “விசுவாசத்தைச் செயலில் காட்டவில்லை என்றால், அது செத்ததாக இருக்கும்” என்று யாக்கோபு எழுதினார்.—யாக். 2:14-17.
13. விசுவாசத்தை செயலில் காட்டுவது முக்கியம் என்பதை யாக்கோபு எப்படிப் புரிய வைக்கிறார்? (யாக்கோபு 2:25, 26)
13 விசுவாசத்தை செயலில் காட்டிய நபர்களில் ராகாபும் ஒருவர் என்று யாக்கோபு சொல்கிறார். (யாக்கோபு 2:25, 26-ஐ வாசியுங்கள்.) அவள் யெகோவாவைப் பற்றி கேள்விப்பட்டாள், இஸ்ரவேலர்களுக்கு யெகோவா உதவி செய்ததையும் புரிந்துகொண்டாள். (யோசு. 2:9-11) அதோடு, அவள் தன்னுடைய விசுவாசத்தை செயலில் காட்டினாள். இரண்டு இஸ்ரவேல உளவாளிகள் வந்தபோது அவர்களுடைய உயிரைக் காப்பாற்றினாள். இஸ்ரவேலராக இல்லாத, பாவ இயல்புள்ள ஒரு பெண்ணாக இருந்தாலும் யெகோவா அவளை நீதிமான் என்று சொன்னார்; ஆபிரகாமை சொன்னது போலவே! விசுவாசத்தை செயலில் காட்டுவது எந்தளவுக்கு முக்கியம் என்பது அவளுடைய உதாரணத்திலிருந்து புரிகிறது.
14. பவுலும் யாக்கோபும் எழுதிய விஷயங்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகிறது என்று எப்படி சொல்லலாம்?
14 பவுல் மற்றும் யாக்கோபு, விசுவாசத்தையும் செயல்களையும் பற்றி இரண்டு வித்தியாசமான வழிகளில் விளக்கியிருக்கிறார்கள். திருச்சட்டத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை செய்வதால் யெகோவாவின் அங்கிகாரம் கிடைக்காது என்று பவுல் யூத கிறிஸ்தவர்களுக்குப் புரியவைத்தார். ஆனால் யாக்கோபு, மற்றவர்களுக்கு நல்லது செய்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை செயலில் காட்ட முடியும் என்று சொன்னார்.
15. என்னென்ன வழிகளில் நம்முடைய விசுவாசத்தை செயலில் காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)
15 ஆபிரகாம் செய்த அதே விஷயங்களை செய்தால்தான் நாமும் நீதிமானாக ஆக முடியும் என்று யெகோவா சொல்வதில்லை. இன்று, நம்முடைய விசுவாசத்தை செயலில் காட்டுவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. சபைக்குப் புதிதாக வருகிறவர்களை நாம் வரவேற்கலாம், கஷ்டப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யலாம், குடும்பத்தில் இருக்கிறவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான செயல்களை யெகோவா ஏற்றுக்கொள்கிறார், ஆசீர்வதிக்கிறார். (ரோ. 15:7; 1 தீ. 5:4, 8; 1 யோ. 3:18) விசுவாசத்தை செயலில் காட்டுவதற்கு இன்னொரு முக்கியமான வழி, ஆர்வத்துடிப்போடு பிரசங்கிப்பது! (1 தீ. 4:16) யெகோவாவுடைய வாக்குறுதிகள்மேல் விசுவாசம் வைத்திருப்பதையும் நம்முடைய செயல்களில் காட்டலாம். அதோடு, அவர் சொல்வது... செய்வது... எல்லாமே நம்முடைய நல்லதுக்குதான் என்று நம்புவதை நாம் வாழும் விதத்தில் காட்டலாம். இப்படியெல்லாம் செய்தால் யெகோவா கண்டிப்பாக நம்மை நீதிமானாக பார்ப்பார், தன்னுடைய நண்பர் என்று சொல்வார்.
விசுவாசம் பலமாக இருக்க நம்பிக்கை உதவும்
16. விசுவாசத்தைக் காட்ட ஆபிரகாமுக்கு நம்பிக்கை எப்படி உதவியது?
16 ரோமர் 4-வது அதிகாரத்தில் ஆபிரகாமிடமிருந்து இன்னொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். அது என்னவென்றால், யெகோவா கொடுத்திருக்கும் நம்பிக்கைமேல் கண்களைப் பதிய வைப்பது முக்கியம். ஆபிரகாம் மூலமாக ‘நிறைய தேசங்கள்’ ஆசீர்வதிக்கப்படும் என்று யெகோவா வாக்குக் கொடுத்தார். இது எவ்வளவு அற்புதமான ஒரு நம்பிக்கை! (ஆதி. 12:3; 15:5; 17:4; ரோ. 4:17) ஆனால், ஆபிரகாமுக்கு 100 வயதும் சாராளுக்கு 90 வயதும் ஆன பிறகுகூட அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சாதாரணமாக பார்த்தால், அந்த தம்பதிக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்பதுபோல் தோன்றியிருக்கலாம். இது உண்மையிலேயே ஆபிரகாமுக்கு ஒரு பெரிய சோதனையாக இருந்திருக்கும். இருந்தாலும், கடவுள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார். அதாவது, தான் நிறைய தேசங்களுக்கு தகப்பனாக ஆவார் என்பதில் “விசுவாசம் வைத்தார்.” (ரோ. 4:18, 19) சீக்கிரத்தில் அவருடைய நம்பிக்கை நிஜமானது. ஆசை ஆசையாகக் காத்துக்கொண்டிருந்த மகன் பிறந்தான். அவன்தான் ஈசாக்கு!—ரோ. 4:20-22.
17. கடவுள் நம்மை நீதிமான்களாக பார்ப்பார், தன்னுடைய நண்பராக ஏற்றுக்கொள்வார் என்பதில் எப்படி உறுதியாக இருக்கலாம்?
17 ஆபிரகாம் மாதிரியே நாமும் யெகோவாவுடைய அங்கீகாரத்தைப் பெற முடியும். அவருடைய பார்வையில் நீதிமானாக ஆக முடியும், அவருடைய நண்பராகவும் ஆக முடியும். அதைப் பற்றி பவுல் இப்படி எழுதினார்: “‘அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்’ என்ற வார்த்தைகள் [ஆபிரகாமுக்காக] மட்டும் எழுதப்படவில்லை, நமக்காகவும் எழுதப்பட்டன. நம் எஜமானாகிய இயேசுவை உயிரோடு எழுப்பிய கடவுள்மேல் நாம் விசுவாசம் வைப்பதால், நாமும் நீதிமான்களாகக் கருதப்படுவோம்.” (ரோ. 4:23, 24) அப்படியென்றால் ஆபிரகாம் மாதிரி நாமும் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு, அதை செயலில் காட்ட வேண்டும்; யெகோவா கொடுத்திருக்கிற நம்பிக்கை நிஜமாகும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையைப் பற்றிதான் ரோமர் 5-வது அதிகாரத்தில் பவுல் சொல்கிறார். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாட்டு 28 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்
a கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும்... நீதிமானாக பார்க்க வேண்டும்... என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் விசுவாசம் மற்றும் செயல்கள் இரண்டுமே ஏன் முக்கியம்? அதற்கான பதிலை பவுலும் யாக்கோபும் எழுதிய விஷயங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
b பட விளக்கம்: அங்கியின் ஓரத்தில் நீல நிற நூலை தைப்பது... பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது... கை கழுவுகிற சடங்குகளை செய்வது... போன்ற “திருச்சட்டத்தின் செயல்களை” செய்வது முக்கியமல்ல, விசுவாசத்தைக் காட்டுவதுதான் முக்கியம் என்று யூத கிறிஸ்தவர்களிடம் பவுல் சொல்கிறார்.
c பட விளக்கம்: ஏழைகளுக்கு உதவுவது போன்ற நல்ல விஷயங்களை செய்வதன் மூலம் விசுவாசத்தைக் காட்ட சொல்லி யாக்கோபு உற்சாகப்படுத்தினார்.